Monday, February 3, 2014

இருக்கும் இடத்தைவிட்டு........


அண்ணே, விக்டர தாட்டி விட்டேண்ணே! பரிச்ச பதினொரு மணிக்குத்தா. நானும் என் சென்டருக்கு போய்ருவேண்ணேநீங்க கவலப் படாதீங்க, பரிச்ச முடிச்சு அங்ஙனேயே இருக்கச் சொல்லீருக்கேன். பாத்துக் கூட்டியாந்துர்றேன். சரியாண்ணே? அப்ப போன வச்சிரவாண்ணே?’ என்று முன்சீட்டில் அமர்ந்திருந்தவன் சப்தமாகப் பேசியதைக் கேட்டு லேசான உறக்கத்தில் இருந்த எழுத்தாளர் சாகர் கண் விழித்தார்.

சாகர் அவர் புனைப்பெயர். நிஜப்பெயர் சேகர். சும்மா ஒரு effectக்குத் தான் அந்தப் பெயர்! அவருக்குக் கதைகள் எழுதுவது தொழில் அல்ல. பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது அவர் வாழ்வின் ஒரு முக்கியமான வேலையாகிப் போய்விட்டது.

குறைந்த காலத்திலேயே ‘சிறுகதை மன்னன்’ என்று பெயர் வாங்கி விட்டார்.
காதல் கதைகள் அவரது ஸ்பெஷாலிட்டி. அதிலும் இறுதியில் ட்விஸ்ட் வைத்துக் கதை எழுதுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

போன மாதம் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு வாசகர் வட்டம் அவரது ஐம்பது சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போட முடிவு செய்தது. இன்று அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குப் போகத் தான் அவர் செங்கபட்டு பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிறார்.

அவரை விழாவுக்கு காரில் அழைத்து வருகிறேன் என்று ஒரு வாசகர் முன்வந்தார். இல்லை நான் பஸ்ஸில் வந்துவிடுகிறேன். நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று சாகர் நாசூக்காக மறுத்துவிட்டார்.

பிறர் காரில் போய்வரத் தயக்கம் என்று இல்லை. அவரிடம் ஒரு பழக்கம். பஸ்ஸிலோ ட்ரெய்னிலோ பயணம் செய்யும்போது சகபயணிகளைக் கவனிப்பதுதான் அது. ‘ஒவ்வொரு மனுசனும் ஒரு கதைப் பொஸ்தகம்யா’ என்று அடிக்கடிச் சொல்லுவார். ஒரு முறை எங்கேனும் பயணம் மேற்கொண்டால் ஒரு இரண்டு கதை தேறும்! அதனால் தான் இன்றும் பஸ்ஸில் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

போனில் சப்தமாகப் பேசியவனைக் கூர்ந்து கவனித்தார். ஒரு முப்பத்தி  ஐந்து வயது மதிக்கத்தக்க ஆள். இந்த வயதில் இவனுக்கு என்ன ‘பரிச்ச’ என்று யோசித்தார். ஒரு வேளை ஆர்மியில் வேலை செய்து ரிட்டையர் ஆகி இருப்பான். ஏதும் வங்கி வேலைக்கானத் தேர்வாய் இருக்கும் என்று அவர் எண்ண  ஓட்டம் சென்றது. ‘அண்ண’னிடம் போன் பேசியபிறகு அந்த ஆள் ஒரு புத்தகத்தில் மூழ்கிப்போனான். சிறிது நேரம் அவனையே கவனித்த சாகர் வெறுத்துப்போய் அவனிடம் கதை எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.

வேறு ‘களங்களை’த் தேடிய அவர் கண்களுக்கு அந்த ஜோடி தென்பட்டனர். 32 வயது மதிக்கத்தக்க ஆள். அவன் மனைவி சுமார் 24 வயது மதிக்கத்தக்கவளாக இருந்தாள். இவ்வளவு வயது வித்தியாசத்தில் ஏன் மணம் செய்து கொண்டார்கள் என்று சாகர் யோசித்தர்ர். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் இருந்த சீட்டில் இரு பெண்மணிகள் அமர்ந்திருந்தார்கள். அதில் நடுத்தரவயது பெண்மணியிடம் ஒரு குழந்தை இருந்தது. சுமார் இரண்டு வயதிருக்கும். இன்னொருவர் கிழவி. அந்த இளம் மனைவியின் அக்கா பாட்டியாக இருக்கும் என்று யூகித்தார்.

அவன் மனைவிடம் மிகுந்த காதல் கொண்டவன் போலும். அவளை விட்டு விலகி கூட நிற்க முடியவில்லை. மிகவும் நெருக்கமாக அவர்கள் உடல்கள் உரசிக்கொண்டிருந்தன. அந்தப் பெண் முகத்தில் வெட்கம். இவன் யாரும் பார்க்காதபோது (இது அவன் நினைப்பு!) அவளைச் சீண்டிக்கொண்டிருந்தான். அவள் இடுப்பில் கை வைப்பதும் கிள்ளுவதும் அவள் கைகளை விலக்கி விடுவதும்  என்று ஒரு இளமைப் போர் நடந்துகொண்டிருந்தது.

சாகர் மெய்மறந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து குழந்தையை வைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி திடீரென்று அவன் பக்கம் திரும்பி, “ஏங்க மாமா, இவனைச் சித்த நேரம் வச்சிக்கிங்க. எனக்கு கையெல்லாம் நோவுது.” என்று சொல்லி அவனிடம் குழந்தையைக் கொடுத்தாள். பின்னர் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியிடம் “தாயி! நீ கொஞ்சம் நெருங்கி உக்காருமா. என் தங்கச்சியும் சித்த நேரம் உக்காரட்டும்” என்று சொல்லிவிட்டு அந்த இளம் பெண்ணிடம் “செல்வி, உக்காருடி நீயும்” என்றாள்.

சாகர் வாய்பிளந்தார். “ஆஹா! சூப்பர் கத மாட்டிகிச்சி! ஆருகிட்ட என்ன கத இருந்தாலும் கண்டு புடிச்சுடுவோம்ல! ” என்று மனதுள் ஆர்பரித்தார். அப்போது அவர் செல்போன் சிணுங்கியது. எடுத்துப்பார்த்தால் மறுமுனையில் அவர் மனைவி ராஜம்.

“என்ன ராஜம், என்ன விசயம் சொல்லு? இப்பத்தான் பஸ்ஸுல
உக்காந்துக்கிட்டுருக்கேன்” என்றார்.

மறுமுனையில் ராஜம் பெருங்குரலில் “ இந்தக் கதயக் கேட்டீங்களா! நம்ம மவன் ராசு பக்கத்து ஊட்டுல கல்யாணி இல்ல கல்யாணி? அத்தக்கூட்டிக்கிட்டு எங்கேயோ ஓடிட்டானாம். அந்தக் கல்யாணிப் பொண்ணு ஊட்டுல லட்டரு எளுதி வச்சிட்டுப் போயிருக்காம். அத்த எடுத்துக்கிட்டு அவ ஆயி அப்பன் நம்ம ஊட்டுக்கு வந்து வாசல்ல நின்னு சத்தம் போடறாங்க. ஏங்க, அந்த மீட்டிங்கெல்லா வேணாம். சீக்கிரமா ஒரு ஆட்டோ புடிச்சி ஊட்டுக்கு வாங்க” என்றாள்.

ஒரு கணம் நிலைகுலைந்து போன சாகர் பஸ்சிலிருந்து கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து உட்கார்ந்தார். ஒரு தகப்பனாக மட்டுமல்ல ஒரு எழுத்தாளனாகவும் தான் தோற்றுவிட்டதாக அவர் மனதில் எண்ண அலைகள் எழுந்தன.




No comments: