தேடல்
ஒரு புழுக்கமான சென்னை மாலை. வெளியே வேப்ப மரத்துக் கிளைகள் மெல்ல அசைந்து கொண்டிருக்க உள்ளே அந்த அறையில் ஒரு போர்க்களத்துக்கு உரித்தான அமைதி இருந்தது.
ராகவன் ஈசி சேரில் உட்கார்ந்து இருந்தான். அவன் கையில் இருந்த அந்த டேப்லட் ஸ்க்ரீனில் சில எண்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது கண்கள் அந்த வேலையில் பிஸியாக இருந்ததா இல்லை அந்த வேலையை ஒரு கேடயம் போல் பயன்படுத்திக் கொண்டிருந்ததா என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். மாலதி டைனிங் டேபிளில் உட்கார்ந்து ஒரு பழைய வார இதழை புரட்டிக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரம் முன்பு தான் அந்த சலசலப்பு வெடித்தது.
"ராகவ்! நெக்ஸ்ட் வீக் என்னோட தம்பி வரான். நாம மூணு பேரும் ஒரு நாள் வெளியில போகலாமா எங்கேயாவது ? " என்று மாலதி கேட்டாள்.
ராகவன் தலையை நிமிர்த்தாமலேயே "பார்க்கலாம்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். அந்த ஒற்றை சொல் தான் வெடிகுண்டு திரியில் வைத்த நெருப்பை போல் மாறியது.
"உனக்கு எப்பவும் உன் வேலை தான் முக்கியம்... நான் இந்த வீட்டில ஒரு வேஸ்ட்... எப்பவும் உன்னோட அதிகாரம் தான்.." என்றெல்லாம் ஆரம்பித்த பேச்சு இப்பொழுது இந்த மௌனத்தில் வந்து நின்றது.
அப்பொழுது மாலதியின் மொபைலில் ஒரு whatsapp மெசேஜ் வந்தது . அவள் நெருங்கிய தோழி சித்ராவின் மெசேஜ் தான்.
'என்னடி மாலதி அடுத்த வாரம் தம்பியோட வெளியில அவுட்டிங்கா?'
'இல்லடி ராகவ் மாட்டேன் என்று சொல்லிவிட்டான்' என்று பதில் அனுப்பினாள்.
உடனே சித்ராவிடம் இருந்து ஒரு மெசேஜ். 'தயவு செஞ்சு விட்டுக் கொடுக்காதடி மாலதி! நீ இப்படி ஆரம்பத்திலேயே மௌனமா இருந்தா அது அவனுக்கு இன்னும் வசதியா போயிடும். உனக்குன்னு ஒரு ஸ்பேஸ் வேணும். உன்னுடைய தேவைகள் உன்னுடைய ஆசைகள் நீதான் உறக்க சொல்லணும். இல்லன்னா காலம் முழுக்க நீ அவனோட ஒரு நிழலாவே இருக்க வேண்டியதுதான்'.
ராகவனின் மனதிலும் ஒரு புயல் வீசிக் கொண்டிருந்தது. அன்று மத்தியான்னம் அவன் தன் அண்ணாவுடன் பேசியது அவனது நினைவில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.
'ராகவா வீட்ல நம்ம பிடி கொஞ்சம் தளர்ந்தாலும் அப்புறம் எதுவும் பண்ண முடியாதுப்பா. அவங்க கேட்கறதுக்கு எல்லாம் சரின்னு சொன்னா அப்புறம் உனக்குன்னு ஒரு மரியாதை இருக்காது. ஆம்பளைன்னா ஒரு கிரிப் வேணும்.'
எங்கிருந்தோ வேறு எவரோ பேசிய அந்த வார்த்தைகள் ராகவன் மாலதிக்கு இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரை எழுப்பி இருந்தன. அண்ணன் சொன்னது தான் சரி என்று ராகவனும் சித்ரா சொன்னது கரெக்ட் என்று மாலதியும் நம்பினார்கள்.
கொஞ்சம் நேரம் ஏதோ சித்தனையில் இருந்த ராகவன் திடீ எழுந்து மாலதியின் அருகே வந்தான். அவன் முகம் இறுகிப்போயிருந்தது.
"மாலதி ஏன் நீ ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு ஈகோ விஷயமா பாக்குறே? நான் வேலை பார்க்கிறது நமக்காக தானே? ஆனா நீ அதை என்னவோ நான் உன்ன உதாசீனப்படுத்துவதற்காக செய்யற மாதிரி மாத்தி பேசுற. உனக்கு இன்னும் என்ன தான் வேணும்?"
மாலதி அந்த வார இதழ்களை தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.
"எனக்கு வேணுங்கறது உன் பணம் வசதி இல்லை ராகவ்! உன்னோட அக்கறை. ஆனா நீ எப்பவும் ஒரு முதலாளி மாதிரி பேசுற. நீ சொல்றது தான் சரி நீ செய்யறது தான் முறை அப்படின்னு நினைக்கிறே. என்னுடைய ஆசைகளுக்கு விருப்பங்களுக்கு இங்க என்ன மதிப்பு இருக்கு?"
இப்படி ஆரம்பித்த அந்த பேச்சு மீண்டும் ஒரு சண்டையில் சென்று முடிந்தது. சற்று நேரம் பிறகு இருவரும் களைப்படைந்தார்கள். இந்த சண்டையினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இருவருக்கும் தோன்றியது.
ராகவன் அப்படியே தரையில் உட்கார்ந்தான். அவன் அப்படி உட்கார்ந்தது மாலதி மனதை என்னவோ செய்தது. அவளும் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள்.
"மாலதி கொஞ்ச நேரம் நாம நமக்காக பேசலாமா?" ராகவனுக்கு குரலில் இப்பொழுது அந்த அதிகார த்வனி இல்லை. ஒரு விதமான கெஞ்சுதல் இருந்தது.
"இப்ப நீ சொன்னியே நான் முதலாளி மாதிரி பேசுறேன்னு. யோசிச்சு பார்த்தா அது உண்மைதான். ஆனால் அது நான் உன்கிட்ட காட்டுற அதிகாரம் இல்லை மாலதி. என்னோட சின்ன வயசுல எங்க அப்பா முன்னாடி நான் ஒரு ஜடமா தான் இருந்தேன். 'ஏன்டா இதை செஞ்ச ஏண்டா இதை செய்யல யார கேட்டு இத தொட்ட' அப்படின்னு அவர் ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன திட்டியது என்ன ஒரு மூலையில் சுருட்டி போட்டுடுத்து.
எனக்குள்ள ஒரு சின்ன ராகவன். அவன் ரொம்ப பயந்தவன். அவனுக்கு எப்பவுமே ஒரு comfort zone வேண்டியிருக்கும் அவன சுத்தி இருக்குற எல்லா அவனுடைய கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைப்பான். அந்த பழைய பயம் தான் இப்போ உன்கிட்ட அதிகாரமா வருதுன்னு நினைக்கிறேன். நான் உன்ன அதிகாரம் பண்ணற மாதிரி என்னை பாதுகாக்க பாத்துக்குறேன்."
அவன் பேச்சைக் கேட்ட மாலதி உறைந்து போனாள் . ராகவனின் கண்களில் ஒரு சின்ன குழந்தையின் தவிப்பை அவள் முதன்முறையாக பார்த்தாள்.
"எனக்கும் அப்படித்தான் ராகவ்! எங்க வீட்ல நான் மூணாவது பொண்ணு . எப்பவும் ஒரு ஓரத்தில் தான் இருப்பேன். எனக்கு புது டிரஸ் வேணும்னாலோ ஒரு கஷ்டம்னாலோ அதை சொல்ல எனக்கு தைரியம் கிடையாது. ' நீ சமத்து பொண்ணு எதுக்கும் அடம்பிடிக்க மாட்டே' ன்னு சொல்லிச் சொல்லி என்னுடைய விருப்பங்களை எல்லாரும் புதைச்சிட்டாங்க. அதனாலதான் இப்ப நீ சின்னதா ஒரு மாட்டேன் சொன்னா கூட எனக்கு அந்த பழைய வேண்டாத மாலதியா மாறிடுவேனோன்னு ஒரு பயம் வருது.அதுதான் கோவமா வெடிக்குது."
இருவரும் பேசி முடித்ததும் அந்த அறையில் ஒரு அமைதி நிலவியது ஆனால் அது கசப்பான அமைதி அல்ல. அவர்கள் ஒருவரை ஒருவர் புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டார்கள். இதுவரையில அவர்கள் பார்த்தது ராகவனையும் மாலதியையும் அல்ல தங்களுக்குள் இருந்த அந்த ஆறாத காயங்களைத்தான்.
தன் அப்பாவிடம் இழந்த அந்த ஆளுமையை மாலதியிடம் தேடிக் கொண்டிருந்தான் என்று ராகவனுக்கு புரிந்தது. தன் பெற்றோர்களிடம் இழந்த அந்த பாசப்பிணைப்பை ராகவனிடம் தேடிக் கொண்டிருந்தாள் என்று மாலதிக்கு புரிந்தது.
அவர்களுக்குள் இருந்த வெற்றிடம் மற்றவர்களால் அல்ல. ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே அந்த வெற்றிடம் இருந்து இருக்கிறது
ராகவன் மாலதியின் கைகளை பற்றிக்கொண்டான்.
"மாலதி நம்மை இத்தனை நாள் ஒருத்தர ஒருத்தர் டார்ச்சர் பண்ணிக்கிட்டது நமக்காக இல்லை. நமக்குள்ள இருக்கிற அந்த குழந்தைகளுக்காகன்னு இப்ப புரியுது. எனக்குள் இருக்கற அந்த பயத்தைப் போக்கி தைரியத்தை நானேதான் வளர்க்துக்கணம்."
மாலதி அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.
"ஆமாம் நமக்குள்ள இருக்கிற இந்த ஏக்கத்தை தீர்க்கிறதுக்கு நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும். ஆனால் ஒருத்தரோடு வலிக்கு இன்னொருத்தர் முழுமையான தீர்வு ஆக முடியாது அப்படிங்கிறது புரிஞ்சுது ராகவ்."
அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்தார்கள். பெரிய பேச்சுக்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு புரிதல் இருந்தது. வெளியே மழை மீண்டும் மெல்ல பெய்யத் தொடங்கியது ஆனால் அவர்களுக்குள் இருந்த அந்த புயல் ஓய்ந்து இருந்தது.
வீயார்