கௌசி ஏறும் ஸ்டாப் வந்ததும் பாலாஜி ட்ராவல்ஸ் வேன் நின்றது. வழக்கம் போல கௌசி இல்லை. டிரைவர் என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தார். நான் என் செல் போன் எடுத்து அவள் நம்பரை அழைத்தேன். “இதோ வெங்கட்! டூ மினிட்ஸ்” என்ற கௌசி ஐந்து நிமிடம் கழித்துத் தான் வந்தாள்.
நாங்கள் எல்லாரும் தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் குடியிருப்பவர்கள். அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் தனியார் துறைகளிலும் வேலை செய்பவர்கள். பஸ் வசதி அதிகம் இல்லாத மாடம்பாக்கத்தில் எங்கள் வீடுகள் இருந்தன. அதனால் ஆபீஸ் சென்று வர என்று ஒரு வேன் ஏற்பாடு செய்து அதில் போய் வந்து கொண்டிருந்தோம்.
கௌசி தனியார் கம்பனியில் நல்ல வேலையில் இருந்தாள். ஆனால் அவள் வீடு மாடம்பாக்கத்தில் அல்ல. பள்ளிக்கரணை செல்லும் வழியில் ஒரு பெரிய அபார்ட்மென்ட் அருகில் ஒரு தனி வீடு t. ஒரு நாள் தற்செயலாக எங்கள் வேனை அவள் வீட்டு வாசலில் நிறுத்தி விசாரித்தாள். ஒரு சீட் காலியாக இருந்ததால் அவளையும் எங்கள் வேன் மெம்பராக்கிக் கொண்டோம்.
கௌசி மிகவும் நல்ல பெண். அவளைக் கண்ட மாத்திரத்தில் எனக்குப் பிடித்து விட்டது. அவள் அழகாக இருந்தாள் என்பது உபரியான போனஸ். எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. எனக்குப் பிடித்ததெல்லாம் அவளுக்கும் பிடித்திருந்தது ஒரு ஆச்சரியம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது அதை விட ஆச்சரியம். திரைப்படமோ பாடலோ கதையோ எங்கள் இருவருக்கும் நடக்கும் argument/discussions
அந்த வேனே வேடிக்கைப் பார்க்கும்.
அவளிடம் இருந்த ஒரே மைனஸ் பாயிண்ட் நேரத்துக்கு ஸ்டாண்டில் நிற்காதது. எப்படி இருந்தாலும் அவளுக்காக வேன் ஒரு ஐந்து நிமிஷம் நிற்கும்படி செய்து விடுவாள்.
அப்படி ஒரு நாள் வேன் நிற்கும் போதுதான் அந்த பொம்மை விற்பவரைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் சிறியது பெரியதுமாய் அழகான பொம்மைகள். மண்,
பிளாஸ்டிக்,
மரம் என்று விதவிதமாய். அந்த மனிதருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும். பளிச்சென்ற முகம். நெற்றியில் பட்டையாய் விபூதி. சுத்தமான சட்டை வேஷ்டி. அந்த வண்டியை கௌசி வீட்டுக்கும் பக்கத்திலிருந்த அபார்ட்மெண்டுக்கும் இடையில் இருந்த காலி இடத்தில் நிறுத்தியிருந்தார்.
அதற்குள் கௌசி வந்து விடவே வேன் புறப்பட்டது. நான் அவரை மறந்து போனேன். மறு நாள் திரும்பவும் வேன் அங்கு நின்றபோது மீண்டும் அவரைப் பார்த்தேன். அவரைப்பற்றிய சிந்தனை ஓடியது. யார் இவர்? பார்த்தால் படித்தவர் போலிருக்கிறது. ஏன் இந்த வேலை செய்கிறார்?
வீட்டில் ஏதாவது பிரச்சனையா?
என்று மனம் பலவாறு சிந்தித்தது. திடீரென்று ஒரு உள்ளுணர்வு உந்த நான் சுயநினைவுக்கு வந்தபோது தான் கவனித்தேன் அவர் என்னைப்பார்த்து புன்னகைப்பதை. மிகவும் சிநேகமான புன்னகை. பதிலுக்கு நானும் ஸ்மைல் செய்தேன். கௌசி வந்துவிட்டாள். நாங்கள் புறப்பட்டோம்.
இப்படி எங்கள் நட்பு புன்னகையால் வளர்ந்தது. என்னமோ அவரைப் பார்த்தால் அந்த நாள் நன்றாக போவது போல் பிரமை.
இப்படி இருக்கையில் ஒரு நாள். கௌசி லேட். கேட்டால் பத்து நிமிடம் ஆகுமென்றாள். டிரைவர் வண்டியை off செய்து விட்டார். நான் பொம்மை விற்பவரைப் பார்த்து புன்னகைத்தேன். திடீரென்று ஏதோ ஒரு எண்ணத்தில் வண்டியை விட்டு இறங்கி அவரை நோக்கிச் சென்றேன். அதைப்பார்த்த அவர் மீண்டும் ஒரு முறை புன்னகைத்தார்.
“ வாங்க சர்! I am சாம்பசிவம்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் என் பெயர் சேகர் என்றேன். இந்த பொம்மை என்ன விலை என்று ஒரு பொம்மையைக் காட்டிக் கேட்டேன். “
Fifty rupees சர்! தரட்டுமா?” என்று கேட்டு விட்டு என் பதிலுக்குக் காத்திராமல் அதை எடுத்து ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு நூலால் சுற்றி என் கையில் தந்தார்.
நான் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவரிடம் தந்தேன். “Change இல்லை சர், நீங்கள் நாளைக்குக் கொடுங்கள். பரவாயில்லை” என்றார்.
“இல்லை இல்லை. நான் முதல் போணி போல இருக்கு. நீங்க இத வச்சிக்கிட்டு நாளைக்கு பாக்கியக் கொடுங்க”
என்றேன். சரி என்று ஒரு புன்னைகையோடு அதை வாங்கி வைத்துக் கொண்டார்.
அரக்கப்பரக்க கௌசி வந்ததும் வேன் புறப்பட்டது. அன்றைக்கு ஆபீஸ் சென்ற பின் சுமார் பனிரெண்டு மணிக்கு கௌசியின் போன் வந்தது.
“வெங்கட்! உடனே என் ஆபீஸ் வந்து என்னக் கூட்டிக்கிட்டு என் வீட்டுல கொண்டு விடுங்க. அர்ஜன்ட். வேற எதுவும் இப்போக் கேட்காதீங்க. நேர்ல சொல்றேன் “ என்றாள்.
சரியென்று லீவு சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அவள் ஆபீஸ் சென்று அவளையும் பிக்கப் செய்து கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றேன். அவள் பதட்டமாகவே இருந்தாள். எதுவும் பேசவில்லை.
சொல்ல மறந்து விட்டேனே! கௌசிக்கு அவள் அம்மாவைத் தவிர யாரும் இல்லை. ஒருவேளை அம்மாவுக்கு ஏதும் உடம்பு சரியில்லையோ? என்று நான் யோசிக்கும் நேரத்தில் அவள் வீட்டை அடைந்தோம். வாசலில் போலீஸ் வேன். நான்கைந்து போலீஸ்! இத்தனை அமர்களத்திலும் என் கண்கள் சாம்பசிவத்தைத் தேடின. அவரையோ அவர் வண்டியையோ காணவில்லை. ஆட்டோவை பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தோம். வீடே அலங்கோலமாயிருந்தது. அவள் அம்மா கன்னத்தில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தார்.
உள்ளே இருந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது அறிந்த விஷயம்: சுமார் ஒரு மணி நேரம் முன்னர் வாசல் கதவு தட்டப்பட்டதும் கௌசி அம்மா போய் திறந்திருக்கிறார். வாசலில் பொம்மை விற்பவர். கொஞ்சம் குடிக்க தண்ணி வேண்டும். என் வாட்டர் பாட்டிலை மறந்து விட்டேன் என்று சொன்னவரை உள்ள அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். இதற்குள் அவரைப் பின்தொடர்ந்து வந்த சாம்பசிவம் அவரிடம் ஒரு கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டார்!
விஷயம் அறிந்த கௌசியும் அழ ஆரம்பித்தாள். நான் சமாதானம் செய்துவிட்டு இன்ஸ்பெக்டரை விசாரித்தேன். “யார் நீங்க?” என்று என்னைக் கேட்டார். விவரம் சொன்னேன். “ சர்! அவன் ஒரு மாசமா வீட்ட கவனிச்சிக்கிட்டு இருந்திருக்கான். மேடம் ஆபீஸ் போன பிற்பாடு அட்டாக் செஞ்சிருக்கான். மொத்தம் மூணு லட்சம் ரூபாய் நகை! நீங்க கவலைப்படாதீங்க. புடுச்சிர்வோம்”
என்றார்.
பின் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தோம். கௌசியோடு சிறிது நேரம் கழித்துவிட்டு நான் வீட்டுக்குச் சென்றேன்.
கௌசியை விசாரிக்கலாம் என்று bagல் வைத்த செல் போனை எடுக்க திறந்தபோது அந்த பொம்மை அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்துத் திறந்து பார்த்தேன். அந்த பொம்மை என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது
இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்தது. “ மொத்தம் மூணு லட்ச ரூபாய்!”.
“அவருக்குத் தெரியாது பாவம். மொத்தம் மூணு லட்சத்தி நானூற்றைம்பது ரூபாய்” என்று மனம் சொல்லியது.
No comments:
Post a Comment