Thursday, May 14, 2026

வேற்று மண்

 வேற்று மண்


ரோஜாவின் பதியம் எடுத்து 

வேறொரு மண்ணில் வைத்தேன்..

தண்ணீர் தான் விட்டாயோ 

பூத்துத்தான் குலுங்குதடி..

வெந்நீர் தான் விட்டாயோ 

வாடித்தான் போனதடி..



ஆகாஷும் அஞ்சனாவும் காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆகாஷ் ஒரு software engineer . அஞ்சனா ஒரு ப்ரைவேட் பாங்கில் சீனியர் மேனேஜர். அஞ்சனாவுக்குப் புகுந்த வீடு என்பது ஒரு புதிய நாடு போலிருந்தது. மாமனார் ராமநாதன் ரிடையர்டு டீச்சர். அமைதியான கடல் போன்றவர். ஆனால் மாமியார் ராஜேஸ்வரி? அவள்  ஒரு சுனாமி இல்லை என்றாலும் கரையை அரிக்கும் மெதுவான அலை.


ராஜேஸ்வரிக்கு அஞ்சனாவைப் பிடிக்காததற்குக் காரணம் அவள் எடுத்த லவ் ரூட் தான். தன் மகனைத் தன்னிடம் கேட்காமல் அஞ்சனா அபேஸ் செய்துவிட்டதாக ஒரு தீராத கோபம் அவருக்குள் கனன்றுகொண்டிருந்தது.



இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அஞ்சனா ஆசையாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். "அத்தை ஆகாஷுக்குப் பிடிக்குமேன்னு வெஜ் பிரியாணி பண்ணியிருக்கேன் டேஸ்ட் பாருங்களேன்" என்றாள் .


ராஜேஸ்வரி ஒரு கரண்டி எடுத்து வாயில் வைத்தாள். முகம் சுளித்தது. "என்னவோ போம்மா எங்க காலத்துல எல்லாம் வெஜ் பிரியாணி செஞ்சா வீடே மணக்கும் . இது என்னவோ ஹோட்டல் வாசனை வருது. என் பையன் பாவம் வெளியிலயும் இதையேதான் திங்கிறான் வீட்டுக்கு வந்தும் அவனுக்கு இதானா விதி? அதுவும் இந்த லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்களுக்குச் சாப்பாட்டுல அக்கறை இருக்காது அலங்காரத்துலதான் இருக்கும் போல!"


அஞ்சனாவின் முகம் சட்டென்று வாடியது. அவள் சேர்த்த மசாலாப் பொருட்களை விட அத்தையின் வார்த்தைகள் காரமாகத் தைத்தன.


இன்னொரு நாள்  அஞ்சனா பேங்கில் ஆடிட் முடிந்து வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது. உடல் களைப்பில் கண்கள் சொருகின. உள்ளே நுழைந்தவளிடம் ஒரு வாய்  தண்ணீரைக் கொடுப்பதற்குப் பதில் ராஜேஸ்வரி தன் கணவரிடம் உரக்கச் சொன்னார்:


"பாருங்க பொம்பளப் புள்ளைங்க வேலைக்குப் போறது தப்புன்னு சொல்லல. ஆனா வீட்டுக்கு வந்தா ஒரு விளக்கு ஏத்த வேண்டாமா? மகாராணி  வர்றதுக்கும் மங்களம் பாடுறதுக்கும் சரியா இருக்கு. நான் இந்த வயசுலயும் மாடா உழைச்சு காபி போட்டு வைக்கணும். அவங்க படிச்ச படிப்புக்கு இதெல்லாம் கௌரவக் குறைச்சல் போல!"


அஞ்சனா மௌனமாகத் தன் அறைக்குள் சென்று அழுதாள். அவளது களைப்பை விட அத்தையின் ஏளனப் பேச்சு அவளை அதிகம் நோகடித்தது.


அப்புறம் கிளைமாக்ஸ் போல அந்த தீபாவளி சமயம். அஞ்சனா  ராஜேஸ்வரிக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்தாள். அதைப் பிரித்துப் பார்த்த ராஜேஸ்வரி "என்ன கலர் இது  ஒரு மாதிரியா பழைய துணி மாதிரி இருக்கு. உன் சாய்ஸ் எப்பவும் இப்படித்தான் இருக்குமா? இல்ல என்னைப் பார்த்தா இந்த மாதிரி கட்டிக்கிற ஆள் மாதிரியா தெரியறது? உனக்குப் பிடிச்சதை விட, எனக்குப் பிடிச்சதை தான் வாங்கணும் " என்று அந்த புடவையை வீசி எறிந்தாள். 


ஆகாஷ் இதைப் பார்த்துவிட்டுப் பேச முற்பட்டபோது அஞ்சனாதான் அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.


மறுநாள் காலை. அஞ்சனா அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தாள். ஆகாஷும் ஜிம்முக்குச் சென்றிருந்தான். வீட்டில் ராமநாதனும் ராஜேஸ்வரியும் மட்டும் இருந்தனர்.


ராஜேஸ்வரி ஏதோ புலம்பிக் கொண்டே இருக்க, ராமநாதன் அமைதியாக வந்து அவர் எதிரே அமர்ந்தார். 


"ராஜி! ஒரு விஷயம் கேக்கணும். நம்ம வீட்ல இருக்கிற அந்த ரோஜாச் செடியைப் பார்த்தியா? நேத்து நீ அதுக்குச் சரியாத் தண்ணி ஊத்தல போ வாடிப் போயிருக்கு."


"ஐயோ! இதோ இப்பவே தண்ணி விடறேன்" என்றாள் ராஜேஸ்வரி.


"அதே போலத்தான் ராஜி,  அஞ்சனாவும். அவ ஒரு ரோஜாச் செடி. வேற ஒரு தோட்டத்துல வளர்ந்தவளை ஆகாஷ் ஆசைப்பட்டான்னு நம்ம தோட்டத்துக்குப் பதியமா எடுத்துட்டு வந்திருக்கோம். அவளுக்கு நீ அன்பைத் தண்ணியா ஊத்தணும். ஆனா நீ ஊத்துறது எல்லாமே வெந்நீர். வார்த்தைங்கிற வெந்நீரை ஊத்தி அந்தப் பொண்ணை ஏன் வாடிபோக வைக்கிற?"


ராஜேஸ்வரி ஏதோ சொல்ல வர ராமநாதன் கையை உயர்த்தினார். 


"இங்க பாரு அஞ்சனா நிறைய பொண்ணுங்கள போல இல்ல. இன்னைக்கு இருக்குற காலத்துல லவ் மேறேஜே   பண்ணிக்கிட்ட நிறைய பெண்கள்  மாமனார் மாமியார் கூட இருக்க விரும்புறது இல்ல. ஆகாஷ் கை நிறையச் சம்பாதிக்கிறான். அஞ்சனா ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஆகாஷ் அவளைத் தனிக் குடித்தனம் கூட்டிட்டுப் போயிருப்பான். உன் மகனை உன்கிட்டயே வச்சிருக்கிறது அஞ்சனா உனக்கு பண்ணியிருக்கற பெரிய உபகாரம் . அவ படிச்ச படிப்புக்கும் அவ பார்க்கிற வேலைக்கும் அவளுக்குத் தனி வீடு போறது ஒரு நிமிஷ வேலை. ஆனா குடும்பம்னா ஒண்ணா இருக்கணும்னு அவ நிக்கிறாளே அது அவளோட வளர்ப்பு."


ராஜேஸ்வரி மௌனமானாள் .


"அவ உன்கிட்ட எதிர்பார்க்கிறது ஒரு அம்மாவோட அரவணைப்பை. நீ அவளை மருமகளா பார்க்காம, உன் மகள் மாதிரி இல்லேனா  உன் மகனோட சந்தோஷமாப் பாரு. அவ பூத்து குலுங்குனா இந்த வீடே மணக்கும். அவ வாடிப் போனா உன் மகனோட வாழ்க்கையும் வாடிப்போகும். யோசிச்சுப் பார்."


ராமநாதன் எழுந்து உள்ளே சென்றார். ராஜேஸ்வரியின் காதுகளில் அந்த வார்த்தைகள் ரீங்காரமிட்டன. அஞ்சனா செய்த சின்னச் சின்ன உதவிகள் அவமானப்படுத்திய போதும் அவள் காட்டிய புன்னகை எல்லாம் அவள்  கண்முன்னே வந்து போயின.


அன்று மாலை  அஞ்சனா பேங்கிலிருந்து  களைப்பாகத் திரும்பி வந்தாள். வழக்கம்போல அத்தையின் ஏச்சுக்குத் தயாராகத் தலையைக் குனிந்தபடி உள்ளே நுழைந்தாள். ராஜேஸ்வரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அஞ்சனா பயந்துபோய் "என்ன அத்தை! ஏதாவது விசேஷமா?" என்றாள்.


ராஜேஸ்வரி பதில் சொல்லவில்லை. மெல்ல நடந்து வந்து அஞ்சனாவைக் கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பில் ஒரு தாயின் அன்பும்  ஒரு தோழியின் நெருக்கமும் இருந்தது.


"ரொம்ப டயர்டா இருக்காடா கண்ணா ? போய் face wash பண்ணிட்டு  வா, உனக்குப் பிடிச்ச மாதிரி இஞ்சி டீ போட்டு வச்சிருக்கேன். அப்புறம் அந்தப் புடவை எனக்கே இப்போ பிடிச்சிருக்கு. நாளைக்குக் கோவில் விசேஷத்துக்கு அதத்தான் கட்டிக்கப் போறேன் " என்றள்  தழுதழுத்த குரலில்.


அஞ்சனாவின் கண்களில் நீர் முட்டியது. இத்தனை நாள் வாடியிருந்த அந்த ரோஜா அந்த ஒரு துளி அன்பில் சட்டென்று பூத்துக் குலுங்கியது. 


வீட்டின் ஜன்னல் வழியே வீசிய தென்றலில் உண்மையில் ஒரு ரோஜாவின் மணம் நிறைந்திருந்தது.



வீயார் 

Thursday, April 30, 2026

உயிர்மெய்

 உயிர்மெய்


அந்த வீட்டின் கிச்சனில் இருந்து வந்த ஊதுபத்தி வாசனை (கிச்சனில் தான் சாமி படங்கள் வைப்பது ) அந்த ஹால் வரையில் வந்து சூழ்ந்து இருந்தது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டே ந்யூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருந்த  சதாசிவத்திற்கு வயது ஐம்பத்து எட்டு. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஊதுபத்தி வாசனைக்கு காரணகர்த்தாவான அவர் மனைவி மங்களத்திற்கு ஐம்பத்து ஐந்து. 


அவர்களது முப்பதாண்டு கால திருமண வாழ்க்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் மெல்ல மெல்ல எழுந்திருந்தது. 


அன்று சனிக்கிழமை. மாலை நேரம். மங்களம்  குளித்துவிட்டு  துடைத்தபடி பூசையறைக்குள் நுழைந்தாள். அவள் நெற்றியில்  குங்குமம். கைகளில் பித்தளைத் தட்டுகளில் பூக்கள். அவள் உதடுகள் மெல்லிய குரலில் ஏதோ ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. 


சதாசிவம் சோபாவில் அமர்ந்தபடியே மங்களத்தின் அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தார் . மங்களம் இன்னும் அதே இளமையுடனும் அழகுடனும்  இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. வயது அவளுக்குப் பக்குவத்தைத் தந்திருந்தது. ஆனால் அந்தப் பக்குவம் அவருக்கு ஒருவிதத் தனிமையையும் சேர்த்துத் தந்ததுதான் முரண்.


இரவு உணவு முடிந்தது. மங்களம் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு விளக்குகளை அணைத்தாள். சதாசிவம் படுக்கையறையில் காத்திருந்தார். மங்களம் உள்ளே வந்தபோது அவளது கையில் ஒரு ஸ்லோக  புத்தகம் இருந்தது.


"மங்களம்... கொஞ்சம் இங்க வந்து உட்காரேன்," என்றார் சதாசிவம்.


மங்களம் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். "என்னங்க? ஏதும் உடம்பு சரியில்லையா?"


"இல்ல... சும்மா பேசணும்னு தோணுச்சு. நாம பேசி எத்தனை நாள் ஆச்சு?"


"என்னங்க இப்படிச் சொல்றீங்க? காலையிலதானே அந்த மளிகை லிஸ்ட் பத்திப் பேசினோம்?" என்று சிரித்தாள் மங்களம்.


"நான் சொல்றது அது இல்ல மங்களம். நமக்கான பேச்சு... நமக்கான நெருக்கம்..." என்று மெல்ல அவள் கையைப் பற்றினார்.


மங்களம் சட்டென்று கையைத் தடுத்தாள். "அச்சச்சோ... கையை விடுங்க. நாளைக்கு பிரதோஷம். நான் அதிகாலையிலேயே கோயில் குளம்னு போகணும். மனசு சுத்தமா இருக்கணும்னு நினைக்கிறேன்."


சதாசிவத்தின் முகம் சுருங்கியது. "கோயிலுக்குப் போறதுக்கும், என் கையைப் பிடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன யாரோவா ?"


மங்களம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "உங்களுக்கு ஏங்க புரிய மாட்டேங்குது?  இந்த வயசுல இதெல்லாம் எதுக்கு? பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பேரபிள்ளைகள்  பாத்தாச்சு. இனிமே நாம ஆண்டவனை  நினைக்கிற வயசுல இருக்கோம். இந்தத் தாம்பத்திய ஆசையெல்லாம் ஒரு கட்டத்துல விட்டுடணும்ங்க. அதான் சரி "


"எது சரி  மங்களம்? அன்பு செலுத்துறதுல வயசு என்ன இருக்கு? உடல்ரீதியான நெருக்கம்ங்கிறது வெறும் காமம் மட்டுமா? அது ஒரு bonding.  உன்னைத் தொடும்போது நான் இன்னும் இளமையா  உணர்றேன். ஆனா நீ... நீ என்னவோ என்னைத் தள்ளியே வக்கிறேயே "


மங்களம் எழுந்து நின்றாள். "உங்கக் கூட ஆர்க்யூ செய்ய  எனக்குத் தெம்பு இல்லை. எனக்கு ஆன்மீகம் ஒரு நிம்மதியைத் தருது. அந்த நிம்மதியை இந்த தாம்பத்ய  ஆசைகளால கெடுத்துக்க எனக்கு விருப்பம் இல்லை. படுங்க நேரமாச்சு."


அவள் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். சதாசிவத்திற்குத் தூக்கம் வரவில்லை. அவர் கண்கள் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியைப்  பார்த்துக் கொண்டிருந்தன. மங்களத்தின் பக்தி அவருக்குப் புரியவில்லை என்பதில்லை. ஆனால் அது தாம்பத்யத்துக்கு  ஏன் ஒரு தடையாக மாறவேண்டும்? கடவுள் அன்பைப் போதிக்கிறார் என்றால் கணவனின் நெருக்கத்தை, அவன் அன்பை மறுப்பது பக்தியா?


மறுநாள் காலை. மங்களம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினாள். அவள் முகம் மிகத் தெளிவாக, சாந்தமாக இருந்தது. சதாசிவம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.


"இந்தாங்க பிரசாதம்," என்று விபூதியை நீட்டினாள்.


அவர் அதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தார். அன்று முழுவதும் அவர்  அதிகம் பேசவில்லை. மதிய உணவின்போது கூட மௌனம் நிலவியது. 


மாலையில்  மங்களம் பின்கட்டில் துணிகளை மடித்துக் கொண்டிருந்தபோது, சதாசிவம் அங்கு வந்தார். 


"மங்களம், நான் ஒண்ணு  சொல்லணும்னு நினைக்கிறேன். உன்னோட பக்திக்கு நான் இடையூறா இருக்க விரும்பல. ஆனா என் மனசுல இருக்கிற ஏக்கத்தையும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல. உனக்கு நான் வெறும் ஒரு குடும்பத் தலைவனா வீட்டுக்குத் தேவையானதைச் செஞ்சு தர்ற ஒரு இயந்திரமா மட்டும் இருக்கணுமா? இல்ல உன் துணையாவும்  இருக்கணுமா?"


மங்களம் மடிப்பதை நிறுத்தினாள். அவர் குரலில் இருந்த நடுக்கம் அவளை என்னவோ செய்தது.


"நீ விரதம் இருக்கிறது ஸ்லோகம் சொல்றது எல்லாம் உன் உரிமை. ஆனா, அதுக்காக என்னை முழுசா ஒதுக்கி வைக்கிறது சரியா? நாம இன்னும் உயிரோட இருக்கோம் மங்களம். உயிரோட இருக்கிற வரைக்கும் உணர்ச்சிகளும் இருக்கும். அதைத் தப்புன்னு நினைச்சு நீயே உன்னைச் சுருக்கிக்காதே."


மங்களம் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவர் கண்களில் தெரிந்த அந்தத் தனிமை அவளுக்குப் புரிந்தது. அவள் இதுவரை நினைத்தது புனிதம் என்று. ஆனால் அந்தப் புனிதத்தின் பெயரால் அவள் ஒரு மனிதனின் அடிப்படை உணர்வைச் சிதைக்கிறாளோ என்ற சந்தேகம் முதன்முதலாக அவள் மனதிற்குள் உதித்தது.


"நான்... நான் அப்படி நினைக்கலங்க. வயசான காலத்துல மத்தவங்க இதைப் பத்தித் தெரிஞ்சா என்ன நினைப்பாங்கன்ற பயம் தான்..." என்று இழுத்தாள்.


"யார் அந்த மத்தவங்க? இந்த வீட்டுக்குள்ள நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். நமக்கான உலகம் இது," என்றார் சதாசிவம்.


அன்று இரவு. மங்களம் பூசையறையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே இருந்த விளக்கு அமைதியாக எரிந்துகொண்டிருந்தது. அவள் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டம். பக்திக்கும் காதலுக்கும் இடையிலான போராட்டம் அல்ல அது. ஒரு உறவைப் பேணுவதற்கும் ஒரு கோட்பாட்டைப் பிடிப்பதற்கும் நடுவிலான போராட்டம்.


அவள் பெட்ரூமுக்கு  வந்தபோது சதாசிவம் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 


மங்களம் மெல்லச் சென்று அவர் பின்னால் நின்றாள். தயக்கத்துடன் அவர் தோளில் கை வைத்தாள்.


சதாசிவம் அதிர்ச்சியுடன் திரும்பினார்.


"நாளைக்கு எந்த விரதமும் இல்லை " என்றாள் மெல்லிய குரலில் சிறு புன்னகையுடன்.


சதாசிவம் அவளது கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த ஸ்பரிசத்தில் பல ஆண்டுகால மௌனம் கரைந்தது. பக்தி என்பது கடவுளை அறிவது  மட்டுமல்ல, உடன் இருப்பவரின் மனதை அறிவதும் கூட என்பதை மங்களம் அன்று உணர்ந்தாள். 


கிச்சனில் இருந்து வந்த ஊதுபத்தி வாசனை அவர்கள் பெட்ரூமிலும் பரவியது. ஆனால் இந்த முறை சதாசிவத்துக்கு அது ஒரு சுகானுபவமாக இருந்தது. இரு ஜீவன்களின் இணைந்த பயணத்தின் நறுமணமாக இருந்தது. அவர்கள் காதல்  அங்கே ஒரு புதிய புரிதலுடன், எந்த விதமான உராய்வும் இன்றித் தொடர்ந்தது. உறவுகளின் சிக்கல்கள் எப்போதும் விவாதங்களால் தீர்வதில்லை. சில நேரங்களில் ஒரு மெல்லிய ஸ்பரிசமே போதுமானதாக இருக்கிறது.



வீயார் 

Tuesday, April 28, 2026

மரணத்தின் முரல்

 மரணத்தின் முரல் 


(The humming of the death)


சிம்லாவின் காடுகளுக்கு ஓர் அமானுஷ்ய குணம் உண்டு. இரவில் அங்கே கேட்கும் ஒலிகள் மிருகங்களுடையது அல்ல; அவை மறைந்த மரித்த நினைவுகளின் விம்மல்கள். விடுபட்டுப் போனவர்களின் மீள முடியாதவர்களின் ஆத்மாக்களை அந்தக் காடு தனக்குள்ளேயே அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசித்திர சங்கீதம் அது. 


இது எதுவும் அர்ஜுனுக்குத் தெரியாது. அவன் அந்த ரகமும் அல்ல. எதற்கும் லாஜிக் பார்க்கும் சென்னைவாசி. கம்ப்யூட்டர் திரையிலேயே காலத்தைக் கழிப்பவனுக்கு, மூளைக்குச் சற்று ஓய்வு கொடுக்க சிம்லா ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. பனி மூடிய தேவதார மரங்கள், அமைதி. இதைத்தான் அவன் எதிர்பார்த்தான். ஆனால் வந்த முதல் நாளிலேயே அவனுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது.


“ஜி , ராத்திரி நேரத்துல காடு பக்கம் போயிடாதீங்க!” - ஹோம்ஸ்டே உரிமையாளர் சொன்ன எச்சரிக்கையில் ஒரு நடுக்கம் இருந்தது.


அர்ஜுன் அலட்சியமாகச் சிரித்தான். “ஏன் சார் சிறுத்தை பயமா?”


அவர் ஒரு கணம் மௌனமானார். பிறகு கிசுகிசுப்பான குரலில் சொன்னார்: “அதைவிடக் கொடுமையானது !”


அன்று இரவு. பனிமூட்டம் வழக்கத்தை விட அடர்த்தியாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் ஒரு வெள்ளை நிறச் சுவர் எழுப்பியது போன்ற தோற்றம். காற்றே இல்லாத நிசப்தம். அந்த மௌனமே ஒரு ஓசையாய் காதை அடைத்தது.


நேரம் இரவு ஒன்பது முப்பது. சட்டென்று மின்சாரம் நின்றது .


மலைப்பிரதேசங்களில் இது சகஜம் என்பதால் அர்ஜுன் பதட்டப்படவில்லை. மொபைல் டார்ச்சை ஆன் செய்துகொண்டு வெளியே வந்தான். வாசலைத் தாண்டினால் காடுதான். ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் நின்ற தேவதார மரங்கள் பனிப்புகையில் பாதி காணாமல் போயிருந்தன.


அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.


அது அவன் பெயரை அழைக்கவில்லை. எந்த மொழியும் இல்லை. ஒரு மெல்லிய ஹம்மிங். யாரோ ஒரு பழைய பாடலைத் தனக்குள்ளேயே முணுமுணுப்பதைப் போன்ற ஒரு ரீங்காரம்!


“யாரது?” என்று கேட்டவாறே ஆர்வத்தின் உந்துதலால் அந்த ஒலியை நோக்கி நடக்கத் தொடங்கினான் அர்ஜுன்.


காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததுமே சூழல் மாறியது. பனி திடீரென மேலும் கனமானது. டார்ச் ஒளியைச் சிதறடித்து அவன் கண்களுக்கே திருப்பி அனுப்பியது.


அந்த ஹம்மிங் சத்தம் இப்போது மிக அருகில் மிகத் தெளிவாகக் கேட்டது.


“ஹலோ யாரது?”


சத்தம் சட்டென்று நின்றது. ஒரு நொடி மயான அமைதி. அடுத்த கணம்அவன் முதுகுக்குப் பின்னால் அதே ஹம்மிங் மீண்டும் தொடங்கியது!


அர்ஜுன் திடுக்கிட்டுத் திரும்பினான். யாரும் இல்லை. அப்போதுதான் அவன் கவனித்தான் ... தான் நடந்து வந்த பாதையில் காலடிச் சுவடுகள் இல்லை. மண்ணை எவருமே தொடாதது போன்ற ஒரு தூய்மை அங்கே நிலவியது. அவனது இதயம் இப்போது ஓட்டப்பந்தய வீரனைப் போலத் துடிக்கத் தொடங்கியது.


“சரி, கிளம்ப வேண்டியதுதான் ” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு திரும்பினான்.


ஆனால் அவன் வந்த பாதை எங்கே? வாசல் எங்கே? ஹோம்ஸ்டேவின் விளக்குகள் எங்கே? எங்கு பார்த்தாலும் மரங்கள்.பனி. இருட்டு .

அப்போதுதான் அவளைப் பார்த்தான்.


இரண்டு மரங்களுக்கு இடையில் ஒரு உருவம். அசையாமல் நின்றிருந்தது. ஒரு பெண். நீண்ட கூந்தல். தோளில் ஒரு வெள்ளை ஷால். தலையைச் சற்றுச் சாய்வாக வைத்துக்கொண்டு நின்றிருந்த கோலம் மயான அமைதியை நினைவுபடுத்தியது.


“எக்ஸ்க்யூஸ் மீ.ரோடு எந்தப் பக்கம்னு சொல்ல முடியுமா?” அர்ஜுனின் குரல் மெதுவாக வந்தது. 


பதில் இல்லை. அவன் ஒரு அடி முன்னே வைத்தான்.


அதே ஹம்மிங் மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் இம்முறை அது அவளிடமிருந்து வரவில்லை. மரங்களிலிருந்து மண்ணிலிருந்து அவன் காதுக்கு மிக அருகிலிருந்து என எங்கும் அந்த ரீங்காரம் பரவியது.


அந்த உருவம் இப்போது அசைந்தது. தலை நிமிர்ந்தது. மிக வேகமான, இயற்கைக்கு மாறான அசைவு அது. பனித்திரை ஒரு கணம் விலகியபோது அர்ஜுன் அவள் முகத்தைப் பார்த்தான். உறைந்தான்.


அங்கே கண்கள் இல்லை. வெறும் இருண்ட குழிகள். அதற்குள்ளே ஒரு அமானுஷ்ய இருள். ஆனால் இதழ்களில் ஒரு புன்னகை. அது மனித முகத்தில் இருக்க முடியாத அளவுக்குக் காது வரை விரிந்து கோரமாகக் காட்சியளித்தது.


அர்ஜுன் ஓடினான். கால்கள் எங்கே மிதிக்கின்றன என்று தெரியாமல் ஓடினான். மரக்கிளைகள் அவன் முகத்தைக் கீறின. அந்த ஹம்மிங் சத்தம் இப்போது விகாரமான சிரிப்பாக மாறியிருந்தது. அது மனிதர்களின் சிரிப்பு அல்ல அது அமானுஷ்ய வஞ்சகச் சிரிப்பு!


எவ்வளவு நேரம் ஓடினான் என்று அவனுக்கே தெரியாது. திடீரென்று கால்கள் இடறி சாலையில் வந்து விழுந்தான். விளக்குகள். மனித நடமாட்டம்.ஹோம்ஸ்டே.


கதவருகே மயங்கி விழுந்தவனை உரிமையாளர் தான் தாங்கிப் பிடித்தார். காலை கண் விழித்தபோது அவர் அர்ஜுன் அருகில் உட்கார்ந்திருந்தார்.


“ஜி! நான் சொல்லியும் கேக்காம காட்டுக்குப் போயிட்டீங்க போல?” என்றார்.


அர்ஜுன் மெதுவாகத் தலையசைத்தான். “அந்தச் சத்தம் அந்தப் பெண் அது யாரு சார்?”


அவர் காட்டை ஏறிட்டுப் பார்த்தார். “அது பேய் இல்லை தம்பி. அது காடு. தன்னைத் தேடி வந்து தொலஞ்சு போனவங்கள அது மறக்காது. அவங்களத் தானாகவே உருவகப்படுத்திக்கிட்டு அவங்களப் போலவே மாறிடும். சில சமயம் அவங்கள ஞாபகப் படுத்திக்கறதுக்காக அது அப்படிசெய்யுதுன்னு எங்க பெரியவங்க சொல்வாங்க.”


அர்ஜுன் அவர் சொன்னதைக் கேட்டு சிலையானான். அவனால் அதை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. அன்றே சிம்லாவை விட்டுப் புறப்பட்டான். மீண்டும் அந்தப் பக்கம் அவன் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை என்னும் எண்ணத்துடன். 


ஆனால் சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் சில இரவுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, காற்று கூட அசையாத அந்த நிசப்தத்தில் அவன் இன்னும் அந்த ஹம்மிங்கைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.


இப்போது அது மிக அருகில். அவன் முதுகுக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல.


வீயார்

Saturday, April 18, 2026

தேடல்

 தேடல்


ஒரு புழுக்கமான சென்னை மாலை. வெளியே வேப்ப மரத்துக் கிளைகள் மெல்ல அசைந்து கொண்டிருக்க உள்ளே அந்த அறையில் ஒரு போர்க்களத்துக்கு உரித்தான அமைதி இருந்தது. 


ராகவன்  ஈசி சேரில் உட்கார்ந்து இருந்தான். அவன் கையில் இருந்த அந்த டேப்லட் ஸ்க்ரீனில்  சில எண்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது கண்கள் அந்த வேலையில் பிஸியாக இருந்ததா இல்லை அந்த வேலையை ஒரு கேடயம் போல் பயன்படுத்திக் கொண்டிருந்ததா என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.  மாலதி டைனிங் டேபிளில் உட்கார்ந்து ஒரு பழைய வார இதழை புரட்டிக் கொண்டிருந்தாள். 


கொஞ்ச நேரம் முன்பு தான் அந்த சலசலப்பு வெடித்தது. 


"ராகவ்!  நெக்ஸ்ட் வீக் என்னோட தம்பி வரான். நாம மூணு பேரும் ஒரு நாள் வெளியில போகலாமா எங்கேயாவது ? " என்று மாலதி கேட்டாள்.


ராகவன் தலையை நிமிர்த்தாமலேயே "பார்க்கலாம்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். அந்த ஒற்றை சொல் தான் வெடிகுண்டு திரியில் வைத்த நெருப்பை போல் மாறியது. 


"உனக்கு எப்பவும் உன் வேலை தான் முக்கியம்... நான் இந்த வீட்டில ஒரு வேஸ்ட்... எப்பவும் உன்னோட அதிகாரம் தான்.." என்றெல்லாம் ஆரம்பித்த பேச்சு இப்பொழுது இந்த மௌனத்தில் வந்து நின்றது. 


அப்பொழுது மாலதியின் மொபைலில் ஒரு whatsapp மெசேஜ் வந்தது . அவள் நெருங்கிய தோழி சித்ராவின் மெசேஜ் தான். 


'என்னடி மாலதி அடுத்த வாரம் தம்பியோட வெளியில அவுட்டிங்கா?' 


'இல்லடி ராகவ் மாட்டேன் என்று சொல்லிவிட்டான்' என்று பதில் அனுப்பினாள். 


உடனே சித்ராவிடம் இருந்து ஒரு மெசேஜ். 'தயவு செஞ்சு விட்டுக் கொடுக்காதடி மாலதி!  நீ இப்படி ஆரம்பத்திலேயே மௌனமா இருந்தா அது அவனுக்கு இன்னும் வசதியா போயிடும்.  உனக்குன்னு ஒரு ஸ்பேஸ் வேணும். உன்னுடைய தேவைகள் உன்னுடைய ஆசைகள் நீதான் உறக்க சொல்லணும். இல்லன்னா காலம் முழுக்க நீ அவனோட ஒரு நிழலாவே இருக்க வேண்டியதுதான்'. 


ராகவனின் மனதிலும் ஒரு புயல் வீசிக் கொண்டிருந்தது. அன்று மத்தியான்னம்  அவன் தன் அண்ணாவுடன் பேசியது அவனது நினைவில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.


'ராகவா வீட்ல நம்ம பிடி கொஞ்சம் தளர்ந்தாலும் அப்புறம் எதுவும் பண்ண முடியாதுப்பா. அவங்க கேட்கறதுக்கு எல்லாம் சரின்னு சொன்னா அப்புறம் உனக்குன்னு ஒரு மரியாதை இருக்காது. ஆம்பளைன்னா ஒரு கிரிப் வேணும்.'


எங்கிருந்தோ வேறு எவரோ பேசிய அந்த வார்த்தைகள் ராகவன் மாலதிக்கு இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரை எழுப்பி இருந்தன. அண்ணன் சொன்னது தான் சரி என்று ராகவனும்  சித்ரா சொன்னது கரெக்ட் என்று மாலதியும் நம்பினார்கள். 


கொஞ்சம் நேரம் ஏதோ சித்தனையில் இருந்த ராகவன் திடீ எழுந்து மாலதியின் அருகே வந்தான். அவன் முகம் இறுகிப்போயிருந்தது. 


"மாலதி ஏன் நீ ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு ஈகோ விஷயமா பாக்குறே? நான் வேலை பார்க்கிறது நமக்காக தானே? ஆனா நீ அதை என்னவோ நான் உன்ன உதாசீனப்படுத்துவதற்காக செய்யற மாதிரி மாத்தி பேசுற. உனக்கு இன்னும் என்ன தான் வேணும்?"


மாலதி அந்த வார இதழ்களை தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.


"எனக்கு வேணுங்கறது உன் பணம் வசதி இல்லை  ராகவ்! உன்னோட  அக்கறை.  ஆனா நீ எப்பவும் ஒரு முதலாளி மாதிரி பேசுற.  நீ சொல்றது தான் சரி நீ செய்யறது தான் முறை அப்படின்னு நினைக்கிறே.  என்னுடைய ஆசைகளுக்கு விருப்பங்களுக்கு இங்க என்ன மதிப்பு இருக்கு?"


இப்படி ஆரம்பித்த அந்த பேச்சு மீண்டும் ஒரு சண்டையில் சென்று முடிந்தது. சற்று நேரம் பிறகு இருவரும் களைப்படைந்தார்கள். இந்த சண்டையினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இருவருக்கும் தோன்றியது. 


ராகவன் அப்படியே தரையில் உட்கார்ந்தான்.  அவன் அப்படி உட்கார்ந்தது மாலதி மனதை என்னவோ செய்தது. அவளும் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள்.


"மாலதி கொஞ்ச நேரம் நாம நமக்காக பேசலாமா?" ராகவனுக்கு குரலில் இப்பொழுது அந்த அதிகார த்வனி  இல்லை. ஒரு விதமான கெஞ்சுதல் இருந்தது. 


"இப்ப நீ சொன்னியே நான்  முதலாளி மாதிரி பேசுறேன்னு. யோசிச்சு பார்த்தா அது உண்மைதான். ஆனால் அது நான் உன்கிட்ட காட்டுற அதிகாரம் இல்லை மாலதி.  என்னோட சின்ன வயசுல எங்க அப்பா முன்னாடி நான் ஒரு ஜடமா தான் இருந்தேன்.  'ஏன்டா இதை செஞ்ச ஏண்டா இதை செய்யல யார கேட்டு இத தொட்ட'  அப்படின்னு அவர் ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன திட்டியது என்ன ஒரு மூலையில் சுருட்டி போட்டுடுத்து.


எனக்குள்ள ஒரு சின்ன ராகவன். அவன் ரொம்ப பயந்தவன். அவனுக்கு எப்பவுமே ஒரு comfort zone  வேண்டியிருக்கும் அவன சுத்தி இருக்குற எல்லா அவனுடைய கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைப்பான். அந்த பழைய பயம்   தான் இப்போ உன்கிட்ட அதிகாரமா வருதுன்னு  நினைக்கிறேன்.  நான் உன்ன அதிகாரம் பண்ணற மாதிரி என்னை பாதுகாக்க பாத்துக்குறேன்." 


அவன் பேச்சைக் கேட்ட மாலதி  உறைந்து போனாள் . ராகவனின் கண்களில் ஒரு சின்ன குழந்தையின்  தவிப்பை அவள் முதன்முறையாக பார்த்தாள்.


"எனக்கும் அப்படித்தான் ராகவ்! எங்க வீட்ல நான் மூணாவது பொண்ணு . எப்பவும் ஒரு ஓரத்தில் தான் இருப்பேன்.  எனக்கு புது டிரஸ் வேணும்னாலோ   ஒரு கஷ்டம்னாலோ அதை சொல்ல எனக்கு தைரியம் கிடையாது. ' நீ சமத்து பொண்ணு எதுக்கும் அடம்பிடிக்க மாட்டே' ன்னு சொல்லிச்  சொல்லி என்னுடைய விருப்பங்களை எல்லாரும் புதைச்சிட்டாங்க.  அதனாலதான் இப்ப நீ சின்னதா ஒரு மாட்டேன் சொன்னா கூட எனக்கு அந்த பழைய வேண்டாத மாலதியா  மாறிடுவேனோன்னு  ஒரு பயம் வருது.அதுதான் கோவமா வெடிக்குது." 


இருவரும் பேசி முடித்ததும் அந்த அறையில் ஒரு அமைதி நிலவியது ஆனால் அது கசப்பான அமைதி அல்ல. அவர்கள் ஒருவரை ஒருவர் புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டார்கள். இதுவரையில அவர்கள் பார்த்தது ராகவனையும் மாலதியையும் அல்ல தங்களுக்குள் இருந்த அந்த ஆறாத காயங்களைத்தான். 


தன் அப்பாவிடம் இழந்த அந்த ஆளுமையை மாலதியிடம் தேடிக் கொண்டிருந்தான்  என்று ராகவனுக்கு புரிந்தது. தன் பெற்றோர்களிடம் இழந்த அந்த பாசப்பிணைப்பை ராகவனிடம் தேடிக் கொண்டிருந்தாள் என்று மாலதிக்கு புரிந்தது. 


அவர்களுக்குள் இருந்த வெற்றிடம் மற்றவர்களால் அல்ல. ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே அந்த வெற்றிடம் இருந்து இருக்கிறது 


ராகவன் மாலதியின் கைகளை பற்றிக்கொண்டான். 


"மாலதி நம்மை இத்தனை நாள் ஒருத்தர ஒருத்தர் டார்ச்சர் பண்ணிக்கிட்டது நமக்காக இல்லை. நமக்குள்ள இருக்கிற அந்த குழந்தைகளுக்காகன்னு   இப்ப புரியுது.  எனக்குள் இருக்கற அந்த பயத்தைப் போக்கி தைரியத்தை நானேதான் வளர்க்துக்கணம்." 


மாலதி அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.  


"ஆமாம் நமக்குள்ள இருக்கிற இந்த ஏக்கத்தை தீர்க்கிறதுக்கு  நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும். ஆனால் ஒருத்தரோடு வலிக்கு இன்னொருத்தர் முழுமையான தீர்வு ஆக முடியாது அப்படிங்கிறது புரிஞ்சுது ராகவ்." 


அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்தார்கள். பெரிய பேச்சுக்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு புரிதல் இருந்தது. வெளியே மழை மீண்டும் மெல்ல பெய்யத்  தொடங்கியது ஆனால் அவர்களுக்குள் இருந்த அந்த புயல் ஓய்ந்து இருந்தது.


வீயார் 


Monday, April 13, 2026

உத்தரா (க்கள்)

 உத்தரா (க்கள்)


திருவல்லிக்கேணியின்  சந்துகளில் இப்போதும் என் இளமையின் நினைவுகள் கவிதை பாடிக்கொண்டிருக்கலாம். பார்த்தசாரதி கோவில் மணியோசை  மாட வீதிகளில் கோலங்கள், குளத்தைச் சுற்றி காய்கறி கடைகள், என் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த உத்தரா என்று என் நினைவை விட்டு அகற்ற முடியாத பல சித்திரங்கள்.


உத்தரா. என் மனதை, இளமையை, நினைவுகளை, கனவுகளை ஆக்ரமித்தவள். என் மனதில் ஆழமாக காதலிக்கத் தெரிந்த எனக்கு, லேசாகக் கூட அவளிடம் சொல்லத் தெரியவில்லை. கடைசியில்  ஒரு சுபயோக சுப தினத்தில் அவளிடம் சொல்லியதும்  எவ்வித ஆரவாரமும் இன்றி அவள் என் காதலை ரிஜெக்ட் செய்ததும் என் இதயம் சுக்குநூறாக உடைந்ததும். இன்று நினைத்தாலும் வலிக்கும். 


But I don't love you da என்ற அந்த ஒற்றை வரி என் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் யாரோ சூறையாடிய உணர்வைத் தந்தது. அவளைத் தினசரி சந்திப்பதே ஒரு நரக வேதனையாக மாறிவிட்டது. அந்தச் சமயத்தில் தான் ஒரு வரப்பிரசாதமாக லக்னோவில் எனக்கு வங்கி உத்தியோகம் கிடைத்தது.


காயப்பட்ட இதயம் இளைப்பாற ஒரு புது இடம் தேடி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பிய ரயிலில் நான் ஏறியபோது, என் டைரிக்குள் ஒரு காய்ந்த மல்லிகைப் பூவைப் போல அவள் நினைவையும் அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் நான் வரைந்த அவளது drawing இரண்டை மட்டும் ஒளித்து வைத்திருந்தேன்.



1990-களின் லக்னோ. நவாபிய  கலாச்சாரம் இன்னும் வீதிகளில் மிச்சமிருந்த காலம். அந்த நகருக்கே உரிய ஒரு கம்பீரம், ஒரு நிதானம் என்னை மெல்ல வசீகரிக்கத் தொடங்கியது. நான் தங்கியிருந்தது மகாநகர் ஏரியா. அங்கே ஒரு சிறிய குளிர்பானக் கடை இருந்தது. அது ஒரு வீட்டின் முன்புறம் இருந்தது. அதன் உரிமையாளர் வீடும் அங்கேயே கடைக்குப் பின்னர் இருந்தது. பெரிய வீடு. அங்கு மில்க் ஷேக்குகளைக் காட்டிலும், ‘சாஸ்’ என்று அழைக்கப்படும் மசாலா மோர் மிகவும் பிரசித்தம். சீரகமும், புதினாவும் மணக்க, அந்த மோர் தொண்டையை நனைக்கும்போது, லக்னோவின் கொதிக்கும் வெயில் கூட ஒரு சுகமான அனுபவமாகத் தெரியும்.


அங்குதான் அவளைச் சந்தித்தேன். விதி எவ்வளவு வலிமையானது என்பதை அந்தப் பெண் தன் பெயரைச் சொன்னபோதுதான் உணர்ந்தேன். "உத்தரா சர்மா."


முதல்முறை அவளைப் பார்த்தபோது யாரோ வெள்ளைப் பனியைத் திரட்டி ஒரு சிலையாகச் செதுக்கி வைத்தது போல இருந்தாள். அந்த நளினம், அந்தப் பார்வை,  இதுவரை நான் எழுதிய அத்தனை கவிதைகளையும் அவளது காலடியில் வைத்துவிட்டு எழுதிய பேனாவை உடைத்து எறிந்துவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு ஒரு பேரழகு. ஆனால் திருவல்லிக்கேணி காயப்படுத்திய வடு இன்னும் ஆறாததால் மிகவும் ஜாக்கிரதையாகவே அவளிடம் நெருங்கினேன்.


என் மாநிறமும், கூர்மையான முகமும் அவளைக் கவர்ந்ததா அல்லது நான் சரளமாகப் பேசத் தொடங்கியிருந்த ஹிந்தி அவளுக்குப் பிடித்திருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் உத்தரா சர்மா எனக்கு மிக நெருக்கமான friend ஆனாள் .


லக்னோவின் சரித்திரப் புகழ்பெற்ற லால் பாக் கைசர் பாக் மற்றும் ஹஜ்ரத் கஞ் வீதிகளில் நாங்கள் சுற்றித் திரிந்தோம். நவாப்களின் கோட்டைகளும், பழங்காலக் கட்டிடங்களும் எங்களுக்கு மௌன சாட்சிகளாய் அமைந்தன. 1990-களின் அந்த அந்திப் பொழுதுகள் இன்றும் என் நெஞ்சுக்குள் வர்ணங்களை அள்ளித் தெளிக்கின்றன. பழைய உத்தராவின் காயத்தை இந்தப் புது உத்தரா மெல்ல ஆற்றி வந்தாள். அவளுடன் பழகிய  ஒவ்வொரு நொடியும் கடவுள் எனக்குத் தந்த ஒரு பரிசு போலத் தெரிந்தது.


அப்படியான ஒரு மாலைப் பொழுது. நானும் அவளும் Bara Imambara வில். அவளுக்காக நான் ஹிந்தியில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். என் மனதின் ஆழத்தைப் புரிய வைக்க என் டைரியை அவளிடம் காட்ட விரும்பி எடுத்தேன். இந்த டைரியின் ஒவ்வொரு பக்கமும் கவிதைகளாலும் கோட்டோவியங்களாலும் நிறைந்திருக்கும்.


கவிதை இருக்கும் பக்கத்தைத் தேடி நான் வேகவேகமாகப் புரட்டியபோது தான் விதி சிரித்தது. ஒரு  காகிதம் நழுவி அவள் மடியில் விழுந்தது.  அது நான்  திருவல்லிக்கேணியில்  உத்தரவைப் பார்த்து ரசித்து அவளுக்கே தெரியாமல் வரைந்து வைத்த கோட்டோவியம்.



அவள் அதைக் கையில் எடுத்தாள். அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் படத்துக்கு கீழே இருந்த பெயரைப் பார்த்தாள் . அவளது பெயரான உத்தரா என்று  இருப்பதைப் பார்த்துத் திகைத்தாள்.


"யார் இது?" (ஹிந்தியில் தான்)


நான் உண்மையை மறைக்காமல் அது என் பழைய காதலின் நினைவு  என்பதையும் தற்செயலாக அவளது பெயரும் உத்தரா என்பதையும்  சொல்லிவிட்டேன்.


அவ்வளவுதான். அந்த விநாடி உத்தரா சர்மாவின் கண்களில் ஒரு சொட்டு நீர் திரண்டு அந்தக் காகிதத்தில் விழுந்தது. ஓவியத்தில் இருந்த உத்தராவின் கண் அருகே அந்தக் கண்ணீர்த்துளி விழுந்து அந்த முகத்தையே லேசாகச் சிதைத்தது.


"ஓ... அப்படியானால் என் பெயருக்காகத் தான் என்னிடம் பழகினாயா?" என்று அவள் வாய் திறந்து கேட்கவில்லை, ஆனால் அவள் கண்கள் (ஹிந்தியில் தான் ) அதையே பல  முறை கேட்டன.


அதன் பிறகு அவள் என்னைப் பார்க்க வரவே இல்லை. பல நாட்கள் தவித்துப் போன நான் ஒருநாள் அவளது கடைக்கே தேடிச் சென்றேன். அங்கே மௌனமாக நின்றிருந்த அவளிடம்"ஏன் என்னைச் தவிர்க்கிறாய்? நான் உன்னை உண்மையில் நேசிக்கிறேன்" என்று சொன்னேன்.


அவள் என்னைப் பார்த்த பார்வை இன்றும் என் தூக்கத்தைக் கலைக்கிறது.


"நீ என்னிடம் பழகியது உன்னுடைய அந்த உத்தராவின் நிழலைத் தேடித் தானே? உனக்கு என் மேல் ப்ரத்யேக  காதல் இல்லை. உன் காயத்திற்கு ஒரு மருந்தாகத்தான் என்னை நீ பயன்படுத்திக் கொண்டாய். உன் டைரியில் இருக்கும் அந்த ஓவியம் சொல்லாத கதையை உன் மௌனம் சொல்கிறது" என்றாள்.


நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். 


"இல்லைமா அவள் என் கடந்த காலம். நீ தான் என் நிகழ்காலமும் எதிர்காலமும். உன்னை நான் உனக்காகத் தான்  காதலித்தேன்" என்று சொன்னேன் . ஆனால், அவளது மனதில் விழுந்த சந்தேகம் போகவில்லை. 


நான் அவளைக் காதலிக்கவில்லை என் பழைய காதலின் பிம்பத்தைத் தான் அவளிடம் தேடுகிறேன் என்று அவள் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டாள்.


சில உணர்வுகளை நிரூபிக்க மொழியறிவு மட்டும் போதாது; காலமும் ஒத்துழைக்க வேண்டும். அங்கே அந்த இரண்டுமே எனக்கு  எதிராகச் சதி செய்தன .


மகாநகர் சாலைகளில் இப்போதும் மசாலா மோரின் வாசத்தைப் போல  எனக்கும் உத்தரா சர்மாவுக்குமான அந்த அழகிய பந்தமும் ஒரு மெலிதான சோகத்துடன் அங்கேயே உறைந்து போனது. இரண்டு உத்தராக்கள் என் வாழ்வில் வந்தார்கள். ஒருத்தி என் காதலைப் புரியாமல் போனாள், இன்னொருத்தி என் காதலைச் சந்தேகப்பட்டுப் போனாள்.


அந்த ஓவியம் இன்றும் என்னிடம் இருக்கிறது. முகத்தில் ஒரு கண்ணீர்த் துளியின் தழும்போடு.


வீயார் 

Thursday, April 2, 2026

நிழலில் மறைந்த நிஜம்

 நிழலில் மறைந்த nijam


சென்னையின் டைடல் பார்க் பகுதியில் இருந்தது அந்தப் பிரம்மாண்டமான ஐடி பூங்கா. அதன் பதினோராவது தளத்தில் இருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள், ஏசியின் சத்தம் மட்டும் ஒரு BGM போல ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், கார்த்திக்கின் செவிகளில் மட்டும் ஒரு மெலடி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது - அதுவும் பிரியா அந்த அறைக்குள் நுழையும் போதெல்லாம்.


இருவரும் 'சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்' பிரிவில் ஒரே டீம். சமமான படிப்பு. சமமான பதவி. அதனாலேயே அவர்களுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் பாண்டிங் ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேலை சம்பந்தமாக ஆரம்பித்த பேச்சுகள், மெள்ள மெள்ள கேண்டீனில் அரட்டைகளாகவும், வாட்ஸ்அப்பில் குட் மார்னிங், குட் நைட் மெசேஜுகளாகவும் ஜோக்குகளாகவும் வளர்ச்சி அடைந்தன. அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களது அந்த நட்பு ஓரிரு மாதங்களிலேயே காதலாக மலர்ந்தது. அந்தக் காதலைச் சொன்னது கூட ப்ரியா தான்.


கார்த்திக் காதலித்த விதம் வழக்கமான ஆண்களைப் போல இல்லை. அது ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆபத்தான பாணி. அதை ‘காதல்’ என்று சொல்வதை விட ‘சரணாகதி’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவள் "இந்த ப்ராஜெக்ட் டெட்லைன் கஷ்டம்டா கார்த்திக்" என்று சொன்னால், "ஆமாம் பிரியா, ரொம்ப கஷ்டம்" என்பான். அடுத்த நிமிடமே அவள், "இல்ல இல்ல.. பிளான் பண்ணி முடிச்சிடலாம்டா" என்று மாற்றிக் கூறினால், "கண்டிப்பா பிரியா.. உன் பிளானிங் பத்தி கேக்கணுமா? ஆல்வேஸ் கரெக்டா இருக்கும்" என்பான்.


ஒரு வருடம் கழித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணப் புடவை எடுப்பதில் தொடங்கி, மண்டபம் புக் செய்வது வரை அனைத்திலும் பிரியாவின் ராஜ்யம்தான். திருமணம் முடிந்து முதல் ஆறு மாதங்கள் ஒரு கனவுப் பயணம் போல நகர்ந்தது. அப்புறம்தான் அந்த மாற்றம் கார்த்திக்கிடம் தெரிய ஆரம்பித்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரியா உற்சாகமாக சைனீஸ் ரெஸ்டாரண்ட் போகலாம் என்று அழைத்தபோது, வார முழுதும் உழைத்த களைப்பில் இருந்த கார்த்திக் முதல் முறையாக மறுத்தான். "பிரியா.. இன்னைக்கு வேண்டாம்மா. எனக்கு உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. நாம வீட்ல ரசம் சாதம் சாப்பிடலாம்.. ப்ளீஸ்," என்றான். பிரியா அதிர்ச்சியடைந்தாள். "நீ மாறிட்ட கார்த்திக்! முன்னமாதிரி இல்ல!" என்று கத்தினாள்.


நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த இருவரும், தங்கள் முன்னாள் மேனேஜர் சேதுராமன் சாரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் இருவருக்கும் உண்மையை விளக்கினார். "பிரியா, கார்த்திக் உன்னை காதலிச்சப்ப, அவன் உன்னை அடையணும்ங்கிற ஆசைல உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டான். அது உன்னை மயக்க அவன் போட்ட ஒரு அழகான வேஷம். அந்த 'அடிமைத்தனம்' அவனோட நிஜ குணம் இல்ல. இப்போ அவன் இயல்பான கார்த்திக்கா மாறிட்டான்."


அவர் கார்த்திக்கிடமும் சொன்னார்: "நீயே அவளை ராணி மாதிரி பழக்கப்படுத்திட்டு, இப்ப திடீர்னு 'இனிமே நீ ராணி இல்ல'ன்னு சொன்னா அவ எப்படி ஏத்துப்பா? நீ உன் இயல்புக்கு மாறா இல்லாத ஒருத்தனா நடிச்சிருக்க."


இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்தார்கள். கார்த்திக் "பிரியா, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும். நீ என்னை விட்டு போயிடுவியோங்கிற பயத்துல தான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன்" என்றான். பிரியாவும் "காதலை விட அதிகாரம் ருசியா இருந்தது, அதுல நான் என்னை மறந்துட்டேன். இனிமே நாம ரெண்டு பேரும் சமமா இருப்போம்" என்றாள்.


வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது. வானம் தெளிவாகத் தெரிந்தது. பைக்கில் ஏறியதும் கார்த்திக் கேட்டான், "பிரியா.. இப்ப சைனீஸ் ரெஸ்டாரண்ட் போலாமா?" பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள், "இன்னைக்கு எனக்கு டயர்டா இருக்குடா. வீட்ல போய் ரசம் சாதம் சாப்பிடலாம்." அந்தச் சிரிப்பில் எந்தப் பொய்யும் இல்லை. நிழல் விலகி, நிஜம் அங்கே நிலைத்தது.


வீயார்

Wednesday, April 1, 2026

அந்த பதினைந்து நிமிடங்கள்

 அந்த பதினைந்து நிமிடங்கள் 


அண்ணா சாலை சிக்னலில் அந்த 90 செகண்ட் கவுண்ட்டவுன் ஓடிக்கொண்டிருந்தது. கார்த்திக் ஸ்டீயரிங்கை இறுக்கப் பிடித்திருந்தான். இருவது வருஷத்துக்கு முன்ன இதே இடத்துல ஆர்.எக்ஸ் 100-ல தம்  அடிச்சுட்டு பறந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.இப்போ இந்த நாற்பத்திரண்டு வயசு மனசுக்குள்ள வீட்டுக்கு போகணுமேங்கிற அலுப்பும்,  போய் என்ன பண்ணப்போறோம்ங்கிற ஒரு சலிப்பும் தான் மிச்சமிருந்தது.


கார்த்திக்கோட வாழ்க்கை ஒரு perfect excel sheet  மாதிரி. கைநிறைய சம்பளம் தரும் ஐடி வேலை சென்னையில் சொந்த வீடு அன்பான மனைவி ரெண்டு பசங்க. ஆனா இந்த perfect  வாழ்க்கைக்குள்ள அவன் ஒரு வெறும் operating system மாதிரி ஆகிட்டான்.


ஆபீஸ்ல அவன் வயதானவன் என்ற காரணத்தால்  'ஜி' . புது டெக்னாலஜி பத்தி ஜூனியர்ஸ் பேசும்போது, உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தாலும் மேனேஜர் முகமூடியை மாட்டிக்கிட்டு எல்லாம் தெரியும்னு நடிக்கணும். வீட்டுக்கு வந்தா அவன் அப்பா - அதாவது  wifi fix  பண்றவர் fees கட்டுறவர் அப்புறம் வரும்போது பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றவர். அவ்வளவுதான். பசங்க அவங்க ஸ்மார்ட்போன் உலகத்துல இருக்காங்க. மனைவி நித்யா அவளோட ஆபீஸ் டார்கெட்ல ஓடிக்கிட்டு இருக்கா. எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுல இருந்தாலும் எல்லாரும் தனித்தனி தீவுல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு.


வீட்டு பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு ஒரு  15 நிமிஷம் கார்த்திக் இறங்க மாட்டான். இளையராஜாவோட பழைய பாட்டை வச்சிட்டு அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்திருப்பான். அந்த 15 நிமிஷம் மட்டும்  அவன் மேனேஜரும் இல்லை அப்பாவும் இல்லை. அவன் பழைய கார்த்திக்.


அன்னைக்கும் அப்படித்தான். ஒரு வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சான். "இந்தா நித்யா பால் பாக்கெட்" அப்படின்னு சொல்லிட்டு சோபால உட்கார்ந்தான். அப்போ அவன் பதினேழு  வயசு பொண்ணு அக்ஷயா மெதுவா வெளில வந்தா. இவன் சோபால உட்கார்ந்து இருக்கிறதை பார்த்துட்டு நின்னவ "என்னப்பா, டயர்டா இருக்கியா "ன்னு கேட்டா.


"இல்ல மா கண்ணா லேசா தலைவலி அதான்" கார்த்திக் பொய் சொன்னான்.


அக்ஷயா அவன்கிட்ட வந்து உட்கார்ந்தா. "அப்பா, ஒரு ஹெல்ப் வேணும். நாளைக்கு ஸ்கூல்ல எனக்கு ஒரு அசைன்மென்ட் இருக்கு. எனக்குப் பிடித்த நான் பார்த்தி வியந்த ஒரு ஹீரோ பத்தி எழுதணும். எல்லாரும் ஸ்பைடர் மேன் விராட் கோலின்னு எழுதுறாங்க. ஆனா எனக்கு உங்களை பத்தி எழுதணும் போல இருக்கு."


கார்த்திக் ஆச்சரியமா பார்த்தான். "என்னை பத்தியா? நான் என்ன பண்ணிட்டேன்?"


"அதுதான் அப்பா விஷயமே. நீங்க டெய்லி காலையில எழுந்து அதே டிராபிக்ல போய் பிடிக்காத மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு வந்து எங்க எல்லாரையும் பாத்துக்குறீங்களே,  அந்த சகிப்புத்தன்மை இருக்கில்லையா அதுதான் சூப்பர் பவர். நான் ஒரு தடவை பார்த்தேன்ப்பா. நீங்க கார்ல உட்கார்ந்து கண்ணை மூடிட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தீங்க. அப்போ நீங்க ரொம்ப தனியா இருக்கீங்கன்னு எனக்கு தோணுச்சு. ஆனா  நீங்க காரை விட்டு இறங்கும் போது மறுபடியும் எங்களுக்காக சூப்பர் மேன் முகமூடியை மாட்டிக்கிறீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ப்பா!"


அவ அப்படி சொல்லிட்டு உள்ள போகும்போது, கார்த்திக் அப்படியே உறைஞ்சு போயிட்டான். தான் ஒரு இயந்திரம்னு நினைச்சிட்டு இருந்தவனுக்கு தன் பொண்ணு கண்ணுக்கு தான் ஒரு ஹீரோவா தெரிஞ்சது ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருந்தது.


அப்போதான் அவன் மகன் ராகுல் உள்ளே வந்தான். "அப்பா உங்க போன் லிவிங் ரூம்ல இருக்கு. ஒரு மெசேஜ் வந்துட்டே இருந்தது அதான் குடுக்க வந்தேன் " என்றான் ராகுல்.


கார்த்திக் போனை வாங்கினான். அது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். நித்யா அனுப்பியிருந்தாள். மெசேஜைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு பழைய புகைப்படம் இருந்தது. பல  வருஷங்களுக்கு முன்னால  அவர்கள் ஒரு சின்ன வாடகை வீட்டில் வெறும் தரையில் உட்கார்ந்து  சிரித்துக் கொண்டே சாப்பிடும் படம். அது அவன் நண்பன் வெங்கட் எடுத்த படம். 


அதற்குக் கீழே அவள் எழுதியிருந்தாள்.


"கார்த்திக் நீ கார்ல உட்கார்ந்து  பழைய பாட்டு கேக்குறது எனக்குத் தெரியும். அக்ஷயாசொன்னதையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.  நீ அவளுக்கு ஹீரோவா இருக்கலாம் ஆனா எனக்கு நீ அந்த பழைய கார்த்திக்கா தான் வேணும். நமக்காக ஓடி ஓடி நாம ரெண்டு பேரும் அப்பா-அம்மாவா ஜெயிக்கிறதுல பிஸியாகி, கார்த்திக்-நித்யாவா தோத்துட்டோமோன்னு பயமா இருக்கு. இன்னைக்கு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்த கார்த்திக்கா இல்லாம  அந்த ஆர்.எக்ஸ் 100-ல சுத்துன  கார்த்திக்கா உள்ளே வா. நான் உனக்காகக் காத்திருக்கேன்"


கார்த்திக் திகைத்து நின்றான். தான் மட்டுமே ஒரு தீவில் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அந்தத் தீவில் அவனது மகளும், மனைவியும் அவனுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணரவே இல்லை. அவன் இத்தனை காலம் தேடிய நிசப்தத்திற்கான மருந்து அவனது வீட்டிலேயே அவர்கள் அன்பிலேயே இருந்தது.


கார்த்திக் மெதுவா எழுந்தான். அவனுக்கு இப்போ தலைவலி இல்லை. நாளைக்கும் அதே டிராபிக் தான், அதே மேனேஜர் தான்.ஆனா நாளைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பின்  அவன் கார் பார்க்கிங்ல  தனியா உட்கார மாட்டான். ஏன்னா வீட்டுக்குள்ளேயே அவனுக்காக காத்திருக்கும்  ஒரு உலகம்  இருக்கு.


நித்யாவின் அறை நோக்கி நடந்த கார்த்திக் அந்த மேனேஜர் முகமூடியை அங்கேயே கழற்றி எறிந்திருந்தான். நித்யாவின் கார்த்திக்காக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.


வீயார்