May I help you?
(for a price, of course). எனக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தைகள். எந்த
பிசினஸ்மேனுக்கும் இந்த வார்த்தைகள் பிடிக்கும். நானும் ஒரு பிசினஸ்மேன் தான்.
இல்லை சொல்யூஷன் ப்ரோவைடர் என்று சொல்லலாமா? அது பெட்டராக இருக்கும்.
பிசினஸ் மேன்
என்றால் ஒரு ஆபீஸ் இருக்க வேண்டும். எனக்கு அப்படி ஒரு நிரந்தர ஆபீஸ் இல்லை. பஸ்
ட்ரெயின் பார்க் மார்கெட் இப்படி எந்த இடமுமே எனக்கு ஆபீஸ் தான். கஸ்டமர்கள்
இருக்கும் வரும் இடம் தானே ஆபீஸ்?
காதுகளைத்
திறந்தே இருக்கும்படி படைத்த கடவுளுக்கு நன்றி. அதனால் எவ்வளவு உபயோகம் என்று என்
கடந்த பத்து வருட வாழ்க்கையை ஆராய்ந்தால் புலப்படும். நைன்டி த்ரீ பாய்ன்ட்
சம்திங் நைண்டி ஸிக்ஸ் பாய்ன்ட் சம்திங் என்றெல்லாம் FM ரேடியோவில் காதுகளைச்
செலவிடும் சாதாரண மானிடர்களுக்கு இது புரியாது.
உங்களுக்கு ஒரு
செய்தி சொல்கிறேன் கேளுங்கள். ரகசியங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றன என்று
தானே நீங்கள் நினைக்கிறீர்கள்? அது தான் இல்லை. ரகசியங்கள் மிகச் சாதாரணமாக பொது
இடங்களில் பேசப்படுகின்றன. புருஷன் ஆபீஸ் போன பிற்பாடு காதலனைச் சந்திக்கக்
கிளம்பும் மனைவியிலிருந்து மிகப்பெரிய பிசினஸ் ரகசியங்கள் வரை, கவனமாகக்
கேட்பவர்களுக்குக் காதுகள் அடையாளம் காட்டும்.
நான் அந்த
பிசினஸில் தான் இருக்கிறேன். தற்செயலாக ஆரம்பித்ததுதான் இது. நன்றாகப் படித்தும் (என் சில பல தீயப்
பழங்கங்களினால்) வேலை கிடைக்காமல் (தேடாமல்) ஒரு சாதாரண பிக்பாக்கெட்டாக இருந்த நான் இந்த லைனுக்கு வந்தது ஒரு சுவையான
சம்பவம். 2008 புத்தகக் கண்காட்சி என்று நினைக்கிறேன். கம்ப்யூட்டர்
சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களைச் சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை. அந்தச்
ஸ்டால்களில் இருந்த இளசுகள்தான் என்னைக் காந்தம் போல இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தான்
தற்செயலாக அந்த இருவரையும் பார்த்தேன். ஒரு 25 வயது மதிக்கத் தக்க யுவன் யுவதி.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே தாழ்ந்த குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
காதலர்களாய் இருக்கும் என்று சுவாரசியம் இழந்து ஸ்டால் இளசை நோட்டம்
விட்டுக்கொண்டிருந்தேன். படிந்து வருவாள் போலத்தான் தெரிந்தாள். அவளை என்டர்டெயின்
பண்ணுமளவுக்குப் பணமிருக்கிறதா என்று ஒருமுறை பர்சைத் திறந்து பார்த்தேன்.
இருந்தது. நிம்மதிப்பெருமூச்சுடன் ஸ்டால் இளசை நோக்கி நடந்தேன். அப்போது தான் அந்த
யுவன் பேசியது காதில் விழுந்தது.
“ஐ வோன்ட் கெட்
காட் நோ? மை ஜாப் இஸ் அட் ஸ்டேக்..”
“டோன்ட் வொர்ரி.
யூ ஆர் சேப். மனி வில் பீ பெய்ட் இன் யுவர் அக்கவுன்ட்”
என் காதுகள்
கூர்மையாகின. என்ன பேசுகிறார்கள்? ஸ்டாலுக்குள் நுழைந்து புத்தகம் மேய்வது போல
அவர்களை கவனித்தேன். அந்த யுவன் தன்
ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்து ஒரு சிறிய பாக்கெட் எடுத்து அந்தப் பெண் கையில்
கொடுத்தான். அதை வாங்கிய அவள் கவரைப் பிரித்து உள்ளிருந்த பொருளை வெளியே
எடுத்தாள். உள்ளங்கை அளவே இருந்த ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க். பின்னர் அதைத்
தன் கைப்பையில் போட்டுக்கொண்டு விருட்டென்று திரும்பி நடந்தாள்.
நான்
யோசிக்கவில்லை. சட்டென்று வெளியே வந்து அவளைத் தொடர ஆரம்பித்தேன். ஏன் என்று இன்று
வரை சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த முடிவு தான் என் பிசினஸுக்கு ஆதார
சுருதி.
கண்காட்சி
வளாகத்தை விட்டு வெளியே வந்தவள் ஒரு ஆட்டோ பிடித்தாள். நான் என் பைக்கை ஸ்டார்ட்
செய்து அவளைத் தொடர்ந்தேன். ஒரு பதினைந்து நிமிடங்களில் ஆட்டோ எக்மோர் ரயிலடியை
அடைந்தது. அவள் ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து விட்டு ஸ்டேஷனுக்குள் செல்வதற்குள்
நானும் என் பைக்கைப் பார்க் பண்ணிவிட்டு அவளைப் பின் தொடர்ந்தேன். ஐந்து
நிமிஷத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்வண்டி வந்தது. அவள் அதில் ஏறினாள்.
என் அதிர்ஷ்டம் அவள் ஏறியது ஜெனரல் கம்பார்ட்மென்ட். நானும் அதில்
தொற்றிக்கொண்டேன். வண்டி கிளம்பியதும் நான் கம்பார்ட்மெண்டை நோட்டம் விட்டேன்.
கூட்டம் கம்மியாகத் தான் இருந்தது.
உட்கார்ந்திருந்தவர்களில்
ஒருவன் திடுமென எழுந்து அவளை நோக்கி
வந்தான். சிரித்திபடியே “வேலை ஆச்சா?” என்றான்.
‘ம்ம்ம்’ என்று
முனகியபடியே அவள் அந்த ஹார்ட் டிஸ்க்கை எடுத்து அவனிடம் தந்தாள். அவன் அதைத் தன் கைப்பையின் முன் ஜிப்பில் வைத்தான். அவனும்
பதிலுக்கு இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை அவளிடம் தந்தான். அதை வாங்கிக் கொண்ட அவள்
காலியாயிருந்த ஒரு ஜன்னலோர சீட்டில் போய் உட்கார்ந்தாள். அந்த ஆள் வண்டி நிற்கப்
போகும் ஸ்டேஷனில் இறங்க வேண்டி முன்னால்
வந்தான். வண்டி நின்றது. அவன் என்னைத் தாண்டிப் போன அந்தக் கணத்தில் அவன் கைப்பையின்
முன் ஜிப்பிலிருந்த அந்த ஹார்ட் டிஸ்க்கை அவனறியாமல் ப்ளேடு போட்டு எடுத்து
விட்டேன்.
அவன் இறங்கிப்
போய்விட்டான். எடுத்தப் பொருளை பத்திரப்படுத்திவிட்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்த
சீட்டுக்கு எதிர்பக்கம் போய் உட்கார்ந்தேன்.
பல்லாவரம்
ஸ்டேஷனில் அவள் இறங்கினாள். நானும் பின் தொடர்ந்தேன். ஸ்டேஷனை விட்டு வெளியே
வந்தவள் ரோடைக் க்ராஸ் பண்ணி அந்தப்பக்கம் சென்றாள். அங்கே இருந்த ஒரு சந்தில்
நுழைந்து நான்காவது வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கைப்பையில்
இருந்து சாவி எடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவள் வீடு!
சரி பின்னர்
பார்த்துக்கொள்ளலாம் என்று நான் திரும்பவும் எக்மோர் போய் வண்டியை எடுத்துக்கொண்டு
என் வீட்டுக்குச் சென்றேன்.
வீட்டுச் சென்று
கம்ப்யூட்டரில் அதைப் போட்டுப்பார்த்த நான் அதிர்தேன்.
Blue Whale Info Solutions என்னும் ஒரு ஐ.டி. கம்பனி சம்பந்தப்பட்ட சில
பைல்கள் இருந்தன. அவர்கள் வங்கி சம்பந்தப்பட்ட மென்பொருள் தயாரிப்பாளர்கள். ஒரு
அரசு வங்கியின் சிறப்பு சேமிப்புக் கணக்கின் வொர்கிங் மாடல் ஒன்று தயாரித்திருந்தார்கள்.
பல லட்சம் ரூபாய்க்கான மென்பொருள். எனக்கு சட்டென்று எல்லாம் புரிந்தது. இவர்கள்
தயாரித்த மென்பொருள் மாடலைக் கொண்டு அதே போல் வேறு வங்கிகளுக்கு மிகச் சுலபமாக
அவர்கள் தேவைக்கேற்பத் தயாரித்து விடலாம். உழைப்பு இவர்களது. பலன் இதைத் திருடச்
சொன்ன கம்பனிக்கு.
அதற்கப்புறம் பல
விஷயங்கள் மளமளவென்று நடந்தேறின. நான் Blue Whale Info Solutions கம்பனிக்குச்சென்று அதன் HRஐச் சந்தித்தேன்.
ட்ரெயினில் அது ஒரு ஆளின் பையில் இருந்து கீழே விழுந்ததாகவும் அதைச் சோதித்துப்
பார்த்ததில் அவர்கள் மென்பொருள் என்று தெரிந்து அதை அவர்களிடம் எடுத்து
வந்ததாகவும் பொய் சொன்னேன்.
உலகில் எத்தனை
ஏமாற்றுப் பேர்வழிகள்! விஷயத்தைப் புரிந்து கொண்ட அந்த HR பெண் , தன் பையிலிருந்து
வெறும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்துத் தந்து நன்றி என்றாள். அதைக் கையில் வாங்காது
நான் சிரித்தேன்.
“பொருள் தான்
உங்ககிட்ட வந்திருக்கு. அத எடுத்தது யாருங்கற செய்தி எனக்கு மட்டும் தான்
தெரியும். ஆனா அது வெறும் ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்காது” என்றேன்.
புத்திசாலியான
அந்தப் பெண் என்னை அந்த கம்பனியின் CEOவிடம் அழைத்துச் சென்றாள். ஒரு மணி நேர
பேரத்துக்குப் பிறகு ஐம்பதினாயிரம் ரூபாயுடன் வெளியேறினேன்.
அன்று தான்
புரிந்து கொண்டேன் அலர்ட்டாக இருப்பதன் பயனை. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த
பிசினஸ். இந்த மாதிரி விஷயங்கள் நிறைய கிடைக்காவிட்டாலும், நகரத்தில் இருந்த
ஏமாற்றும் கணவன்/மனைவியர் என் வயிறு வாடாமல் பார்த்துக்கொண்டனர். தொழிலில் சில
சமயம் கை கால் உடைப்பது, சிறு விபத்து ஏற்படுத்துவது என்று கூட
இறங்கியிருக்கிறேன்.
ஆனால் என்னதான்
இந்த மாதிரி நீசத்தனமான வேலை செய்தாலும் அதிலும் ஒரு தர்மம் கடைபிடித்தேன். எந்தக்
காரணத்தைக்கொண்டும் மர்டரில் மாட்டிக் கொள்வதில்லை என்று. என் உயிரின் மேல் எனக்கு
அவ்வளவு ஆசை.
அப்படி
ஜாக்கிரதையாக இருந்தும் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. ஒரு வருடத்துக்கு
முன்னால். காதலித்த பெண்ணை கழட்டி விடப் பார்த்த ஒரு பணக்காரன் தான் என்
கிளையன்ட். ஒரு சின்ன ஆக்சிடென்ட் செய்து அவளை சிறிது காலத்துக்கு ஆசுபத்திரியில்
கிடத்துவதாக ஏற்பாடு. ஆனால் அவள் ஒரு இருதய நோயாளி என்பது எனக்குத் தெரியாத ஒரு
செய்தி. அந்தப் பெண் அந்த ஆக்சிடெண்டில் மரித்துப் போனாள்.
அது ஒன்று தான்
என் தொழிலில் முதலும் கடைசியுமான மரணம். நான் மிகவும் ஜாக்கிரதையாகக் கிளையன்ட்ஸ்
செலக்ட் செய்து போலீஸ் கண்களில் விழாது இருந்தேன்.
இப்படி நடந்து
கொண்டிருந்த என் தொழிலில் ஒரு தொய்வு வந்தது. அது எனக்கு நிகழ்ந்த ஒரு
ஆக்சிடென்ட். எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்தால் நீங்கள் சிரிப்பீர்கள். குளிக்கும்
போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து முதுகெலும்பில் நல்ல அடி. கிட்டத்தட்ட ஒன்பது
மாதங்கள் எங்கும் நகர முடியாமல் அவஸ்தை.
உடல் நலக்கேடு
என்பதைத் தாண்டி நான் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு அல்மோஸ்ட் கரைந்து விட்டது
பெரிய கவலையைத் தந்தது. எப்படியாவது உடம்பு சரியான பிறகு முனைந்து தொழில் செய்து
இழந்த பணத்தை சேர்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.
அந்த நாளும்
வத்து. டாக்டர் வெளியே சென்று வர அனுமதி தந்து விட்டார். எனக்கு மிகவும் சந்தோஷம்.
முதல் நாளே தொழிலை ஆரம்பிக்க வேண்டாம். சற்று என்ஜாய் பண்ணுவோம் என்று ஹோட்டல்
சென்று சாப்பிட்டேன். பின்னர் ஒரு புது திரைப்படம் சென்று பார்த்தேன். மாலையில்
சற்று இளைப்பாற பனகல் பார்க் வரை சென்றேன்.
பார்க் வெளியே தி
நகரின் அல்லோகலம் உள்ளே அவ்வளவாகத் தெரியவில்லை. ஓரிடத்தில் சென்று அமர்ந்தேன்.
கொஞ்ச பேர் அங்குமிங்குமாக இருந்தார்கள். என் கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்
காலத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் காதுகளில் அவர்கள்
பேச்சு விழுந்தது.
(அப்புறமாக
திரும்பப் பார்த்ததில் தெரிந்தது அவர்கள் ஒரு இளம் ஜோடி).
“ராகேஷ்,
இப்படிச் செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. என் புத்தியச் செருப்பால
அடிக்கணும். உங்கள நம்பி ஏமாந்தேன் பாருங்க” என்றாள் அந்த இளம் பெண்.
“நான் என்ன
வேணும்னா பண்ணறேன்? எல்லாம் ஒரு சந்தர்ப்பம் தான். எங்கப்பா பிசினஸ் இப்படி
நொடிக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?
அவர் பிரெண்ட்
அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டு அதுக்கு பதிலா நான் அவர் பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு
கேப்பாருன்னு தெரியுமா? என் அப்பா நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இப்ப நானும்
கை விட்டா அவர் செத்துடுவார்.”
“அதுக்காக என்
வாழ்க்கையையா பணயம் வெக்கிறது? நான் சும்மா விட மாட்டேன். என் எதிர்காலம் என்ன
ஆகும்? இப்ப என் வயித்துல உன் கொழந்தைய வேற சொமக்கறேன். அந்த ந்யூஸ உனக்குச்
சொல்லலாம்னு வந்தா நீ இப்படி ஒரு குண்டத் தூக்கி போடற”
“ என்னது
கொழந்தையா?” என்று அதிர்ந்த ராகேஷ், “ராகினி, இதப் பாரு, மொத வேலையா அதக்
கலச்சிரு. என்ன செலவானாலும் பரவால்ல. அப்புறம் உனக்கு நான் என்ன பண்ணனும்னு
சொல்லு. முடிஞ்சதப் பண்றேன். ஆனா நம்ம கத தொடாது. அது மட்டும் நிச்சயம்” என்றான்.
“பணம் கொடுத்து
முடிக்கப் பாக்குறியா, யூ பாஸ்டர்ட். உன்ன எப்படி கவனிக்கணுமே அப்படி
கவனிக்குறேன்.” என்று சொல்லி விருட்டென்று எழுந்த ராகினி பார்க்கை விட்டு
சென்றாள்.
ராகேஷ் இடிந்து
போய் உட்கார்ந்திருந்தான். அவன் சோகம் எனக்குச் சந்தோஷம்! இருக்காதா பின்ன?
தேடாமலே வந்த பிசினஸ்!
நான் மெதுவாக
எழுந்து சென்று அவனிடம் சென்றேன். கிட்ட வந்த என்னை நிமிர்ந்து பார்த்தவனிடம் “
ஹாய்! நான் சந்திரன். சொல்யூஷன் ப்ரோவைடர்.” என்று சொன்னேன்.
“For what?”
என்று கேட்டவனிடம் “ உன்னோட ப்ராப்ளத்துக்குன்னு வச்சுக்கொயேன்” என்று அவன் அனுமதி
கேட்காமலேயே அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். முதலில்
அசுவாரசியமாகக் கேட்க ஆரம்பித்தவன் கண்கள் கடைசியில் நான் பேசி முடிக்கும் போது
விரிந்தன.
“எவ்வளவு?”
என்றான்.
“முப்பது ரூவா”
என்றேன். “உன் நிம்மதியின் விலை. ரொம்ப குறைவு”
“ஆனா லேசா அடி காயம்னு
போதும். உயிருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது” என்றான் பயத்துடன்.
“ முப்பது
ரூவாவுக்கு அடி காயம் மட்டும் தான்” என்று சிரித்தேன்.
“எங்க வந்து
தர்றது?”
“ இன்னைக்கு
ராத்திரி ஒன்பது மணிக்கு இங்கேயே வா.”
“மூடிடுவாங்களோ?”
“அங்க ஒரு வழி
இருக்கு. அது திறந்து தான் இருக்கும். நான் அந்த சேர்ல உக்காந்திருப்பேன். சரியா
ஒன்பது மணி. முப்பது ரூவா. அவ போட்டோ அட்ரஸ்.”
“சரி” என்றவன்
சந்தோஷத்துடன் எழுந்து போனான்.
நான் சரவண பவன்
சென்று லைட்டாக டிபன் சாப்பிட்டு விட்டு வந்தேன். மணி 8.45.
இரண்டு நிமிடம்
கழித்து உள்ளே சென்றேன். அந்த சேரில் உட்கார்ந்தேன். அவன் இன்னும் வரவில்லை. அந்த
காத்திருக்கும் நேரத்தில் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்துப் புகைத்தேன்.
புகைத்து முடிக்கவும் அவன் வரவும் சரியாக இருந்தது.
“ராகேஷ்?”
என்றேன்.
“எஸ் நான் தான்”
அப்போது தான் பார்த்தேன்
அவனுடன் இன்னொரு உருவம். இருட்டில் சற்று கண்களைப் பழக்கிப் பார்த்தால் ராகினி!
“இவனே தான் ராகேஷ்!
இவனே தான் என் அக்காவை ஆக்சிடென்ட் செஞ்சு கொன்னவன். அந்தக் காரில் நானும்
இருந்ததை இவன் பார்க்கவில்லை. பாவி! இவன விடாதே! என்ன செலவானாலும் பரவாயில்ல”
என்று கோபமாகச் சொன்னாள்.
“ஓகே பாஸ்! நீங்க
சொன்னா சரி” என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பியவன் “ஹாய்! ஐ யாம் ராகேஷ்.
உங்கள மாதிரியே சொல்யூஷன் ப்ரோவைடர். ஒரு சின்ன வித்தியாசம். Murder included.”
என்று விகாரமாகச் சிரித்துக் கையைத் தூக்கினான்.
அவன் கையில்
சைலன்சர் பொருத்தப்பட்ட ரிவால்வர்!
2 comments:
Little confusing venkatesh. Cudnt get d last part. Innorudaram padikaren. Anyways it is indeed a nce one and a thriller too. I can guess ur personality.
thanks pallavi
Post a Comment