Friday, October 25, 2019

நானே வருவேன்

நானே வருவேன் (சிறு கதை )
வாங்க ரொம்ப நாள் ஆச்சு, உங்கள லக்னோ கூட்டிக்கிட்டு போறேன். அட, இன்னொரு காதல் கதைன்னு நீங்க புன்சிரிக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன் இதுல காதல் இல்லை.
இதுல சுஷ்மிதா லாஜோ ஸ்நேஹலதாக்கள் வரமாட்டாங்க. ஒன்லி யுவர்ஸ் ட்ரூலி அண்ட் மை தோஸ்த் சிவா.
இந்த சிவா இருக்கானே அவன ஜஸ்ட் நண்பன்னு சொல்லறத விட என்னோட ஆல்டர் ஈகோன்னு சொல்லலாம். அத்தனை நெருக்கம். ஒரே பொண்ண சைட் அடிக்கறது, ஒரே தம்ம ரெண்டு பேரும் புகைக்கறதுன்னு அவ்ளோ நெருக்கம். ரெண்டும் பேரும் மகாநகர்தான். ஆனா அவன் வேற இடத்துல குடியிருந்தான் நான் வேற இடத்துல.
வாரத்துல ரெண்டு நாள் அவன் என் ரூம்ல கிராஷ் செய்யறதும் ரெண்டு நாள் நான் அவன் ரூம்ல டேரா போடறதும் சாதாரணம். அவனுக்கு மெடிக்கல் ரெப் வேலை. லக்னோவுக்கு வெளில இருக்கற இடங்களுக்கு போவான். அப்படிப் போனா லக்னோ திரும்பி வர்ற நாள் என் ரூம்ல தான் இருப்பான். புதன் கிழமையானா தன் ரூம்ல விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வான். கொஞ்சம் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க வருவார்கள். எனக்கு அதில் எல்லாம் அதிக ஈடுபாடு இல்லைன்னாலும் பூஜைக்கு அப்புறம் அவன் வீட்டுல டின்னர் ஏற்பாடு செய்வான்னு நான் போவேன். ( அங்க சில தமிழழகிகள் வருவாங்க என்பது உபரி செய்தி)
அப்படியாப்பட ஒரு புதன் கிழமை பூஜை முடிஞ்சதும் கிட்டத்தட்ட எல்லாரும் போய்ட்டாங்க. நான் சிவா மற்றும் ராகவன். ராகவன் எங்கள விட மூத்தவர். ஆனால் பேச்சிலர். "டேய் சிவா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். படே பாய் (bade bhai) (என்னை எல்லாரும் அங்கு அப்படித்தான் கூப்பிடுவார்கள்) இங்க இருக்கறது நல்லதாப் போச்சு. ஒரு friend சென்னைல இருந்து வந்திருக்கான். சோமு. ரெண்டு நாள் ஆச்சு. வேலை தேடி வந்திருக்கான். என்கூடத்தான் இருக்கான். ஆனா நாளன்னிக்கு என் அப்பா அம்மா வர்றாங்க. அதுனால கொஞ்ச நாள் நீ அவன உன் ரூம்ல வச்சுக்கோ" என்றார்.
சிவா என்னைப் பார்த்தான். " நீங்க கொஞ்சம் சொல்லுங்க bade bhai " என்றார் ராகவன். நான் தலையசைத்தேன். சிவாவும் சரியென்றான்.
" இதோ இன்னும் அரை மணில அவனக் கூட்டிட்டு வர்றேன்" என்று சென்ற ராகவன் பதினைந்து நிமிடங்களிலேயே கூட்டி வந்தார்.
அந்தக் காலத்தில் 7அப் விளம்பரத்தில் fido dido என்று ஒரு கார்டூன் வரும் தெரியுமா? சோமுவைப் பார்த்தவர்கள் அதைப் பார்க்க வேண்டாம். ஒரு லைவ் அண்ட் கிக்கிங் fido dido அவன்.
விட்டால் போதும் என்று ராகவன் கிளம்பி விட்டார். அன்றிரவு அவனுக்கும் சேர்த்து நாங்கள் டின்னர் ரெடி செய்தோம். ஒரு கர்டஸிக்குக் கூட ஹெல்ப் செய்யவா என்று சோமு கேட்கவில்லை.
சமைத்தபின் நன்றாக ரசித்து ருசித்து நிறைய சாப்பிட்டான். பின்னர் உடை மாற்றிக்கொண்டு வெளியே செல்ல தயாரானான். "பாஸ்! ஒரு தம் போட்டுட்டு வர்றேன். கதவ சாத்திடாதீங்க" என்றான்.
"எல்லாம் இங்கேயே தம் போடலாம்" என்றான் சிவா.
மறுநாள் காலையில் எனக்கு பேங்க் போகவேண்டும். சிவாவுக்கு கான்பூர். சோமு எங்கும் வேலை தேடப் போவான் என்று நினைத்தால் அவன் படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையாக சென்றுவிட்டோம். மாலை நான் என் ரூமுக்குப் போய்விட்டேன். இரவு சுமார் ஒன்பது மணிக்கு சிவா வந்தான்.
"என்னடா உன் ரூமுக்குப் போகலியா?"
"போனேன் bade bhai. அந்த சோமு படுத்த படுக்கைக் கூட எடுத்து வைக்காம குளிக்காம கொள்ளாம உக்காந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கான். எனக்கு செம்ம வெறுப்பாயிடுத்து. அதான் இங்க வந்தேன்"
அன்றிரவு சிவா என் ரூமிலேயே தங்கிவிட்டான். "சோமுவுக்கு சாப்பாடு?" என்று கேட்டேன். "பட்டினி கிடக்கட்டும் நாய்" என்றான் கோபமாக.
மறுநாள் காலை தன் ரூமுக்குச் சென்ற சிவா நான் ஆபீஸ் கிளம்பும் முன்னர் பதறி அடித்துக்கொண்டு வந்தான்.
"bade bhai ! அந்த ராஸ்கல் நேத்து டின்னர் இல்லேன்னதும் என் அலமாரிலேர்ந்து பணம் எடுத்துக்கிட்டு போய் ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திருக்கான்" என்றான். நானும் அதிர்ந்தேன். ராகவன் எங்களை யாரிடம் மாட்டி விட்டுவிட்டார்?
இப்படியாக நாளொரு புகாருடன் ஒரு வாரம் கழிந்தது. அடுத்த புதன் பூஜைக்கு ராகவன் வரவில்லை. பூஜை முடிந்த பிறகு சிவாவின் வீட்டு ஓனர் எங்கள் இருவரையும் கூப்பிட்டார். ' யார ரூம் மேட்டா வச்சு இருக்கீங்க? பொறுக்கிப் பயல் என் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க ட்ரை செஞ்சிருக்கான். உங்களுக்காக அவன மன்னிச்சேன். அவன மொதல்ல இங்கிருந்து pack பண்ற வழியப்பாருங்க" என்றார் ஹிந்தியில்.
நாங்கள் இருவரும் ரூமுக்குப் போய் சோமுவை தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்தோம். "போய் தொலைடா" என்று கோரசாகச் சொன்னோம். சோமு முகம் கறுத்துவிட்டது.
மறுநாள் காலை எங்கோ சென்ற சோமு அன்றிரவு மிகவும் நேரம் கழித்து வந்தான். வந்தவன் ஒன்றும் பேசாமல் படுத்துவிட்டான். நாங்களும் ஒன்றும் கேட்கவில்லை.
இப்படியாக நாலு நாள் கழிந்தது. சோமு காலி செய்வதாகத் தெரியவில்லை. "bade bhai, ஓரு ஐடியா" என்றான் சிவா. " இன்னிக்கு ராத்திரி, அவன் நல்லா தூங்கின பிறகு அவன திடீர்னு எழுப்பி பயமுறுத்துவோம். அப்படிச் செஞ்சா அவனே நாளைக்கி சொல்லாம கொள்ளாம போயிடுவான். நீங்க அவன் போர்வையைப் பிடிச்சு இழுங்க. அவன் தூக்கம் கலஞ்சு கண்ணு திறக்கற வரைக்கும் விட்டு விட்டு போர்வைய இழுங்க. அவன் எழுந்ததும் நான் அவன் மூஞ்சி கிட்ட இந்தக் கத்தியைக் காட்டி ஓன்னு சிரிக்கறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும்" என்றான்.
அங்கே தான் எங்கள் விதி சிரித்தது. அந்த ஸ்டுபிட் ஐடியா அன்னைக்கு என்று பார்த்து எனக்கு செம ஐடியாவா தோன்றியது. சரியென்று தலையாட்டிவிட்டேன்.
அன்றிரவு. சுமார் பனிரெண்டு மணிக்கு. சிவா என்னை மெதுவாக எழுப்பினான். சட்டென்று புரிந்து கொண்ட நான் ப்ளான்படி சோமு போர்த்திக் கொண்டிருந்த போர்வையைச் சுண்டி இழுத்தேன்.
இரண்டாவது இழுப்பிலேயே சோமு விழித்துக் கொண்டான். அதற்காகவே காத்திருந்த சிவா தன் கையில் பிடித்திருந்த கத்தியை சோமுவின் முகத்தின் அருகில் கொண்டு சென்று "ஹோ"வென சிரித்தான்.
அப்போதுதான் அது நடந்தது. சோமுவின் கண்கள் எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தன. படபடவென அடித்துக்கொண்டிருந்த அவன் ஹார்ட் சட்டென்று அமைதியானது. கண்கள் நிலைகுத்தி நின்றன.
சோமு செத்துப்போய் விட்டான்!
நிலைமையின் தீவிரம் புரிந்து நாங்கள் இருவரும் உறைந்தோம். கல்யாணம் கூட ஆகாமலேயே ஜெயிலுக்குப் போய்விடுவேன் என்று எனக்கு அந்த நேரத்தில் அபத்தமாகத் தோன்றியது.
சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த சிவா திடீரென்று " ராகவன்!" என்றான்.
"என்னடா உளர்ற?"
"இல்ல bade bhai, நாம இப்பவே ராகவனைப் பார்க்கப் போகலாம். அவர் ஏதாவது ஹெல்ப் பண்ணுவார்" என்றான். (ராகவன் பின் தெருவில் தான் குடியிருந்தார்)
சரியென்று கதவைப் பூட்டிவிட்டு இருவரும் சிவாவின் ஸ்கூட்டரில் விரைந்தோம். ஐந்தாவது நிமிடம் ராகவன் வீடு. அவரது தனி வீடு. போய் காலிங் பெல்லை அழுத்தினேன்.
சிறிது நேரத்தில் கண்களைக் கசக்கியபடியே ராகவன் வந்து கதவைத் திறந்தார். எங்களைப் பார்த்து வியந்தார். "என்னடா ஆச்சு?"
நாங்கள் நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். ராகவன் முகம் வெளிறியது.
"டேய், என்னடா சொல்றீங்க? சோமு செத்துட்டானா? டேய் டேய் அவன் செத்துப்போய் ஒரு வாரம் ஆகுதேடா.. போன வாரத்துல ஒரு நாள் அமீனாபாத் பக்கத்துல ஒரு ஆக்சிடெண்ட்ல அவன் போயிட்டானே! நீங்க ரெண்டு பெரும் அன்னிக்கி எங்கியோ போயிட்டீங்க. நான் அவங்க வீட்டுல சொல்லி அவங்க flightல வந்து சோமுவுக்கு இந்திரா நகர்லே எல்லா காரியமும் செஞ்சுட்டு போயிட்டாங்களே! அதுக்கு அப்புறம் உங்களைப் பார்க்க முடியாததால சொல்லல" என்று சொல்லி முடித்தார் ராகவன்.
சாகும் நேசாகும் நேரத்தில் சோமுவின் கண்கள் மிரண்டு நிலை குத்தினாலும், அவன் உதட்டோரத்தில் ஒரு சிரிப்பு வந்து மறைந்தது எனக்குத் திடீரென நினைவு வ