#சிறுகதை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
அந்தக் கல்யாணத்தில் ஜோதியை சந்திப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஜோதியை கல்யாண வீட்டாருக்கு எப்படித் தெரியும் என்பதை விட அவள் எப்போது அமெரிக்காவில் இருந்து வந்தாள் என்னும் கேள்வி என் முன்னர் நின்றது.
ஜோதி எங்கள் எதிர் வீட்டுப் பெண். அவள் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் போது நாங்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்தோம். அப்போதில் இருந்து நல்ல பழக்கம். என் மகளுடன் விளையாட வருவாள். என் வீட்டிலேயே டிபன் காபி சாப்பிடுவாள். என் மகளுக்கு நல்ல தோழியாகவும் எங்களுக்கு மகள் போலவும் இருந்தாள். எங்களோடு ஷாப்பிங் வருவது சினிமா பார்க்க வருவது என்று எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிப் போனாள்.
பள்ளிப் படிப்பு முடித்து காலேஜ் சென்ற பிறகும் அவள் மாறவில்லை. அதே அன்னியோனியத்துடன் பழகினாள். அவள் குடும்பத்தாரும் நாங்களும் மாதம் ஒரு முறை ஹோட்டல் போவது என்று நெருங்கினோம்.
ஜோதி ரொம்ப பேச்சாளி. எந்த விஷயமானாலும் பேசிக்கொண்டே இருப்பாள். காலேஜ் வாழ்க்கை, அவள் நண்பர்கள் ஸினிமா என்று எந்த சப்ஜெக்ட் ஆனாலும் ஆள் கெட்டி.
"பார்த்துடி ஜோதி! நாளைக்குக் கல்யாணம் ஆனா உன் புகுந்த வீட்டில் இப்படி எல்லாம் அரட்டை அடிக்க முடியாமல் போகலாம்." என்று நாங்கள் கேலி செய்வோம். " எது எப்படியானாலும் உங்களோடு எல்லாம் பேசாமல் இருப்பேனா?" என்று எதிர்க் கேள்வி போட்டு எங்களை அடக்குவாள்
பிறகு காலேஜ் முடிந்து வேலைக்கும் போனாள். அவர்கள் வீட்டில் அவளுக்குத் திருமணத்துக்குப் பார்த்தார்கள். அமெரிக்க மாப்பிள்ளை. திருமணமும் முடிந்து அவள் யுஎஸ் சென்று விட்டாள்.
அங்கு சென்ற பிறகும் எங்களோடு இணையம் மூலம் பேசுவது என்று நட்பு தொடர்ந்து. பிறகுதான் நாளடைவில் அந்த வித்தியாசம் தெரியத் தொடங்கியது. ஜோதி எங்களோடு பேசுவது மெது மெதுவாகக் குறைந்தது. பின்னர் நின்றே போனது. நான் மனைவியிடம் சொல்வேன் " பார்த்தியா! வெளிநாட்டு வாசம் ஆளை மாற்றிவிட்டது" என்று. அவள் என்னை அடக்குவாள். ஏதாவது காரணம் இருக்கும், வேலைப் பளு என்றெல்லாம் சொல்வாள்.
அப்படி இருக்கையில்தான் ஒருமுறை ஜோதி சென்னை வந்தாள். அவள் வந்தது எங்களுக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவள் எங்கள் வீட்டுக்கு வரவில்லை. " குழந்தை வந்திருக்காள் போய் பார்க்கலாம் வாங்க" என்று மனைவி அழைத்தாள். எனக்குக் கோவமான கோவம். கத்தித் தீர்த்து விட்டேன்.
"என்னடி, அமெரிக்கான்னா கொம்பா? வந்து ஒரு வாரம் ஆச்சு. ஒரு தடவ கூட வந்து எட்டிப் பார்க்கல. நாம போயி பார்க்கனுமா? நான் வரமுடியாது போ"
சுஜாவும் போகவில்லை. பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் நாங்கள் ஆபீஸ் கிளம்ப வெளிய வந்தபோது ஜோதி வெளிய வந்தாள். அவர்கள் வீட்டு வாசலில் வாடகைக் கார் ஒன்று நின்றிருந்தது. அவள் கையில் பெட்டி. எங்களைப் பார்த்துவிட்டாள். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன். சுஜாதான் அவளிடம் ஹலோ சொன்னாள். " நான் இன்னிக்கு யு.எஸ் கிளம்பறேன் ஆன்டி, பை அங்கிள்" என்றாள். நான் பேசவே இல்லை.
அன்று இரவு சுஜா என்னைத் திட்டித் தீர்த்தாள். ' அவ சின்னவ. உங்க புத்தி எங்க போச்சு? இப்படிப் பேசாம இருந்தா அவ அப்பா அம்மா என்ன நினைப்பா?"
நான் ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் நாட்கள் உருண்டோடின. இந்த விஷயம் நாங்கள் மறந்தே விட்டோம். அப்போது ஒரு நாள் என் ஆபீஸ் கொலீகின் மகள் திருமண ரிசப்ஷனுக்கு நானும் சுஜாவும் சென்றோம். அங்கே தான் ஜோதியைப் பார்த்தோம். ஜோதியுடன் அவள் கணவனும் இருந்தான். அவன் அந்த கல்யாணப் பெண்ணின் friend என்பது பிற்பாடு தெரிந்தது. ஜோதி அங்கேயும் எங்களுடன் பேசவில்லை. ஜஸ்ட் ஒரு தலையசைப்பு. அவ்வளவுதான். தணிந்திருந்த என் கோவம் மீண்டும் அதிகமானது.
சுஜா என் கோவம் அறிந்து எதுவும் என்னிடம் பேசவில்லை. அப்புறம் இரண்டு நாள் கழித்து ஒரு நாள் இரவு சுமார் எட்டு மணிக்கு காலிங் பெல் அடித்தது. போய் திறந்தால் ஜோதி!
நான் ஒன்றும் சொல்லாமல் உள்ளே திரும்பி "சுஜா" என்று குரல் தந்துவிட்டேன் என் அறைக்குள் சென்று விட்டேன்.
ஒரு இரண்டு நிமிடத்தில் என் அறைக்குள் சுஜா வந்தாள். அவள் கூட ஜோதி.
" என்ன அங்கிள் கோவமா?"
"எதுக்குக் கோவம்?" என்று கேட்டேன்.
"நான் உங்களோட எல்லாம் முன்னைப்போல பேசறதில்லை பழகறதில்லைன்னு?"
"காலத்தோட நாமளும் மாறணும். Why would I care?" என்றேன் காட்டமாக.
அவ்வளவுதான். ஜோதி கண்களில் பொலபொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தது. சுஜா "என்னடி ஜோதி?" என்று பரபரத்தாள்.
ஐந்து நிமிடம் போல ஜோதி எதுவும் பேசாமல் அழுதாள். பிறகு சமாதானமாகிப் பேசினாள். " என் நிலைமை நான் யாரிடமும் சொல்லல அங்கிள். என் புகுந்த வீட்டுல ஒரு விதமான கட்டுப்பாடு. மிலிட்டரி ரூல்னு கூடச் சொல்லலாம். யாரிடமும் அதிகம் பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் என்ன பேசினேன் ஏது பேசினேன் என்று கேள்வி கேட்டே தொளச்சு எடுத்துருவாங்க. என் வீட்டுக்காரரும் அதே குணம் தான். சொன்னா வெக்கக் கேடு. என் அப்பா அம்மா க்ளோஸ் friends கூட மனசு விட்டு பேசியே ரொம்ப நாளாச்சு. போன தடவ வந்தபோது உங்களைப் பார்க்க மனசு பரபரத்தது. ஆனா என் வீட்டுக்காரர் நாசூக்கா நான் வர்றத தடுத்துட்டார். எனக்கு ச்சேன்னு ஆகிடுத்து. அதான் அதுக்கு அப்புறம் வரவே இல்லை. அன்னைக்குக் கல்யாணத்துல கூட அவர் இருந்ததால உங்க கிட்ட பேசல. இப்ப நான் தனியா வந்திருக்கேன். என் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட நிறைய பேசணும்னே வந்திருக்கேன். எங்கிட்ட கோவமில்லாம பேசுவீங்களா அங்கிள்?" என்றாள்
என் மனம் கனத்தது. அப்புறம் நாங்கள் மூவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சுமார் ஒன்பது மணிக்கு ஜோதி கிளம்பி அவள் வீட்டுக்குச் சென்றாள்.
கதவைச் சாத்திவிட்டு வந்த சுஜா " இப்ப தெரிஞ்சுதா உண்மை என்னன்னு?" என்றாள்.
"என்ன இருந்தாலும் என்னால இத ஏத்துக்க முடியல சுஜா. இந்தக் காலத்துல இப்படி மனுஷங்களா? நம்பவே முடியல"
" எல்லா காலத்திலேயும் இப்படி இருந்திருக்காங்க" என்றாள் சுஜா.
"ஏன், நீயும்தான் கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்தே. உனக்கு இந்தமாதிரியான அனுபவமா ஏற்பட்டுது" என்றேன்.
சுஜா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள். நான் அவள் கண்களை ஏறிட்டுப் பார்த்தேன். அவள் கண்கள் சிரிக்கவில்லை.
வீயார்