Tuesday, April 28, 2026

மரணத்தின் முரல்

 மரணத்தின் முரல் 


(The humming of the death)


சிம்லாவின் காடுகளுக்கு ஓர் அமானுஷ்ய குணம் உண்டு. இரவில் அங்கே கேட்கும் ஒலிகள் மிருகங்களுடையது அல்ல; அவை மறைந்த மரித்த நினைவுகளின் விம்மல்கள். விடுபட்டுப் போனவர்களின் மீள முடியாதவர்களின் ஆத்மாக்களை அந்தக் காடு தனக்குள்ளேயே அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசித்திர சங்கீதம் அது. 


இது எதுவும் அர்ஜுனுக்குத் தெரியாது. அவன் அந்த ரகமும் அல்ல. எதற்கும் லாஜிக் பார்க்கும் சென்னைவாசி. கம்ப்யூட்டர் திரையிலேயே காலத்தைக் கழிப்பவனுக்கு, மூளைக்குச் சற்று ஓய்வு கொடுக்க சிம்லா ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. பனி மூடிய தேவதார மரங்கள், அமைதி. இதைத்தான் அவன் எதிர்பார்த்தான். ஆனால் வந்த முதல் நாளிலேயே அவனுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது.


“ஜி , ராத்திரி நேரத்துல காடு பக்கம் போயிடாதீங்க!” - ஹோம்ஸ்டே உரிமையாளர் சொன்ன எச்சரிக்கையில் ஒரு நடுக்கம் இருந்தது.


அர்ஜுன் அலட்சியமாகச் சிரித்தான். “ஏன் சார் சிறுத்தை பயமா?”


அவர் ஒரு கணம் மௌனமானார். பிறகு கிசுகிசுப்பான குரலில் சொன்னார்: “அதைவிடக் கொடுமையானது !”


அன்று இரவு. பனிமூட்டம் வழக்கத்தை விட அடர்த்தியாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் ஒரு வெள்ளை நிறச் சுவர் எழுப்பியது போன்ற தோற்றம். காற்றே இல்லாத நிசப்தம். அந்த மௌனமே ஒரு ஓசையாய் காதை அடைத்தது.


நேரம் இரவு ஒன்பது முப்பது. சட்டென்று மின்சாரம் நின்றது .


மலைப்பிரதேசங்களில் இது சகஜம் என்பதால் அர்ஜுன் பதட்டப்படவில்லை. மொபைல் டார்ச்சை ஆன் செய்துகொண்டு வெளியே வந்தான். வாசலைத் தாண்டினால் காடுதான். ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் நின்ற தேவதார மரங்கள் பனிப்புகையில் பாதி காணாமல் போயிருந்தன.


அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.


அது அவன் பெயரை அழைக்கவில்லை. எந்த மொழியும் இல்லை. ஒரு மெல்லிய ஹம்மிங். யாரோ ஒரு பழைய பாடலைத் தனக்குள்ளேயே முணுமுணுப்பதைப் போன்ற ஒரு ரீங்காரம்!


“யாரது?” என்று கேட்டவாறே ஆர்வத்தின் உந்துதலால் அந்த ஒலியை நோக்கி நடக்கத் தொடங்கினான் அர்ஜுன்.


காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததுமே சூழல் மாறியது. பனி திடீரென மேலும் கனமானது. டார்ச் ஒளியைச் சிதறடித்து அவன் கண்களுக்கே திருப்பி அனுப்பியது.


அந்த ஹம்மிங் சத்தம் இப்போது மிக அருகில் மிகத் தெளிவாகக் கேட்டது.


“ஹலோ யாரது?”


சத்தம் சட்டென்று நின்றது. ஒரு நொடி மயான அமைதி. அடுத்த கணம்அவன் முதுகுக்குப் பின்னால் அதே ஹம்மிங் மீண்டும் தொடங்கியது!


அர்ஜுன் திடுக்கிட்டுத் திரும்பினான். யாரும் இல்லை. அப்போதுதான் அவன் கவனித்தான் ... தான் நடந்து வந்த பாதையில் காலடிச் சுவடுகள் இல்லை. மண்ணை எவருமே தொடாதது போன்ற ஒரு தூய்மை அங்கே நிலவியது. அவனது இதயம் இப்போது ஓட்டப்பந்தய வீரனைப் போலத் துடிக்கத் தொடங்கியது.


“சரி, கிளம்ப வேண்டியதுதான் ” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு திரும்பினான்.


ஆனால் அவன் வந்த பாதை எங்கே? வாசல் எங்கே? ஹோம்ஸ்டேவின் விளக்குகள் எங்கே? எங்கு பார்த்தாலும் மரங்கள்.பனி. இருட்டு .

அப்போதுதான் அவளைப் பார்த்தான்.


இரண்டு மரங்களுக்கு இடையில் ஒரு உருவம். அசையாமல் நின்றிருந்தது. ஒரு பெண். நீண்ட கூந்தல். தோளில் ஒரு வெள்ளை ஷால். தலையைச் சற்றுச் சாய்வாக வைத்துக்கொண்டு நின்றிருந்த கோலம் மயான அமைதியை நினைவுபடுத்தியது.


“எக்ஸ்க்யூஸ் மீ.ரோடு எந்தப் பக்கம்னு சொல்ல முடியுமா?” அர்ஜுனின் குரல் மெதுவாக வந்தது. 


பதில் இல்லை. அவன் ஒரு அடி முன்னே வைத்தான்.


அதே ஹம்மிங் மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் இம்முறை அது அவளிடமிருந்து வரவில்லை. மரங்களிலிருந்து மண்ணிலிருந்து அவன் காதுக்கு மிக அருகிலிருந்து என எங்கும் அந்த ரீங்காரம் பரவியது.


அந்த உருவம் இப்போது அசைந்தது. தலை நிமிர்ந்தது. மிக வேகமான, இயற்கைக்கு மாறான அசைவு அது. பனித்திரை ஒரு கணம் விலகியபோது அர்ஜுன் அவள் முகத்தைப் பார்த்தான். உறைந்தான்.


அங்கே கண்கள் இல்லை. வெறும் இருண்ட குழிகள். அதற்குள்ளே ஒரு அமானுஷ்ய இருள். ஆனால் இதழ்களில் ஒரு புன்னகை. அது மனித முகத்தில் இருக்க முடியாத அளவுக்குக் காது வரை விரிந்து கோரமாகக் காட்சியளித்தது.


அர்ஜுன் ஓடினான். கால்கள் எங்கே மிதிக்கின்றன என்று தெரியாமல் ஓடினான். மரக்கிளைகள் அவன் முகத்தைக் கீறின. அந்த ஹம்மிங் சத்தம் இப்போது விகாரமான சிரிப்பாக மாறியிருந்தது. அது மனிதர்களின் சிரிப்பு அல்ல அது அமானுஷ்ய வஞ்சகச் சிரிப்பு!


எவ்வளவு நேரம் ஓடினான் என்று அவனுக்கே தெரியாது. திடீரென்று கால்கள் இடறி சாலையில் வந்து விழுந்தான். விளக்குகள். மனித நடமாட்டம்.ஹோம்ஸ்டே.


கதவருகே மயங்கி விழுந்தவனை உரிமையாளர் தான் தாங்கிப் பிடித்தார். காலை கண் விழித்தபோது அவர் அர்ஜுன் அருகில் உட்கார்ந்திருந்தார்.


“ஜி! நான் சொல்லியும் கேக்காம காட்டுக்குப் போயிட்டீங்க போல?” என்றார்.


அர்ஜுன் மெதுவாகத் தலையசைத்தான். “அந்தச் சத்தம் அந்தப் பெண் அது யாரு சார்?”


அவர் காட்டை ஏறிட்டுப் பார்த்தார். “அது பேய் இல்லை தம்பி. அது காடு. தன்னைத் தேடி வந்து தொலஞ்சு போனவங்கள அது மறக்காது. அவங்களத் தானாகவே உருவகப்படுத்திக்கிட்டு அவங்களப் போலவே மாறிடும். சில சமயம் அவங்கள ஞாபகப் படுத்திக்கறதுக்காக அது அப்படிசெய்யுதுன்னு எங்க பெரியவங்க சொல்வாங்க.”


அர்ஜுன் அவர் சொன்னதைக் கேட்டு சிலையானான். அவனால் அதை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. அன்றே சிம்லாவை விட்டுப் புறப்பட்டான். மீண்டும் அந்தப் பக்கம் அவன் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை என்னும் எண்ணத்துடன். 


ஆனால் சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் சில இரவுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, காற்று கூட அசையாத அந்த நிசப்தத்தில் அவன் இன்னும் அந்த ஹம்மிங்கைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.


இப்போது அது மிக அருகில். அவன் முதுகுக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல.


வீயார்

No comments: