Tuesday, December 31, 2013

நடந்தது என்ன?


இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’

நான் வெங்கடேஷ். வீயார் என்று சொன்னால் என் முகநூல் நட்பு வட்டத்தில் புருவம் உயர்த்தி ‘அவனா?’ என்று ஒரு விதமாக சிரிப்பார்கள். நான் மோசம் என்று இல்லை. உண்மையில் நான் நல்லவன்.

கவிதை கதைகள் எழுதுவது, வில்லங்கமான போஸ்டுகள் போடுவது, இடக்கு மடக்கானா கமெண்ட்கள் போடுவது என் பாணி. இதனால் என் மேல் பலருக்கு வெறுப்பு உண்டு என்பது எனக்குத் தெரியும். அதையும் மீறி என் இனிய சுபாவத்தை அறிந்த நண்பர்களும் உண்டு.

நான் இரண்டு மூன்று க்ரூப்புகளில் மெம்பெர். அதில் ஒன்றில் நான் அட்மின். அதில் எங்கள் கம்யூநிட்டியைச் சார்ந்த ஒரு க்ரூப்பில் தான் நான் அதிகம் காணப்படுவேன். அதில் நிறைய மெம்பர்கள். அதன் அட்மின் எங்கே என்று யாருக்கும் தெரியாது. அதனால் அங்கே மெம்பர்கள் அனைவரும் அட்மின்கள் தாம்!

ஒரு விடுமுறை நாளில் நான் லேட்டாகத் தூங்கி எழுந்தேன். எழுந்ததும் ஒரு சிறுகதையின் கரு உதித்தது. ஒரு நல்ல கதையாக வரும் போலத் தோன்றியது. சரி என்று காலைக் கடன்களை முடித்த பின் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து அதை எழுதினேன். அதைப் படித்தும் பார்த்தேன். திருப்தியாக இருந்தது.  சரி அதை என் பேவரிட் க்ரூப்பில் பதியலாம் என்று முகநூலைத் திறந்து என் க்ரூப்பில் நுழைந்தேன் நிறைய notifications. பொறுமையாக ஒவ்வொன்றும் படித்தேன். இறுதியில் ஒரு பதிவுக்கு பலர் கமென்ட் போட்டு இருந்தார்கள். அதில் ஒருவர் என் பெயரை வேறு tag செய்திருந்தார்! என்னதான் அமர்க்களம் போய் பார்க்கலாம் என்று போனால் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கண்ணன் என்ற பெயரில் ஒரு மெம்பெர் பதிந்திருந்த சிறுகதை ஒன்றுக்கான கமெண்ட்டுகள் தான் அவை. ஆஹா ஓஹோ என்று நிறைய பேர் பாராட்டி இருந்தனர். என்னை tag செய்திருந்தவர் “வீயார்I! இதைப் படியும் அய்யா! உமக்கு ரொம்ப பிடிக்கும். உம்மைப் போலவே எழுதியிருக்கார்” என்று சொல்லியிருந்தார்.

எனக்குள் ஒரு ஆர்வம். சரியென்று படிக்க ஆரம்பித்ததும் திகைத்தேன்! நான் சற்று முன் எழுதி வைத்திருந்த அதே கதை!

அதே கதாபாத்திரங்கள் அதே பெயர்கள் அதே சம்பவங்கள்! ஆனால் போஸ்ட் செய்திருந்தது கண்ணன்! உடனே அவர் profileக்கு போனேன். புது மெம்பெர் போல இருந்தது. முக நூலில் ஐந்து மணி நேரம் முன்னர் தான் இணைந்திருந்தார். வேறு உபயோகமான தகவல்கள் இல்லை. ஆனால் ஒரு மொபைல் நம்பர் தந்திருந்தது. சரி அதில் காண்டாக்ட் செய்து பார்க்கலாம் என்று அதை என் மொபைலில் பதித்துக் கொண்டேன்.

அந்த சமயம் அங்கே வந்த என் மனைவி “ என்ன காலைலேயே கம்ப்யூட்டரா? கொஞ்சம் போய் இந்த லிஸ்ட்ல உள்ள ஐட்டம் வாங்கிகிட்டு வாங்க” என்று விரட்டினாள். சரியென்று வெளியே கிளம்பினேன். மறக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டேன்.

கடையில் சாமான் வாங்கிகொண்டு வருகையில் அந்த நம்பருக்கு போன் செய்தேன். சிறிது நேரம் கழித்து மறுமுனையில் “யாரு?” என்று எனக்கு ரொம்ப பரிச்சயமானது போன்ற குரல். என் குரல்!  “நான் தான் வீயார்!. இன்னைக்கு நீங்க போஸ்ட் செஞ்சிருந்த என்னோடக் கதையப் பத்திக கேக்கத் தான் போன் செஞ்சேன். நீங்க யாரு? உங்களுக்கு என் கதை எப்படிக் கெடச்சது? இன்னைக்குத் தானே நானே யோசிச்சேன்?” என்று கேள்விகளாகக் கேட்டேன்.

“வீயார்! வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்” என்று அந்தத் தடியன் கொடுத்த அட்ரஸ் என் அட்ரஸ்! ஸாயிராம்! என்ன சோதனை! என்று ஓட்டமும் நடையுமாக  நான் வீடு நோக்கிச் சென்றேன். வழியில் என் இன்னொரு முக நூல் நண்பரைப் பார்த்தேன். மனுஷனுக்கு என்ன பிரச்சனையோ, என் ஹலோவைக் கண்டும் காணாதது போல சென்று விட்டார். சரி அவரை அப்புறம் கவனிப்போம் என்று வீட்டை அடைந்து காலிங் பெல் அழுத்தினேன்.

கதவை திறந்தது என் மனைவி அல்ல. என்னைப் போலவே தோற்றமளித்த இன்னொரு மனிதன்! என் உடல் சில்லிட்டது.

“ஏய்! யார் நீ?” என்று சப்தம் போட்டேன்.

“கத்தாதீங்க வீயார்! நான் தான் கண்ணன். உள்ள வாங்க உட்கார்ந்து பேசலாம்.” என்று அவன் வீடு போல சொன்னான்! என்ன தைரியம்!

சரி என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று உள்ளே சென்றேன். என் பேவரிட் நாற்காலியில் உட்காரப் போனபோது “அது என்னோட பேவரிட் சேர்” என்று தடுத்தான்.

எனக்கு திடீரென்று சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே’ நினைவுக்கு வந்தது.

“சரி யார் நீ? சொல்லு!” என்று அதட்டினேன்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்.

முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள மெம்பர்களின் சொந்த தகவல்களை வைத்து எதுவும் செய்ய முடியுமா என்று ஒரு எண்ணம் அமெரிக்காவில் உதித்ததாம். அந்த எண்ணத்தின் முடிவாக ஒரு ஆராய்ச்சி உலகம் முழுக்க பல இடங்களில் நடக்கிறதாம். அந்த ஆராய்ச்சியை சென்னையில் சில மாணவர்கள் செய்து வருகிறார்களாம். அதில் ஒருவன் Additive manufacturing or 3D printing முறையில் ஒரு சாத்தியக்கூறை ஆராய்ந்தபோது, ஒரு எதிர்பாராத விளைவு நிகழ்ந்ததாம்.

அது தான் Alternate ID அல்லது க்ளோனிங். ஒரு மெம்பெர் தகல்வல்கள் அவர் போட்டோ உட்பட கணினியில் பதிந்தால் 3D பிரிண்டிங் முறையில் அவரைப் போலவே இன்னொரு மனிதரை உருவாக்க முடிந்ததாம். இப்படிப்பட்ட முறையில் random basisல் நடந்த செலக்ஷனில் என் பெயரும் வந்ததாம்.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நேற்று நடந்த ஒரு தீ விபத்தில் எல்லாப் பொருள்களும் எரிந்து விட்டதாம். உருவாக்கப் பட்ட Alternate ID களை என்ன செய்வது என்று அறியாமல் அந்த மாணவர்கள் வெளியே விட்டு விட்டார்களாம்.

எனக்கு நான் கனவு காண்கிறேனா என்று ஒரு சந்தேகம் வந்தது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இல்லை நிஜம் தான்.

“இப்ப வர்ற வழில ஒரு நண்பரைப் பாத்தே இல்ல? அவர் உன்னப் பாத்து acknowledge பண்ணாரா? பண்ணியிருக்க மாட்டார். ஏன்னா அவர் உன் நண்பரோட Alternate ID. உன் நண்பர் இப்ப பெங்களூர்ல இருக்கார்” என்றான் CRV.

“சரி, என்னவோ ஏதோ, நீ இங்கேயிருந்து போய்விடு” என்று சொன்னதும் அவன் ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தான்.

“ நீ தான் போகணும். I am here to stay.” என்று சொல்லிக்கொண்டே என்னை அடிப்பது போல நெருங்கி வந்தான். என் கண்கள் செருகின.

“என்னங்க! என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்சம் வெயில்ல போயிட்டு வந்தாக் கூட உடம்புக்கு ஆகலேனா எப்படி?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு கண் விழித்தேன்.

உடனே சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாம் பழைய படியே இருந்தது. குறிப்பாக கண்ணன் இல்லை.

அப்பாடி எல்லாம் ஒரு கனவு போல இருக்கு என்று நிம்மதியுடன் எழுந்து உட்கார்ந்தேன். “கொஞ்சம் காப்பி கொடேன்!” என்று மனைவியிடம் கேட்டு விட்டு என் ரூமுக்குச் சென்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன்.

முகநூலில் என் க்ரூப் பக்கம் தான் திறந்திருந்தது. ‘அந்த’ கதையைத் தேடித் பார்த்தேன். கிடைக்கவில்லை. கனவு என்று ஊர்ஜிதமானது.

என்ன மடத்தனம் என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

சரி நான் எழுதிய கதையை பதியலாம் என்று எண்ணி வேலையில் இறங்கினேன். கதையை போஸ்ட் செய்து விட்டு மனைவி தந்த காப்பியைக் குடித்தேன்.

அதற்குள் ஒரு PM வந்தது. என் அருமை நண்பர் ஒருவரிடமிருந்து.

“என்ன சார்! காலைல தான் இந்தக் கதையப் போட்டீங்க! திரும்பவும் போட்டுருக்கீங்களே! எனிவேஸ், சூப்பர் கதை! keep it up” என்றிருந்தது அந்த மெசேஜில்.

நான்  மயங்கினேன்.


Monday, December 30, 2013

சத்தமின்றி செத்துவிடு


நான் நுழைந்த போது அவள் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். கையில் அந்த வார பிரபல பத்திரிகை. மேலே ஒரு fan இதைவிட மெதுவாக சுற்றமுடியாது என்பது போல சுழன்று கொண்டிருந்தது.   என்னைக் கண்டு எழுந்து உட்கார யத்தனித்ததில் புடவைத் தலைப்பு நழுவியது. அதைச் சரி செய்வதில் எந்தவித அவசரமும் காட்டாமல் “அவரா நைட்டா?” என்றாள்.

“நைட்டுதான்’ கதவை மூடியபடியே சொன்னேன்.

புத்தகத்தை மூடி அருகாமை டேபிளில் வைத்துவிட்டு, கீழே விழுந்திருந்த தலைப்புடனேயே “வாங்க” என்றாள்.

“ நான் பத்திரிகைகளுக்குக் கதை எழுதுபவன்”

“அதுனால என்ன? வாங்க”

அவளருகில் சென்று தலைப்பை எடுத்து அவள் தோளில் போட்டபடி “நான் இதுக்கு வரல” என்றேன்.

“பின்ன என்னப்பத்திக் கதையெழுத வந்தீங்களாக்கும்”

இல்ல, உண்மையச் சொல்லணும்னா என்னால என் ஆபீசுக்கும் 
போக முடியல்ல,   வீட்டுக்கும் போக முடியல்ல. அதனாலதான்  இங்க வந்தேன்.”

மெல்லிய புன்னகையுடன் அவள், “ நான் கேட்டதுக்கு சாரி. சரி என்னத்துக்கு வந்தீங்கன்னு நீங்களே சொல்லுங்க” என்றாள்.

‘என்னத் தேடி ஒரு கும்பல் அலையுது. என் வீட்ட தொம்சம் பண்ணிட்டாங்க. ஆபீசுக்கும் வந்தாங்க. அவங்க கைல சிக்காம தப்பிச்சு இங்க வந்துட்டேன்.”

“என்ன வேணுமாம் அவங்களுக்கு”

நான் அவளைச் சந்தேகமாகப் பார்த்தேன். என் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவள் “ சரி நான் இப்ப என்ன செய்யணும்?” என்றாள்.

“ ஒண்ணும் வேண்டாம். உன் புக்கப் படி போதும். போகும் போது உனக்குப் பணம் தர்றேன்.  இந்தப் பிளக் பாயின்ட் வர்க் பண்ணுதா?”

“பண்ணுதே! என்ன சார்ஜ் பண்ணனும். மொபைலா?”

‘இல்லை லேப் டாப். அதாவது கம்ப்யூட்டர்.”

அவள் நான் சொன்னது போலவே படிக்க ஆரம்பித்தாள்.  நான் என் லேப்டாப்பைச் சார்ஜில் போட்டு விட்டு என் பையிலிருந்த டிஜிட்டல் கேமராவை எடுத்தேன். ஓரக்கண்ணால் கேமராவைப் பார்த்துவிட்ட அவள் “ படம் பிடிக்கப் போறீங்களா?” என்று சிரித்தாள்.

எனக்குச் சிரிப்பு வரவில்லை. கேமராவில் இருந்த மெமரி கார்டை வெளியே எடுத்தேன். ஒரு கார்டு ரீடரில் பொருத்தி லேப்டாப்புடன் இணைத்தேன். மெமரி கார்டு உயிர் பெற்று தன்னுள் வைத்திருந்த பைல்களைக் காட்டியது. அவற்றைக் காப்பி செய்து லேப்டாப்பில் இறக்கினேன்.

நான் செய்வதை எல்லாம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவள், “இதுக்குத் தான் உங்க பின்னாடி சுத்தறாங்களா?” என்று கேட்டாள்.

திடுக்கிட்டு நிமிர்ந்த நான் “ம்ம்ம்ம்” என்றேன்.

“சரி இப்ப அதை என்ன செய்யறீங்கன்னு சொல்லமுடியுமா?”

“அத கம்ப்யூட்டர்ல காப்பி செஞ்சிட்டு இன்டர்நெட் மூலமா என் க்ளவுட் ட்ரைவுக்கு மாத்திடுவேன். என் பாஸ்வர்ட் என் உயிர் நண்பனுக்குத் தெரியும். எனக்கு எதுனாச்சியும் ஆயிடிச்சுன்னா கூட நான் எந்த உண்மைய வெளில கொண்டு வர இப்படிப் பாடு படறேனோ அது வெளில வந்துடும். நான் செத்தாலும் நிம்மதியா சாவேன்”

வியப்புடன் என்னைப் பார்த்து “ சுத்தமா புரியல. ஆனா நீங்க நல்லவர்ன்னு தெரியுது” என்றாள்.

ஒரு புன்னகையுடன் என் வேலையைத் தொடர்ந்தேன். திடீரென்று ஒரு சந்தேஹம். ரொம்பவும் உளறிக் கொட்டி விட்டேனோ? இனி வாயத்திறக்காமல் வேலையை முடிக்க வேண்டும் என்று நான் நினைத்த கணத்தில், அவள் கட்டிலில் இருந்து இறங்கி என்னருகில் வந்தாள்.

சரேலென்று திரும்பினேன். அவள் கைகளில் ஒன்றும் இல்லை.

“என்ன வேணும்? என்ன டிஸ்டர்ப் பண்ணாதே!”

“இல்ல, எனக்கொரு ஒதவி வேணும்.”

“எனக்கே ஒதவி செய்ய ஆளில்லாம நாயாட்டம் ஓடிக்கிட்டிருக்கேன். இதுல உனக்கு என்ன செய்ய முடியும்?”

(திடீரென்று ஒருமையில் மாறி) “தொர, நீ நல்லவன் மாரி தெரியுற. அதுனால ஓங்கிட்ட சொல்றேன். ஓங்கிட்ட இருக்கற மாரியே என்னான்டையும் ஒரு ரகசியம் இருக்கு. என்னையும் சில பேரு தொந்தரவு பண்றாங்க. ஆனா நான் அவங்க கண்ணுல படமா அத்த பத்திரமா வெச்சிருக்கேன்.”

“எனக்கு என் ரகசியமே ரொம்ப ஜாஸ்தி. இதுனாலேயே என் உயிர் போகலாம். இதுல உன் ரகசியங்கள் வேண்டாம்.”

“இல்ல, நா சொல்றதக் கேளுங்க. என் கிட்டயும் இது மாறி ஒரு கார்டு இருக்குது. அதுல இருக்கற மேட்டரையும் உங்க பிரெண்ட் கிட்ட அனுப்பிடுங்க. எனக்கு எதுனாச்சியும் ஆச்சுன்னா அவரு அத்தயும் வெளில கொண்டு வரட்டும்”

“உன்கிட்ட என்ன ரகசியம் இருக்கமுடியும்? யாராவது பெரிய புள்ளிங்க இல்லேன்னா அரசியல்வாதிங்க உன்கிட்ட அப்படி இப்படி இருக்கும்போது படம் பிடிச்சிருப்ப. அதுக்கெல்லாம் இந்தக் காலத்துல யாரும் அஞ்சறதில்ல. மிஞ்சிப் போனா ஒரு சீடி போடலாம்” என்று சிரித்தேன்.

“இல்ல. இது அந்த மேட்டர் இல்ல. அத்த விட பெருசு. கொல மேட்டரு. அதுக்கு மேல இப்ப வேண்டாம். முடியுமா முடியாதா?”

எனக்கு அவளைப் பார்க்க சந்தேகமாக இருந்தது. “மொதல்ல என் வேலை முடியட்டும். அப்புறம் டைம் இருந்தா பார்க்கலாம்”

“சரி, நான் அத எடுத்து தர்றேன். உங்க வேலை முடிச்சிட்டு செய்யுங்க” என்று சொல்லியபடியே அங்கிருந்த ஒரு அலமாரியின் கீழ்த்தட்டில் வைத்திருந்த இரண்டு செருப்புகளில் ஒன்றை எடுத்தாள். அதன் மேல் பக்கமிருந்த தையலை பல்லால் அறுத்து ஒரு இழு இழுத்தாள். பிரிந்து வந்த

மேல்புறத் தோலைத் தூக்கினாள். உள்ளே ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் ஒரு மெமரி கார்ட்!

சட்டென்று என் அருகாமையை உணர்ந்தவள் திரும்பினாள். வெகு அருகே என்னைப் பார்த்துச் சிரித்தாள். “மூடு வந்திரிச்சா?”

“இல்ல, வந்த வேல முடிஞ்சிரிச்சு.” என்று சொல்லியவாறே அவளைத் ஒரு தள்ளு தள்ளி அவள் முதுகில் என் கால் முட்டியை வைத்து அழுத்தியவாறே என் செல் போனை எடுத்து ஒரு கால் செய்தேன்.

“என்ன காண்ட்ராக்டு, என்ன விசயம்?” என்று மறுமுனையில் ஒரு கரகரப்பான குரல்.

“கெடச்சிருச்சு.”

“முடிச்சிரு. ராஜத்துக்கிட்ட ஒரு அஞ்சு லச்சம் குடுத்திரு. கிளீனா மேட்டர் முடிச்சிருவா”

“சரி”

பின்னர் என் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு திறந்து மூடக்கூடிய மெலிதான கத்தி ஒன்றை எடுத்தேன்.

அவள் தலையைப் பின்பக்கம் இழுத்ததில் அவள் தொண்டைக் குழி நன்கு தெரிந்தது. கத்தியை அங்கு வைத்து பலமாக அழுத்தியதில் சட்டென்று ஒரு ரத்தக் கோடு. பின் அதை வலமிருந்து இடமாக ஒரு இழு இழுத்ததும் அவள் சத்தமின்றி செத்துப் போனாள்.

ஒரு ஐந்து நிமிடத்தில் என் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியே மெயின் ஹாலில் ராஜம் என்கிற அந்த ‘விடுதி’யின் ‘காப்பாளர்’ என்னைப் பார்த்து வெற்றிலைக் காவியேறிய பற்கள் தெரிய சிரித்தாள்.

மெளனமாக ஒரு ஐந்து லட்சம் ரூபாய் எடுத்து அவளிடம் தந்தேன். பின்னர் ஏதோ தோன்ற ஒரு நூறு ரூபாய் கட்டு ஒரு எடுத்துக் கொடுத்தேன்.

“அலமாரிகிட்ட கீழ கார்பெட் மாத்த வேண்டி வரும்” என்றேன். அவள் என்னைப் பயத்துடன் பார்த்தாள். 

வெளியே விசிலடித்தபடி வந்து ரோட்டில் சற்று ஒதுக்குபுறமாக நிறுத்தி வைத்திருந்த என் காருக்குச் சென்றேன். கார் கதவைத் திறக்க ரிமோட்டை எடுத்தபோது இருட்டிலிருந்து ஒரு உருவம் “ ஆரு, காண்ட்ராக்ட் குமாரா?” என்றது. 

மூளையின் எச்சரிக்கைச் செல்கள் விவரம் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே என் முகத்தின் மீது ஆசிட் வீசப்பட்டது. face pack உரிவது போல என் முகத்தின் சதை உரிந்து நான் நினைவிழக்கையிலே “ அவன் பையில சாக்ரதையா தேடி அந்த மெமரி கார்ட எடுரா” என்று எனக்குப் பரிச்சயமான கரகரப்புக் குரல் கேட்டது.

***********************





Sunday, December 29, 2013

அன்வர்


இரண்டு நாள்  outstation branch ஆடிட்டுனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். ருடீன் போர் அடிச்சு போச்சு “I will start tomorrow itself, Sir”னு ரீஜனல் மானேஜர் கிட்ட சொன்னேன் நான்.

நான்? வெங்கடேஷ், வங்கி அதிகாரி, வயசு 48. லக்னோவில் போஸ்டிங். மனைவியும் பெண்ணும், அவள் பக்க உறவுல ஏதோ கல்யாணத்துக்காக சென்னை போயிருக்காங்க. நான் தனியா லக்னோல போர் அடிச்சிகிட்டு. அது தான் சரின்னு உடனே சொல்லிட்டேன்.

ஆனா branch எதுன்னு தெரிஞ்சப்பறம் கொஞ்சம் யோசிச்சேன். லக்நோவிலிருந்து தள்ளி பஸ்தினு ஒரு கிராமம். அதிலிருந்தும் ஒரு நாலு கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு குக்கிராமமுத்துல branch. பட் வேற வழியில்ல, போகத்தான் வேணும்.

மறுநாள் வெளியூர் பஸ் பிடிச்சி ஒரு இரண்டு மணி நேரப் பயணத்துக்கு அப்புறம் பஸ்தி. அப்புறம் பஸ்தியிலிருந்து ஒரு ரிக்க்ஷா  பிடிச்சு அந்த ஊரு போய் சேர்ந்தேன். அந்த ரிக்க்ஷா ஒரு இரண்டு கிலோமீட்டர் ஒரு காடு மாதிரியான மரங்கள் அடர்ந்த இடம் வழியாகச் சென்று பின்னர் ஒரு இடத்தை அடைந்தது. ஒரு கிராமம் என்று சொன்னால் கிராமம் கோபித்துக் கொள்ளும். குக்கிராமம் என்று சொல்லலாம். ஒரு வழியாக branch போய் சேர்ந்தேன். ஒரு மேனேஜர் ஒரு அதிகாரி ஒரு கிளார்க் ஒரு ப்யூன். அவ்வளவு தான் branch! அதுவே அதிகம் போல தோன்றியது. போதாதற்கு அந்த கிளார்க் லீவில் இருந்தான். என்னை வரவேற்று உட்கார வைத்த மேனேஜர் ப்யூனை விட்டு டீ வாங்கி வரச் சொன்னார். இதை விட அழுக்காக இருக்க முடியாது என்பதைப் போன்ற ஒரு கண்ணாடி டம்ப்ளரில் வந்த டீயை கடனே என்று குடித்து விட்டு வந்த வேலையை ஆரம்பித்தேன்.

எனக்கு தேவையான டாக்குமென்ட்ஸ் புக்ஸ் எல்லாம் அந்த அதிகாரி ( அவர் பெயர் ராம் கிஷோர் என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்) எடுத்துக் கொடுத்து உதவினார்.

பின்னர் வேலையில் மூழ்கிய நான் வயிறு பசிக்க கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரண்டு. ப்யூன் ‘ சர் கானா ‘ என்று கூப்பிட்டதும் கையை அலம்பிக்கொண்டு மேனேஜர் கேபினுக்குள் சென்று மூவருமாக உணவு அருந்தினோம். என் முகம் போன போக்கை பார்த்து அவர்கள் இருவரும் சிரித்தார்கள். இதை விட நல்ல உணவு பஸ்தியில் தான் கிடைக்கும் என்றார்கள். பஸ்தியில் எனக்கு தங்குவதற்கு ஒரு சிறிய லாட்ஜில் இடம் போட்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.

லஞ்ச் முடிந்து திரும்பவும் வேலை. முடித்து நிமிர்ந்தால் மணி நாலு. ராம் கிஷோர் ‘ சர் நீங்கள் கிளம்புங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டி விடும் (அது குளிர் காலம்) அப்புறம் அந்தக் காட்டுப்பாதையில் செல்வது அவ்வளவு உசிதம் இல்லை” என்று சொன்னார்.

என்ன விஷயம் என்று தூண்டித துருவி விசாரித்ததில் எனக்குச் சிரிப்பு வந்தது.  இந்தக் காலத்தில் பேய் பிசாசு இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்களே என்று வியந்தேன்.

“Dont worry Ram Kishore, I’ll manage. Also, I don’t believe in such things” என்று சிரித்தபடியே சொன்னேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்று விட்டார். ஐந்து மணிக்கு வெளியே வந்த நான் ஏதும் சைக்கிள் ரிக்க்ஷா கிடைக்கிறதா என்று பார்த்தேன். அந்தப் பாதையின் ஆரம்பத்தில் ஒரு ரிக்க்ஷா!

வேகமாக அந்த ஆளிடம் சென்று ஹிந்தியில் எனக்கு பஸ்தி போக வேண்டும் என்று சொல்லி ஏறி அமர்ந்து கொண்டேன். அவனும் ஒன்றும் சொல்லாமல் ஏறி அமர்ந்து ரிக்க்ஷாவை ஓட்டத் தொடங்கினான்.இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டுமே? ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தேன். அவனிடம் ஹிந்தியில் உனக்கும் வேண்டுமா என்று கேட்க “வேண்டாம் சாப்” என்றான். ஒரு ஐந்து நிமிஷம் சென்றபின் . “நீங்கள் அந்த பாங்கிற்கு வந்திருக்கும் புதிய அதிகாரியா?” என்று கேட்டான்.

இல்லை அங்கு inspectionக்கு வந்து இருக்கிறேன் என்று சொன்னதும் மடை திறந்த வெள்ளம் போல அவன் பேச ஆரம்பித்தான். அதன் சாரம் இது தான்:

அவன் பெயர் அன்வர். அந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்தவன் தான். அவனுக்கு ஓரு தங்கை. நஜ்மா. திருமணமான இரண்டு வருடத்திலேயே ஒரு விபத்தில் தன் கணவனை இழந்து விட்டாள். ஒரு வயது குழந்தை வேறு. பிழைப்புக்காக அரசாங்க கடன் கேட்டு விண்ணப்பிக்க அந்த கடன் எங்கள் பேங்க் மூலமாக வாங்கிக் கொள்ள ஆணையும் வந்தது.நஜ்மா பாங்கிற்கு சென்று அந்த ஆணையை கொடுக்க, அதை வாங்கி வைத்துக் கொண்ட அந்த மேனேஜர் இதோ அதோ என்று ஒரு மாதம் ஒட்டிவிட்டானாம். அந்த கிளார்க் மூலமாக விவரம் கேட்ட நஜ்மாவிற்கு அதிர்ச்சி. “ அந்த மேனேஜர் ஒரு மாதிரியான ஆளு. உன்ன ஒரு நாள் அவன் வீட்டுக்கு கூப்பிட்டான். நீ வந்து போனியானா லோன் sanction பண்றதா சொல்றான்” என்றானாம் அவன்!

இதைச்சொன்ன அன்வர் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டான். “ சாப்! நீங்க தான் பெரிய மனசு பண்ணி அந்த லோன் வாங்கித் தரணும். நாங்க ஏழைங்க. எங்க பேச்சை யாரும் மதிக்க மாட்டாங்க. போலீசுல போய் complaint கொடுத்தாக் கூட அவங்க அந்த ஆளைத் தான் சப்போர்ட் பண்றாங்க. நீங்க தான் எங்களுக்கு தெய்வம் “ என்று சொல்லியபடியே திடீரென்று வண்டியை நிறுத்தி கீழே இறங்கி என் கால்களைப் பிடித்துக்கொண்டான்.  எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. “அன்வர் காலை விடு. நாளைக்கு என்னவென்று விசாரிக்கிறேன் “ என்று சமாதானம் பண்ணிய பிறகு தான் அவன் விட்டான்.

ராத்திரி லாட்ஜில் கூட இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பாவம் நஜ்மா! ஏழையின் கற்பிற்கு விலை இல்லையா? திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து எங்கள் ரீஜனல் மேனேஜருக்கு ஒரு போன் செய்தேன். அவருடன் எனக்கு நல்ல பழக்கம் என்பதால் விஷயத்தை எடுத்துச் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

“ நானே நாளைக்கு அவனுக்கு போன் செய்து அந்த லோன் sanction பண்ண வைக்கிறேன். நீ கவலைப் படாதே” என்று அவர் சொன்னதும் தான் எனக்கு தூக்கமே வந்தது.

மறு நாள் நான் ப்ராஞ்சிற்கு சென்றதும் அந்த மேனேஜர் முகம் ஒரு மாதிரி வெளுத்து இருந்ததைப் பார்த்து, “ ஓஹோ RM போன் செய்திட்டார் போல இருக்கு “ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அந்த ஆள் அன்று என்னுடன் பேசவே இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சென்ற அந்த ப்யூன், வரும்போது ஒரு இளம் பெண்ணை உடன் அழைத்து வந்தான்.

அவள் தான் நஜ்மா என்று யூகிக்க எனக்கு நேரம் பிடிக்கவில்லை. ரொம்ப அழகு. அது தான் அந்த மேனேஜரை இப்படிப் பித்தாக்கி விட்டது போலும்!

லோனும் sanction ஆகியது. அந்தப் பெண்ணின் கையில் பணமும் வந்தது. ரொம்ப சந்தோஷத்துடன் அவள் சென்றாள். பின்னர் அன்று மாலையே வந்த வேலையும் முடிந்து விட்டது. ரிப்போர்ட் தயார் செய்து ஒரு காப்பியை பிரான்ச் மேனேஜரிடம் ராம் கிஷோரை விட்டுக் கொடுக்க சொல்லி விட்டு கிளம்பினேன். வாசல் வரை வந்து ராம் கிஷோர் என்னை வழியனுப்பினான்.

சிறிது தூரம் சென்றதும் அன்வரைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தான். “ சாப்! வாங்க வாங்க உட்காருங்க” என்றான். “என்னய்யா அன்வர்! உன் தங்கச்சிக்கு லோன் கிடைச்சாச்சு அப்படின்னு சந்தோஷமா” என்று கேட்க அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. “அழாதே அன்வர்! நம் எல்லாருக்கும் மேலே ஒருத்தன் இருக்கிறான். அது வரையில் நமக்கு எந்தக் குறையும் வராது” என்று சொல்லி ரிக்க்ஷாவில் ஏறி அமர்ந்தேன். பஸ்தி வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

பஸ்தி வந்ததும் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டான். சரி என்று அவனிடம் விடை பெற்று லாட்ஜிற்கு சென்று check out செய்து பஸ் பிடித்து ஏறி அமர்ந்தேன். பஸ் கிளம்பியது. 

கொஞ்ச நேரம் கழித்து ஒரு போன் வந்தது. எடுத்துப் பேசினால் ராம் கிஷோர். “ சர், ரொம்ப நல்ல வேலை  செஞ்சீங்க. ரொம்ப நன்றி “ என்று சொன்னான். பின்னர் “ ரொம்ப தைரியசாலி சர் நீங்க. ரெண்டு நாளும் தைரியமா அந்தக் காட்டுப்பாதைல போய்டீங்க” என்று சொல்ல, “ எனக்கெங்க தைரியம் ராம் கிஷோர்? ஏதோ அந்த அன்வர் புண்ணியத்துல அந்தப் பாதைல வந்தேன்” என்று நான் சொன்னதும் எதிர் முனையில் ஒரு அமைதி.

“யாரு அன்வர்?” என்றான் ராம் கிஷோர். “ அது தான் அந்த நஜ்மாவோட அண்ணா “ என்று நான் சொன்னேன்.

“ஐயோ” என்று அலறினான் ராம் கிஷோர். அவன் அலறல் போனிலிருந்து வெளி வந்து அந்த பஸ் முழுவதும் நிறைத்தது. பலர் திரும்பிப் பார்த்தார்கள். “ஏன்யா ராம் இப்படிக் கத்துறே? என்ன விஷயமானாலும் கத்தாம சொல்லு “ என்றேன்.

“ சர்! அந்த விபத்துல நஜ்மா புருஷன் மட்டுமில்ல, அவ அண்ணனும் இறந்துட்டான் சர்” என்று மீண்டும் அலறினான் ராம் கிஷோர்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நேற்று அன்வர் என் காலைத் தொட்டபோது ஜில்லென்று இருந்தது நினைவுக்கு வந்தது.
 
x

Friday, December 27, 2013

ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்


அந்த பிஸி  சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும்.

“வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார்.

“சரி சார்” என்று அவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். வண்டிக்குள் பயணிகள் யாரும் இல்லை. பின்னர் கண்ணாடியில் கட்டித் தொங்கப் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து அவர் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான்.

அதைப் பார்த்த அவர் “ டேய்! இதுல ஆறுமுகமின்னு பேரு போட்டிருக்கு. ஆனா உன் போட்டோ இல்ல. ஆருடா இது?” என்றார்.

“அவரு என் அப்பாங்க....”

“அப்பாவா? வண்டிய எடுத்துட்டு வந்தது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”

அவன் மெளனமாக நின்றான். “அடக் களவாணிப் பயலே! சொல்லாமா எட்தாந்டிட்டியா?”

அவன் பதில் எதவும் சொல்லவில்லை. அதற்குள் வெகு வேகமாக ஒரு போலீஸ் கார் அங்கு வந்து நின்றது. அந்த ஏரியா ஸ்டேஷன் இன்சார்ஜ் இறங்கினார். சந்திரன்  ஒரு சல்யூட் வைத்து விறைப்பாக நின்றார்.

கண்ணாலேயே ரிலாக்ஸ் ஆகச் சொன்ன சோமசேகர் (ஸ்டேஷன் இன்சார்ஜ்) பார்வை அந்தச் சிறுவன் மீது விழுந்தது.

“யாருய்யா இவன்? என்ன செஞ்சான்?”

“ சார் வீட்டுல சொல்லாம அப்பாவோட ஆட்டோவ எடுத்துக்கிட்டு வந்திருக்கான் சார். அதான் நீங்க வர்ற வரையில பிடிச்சு வச்சேன்” என்று சொல்லி சோமசேகரிடம் லைசன்ஸ் வகையறாக்களைக் கொடுத்தார். அதைப் பார்த்த சேகர் அந்தப் பையனைப் பார்த்தார்.

அவன் பசியில் இருந்தது போல இருந்தான். அவர் ஏதோ சொல்ல வாயெடுத்த போது அவர் செல் போன் ஒலித்தது.

“ஹல்லோ, சோமசேகர் ஹியர்”

“சார்! நா ஸ்டேஷனிலிருந்து பேசறேன்! நம்ம GST ரோடு ப்ரிஜ் மேல ஒரு ஆக்சிடெண்டாம். ஹெட் க்வார்ட்டர்லேர்ந்து போன் வந்திச்சு. உங்கள ஒடனே அங்க போகச் சொன்னாங்க.”

“என்னய்யா ஆச்சு? எதுனா வெவரம் சொன்னாங்களா?’

“இல்ல சார். ஒங்கள ஒடனே போவச் சொன்னாங்க”

போனை கட் பண்ணிவிட்டு சந்திரன் பக்கம் திரும்பி, “நான் GST ரோடு வரைல போகணும். ஏதோ ஆக்சிடென்ட். இவன வந்து பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பினார்.

“ஒக்காருடா” என்ற சந்திரனுக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் அந்தச் சிறுவன் ஒரு கல்லில் உட்கார்ந்தான்.

சேகர் ஆக்சிடென்ட் ஸ்பாட்டை அடைந்த போது  அங்கு நிறைய கூட்டம் இல்லை. இனிமேல் தான் கூடும் போல. ஒரு கறுப்பு நிற BMW ஒரு ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. அருகில் ஒரு நசுங்கிய நிலையில் ஒரு மொபெட். சற்று தள்ளி ஒரு ஆள் கீழே விழுந்திருந்தான். அவன் கால்களில் இருந்து ரத்தம் இன்னுமும் வழிந்து கொண்டிருந்தது. ஒரு ட்ராபிக் போலீஸ் வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.

காருக்குச் சொந்தக்கரனைத் சேகரின் கண்கள் தேடுவதைப் பார்த்து “உள்ளாற இருக்கார் சார்” என்று ட்ராபிக் போலீஸ் காரை நோக்கி சைகை செய்தான்.

கார் அருகில் சென்று அதன் ஏற்றப்பட்டிருந்த கண்ணாடியில் இரண்டு தட்டு தட்டினார் சேகர். உடனே ஜன்னல் கதவு கீழே இறக்கப்பட்டது. உள்ளிருந்த ஏசி குளிர் காற்று சேகர் முகத்தில் அறைந்தது.

“Oh, you took such a long time to reach man” என்றவனுக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். வெள்ளி நிற டி ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். டி ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐ போன் எட்டிப் பார்த்தது.

சட்டென்று பின் சீட்டில் இருந்து வந்த அசைவு அவர் கண்களை ஈர்த்தது. ஒரு பெண். இருவது வயதிருந்தால் ஜாஸ்தி. கும்மென்று சிம்லா ஆப்பிள் போல இருந்தாள். ஜீன்ஸ்  பெண்கள் அணியும் ஷர்ட் போட்டிருந்தாள். அந்த ஷர்ட்டின் மேல் பட்டன்கள் திறந்து அவள் காஸ்ட்லி உள்ளாடையை விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தது. இது எதையும் பற்றிக் கவலைப்படாமல் அவள் தன் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள்.

சேகரின் பார்வையைப் பின்பற்றிய அந்த இளைஞன் “லுக் மிஸ்டர்... லீவ் ஹர் அலோன். ஐ யாம் ஷிவ். மினிஸ்டர் .... சன். அப்பா ஐஜி அங்கிள காண்டாக்ட் பண்ணிப் பேசச் சொன்னார். அவரும் பேசிட்டாராமே! என் அப்பா செக்ரடரி இதோ வந்துடுவார். அண்ட் லெட்ஸ் பீ டன் வித் திஸ் மெஸ் asap. “ என்றான்.

அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் கீழே விழுந்து இருந்த ஆளிடம் சென்றார் சேகர். அவனுக்கும் சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சாதாரண ஆடை அணிந்த சாதாரணன். இடது கால் மிகவும் சேதமாகி இருந்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்தான். “ ஆம்புலன்சுக்குச் சொல்லியாச்சா? இவனுடைய குடும்பத்தாருக்குச் சொல்லியாச்சா?” என்று கேட்டார் டிராபிக்கிடம். “சொல்லியாச்சு சார்” என்றார் டிராபிக்.

“கார் தப்பு தான் சார்” என்றான் கீழே விழுந்திருந்த குமரன். “திடீர்னு ஸ்பீடா வந்து மோதிட்டார் சார். நா பாட்டுக்கு ஓரமாத் தான் போயிட்டிருந்தேன்.”

“ம்ம்ம்ம். நான் விசாரிக்கிறேன். இதோ ஆம்புலன்ஸ் வந்திடிச்சி. உன் போன் இருந்தா குடு. உன் பேமிலி மெம்பெர்ஸ் கூட பேசறேன்” என்றார் சேகர்.

“சரி சார்,” என்று ஒரு நம்பிக்கையுடன் அவரிடம் கொடுத்தான்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்சில் அவனை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த ஒரு பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

சேகர் மீண்டும் காரிடம் வந்தார். “லுக் மிஸ்டர் ஷிவ் ... அந்த ஆள் ஏராளமா செதஞ்சிருக்கான். இது புக் பண்ண வேண்டிய கேஸ். ப்ளீஸ் உங்க லைசன்ஸ் அண்ட் பேப்பர்ஸ் ஹேண்ட் ஓவர் பண்ணுங்க” என்றார்.

“மேன்... டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் ஹூ ஐ அம்? இந்த மெஸ் சீக்கிரம் கிளியர் பண்ணிக் குடுன்னா நீ கேஸ் புக் பண்றேங்கறே? லூஸா நீ?”

“மரியாதை குடுத்து மரியாதை வாங்கு மிஸ்டர் ஷிவ்”

“ ஒரு ஸ்டேஷன் இன்சார்ஜுக்கு என்னய்யா மரியாதை?” என்று அவன் சப்தமாக இரையும் போதே இன்னொரு BMW அவர்கள் அருகில் சரேலென்று வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு பிரீப் கேசுடன் இறங்கினார். அதே சமயம் இரண்டு ஆட்டோக்கள் வந்து நின்றன. அதிலிருந்து நான்கைந்து பேர் தபதபவென இறங்கினர். ஒரு பெண்மணி “ஐயோ குமாரு! எங்கடா நீ” என்று ஓலமிட ஆரம்பித்தாள்.

சேகருக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தது. செக்ரடரி அவரை நோக்கி வந்தார். “சார் நான் சண்முக சுந்தரம். மினிஸ்டர் பீ ஏ. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்னய்யா பேசப் போற? இவன் மினிஸ்டர் மகன். இவன விட்ருங்க. எதுனாச்சும் கொடுத்து சமாளிச்சிரலாம்.. இது தானே?” என்றார் கோபமாக. தலை வலி இன்னும் அதிகமாயிற்று. ஷிவ் குரல்வளையை நெரித்து அவனை அந்த ஓவர் பிரிஜ்ஜிலிருந்து கீழே எறிந்து விடலாம் போல உணர்ந்தார்.

“நல்லதாப் போச்சு. நீங்க டைரக்டாவே மேட்டருக்கு வந்துட்டீங்க. உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்க என்ன தான் கேசு போட்டாலும் நாளைக்கு கோர்ட்டுன்னு வரும்போது சாட்சிகளக் கலச்சிர்வானுங்க. கேச ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. ஆருக்கு என்ன ப்ரோசனம்? நான் சொல்றத நல்லாக் கேளுங்க. இந்தப் பெட்டில அஞ்சு லட்சம் இருக்கு. அந்தக் குமாரு என்ன படிச்சிருக்கானோ அதுக்கு தக்காப்போல சார் கடைங்கள்ள எதுனாச்சியும் வேலை போட்டுக் கொடுத்திரலாம். ஆசுபத்திரி செலவும் எங்களது. ‘தப்பு என் மேலதான்’ன்னு குமார எளுதிக் குடுத்துறச் சொல்லுங்க. “

“உங்களுக்கே நியாயமா இருக்கா மிஸ்டர் செக்ரடரி?” என்றார் சேகர்.

“இல்லை தான். நானும் உங்கள மாதிரி நடுத்தர வர்க்கம் சார். ஆனா நிதர்சனத்த நெஜத்தச் சொல்றேன். உங்களுக்குத் தயக்கமா இருந்தா நானே அவன் அப்பா அம்மாகிட்டா பேசறேன். என்ன சொல்றீங்க?”

சேகரின் தலைவலி உச்சத்தை அடைந்திருந்தது. பின் கழுத்தெல்லாம் கூட வலிக்க ஆரம்பித்தது. “என்னவோ செய்ங்க. அவங்க ஒத்துகலேனா கேசு தான்”

செக்ரடரி குமார் குடும்பத்தார் அருகில் சென்று பேச ஆரம்பித்தார். சேகருக்கு அந்தக் காட்சியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட் எடுத்துத் திறந்தார். ஒரு சிகரெட் தான் இருந்தது. அதைப் பற்றவைத்துக் கொண்டு புகை இழுத்து விட்டார்.

சுமார் பத்து நிமிடங்களில் செக்ரடரி அவரிடம் வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர். குமார் அப்பா கையில் அந்த பிரீப் கேஸ். அவர் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த முக பாவம்.

“இந்தாங்க சார் பேப்பர். பாத்து செஞ்சுடுங்க. மினிஸ்டர் கிட்ட சொல்லி ஐஜியோடப் பேசச் சொல்றேன்.  நல்ல எடமா ட்ரான்ஸ்பர் கேளுங்க.” என்று சொல்லியபடியே ஷிவ் இருந்த காரிடம் சென்றார். அவரைப் பார்த்ததும் ஷிவ் கண்ணாடியை இறக்கினான்.

“தாங்க்ஸ் அங்கிள். அப்ப நாங்க கெளம்பவா?” என்று கேட்டான்.

“ சரிங்க சின்னய்யா. நீங்க போங்க. எல்லாம் முடிச்சாச்சு.” என்றார் செக்ரடரி.

சேகர் அப்போது தான் கவனித்தார். அந்த சட்டையில் மேல் பட்டன்கள் போடாத பெண் முன் சீட்டுக்கு வந்திருந்தாள். அவள் முகம் சிவந்திருந்தது. கண்கள் செருகியிருந்தது.  ஷிவ் முகம் கூட flushedஆக இருந்தது. சேகருக்கு வாந்தி வரும் போல இருந்தது.

அடுத்த இருவது நிமிடங்களில் அந்த இடத்தில் ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுக்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. குமார் பெற்றோரை செக்ரட்டரி தன் காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். எல்லாரும் கலைந்து விட்டார்கள்.

ஆயாசத்துடன் சோமசேகர் தன் காரில் ஏறி திரும்பவும் அந்த சிக்னல் அருகே சென்றார். தன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியவர் கண்ணில் அந்தச் சிறுவன் பட்டான்.

“யோவ் சந்திரன், இவன் இன்னும் என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று இரைந்தார். சந்திரன் மீதான் தன் கோபம் நியாயமற்றது என்று அவர் மனசாட்சி சொன்னது.

“சார் நீங்க தான் இருக்கச் சொன்னீங்க...” என்று இழுத்தார் சந்திரன்.

“ ம்ம்ம் சரி சரி. டேய் இங்க வாடா” என்று அவனை அழைத்தார்.

சிறுவன் மிரண்ட படியே அவர் அருகில் வந்தான்.  அவன் தோளில் ஒரு கையைப் போட்டு “ உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு?” என்று கேட்டார்.

“அவருக்கு மூணு நாளா சொகமில்ல சார். கைல காசும் இல்ல. அதுனால தான் அவருக்குத் தெரியாம வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன். தப்புன்னா மன்னிச்சிரு சார்” என்றான்.

“இனிமே உன்ன இந்த மாதிரி வண்டியோட பார்த்தேன் கால ஓடச்சிருவேன். மெயின் ரோடுல போவாம இந்த சந்து வழியா வண்டிய எடுத்துக்கிட்டுப்  போயிரு”

சரியென்று நகர்ந்தவனை “இங்க வாடா” என்றார்.

குழப்பத்துடன் வந்தவன் கையில் தன் பர்சிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளைத் தந்து “நீயும் சாப்புட்டுட்டு வீட்டுக்கும் வாங்கிப் போ. அப்பாவா டாக்டர் கிட்டயும் கூட்டிகிட்டு போடா” என்றார்.

சிறுவன் நன்றியுடன் ஆட்டோவை ஓட்டிச்சென்றான்.

சந்திரன் தன்னை வியப்புடன் பார்ப்பதை உணர்ந்த சோமசேகர், “யோவ், ஒரு சிகரெட் இருந்தா குடுய்யா” என்றார்.


சந்திரன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை அவரிடம் பயபக்தியுடன் நீட்டினான்.

சாப விமோசனம்


கௌதமன்:
அவனுக்குக் கோபமான கோபம்.

செய்வதையும் செய்து விட்டு எப்படி கல் போல் நின்று கொண்டு இருக்கிறாள் கிராதகி! இத்தனை வருஷ தபஸ் சக்தியை பயன்படுத்தி அவளை சாம்பலாக்கி விட அவன்  மனஸ் துடித்தது. ஆனால் அது அவள் செய்த தவறைப் பொறுத்த வரையில் குறைந்தபட்ச தண்டனையாக அல்லவா இருக்கும்? அதனால் வேறு ஏதாவது தண்டனை பற்றி யோசிக்க வேண்டும்.

‘ நான் அப்படி என்ன அவளுக்கு குறை வைத்து விட்டேன்?’ என்று யோசித்தான்  கௌதமன். அப்போது அவன்  உள்மனது ‘கௌதமா!’ என்று எச்சரித்தது. ‘உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதே; உனக்கு தெரியாதா அவள் ஏக்கம் என்னவென்று? பெரிய ரிஷியாய் இருந்தால் என்ன, பெண் மனஸை புரிந்து கொண்டு விடமுடியுமா என்ன? மேலும் தவறு அவள் செய்து இருந்தாலும், அவளை செய்யத் தூண்டியது யார் குற்றம்? நீ தானே? மனைவியை கண் போல் பார்த்து கொள்ள வேண்டியது கணவன் கடமை தானே? நீ உன் கடமையை பிழையில்லாது செய்தாயா?’ என்று அவன்  மனஸ் சொன்னது.

கௌதமன் அமைதியானான்.

யோசித்துப் பார்கையில் அது அவள் தவறாக மட்டும் தோன்றவில்லை அவனுக்கு. முதலில் இத்தனை வயது வித்யாசத்தில் அவளை மணம் புரிந்ததே தவறு என்று தோன்றியது. பூஜை புனஸ்காரங்கள் யாகம் தபஸ் என்றே வாழ்கையை ஓட்ட நினைத்தது இரண்டாவது தவறு.  அந்த காமுகன் இந்திரனின் உள்நோக்கம் புரியாமல் போனது மூன்றாவது தவறு.
அஹல்யாவைப் பார்த்தான் . ஒரு எலிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு இருந்தாள். ‘ராக்ஷசி எவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று அவன் மனஸ் ஒரு க்ஷணம் அவள் அழகில் லயித்தது. ‘ ஏனடி இப்படி செய்து விட்டாய்? குறை இருந்ததென்றால் என்னிடம் கூறி இருக்கலாம் அல்லவா?’ என்று வாய் விட்டே கேட்டு விட்டான் . அதற்கு பதிலாக அஹல்யா பார்த்த பார்வையின் வேகம் தாளாது அவன் கண்கள் நிலம் நோக்கி தாழ்ந்தன.

அஹல்யா:

“சே! என்ன அறிவீனம்? இப்படியா ஒரு தவறு செய்வேன்? அதுவும் ஆர்யபுருஷர் அதைக் கண்டுபிடித்து விடுவார் என்று தெரிந்தும்? காமம் இப்படியா ஒரு ஆளைக கவிழ்க்கும்?” என்று மனசுக்குள் யோசித்த அஹல்யாவின் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.

திருமணமான புதிதில் அவள் தங்களுக்கு இடையே இருந்த வயது வித்தியாசத்தை பற்றி அதிகம் நினைக்கவில்லை. கௌதமனின் தேஜஸ், தவ வலிமை புகழ் இதெல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்தவளுக்கு மற்ற விஷயங்களில் மனஸ் செல்லவில்லை. ஆனால் தன்னுடைய கார்யங்களிலேயே கௌதமன் அதிகமாக லயிப்பதைக் கண்டு சிறிது நாட்களில் அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது. தான் ஏமாந்து விட்டோமோ என்று மனம் கலங்கியது என்னோவோ உண்மை.  தந்தை வயதுள்ள ஒருவரை கணவனாக வரிததும், அவள் வயதின் தேவைகளை  அவன்  சரியானபடி கவனிக்காததும் அவளை ரொம்பவுமே பாதித்தது. பெண்  மனஸை புரிந்து கொள்ளாதவர் பெரிய ரிஷியாய் இருந்தென்ன புண்யம்? தற்காலத்தில் திருமணமான ஒரு பத்து வருஷத்தில் பெண் மனம் அடையும் நிலையை அவள் சில நாட்களிலேயே அடைந்துவிட்டாள்.
அப்போது தான் ஒரு நாள் பூப்பறிக்கும் போது அவனைக்  கண்டாள்.

இந்திரன்:

அழகு சுந்தரன். தேவர் தலைவன். அவனும் அவளைப் பார்த்தான். நொடிப் பொழுதில் அவள் மனதைப் புரிந்து கொண்டான். தனக்கு வாய்த்த சந்தர்ப்பத்தை உணர்ந்து கொண்டான். இந்த விஷயத்தில் வல்லவன் ஆயிற்றே அவன்? ஆனால் கௌதமனை நினைத்து பின் வாங்கினான்.
ஆனால் விதி யாரை விட்டது? காமம் பிடித்து ஆட்டும் போது நாம் எம்மாத்திரம்? அதுவும் ஒருதலை காமம் இல்லை – இரு பக்கத்திலும் சமமான இச்சைக் கனல் கொழுந்து விட்டு எரிகிறது. தவறு என்று தெரிந்தும் அந்தக் கனலின் இதத்தில் மனஸ் லயிக்கிறது. பிடிபட்டுக் கொண்டால் சபிப்பானே என்ற எண்ணம் பயம் தந்தது. ஆனால் தேவேந்திரனான தான் எப்படியும் தப்பித்து விடுவோம் என்று அவன் உள் மனம் சொன்னது. ஆனால் அஹல்யா? ஒரு முறை அடைந்த பின் அவள் எப்படிப் போனால் என்ன என்று ஆண்மனம் கொக்கரித்தது. சந்தர்பம் வர காத்திருக்கலானான்.

அந்த நாள்:

அந்த நாளும் வந்தது. கௌதமனுக்கு  ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. அஹல்யாவிடம் சொல்லிவிட்டு நதிக்கரைக்கு புறப்பட்டான். ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு அப்படியே யாகம் நடக்கும் இடத்துக்குச் செல்வதாக ஏற்பாடு. யாகம் முடிந்து திரும்ப எப்படியும் இரவாகிவிடும். அவன் புறப்பட்டு சென்றவுடன் அஹல்யா புஷ்பம் பறிக்க நந்தவனத்துக்கு சென்றாள். பூக்களைப் பறித்துக் கொண்டு பர்ணசாலைக்குத் திரும்பினாள். அங்கே அவளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.

பர்ணசாலை உள்ளே நுழைந்த அவள் கண்கள் உள்ளே அமர்ந்திருந்த கௌதமனைப் பார்த்து வியப்பில் விரிந்தன. கௌதமன் உடல் நலம் குன்றியவனைப் போல ஒரு விவரிக்க முடியாத முக பாவத்துடன் அமர்ந்திருந்தான். “ஆர்யபுத்ர” என்றவாறே கையில் இருந்தப் பூக்கூடையைக் கீழே வைத்துவிட்டு அவன்  அருகில் விரைந்தாள். அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள். நெற்றி கொதித்தது. பின்னர் கன்னம் கழுத்து என்று கிரமமாக தொட்டுப் பார்த்ததில் கௌதமன் உடல் ஜ்வரத்தில் கொதித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

“சற்று ஓய்வெடுங்கள், நான் இதோ சென்று மூலிகை பறித்து வருகிறேன்” என்று வெளியே செல்ல யத்தனித்தவளை கௌதமன் கரங்கள் பிடித்து நிறுத்தின.

“ஹே ப்ரியே! இந்த ஜ்வரம் மூலிகையினால் தீர்வதல்ல; காரிகையினால் தீர்வது. உன் உடலில் என்னையேத் தூரிகையாக்கி ஒரு காமச் சித்திரம் வரைந்திட விழைகிறேன். என் அருகில் வா அல்லி மலரே” என்று அவன் வாயிலிருந்து பிதற்றலாக சொற்கள் வெளியே வந்தன.

அஹல்யாவின் காலின் கீழிருந்த பூமி நழுவியது. இது கனவா அல்லது நனவா என்று அவள் மனம் அவளைக் கேட்டது.  நனவுதான் என்று புரிந்த மாத்திரத்தில் அவள் மனதில் இரண்டு வெவ்வேறுவிதமான உணர்வுகள் எழுந்தன.

“ஹே பிரபோ! என்ன சோதனை? யாகத்தில் பங்கேற்க செல்ல வேண்டியவர் போகத்தில் பங்கேற்க திரும்பி வந்திருக்கிறாரே? என்ன அபசாரம்!” என்று அவள் ஒரு மனம் சொன்னாலும், அவள் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த காமக்கனல் கௌதமனை தழுவிக்கொள்ள தூண்டியது.

காமம் வென்றது.

“ஆர்யபுத்ர!” என்று முனகியவாறே கௌதமனின் தோள் அணைந்தாள். அவன் உடம்பிற்குள் செல்ல முயல்பவள் போல் அவனை இறுகத் தழுவினாள்.

கௌதமனின் கரங்கள் அஹல்யாவின் மேனியில் சித்திரம் வரையத் துவங்கின. தடுப்பார் எவருமில்லாத ஒரு மன்னனின் படைகளைப் போல அவள் மேனியில் அவன் கரங்கள் முன்னேறின. இச்சைத் தீ கொழுந்து விட்டு வளர்ந்ததும் கச்சை தளர்ந்தது. முனகுவது அல்லால் வேறு மொழியறியாதவளானாள் அஹல்யா.

தன்னை மெல்ல மெல்ல இழந்துக் கொண்டிருந்த அவள் இதழ்களை கௌதமன் தன் இதழ்களை கொண்டு மூடினான். ஒருவர் நாவு இன்னொருவர் வாயினுள் சென்று நலம் விசாரித்தது. மூச்சு சர்ப்பத்தின் அரவம் போல் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சரசக் காற்றை உள்வாங்கி காமக்கடலினுள் முழுவதுமாக மூழ்கிப் போகவிருந்த வேளையில் அஹல்யாவின் மனதில் பளீரென்று ஒரு மின்னல்.

கௌதமனின் நாசியினின்று வெளி வந்து கொண்டிருந்த மூச்சுக் காற்றில் ஒரு பரிமளம். இதுவரையில் அவள் அவனிடம் சுவாசித்து அறியாத ஒரு சுகந்தம். இந்த வாசனையை வேறு எங்கோ உணர்ந்திருக்கிறாள். அதை மீண்டும் உள்வாங்கி எங்கே இதை உணர்ந்திருக்கிறோம் என்று யோசித்த அஹல்யா திடீரென்று உறைந்தாள்.

இந்திரன்! வந்திருப்பது கௌதமன் அல்ல இந்திரன் என்று அஹல்யாவிற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கிவிட்டது, அவள் உடல் சிலிர்த்தது. கற்பு பறிபோக இருந்ததே என்று விதிர்விதித்தது. ஆண்மகனின் தோள்களைத் தழுவியிருந்த கரங்கள் மெல்லவே விலகின. கலைந்து உலைந்திருந்த ஆடைகளைத் திருத்தினாள்.

“ப்ரியே! ஏன் விலகுகிறாய்? ஏன் ஆசை அடங்கவில்லை!” என்றான் போலி கௌதமன். அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அஹல்யா. மீண்டும் அவளைத் தழுவிட நெருங்கினான் இந்திரன். “ தேவேந்திரரே நில்லுங்கள்!” என்றாள் அஹல்யா.

போலி கௌதமனின் முகம் ஒரு கணம் வெளிறி பின் தன்னிலைக்கு திரும்பியது. கௌதமன் வேஷம் களைந்தான். இந்திரனாக நின்றான். இனிமேல் வேஷம் தேவையில்லை என்று நினைத்தான் போலும்!

இந்த அதிசயத்தைக் கண்ட அஹல்யாவின் கண்கள் விரிந்தன. இந்திரனின் சௌந்தர்யம் அவளை ஸ்தம்பிக்க வைத்தது. அவன் திவ்ய மேனியின் சுகந்தம் அந்த பர்ணசாலை முழுவதும் பரவியது.  அவள் உடல் சிலிர்த்தது. வேண்டாம் என்று அவள் புத்தி சொன்னாலும் நாசி அந்தப் பரிமளத்தை ஆழமாக உள்வாங்கியது. அந்தப் பரிமளமும் அந்த சௌந்தர்யமும் அவள் இந்திரியங்களை தம் வசப்படுத்தின. அவள் உடலில் மெதுவே அணைந்து கொண்டிருந்த காமாக்னி மீண்டும் கொழுந்துவிட்டு எரிந்தது.

அவளுள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை உணர்ந்தான் இந்திரன். மான் மீது பாயும் தருணம் இதுதான் என்றுணர்ந்த புலி போல அவளை வேகமாக நெருங்கினான்.

அவன் விரிந்த கரங்களுக்குள் சரணடைந்தாள் அஹல்யா. ஈருடல் ஒன்றானாது. காமமே உண்மை என்றானது. அந்த சரஸப் போரில் இருவரும் வென்றார்கள். இருவரும் தோற்றார்கள்.

ஸரஸத்தில் காலம் கடந்தது தெரியவில்லை. திடீரென்று பர்ணசாலை வாயிலில் நிழலாடியது. தன்னிலைக்கு திரும்பிய இருவரும் யாரெனப் பார்த்தார்கள். கௌதமன்!

“அஹல்யா” என்று கர்ஜித்தான்.

அதன் பிறகு அங்கு நடந்ததை விவரிப்பது மிகவும் கடினம்.  ஆடைகளை திருத்திக்கொண்ட குற்றவாளிகள் இருவரும் கௌதமன் முன் கைகட்டி  நின்றனர்.

“இந்திரா! தேவர் தலைவனுக்கு இது அழகா?  அடுத்தவர் மனைவியை பெண்டாள எப்படி மனம் துணிந்தது உனக்கு? என் தபஸ் சக்தியின் மீதிருந்த பயம் விலகி விட்டதா? சொல்” என்றான் கௌதமன்  உரத்த குரலில்.

“ கௌதமரே! தவறு ஏன் மீது மட்டுமல்ல, இவளுடையதும் தான். நான் இந்திரன் என்று தெரிந்த பிறகு தான் தவறே நடந்தது ” என்றான் இந்திரன் செருக்குடன்.

“செய்வதை செய்துவிட்டு வாதாடுகிறாயா காமுகா? பெண் யோனியின் மயக்கத்திலே செய்யகூடாத தவறிழைத்தாய். எந்த யோனியின் மீது உன் மனம் லயித்ததோ, அதுவே உன் உடல் முழுவதும் தோன்றக்கடவது. ஏன் தபஸ் சக்தியின் மீது ஆணை” என்று கௌதமன் சபித்தான்.

ஸ்மசான அமைதி நிலவியது. இந்திரன் உடலில் சாபம் உடனே நிறைவேறியது. அதைக்கண்டு வெட்கி அஹல்யா கண்களை மூடிக்கொண்டாள். ஒரு கணம் ஸ்தம்பித்த இந்திரன் பின்னர் கடகடவென்று நகைத்தான். அவன் புத்தி பிசகி  விட்டதோ என கௌதமன் நினைத்தான். “இந்தக் கோலத்தில் நான் வெளியே சென்றால் என்னைக் கண்டு அனைவரும் நகைப்பர் என்பது உண்மையே. ஆனால் அதன் காரணம் தெரிந்து கொண்ட பின்னர் உன் மீது நகைப்பரே! இதை நினைத்தாயா கௌதமா? இந்த தண்டனை உனக்கும் சேர்த்து தான். இனிமேல் நீ யாகங்களுக்கு செல்லத்தான் முடியுமா? இல்லை கூப்பிடத் தான் கூப்பிடுவார்களா? யோசிக்காமல் சாபம் தந்தாயே கௌதமா!” என்று இந்திரன் எள்ளி நகையாடினான்.

என்ன செய்வது என்றறியாத கௌதமன் கண்மூடி த்யானித்தான்.  அருள் வாக்கு கிடைத்தது. “ இந்த சாபம் உன் கண்களுக்கு மட்டுமே தெரியும்; பிறர் கண்களுக்கு அவை கண்களாகவே தெரியும். இங்கிருந்து அகன்று விடு” என்றான். தான் விரும்பியது நடந்த களிப்பில் அந்தக் காமுகன் அங்கிருந்து மாயமானான்.

இப்போது கௌதமன் பார்வை தன் மனையாளின் பக்கம் திரும்பியது.

 ‘ நான் அப்படி என்ன அவளுக்கு குறை வைத்து விட்டேன்?’ என்று யோசித்தான் கௌதமன். அப்போது அவன்  உள்மனது ‘கௌதமா!’ என்று எச்சரித்தது. ‘உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதே; உனக்கு தெரியாதா அவள் ஏக்கம் என்னவென்று? பெரிய ரிஷியாய் இருந்தால் என்ன, பெண் மனஸை புரிந்து கொண்டு விடமுடியுமா என்ன? மேலும் தவறு அவள் செய்து இருந்தாலும், அவளை செய்யத் தூண்டியது யார் குற்றம்? நீ தானே? மனைவியை கண் போல் பார்த்து கொள்ள வேண்டியது கணவன் கடமை தானே? நீ உன் கடமையை பிழையில்லாது செய்தாயா?’ என்று அவன்  மனஸ் சொன்னது.

கௌதமன் அமைதியானான்.

யோசித்துப் பார்கையில் அது அவள் தவறாக மட்டும் தோன்றவில்லை அவனுக்கு. அஹல்யாவைப் பார்த்தான். ஒரு எலிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு இருந்தாள். ‘ராக்ஷசி எவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று அவன் மனஸ் ஒரு க்ஷணம் அவள் அழகில் லயித்தது. இருந்தாலும் தவறுக்கு தண்டனை உண்டல்லவா?

“ ஹே அஹல்யே ! உன் தவறுக்கு ஒரு வகையில் நானும் காரணம். என்றாலும் நீ தண்டைனுக்கு பாத்திரமானவள். ஆசையை அடக்க முடியாமல் அறிந்தே தவறிழைத்த நீ, சஞ்சல மனசிற்கு சொந்தக்காரியான நீ, எந்தவித சலனமுமில்லாத கல் ஆவாய். திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திரன் பாததூளி பட்டு மீண்டும் பெண்ணாவாய்!” என்று சபித்தான்.

அஹல்யா கல் ஆனாள். அந்தக் காட்சியைக் கண்டு கௌதமன் மனம் வேதனையில் குமுறியது. அவளுடைய அழகு, அவளுடைய பண்பு, அடக்கம் என்று அவள் குணங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போயின. திடீரென்று அவன் காதுகளில் ஒரு குரல். “ கௌதமா! இருவருக்கு தண்டனை கிடைத்து விட்டது. சம்பந்தப்பட்ட மூன்றாவது ஆளான உனக்கு என்ன தண்டனை? யார் அளிப்பார்?”

கௌதமன் ஒரு முறை கல் அஹல்யாவைப் பார்த்தான். அவள் அருகே சென்று அவளை ஆலிங்கனம் செய்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக அஹல்யாவின் மீது விழுந்தது. கல்லான அவள் அவன் கண்ணீரைத் துடைக்க முடியாது உள்ளுக்குள்ளே அழுதாள்.
தண்டமும் கமண்டலமும் எடுத்துக் கொண்டு கௌதமன் காட்டினுள் சென்றான். திரேதா யுகத்துக்காகவும், அஹல்யாவிற்காகவும் காத்திருக்க வேண்டி தவத்தில் ஆழ்ந்தான். கல்லானான்.

முற்றும்
“ஆஹா! கதை மிகவும் அருமையாக வந்திருக்கிறது. எப்படியும் இந்த முறை ஆபீஸில் நடக்கப் போகும் சிறுகதைப் போட்டியில் எனக்கு தான் பரிசு. நான் தான் ஜெயிப்பேன்!” என்று சந்தோஷமாக பேனாவை மூடி வைத்து விட்டு ராஜசேகரன் நிமிர்ந்தான். பின்னால் படுக்கையைப் பார்த்தான். கல்யாணியை  காணவில்லை. ‘எங்கே போயிருப்பாள் இந்த வேளையில்?’ என்று யோசித்தவாறே கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 1.45. குழப்பத்துடன் பெட்ரூமிலிருந்து வெளியே வந்து ஹால் கம்ப்யூட்டர் ரூம் கிச்சன் என்று ஒவ்வொரு இடமாக தேடியும் கல்யாணியைக் காணவில்லை. அப்பொழுதுதான் அவன் கண்கள் பின்னால் புழக்கடை கிணற்றுக்கு போகும் கதவு திறந்து இருப்பதை கண்டன.

“இந்த நேரத்தில் கிணற்றடியில் என்ன செய்கிறாள்? பைத்தியம் பிடித்து விட்டதா  என்ன?” என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே கதவைத் திறந்து வெளியே வந்தவனின் கண்கள் அந்தக் காட்சியை கண்டு நிலைகுலைந்தன.

கிணற்றடியில் இருந்த கல்லில் கல்யாணி உட்கார்ந்து இருந்தாள். அவள் அருகில் குடம். அவள் தலையிலிருந்து கால் வரையில் நனைந்திருந்தாள். அவள் கண்கள் எங்கோ நிலைகுத்தியிருந்தன. அவள் உதடுகள் மட்டும்  ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அவளருகில் சென்றதும் ராஜசேகரனுக்கு அவள் என்ன முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் என்று காதில் நன்றாக விழுந்தது.

“எனக்கு எப்போது சாப விமோசனம்?”