உயிர்மெய்
அந்த வீட்டின் கிச்சனில் இருந்து வந்த ஊதுபத்தி வாசனை (கிச்சனில் தான் சாமி படங்கள் வைப்பது ) அந்த ஹால் வரையில் வந்து சூழ்ந்து இருந்தது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டே ந்யூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருந்த சதாசிவத்திற்கு வயது ஐம்பத்து எட்டு. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஊதுபத்தி வாசனைக்கு காரணகர்த்தாவான அவர் மனைவி மங்களத்திற்கு ஐம்பத்து ஐந்து.
அவர்களது முப்பதாண்டு கால திருமண வாழ்க்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் மெல்ல மெல்ல எழுந்திருந்தது.
அன்று சனிக்கிழமை. மாலை நேரம். மங்களம் குளித்துவிட்டு துடைத்தபடி பூசையறைக்குள் நுழைந்தாள். அவள் நெற்றியில் குங்குமம். கைகளில் பித்தளைத் தட்டுகளில் பூக்கள். அவள் உதடுகள் மெல்லிய குரலில் ஏதோ ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
சதாசிவம் சோபாவில் அமர்ந்தபடியே மங்களத்தின் அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தார் . மங்களம் இன்னும் அதே இளமையுடனும் அழகுடனும் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. வயது அவளுக்குப் பக்குவத்தைத் தந்திருந்தது. ஆனால் அந்தப் பக்குவம் அவருக்கு ஒருவிதத் தனிமையையும் சேர்த்துத் தந்ததுதான் முரண்.
இரவு உணவு முடிந்தது. மங்களம் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு விளக்குகளை அணைத்தாள். சதாசிவம் படுக்கையறையில் காத்திருந்தார். மங்களம் உள்ளே வந்தபோது அவளது கையில் ஒரு ஸ்லோக புத்தகம் இருந்தது.
"மங்களம்... கொஞ்சம் இங்க வந்து உட்காரேன்," என்றார் சதாசிவம்.
மங்களம் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். "என்னங்க? ஏதும் உடம்பு சரியில்லையா?"
"இல்ல... சும்மா பேசணும்னு தோணுச்சு. நாம பேசி எத்தனை நாள் ஆச்சு?"
"என்னங்க இப்படிச் சொல்றீங்க? காலையிலதானே அந்த மளிகை லிஸ்ட் பத்திப் பேசினோம்?" என்று சிரித்தாள் மங்களம்.
"நான் சொல்றது அது இல்ல மங்களம். நமக்கான பேச்சு... நமக்கான நெருக்கம்..." என்று மெல்ல அவள் கையைப் பற்றினார்.
மங்களம் சட்டென்று கையைத் தடுத்தாள். "அச்சச்சோ... கையை விடுங்க. நாளைக்கு பிரதோஷம். நான் அதிகாலையிலேயே கோயில் குளம்னு போகணும். மனசு சுத்தமா இருக்கணும்னு நினைக்கிறேன்."
சதாசிவத்தின் முகம் சுருங்கியது. "கோயிலுக்குப் போறதுக்கும், என் கையைப் பிடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன யாரோவா ?"
மங்களம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "உங்களுக்கு ஏங்க புரிய மாட்டேங்குது? இந்த வயசுல இதெல்லாம் எதுக்கு? பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பேரபிள்ளைகள் பாத்தாச்சு. இனிமே நாம ஆண்டவனை நினைக்கிற வயசுல இருக்கோம். இந்தத் தாம்பத்திய ஆசையெல்லாம் ஒரு கட்டத்துல விட்டுடணும்ங்க. அதான் சரி "
"எது சரி மங்களம்? அன்பு செலுத்துறதுல வயசு என்ன இருக்கு? உடல்ரீதியான நெருக்கம்ங்கிறது வெறும் காமம் மட்டுமா? அது ஒரு bonding. உன்னைத் தொடும்போது நான் இன்னும் இளமையா உணர்றேன். ஆனா நீ... நீ என்னவோ என்னைத் தள்ளியே வக்கிறேயே "
மங்களம் எழுந்து நின்றாள். "உங்கக் கூட ஆர்க்யூ செய்ய எனக்குத் தெம்பு இல்லை. எனக்கு ஆன்மீகம் ஒரு நிம்மதியைத் தருது. அந்த நிம்மதியை இந்த தாம்பத்ய ஆசைகளால கெடுத்துக்க எனக்கு விருப்பம் இல்லை. படுங்க நேரமாச்சு."
அவள் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். சதாசிவத்திற்குத் தூக்கம் வரவில்லை. அவர் கண்கள் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தன. மங்களத்தின் பக்தி அவருக்குப் புரியவில்லை என்பதில்லை. ஆனால் அது தாம்பத்யத்துக்கு ஏன் ஒரு தடையாக மாறவேண்டும்? கடவுள் அன்பைப் போதிக்கிறார் என்றால் கணவனின் நெருக்கத்தை, அவன் அன்பை மறுப்பது பக்தியா?
மறுநாள் காலை. மங்களம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினாள். அவள் முகம் மிகத் தெளிவாக, சாந்தமாக இருந்தது. சதாசிவம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
"இந்தாங்க பிரசாதம்," என்று விபூதியை நீட்டினாள்.
அவர் அதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தார். அன்று முழுவதும் அவர் அதிகம் பேசவில்லை. மதிய உணவின்போது கூட மௌனம் நிலவியது.
மாலையில் மங்களம் பின்கட்டில் துணிகளை மடித்துக் கொண்டிருந்தபோது, சதாசிவம் அங்கு வந்தார்.
"மங்களம், நான் ஒண்ணு சொல்லணும்னு நினைக்கிறேன். உன்னோட பக்திக்கு நான் இடையூறா இருக்க விரும்பல. ஆனா என் மனசுல இருக்கிற ஏக்கத்தையும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல. உனக்கு நான் வெறும் ஒரு குடும்பத் தலைவனா வீட்டுக்குத் தேவையானதைச் செஞ்சு தர்ற ஒரு இயந்திரமா மட்டும் இருக்கணுமா? இல்ல உன் துணையாவும் இருக்கணுமா?"
மங்களம் மடிப்பதை நிறுத்தினாள். அவர் குரலில் இருந்த நடுக்கம் அவளை என்னவோ செய்தது.
"நீ விரதம் இருக்கிறது ஸ்லோகம் சொல்றது எல்லாம் உன் உரிமை. ஆனா, அதுக்காக என்னை முழுசா ஒதுக்கி வைக்கிறது சரியா? நாம இன்னும் உயிரோட இருக்கோம் மங்களம். உயிரோட இருக்கிற வரைக்கும் உணர்ச்சிகளும் இருக்கும். அதைத் தப்புன்னு நினைச்சு நீயே உன்னைச் சுருக்கிக்காதே."
மங்களம் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவர் கண்களில் தெரிந்த அந்தத் தனிமை அவளுக்குப் புரிந்தது. அவள் இதுவரை நினைத்தது புனிதம் என்று. ஆனால் அந்தப் புனிதத்தின் பெயரால் அவள் ஒரு மனிதனின் அடிப்படை உணர்வைச் சிதைக்கிறாளோ என்ற சந்தேகம் முதன்முதலாக அவள் மனதிற்குள் உதித்தது.
"நான்... நான் அப்படி நினைக்கலங்க. வயசான காலத்துல மத்தவங்க இதைப் பத்தித் தெரிஞ்சா என்ன நினைப்பாங்கன்ற பயம் தான்..." என்று இழுத்தாள்.
"யார் அந்த மத்தவங்க? இந்த வீட்டுக்குள்ள நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். நமக்கான உலகம் இது," என்றார் சதாசிவம்.
அன்று இரவு. மங்களம் பூசையறையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே இருந்த விளக்கு அமைதியாக எரிந்துகொண்டிருந்தது. அவள் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டம். பக்திக்கும் காதலுக்கும் இடையிலான போராட்டம் அல்ல அது. ஒரு உறவைப் பேணுவதற்கும் ஒரு கோட்பாட்டைப் பிடிப்பதற்கும் நடுவிலான போராட்டம்.
அவள் பெட்ரூமுக்கு வந்தபோது சதாசிவம் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
மங்களம் மெல்லச் சென்று அவர் பின்னால் நின்றாள். தயக்கத்துடன் அவர் தோளில் கை வைத்தாள்.
சதாசிவம் அதிர்ச்சியுடன் திரும்பினார்.
"நாளைக்கு எந்த விரதமும் இல்லை " என்றாள் மெல்லிய குரலில் சிறு புன்னகையுடன்.
சதாசிவம் அவளது கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த ஸ்பரிசத்தில் பல ஆண்டுகால மௌனம் கரைந்தது. பக்தி என்பது கடவுளை அறிவது மட்டுமல்ல, உடன் இருப்பவரின் மனதை அறிவதும் கூட என்பதை மங்களம் அன்று உணர்ந்தாள்.
கிச்சனில் இருந்து வந்த ஊதுபத்தி வாசனை அவர்கள் பெட்ரூமிலும் பரவியது. ஆனால் இந்த முறை சதாசிவத்துக்கு அது ஒரு சுகானுபவமாக இருந்தது. இரு ஜீவன்களின் இணைந்த பயணத்தின் நறுமணமாக இருந்தது. அவர்கள் காதல் அங்கே ஒரு புதிய புரிதலுடன், எந்த விதமான உராய்வும் இன்றித் தொடர்ந்தது. உறவுகளின் சிக்கல்கள் எப்போதும் விவாதங்களால் தீர்வதில்லை. சில நேரங்களில் ஒரு மெல்லிய ஸ்பரிசமே போதுமானதாக இருக்கிறது.
வீயார்
No comments:
Post a Comment