அந்த பதினைந்து நிமிடங்கள்
அண்ணா சாலை சிக்னலில் அந்த 90 செகண்ட் கவுண்ட்டவுன் ஓடிக்கொண்டிருந்தது. கார்த்திக் ஸ்டீயரிங்கை இறுக்கப் பிடித்திருந்தான். இருவது வருஷத்துக்கு முன்ன இதே இடத்துல ஆர்.எக்ஸ் 100-ல தம் அடிச்சுட்டு பறந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.இப்போ இந்த நாற்பத்திரண்டு வயசு மனசுக்குள்ள வீட்டுக்கு போகணுமேங்கிற அலுப்பும், போய் என்ன பண்ணப்போறோம்ங்கிற ஒரு சலிப்பும் தான் மிச்சமிருந்தது.
கார்த்திக்கோட வாழ்க்கை ஒரு perfect excel sheet மாதிரி. கைநிறைய சம்பளம் தரும் ஐடி வேலை சென்னையில் சொந்த வீடு அன்பான மனைவி ரெண்டு பசங்க. ஆனா இந்த perfect வாழ்க்கைக்குள்ள அவன் ஒரு வெறும் operating system மாதிரி ஆகிட்டான்.
ஆபீஸ்ல அவன் வயதானவன் என்ற காரணத்தால் 'ஜி' . புது டெக்னாலஜி பத்தி ஜூனியர்ஸ் பேசும்போது, உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தாலும் மேனேஜர் முகமூடியை மாட்டிக்கிட்டு எல்லாம் தெரியும்னு நடிக்கணும். வீட்டுக்கு வந்தா அவன் அப்பா - அதாவது wifi fix பண்றவர் fees கட்டுறவர் அப்புறம் வரும்போது பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றவர். அவ்வளவுதான். பசங்க அவங்க ஸ்மார்ட்போன் உலகத்துல இருக்காங்க. மனைவி நித்யா அவளோட ஆபீஸ் டார்கெட்ல ஓடிக்கிட்டு இருக்கா. எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுல இருந்தாலும் எல்லாரும் தனித்தனி தீவுல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு.
வீட்டு பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு ஒரு 15 நிமிஷம் கார்த்திக் இறங்க மாட்டான். இளையராஜாவோட பழைய பாட்டை வச்சிட்டு அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்திருப்பான். அந்த 15 நிமிஷம் மட்டும் அவன் மேனேஜரும் இல்லை அப்பாவும் இல்லை. அவன் பழைய கார்த்திக்.
அன்னைக்கும் அப்படித்தான். ஒரு வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சான். "இந்தா நித்யா பால் பாக்கெட்" அப்படின்னு சொல்லிட்டு சோபால உட்கார்ந்தான். அப்போ அவன் பதினேழு வயசு பொண்ணு அக்ஷயா மெதுவா வெளில வந்தா. இவன் சோபால உட்கார்ந்து இருக்கிறதை பார்த்துட்டு நின்னவ "என்னப்பா, டயர்டா இருக்கியா "ன்னு கேட்டா.
"இல்ல மா கண்ணா லேசா தலைவலி அதான்" கார்த்திக் பொய் சொன்னான்.
அக்ஷயா அவன்கிட்ட வந்து உட்கார்ந்தா. "அப்பா, ஒரு ஹெல்ப் வேணும். நாளைக்கு ஸ்கூல்ல எனக்கு ஒரு அசைன்மென்ட் இருக்கு. எனக்குப் பிடித்த நான் பார்த்தி வியந்த ஒரு ஹீரோ பத்தி எழுதணும். எல்லாரும் ஸ்பைடர் மேன் விராட் கோலின்னு எழுதுறாங்க. ஆனா எனக்கு உங்களை பத்தி எழுதணும் போல இருக்கு."
கார்த்திக் ஆச்சரியமா பார்த்தான். "என்னை பத்தியா? நான் என்ன பண்ணிட்டேன்?"
"அதுதான் அப்பா விஷயமே. நீங்க டெய்லி காலையில எழுந்து அதே டிராபிக்ல போய் பிடிக்காத மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு வந்து எங்க எல்லாரையும் பாத்துக்குறீங்களே, அந்த சகிப்புத்தன்மை இருக்கில்லையா அதுதான் சூப்பர் பவர். நான் ஒரு தடவை பார்த்தேன்ப்பா. நீங்க கார்ல உட்கார்ந்து கண்ணை மூடிட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தீங்க. அப்போ நீங்க ரொம்ப தனியா இருக்கீங்கன்னு எனக்கு தோணுச்சு. ஆனா நீங்க காரை விட்டு இறங்கும் போது மறுபடியும் எங்களுக்காக சூப்பர் மேன் முகமூடியை மாட்டிக்கிறீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ப்பா!"
அவ அப்படி சொல்லிட்டு உள்ள போகும்போது, கார்த்திக் அப்படியே உறைஞ்சு போயிட்டான். தான் ஒரு இயந்திரம்னு நினைச்சிட்டு இருந்தவனுக்கு தன் பொண்ணு கண்ணுக்கு தான் ஒரு ஹீரோவா தெரிஞ்சது ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருந்தது.
அப்போதான் அவன் மகன் ராகுல் உள்ளே வந்தான். "அப்பா உங்க போன் லிவிங் ரூம்ல இருக்கு. ஒரு மெசேஜ் வந்துட்டே இருந்தது அதான் குடுக்க வந்தேன் " என்றான் ராகுல்.
கார்த்திக் போனை வாங்கினான். அது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். நித்யா அனுப்பியிருந்தாள். மெசேஜைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு பழைய புகைப்படம் இருந்தது. பல வருஷங்களுக்கு முன்னால அவர்கள் ஒரு சின்ன வாடகை வீட்டில் வெறும் தரையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே சாப்பிடும் படம். அது அவன் நண்பன் வெங்கட் எடுத்த படம்.
அதற்குக் கீழே அவள் எழுதியிருந்தாள்.
"கார்த்திக் நீ கார்ல உட்கார்ந்து பழைய பாட்டு கேக்குறது எனக்குத் தெரியும். அக்ஷயாசொன்னதையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். நீ அவளுக்கு ஹீரோவா இருக்கலாம் ஆனா எனக்கு நீ அந்த பழைய கார்த்திக்கா தான் வேணும். நமக்காக ஓடி ஓடி நாம ரெண்டு பேரும் அப்பா-அம்மாவா ஜெயிக்கிறதுல பிஸியாகி, கார்த்திக்-நித்யாவா தோத்துட்டோமோன்னு பயமா இருக்கு. இன்னைக்கு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்த கார்த்திக்கா இல்லாம அந்த ஆர்.எக்ஸ் 100-ல சுத்துன கார்த்திக்கா உள்ளே வா. நான் உனக்காகக் காத்திருக்கேன்"
கார்த்திக் திகைத்து நின்றான். தான் மட்டுமே ஒரு தீவில் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அந்தத் தீவில் அவனது மகளும், மனைவியும் அவனுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணரவே இல்லை. அவன் இத்தனை காலம் தேடிய நிசப்தத்திற்கான மருந்து அவனது வீட்டிலேயே அவர்கள் அன்பிலேயே இருந்தது.
கார்த்திக் மெதுவா எழுந்தான். அவனுக்கு இப்போ தலைவலி இல்லை. நாளைக்கும் அதே டிராபிக் தான், அதே மேனேஜர் தான்.ஆனா நாளைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பின் அவன் கார் பார்க்கிங்ல தனியா உட்கார மாட்டான். ஏன்னா வீட்டுக்குள்ளேயே அவனுக்காக காத்திருக்கும் ஒரு உலகம் இருக்கு.
நித்யாவின் அறை நோக்கி நடந்த கார்த்திக் அந்த மேனேஜர் முகமூடியை அங்கேயே கழற்றி எறிந்திருந்தான். நித்யாவின் கார்த்திக்காக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
வீயார்
No comments:
Post a Comment