Friday, February 21, 2014

முற்பகல் அடித்தால் பிற்பகல் வலிக்கும்

May I help you? (for a price, of course). எனக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தைகள். எந்த பிசினஸ்மேனுக்கும் இந்த வார்த்தைகள் பிடிக்கும். நானும் ஒரு பிசினஸ்மேன் தான். இல்லை சொல்யூஷன் ப்ரோவைடர் என்று சொல்லலாமா? அது பெட்டராக இருக்கும்.

பிசினஸ் மேன் என்றால் ஒரு ஆபீஸ் இருக்க வேண்டும். எனக்கு அப்படி ஒரு நிரந்தர ஆபீஸ் இல்லை. பஸ் ட்ரெயின் பார்க் மார்கெட் இப்படி எந்த இடமுமே எனக்கு ஆபீஸ் தான். கஸ்டமர்கள் இருக்கும் வரும் இடம் தானே ஆபீஸ்?

காதுகளைத் திறந்தே இருக்கும்படி படைத்த கடவுளுக்கு நன்றி. அதனால் எவ்வளவு உபயோகம் என்று என் கடந்த பத்து வருட வாழ்க்கையை ஆராய்ந்தால் புலப்படும். நைன்டி த்ரீ பாய்ன்ட் சம்திங் நைண்டி ஸிக்ஸ் பாய்ன்ட் சம்திங் என்றெல்லாம் FM ரேடியோவில் காதுகளைச் செலவிடும் சாதாரண மானிடர்களுக்கு இது புரியாது.

உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன் கேளுங்கள். ரகசியங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றன என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்? அது தான் இல்லை. ரகசியங்கள் மிகச் சாதாரணமாக பொது இடங்களில் பேசப்படுகின்றன. புருஷன் ஆபீஸ் போன பிற்பாடு காதலனைச் சந்திக்கக் கிளம்பும் மனைவியிலிருந்து மிகப்பெரிய பிசினஸ் ரகசியங்கள் வரை, கவனமாகக் கேட்பவர்களுக்குக் காதுகள் அடையாளம் காட்டும்.

நான் அந்த பிசினஸில் தான் இருக்கிறேன். தற்செயலாக ஆரம்பித்ததுதான் இது.  நன்றாகப் படித்தும் (என் சில பல தீயப் பழங்கங்களினால்) வேலை கிடைக்காமல் (தேடாமல்) ஒரு சாதாரண பிக்பாக்கெட்டாக  இருந்த நான் இந்த லைனுக்கு வந்தது ஒரு சுவையான சம்பவம். 2008 புத்தகக் கண்காட்சி என்று நினைக்கிறேன். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை. அந்தச் ஸ்டால்களில் இருந்த இளசுகள்தான் என்னைக் காந்தம் போல இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் தற்செயலாக அந்த இருவரையும் பார்த்தேன். ஒரு 25 வயது மதிக்கத் தக்க யுவன் யுவதி. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே தாழ்ந்த குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள். காதலர்களாய் இருக்கும் என்று சுவாரசியம் இழந்து ஸ்டால் இளசை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். படிந்து வருவாள் போலத்தான் தெரிந்தாள். அவளை என்டர்டெயின் பண்ணுமளவுக்குப் பணமிருக்கிறதா என்று ஒருமுறை பர்சைத் திறந்து பார்த்தேன். இருந்தது. நிம்மதிப்பெருமூச்சுடன் ஸ்டால் இளசை நோக்கி நடந்தேன். அப்போது தான் அந்த யுவன் பேசியது காதில் விழுந்தது.

“ஐ வோன்ட் கெட் காட் நோ? மை ஜாப் இஸ் அட் ஸ்டேக்..”

“டோன்ட் வொர்ரி. யூ ஆர் சேப். மனி வில் பீ பெய்ட் இன் யுவர் அக்கவுன்ட்”

என் காதுகள் கூர்மையாகின. என்ன பேசுகிறார்கள்? ஸ்டாலுக்குள் நுழைந்து புத்தகம் மேய்வது போல அவர்களை கவனித்தேன். அந்த  யுவன் தன் ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்து ஒரு சிறிய பாக்கெட் எடுத்து அந்தப் பெண் கையில் கொடுத்தான். அதை வாங்கிய அவள் கவரைப் பிரித்து உள்ளிருந்த பொருளை வெளியே எடுத்தாள். உள்ளங்கை அளவே இருந்த ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க். பின்னர் அதைத் தன் கைப்பையில் போட்டுக்கொண்டு விருட்டென்று திரும்பி நடந்தாள்.

நான் யோசிக்கவில்லை. சட்டென்று வெளியே வந்து அவளைத் தொடர ஆரம்பித்தேன். ஏன் என்று இன்று வரை சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த முடிவு தான் என் பிசினஸுக்கு ஆதார சுருதி.

கண்காட்சி வளாகத்தை விட்டு வெளியே வந்தவள் ஒரு ஆட்டோ பிடித்தாள். நான் என் பைக்கை ஸ்டார்ட் செய்து அவளைத் தொடர்ந்தேன். ஒரு பதினைந்து நிமிடங்களில் ஆட்டோ எக்மோர் ரயிலடியை அடைந்தது. அவள் ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து விட்டு ஸ்டேஷனுக்குள் செல்வதற்குள் நானும் என் பைக்கைப் பார்க் பண்ணிவிட்டு அவளைப் பின் தொடர்ந்தேன். ஐந்து நிமிஷத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்வண்டி வந்தது. அவள் அதில் ஏறினாள். என் அதிர்ஷ்டம் அவள் ஏறியது ஜெனரல் கம்பார்ட்மென்ட். நானும் அதில் தொற்றிக்கொண்டேன். வண்டி கிளம்பியதும் நான் கம்பார்ட்மெண்டை நோட்டம் விட்டேன். கூட்டம் கம்மியாகத் தான் இருந்தது.

உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் திடுமென எழுந்து  அவளை நோக்கி வந்தான். சிரித்திபடியே “வேலை ஆச்சா?” என்றான்.

‘ம்ம்ம்’ என்று முனகியபடியே அவள் அந்த ஹார்ட் டிஸ்க்கை எடுத்து அவனிடம் தந்தாள். அவன் அதைத்  தன் கைப்பையின் முன் ஜிப்பில் வைத்தான். அவனும் பதிலுக்கு இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை அவளிடம் தந்தான். அதை வாங்கிக் கொண்ட அவள் காலியாயிருந்த ஒரு ஜன்னலோர சீட்டில் போய் உட்கார்ந்தாள். அந்த ஆள் வண்டி நிற்கப் போகும்  ஸ்டேஷனில் இறங்க வேண்டி முன்னால் வந்தான். வண்டி நின்றது. அவன் என்னைத் தாண்டிப் போன அந்தக் கணத்தில் அவன் கைப்பையின் முன் ஜிப்பிலிருந்த அந்த ஹார்ட் டிஸ்க்கை அவனறியாமல் ப்ளேடு போட்டு எடுத்து விட்டேன்.

அவன் இறங்கிப் போய்விட்டான். எடுத்தப் பொருளை பத்திரப்படுத்திவிட்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு எதிர்பக்கம் போய் உட்கார்ந்தேன்.

பல்லாவரம் ஸ்டேஷனில் அவள் இறங்கினாள். நானும் பின் தொடர்ந்தேன். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவள் ரோடைக் க்ராஸ் பண்ணி அந்தப்பக்கம் சென்றாள். அங்கே இருந்த ஒரு சந்தில் நுழைந்து நான்காவது வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கைப்பையில் இருந்து சாவி எடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவள் வீடு!

சரி பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று நான் திரும்பவும் எக்மோர் போய் வண்டியை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டுச் சென்று கம்ப்யூட்டரில் அதைப் போட்டுப்பார்த்த நான் அதிர்தேன்.

Blue Whale Info Solutions  என்னும் ஒரு ஐ.டி. கம்பனி சம்பந்தப்பட்ட சில பைல்கள் இருந்தன. அவர்கள் வங்கி சம்பந்தப்பட்ட மென்பொருள் தயாரிப்பாளர்கள். ஒரு அரசு வங்கியின் சிறப்பு சேமிப்புக் கணக்கின் வொர்கிங் மாடல் ஒன்று தயாரித்திருந்தார்கள். பல லட்சம் ரூபாய்க்கான மென்பொருள். எனக்கு சட்டென்று எல்லாம் புரிந்தது. இவர்கள் தயாரித்த மென்பொருள் மாடலைக் கொண்டு அதே போல் வேறு வங்கிகளுக்கு மிகச் சுலபமாக அவர்கள் தேவைக்கேற்பத் தயாரித்து விடலாம். உழைப்பு இவர்களது. பலன் இதைத் திருடச் சொன்ன கம்பனிக்கு.

அதற்கப்புறம் பல விஷயங்கள் மளமளவென்று நடந்தேறின. நான் Blue Whale Info Solutions  கம்பனிக்குச்சென்று அதன் HRஐச் சந்தித்தேன். ட்ரெயினில் அது ஒரு ஆளின் பையில் இருந்து கீழே விழுந்ததாகவும் அதைச் சோதித்துப் பார்த்ததில் அவர்கள் மென்பொருள் என்று தெரிந்து அதை அவர்களிடம் எடுத்து வந்ததாகவும் பொய் சொன்னேன்.

உலகில் எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகள்! விஷயத்தைப் புரிந்து கொண்ட அந்த HR பெண் , தன் பையிலிருந்து வெறும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்துத் தந்து நன்றி என்றாள். அதைக் கையில் வாங்காது நான் சிரித்தேன்.

“பொருள் தான் உங்ககிட்ட வந்திருக்கு. அத எடுத்தது யாருங்கற செய்தி எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனா அது வெறும் ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்காது” என்றேன்.

புத்திசாலியான அந்தப் பெண் என்னை அந்த கம்பனியின் CEOவிடம் அழைத்துச் சென்றாள். ஒரு மணி நேர பேரத்துக்குப் பிறகு ஐம்பதினாயிரம் ரூபாயுடன் வெளியேறினேன்.

அன்று தான் புரிந்து கொண்டேன் அலர்ட்டாக இருப்பதன் பயனை. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த பிசினஸ். இந்த மாதிரி விஷயங்கள் நிறைய கிடைக்காவிட்டாலும், நகரத்தில் இருந்த ஏமாற்றும் கணவன்/மனைவியர் என் வயிறு வாடாமல் பார்த்துக்கொண்டனர். தொழிலில் சில சமயம் கை கால் உடைப்பது, சிறு விபத்து ஏற்படுத்துவது என்று கூட இறங்கியிருக்கிறேன்.

ஆனால் என்னதான் இந்த மாதிரி நீசத்தனமான வேலை செய்தாலும் அதிலும் ஒரு தர்மம் கடைபிடித்தேன். எந்தக் காரணத்தைக்கொண்டும் மர்டரில் மாட்டிக் கொள்வதில்லை என்று. என் உயிரின் மேல் எனக்கு அவ்வளவு ஆசை.

அப்படி ஜாக்கிரதையாக இருந்தும் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. ஒரு வருடத்துக்கு முன்னால். காதலித்த பெண்ணை கழட்டி விடப் பார்த்த ஒரு பணக்காரன் தான் என் கிளையன்ட். ஒரு சின்ன ஆக்சிடென்ட் செய்து அவளை சிறிது காலத்துக்கு ஆசுபத்திரியில் கிடத்துவதாக ஏற்பாடு. ஆனால் அவள் ஒரு இருதய நோயாளி என்பது எனக்குத் தெரியாத ஒரு செய்தி. அந்தப் பெண் அந்த ஆக்சிடெண்டில் மரித்துப் போனாள்.

அது ஒன்று தான் என் தொழிலில் முதலும் கடைசியுமான மரணம். நான் மிகவும் ஜாக்கிரதையாகக் கிளையன்ட்ஸ் செலக்ட் செய்து போலீஸ் கண்களில் விழாது இருந்தேன்.


இப்படி நடந்து கொண்டிருந்த என் தொழிலில் ஒரு தொய்வு வந்தது. அது எனக்கு நிகழ்ந்த ஒரு ஆக்சிடென்ட். எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்தால் நீங்கள் சிரிப்பீர்கள். குளிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து முதுகெலும்பில் நல்ல அடி. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் எங்கும் நகர முடியாமல் அவஸ்தை.

உடல் நலக்கேடு என்பதைத் தாண்டி நான் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு அல்மோஸ்ட் கரைந்து விட்டது பெரிய கவலையைத் தந்தது. எப்படியாவது உடம்பு சரியான பிறகு முனைந்து தொழில் செய்து இழந்த பணத்தை சேர்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

அந்த நாளும் வத்து. டாக்டர் வெளியே சென்று வர அனுமதி தந்து விட்டார். எனக்கு மிகவும் சந்தோஷம். முதல் நாளே தொழிலை ஆரம்பிக்க வேண்டாம். சற்று என்ஜாய் பண்ணுவோம் என்று ஹோட்டல் சென்று சாப்பிட்டேன். பின்னர் ஒரு புது திரைப்படம் சென்று பார்த்தேன். மாலையில் சற்று இளைப்பாற பனகல் பார்க் வரை சென்றேன்.

பார்க் வெளியே தி நகரின் அல்லோகலம் உள்ளே அவ்வளவாகத் தெரியவில்லை. ஓரிடத்தில் சென்று அமர்ந்தேன். கொஞ்ச பேர் அங்குமிங்குமாக இருந்தார்கள். என் கடந்த காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் காதுகளில் அவர்கள் பேச்சு விழுந்தது.

(அப்புறமாக திரும்பப் பார்த்ததில் தெரிந்தது அவர்கள் ஒரு இளம் ஜோடி).

“ராகேஷ், இப்படிச் செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. என் புத்தியச் செருப்பால அடிக்கணும். உங்கள நம்பி ஏமாந்தேன் பாருங்க” என்றாள் அந்த இளம் பெண்.

“நான் என்ன வேணும்னா பண்ணறேன்? எல்லாம் ஒரு சந்தர்ப்பம் தான். எங்கப்பா பிசினஸ் இப்படி நொடிக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?
அவர் பிரெண்ட் அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டு அதுக்கு பதிலா நான் அவர் பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு கேப்பாருன்னு தெரியுமா? என் அப்பா நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இப்ப நானும் கை விட்டா அவர் செத்துடுவார்.”

“அதுக்காக என் வாழ்க்கையையா பணயம் வெக்கிறது? நான் சும்மா விட மாட்டேன். என் எதிர்காலம் என்ன ஆகும்? இப்ப என் வயித்துல உன் கொழந்தைய வேற சொமக்கறேன். அந்த ந்யூஸ உனக்குச் சொல்லலாம்னு வந்தா நீ இப்படி ஒரு குண்டத் தூக்கி போடற”

“ என்னது கொழந்தையா?” என்று அதிர்ந்த ராகேஷ், “ராகினி, இதப் பாரு, மொத வேலையா அதக் கலச்சிரு. என்ன செலவானாலும் பரவால்ல. அப்புறம் உனக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லு. முடிஞ்சதப் பண்றேன். ஆனா நம்ம கத தொடாது. அது மட்டும் நிச்சயம்” என்றான்.

“பணம் கொடுத்து முடிக்கப் பாக்குறியா, யூ பாஸ்டர்ட். உன்ன எப்படி கவனிக்கணுமே அப்படி கவனிக்குறேன்.” என்று சொல்லி விருட்டென்று எழுந்த ராகினி பார்க்கை விட்டு சென்றாள்.

ராகேஷ் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். அவன் சோகம் எனக்குச் சந்தோஷம்! இருக்காதா பின்ன? தேடாமலே வந்த பிசினஸ்!

நான் மெதுவாக எழுந்து சென்று அவனிடம் சென்றேன். கிட்ட வந்த என்னை நிமிர்ந்து பார்த்தவனிடம் “ ஹாய்! நான் சந்திரன். சொல்யூஷன் ப்ரோவைடர்.” என்று சொன்னேன்.

“For what?” என்று கேட்டவனிடம் “ உன்னோட ப்ராப்ளத்துக்குன்னு வச்சுக்கொயேன்” என்று அவன் அனுமதி கேட்காமலேயே அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். முதலில் அசுவாரசியமாகக் கேட்க ஆரம்பித்தவன் கண்கள் கடைசியில் நான் பேசி முடிக்கும் போது விரிந்தன.

“எவ்வளவு?” என்றான்.

“முப்பது ரூவா” என்றேன். “உன் நிம்மதியின் விலை. ரொம்ப குறைவு”

“ஆனா லேசா அடி காயம்னு போதும். உயிருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது” என்றான் பயத்துடன்.

“ முப்பது ரூவாவுக்கு அடி காயம் மட்டும் தான்” என்று சிரித்தேன்.

“எங்க வந்து தர்றது?”

“ இன்னைக்கு ராத்திரி ஒன்பது  மணிக்கு இங்கேயே வா.”

“மூடிடுவாங்களோ?”

“அங்க ஒரு வழி இருக்கு. அது திறந்து தான் இருக்கும். நான் அந்த சேர்ல உக்காந்திருப்பேன். சரியா ஒன்பது மணி. முப்பது ரூவா. அவ போட்டோ அட்ரஸ்.”

“சரி” என்றவன் சந்தோஷத்துடன் எழுந்து போனான்.

நான் சரவண பவன் சென்று லைட்டாக டிபன் சாப்பிட்டு விட்டு வந்தேன். மணி 8.45.

இரண்டு நிமிடம் கழித்து உள்ளே சென்றேன். அந்த சேரில் உட்கார்ந்தேன். அவன் இன்னும் வரவில்லை. அந்த காத்திருக்கும் நேரத்தில் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்துப் புகைத்தேன். புகைத்து முடிக்கவும் அவன் வரவும் சரியாக இருந்தது.

“ராகேஷ்?” என்றேன்.

“எஸ் நான் தான்”

அப்போது தான் பார்த்தேன் அவனுடன் இன்னொரு உருவம். இருட்டில் சற்று கண்களைப் பழக்கிப் பார்த்தால் ராகினி!

“இவனே தான் ராகேஷ்! இவனே தான் என் அக்காவை ஆக்சிடென்ட் செஞ்சு கொன்னவன். அந்தக் காரில் நானும் இருந்ததை இவன் பார்க்கவில்லை. பாவி! இவன விடாதே! என்ன செலவானாலும் பரவாயில்ல” என்று கோபமாகச் சொன்னாள்.

“ஓகே பாஸ்! நீங்க சொன்னா சரி” என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பியவன் “ஹாய்! ஐ யாம் ராகேஷ். உங்கள மாதிரியே சொல்யூஷன் ப்ரோவைடர். ஒரு சின்ன வித்தியாசம். Murder included.” என்று விகாரமாகச் சிரித்துக் கையைத் தூக்கினான்.


அவன் கையில் சைலன்சர் பொருத்தப்பட்ட ரிவால்வர்!

Tuesday, February 18, 2014

மாய மான்

எத்தனை வருஷங்கள் ஓடிப்போயாச்சு? நினைக்கவே ரொம்ப பிரமிப்பா இருந்தது ராகவனுக்கு. இத்தனை வருஷமா அவன் கட்டிக்காத்து வந்த விரதம் உடைந்தது உள்ளூர ஒரு ரகசிய சந்தோஷத்தை கொடுத்தது.

அந்தக்காலத்து  திருவல்லிகேணிக்கு அவன் மனம் அவனைப் பின்னோக்கி இழுத்தது. திருவல்லிக்கேணி என்றவுடன் பார்த்தசாரதி கோவிலும், அதன் மாடத் தெருக்களும், தேரடித் தெருவும், ‘கங்கணா’ மண்டபமும் நினைவில் வந்து போயின. இவையெல்லாம் வந்து போன பிறகு இவன் மனசுக்குள் வந்தாள் சித்ரா.

அவள் நினைவு வந்ததும் உடம்பெல்லாம் குறுகுறுவென்று ஏதோ செய்தது. உடனே சிகரெட் பிடிக்க வேண்டும் போல நாக்கு கட்டளை இட்டது. சிகரட் பிடிக்கலாமா கூடாதா என்ற சந்தேகத்துடன் ஏஸீ கம்பார்ட்மென்ட் கதவை திறந்து கொண்டு வந்தவன் வாசல் கதவு அருகில் ஒரு போலீஸ்காரர் புகைத்து கொண்டிருப்பதை பார்த்து அவரிடமே தீப்பெட்டி கேட்டு தன் சிகரெட்டை பற்ற வைத்து கொண்டான். ஒரு இழுப்பு இழுத்ததும் மீண்டும் மனசுக்குள் சித்ரா வந்தாள்.

இவன் காலேஜ் படித்த  இறுதி  வருஷம் தான் இவன் அம்மா தவறினாள். பின்னர் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் இவனும் அப்பாவும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள். புது வீட்டுக்கு வந்தால் நேரும் அசௌகரியங்கள் எல்லாம் அவளைக் கண்ட மாத்திரத்தில் மறைந்தது. இப்படி ஒரு பால் நிறத்தில் ஒரு பெண்ணை ராகவன் அது வரையில் பார்த்து இல்லை. ஏதோ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி.

ராகவன் தான் வாழ்வில் எடுத்த முதல் சபதம் அவள் தன்னை காதலிக்குமாறு செய்ய வைப்பது தான். அவள் எழுந்திருக்கும் நேரம் முதல் இரவு அவள் தூங்கச் செல்வது வரை சித்ராவின் ஒவ்வொரு செயலும் அவன் மனதில் அட்டவணை ஆனது.

முதலில் இவனை  உதாசீனப்படுத்தியவள் ஒரு நல்ல நாள் காலையில் இவனைப் பார்த்து கவர்ச்சியாக ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்து இசைந்தாள். அந்த முதல் வெற்றியின் இனிப்பு இன்றும் அவன் மனதை இனிக்க செய்தது.

அதற்கப்புறம் கோவில் பீச் என்று யாருக்கும் தெரியாமல் சந்தித்துகொண்டார்கள். காதல் மிகவும் இறுகியது. ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை போல. இப்படி இருக்கின்றபோது தான் விதி அந்த நாளை இவர்கள் முன் வைத்தது.

ஒரு நாள் அதே தெருவில் இருந்த இன்னொரு குடும்பத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருவரின் குடும்பங்களும் சென்றன. இவர்கள் இருவருக்கும் அடுத்த நாள் ஒரு தேர்வு இருந்ததால் செல்லவில்லை.

இருவரின் குடும்பமும் சென்ற ஒரு அரை மணி நேரம் கழித்து இவன் அவள் வீட்டுக்கு சென்றான். முதல் முறையாக அவளை அவள் வீட்டிலேயே சந்தித்தான்.

ஏதேதோ பேசினார்கள். வாய் ஏதோ பேச கண் வேறெதுவோ பேசியது. அடுப்பில் வைத்த பால் போல இருவரின் உள்ளங்களும் மெதுவாக கொதிக்க தொடங்கின. அந்தக் கொதிப்பை தடுக்கத் தெரியாமல் விரும்பாமல் இருவரும் அதன் போக்கிலே விட்டார்கள்.

யாருமில்லாத வீட்டில் ஒரு இனிமையான கணத்தில் இருவரும் இணைந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் இதழ்களால் தின்று கொண்டார்கள். அவர்கள் காதல் காமத்தின் பிடியில் சிக்குண்டது. அவர்கள் தங்களையே இழந்தார்கள்.

உறவின் இன்பம் நேரத்தை மறக்கடித்தது.  காமம் தீர்ந்து ஆடைகள் அணிந்த பின்னரும், இதழோடு இதழ் சேர்ந்திருந்தார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் தங்களை மறந்து இருந்த அவர்களை சித்ராவின் அப்பா குரல் நிகழ்காலத்துக்கு மீட்டு வந்தது.

அதற்கு பிறகு நடந்தது பழைய பீம்சிங் படக் காட்சிகள் போல் இருந்தன. பல விதமான குழப்பம் கூச்சலுக்கு பின் இவன் அப்பா இவனை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ராகவன் இதோ இப்பொழுது தான் ஊருக்கு சென்று கொண்டு இருக்கிறான். சுமார் ஐந்து  வருஷங்களுக்கு பிறகு. சென்னையிலிருந்து மும்பை சென்ற அவன் எப்படியெல்லாமோ போராடி வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்து விட்டான். இவன் பாலிய நண்பன் கண்ணனை போன் வாரம் எதேச்சையாய் சந்தித்தப் போதுதான் அவன் அப்பா இப்போது அடையாரில் இருப்பதாக தெரிந்து கொண்டான். கண்ணன் அவன் அப்பாவின் அட்ரசும் தந்தான். இரண்டு  நாளாக அப்பாவைப் பார்க்க போக வேண்டும் போல இருந்தது. ஆனால் அவன் உள் மனதோ ‘ டேய் நீ உன் மாயமானைத் தேடி தானே போகிறாய்?’ என்று கிண்டலடித்தது.

ஆமாம் அதில் தவறு என்ன? நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். இனிமேல் நேராகப் போய் சித்ராவை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க என்று கேட்டுவிட வேண்டியதுதான், என்ற முடிவுக்கு வந்து இதோ இப்போதைய பயணம்.

ஊர் வந்து சேர்ந்தது. சென்ட்ரலில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து ‘ அடையாருக்கு  போப்பா ’ என்றான். சிறிது நேரத்தில் அந்த வீட்டிற்கும் வந்து சேர்ந்தான். ஆட்டோக் காரனுக்கு பணம் தந்து அனுப்பி விட்டு மாடியேறி தன் வீட்டு (அப்பா வீடு?) காலிங் பெல்லை அழுத்தினான்.
சில நொடிகளில் ‘ யாரு?’ என்று கேட்டபடியே வந்து கதவைத் திறந்தாள் சித்ரா.

முதலில் இவனைத் தாக்கியது அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி தான். (பாவி!). ‘ சித்தூ யாரு வந்திருக்காடி?’ என்று கேட்டபடியே ஒரு குழந்தையை தூக்கியபடி உள் ரூமிலிருந்து வெளியே வந்தது அவன் அப்பா!!!!

இத்தனை அதிர்ச்சிகளுக்கிடையில் ‘சித்ரா எப்போது சித்தூ ஆனாள் ?’ என்று அவன் மனம் நேரம் காலம் தெரியாமல் யோசித்தது.

‘டேய் ராகவா, அது வந்து.....’ என்று இழுத்த அப்பாவை ‘ நானே சொல்லிக்கறேன் நீங்க உள்ளே போங்கோ’ என்று அதட்டி விட்டு ஒரு கப் காப்பி எடுத்துக் கொண்டு வந்து இவனை வலுக்கட்டாயமாக உட்கார்த்தி அவள் சொன்னதன் gist  இதுதான்.

‘இவர்களோட ராவுகள்’ பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதன் பிறகு இவன் வீட்டை விட்டு சென்றும் விட்டான். நடந்த சம்பவம் சித்ராவின் பெற்றோரை மிகவும் பாதித்தது. ஏற்கனவே இருதய நோயாளிகளான அவள் பெற்றோர் அந்த அதிர்ச்சி தாளாமல் ஒரு வாரம் கழித்து போய்ச்சேர்ந்தார்கள்.

காரியங்கள் முடிந்த பின் நிர்கதியாய் நின்ற சித்ராவை தன் வீட்டில் வைத்து கொண்டார் இவன் அப்பா.  அப்படி இருக்கையில் திடீரென்று சித்ரா ஒரு நாள் வாந்தி எடுத்தாள்.
இந்த விஷயம் வெளியில் பரவி ஒரே ரசாபாசம். இது தன் மகனால் நடந்தது என்று அவன் அப்பா மன்றாடிப் பார்த்தாராம். ஆனால் அவரை நம்புவதற்குத் தான் யாருமில்லை. கடைசியில் சில பொதுநல விரும்பிகளின் யோசனைப்படி இவன் அப்பா சித்ரா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் அதே ஏரியாவில் இருக்க விரும்பாமல் அடையார் குடி பெயர்ந்தார்கள். இப்போது கையில் ஒரு சுமார் நாலு வயது குழந்தை!

சித்ரா சொன்ன விஷயங்களைக் கேட்டு ராகவன் சிலையானான். அவன் கனவுகள் சிதைந்தன. ‘ என்னை மன்னிச்சுடு ராக்ஸ்’ என்று சித்ரா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அப்போது தான் அந்த குழந்தை ‘ அம்மா’ என்றபடியே அந்த அறைக்குள் வந்து. அதைப் பார்த்ததும் அவளிடமிருந்து தன் கைகளை சட்டென்று ராகவன் விடுவித்துக் கொண்டான்.

வாயில் விரலைச் சூப்பிகொண்டே சித்ராவின் அருகில் சென்ற அந்த குழந்தை சூழ்நிலைப் புரியாமல் இவன் யார் என்பது போல் தன் அம்மாவைப் பார்த்தது. ‘ அப்...’ என்று ஆரம்பித்தவள் நாக்கைக் கடித்துக்கொண்டு ‘ அண்ணாடா’ என்றாள் இவன் கண்களைப் பார்த்தபடியே.

ராகவனுக்கு உலகம் இருண்டது.

Monday, February 17, 2014

வில்லன்


ஐயோ திரும்பவும் உன் பேங்க் புராணமா என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகிறது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்? நானோ பேங்கில் வேலை செய்பவன். என் வாழ்க்கையில் எதுவும் சுவாரசியமாகவோ இல்லை வேறு விதமாகவோ ஏதாவது நடந்திருக்கிறது என்றால் அது என் பேங்கில்தான். உடன் வேலை செய்யும்/செய்த மனிதர்களுடன் தான்.  நம்ம ரைட்டர் சேகர் பாஷையில் நான் படிச்ச மனிதப் புத்தகங்கள் அவர்கள்தான். அதனால் மீண்டும் ஒரு பேங்க் கதை.

ஆனால் திரும்பவும் லக்னோ கதை வேண்டாம் ; லக்னோவப் படிச்சு போரடிச்சுப் போச்சு என்று சொன்னவர்களுக்காக, இந்த முறை இந்தக் கதைக்களம் தில்லியில். சொல்லப் போனால் இந்த சம்பவம் தில்லி சென்னை என்று இரண்டு இடங்களில் நிகழ்ந்தது. தில்லியில் ஆரம்பித்து சென்னையில் முடிந்தது.

நான் அப்போது எங்கள் வங்கியின் தில்லி ரீஜனல் ஆபீசில் பணியில் இருந்தேன். ஸ்கேல் ஒன் ஆபீசர். அது ஒரு பெரிய கெத்து இல்லை. அங்கு என் வாழ்க்கை தடங்கல் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. அப்படியே போனால் எப்படி? அதைக் கெடுக்கத் தான் ராஜ்குமார் வந்தான். என் வாழ்க்கையில். எங்கள் ரீஜனல் ஆபீசில்.

ராஜ்குமார் காமத் எங்கள் ரீஜனல் ஆபீசில் ஜாயின் செய்த புதிதில் எனக்கு நல்லவன் போலத்தான் தோன்றினான். எல்லாரிடமும் அன்புடன் பழகினான். காலையில் எல்லாருக்கும் குட் மார்னிங் சொல்லுவான். தான் கொண்டு வரும் மதிய உணவை பகிர்ந்து கொள்ளுவான். மொத்தத்தில் ஓகே. அப்படிப் பட்டவனுடன் எனக்கு என்ன பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி.

அவன் என்னை விட பத்து வயது பெரியவன். ‘என்னடா, வயதில் பெரியவனை அவன் இவன் என்று ஏகவசனத்தில் குறிப்பிடுகின்றானே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு ஒரு பர்சனல் காரணம் உண்டு. என் வாழ்க்கையைக் கெடுத்த வில்லன் அவன்.

நான்? வெங்கடேஷ். களையும் இல்லை கலரும் இல்லை என்னும் தனுஷ் கோஷ்டி. அவனையாவது பார்க்கப் பார்க்கப் பிடிக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டமும் கிடையாது. பார்க்கவும் சுமார். டிரஸ் சென்ஸ் சுமார். பேச்சு சாமர்த்தியம் சுமார். மொத்தத்தில் அகராதியில் சுமார் என்ற வார்த்தையைத் தேடினீர்களானால் அதற்கு எதிரில் என் படம் போட்டிருப்பதைப் பார்க்கலாம். அதனாலேயே 25 வயதாகியும் கல்யாணம் ஆகாமலேயே இருந்தேன்.

ராஜ்குமார்? பெயருக்கு ஏற்ற ராஜகுமாரன். கொங்கணிகளுக்கு என்றே இருக்கும் imported வெள்ளை நிறம். நல்ல உயரம். இங்கிலீஷ் நன்றாகப் பேசுவான். ஹிந்தியும் பிளந்து கட்டுவான். ( எனக்கு இரண்டு மொழிகளிலும் திண்டாட்டம் தான்). அதனால் அவன் அருகில் இருக்கும் போது நான் ரொம்ப inferiorஆக உணர்வேன்.  இதெல்லாம் மட்டுமல்ல காரணங்கள் அவன் மீது நான் கோபம் கொள்ள. மெயின் காரணம் ப்ரீத்தி.

ஹீரோ (நான் தான்) வில்லன் (அவன் தான்) இருக்கும் போது கதாநாயகி இல்லாமல் எப்படி? ப்ரீத்தி ஷர்மா. எங்கள் ரீஜனல் ஆபீசின் அழகைக் கூட்டவென்றே வந்த தேவதை. நல்ல நெய் விட்டுப்பிசைந்த சப்பாத்தி மாவில் செய்த உடல். அழுதால் கூட அழகாயிருக்கும் ஜாதி. விருத்தர்கள் கூட கொஞ்சம் ஜொள்ளு விடுவார்கள் அவள் அழகில். அப்படிப் பட்டவள்மேல் எனக்கு ஆசை வராவிட்டால் எப்படி? வந்தது. அதுவும் எப்படி? பிரளயம் போல வந்தது.

என் அதிர்ஷ்டம் நானும் அவளும் பக்கத்துப் பக்கத்து சீட். அவள் அழகை கண் பருகிட அவள் அணியும் சென்ட்டை நாசி முகரும் அளவுக்குப் பக்கத்து சீட். ஆனால் என் கண்கள் பல சமயங்களில் அத்துமீறும். ஆனால் பஞ்சாபி பெண்களுக்கே உரிய ஒரு சாதுர்யத்துடன் ப்ரீத்தி அந்த அத்துமீறல்களை சமாளிப்பாள். சில சமயங்களில் வேலையில் சந்தேகம் என்றால் என்னிடம் வருவாள். ரொம்ப dangerously close ஆக நின்று கேட்டுக் கொள்வாள். அந்த சமயங்களில் என் கண்கள் செருகி வாய் குளறும். பெண்மைக்கு இப்படி ஒரு நறுமணமா? நக்கீரரிடம் தான் கேட்க வேண்டும்.

சந்தேகங்களைத் தெளிவித்தால் ஒரு கொலைகாரப் புன்னைகை புரிந்து " வெங்கட் ஜி, ஷுக்ரியா"’ என்று  சங்கீதம் பாடுவாள்.

அவள் மீது பைத்தியமானேன். இரவு பகல் அவள் நினைவானேன். அவள் ஆபீஸ் உள்ளே நுழையும் பொழுதே, என் நாஸி அவள் மணத்தை அறிவிக்கும். என் உடலின் ஒவ்வொரு செல்லும் ப்ரத்யேகமாக அவளுக்காக உயிர்த்துக் காத்து நிற்கும். "‘வெங்கட் ஜி, அந்தப் பென்சிலைக் கொஞ்சம் கொடுக்கிறீர்களா?" என்று ரொம்பவும் லோகாயதமாகக் கேட்டால் கூட கனவில் காஷ்மீர் சென்று டூயட் பாடுமளவுக்குப் பைத்தியமானேன்.

காதல் சீன் ஆரம்பித்தால் வில்லன் வர வேண்டுமே? வந்தான் ராஜ்குமார். அவனுக்கும் ப்ரீத்தி மீது ஒரு கண் என்று புரிந்து கொண்டேன். ஆனால் என்னால் ஒன்று சொல்லவோ செய்யவோ முடியவில்லை. அவன் என்னை விட சீனியர் பொசிஷன். அதைப் உபயோகப்படுத்தி ப்ரீத்தியை தன் டிபார்ட்மெண்டுக்கு மாற்றினான்.

என்னை வஞ்சம் தீர்ப்பது என்ற முடிவுடன் இருப்பவன் போல செயல்பட்டான். சர்க்கரையைச் சுற்றும் எறும்பு போல ஆனான். அவளை பிளாட்டிங் பேப்பர் இங்கை உறிஞ்சுவது போல என்னிடமிருந்து பிரித்தான். இதெல்லாம் கூட வருத்தமில்லை எனக்கு. ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப் பின்னும் என்னை பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிப்பான். அது தான் ரொம்பவும் பாதித்தது.

என் மனநிலை ரொம்ப பாதித்தது. அவன் ஏதோ என் மனைவியையே என்னிடமிருந்து பிரித்துவிட்டது போலானேன். எந்த வேலையிலும் மனம் ஒருநிலை கொள்ள மறுத்தது. அவனிடம் என் கோபத்தைக் கொட்டினால்தான் என் உயிர் பிழைக்கும் போல தோன்ற ஆரம்பித்துவிட்டது.

ஒரு நாள் பொறுமை எல்லை கடந்தது. ரிக்கார்ட் ரூமில் ஒரு நாள் அவன் என்னிடம் வசமாகச் சிக்கினான். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுதான் தருணம் என்று அங்கேயே வைத்து அவனை கேட்டே விட்டேன். கல்யாணமான உனக்கு இந்த வேலை எதுக்கு என்று கேட்டேன். ஏன் என்னை மாதிரி ஒரு பேச்சிலர் வாழ்க்கையில் புகுந்து நாசமாக்குகிறாய் என்று கேட்டேன். இன்னும் என்னென்னமோ கேட்டேன். ஒரு சில கேட்கக் கூடாதவையும் கேட்டேன். என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முகமெல்லாம் சிவந்து கண்கள் பெரிதாகி மூச்சு திணறலாக வந்தது.

இத்தனை effect கொடுத்து நான் கேட்டும், என் நிலைமை அவனை பாதிக்கவில்லை என்றே தோன்றியது. ராஜ்குமார் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தான். 'என்னை என்ன செய்துவிட முடியும் உன்னால்' என்று சொல்லாமல் சொன்ன பார்வை. அந்தப் பார்வையில் நான் உடைந்தேன். அவன் எதிரிலேயே அந்த ரிகார்ட் ரூமிலேயே நான் அழுதேன். எதையோ முக்கியமானதைத் தொலைத்து விட்டவன் போல அழுதேன். என் உள்ளே அடைந்து கிடந்த உணர்ச்சிகள் எல்லாம் நீராக உருமாறி என் கண்கள் வழியாக வந்தது போல அழுதேன். ஆனாலும் அவன் ஏளனப் பார்வை மாறவில்லை.

அதற்குப் பிறகு நடந்தவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன். நான் தில்லியிலிருந்து சென்னை மாற்றல் கேட்டு வந்தேன். சென்னையிலும் ரீஜனல் ஆபீஸ்தான். தில்லியின் அந்தச் சோகப் பக்கங்களை மறக்க முயற்ச்சித்தேன். ப்ரீத்தியை மறக்க வெகு நாட்கள் பிடித்தது. ஆனால் ராஜ்குமார் நெஞ்சின் ஆறாத ரணமானான்.

அப்படிப்பட்ட சோகமயமான நாட்களில் என் சோகத்தை அதிகம் பண்ணவே என்பது போல ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் சென்னை ஆபீசுக்கு ராஜ்குமார் மாற்றலில் வந்தான். ‘அதே வேகம். அதே ஹீரோயிசம். "ஹாய், வெங்கட்" என்று எனக்குக் கை குடுக்க வந்தான். ஆனால் நான் அவனிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. கையும் கொடுக்கவில்லை. அவன் முகம் கறுத்தது. அதனால் எனக்கென்ன? இவனிடம் எனக்கென்னப் பேச்சு?

அப்புறம் வந்த நாட்களில் என்னால் முடிந்த வரையில் அவனைத் தவிர்த்தேன். நாங்கள் இருவரும் மட்டும் தனித்திருக்கும் வாய்ப்பு வராதபடிக்குப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கும் அது புரிந்தது. ஒவ்வொரும் முறையும் அவன் முகம் கறுக்கும். கண்களில் ஒருவித சோகம் இழையோடும். ஆனாலும் என்னைச் சீண்டாமல் ஒதுங்கியே இருந்தான்.

இப்படி இருக்கும்போது தான் எனக்கு பெண் பார்த்தார்கள். ப்ரீத்தி சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் பற்றிய நினைவே வேண்டாம் என்று இருந்த எனக்கு, இது பிடிக்கவேயில்லை. அதற்குக் காரணம் அப்படியென்ன அப்சரஸ் பெண்ணைப் பார்த்துவிடப் போகிறார்கள்? குண்டாக கருப்பாக என்னைப் போலவே ஒரு பெண் இருப்பாள்! சே! இருந்தும் பெற்றோர் கட்டாயத்தில்  வேண்டா வெறுப்பாக பெண்ணைப் பார்க்கபோன எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சுசீலா என்ற பெயரில் ஒரு இன்ப அதிர்ச்சி.

அம்மா! என்ன ஒரு அழகு! என்ன ஒரு களை! என்ன கலர்! திடீரென்று காலண்டரில் இருந்து மகாலட்சுமி இறங்கி வந்தாற்போல இருந்தாள். இவள் எனக்கா? எனக்கே எனக்கா? சந்தேகமாகவும் உள்ளுக்குள் அழுகையாகவும் வந்தது. சுமார் அரை மணி நேரம் கழித்து நாங்கள் கிளம்பினோம். என் வீட்டவர்களுக்கும் நம்பிக்கை இல்லை.

இரண்டு நாள் கழிந்தது. சுசீலா வீட்டிலிருந்து போன். அவர்களுக்கு okவாம்! சொர்க்கத்தில் மிதந்தேன் நான்.

மளமளவென்று வேலைகள் நடந்தேறி எங்கள் திருமணமும் முடிந்தது. உடனேயே ஹனிமூனுக்குக் காஷ்மீர் சென்றோம். நிம்மதியான சந்தோஷமான பத்து நாட்கள்.

அது முடிந்து ஒரு திங்கட்கிழமை ஆபீஸ் சென்றேன். கையில் திருமண ஆல்பம். அது என் ஆபீஸ் நண்பர்களுக்குக் காட்டத் தான் என்று நீங்கள் நினைத்தால் பாவம் அப்பாவி நீங்கள். அது என் எதிரிக்குக் காட்டுவதற்காக. ராஜ்குமாருக்குக் காட்டுவதற்காக.

‘'பாருடா! எவ்வளவு அழகான மனைவி! நான் எப்பவும் தோற்கமாட்டேன்' ‘ என்று சொல்வதற்காக.

லஞ்ச் டைமில் சாப்பிட்டுகொண்டிருந்த போது ராஜ்குமாரும் வந்தான் தன் லஞ்ச் பாக்ஸுடன். என்னிடம் எதுவும் பேசவில்லை. சற்று சோர்ந்தவன் போலிருந்தான். சரி இன்று எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனாலும் என்னால் என்னை அடக்க முடியவில்லை. அந்த ஆல்பத்தை அவன் பக்கம் நகர்த்தினேன். அட்டையில் இருந்த சுசீலா படத்தைக் காண்பித்து ‘my wife’ என்றேன் வெற்றித்தொனியில். ராஜ்குமார் அந்த ஆல்பத்தையே வெறித்துப் பார்த்தான்.

அப்போதுதான் அது நடந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த ராஜ்குமாரின் வாய் கோணியது. உடல் விதிர்விதிர்த்தது. ‘என்ன ஆச்சு’ என்று கேட்பதற்குள் பேச்சு மூச்சின்றி மயங்கினான்.

பதறிப்போய் நாங்கள் எல்லாம் அவனை ஆஸ்பிட்டல் எடுத்துச் சென்ற பிறகே தெரிந்தது அவனுக்கு மாஸிவ் அட்டாக் என்று. ஒன்றும் பயனில்லாமல் அவன் அன்று மாலையே மாண்டுபோனான். எல்லாருக்கு பெரிய அதிர்ச்சி!

அன்றிரவு வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆனது. சுசீலா தூங்காமல் காத்திருந்தாள். வெளியில் இருந்தபடியே 'கால் அலம்ப தண்ணீர் கொண்டு வா' என்றவனிடம் ‘'என்ன ஆச்சு?'’ என்று  கேட்டாள்.

நான் உள்ளே சென்று அவளுக்கு விவரம் சொன்னவுடன் அதிர்ந்தாள். "அங்கிள் போயிட்டாரா?"’ என்று அலறினாள். ‘அங்கிளா?’ என்று குழம்பிய எனக்கு அவள் சொன்னதன் சாரம்.

சென்னையில் அவள் வீட்டுக்கு அருகில் தான் ராஜ்குமார் வீடாம். அவனும் இவள் தந்தையும் மார்னிங் வாக் நண்பர்களாம். அப்போது தான் தரகர் என் ஜாதகம் கொண்டுவந்து தந்தபோது என் பேங்க் பேரைப் பார்த்ததும் இவள் தந்தை அவனிடம் போய் கேட்டாராம்.

'பையன் ரொம்ப நல்லவன். பார்க்க சுமாராயிருந்தாலும் நல்ல அறிவாளி. நிறைய ப்ரோமோஷன் வாங்கி உயர்ந்த நிலைக்குப் போவான்' என்று ராஜ்குமார் என்னைப் பற்றி கொடுத்த certificate தான் அவர்கள் என்னைப் பெண் பார்க்கக் கூப்பிட்டதுக்கும் பின்னர் சம்மதம் தெரிவித்ததுக்கும் காரணமாம்.

கல்யாணத்துக்கு அழைத்தபோது தான் அவன் சொன்னானாம் தனக்கும் எனக்கும் சிறிய மனஸ்தாபம். அதனால் தான் வரவில்லை என்றும் ஓரிரு மாதம் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்து பார்ப்பதாகவும் சொன்னானாம்.

எனக்குத் திகைக்கக் கூட நேரம் தராமல் அவன் வீட்டுக்குப் போக வேண்டும் என்றாள் சுசீலா. ஒருவாறு சமாதானப்படுத்தி அவளைத் தூங்கச் செய்தேன். அடுத்த நாள் காலையில் கூட்டிச் சென்றேன்.

ராஜ்குமார் வீட்டில் நிறையக் கூட்டம். அவனது உறவினர்கள் மற்றும் எங்கள் ஆபீஸ் நண்பர்கள் என்று. வீட்டின் ஹாலில் நடுவே அவனைக் கிடத்தியிருந்தது. சுசீலா பெரிதாக அழுதாள். நான் அவன் முகத்தைப் பார்த்தேன்.  அவர் அப்படியொன்றும் மோசமானவர் இல்லை போலத் தோன்றியது.

எனக்குள்ளும் அழுகைப் பீறிட்டது. நானும் பெரிதாக அழுதேன்.

Sunday, February 16, 2014

டோலி


டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது. இரண்டு நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் மனதில் ஊஞ்சலாடியது.

கரோல் பாக் வரை ஒரு வேலையாக மனைவி  சுஜாதாவுடன் சென்றேன். நல்ல வெய்யில். எல்லாம் எங்கள் தலையில். ஒரு கட்டத்தில் வெப்பம் தாளாது மயங்கி கிழே விழுந்து விட்டேன். நினைவு தப்பி விட்டது. (இதெல்லாம் அப்புறம் சுஜா சொன்னது). போதாதற்கு  தலையில் ஒரு மாங்காய் அளவுக்கு வீக்கம். மிகுந்த தைரியசாலியான சுஜாவையே உலுக்கி வைத்து விட்டது. உடனே என் மன்னி, மற்றும் என் அண்ணன் மகன் துணையுடன் என்னை ஒரு ஆசுபத்திரியில் சேர்த்தாள். தில்லியில் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் என் உடன் பிறவா சகோதரன் பவன் குமார் கூடவே இருந்ததது  சுஜாவுக்கு சற்று தைரியமாக இருந்தது. அன்றிரவு ஜம்மு போக வேண்டிய பயணம் தப்பியது. ஆறு மாத கனவாக இருந்த வைஷ்ணோ தேவி பயணம் கனவாகவே இருந்து விடுமா? அன்னையிடமிருந்து அழைப்பு வரவில்லையா? மனம் கதறியது. குழம்பியது. கண்ணீர் பெருகியது.

CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் என் மீது அன்பு வைத்த நெஞ்சங்கள் நூறு முறை செத்து பிழைத்தன. என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி (அவர்கள் குடும்பமும் ஜம்மு வந்திருந்தது) ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வருவதற்காக.(தன் உடல் உபாதைகளை மறந்து) பனிரெண்டு கிலோ மீட்டரும் நடந்தே வருவதாக வேண்டி கொண்டாள். என் மைத்துனர்கள் இருவரின் கண்ணீர் கதறல்கள் என் நெஞ்சை அறுத்தன. என் மன்னி மற்றும் என் அண்ணன் மகன் முகமும பயத்தில் உறைந்திருந்தது. அனைவரின் அன்பும் அன்னையின் அழைப்பும் சேர்ந்து ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வந்தது. நான் புதியதாக பிறந்தது போல் உணர்ந்தேன். உடனடியாக மன்னி உதவியுடன் தில்லியிலிருந்து ஜம்மு விமானத்தில் பதிவு செய்து மறு நாளே ஜம்மு போய் சேர்ந்தேன். அங்கு என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி, சுஜாவின் அக்கா அவள் கணவர் மற்றும் அவர்கள் குழந்தைகளின் அன்பு மழையில் நனைந்தேன்.  அன்று ஓய்வு எடுத்து மறு நாள் கட்டரா போய் சேர்ந்தோம். குதிரை சவாரியை மருத்துவர் வேண்டாம் என்று சொல்லி இருந்ததாலும், நடப்பதற்கு ஆயாசமாக இருந்ததாலும், எனக்கு ஒரு டோலியை ஏற்பாடும் செய்தார்கள். ஆறு கிலோமீட்டர் வரை நான்கு பேர் என்னை தூக்கிச் செல்வார்களாம். அப்போது தான் டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது.

வேறு வழியில்லாமல் டோலியில் அமர்ந்து பயணம் துவங்கினேன். ‘ஜெய் மாதா தீ ‘ என்ற சப்தம் அந்த மலையையே நிறைத்தாலும் என் மனம் என்னமோ கனத்தது. மனிதன் மனிதனை சுமப்பதா? என்ன அநியாயம்? முள் மேல் அமர்ந்தது போல உணர்தேன் நெளிந்தேன் . என் சுமை அங்கும் இங்கும் நகர்வது உணர்ந்து முன்னால் இருந்த இருவரில் ஒருவர் ‘என்ன ஆச்சு பாபுஜி ? (ஹிந்தியில் தான்) என்று கேட்க, நான் என் மனக்குமுறலைச் சொன்னேன்.

டோலியை சற்று தூரம் சென்று பின்னர் இறக்கி வைத்தார்கள். முகத்தில் வழிந்த வியர்வையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டுவிட்டு என்னைப்பார்த்து அவர் சொன்னார் “ பாபுஜி, என் குடும்பம் பெருசு. எனக்கே மூன்று குழந்தைகள். இதில் போன மாதம் என் தம்பி ஒரு விபத்தில் இறந்து போக, அவன் குடும்ப பராமரிப்பும் என் கடமையானது. அவன் மனைவி, மற்றும் அவன் இரு குழந்தைகளும் என் குடும்பத்துடன் தான் வசிக்கிறார்கள். என்னைப் போலவே மற்ற பேர்களுக்கும் அவரர் பிரச்சனைகள். இத்தனை சுமைகளை சுமக்கும் எங்களுக்கு உங்கள் சுமை ஒரு சுமையே இல்லை.  உங்களைப் போன்றவர்களை அண்டியே எங்கள் வாழ்க்கை ஓடுகிறது. இதைப் பற்றியெல்லாம் யோசித்துக் குழம்பாமல் தயவு செய்து வசதியாக உட்கார்ந்து வாருங்கள்” என்று சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு நான் பிரமித்தேன். “ ஜெய் மாதா தீ” என்று என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன. தெளிந்த மனதுடன் டோலியில் ஏறி உட்கார்ந்தேன். மனம் லேசாகி இருந்தது. டோலியை தூக்கிய பின் அவர் ஒரு முறை சடக்கென்று என்னை திரும்பிப் பார்த்தார். ஆச்சரியமாக.

லேசானாது என் மனசா? இல்லை என் உடலா?

“ஜெய் மாதா தீ”




Ghost Writer


“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபல anchor விமல்  சொன்னதும், சொல்லிக்கொடுத்தது போல பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சேர கை தட்டினார்கள்.

டிவி கேமரா இளம்புயல் முகத்தில் மையம் கொண்டது. சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சுருள் முடி, தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கே உரிய மெல்லிய நறுக்கி விடப்பட்ட மீசை. இரண்டாவது முறை பார்த்தால் வசீகரிக்கும் முகம். நிரந்தரத் தேடலில் அலைபாயும் கண்கள்.வெகு நேரம் தன்னை கேமரா பார்த்ததில் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன் போல ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, கை கூப்பி வணங்கினான்.

‘மிஸ்டர் இளம்புயல்! முதலில் உங்கள் சமீபத்திய புதினம் ‘விலை’யின் மகத்தான வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள். அதைப் பற்றிய அனுபவங்களை சற்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்ற டிவி நிருபரை பார்த்து ‘தாராளமாக’ என்றான் இளம்புயல்.

“இதுவரை பெரிய வெற்றி என்று எதுவும் பார்காத எனக்கு இந்தப் படைப்பின் வெற்றி ஆச்சரியத்தைக் கொடுத்தது என்பதைவிட விடா முயற்சி வெற்றி தரும் என்னும் முதியோர் சொல்லின் உண்மையை உணர்த்தியது என்றே சொல்லலாம். என் ஏழு மாத உழைப்பின் பலன்.

இளம்புயல் என்ன சாதித்தான் என்று கூசாது குற்றம் சாட்டிய வாய்களுக்கெல்லாம் நான் போட்ட பூட்டு தான் இந்த ‘விலை’. என் அடிப்படை எழுத்து நடையை சற்று மாற்றி நான் செய்த experimental work இது. என் அடையாளம். இது போல இனி என்னாலேயே எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஒரு நெடு நாளைய கனவின் வெளிப்பாடு இது” என்றான் இளம்புயல்.

“ஆனால் இது நீங்கள் எழுதியதே இல்லை என்றும், இதனை வேறு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வதந்தி உலவுகிறதே, அது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்ட டிவி anchor விமலை இளம்புயல் எரித்து விடுவது போல் பார்த்தான்.

“சுற்றி வளைத்து ஏன் கேட்கிறீர்கள் விமல்? எழுத்தாளர் சந்திரமதி என்று நேரடியாக அவர் பெயரைச் சொல்வதுதானே?” என்றான்.

“இல்லை...” என்று ஆரம்பித்த விமலை மேலும் பேச விடாமல் அவனே தொடர்ந்தான். “ சந்திரமதி வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. இந்த யுகத்தின் பரிசு. அவரின் தாக்கம் இல்லாத எழுத்தாளர்களைக் காட்டுங்களேன் பார்க்கலாம். அவரால் inspire ஆன பல இளைஞர்களில் நானும் ஒருவன். அவரின் சாயல் என் எழுத்தில் இருக்கலாம். இருக்கும். இருக்க வேண்டும். சிவாஜி சாரைப் போல நடிக்க முயலாத நடிகர் உண்டா? அது போலத் தான் இதுவும். இந்த வதந்திக்கு இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். ‘விலை’ என் படைப்பு. என் உழைப்பின்  பலன். என் கனவுகளின் வெளிப்பாடு. இதனை யாரும் எனக்காக ghost write செய்யவில்லை” என்று ஆத்திரத்துடன் சொல்லி முடித்தான்.

விமல் பார்வையாளர்கள் பக்கம் திரும்பி “யாரும் எதுவும் கேள்வி கேட்க விரும்பினால் கேட்கலாம்” என்றான்.

அடுத்து பார்வையாளர் தங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன்னமே டிவியை mute செய்தார் எழுத்தாளர் சந்திரமதி. பின்னர் அந்த ரிமோட்டை தன் அருகில், ஒரு  தூக்கியெறிந்த பூமாலையைப் போல் கசங்கலாகப் படுத்தக் கிடந்த அந்த அழகியப் பெண்ணின் வயிற்றின் மேல் வைத்தார். கட்டில் அருகில் இருந்த டேபிளில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி தன் உதடுகளிடையே பொருத்தினார். இதற்காகவே காத்திருந்தவள் போல் அந்தக் கசங்கிய பூமாலை சட்டென்று எழுந்து லைட்டரால் அதற்கு நெருப்பூட்டினாள்.

சந்திரமதி சிகரெட்டின் புகையை உள்வாங்கி நுரையீரல் எல்லாம் நிறைத்து பின் வாய் வழியே வளையமாக வெளியேற்றினார். அவர் கண்கள் அவளைத் தலை முதல் கால் வரையில் கணக்கெடுத்தது.

‘என்ன பாக்குறீங்க?” என்றாள் அவள்.

“உனக்கு அந்த ‘விலை’ அதிகமோன்னு பாக்குறேன்” என்றார் கொஞ்சலாக.

“பாப்பீங்க பாப்பீங்க, கெழட்டுச் சிங்கத்துக்கு யோசனை போகுது பாரு” என்று சொல்லியபடியே சந்திரமதியின் உடல் மீது காமத்துடன் படர்ந்தாள்.
அனிச்சையாக அவர் கண்கள் டிவியின் பக்கம் சென்றது. அங்கே அந்த கசங்கிய பூமாலையின் கணவன் எழுத்தாளர் இளம்புயல் தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தது இவர்கள் இருவரின் காதுகளிலும் விழவில்லை.



Wednesday, February 12, 2014

மூணு லட்சத்து நானூற்று ஐம்பது ரூபாய் கொள்ளை !


கௌசி ஏறும் ஸ்டாப் வந்ததும் பாலாஜி ட்ராவல்ஸ் வேன் நின்றது. வழக்கம் போல கௌசி இல்லை. டிரைவர் என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தார். நான் என் செல் போன் எடுத்து அவள் நம்பரை அழைத்தேன். இதோ வெங்கட்! டூ மினிட்ஸ்என்ற கௌசி ஐந்து நிமிடம் கழித்துத் தான் வந்தாள்.

நாங்கள் எல்லாரும் தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் குடியிருப்பவர்கள். அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் தனியார் துறைகளிலும் வேலை செய்பவர்கள். பஸ் வசதி அதிகம் இல்லாத மாடம்பாக்கத்தில் எங்கள் வீடுகள் இருந்தன. அதனால் ஆபீஸ் சென்று வர என்று ஒரு வேன் ஏற்பாடு செய்து அதில் போய் வந்து கொண்டிருந்தோம்.

கௌசி தனியார் கம்பனியில் நல்ல வேலையில் இருந்தாள். ஆனால் அவள் வீடு மாடம்பாக்கத்தில் அல்ல. பள்ளிக்கரணை செல்லும் வழியில் ஒரு பெரிய அபார்ட்மென்ட் அருகில்  ஒரு தனி வீடு t. ஒரு நாள் தற்செயலாக எங்கள் வேனை அவள் வீட்டு வாசலில் நிறுத்தி விசாரித்தாள். ஒரு சீட் காலியாக இருந்ததால் அவளையும் எங்கள் வேன் மெம்பராக்கிக் கொண்டோம்.

கௌசி மிகவும் நல்ல பெண். அவளைக் கண்ட மாத்திரத்தில் எனக்குப் பிடித்து விட்டது. அவள் அழகாக இருந்தாள் என்பது உபரியான போனஸ். எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. எனக்குப் பிடித்ததெல்லாம் அவளுக்கும் பிடித்திருந்தது ஒரு ஆச்சரியம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது அதை விட ஆச்சரியம். திரைப்படமோ பாடலோ கதையோ எங்கள் இருவருக்கும் நடக்கும் argument/discussions அந்த வேனே வேடிக்கைப் பார்க்கும்.

அவளிடம் இருந்த ஒரே மைனஸ் பாயிண்ட் நேரத்துக்கு ஸ்டாண்டில் நிற்காதது. எப்படி இருந்தாலும் அவளுக்காக வேன் ஒரு ஐந்து நிமிஷம் நிற்கும்படி செய்து விடுவாள்.

அப்படி ஒரு நாள் வேன் நிற்கும் போதுதான் அந்த பொம்மை விற்பவரைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் சிறியது பெரியதுமாய் அழகான பொம்மைகள். மண், பிளாஸ்டிக், மரம் என்று விதவிதமாய். அந்த மனிதருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும். பளிச்சென்ற முகம். நெற்றியில் பட்டையாய் விபூதி. சுத்தமான சட்டை வேஷ்டி. அந்த வண்டியை  கௌசி வீட்டுக்கும் பக்கத்திலிருந்த அபார்ட்மெண்டுக்கும் இடையில் இருந்த காலி இடத்தில் நிறுத்தியிருந்தார்.

அதற்குள் கௌசி வந்து விடவே வேன் புறப்பட்டது. நான் அவரை மறந்து போனேன். மறு நாள் திரும்பவும் வேன் அங்கு நின்றபோது மீண்டும் அவரைப் பார்த்தேன். அவரைப்பற்றிய சிந்தனை ஓடியது. யார் இவர்? பார்த்தால் படித்தவர் போலிருக்கிறது. ஏன் இந்த வேலை செய்கிறார்? வீட்டில் ஏதாவது பிரச்சனையா? என்று மனம் பலவாறு சிந்தித்தது. திடீரென்று ஒரு உள்ளுணர்வு உந்த நான் சுயநினைவுக்கு வந்தபோது தான் கவனித்தேன் அவர் என்னைப்பார்த்து புன்னகைப்பதை. மிகவும் சிநேகமான புன்னகை. பதிலுக்கு நானும் ஸ்மைல் செய்தேன். கௌசி வந்துவிட்டாள். நாங்கள் புறப்பட்டோம்.
இப்படி எங்கள் நட்பு புன்னகையால் வளர்ந்தது. என்னமோ அவரைப் பார்த்தால் அந்த நாள் நன்றாக போவது போல் பிரமை.

இப்படி இருக்கையில் ஒரு நாள். கௌசி லேட். கேட்டால் பத்து நிமிடம் ஆகுமென்றாள். டிரைவர் வண்டியை off செய்து விட்டார். நான் பொம்மை விற்பவரைப் பார்த்து புன்னகைத்தேன். திடீரென்று ஏதோ ஒரு எண்ணத்தில் வண்டியை விட்டு இறங்கி அவரை நோக்கிச் சென்றேன். அதைப்பார்த்த அவர் மீண்டும் ஒரு முறை புன்னகைத்தார்.

வாங்க சர்! I am சாம்பசிவம்என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் என் பெயர் சேகர் என்றேன். இந்த பொம்மை என்ன விலை என்று ஒரு பொம்மையைக் காட்டிக் கேட்டேன். “ Fifty rupees சர்! தரட்டுமா?” என்று கேட்டு விட்டு என் பதிலுக்குக் காத்திராமல் அதை எடுத்து ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு நூலால் சுற்றி என் கையில் தந்தார்.

நான் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவரிடம் தந்தேன். “Change இல்லை சர், நீங்கள் நாளைக்குக் கொடுங்கள். பரவாயில்லைஎன்றார்.

இல்லை இல்லை. நான் முதல் போணி போல இருக்கு. நீங்க இத வச்சிக்கிட்டு நாளைக்கு பாக்கியக் கொடுங்கஎன்றேன். சரி என்று ஒரு புன்னைகையோடு அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

அரக்கப்பரக்க கௌசி வந்ததும் வேன் புறப்பட்டது. அன்றைக்கு ஆபீஸ் சென்ற பின் சுமார் பனிரெண்டு மணிக்கு கௌசியின் போன் வந்தது.
வெங்கட்! உடனே என் ஆபீஸ் வந்து என்னக் கூட்டிக்கிட்டு என் வீட்டுல கொண்டு விடுங்க. அர்ஜன்ட். வேற எதுவும் இப்போக் கேட்காதீங்க. நேர்ல சொல்றேன் என்றாள்.

சரியென்று லீவு சொல்லிவிட்டு  ஒரு ஆட்டோ பிடித்து அவள் ஆபீஸ் சென்று அவளையும் பிக்கப் செய்து கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றேன். அவள் பதட்டமாகவே இருந்தாள். எதுவும் பேசவில்லை.

சொல்ல மறந்து விட்டேனே! கௌசிக்கு அவள் அம்மாவைத் தவிர யாரும் இல்லை. ஒருவேளை அம்மாவுக்கு ஏதும் உடம்பு சரியில்லையோ? என்று நான் யோசிக்கும் நேரத்தில் அவள் வீட்டை அடைந்தோம். வாசலில் போலீஸ் வேன். நான்கைந்து போலீஸ்! இத்தனை அமர்களத்திலும் என் கண்கள் சாம்பசிவத்தைத் தேடின. அவரையோ அவர் வண்டியையோ காணவில்லை. ஆட்டோவை பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தோம். வீடே அலங்கோலமாயிருந்தது. அவள் அம்மா கன்னத்தில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தார்.

உள்ளே இருந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது அறிந்த விஷயம்: சுமார் ஒரு மணி நேரம் முன்னர் வாசல் கதவு தட்டப்பட்டதும் கௌசி அம்மா போய் திறந்திருக்கிறார். வாசலில் பொம்மை விற்பவர். கொஞ்சம் குடிக்க தண்ணி வேண்டும். என் வாட்டர் பாட்டிலை மறந்து விட்டேன் என்று சொன்னவரை உள்ள அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். இதற்குள் அவரைப் பின்தொடர்ந்து வந்த சாம்பசிவம் அவரிடம் ஒரு கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டார்!

விஷயம் அறிந்த கௌசியும் அழ ஆரம்பித்தாள். நான் சமாதானம் செய்துவிட்டு இன்ஸ்பெக்டரை விசாரித்தேன். யார் நீங்க?” என்று என்னைக் கேட்டார். விவரம் சொன்னேன். சர்! அவன் ஒரு மாசமா வீட்ட கவனிச்சிக்கிட்டு இருந்திருக்கான். மேடம் ஆபீஸ் போன பிற்பாடு அட்டாக் செஞ்சிருக்கான். மொத்தம் மூணு லட்சம் ரூபாய் நகை! நீங்க கவலைப்படாதீங்க. புடுச்சிர்வோம்என்றார்.

பின் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தோம். கௌசியோடு சிறிது நேரம் கழித்துவிட்டு நான் வீட்டுக்குச் சென்றேன்.

கௌசியை விசாரிக்கலாம் என்று bagல் வைத்த செல் போனை எடுக்க திறந்தபோது அந்த பொம்மை அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்துத் திறந்து பார்த்தேன். அந்த பொம்மை என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது

இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்தது. மொத்தம் மூணு லட்ச ரூபாய்!”.

அவருக்குத் தெரியாது பாவம். மொத்தம் மூணு லட்சத்தி நானூற்றைம்பது ரூபாய்என்று மனம் சொல்லியது.