Wednesday, December 31, 2014

சுவடுகள்

சுவடுகள்

போன மாதம் தான் எனக்கு  லக்னோ ரீஜனல் ஆபீசில் மாற்றலானது.

போன வாரம்  ஆடிட்டுக்காக லக்னோ தாண்டி பஸ்தி என்னும் ஊருக்குப் போயிருந்தேன். மூணு பிராஞ்ச் ஆடிட். நாலு நாள் ட்யூட்டி.

சின்ன ஊர், தங்கும் வசதி குறைவானதால் மெயின் பிராஞ்ச் மேனேஜர் சுபாஷ் குப்தா குடியிருந்த வீட்டிலேயே தங்க வசதி செய்து தந்தார். நாலு நாள்தானே என்று நானும் சரியென்று தங்கி விட்டேன்.

கீழ் தளத்தில் சுபாஷும் மேல் தளத்தில் வீட்டு ஓனரும் என்று இரண்டு மாடி வீடு அது. கீழே ஹால் தவிர மொத்தம் மூன்று அறைகள். இரண்டு அறைகள் தொட்டுத் தொட்டும் ஒன்று எதிர்புறமும் என்று அமைந்திருந்தது. நடுவே சூரிய வெளிச்சத்துக்காக விடப்பட்ட வெட்டைவெளி. எனக்கு அந்தத் தனி அறையை ஒழித்துத் தந்தார்கள். 

குப்தாவும் அவர் மனைவியும் ஒரு அறையிலும் அவர் மகன் ஒரு அறையிலுமாக இருந்தார்கள்.

முதல் நாள் ஆடிட் முடிய வெகு நேரமாகி விட்டது. இரவு அவருடனேயே வீடு திரும்பி அவர் வீட்டிலேயே டின்னரும் சாப்பிட்டேன். சப்பாத்தி, சுடச்சுட துவரம் பருப்பு தால். அப்புறம் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு என் அறைக்குப் படுக்கச்  சென்றேன். இரவு உடை அணிந்து கொண்டு கம்பளியை (அது குளிர் காலம்) இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிப்போனேன்.

ஏன் எதற்கு என்று தெரியாமல் திடீரென்று முழிப்பு வந்தது. மொபைலை ஆன் செய்து பார்த்தால் மணி காலை நாலு. எழுந்திருக்க மனமில்லாமல் கம்பளிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்த என் காதுகளில் ஒரு மெல்லிய மூச்சு விடும் சப்தம் கேட்டது.

யாராய் இருக்கும்? சாத்தியுள்ள அறைக்குள் யாரு வந்திருப்பார்கள்? பயம் ஜிவ்வென்று உடம்பின் எல்லா செல்களிலும் பரவியது. சரி விளக்குப் போட்டுப் பார்ப்போம் என்று எழுந்தேன். அந்த சப்தம் நின்றது. இருந்தாலும் விளக்குப் போட்டுப் பார்த்தேன்.

அறையில் யாரும் இல்லை. சரி கனவாக இருக்கும் என்று நினைத்து விளக்கை அணைக்கப் போகையில் தான் அந்த சுவடுகளைப் பார்த்தேன். பெரியதும் சிறியதுமாய் இரண்டு வெவ்வேறு காலடிச் சுவடுகள். ஒன்று ஆணுடையது போன்றும் மற்றது பெண்ணுடையது போன்றும் தோன்றியது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து போனது.

எனக்குத் தூக்கம் சுத்தமாக விட்டுப் போனது. விளக்கைப் போட்டு வைத்தபடியே பெட்டில் சும்மாப் படுத்திருந்தேன். மணி ஆறானதும் எழுந்து வெளியே வந்தேன்.

அதற்குள் சுபாஷும் அவர் மனைவியும் எழுந்திருந்தார்கள். சுடச்சுட டீ தந்தார் மிஸஸ் குப்தா. காலையில் கண்டதை அவர்களிடம் சொல்லலாமா என்று யோசித்தேன் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பின்னர் அன்றைய பொழுதும் பிஸியாகவே போனது. அருகே இருந்த இரண்டு பிராஞ்சுகளுக்கும் சென்று வந்தேன். குப்தாவின் காரில் தான்.
அன்றிரவு சீக்கிரமே படுக்கச் சென்றேன். கிடந்து அடித்துக் கொண்டிருந்த மனது அமைதியாகி எப்போது தூங்கிப்போனேன் என்று தெரியாது. ஆனால் முதல் நாள் போலவே மூச்சுச் சப்தம் கேட்டு விழித்தபோது மணி நாலு!

விளக்கை போட்டதும் சப்தம் நின்றது. என் கண்கள் தன்னிச்சையாக என் பெட் அருகே சென்றன.

எல்லாம் நேற்று மாதிரியே தான். சுவடுகள்! என்ன ஒரு ஜோடி சுவடு அதிகமாகக் காணப்பட்டது.  அதுவும் அளவில் பெரியது. ஆணுடையது. வலது காலில் நடு விரல் இல்லை.

நேற்று பார்த்த ஆண் சுவடு இன்று கலர் மாறி ரத்தத்தில் தோய்ந்த மாதிரித் தெரிந்தது. எனக்கு நிஜமாகவே பயமாகி விட்டது. ஐயோ என்று பெரிதாக அலறி விட்டேன். என் அலறல் கேட்டு ஒரு ஐந்து நிமிடத்தில் சுபாஷ் கதவைத் தட்டினார். கதவைத் திறக்கப் போனபோது கவனித்தேன் அந்தச் சுவடுகள் மறைந்து போயிருந்தன. 

“என்ன ஆச்சு மிஸ்டர் வெங்கட்? எதுக்கு இப்படிக் கத்தினீங்க? ஏதும் கெட்டக் கனாவா? முகம் அலம்பிக்கிட்டு வாங்க. மிஸஸ் குப்தா டீ போட்டுக் கொண்டு வருவாங்க. சாப்பிடலாம்” என்றார் குப்தா.

சரியென்று சொல்லி முகம் அலம்பிக் கொண்டு அவர்கள் கிச்சனுக்குச் சென்றேன். அங்கே சிறிய டீப்பாய் எதிரில் சேரில் குப்தாவும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கையிலும் டீ கப். எனக்காக ஒரு கப் வெய்டிங்.

“என்ன ஆச்சு சாப் ஜி?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்ல நிமிர்ந்த என் கண்ணில் எதிர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு photo  தென்பட்டது.  குப்தா, அவர் மனைவி, மகன் மற்றும் ஒரு இளம் பெண்.

“சுபாஷ் ஜி, யார் அந்தப் பெண்?”

“ என் பெண் தான் ஜி. இந்தச் சின்ன ஊரில் வசதி இல்லை என்று நான் தான் அவளை லக்னோ அனுப்பி விட்டேன். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். அது போகட்டும். என்ன ஆச்சுன்னு சொல்ல முடியுமா? எதையும் பாத்து பயந்துட்டீங்களா?” என்று கேட்டபடியே தன் வலது காலைத் தூக்கி இடது கால் மேல் போட்டார். 

உயரம் குறைந்த டீப்பாய். அதனால் அவர் கால் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவரது வலது காலில் நடு விரல் இல்லை. ஒரு விதமான இருட்டு என்னைக் கவ்வ நான் அமர்ந்திருந்த சேரிலிருந்து கீழே விழுந்தேன். என் தலை தரையில் 'ணங்' என்று மோதியது தான் நான் கடைசியாக உணர்ந்தது.  

முழிப்பு வந்தபோது ஒரு ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்தேன். அருகில் என் மனைவி சுஜா!

“என்னங்க என்ன ஆச்சு ஒங்களுக்கு? நேத்து திடீர்னு காலைல மயங்கி விழுந்துட்டீங்களாமாம். உங்க மேனேஜர் சுபாஷ் ஜி தான் தன் காரில் உங்கள இங்க கூட்டி வந்தார். நேத்து காலைலேர்ந்து மயக்கமா இருக்கீங்க. 24 மணி நேரத்துக்கும் அதிகமா! எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? வீட்டுக்குப் போனதும் நம்ம யூனிவர்சிட்டி பக்கத்துல இருக்கற ஹனுமார் கோவில்ல  நூத்தியெட்டு ரூபாய் போட்டுறணும். ” என்று படபடத்தாள்.

நான் மெலிதாகப் புன்னகைத்தேன். எதுவும் சொல்லவில்லை.

அப்புறம் மறுநாள் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். வீடு திரும்பினேன். இரவு சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு உறங்கிப்போனேன்.

சரியாக காலை நாலு மணிக்கு முழிப்பு வந்தது. நெஞ்சம் பயத்தில் உறைந்திருக்க எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் என் சைட் பெட்டின் அருகில் ஒரு ரத்தத்தில் தோய்ந்த ஆண் காலடிச் சுவடு. பார்க்கப் பார்க்க மறைந்து போனது.








Monday, December 22, 2014

சோம் தத்.


"அமி சோம் தத்... அமி நிர்தோசா .. அமி நிர்தோசா .." என்று சப்தமாக குரல் வரவே சட்டென்று கண் விழித்தாள் ராகினி.

இருட்டுக்குக் கண் பழகி, சுற்றிலும் பார்த்தாள். "அமி நிர்தோசா .. அமி நிர்தோசா .." என்று பக்கத்தில் இருந்து குரல் வந்தது.

அவள் அருகில் படுத்திருந்த வெங்கட் தான் பேசினான் என்பது புரிந்தது.

"வெங்கட்..வெங்கட்....." என்று அவனை உலுக்கினாள்.

"என்ன.. என்னாச்சு ராக்ஸ்?" என்று கேட்டபடியே எழுந்து உட்கார்ந்தான்.

"You were talking in your sleep... in Bengali!" என்று சற்று பயத்துடன் சொன்னாள் ராக்ஸ் என்கிற ராகினி.

" அப்படியா? என்ன சொன்னேன்?"

"அமி சோம் தத்... அமி நிர்தோசா .. அமி நிர்தோசா .." என்று திரும்பத் திரும்பச் சொன்னாய். யார் அந்த சோம் தத்?" என்று ராகினி சொன்னதைக் கேட்ட வெங்கட் முகம் பயத்தில் வெளிறியது.

“என்ன ஆச்சு வெங்கட்? யாரு அந்த சோம் தத்? அந்த மாதிரி உங்க பிரெண்ட்ஸ்ல யாரையும் எனக்குத் தெரியாதே? என்ன விஷயம் சொல்லுங்க” – ராகினி.

“ப்ளீஸ் கெட் மீ அ கப் ஆஃப் டீ! அப்பத் தான் என்னால மேற்கொண்டு பேச முடியும்” என்று வெங்கட் சொல்லவும், ராகினி எழுந்து சென்றாள். ஒரு ஐந்து நிமிடத்தில் இரண்டு கப் டீ எடுத்து வந்து, ஒன்றை அவனிடம் தந்து இன்னொன்றைத் தான் எடுத்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள்.

“கம் ஆன்! டெல் மீ!”

சூடான டீயை ஒரு மிடறு அருந்திய வெங்கட் சற்று புத்துணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தான்.

“ராக்ஸ்! நானும் ராமும் சேர்ந்து விகடன் பத்திரகை கதைப் போட்டிக்கு கதை எழுதறோம்ன்னு உனக்குத் தெரியுமில்லையா?”

“எஸ் ஐ நோ, பட் அதுக்கும் இந்த சோம் தத்துக்கும் என்ன ரிலேஷன்?”

“ சொல்றேன். என்ன கதை எழுதலாம்னு நானும் ராமும் ஒரு ரெண்டு மூணு நாள் சந்திச்சுப் பேசினோம். என்னென்னவோ தீம்ஸ் அலசினோம். எதுவும் சரிப்பட்டு வரல. அப்பத்தான் எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு. ஏதாவது உண்மைச் சம்பவத்தைப் பேஸ் பண்ணி கொஞ்சம் அங்கயிங்க மாத்தி ஒரு கதை எழுதினா என்னன்னு? யோசிக்க யோசிக்க அதுதான் ரொம்ப சரின்னும் தோணிச்சு. ராம் கிட்ட சொன்னேன்” என்று வெங்கட் நிறுத்தினான்.

“அதுக்கு ராம் என்ன சொன்னார்?”

“ ராம் மொதல்ல தயங்கினான். ஏதாவது லீகல் ப்ராப்ளம்ஸ் வரும்னு. நான் சொன்னேன் அந்த மாதிரி ப்ராப்ளம் வராத மாதிரி கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதி விடலாம். யாரும் ஒன்றும் கேட்க முடியாதுன்னு.  கொஞ்ச நேரம் யோசிச்ச ராமுக்கும் அது தான் சரின்னு பட்டுது.

அப்புறம் ரெண்டும் பேரும் திரும்பவும் எங்களுக்குத் தெரிஞ்ச சம்பவங்கள எல்லாம் அலச ஆரம்பிச்சோம். ஒண்ணும் ஓகே ஆகல. அப்பத் தான் ராம் இந்த சோம் தத் கதையச் சொன்னான்.

ஒனக்கேத் தெரியும், ராம் சின்ன வயசுல பெங்கால்ல மிட்னாபூர்ங்கற எடத்துல பல வருஷம் இருந்தான். அவங்க அப்பா அங்க வேலையா இருந்தார். அப்ப சின்ன வயசுல கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தக் கதையா எழுதலாம்ன்னு சொன்னான். அது நடந்ததோ பெங்கால்ல. இங்க யாரும் அத நம்ம கதையோட லிங்க் பண்ண முடியாது. அதுனால பிரச்சனை இல்லைன்னு சொன்னான். நானும் ஓகே சொல்லவே அவன் அந்தக் கதையோட அவுட்லைன் சொன்னான்.” வெங்கட டீ குடிப்பதற்காக மீதும் சற்று அமைதியானான்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தான்.

“ அது ஒரு பழிவாங்கற ரிவன்ஜ் கதை. அதுவும் ஒரு ஆவி பழி வாங்கற கதை. எழுபதுகள்ல மிட்னாப்பூர் பக்கத்துல இருந்த கிராமங்கள  இணைக்க கவர்மென்ட் ரோடுகள் போட்டுக்கொண்டிருந்த காலம் அது. ராம் அப்பா ஒரு ஸிவில் எஞ்சினியர். அந்தப் ப்ராஜக்ட்ல ஒரு முக்கிய பொறுப்பு. அந்த வேலைகள் செய்ய அங்கேயே லோக்கல்ல இருந்த ஆளுங்கள தேர்ந்தெடுத்தாங்க. அப்படி வந்தவங்கள்ல ஒருத்தன் தான் சோம் தத்.

சோம் தத், பெங்காலிகளுக்கு உரிய ஒருவித மஞ்சள் கலந்த வெள்ளை நிறம். நல்ல உயரம். அதற்குத் தகுந்த உடற்கட்டு. பார்க்கும் எவரையும் தன்பால் இழுக்கும் ஒருவித வசீகரம். அந்த வசீகரம் தான் அவனுக்கு எமனாகவும் வந்தது. அவன் அழகில் மயங்கினாள் சுமலதா.

சுமலதா அந்தப் ப்ராஜக்டில் ராம் அப்பா கீழே வேலை செய்த சந்தீப் பானர்ஜியின் மனைவி. வயது முப்பதை நெருங்கினாலும் இளமை அவளை விடமாட்டேன் என்று சண்டித்தனம் செய்யும் அழகு. வங்காளப் பெண்களுக்கே உரிய மெலிதான தேகவாகு. சங்கீதம் போன்ற குரல். அப்படிப்பட்ட அழகி ஒருத்தனிடம் மயங்கினால், அவன் கதி என்னவாகும்? அதோகதிதான்.

சோம் தத் கதியும் அதோகதியாச்சு. எந்நேரமும் அவள் நினைப்பு. ஏதாவது காரணம் கொண்டு பானர்ஜி வீட்டுக்கு போவதும் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான்.

காமம் ஒரு விசித்திரமான மெல்லிய நூல். அதில் கட்டுண்டவர்கள் அதை எளிதாக அறுத்துவிட முடியும். ஆனாலும் அது அறாமல் இருக்க அவர்கள் வெகு கவனமாக இருப்பார்கள். அதை ஒரு வேள்வி போலே வளர்ப்பார்கள். அது உள்ளேயே கொழுந்து விட்டு எரிந்து அவர்களை உருக்கும். அதையும் ஒரு சுகமென்றுச் சொல்லுவார்கள்.

அந்த காமநூலில் சோம் தத்தும் சுமலதாவும் கட்டுண்டார்கள். அதுவோ ஒரு சிறிய கிராமம். அதுவும் ஒரு ப்ராஜக்ட் சைட். விஷயம் சிறிது நாளில் மெலிதாக கசிந்தது. அதுவும் சந்தீப் தானே பார்த்துவிட்டான். பார்த்தவன் அதிர்ந்தும் விட்டான்.

அவர்களை அப்படியே கொன்றுவிட வேண்டும் என்றும் அவனுள்ளே ஒரு கோவம் வந்தது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் சந்தீப் இயற்கையில் ஒரு கோழை. பெயர் மானம் என்றவற்றில் எல்லாம் ரொம்ப பிடித்தம் உள்ளவன். அதனால் ராம் அப்பாவிடம் வந்தான்.

அவரிடம் எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்ட அவர் உடனே சோம் தத்தை கண்டிக்கலாம் என்று சொன்னார். அதற்க்கு சந்தீப் மறுப்புத் தெரிவித்தான். அப்படிக் கண்டித்தால் அவன் அந்த விஷயத்தைப் பரப்பிவிட்டால் என்னவென்ற பயம்! தனக்குத் அந்த ப்ராஜக்டில் இருந்து இடமாற்றம் வாங்கித் தருமாறு கேட்டான். இவரும் சரியென்று சொன்னார்.

சொன்னபடியே அவனுக்காக ஹெட் ஆபீசில் பேசி வாங்கியும் தந்தார். ஆனால் நடந்து கொண்டிருந்த வேலையை சற்று முடித்துக் கொடுத்துவிட்டு ஒரு இரண்டு வாரத்தில் வந்து சேர்ந்து கொள்ள ஹெட் ஆபீசில் ஆர்டர் போட்டு விட்டார்கள்.”

ராகினி ஒரு வித மயக்கத்தில் இருந்தாள். “ என்னவாச்சு ராக்ஸ்? என்ன ஒரே சைலன்ட்?” என்றான் வெங்கட்.

“ எனக்குப் புரிஞ்சு போச்சு வெங்கட். சோம் தத் அந்தப் பொண்ண ஏதோ செஞ்சிட்டான். சரிதானே?”

“ சரிதான். ஆனால் என்ன செஞ்சிருப்பான்? Can you guess?”

“அவளோட ஓடிப் போயிருப்பான”

“இல்ல. அவளக் கொலை செஞ்சுட்டான்” என்ற வெங்கட்டை ராக்ஸ் பீதியுடன் பார்த்தாள்.

“ ஆமாம் ராக்ஸ்! சோம் தத் சுமலதாவைக் கொலை செஞ்சுட்டான். தனக்குக் கிடைக்காத அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கொலை செஞ்சுட்டான். அதுவும் அவளைக் கொடூரமாகக் கற்பழித்து! அதற்கு சாட்சி அங்க வேல செஞ்ச ராம் கிஷோர். சந்தீப் நிலை குலைந்து போய்விட்டான். போலீஸ் வந்தது. விசாரணை நடத்தி சோம் தத்தை அரஸ்ட் செஞ்சு கூட்டிகிட்டு போயி ஜெயில்ல போட்டாங்க. கோர்ட் கேஸு எல்லாம் நடந்து அவனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்துட்டாங்க.

“இவனைக் கொல்றதுனால என் சுமா திரும்பவும் வருவாளா?” என்று சந்தீப் புலம்பித் தள்ளிவிட்டான்.

ஒரு புதன்கிழமைக் காலை சோம் தத் தூக்கிலிடப்பட்டான்.

“கடைசியாக ப்ரார்த்தனை பண்ணிக்கோ” என்று அவனிடம் சொல்லப்பட்ட போது அவன் சொன்னது தான் “ அமி சோம் தத்! அமி நிர்தோசா ! அமி நிர்தோசா!”

அதற்கப்புறம் ராம் அப்பா கல்கத்தா மாற்றிக்கொண்டு வந்துவிட்டார். அப்புறம் உடல் நிலை சரியில்லாமல் போக ரிஸைன் பண்ணிவிட்டு சென்னையோட வந்துட்டார். கொஞ்ச நாள் கழிச்சு யார் மூலமாகவோ அவருக்கு ஒரு ந்யூஸ் கெடச்சுது. ராம் கிஷோர் மர்மமான முறைல ஒரு மரத்துல தூக்குப் போட்டுக்கிட்டு செத்துட்டானாம். அவன் உடலை இறக்கிக் கொண்டு போனபோது அங்கே ஒரு மோதிரம் கிடைத்ததாம். அது சோம் தத் மோதிரம் என்று தெரிந்தவர்கள் சொன்னார்களாம்.

இந்தச் செய்தியைக் கேட்ட ராம் அப்பா ரொம்பவே கலங்கிப் போயிட்டாராம். அவன் கொடுத்தப் பொய் சாட்சியை நம்பி மோசம் போயிட்டோமே என்று கலங்கி கலங்கி ஒரு நாள் அட்டாக்கில் போய்விட்டாராம். இதுதான் சோம் தத் பழிவாங்கியக் கதை.” என்று நிறுத்தினான் வெங்கட்.

“இந்தக் கதையைத் தான் நாங்கள் எழுதுவதாக முடிவு செஞ்சிருக்கோம். ஆனா நான் ஏன் இந்த மாதிரி தூக்கத்துல ஒளறினேன்னு எனக்குத் தெரியல!” என்று சொன்னான்.

“ ராம் அப்பா சொன்ன விஷயம் ஒங்களப் பாதிச்சிரிச்சு போல இருக்கு. பேசாம தூங்குங்க. காலைல பாத்துக்கலாம்” என்றால் ராகினி.

“ இல்லை ராக்ஸ்! எனக்கு ராம் கிட்ட பேசணும் போல இருக்கு. அந்தப் செல்லைக் கொடு”

“சும்மா இருங்க. ராத்திரில போன் செஞ்சா அவர் பயந்துக்கப் போறார். காலைல பாத்துக்கலாம்”

ஒருவித தயக்கத்துடன் சரியென்று சொன்ன வெங்கட்  சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.

காலை ஆறு மணிக்கு செல் அலறியது. எடுத்துப் பார்த்தால் ராம்! சரி அவனே செஞ்சுட்டான் நல்லது தான் என்று நினைத்து போனை எடுத்து “ஹல்லோ ராம் ” என்றான்.

“அண்ணா நான் மாலதி. மிஸஸ் ராம். நீங்க உடனே இங்க வாங்களேன்” என்று அழுதபடியே பேசினாள்.

வெங்கட் உடல் விதிர்விதுத்தது. ராகினியையும் அழைத்துக்கொண்டு காரில் ராம் வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப்! குழம்பிய படியே உள்ளே சென்றவனை மாலதி எதிர்கொண்டாள்.

“அண்ணா நான் மோசம் போயிட்டேன்” என்று பெருங்குரலில் அழுதாள். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு ராமின் கம்ப்யூட்டர் ரூமுக்குப் போனாள்.

அங்கே ராம் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் கம்ப்யூட்டர் திரையில் ராம் எழுதி வைத்த இவர்கள் கதை வர்ட் ஃபைலில் இருந்தது. தமிழில் டைப் செய்து வைத்த வரிகளின் கீழே பெங்காலியில் “আমি নির্দোষ.. আমি নির্দোষ..” என்று எழுதியிருந்தது.

அருகில் ஒரு பழைய டைரி. அதில் 15.11.1970 என்று போட்டு சில செலவினங்கள் போல எழுதியிருந்தது. அதில் ஒரு என்ட்ரி வெங்கட் கவனத்தைக் கவர்ந்தது. “ராம் கிஷோர் – ரூ.2000/- என்று எழுதியிருந்தது. கீழே “கல்யாணராமன்” என்று ராமின் அப்பா கையெழுத்திட்டிருந்தார். வெங்கட் உறைந்தான்.

அருகில் நின்று அழுது கொண்டிருந்த மாலதியைப் பார்த்தான். அவள் முகத்தில் ஒரு சவக்களை தெரிவது போலத் தோன்றியது. பிரமையாக இருக்குமோ?

Sunday, September 21, 2014

என்ன மன்னிச்சுக்குங்க சார்


அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை.

அதுவும் அவன் சாவுக்குப் போய் மாலையெல்லாம் வேற போட்டுட்டு வந்திருக்கற எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி.

பாங்கில் இருந்து ரிடையர்மென்ட் ஆனதுக்கு அப்புறம் போர் அடிக்குதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் என் பால்ய சிநேகிதன் ராஜா அவன் சொந்த ஊர் மயிலாடிக்கு வர்றியானு கேட்டான். அந்த ஊரு முருகனுக்கு ஆராட்டு விழா ரொம்ப சிறப்பா நடக்குமாம். ஒரு வாரம் கிராமமே ஜே ஜேன்னு இருக்குமாம். கலை நிகழ்சிகள், சொற்பொழிவுகள் என்று எனக்கு நல்லா பொழுது போகும் என்றான்.

‘தங்கறதுக்கு என் வீடு இருக்குடா! வந்திடு’ என்றான்.

சரின்னு சொல்லி எனக்கும் மனைவிக்கும் நாகர்கோவிலுக்கு டிக்கட் புக் செஞ்சேன். அங்கிருந்து கார் அனுப்புவதாகச் சொல்லி இருந்தான் ராஜா. ஆனா லாஸ்ட் மினிட்ல தன்னால வர முடியாதுன்னு சொல்லிட்டா மனைவி.
‘நீங்க போயிட்டு வாங்க! ராஜா இருக்கார். உங்களுக்கும் ஒரு நாலு நாள் பொழுது போகும்’ என்றும் சொன்னாள்.

சரியென்று நானும் கிளம்பிச் சென்றேன். ராஜா சொன்னது போலவே கார் அனுப்பி இருந்தான். ஒரு அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மயிலாடி சென்றடைந்தோம். அங்கே கோவில் பக்கத்திலேயே ராஜாவின் பெரிய வீடு. ராஜா குடும்பத்துடன் வந்திருந்தான். என் மனைவி வராதது அவன் மனைவிக்குச் சற்று ஏமாற்றமே.

நல்ல அருமையான சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மைதா பூரி, புளிசேரி உருளைக்கிழங்கு கூட்டுக் கறி எத்தங்காய் வறுவல், மட்டிப்பழம், முந்திரிக்கொத்து என்று நாகர்கோவில் ஸ்பெஷலில் திக்கு முக்காடிப் போனேன். சாப்பிட்டு முடித்ததும் நானும் ராஜாவும் கொஞ்சம் தள்ளி இருந்த அவனது வயல் வரப்புக்குச் சென்றோம். காலாற நடந்ததில் உண்டது செரித்தது. மாலை மணி நாளும் ஆகியிருந்தது.

“வாடா, அப்படியே மார்க்கட் போயி ஒரு ஜெல்லி மில்க் ஷேக் குடிச்சிட்டு வரலாம்’ என்று ராஜா கூப்பிட உடனே சரியென்றேன்.

மார்க்கெட் சென்று இரண்டு மில்க் ஷேக் ஆர்டர் செய்தோம். அதை ரசித்து சுவைத்து குடிக்கும் போதுதான் சேகரனைப் பார்த்தேன்.
என் கையில் இருந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்காதது ஆச்சர்யம் தான்.

நாங்க நின்றிருந்த கடைக்கு எதிர்சாரியில் ஒரு இனிப்புப் பலகாரக் கடையில் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்த அதே நேரத்தில் அவனும் என்னைப் பார்த்துவிட்டான். அவன் முகத்தில் ஒரு அதிர்ச்சி, வியப்பு, பயம் என்று எல்லாம் கலந்து ஒரு குழப்பமான பாவம்.

சட்டென்று ஜிலேபியை தின்று முடித்து காகிதத்தை கீழே எறிந்தான். பணத்தைக் கொடுத்து விட்டு விடுவிடுவென்று எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தான். என்னைப் பார்த்து பயந்து தான் அவன் செல்கிறான் என்று எனக்குப் புரிய சில நிமிடங்கள் ஆனது. உள்ளே ஒரு ஆச்சர்யம் ஆத்திரம் எல்லாம் கலந்து ஒரு உணர்ச்சி.

‘சேகரா!’ என்று ஒரு உறுமலான சத்தம் என்னிடத்தில் இருந்து வந்தது. ராஜா உட்பட அந்த மார்க்கெட்டில் இருந்த பலர் என்னைத் திரும்பிப் பார்த்தனர். சேகரனும் பார்த்தான். என்ன யோசித்தானோ, என்னை நோக்கி வந்தான்.

“ என்ன சார்! எப்படி இருக்கீங்க? வீட்ல சௌக்கியமா? பாப்பா என்ன பண்ணுது?” என்று சரமாரியாக கேள்விகள் கேட்டான்.

“என்னப் பத்தி விசாரணை எல்லாம் இருக்கட்டும். நீ எங்க இங்க...?” என்று நான் இழுத்தேன்.

“சார்! அது பெரிய கத சார். என் வீடு பக்கத்துல தான் இருக்குது. வர்றீங்களா? அங்க போயி பேசலாம்” என்றான்.

நான் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்னால், “ டேய், நீ போய் வாடா! எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. ராத்திரி சரியா ஒன்பதுக்கு இங்கேயே வந்திடு. பட்டிமன்றம் இருக்கு” என்று ராஜா சொன்னான்.

“ நீங்க போங்க சார்! நான் கொணாந்து விட்டுர்றேன்” என்றான் சேகரன்.

பின்னர் நான் சேகரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றேன். காலிங் பெல்லை அழுத்தியதும் கதவைத் திறந்த கமலம் (அவன் மனைவி) என்னைப் பார்த்துத் திகைத்தாள்.

“உள்ள வர வழியவிடு கமலா! சார் வந்திருக்கார். காபி கொண்டா” என்று அவளைத் தள்ளியபடியே சேகரன் உள்ளே நுழைந்தான். நானும் மந்திரித்து விடப்பட்டக் கோழி மாதிரி அவனைப் பின்தொடர்ந்தேன்.

“இப்படி உட்காருங்க சார்” என்று அவன் காட்டிய சோபாவில் உட்கார்ந்தேன். திடுமென நான் எதிர்பாராத விதமாக, சேகரன் என் காலில் விழுந்தான்.

“ஏய், சேகரா! எழுந்திரி! என்ன பண்ணற? எனக்கு இதெல்லாம் புடிக்காது!”

“இல்ல சார், நீங்க மன்னிச்சேன்னு சொன்னாதான் நான் எழுந்திருப்பேன்”

“மன்னிக்கவா  வேணாவான்னு நீ நடந்ததச் சொன்னாத் தானே தெரியும்? எல்லாத்தையும் ஒண்ணுவிடாம வெவரமாச் சொல்லு”

சேகரன் சொல்ல ஆரம்பித்தான்.

“சார்! என்ன இன்னிக்கிப் பாத்தது உங்களுக்கு அதிர்ச்சியாத் தான் இருக்கும். உங்களுக்கு மட்டும் என்ன? யாரு பார்த்திருந்தாலும் அதிர்ச்சி தான். எனக்கே கூட அதிர்ச்சி தான். இந்த அஞ்சு வருஷத்துல என்னைத் தெரிஞ்ச நம்ம சென்னைக்காரங்கள சந்திச்சதே இது தான் மொத தடவ.”

“விஷயத்துக்கு வா சேகரா” என்று நான் சொல்லவும் கமலம் காபி எடுத்துவரவும் சரியாக இருந்தது.

“என்னத்தச் சொல்றது சார்? உங்களுக்கேத் தெரியும், ப்யூன் சம்பளத்துல குடும்பம் நடத்துறதுக்கு நா எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு. இதுல பாங்கிலேயும் கடன். வெளிலேயும் கடன். கழுத்துவர. என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தபோதுதான் என் தம்பி சுந்தரம் வந்தான் கிராமத்திலேர்ந்து. வேலை தேடி வந்த தம்பியும் என் கூடவே இருந்தான். இருக்கற செலவுல அது வேற! ஆனாக் கூடப் பொறந்த தம்பியாச்சே! ஒண்ணும் சொல்ல முடியல.

அப்படி இருக்கும் போதுதான் ஒரு நாள் அந்த சம்பவம் நடந்திச்சு. நான் கமலத்துக்கு ஒடம்பு சரியில்லன்னு லீவு போட்டிருந்தேன். சுந்தரம் ஒரு வேலை விஷயமா தாம்பரம் வரை போயிருந்தான். என்னோட பான்ட் சர்ட் தான் போட்டிருந்தான். அங்க வேல முடிஞ்சு திரும்பி வரைல ட்ரெய்ன்ல வர நெனச்சு வந்திருக்கான். எப்படின்னு தெரியல. கவனிக்காம லைன் க்ராஸ் பண்ணிருப்பான் போல. வேகமா வந்த ஒரு ட்ரெய்ன்ல அடிபட்டு ஸ்பாட்ல அவுட். ஆனா மொகம் கொஞ்சம் டாமேஜ் ஆயிடிச்சி. கண்டுபுடிக்க முடியாத படிக்கு. ஆனா அவன் பாக்கெட்ல இருந்த என் போன் நம்பரப் புடிச்சு எனக்கு யாரோ ஒரு புண்ணியவான் தகவல் தந்தாரு.

எனக்குத் தகவல் வந்து நான் போயி  பாடிய எங்க வீட்டுக்கு எடுத்து வரைல தான் திடீர்னு இந்த ஐடியா வந்திச்சு. உடனே என் மனைவி கிட்ட இதச் சொன்னேன். என் தம்பிக்குப் பதிலா நான் செத்துப் போயிட்டதா ந்யூஸ் பரவ விடலாம். யாராலேயும் கண்டு புடிக்க முடியாது. நான் கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலமறவா இருந்துக்கறேன்.

பாங்க்லேயும் பணம் தருவாங்க. வெளி இன்ஷூரன்சும் கிடைக்கும். நல்ல துட்டு தேறும். இருக்கற கொஞ்ச நஞ்ச கடன அடச்சுட்டு எங்கயாவது கண் காணாத எடத்துக்குப் போயிடலாம்.

கமலம் புரிஞ்சிகிட்டா. இதவிட்டா எங்களுக்கு வேற வழியுமில்ல. நான் சொன்ன மாதிரியே எல்லாம் நடந்திச்சி. நானும் தல மறவாயிட்டேன். சொன்ன படியே எல்லாப் பணமும் கமலம் கைக்கு வந்திடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சி நான் அவளக் காண்டாக்ட் செஞ்சி இங்க வரச் சொன்னேன். இங்க எங்களுக்கு யாரையும் தெரியாது. புதுசா ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

எனக்கு யாரையும் ஏமாத்தணுங்கற  எண்ணமெல்லாம் இல்ல சார். கமலம் சொல்லிச்சு நீங்க கூட சாவுக்கு வந்தப்ப அஞ்சாயிரம் கொடுத்தீங்கன்னு. அதத் திருப்பி தந்திடறேன் சார். என்ன யாருகிட்டேயும் காட்டி கொடுத்துறாதீங்க சார்! “

பேசிக்கொண்டே இருந்த சேகரன் திடீரென்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தான். சப்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த கமலம், அவன் அழுவதைப் பார்த்து தானும் அழுகையில் சேர்ந்து கொண்டாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு விதமான மயக்க நிலை. சேகரன் செய்தது தவறு. அவனுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று ஒரு மனம் சொல்லியது. பாவம் விட்டுவிடலாம் என்று இன்னொரு எண்ணம்.

எத்தனையோ பணக்காரர்கள் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் அதை நஷ்டக் கணக்கில் வங்கிகள் எழுதிக் கொள்வது ஒன்றும் எனக்கும் தெரியாததும் அல்ல உங்களுக்கும் தெரியாததும் அல்ல. இவன் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பத்து லட்சம் பார்த்திருப்பானா? கோடிகளுக்கு முன் லட்சம் என்ன? விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

“சேகரா! நீ செஞ்சது அநியாயம்! ஆனா இத விட பெரிய அநியாயங்கள் எல்லாம் இந்த ஒலகத்துல நடந்துக்கிட்டுதான் இருக்கு. நான் ஒண்ணும் கடவுள் இல்லை ஒன்ன தண்டிக்கறதுக்கு. ஆனா இனிமேல் நியாயமாப் பொழச்சுக்கோ” என்று சொன்ன என்னை ஒரு கடவுளைப் பார்ப்பது போல சேகரனும் கமலமும் பார்த்தார்கள்.

“சரி நாம் கெளம்பறேன்”

“ சார்! இனிமே நாம பார்ப்போமோ மாட்டோமோ! இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. ஒரு வாய் சாப்ட்டுட்டு போங்க ப்ளீஸ்” என்றான் சேகரன்.

மணியைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆகியிருந்தது. ஆனால் அதற்குள் வெளியே இருட்டு. சரி எப்படியும் வெளி சாப்பாடு தான் இங்கேயே சாப்பிடலாம் என்று முடிவு செய்து சரி என்றேன்.

கமலம் தோசையும் காரச் சட்னியும் பரிமாறினாள். நல்ல டேஸ்ட். நாலு தோசை சாப்பிட்டேன். காபி வந்தது. குடித்து விட்டு கை கழுவ எழுந்த என்னை ‘ இப்படி பொழக்கடப் பக்கம் வாங்க சார். அங்க கை கழுவிக்கலாம்’ என்று சேகரன் கூட்டிச் சென்றான். கை கழுவி விட்டு, துண்டில் துடைத்தபடி சுற்றிலும் பார்த்தேன்.

“சார்!”

“என்ன சேகரா?”

“சார்! நீங்க நல்லவர்தான். ஆனா என் தலவிதி. யாரையும் நம்ப முடில. இந்த அஞ்சு வருசம்கூட நாங்க சந்தோசமா இல்ல சார். எப்ப யார் கண்ணுல படுவோமோன்னு பயந்து பயந்தே தான் லைப் ஓடுது. இனிமேலும் எனக்கு ரிஸ்க் எடுக்கற சக்தி இல்ல சார். அதுனால என்ன மன்னிச்சுக்குங்க.”

“என்ன சேகரா? எதுக்கு நான் உன்ன மன்னிக்கணும்?”


“இன்னைக்கு இல்லேனாலும் என்னிக்காவது ஒரு நாள் நீங்க யாருகிட்டேயாவது சொல்லிட்டீங்கன்னா? அதுனால இப்ப நீங்க சாப்பிட்டக் காரச்சட்னில விஷம் கலந்து கொடுத்திருக்கோம். எப்படியும் இன்னும் பத்து நிமிசத்துல மயங்கி செத்துருவீங்க. இங்க பார்த்தீங்களா எவ்வளவு வாழ மரங்கன்னு? எதுனாச்சி ஒண்ணத் தோண்டி உங்களைப் பொதச்சு அதும் மேல மரம் வச்சிட்டா போதும். எங்க லைப் செட்டாயிடும் சார். சாரி சார்!” என்று அவன் சொல்லி முடிக்கும் போதே எனக்கு மயக்கம் வந்தது. வாந்தி வந்தது. நான் மயங்கி விழும் முன்னர் கூட சேகரன் திரும்பத் திரும்ப “என்ன மன்னிச்சுக்குங்க சார் ” என்று சொல்லிகொண்டிருந்தது  காதில் விழுந்தது. 

Friday, August 29, 2014

பஸ்ஸில் ஒரு குற்றம்.


பஸ் தேனாம்பேட்டையை நெருங்கும் போது நிறைந்து விட்டது. சரியாக நிற்கக் கூட இடமில்லை. ஒருத்தர் மூச்சுக்காற்று மற்றவர் மேல் படுமளவுக்கு நெருக்கம்.

எனக்கு என் பர்ஸைப் பற்றி கவலை. பத்தாவது முறையாகப் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். பத்திராமாய் இருந்தது.

நீங்கள் சென்னைவாசி என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேனாம்பேட்டை அருகில் பிக் பாக்கெட் ஆவது தினசரி நடக்கும் ஒரு சம்பவம். அது என்னவோ தெரியவில்லை. எல்லா பிக் பாக்கெட்டுகளுக்கும் அது ஒரு சுவர்க்கம். அந்தவழியாகப் போகும் எல்லா பஸ்களிலும் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது ஒரு காரணமோ என்னவோ! இருக்கலாம்.

டிவிஎஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்தப் பிறகு தான் பாக்கி வேலையெல்லாம். இப்படி என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்த போதுதான்
என் கண்கள் அவன் மீது விழுந்தன.

முப்பதுகளின் முடிவில் இருப்பான். நல்ல கலர். டீசெண்டாக டிரஸ் செய்திருந்தான். தோளில் ஒரு பேக். ஆபீஸ் போகிறான் போலும். பாவம் ஆள் வளமாகத் தான் இருக்கிறான். ஏன் ஒரு டூ வீலர் வைத்துக்கொள்ளவில்லை என்று யோசனை ஓடியது.

அதற்குப் பதில் சொல்வது போல அவனது அடுத்த நடவடிக்கை இருந்தது. தன் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரின் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான்! பாவி! பிக் பாக்கெட்டா இவன்? அதிலிருந்த பணத்தை எடுத்து விட்டு அதை யாரும் அறியாவண்ணம் கீழே நழுவ விட்டான். அப்புறம் அந்தப் பணத்தை யாருக்கோ பாஸ் செய்தான். யாருக்குச் செய்தான் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. பாஸ் செய்துவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்து விட்டான்.

தெய்வமே! கண்ணில் ஒரு கோபத்தோடு என்னைப் பார்த்தான். பின்னர் ஏதோ முடிவு செய்தவன் போல என்னை நோக்கி வர முயன்றான். கூட்டம் அதிகம் என்பதால் அவ்வளவு சுலபமாக வர முடியவில்லை.

நெருக்கித் தள்ளிக் கொண்டு அவன் வர வர நான் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் போக முடியவில்லை.

அவன் என்னை நெருங்கி விட்டான். எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு ஆள் மட்டும் தான்.

அங்கிருந்து என்னைப் பார்த்தான். நான் அவன் பார்வையைத் தவிர்த்தேன். “.... பொளந்துடுவேன்” என்று அவன் உதடுகள் அசைந்தது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன். சரி நாம் அந்தப் பக்கம் பார்த்தால் இவனால் ஆபத்து இல்லை என்று போய்விடுவான் என்று நினைத்தேன். ஒரு இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் பார்த்தால் அவன் அங்கே இல்லை.

அப்போது தான் என் பின்னால் முதுகில் ஏதோ குத்துவது போல் இருந்தது. திரும்பிப் பார்க்க முயன்றபோது “ டேய்! திரும்பினா போட்டுத் தள்ளிருவேன்! கம்முனு ஒன் பர்ஸ தா. இல்லேனா இந்தக் கத்திய சொருவிடுவேன்” என்று ஒரு குரல் கேட்டது.

ஐயோ! என் பின்னாலேயே வந்துவிட்டானா? பயத்தில் முகத்தில் வேர்வை பெருக்கெடுத்தது.

“மாட்டேன்” என்றேன்.

“சாவு கிராக்கி! செத்துருவே” என்றான்.

கொஞ்சம் யோசித்தபோது ப்ளேடால் என் கையில் சிறிது போல கீறினான். ரத்தம் ஒரு கோடாக வந்தது. இனிமேல் யோசித்தால் நல்லதில்லை என்று அவனுக்கு என் பர்ஸை எடுத்துக் கொடுத்தேன்.

அதைக் கையில் வாங்கிய அவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, என்னைத் தள்ளி வழி ஏற்படுத்திக்கொண்டு வாசல் அருகில் சென்றான். பஸ் ஆனந்த் சிக்னலில் நின்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய பேர் இறங்கினார்கள். அவர்களோடு இவனும் இறங்கி மாயமானான்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் டிவிஎஸ் ஸ்டாப். நான் இறங்கினேன். என்னோடு இன்னும் பலரும் இறங்கினார்கள். கடைசியாக ஒரு பெண், இறங்கினாள். இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். என்னைக் கண்டதும் என் அருகில் வந்தாள். புன்னகைத்தாள்.

“என்ன மாமா? ஒன் டம்மி பர்ஸ லவட்டிட்டானா? இது என்ன கைல ரத்தம்?” என்று கைப் பிடித்துப் பார்த்தாள்.

“ஒண்ணும் பெரிசா இல்ல சரோ! ஆமாம், ஏதும் தேறிச்சா?”

“அவன் ஜோடி கிட்டேர்ந்து நான் அடிச்சிட்டேன். பத்து ரூவா தேறும்” என்று சிரித்தாள்.

“சரோவா கொக்கா?” என்ற என்னைப் பார்த்து செக்சியான குரலில், “இந்தப் பேச்செல்லாம் வேணாம். வாய் நமநமங்குது ஒரு பில்டரு குடு” என்று சொல்லி, சுவாதீனத்துடன் என் ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டாள்.  

Thursday, August 21, 2014

நீ எங்கே உன் நினைவுகள் இங்கே - அத்தியாயம் இரண்டு

வெங்கடராமன் தம்பதியினர் சீட்டுக்குப் பின்னாலிருந்த சீட்டில் மோகன் ராதாசுமார் இருபத்தைந்து வயது இருக்கும். அவர்கள் இருவரின் சீண்டல்களும் சிரிப்புகளும் சிலருக்குச் சந்தோஷத்தையும் சிலருக்கு எரிச்சலையும் தந்து கொண்டிருந்தன. குறிப்பாக வெங்கட்ராமன் தம்பதியினர் முகம் சுளித்தவாறே இருந்தனர்.

வீட்டில் காட்டிக்கொள்ள வேண்டிய காதலை வீதியில் காட்டுவார்களா?

மோகன் தற்போதைய நடிகர் ஒருவர் சாயலில் இருந்தான். நல்ல நிறம். நல்ல உயரம். அழகான முகம். அளவான மீசை. கட்டுமஸ்தான உடல். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு ஆணழகன். ராதாவும் ஆசைப்பட்டாள். என்ன ஒரே ஒரு சங்கடம் – மோகன் அவளது மைத்துனன்.

அதிர்ச்சியில் முகம் சுளிப்பவர்கள் அடுத்த அத்தியாயத்துக்குச் செல்லலாம். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு இருக்கும் அவனிடம்  வீட்டிலேயே இருக்கும் அவள் மயங்கியது தவறாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

அவளும் ஒன்றும் அழகில் குறைந்தவள் இல்லை. உயரத்திலும் நிறத்திலும் முக லாவண்யத்திலும் அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை. கூடவே மதர்த்த இளமை.

இவ்வளவும் தனது சொத்து என்று அவள் கணவன் சங்கரன் நினைத்திருந்தான். ராதாவை நம்பினான். ஆனால் நடந்தது விபரீதம்.

இத்தனைக்கும் அவர்கள் இருவரும் வேண்டும் என்று எதுவும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அண்ணன் ரூமில் இருந்த தன் மொபைல் சார்ஜரை எடுக்க வந்த மோகன், திடீரென்று அங்கிருந்த இணைக்கப்பட்ட குளியறையில் இருந்து ஒரு டர்க்கி டவல் மாத்திரம் சுற்றிக் கொண்டு வெளியே வந்த ராதாவைப் பார்த்துவிட்டான்.

அதற்கப்புறம் நடந்தவற்றை எழுதினால் இன்று இணையத்தில் இருக்கும் அந்த மாதிரி தளங்களில் வரும் கதைகள் போன்று இருக்கும். வேண்டாம்.

இந்தத் தொடர்பை யாருக்கும் தெரியாமல் அவர்கள் சில காலம் தொடர்ந்தார்கள். இருந்தாலும் காதலும் காமமும் மறைக்க மறைக்க மலரும் என்னும் கூற்றுப்படி சங்கரனுக்கு மெதுவாகப் புரிந்தது.

பொறுமையாய் காத்திருந்து கவனிக்கத் தொடங்கினான்.

ஒரு விஷயம் தெரியுமா? ரொம்ப அற்புதமான விஷயம். நாம் எல்லாரும் பெரும்பாலும் நம் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின் பேரில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கையில் ஆரம்பித்து பலவற்றைச் சரியாக கவனிப்பது இல்லை.  கவனித்தோமானால் ஒன்று புரிய வரும். நம்மைச் சுற்றி பல ஆச்சர்யங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலே இந்த முறை தவறிய காதல்களும் ஒன்று.

அந்தக் கோடி வீட்டில் வேலைக்காரி, வீட்டம்மா ஆபீஸ் சென்ற பிறகே வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் திரும்பச் செல்வதை சாதாரணம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள் திரும்பச் செல்லும்போது அவள் முகத்தைக் கவனித்தீர்களானால் அதிலே ஓடும் சுகிர்த பாவத்தையும் கவனிப்பீர்கள்.

தவறுகள் நடப்பதற்கு இன்ன இடங்கள் என்று நாம் வகுத்து வைத்திருப்பதாக நினைக்கிறோம். தவறுகள் எங்கும் நடக்கின்றன. சாத்திய கதவுகளுக்குப் பின்னால் மிகச் சில சமயம் மாத்திரமே பிரார்த்தனைகள் நடக்கின்றன.

எனிவே, நம்ம கதைக்கு வருவோம். பொறுமையாய் கவனிக்கத் தொடங்கிய சங்கரனுக்கு, அடுத்த நாளில் இருந்தே சாட்சிகள் கிடைக்க ஆரம்பித்தன. ராதாவின் அர்த்தமுள்ள புன்னகைகளும், தம்பியின் அசட்டு நடவடிக்கைகளும் அவன் கோவத்தை மெல்ல மெல்ல நெய்யூற்றி வளர்த்தன.

வேண்டுமென்றே காரம்போர்ட் விளையாடக் கூப்பிடுவான். மேசைக்கடியில் அவர்கள் கால்கள் உரசுகின்றனவா என்று பார்ப்பான். காமத்தால் கண் மறைக்கப்பட்ட அவர்கள் இருவரின் கால்களும் உரசித் தான் கொள்ளும்.

சங்கரனுக்கு என்ன செய்வதென்று தெரியாத கோவம். யாரிடம் சொல்வான்?

அவனது குழப்பங்களுக்கு ஒரு விடை கிடைத்தது. சுந்தரேசன் வடிவில். மூன்று மாதங்களுக்கு முன்னாள் அவன் கோடைக்கானல் சென்றிருந்தபோது.

முதலில் சந்தேகப்பட்டான். பின்னர் தயங்கினான். அப்புறம் பயந்தான். இறுதியில் துணிந்தான்.

இந்த ட்ரிப் கூட அவன் திட்டமிட்டுப் போட்டதுதான். உண்மையில் சுந்தரேசன் போட்ட ட்ரிப் இது.

தான் வருவதாகச் சொல்லி இறுதியில் கான்சல் செய்து, இரண்டு நாள் முன்னதாக மும்பை சென்று விட்டான். தம்பியிடம் ‘அண்ணியைக் கூட்டிகிட்டு கோடை வந்திரு. நான் மும்பையிலிருந்து வந்து ஜாயின் பண்ணிக்கறேன்’ என்று சொல்லி விட்டான்.

திடீரென்று கிடைத்த பரிசு மாதிரி அவர்கள் இருவரும் சந்தோஷித்தார்கள்.

பாவம் விட்டுவிடுவோம். கொஞ்ச நேர சந்தோஷம் தானே?

அடுத்த இரண்டு சீட்டுகளில் இருந்த நால்வரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

சந்தானம், கோபால், ராஜன், டேவிட்.

நண்பர்கள். பார்ட்னர்கள். பார்ட்னர் என்றவுடன் ஏதோ பெரிய பிசினஸ் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பார்ட்னர்ஸ் இன் க்ரைம்.

கடத்தல் அவர்களது தொழில். சுலபமாக பணம் கிடைக்கிறது இல்லையா?  பணத்தாசை பிடித்த அவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இதைவிட என்ன வேண்டும்?

போலீசிடம் சிக்காமல் இதுவரையில் பிசினஸ் செய்து விட்டார்கள். பிசினஸ் பிசினஸ் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேனே, என்ன பிசினஸ் என்றும் சொல்லி விடுகிறேன்.


அழகிய இளம் பெண்களைக் கடத்தும் பிசினஸ் தான். ...... தொடரும் 

Tuesday, August 19, 2014

கொல்வதெல்லாம் உண்மை - சிறுகதை

கொல்வதெல்லாம் உண்மை - சிறுகதை 

ராஜன் ரவியைக் கத்தியால் குத்தப் போகும் தருணத்தில் சுஜாவின் கனவு கலைந்தது.

‘அப்பப்பா! என்ன கோரம்! என்னதான் இருந்தாலும் உடன் பிறந்த தம்பியை யாராவது இப்படிக் கருணையில்லாமல் கொல்வார்களா? அப்படி என்னதான் நடந்ததோ?’ என்று வியர்வையில் குளித்திருந்த அவள் சிந்தனை ஓடியது.

கனவு சற்று விவரமாகத்தான் கண்டிருந்தாள். என்றாலும் சகோதரர்களுக்குள் என்ன பிரச்சனை என்று அவள் கனவில் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் இப்போது அவளுக்கு நினைவில்லை.

‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்?’ என்று வெறித்தனமாகச் சொல்லிக்கொண்டே ராஜன் கையில் கத்தியுடன் நெருங்கியது மட்டும் புகைப்படம் போல அவள் நினைவில் பதிந்து விட்டது.

ராஜனும் ரவியும் அவள் சிநேகிதி ரமாவுடைய கணவனும் மைத்துனனும். ரவி இளையவன். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

நல்ல குடும்பம். சகோதரர்கள் இருவரும் நல்ல வேலையில் இருந்தார்கள். சொந்த வீடு. அடையாறில். அந்தக் காலத்திலேயே அவர்கள் அப்பா சுலப தவணையில் வாங்கிக் கட்டிய வீடு. இன்றைக்கு பல கோடி பெறும். ஆனால் ராஜன் வேலை மகேந்திரா சிட்டியில் இருந்ததால் இருவரும் தாம்பரம் வாசம். ராஜன் மனைவி ரமாவும் டவுனில் வேலையாய் இருந்தாள். மின்சார வண்டியில் போய் வருவாள். அப்படித் தான் சுஜாவைப் பழக்கம்.

கனவு கலைந்ததும் எழுந்து போய் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, சிறிது குளிர்ந்த நீர் அருந்தினாள். மீண்டும் தூங்க முயற்சி செய்தாள். வீண் முயற்சி. தூக்கம் வரவில்லை. மணியைப் பார்த்தாள். மணி காலை நாலு! ‘ஐயோ! அதிகாலை கனவு பலிக்குமே!’ என்று ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது.

பின்னர் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அப்புறம் எழுந்து சென்று தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். என்னதான் வேலையைக் கைகள் செய்தாலும், மனம் கனவையே சுற்றிச் சுற்றி வந்தது. ராமாவிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும். தப்பாக எடுத்துக் கொள்வாள். இருந்தாலும் சிநேகிதத்தின் அழகு, எச்சரிக்கை செய்வது.

சுஜாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை அதிகம். எங்காவது நாய் ஊளையிட்டால், மறுநாள் அக்கம் பக்கத்தில் எங்கும் சாவு நேர்ந்திருக்கிறதா என்று கனகாரியமாக விசாரிப்பாள். குடுகுடுப்பைக்காரன் வந்தால், உடனே எழுந்து வந்து அவன் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்பாள். அவன் எதிர்பார்த்ததுக்கும் மேலேயே பணமும் உணவும் கொடுத்து அனுப்புவாள். சகுனம் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், ராசிபலன்... ஒன்று விடமாட்டாள்.

அப்படிபட்டவளுக்கு இந்தமாதிரி கனவு வந்தால் என்ன விளைவு என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!

அன்றைக்கு என்று நேரம் நகரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மாதிரி இருந்தது. ஒரு வழியாக மணி எட்டு அடிக்க, சுஜா தன் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு ரயிலடியை நோக்கி விரைந்தாள்.

நினைத்த மாதிரியே தாம்பரம் ஸ்டேஷனில் ரமாவைப் பார்த்துவிட்டாள். விரைவு வண்டியும் வந்தது. ‘இதுல வேண்டாமடி ரமா! வேற வண்டில போலாம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இதுல உட்கார இடம் கிடைக்காது’ என்று சொன்னாள்.

சரியென்று ரமாவும் தலையசைக்க, அடுத்து தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண வண்டியில் இருவரும் அமர்ந்தார்கள்.

‘சொல்லுடி, என்ன விஷயம்? ரொம்ப டல்லா இருக்கியே? உடம்பு சரியில்லையா?’ என்ற ரமாவிடம் சுஜா ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

எல்லாவற்றையும் ஒருவித பிரமிப்புடன் ரமா கேட்ட ரமாவின் முகம் மாறியது.

“ ஏய்! நீ என் பிரெண்ட். அதனால விட்டுர்றேன். இதே வேற யாராவது என் புருஷனப் பத்தி இப்படிச் சொல்லிருந்தா நடக்கற கதையே வேற!”

“ நானும் பிரெண்டுங்கற முறைல தான் இதெல்லாம் சொன்னேன். உங்க குடும்பத்துல ஏதும் ப்ராப்ளம் க்ரீயேட் பண்ணனும்ங்கற எண்ணமெல்லாம் இல்ல. சரி, இத்தோட விட்ரு. ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்!” சுஜா கோவத்துடன் எழுந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தாள்.

ஆறு வருஷ நட்பு! மனசு கேக்குமா? ரமா எழுந்து வந்து சுஜா பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏய், கோவிக்காதேடி! உன்னப் பத்தித் தெரியாதா? எதுன்னாலும் உடனே டென்ஷன் ஆகிற பார்ட்டி! சரி விடு, என் மேல இருக்கற அக்கறைல தான சொன்ன. நோ ப்ராப்ளம். என் வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன். ஆனா பாரேன்! இதக் கேட்டு அவர் பெரிசா சிரிப்பார்”

தன் டென்ஷனைக் குறைக்க ரமா முயற்சி செய்கிறாள் என்பது சுஜவுக்குப் புரிந்தது. பிறகு இருவரும் வேறு ஏதோ விஷயங்களைப் பேசியபடியே பயணம் தொடர்ந்தார்கள்.

அதற்கு அப்புறம் சுதந்திர தினம், வீக் எண்டு என்று மூன்று நாள் லீவு வந்துவிட்டதால், சுஜாவும் மறந்தே போனாள்.

லீவு முடிந்து, திங்கள்கிழமை சுஜா திரும்பவும் ரமாவைப் பார்த்தாள். எல்லா விஷயமும் நினைவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இவளாகவே எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, ரமாவே ஆரம்பித்தாள்.

“டீ! அன்னைக்கு நீ சொன்ன விஷயத்தை என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னேன். நான் நெனச்ச மாதிரியே வடிவேல் ஜோக் பார்த்தா மாதிரி குலுங்கக் குலுங்கச் சிரிச்சாரு.” என்று சொல்லி ரமாவும் சிரித்தாள். சுஜாவுக்கு ஒரு பாரம் இறங்கிய மாதிரி இருந்தது. தான் கண்ட கனவு பொய்யானது பற்றி ஒரு சிறிய வருத்தமும் இருந்தது.

அதற்கப்புறம் இரண்டு பேருமே இந்த விஷயத்தை மறந்தே போனார்கள். ஒரு இரண்டு வாரம் கழித்து சுஜாவுக்கு திரும்பவும் அதே கனவு வந்தது. இந்த முறை இன்னும் சற்று விவராமாக.

ராஜன் கையில் கத்தியுடன் ‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்? உன் கெட்டப் பழக்கங்கள அப்பாவுக்குத் தெரியாம மறச்சு வச்சது என் தப்பு. அது அவருக்குத் தெரிஞ்சு போச்சு. ஆனா நான் சொல்லல.

உயில மாத்தினது அவர் விருப்பம். அதுக்காக அவர விஷம் வச்சுக் கொன்னுட்டியே பாவி! சொத்து வேணும்னு சொல்லியிருக்கலாமே! இப்ப என்னக் கொல்லப் பாக்குறியா? உன்ன என்ன பண்ணுறேன் பாரு!’ என்றபடி ரவியை நோக்கி முன்னேறினான். ரவியின் கையில் ஒரு பத்திரம். அவன் காலருகில் அந்தக் காலக் கள்ளிப்பெட்டி.. கனவு கலைந்தது.

இந்தத் தடவை சுஜா நிஜமாகவே பயந்து விட்டாள். தான் கனவில் கண்டதுமாதிரி நிச்சயம் நடக்கப் போவதாக அவளுக்குத் தோன்றிவிட்டது. ஆனால் அவளை உறுத்தியது அந்தக் கள்ளிப்பெட்டி. எங்கேயோ பார்த்தது மாதிரி தோன்றிய அந்தப் பெட்டிக்குள் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றியது.

அன்று காலை ஸ்டேஷனில் ரமா இல்லை. அவள் மொபைல் அணைக்கப்பட்டு இருந்தது. ஆபீஸ் சென்று அவள் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து கேட்டாள். ரமா ஒரு பத்து நாள் லீவு என்றார்கள். சரி, அவள் வந்தபிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

இரண்டு வாரம் கழித்து ரமா வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. மெதுவாக என்ன விஷயம் என்று கேட்ட சுஜா அதிர்ந்தாள். ரமாவின் மாமனார் இறந்துவிட்டாராம்!

ஏற்கனவே சோகத்தில் இருந்தவளிடம் இந்த இரண்டாம் கனவைப் பற்றிச் சொல்லவா வேண்டாமா என்று சுஜா மனதில் போராட்டம். இறுதியில் சொல்லி விடுவது என்று முடிவு செய்து சொல்லியும் விட்டாள்.

ரமா ஆச்சர்யத்துடன் இவளைப் பார்த்தாள். “ என் மாமா செத்தது விஷத்துனால தான். ஆனால் பாம்பு கடிச்சு. மேலும், நீ நினைக்கற மாதரி என் மச்சினன் ஊரிலேயே இல்ல. ட்ரைனிங்ன்னு ஒரு நாலு வாரமா பாம்பேல இருக்கான். நாங்க சொல்லித்தான் ஊருக்கே வந்தான்’ என்றாள்.

சுஜாவுக்கு மீண்டும் ஏமாற்றம். இனிமேல் இந்த மாதிரி வரும் கனவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

அன்றைய தினம் எந்த வேலையும் ஓடவில்லை. மதியத்துக்கு மேல் உடம்பு சுடுவது போலத் தோன்றியது. தலை வலித்தது. அரைநாள் லீவு சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

மாடம்பாக்கத்தில் தனி வீடு. அந்த மதியத்தில் அவள் தெருவே அமைதியில் உறைந்திருந்தது. வீட்டை நெருங்கியவள் திறந்திருந்த கேட்டைப் பார்த்து வியந்தாள். வாசலில் இருந்த செருப்புகள் அவள் கணவன் வந்து விட்டதை அறிவித்தன. அந்த இன்னொரு ஜோடி யாருடையது? என்ன இந்த நேரத்தில் யாருடன் வீட்டில் இருக்கிறார்?

குழப்பத்துடன் காலிங் பெல்லை அடிக்க நினைத்தவள் கண்கள் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தன. மெதுவாக உள்ளே நுழைந்தவள் பெட்ரூமிலிருந்து வந்த குரல்களைக் கேட்டு அங்கே சென்றாள். அந்த ரூமுக்குள் அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.  அவள் கணவன் (ரங்க)ராஜன் கையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு தன் தம்பி ரவி(ச்சந்திரன்)யிடம்  “‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்?” என்று கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான்.


அவள் மைத்துனன் கையில் ஒரு பத்திரம். அவர்கள் காலடியில் ஒரு கள்ளிப்பெட்டி. சுஜாவுக்குக் கனவில் வந்தக் கள்ளிப்பெட்டியை எங்கே பார்த்தோம் என்பது நினைவுக்கு வந்துவிட்டது.