ரிஜெக்டட்
சின்னமலை பஸ் ஸ்டாண்டில் எதிர்பாராத
விதமாகத்தான் சுரேஷ் அவளைப் பார்த்தான். சட்டென்று அவள் பெயர் ஞாபகத்துக்கு
வரவில்லை. ஏதோ ‘தி’யில் முடியும் பெயர். மாலதி.... இல்லை இல்லை வானதி.
போன வாரம் அவளைப் பெண் பார்க்கச் சென்று
ரிஜெக்ட் செய்திருந்தான் சுரேஷ். அதனால் அவள் பெயர் ஞாபகத்துக்கு வராததில் ஒருவித
நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டான்.
காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அவளிடம்
வந்தான்.
“ஹலோ, வானதி?”
“ஹாய் சுரேஷ்! எப்படி இருக்கீங்க?”
“I am fine. எங்க இந்த இடத்துல?”
“எக்ஸ்பிரஸ் அவென்யூ போகணும். பஸ்ஸுக்காக
வெயிட்டிங். நீங்க எங்க இந்தப் பக்கமா?”
“நான் எஸ்கேப் தியேட்டர் தான் போறேன். வாங்க
டிராப் பண்ணிடறேன்”
“எதுக்கு சிரமம்? நான் பஸ்ஸிலேயே போயிடறேன்.”
“இதிலென்ன சிரமம்? படம் ஆரம்பிக்க இன்னும்
நேரம் இருக்கு.”
சரியென்று அவன் காரில் அமர்ந்த வானதி
இருபதுகளின் மத்தியில் இருந்தாள். சட்டென்று கண்ணைக் கவரும் லட்சணமான முகம். பெரிய
கண்கள். தீர்கமான அளவான நாசி. வரைந்தது போல உதடுகள். மொத்தத்தில் அழகு. ஆனால்
இத்தனை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் சுரேஷ் அவளை ரிஜெக்ட் செய்யக் காரணம் அவள்
சற்று மாநிறம்.
சுரேஷ் நல்ல கலர். கிட்டத்தட்ட எம்ஜிஆர் கலர்.
நல்ல ஸ்மார்ட். அவனுக்கு கலராய் இருப்பதில் ஒருவித கர்வம் உண்டு. அதை எல்லா
சந்தர்பங்களிலேயும் மற்றவர்களுக்கு அவன் உணர்த்தவும் தவற மாட்டான். அதற்கு முக்கிய
காரணம் அவன் அம்மா.
பங்கஜம் நல்ல வெள்ளை. ஆனால் இவன் அப்பா சேகரன்
மாநிறம் தான். பங்கஜத்துக்கு சொந்த மாமன் பிள்ளை. சொந்தம் விட்டுப்போகக் கூடாது
என்று கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் பங்கஜத்துக்கு மாநிற சேகரனைக்
கல்யாணம் செய்து கொண்டதில் வருத்தம் தான். அதைச் சொல்லியும் காட்டுவாள்.
அவளுடைய நல்ல காலம், சுரேஷ் கலரில் அவளைக்
கொண்டு பிறந்தான். ரொம்பவே சந்தோஷம் அவளுக்கு. வெள்ளையாய் இருக்கிறோம்
என்னும் ஒரு superiority காம்ப்ளெக்ஸுடன் அவனை வளர்த்தாள். நண்பர்களை செலக்ட் செய்வதில்
இருந்து எதிலுமே அவன் ஒரு கலர் கான்ஷியஸாக வளர்ந்தான்.
அதனால்தான் அப்பா போன வாரம் பெண் பார்க்கப்
போவதைப் பற்றி சொன்னபோது ‘பெண் fairஆக இருப்பாளா?’ என்பது தான் அவன் கேட்ட முதல்
கேள்வி.
பெண் ரொம்பவும் லட்சணம் ஆனால் நிறம் சற்று
குறைவு என்றும், ஒரு முறை அவன் அவளைப் பார்த்தால் பிடித்து விடும் என்றும் சேகரன்
பிடிவாதம் பிடித்ததனால் வேறு வழியின்றி இவன் பெண் பார்க்கப் போக நேர்ந்தது.
அப்பா சொன்ன மாதிரி வானதி அழகாகத் தான்
இருந்தாள். இவன் மனத்திலும் ஒரு ஓரத்தில் ஆசை துளிர்த்தது. அப்புறம் பதில்
சொல்கிறோம் என்று வந்து விட்டார்கள். வரும் வழியில் அப்பா “என்னடா முடிவு?” என்று
கேட்டார்.
இவன் வாயைத் திறப்பதற்குள் பங்கஜம் “இவன என்ன
கேக்கறது? நான் சொல்றேன் இவன் கலருக்கு அவ சரிவர மாட்டா. அதனால வேண்டாம்னு
சொல்லிடுங்க” என்றாள்.
சின்ன வயசிலிருந்தே பங்கஜம் பேச்சை எதிர்த்து
பேசி அறியாதவன் இப்போதும் மௌனமானான். பின்னர் சேகரன் பெண்ண வீட்டுக்குப் போன் போட்டு விஷயத்தை ஒரு மாதிரி சமாளித்துவிட்டார்.
அதற்கப்புறம் இன்றுதான் அவளைச் சந்திக்கிறான்.
“EA வந்தாச்சு” என்று வானதி சொன்ன பிறகுதான்
அவன் சிந்தனையிலிருந்து விடுபட்டான்.
காரைப் பார்க் செய்துவிட்டு இருவரும்
இறங்கினார்கள். ஒரு coffee சாப்பிட்டுவிட்டு போகலாமா? என்று சுரேஷ் கேட்க அவளும்
சரியென்றாள். அங்கிருந்த Cafe Coffee Dayக்கு சென்றார்கள்.
Coffee ஆர்டர் செய்தார்கள். ஒரு மௌனம்
நிலவியது. சுரேஷ்தான் உடைத்தான்.
“வானதி, I am sorry for what happeened. உங்கள
ஹர்ட் செய்யணும்னு நெனைச்சு எதுவும் செய்யல. “
“இல்லவே இல்லை. பட் நீங்க என்ன காரணத்துக்காக
என்ன ரிஜெக்ட் செஞ்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
சுரேஷ் மௌனமானான். எப்படிச் சொல்வான்?
“பரவாயில்லை. என்ன காரணமானாலும் சொல்லுங்க”
என்றாள் வானதி.
“ நீங்க வருத்தப்படக்கூடாது. எனக்கு உங்களப்
பிடிச்சுது. ஆனா உங்க நிறம்.....” என்று பாதியிலே நிறுத்தினான்.
“ ஓ! நான் கருப்புங்கறதால வேண்டாம்னு
சொன்னீங்களா? அது ஒரு பெரிய விஷயமே இல்லை சுரேஷ். என் கலர வச்சு என்னப் பலரும்
பேசற பேச்செல்லாம் பழகிப் போச்சு. ஸ்கூல் காலேஜுல கூட அப்படித்தான். ஆரம்பத்துல
கோவம் வந்தது. அப்புறம் பழகிப் போச்சு.
ஆபீஸ் ஜாய்ன் பண்ணதுக்கு அப்புறம் தான் என்
வாழ்க்கையில ஒரு வித்தியாசம் வந்தது. என் ஆபீசுல வட நாட்டைச் சேர்ந்தவங்க நிறைய
பேர் வேலை செய்யறாங்க. அதுல நவீன் ஷர்மாவும் ஒருத்தன். தில்லியச் சேர்ந்த பஞ்சாபி.
நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது.
ஒரு நாள் என்கிட்டே வந்து என்ன விரும்பறதா
சொன்னான். எனக்கு ரொம்ப அதிர்ச்சி. அவன் ஸ்மார்ட்நெஸ் எங்க நானெங்க? கொஞ்சம்
யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னேன்.
‘வானதி! நீ உன் நிறத்த வெச்சுத் தயங்கினா
இப்பவே நான் ஒண்ணு சொல்லிடறேன். நம்ம ஆபீஸ்ல நடந்த ஒரு பார்டில எடுத்த போட்டோல
இருந்த ஒன்ன நான் போன மாசம் வீட்டுக்கு போன போது என் அப்பா அம்மாகிட்டக்
காட்டினேன். உன்னோட குணத்தைப் பத்தியும் சொன்னேன். அவங்களுக்கு உன்ன ரொம்ப
பிடிச்சிருச்சு. எவ்ளோ அழகுன்னு சொன்னாங்க. நீ நிறம் கம்மின்னு சொன்னேன். நிறம்
என்ன நிறம், குணவதின்னு சொல்ற. முகத்துல லக்ஷ்மி களையிருக்கு. அது தான்
முக்கியம்னு சொல்லிட்டாங்க. ஸோ, இப்ப நீயும் உன் parentsம் தான் decide
பண்ணனும்’னு சொன்னான்.
அப்ப தான் நான் முடிவு செஞ்சேன். கல்யாணம்னு
பண்ணிகிட்டா அவனைத் தான் பண்ணிக்கணும்னு. என்ன எனக்காக விரும்பற ஒருத்தரோட தான்
என் வாழ்க்கை நல்லாயிருக்கும். இத என் அப்பாகிட்டா சொல்லனும்னு நான்
நினைக்கறதுக்குள்ள உங்க சம்பந்தத்தக் கொண்டு வந்தார்.
இந்த சம்பந்தம் சக்ஸஸ் ஆகக் கூடாதுன்னு நான்
வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு வேளை நீங்க என்ன ரிஜெக்ட் செஞ்சிருக்கலேனா நானே உங்கள ரிஜெக்ட் செஞ்சிருப்பேன். நான் அந்த
மாதிரி செஞ்சிருந்தேன்னா, என் அப்பா அம்மாகிட்ட என் காதல convince பண்ணறது கொஞ்சம்
கஷ்டமாயிருந்திருக்கும். நீங்க ரிஜெக்ட் செஞ்சதுனால, நான் என் காதல சொன்னதுமே
அவங்க ok சொல்லிட்டாங்க. இன்னும் ரெண்டு நாள்ல நவீன் குடும்பம் என்னப் பொண்ணு
பார்க்க வரப் போறாங்க.
ஸோ, ஒரு வகைல நீங்க எனக்கு ஹெல்ப் தான்
பண்ணியிருக்கீங்க. ரொம்ப நன்றி” என்று வானதி சொல்லி முடித்தாள்.
சுரேஷ் முதன் முறையாக தான் fairஆகப்
பிறந்ததற்கு வருந்தினான்.
1 comment:
Good one, VRI. This is the reality - Indians (more so Tamilians) are hung up on the skin color. There was this guy who bragged about his fairness (like Suresh)until he was told that he was brown by an American friend!!
Post a Comment