Wednesday, July 30, 2014

கொல்லத் திறந்தது கதவு


உன்கிட்ட அவன் மயங்குவான்டி மாலினி, அது தான் அவனுக்கு அழிவுன்னு என் புருஷன் சொன்னார். அது எப்படி அவ்வளவு துல்லியமா அவரால உங்கள ஜட்ஜ் செய்ய முடிஞ்சுது?

மாலினியின் குரலில் தெரிந்தது ஆச்சர்யமா இல்லை ஏளனமா என்று என்னால் ஜட்ஜ் செய்ய முடியவில்லை. ஆனால் நான் ரொம்ப சாமர்த்தியசாலி என்று நினைத்து போட்ட ப்ளான் வேஸ்ட் என்பது மாத்திரம் தெரிந்து விட்டது.

மாலினி என் மைத்துனி. என் மனைவியின் தங்கை. ரொம்ப அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சிலபல குற்றங்களைச் செய்யத் தூண்டும் உடல்வாகு. அவளது வளைவான இடையில் என் விழிகள் செய்யும் பயணம் என் மனைவி அறிவாள். ஏன் மாலினி கூட ஓரிரு முறை கவனித்து இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் சந்திரனுக்கும் தெரியும் என்பது கொஞ்சம் சர்ப்ரைஸ் தான்.

ஆனால் இனிமேல் அவனுக்குத் தெரிந்து என்ன தெரியா விட்டால் என்ன? அவன் தான் செத்துப் போய்விட்டானே!

கண்ணாடியைப் பார்த்தேன். கண்ணாடியில் இருந்து என்னை சந்திரன் பார்த்தான். அதாவது சந்திரன் உருவில் இருந்த நான். ஆனால் அந்த முகத்தில் ஒரு குழப்பம்.

‘என்னடா இது புதுக்குழப்பம் என்று நீங்கள் கேட்பதற்கு முன் உங்களை சற்று திருவண்ணாமலை வரை கூட்டிச் செல்லலாம் என்று இருக்கிறேன். அதுவும் ஒரு பத்து மாதம் முன்னால். 

ஒரு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக நான் அங்கு சென்றிருந்தேன். சர்கார் கட்டும் ஒரு பெரிய ஹவுசிங் ப்ராஜக்ட். சர்கார் என்றாலே தரம் குறைந்த சிமண்டும் நிறைய லாபமும் என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் ஒரு சரியான இந்தியப் பிரஜை. இந்த மாதிரி ஏற்கனவே இரண்டு ப்ராஜக்ட் செய்து தான் நகரின் முக்கியப் புள்ளிகளில் ஒருவனாக உயர்ந்திருக்கிறேன்.

ப்ராஜக்ட் சைட் சென்று பார்த்து விட்டு திரும்பி வந்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு நான் தங்கி இருந்த லாட்ஜுக்கு வந்தேன். சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு சாப்பிட சுமார் எட்டு மணிக்கு ஹோட்டலுக்குச் சென்றேன். டின்னருக்குப் பின்னர் ஒரு புகை இழுத்துவிட்டு வரலாம் என்று சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றேன்.

ஆனந்தமாக புகையை இழுத்து வெளியே விடும் போது சரேலென்று இருட்டிலிருந்து ஒரு உருவம் வெளியே வந்தது.

திடுக்கிட்டு கத்த நினைத்த நான் அது ஒரு சாமியார் என்று தெரிந்து அமைதியானேன்.

“என்ன பயந்துட்டியா?”

“ ஆமாம் சாமி., யாருதான் பயப்படமாட்டாங்க? இருட்டில என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?”

“ அதெல்லாம் போகட்டும். சாப்பாடு வாங்கிக் கொடுப்பியா?”

‘வாங்க’ என்று சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஹோட்டலில் சாப்பிட வைத்தேன்.

இரண்டு செட் பூரிக் கிழங்கு சாப்பிட்ட சாமி, கையை தன் வேட்டியிலேயேத் துடைத்துக்கொண்டு வெளியே போனார். பின் தொடர்ந்து போன என்னைப் பார்த்து “சாமிக்கு சந்தோஷம்! என்ன வேணும்?”

முதலில் தயங்கிய நான் “ ஒரு காண்ட்ராக்ட் விஷயமா வந்தேன். வேலை சக்ஸஸ் ஆகணும்னு ஆசிர்வார்தம் குடுங்க” என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்த சாமி, தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முடிச்சுப் பையைத் திறந்து கையை உள்ளே விட்டு ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தார். அதற்குள் இரண்டு மாத்திரை மாதிரி இருந்தது அதன் transparent மூடி வழியாகத் தெரிந்தது.

“இத வச்சுக்கோ. நீ நெனச்சது நடக்கும். நீ புத்திசாலி” என்றார்.

“இத என்ன பண்ணணும் சாமி?”

“இத சாப்பிட்டா ஒரு இரண்டு மணி நேரம் வரைல நீ உன் உடம்ப விட்டு வெளிய வரலாம். எங்க வேணா போகலாம் சுத்தலாம். வேகம் தூரம் தடையெல்லாம் இருக்காது. எதுவும் உன்னத் தடுக்காது. உனக்குப் பிரியம்னா பர காயப் பிரவேசம் கூடப் பண்ணலாம். ஆனால் இரண்டு மணி நேரத்துக்குள்ள உன் உடம்புக்குள்ள வந்திடணும். நீ புத்திசாலி. பாத்து நடந்துக்கோ” என்று சொல்லித் திரும்பவும் இருட்டில் மறைந்தார்.
கொஞ்ச நேரம் வரை ஸ்தம்பித்து நின்றேன். கனவா நனவா என்று புரியாத கயிற்றரவு நிலை.

அப்புறம் அடுத்த நாள் சென்னை வந்தது ப்ராஜக்ட் டெண்டரில் மூழ்கியது என்று கிட்டத்தட்ட அந்த சாமியாரை மறந்தே விட்டேன். டெண்டர் சப்மிஷன் நாள் நெருங்கியது. அதற்கு ஒரு நாள் முன்னர் சுந்தரமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.

சுந்தரமூர்த்தி சாகர் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கிறான். அது என் எதிரி கம்பெனி. அந்த திருவண்ணாமலை ப்ராஜக்டில் ஒன்று அவன் அல்லது நான் என்ற நிலை. எப்படியாவது அவன் டெண்டர் கொட்டேஷன் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக அவனிடம் வேலை பார்த்த சுந்தரமூர்த்தியை கரெக்ட் செய்தி வைத்திருந்தேன். இதோ அவனிடம் இருந்து தான் போன். வேலை முடிந்துவிட்டது போல.

“என்னய்யா, முடிஞ்சுதா வேலை?”

“ இல்ல சார்! இந்த வாட்டி சாகர் யாரையும் கிட்ட சேக்கல. அவரும் அவர் தம்பியுமா இன்னிக்கி ராத்திரி தனியா உக்காந்து வேலைய முடிக்கப்போறாங்க. அதச் சொல்லத்தான் போன் செஞ்சேன்.”

நான் அதிர்ந்து போனேன். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று மூளையின் செல்கள் துரித வேகத்தில் வேலை செய்யத் துவங்கின. எப்படி ஏன் என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் எனக்கு திருவண்ணாமலையின் சாமியாரும் அவர் தந்த மாத்திரையும் நினைவுக்கு வந்தன.

ஒரு மின்னல்! ஒரு புன்சிரிப்பு.

சரியாக இரவு பத்து மணிக்கு என் ஆபீசில் யாரும் இல்லாத வேளையில், கதவைச் சாத்திவிட்டு என் கேபினில் சென்றேன். அந்த பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து அதில் இருந்த ஒரு மாத்திரை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டேன்.

சற்றே இனித்தது. முழுவதும் கரைந்து உள்ளே சென்றது. சிறிது நேரத்தில் ஒரு வித மயக்கத்தில் என் சேரில் விழுந்தேன். அப்புறம் திடீரென்று என் கண்கள் திறந்தன. என் ஆபீஸ் தெரிந்தது. சேரில் விழுந்திருந்த என் உடம்பு தெரிந்தது. ஆஆ.. சொன்னபடி ஆயிற்றே! நான் என் உடலில் இருந்து வெளியே வந்து விட்டேன். கனமே இல்லாதது போல ஒரு உணர்வு. காற்றில் பறப்பது போல ஓர் உணர்வு. சரி இனிமேலும் நேரம் வீணடிப்பது சரியில்லை என்று ஜன்னலைத் திறந்து வெளியில் வெட்ட வெளியில் கால் வைத்தேன். விழவில்லை. மாறாக உடம்பில் ஒரு தெம்பு வந்தது. வெகு வேகமாக நடக்கலாம் போலத் தோன்றியது. சட்டென்று சாகர் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ் இருந்த இடத்துக்கு வானத்திலேயே வேகமாக நடந்து சென்றேன்.

நினைத்தது போலவே ஆபீஸ் மூடியிருந்தது. உள்ளிருந்து வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கதவைத் திறக்காமலே அதன் ஊடாக உள்ளே சென்றேன். சாகர் கேபினில் இருந்து தான் வெளிச்சம். கதவின் ஊடாக உள்ளே சென்றேன். சாகரும் அவன் தம்பியும் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

அருகில் இருந்த லேப்டாப்பில் அந்த டெண்டர் டாக்குமெண்ட் திறந்திருந்தது. நான் எல்லா விவரங்களையும் பார்த்தேன். கடைசியில் அவர்கள் கோட் செய்திருந்த project costஐயும் பார்த்தேன். சிறிது நேரம் அங்கே நின்றேன். இருவரும் அந்த டாக்குமெண்ட் மீண்டும் ஒரு முறை படித்தார்கள். பின்னர் சாகர் கையெழுத்திட்டான். அதை ஒரு கவரில் வைத்து மூடினார்கள்.

“டேய், நீ நாள காலம்பற திருவண்ணாமலை போயி குடுத்துட்டு வந்திடு” என்றான் சாகர் தம்பியிடம். அவனும் தலையசைத்தான்.

பின்னர் இருவரும் தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு ( அந்தக் கவரையும் தான்) லைட் அணைத்து விட்டு, வெளியே வந்தார்கள்.

வெளியே வந்தவர்கள் வாட்ச்மேனிடம் ஆபீஸ் பூட்டச் சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார்கள்.

நான் பின்னர் என் ஆபீஸ் திரும்பினேன். சேரில் இருந்த என் உடல் அருகில் சென்றேன். திடீரென்று ஒரு வெளிச்சம். கண்ணைக் கட்டியது. அது விலகி கண் திறந்து பார்த்தால் நான் என் உடலுக்குள்.

அப்புறம் அந்த டெண்டர் தயாரித்தது, சாகர் கன்ஸ்ட்ரக்ஷன் விட குறைந்த cost கோட் செய்தது, அந்த ப்ராஜக்ட் எனக்கே கிடைத்தது, அதனால் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் லாபம் மற்றும் நல்ல பெயர், இத்யாதி இத்யாதி உங்களுக்கு அவ்வளவு இன்ட்ரஸ்டிங்காக இருக்காது. அதனால் மாலினி மேட்டருக்கு வருகிறேன்.

மாலினி என் மைத்துனி என்று ஏற்கனவே சொன்னேன். அவளை அடைய என் ஒவ்வொரு அணுவும் துடித்ததைச் சொன்னேனா? இல்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


நான் பல பெண்களைப் பார்த்துவிட்டேன். என் இளமையில் இருந்து இந்த ஐம்பது வயது வரை. இருந்தாலும் மாலினி ஒரு விதமாக என்னை தொந்திரவு செய்தாள். ஆனால் அவளை அடையும் வழி தான் தெரியவில்லை.

அவளோ சந்திரனோ பணத்துக்கு மசிபவர்கள் அல்ல. மேலும் நெருங்கிய உறவு வேறே. சற்று கவனத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றால் பெயர் கெட்டுப்போகும்.

அப்போது தான் அந்த சந்தர்ப்பம் வந்தது. இதை சந்தர்ப்பம் என்று சொன்ன என்னை நீங்கள் செருப்பால் அடிப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்?

ஒரு நாள் காலையில் மாலினியிடமிருந்து போன். “மாமா” என்று கதறினாள். “உடனே வாங்க”. 

“போயி பாத்துட்டு வாங்க. நான் கொஞ்சம் கழிச்சு பெரிய கார்ல வந்துடறேன்” என்றால் பூஜையில் இருந்த மனைவி.

சந்திரன் வீட்டுக்குப் போனால், அங்கே ஒரு விபரீதம். சந்திரன் இறந்து கொண்டிருந்தான்.

என்னவென்று தெரியவில்லையாம். திடீரென்று மூச்சு அடைப்பது போல் இருந்ததாம். அப்புறம் சிறிது சிறிதாக அடங்க ஆரம்பித்து விட்டானாம். இது தான் நீ எதிர்பார்த்த சந்தர்ப்பம் என்று என்று என் காமம் காதில் ஓதியது. நான் மாலினியிடம் வெளியே போகச் சொன்னேன். அங்கே இருந்த பாத் ரூமுக்குள் சென்றேன். பாக்கட்டில் பத்திரமாக வைத்திருந்த அந்த மாத்திரையை எடுத்து விழுங்கினேன்.

வசதியாக பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டேன். அப்புறம் எல்லாம் முன் சொன்ன படியே நடந்தது. ஒரு வித்தியாசம். நான் சந்திரன் உடலுக்குள் நுழைந்தேன். எழுந்தேன். “மாலினி” என்று சந்திரன் குரலில் கூப்பிட்டேன். 

உள்ளே நுழைந்தவள் சொன்ன வார்த்தைகளைத்தான் முதலில் கொடுத்து இருக்கிறேன்.

“என்னடி சொல்லுகிறாய்?”

“நீங்க என் மாமாங்கறது தெரியும். மாத்திரை சாப்பிட்டுக் கூடு விட்டு கூடு பாஞ்சிருக்கீங்கன்னு தெரியும்.” என்று சொல்லிச் சிரித்தாள்.

“பாவி! எப்படித் தெரியும்?”

“அது மட்டுமில்ல மாமா! இப்ப நீங்க சாகப்போறீங்கன்னும் தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல என் அக்காவும் சாகப்போறாங்கறதும் தெரியும். அப்புறம் நானும் என் புருஷனும் உங்க சொத்த அனுபவிச்சுக்கிட்டு வாழப்போறோம். அதுவும் தெரியும்.

முக்கியமா அதுக்கு முன்னால இந்த பாத்ரூம் கதவு திறக்கபோவுது. அதிலிருந்து உங்க உருவத்துல என் புருஷன் வெளில வரப் போறார். அப்புறம் உங்களுக்கு தி எண்டு தான்” என்று சொல்லிச் சிரித்தாள் மாலினி. 

அவள் சொல்லியது போலவேக் கொல்லத் திறந்தது கதவு.

நான். அதாவது என் உருவில் இருந்த சந்திரன்.

“என்ன சகல! இப்புடி விழுந்திட்டியே! அந்த சாமியார் நான் சொல்லித் தான் உன்கிட்ட வந்தார். இதோ என் கையில இருக்கற இந்த விஷம் கூட அவர் கொடுத்ததுதான். டாக்டர் பார்த்தாக்கூட ஹார்ட் அட்டாக்னு தான் சொல்லுவாராம். பாத்துடுவோமே!” என்று சொல்லியபடி என்னை நெருங்கினான்.

என் கண்கள் கடைசியாக ஒரு முறை மாலினியின் இடையில் பயணம் செய்தது.

Monday, July 28, 2014

ஒரு சொல் கொல்லும்


எனக்கு அவசரமாக ஒரு தமிழ்ப் புலவர் வேண்டும். அறம் பாடத் தெரிந்த புலவர். ஒருத்தியைக் கொல்ல வேண்டும். எல்லாம் தணிகாச்சலத்தோட ஐடியா.

‘இவன் என்ன லூஸா?’ என்று அந்தண்டை நழுவுவதற்கு முன் சொல்லி விடுகிறேன். நான் லூஸு இல்லை. ஒரு வங்கியின் மேலாளர். வங்கி என்றவுடன் ஏதோ தி நகர் மவுண்ட் ரோடு என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல.

அத்திப்பட்டு தெரியுமா அத்திப்பட்டு? நம்ம ‘சிடிசன்’ புகழ் அத்திப்பட்டு இல்லை. மீஞ்சூர் தாண்டி வரும் அத்திப்பட்டு. அங்கு ஒரு சர்கார் வங்கியில் மேலாளர். வங்கி மேலாளருக்கு எதுக்கு அறம் தெரிந்த புலவர் என்று கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன். எதுக்கு கொலை என்று கேட்டால் பதில் சொல்கிறேன்.

மேலாளரின் முக்கிய பணிகளில் ஒன்று கடன் கொடுப்பது. அத்திப்பட்டு அரும்பாக்கம் இல்லை என்றாலும் அங்கும் கடன் கேட்டு வருபவர்கள் நிறைய உண்டு.

பிள்ளைக்குக் கல்யாணம், சாகுபடி, வீடு கட்ட வேண்டும், உடல் நிலை சரியில்லை என்று என்னென்னவோ காரணங்கள்.

சரி கதைக்கு வாங்க என்று நீங்கள் அலுத்துக் கொள்வது புரிகிறது.

மூன்று வருட ட்ரான்ஸ்பரில் வந்த நான் குடும்பத்தை அழைத்து வரவில்லை. தனிக் குடித்தனம் தான். வங்கி அருகிலேயே ஒரு சின்ன வீடு.
சரி சரி சிறிய வீடு. அதில் தான் நானும் தணிகாசலமும் குடியிருந்தோம்.

அந்த வீட்டில் ஒரு விசேஷம் உண்டு. என் பெட் ரூமில் என் பெட்டுக்குப் பக்கத்தில் இருந்த சுவரில் சுண்ணாம்பு உரிந்து இருந்தது. அது பல patternகளை செய்திருந்தது. அந்த patternகளில் ஒன்று ஒரு மனித முகம் போல இருந்தது. அந்த முகத்துக்கு நான் தான் தணிகாசலம் என்று பெயர் வைத்தேன். இவன் லூஸு தான்னு நீங்க முடிவு செய்யுறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். என்னோட சொந்த ஊர்ல எங்கப்பா பிரெண்ட் ஒருத்தர் தணிகாசலம்னு இருந்தார். அவர் முகம் மாதிரியே இருந்ததா அதுனாலதான்.

என் தனிமையைப் போக்க நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் தணிகாசலத்துடன் பேசுவதுண்டு. என் மனதின் காயங்கள் தாபங்கள் எதிபார்ப்புகள் ஆசைகள் என்று ஒன்று விடாமல் நான் அவனுடன் ஷேர் செய்வேன்.

அவன் பொதுவாக திரும்ப பதில் சொல்ல மாட்டான். என் பிரச்சனை எதுவும் சொல்லி நான் ரொம்பவும் வருத்தப்பட்டால் அப்போது மட்டும் பதில் சொல்வான். அதுவும் சிறிய வாக்கியங்களில்.

சரி அப்படி ஒரு நாள் நான் என் ப்ராப்ளம் சொல்லி அழுதபோது அவன் தந்த ஐடியா தான் ஆரம்பத்தில் நான் சொன்னது.

என்ன நடந்ததுன்னு அவன் கிட்ட சொன்னத உங்க கிட்டவும் சொல்றேன். கேளுங்க.

மூணு மாசம் முன்னால ஒரு நாள் அதிகம் கூட்டமில்லாத (என்னிக்கு இருந்திருக்கு?) ஒரு மதியத்தில் வசுமதி வங்கிக்கு வந்தாள். (ஆரம்பிச் சுட்டியான்னு நீங்க கேக்குறது காதில விழுகிறது). லோன் விஷயமாக.

வசுமதின்னு பேரு தான் கர்னாடகம். ஆளு நம்ம ஊரு பாஷைல ‘ஃபிகர்’!.

எனக்குத் தான் அழகான பொண்ணுகளப் பாத்தா ஆகாதே! உடம்பு உடனே குப்புன்னு வேர்த்து விட்டது.

இந்த பொம்பளைங்களுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ, ஒரு ஆண் தங்கள் அழகில் சாய்ந்து விட்டான் அப்படீங்கறது மட்டும் உடனே தெரிஞ்சிடும். வசுமதிக்கும் தெரிஞ்சுடுத்து.

அப்புறம்  என் எதிரில் உட்கார்ந்து தன்ன அறிமுகம் செஞ்சு கொள்ள, நான் அவ மொகத்தப் பாக்க, அவ லோன் பத்திப் பேச, நான் அவ கழுத்தைப் பாக்க,
அவ டாக்குமெண்ட்ஸ் செக்யூரிட்டி பத்திப் பேச, நான் கழுத்துக்குக் கீழே பாக்க, கடைசியா ஒரு விஸ்கி குரலில் ‘ எனக்கு லோன் குடுப்பீங்களா சார்?” என்று என்னக் கொஞ்சலாப் பாக்க நான் அவள் நாபியைப் பாத்தேன்.

அவளுக்குப் புரிந்து விட்டது. டேபிள் கீழே காலைத் தற்செயலாக படுவது போல என் காலில் பட்டு, ‘சாரி சார்’ என்றாள். ‘இட்ஸ் ஓகே’ என்றதும் நன்றாகவே என் கால் மீது வைத்துக் கொண்டாள்.

நான் ப்யூனை அழைத்து அப்ளிகேஷன் படிவம் வரவழைத்து எல்லா விவரமும் நிறைக்கத் துவங்கியதும் அவள் கால் என் காலைத் தடவத் துவங்கியது.

“இத ஜோனல் ஆபீஸ் அனுப்பணும். ரெண்டு நாள்ல பாஸ் ஆயிடும். நான் சொல்லி அனுப்பறேன்”

“எதுக்கு சொல்லி அனுப்பணும்? நீங்களே வாங்க” என்று சொல்லி அவள் தன் கார்டைக் கொடுத்துச் சென்றாள்.

அப்புறம் நான் அவள் வீட்டுக்குச் சென்றது, அடிக்கடிச் சென்றது இதெல்லாம் சொல்லித் தான் தெரியணுமா?

இப்படி இருக்கையில ஒரு நாள் வசுமதி “ சார் என் அண்ணன் ஊர்லே இருந்து வர்றார். கொஞ்ச நாள் என்கூடத் தான் இருப்பார். அதுனால இந்தப் பக்கம் வர்றத கொஞ்சம் நாளு தள்ளி வைங்க’ன்னு சொன்னா.

சரின்னு சொன்ன என் கண்ணுல ரெண்டு நாள் கழிச்சு பக்கத்து ஊர்ல இருக்கற வங்கில இருந்த cash remittance  கொண்டு வரப் போனபோது மானேஜர் எதிர்ல அவ ஒரு ஆளுடன் உட்கார்ந்திருந்தது பட்டது.

அவர்களும் என்னைப் பார்த்து விட்டார்கள். விருட்டென்று எழுந்து சென்று விட்டார்கள். உள்ளே சென்று கேட்டால், இருவரும் கணவன் மனைவி என்று லோன் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று முகம் சிவந்த மானேஜர் சொன்னார்.

எனக்குக் காலின் கீழிருந்த தரை நழுவியது.

மறு நாள் அவள் வீட்டுக்குச் சென்றேன். கதவைத் திறந்த அவள் முகம் வெளிறியது.

‘மணி’ என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்தாள். மணி வந்தான். வந்தவன் உடனேயே “என்னய்யா வேணும்?’ என்று ஏக வசனத்தில் கேட்டான்.

அப்புறம் எங்களுக்குள்ளே பெரிய வாக்குவாதம். இறுதியில் ‘உன்னாலே ஆனதப் பாத்துக்கோ’ன்னு சொல்லி ஒரு கவர என் மொகத்துல விட்டு எறிந்தான்.

பிரித்துப் பார்த்தால் உள்ளே நானும் வசுமதியும் இருந்த நெருக்கமான புகைப்படங்கள். என் பொண்டாட்டி பார்த்தா நிச்சயம் டைவர்ஸ். மாமனார் சொத்து கைவிட்டு போயிடும்.

“போயிடு! இல்லேனா போஸ்டர் அடிச்சி ஒட்டிருவேன். இத்தோட விட்டீன்னா நாங்க எங்க வழில போவோம். குறுக்க வராதே”

ஒரு வேலைக்காரனைப் போல மௌடீகமாக தலை அசைத்து விட்டு வீடு திரும்பினேன். தணிகாசலத்திடம் சொன்னேன். அழுதேன். ரொம்ப அழுதேன். இனிமேல் இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டேன் என்றேன்.

திடீரென்று தணிகாசலம் “ அந்தப் பணமும் கிடைக்கும். பழியும் வாங்கலாம். அறம் பாடத் தெரிஞ்ச ஒரு தமிழ் புலவரத் தேடி வரவழச்சு அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ. நல்லதே நடக்கும்” என்றான்.

திடுக்கிட்ட நான் அப்புறம் என்ன கேட்டாலும் மௌனம் சாதித்தான். அதுனால தான் உங்க கிட்ட கேட்டேன். என் ஆபீஸ் ப்யூநிடமும் சொல்லி வைத்தேன். ஒரு தமிழ் புலவர் வேண்டும் என்று.

சரியாக சாயந்திரம் நாலு மணி. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அங்க வஸ்திரம் என்று ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க ஒருவர் உள்ளே வந்தார்.

“நான் மாசிலாமணி. தமிழ் புலவர் வேணும்னு கேட்டீங்களாமே? எதுவும் மொழிபெயர்ப்பு வேலையா?” என்று என்னிடம் கேட்டார்.

இல்லை என்று சொல்லி அவரை உட்கார வைத்து ஒரு மாதிரி விஷயம் சொல்லி முடித்தேன். (தணிகாசலம் தவிர). மாசிலாமணியும் என்னைச் சந்தேகமாகப் பார்த்தார்.

“சார்! நான் பைத்தியம் இல்லை. உங்களால முடியுமா முடியாதா?”

“எவ்வளவு தருவீங்க?”

“ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பத்தாயிரம்”

பத்தாயிரம் என்று கேட்டவர் கண்கள் விரிந்தன. சரி என்றார்.

“ஆனா, எனக்கு அந்த மாதிரி பாட்டெல்லாம் எழுத வராது. வேணா நந்தி கலம்பகம் பாடறேன்” என்றார்.

“ஏதோ ஒண்ணு செய்யுங்க” என்றேன்.

மாலை சுமார் ஏழு மணிக்கு வசுமதி வீட்டுக்குச் சென்றோம். அவளும் மணியும் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்திகொண்டிருந்தார்கள். மாசிலாமணிக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

“பாடும் ஒய்” என்றேன். அவரும் ந.க. ஆரம்பித்தார். 

இந்த அமர்க்களத்தைப் பார்த்த மணிக்கு வெறி ஏறியது. “தே.. ஒன்ன என்ன பண்ணுறேன் பார்”ன்னு வேகமா எழுந்தான். எழுந்த வேகத்தில் கீழே வைத்திருந்த ஒரு பெட்டி அவன் காலை இடறியது. நிலை தடுமாறி மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் வெளிப்பக்கம் சாய்ந்தது போல விழுந்தான்.

‘ஐயோ” என்று கதறியவாறு அவன் கையைப் பிடிக்க எழுந்த வசுமதியையும் இழுத்துக் கொண்டு மணி கீழே விழுந்து செத்துப் போனான். வசுமதியும் செத்துதான் போயிருக்க வேண்டும்.

சப்த நாடியும் ஒடுங்கிய நிலையிலும் மாசிலாமணி ந.க. சொல்லிக் கொண்டிருந்தார்.

“யோவ்! நிறுத்துய்யா. வா கீழ போகலாம்” என்று அவரையும் இழுத்துக் கொண்டு கீழே சென்றேன். கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்த எங்களை வரவேற்றது அங்கிருந்த டேபிள் மேல் வைத்திருந்த ஒரு leather bag. ஒரு பிரபல வங்கியின் பெயர் பொறித்திருந்தது. ஒரு intuitionல் அதைத் திறந்து பார்த்தேன். உள்ளே பணம். சுமார் ஐந்து லட்சம் இருக்கும்.

அந்தப் பையில் இருந்து ஒரு பத்தாயிரம் எடுத்து மாசிலாமணியிடம் கொடுத்தேன்.

அவர் வெட்கத்துடனும் குழப்பத்துடனும் வாங்கிக்கொண்டார்.

பின்னர் அந்த bagஐ மூடி என் கையில் எடுத்துக்கொண்டு அவரையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடினேன்.

நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.

அப்புறம் மறுநாள் போலீஸ் வந்து அது தற்கொலை என்று முடிவு செய்து போனது எல்லாம் மாலை பேப்பரில் வந்தது. நான் அந்தப் பணத்தை என்ன செய்வது என்பதை பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று என் லாக்கரில் வைத்து விட்டேன்.

‘ஆமா! அது எப்படி சுவத்துல இருக்கற ஒரு மூஞ்சி சொன்னத வச்சி செஞ்சீங்க?’ன்னு நீங்க கேக்கலாம்.

எனக்குத் தணிகாசலம் மேல அசையாத நம்பிக்கை.

போன வருஷம் வேற ஒரு பிரச்சனைல மாட்டிகிட்ட எனக்கு ஒரு கெமிஸ்ட்ரி professorஐப் பார்த்து ஒரு கெமிக்கல் formula கேட்டு வரச் சொல்லி ஒரு விஷம் தயாரிக்க வைத்து என்னைக் காப்பாற்றினான்.

இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியல இல்ல? அப்ப இப்ப மட்டும் எப்படி மாட்டுவேன்?





Saturday, July 26, 2014

மரணம் என்னும் தூது வந்தது.


கிருஷ்ணகாந்தை மதிவாணன் தான் கொன்றிருக்க வேண்டும்.

“அந்த நாய கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்களில் இருந்த கோவம் தனக்கு நேற்றே புரிந்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டாள் சௌமியா. இப்போது காலம் கடந்து விட்டது. நேற்று வரை உயிரோடு இருந்த கிருஷ்ணகாந்த் இன்று இல்லை. அவர் மறைவுக்குத் தான் மறைமுக காரணமோ என்ற எண்ணம் ஓடியபோது அவள் உடல் அவளை அறியாமல் ஒரு முறை சிலிர்த்தது.

சிவப்பாக மாறிய சிக்னலை கடைசி நேரத்தில் பார்த்த அவள் ப்ரேக் பிடித்து காரை நிறுத்தினாள். இன்னும் தாம்பரமே பத்து கிலோமீட்டர் இருக்கிறது. அதற்கு  அப்புறம் ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி என்று நூல் பிடித்தாற்போல் இந்த நெரிசலில் மதுராந்தகம் போய் சேருவதற்கு எப்படியும் இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஆகிவிடும். ஆயாசத்துடன் சிக்னலை வெறித்தன அவள் கண்கள். மனம் பின்னோக்கி ஓடியது.

சுமார் ஒரு வருடம் முன்தான் அவள் அந்த முகநூல் குழுவுக்கு அறிமுகமானாள். எல்லாம் அவள் தோழி லலிதாவால் வந்தது. இவளுக்குக் கவிதைகள் மேல் இருக்கும் தணியாத காதல் அறிந்த லலிதா, இவளுக்கு அந்தக் குழுவை அறிமுகம் செய்து வைத்தாள்.

சுமார் ஐந்நூறு மெம்பர்களைக் கொண்ட அந்த க்ரூப்பில் முதல் நாளே அவளை ஈர்த்தது கிருஷ்ணகாந்தின் கவிதைகள்.

இலக்கண சுத்தமான கவிதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் மனதை ஈர்க்கும் கவிதைகள். ‘அப்பா! என்ன சொல்லாட்சி ! ‘ என்று அவர் கவிதையைப் படித்தவுடன் வியந்தாள் சௌமியா.

“விண்வெளியை நிறைத்திடும் நிலவொளி
உன் அறைக்குள் சாளரத்தின் அளவொளி ‘ என்பது தான் அவள் படித்த முதல் கவிதை. பரவுலக ஞானமாகட்டும் இகவுலக வெற்றிகள் ஆகட்டும், நம் வாங்கிக்கொள்ளும் அளவே நமக்குக் கிட்டும் என்பதை மிக அழகாக சொல்லியிருந்ததாக அவளுக்குப் பட்டது.

அதற்கப்புறம் அவர் சொந்தப் பக்கத்துக்குப் போய் பார்த்தாள். வியந்தாள். கவிதைகள் குப்பல் குப்பலாகக் கொட்டிக் கிடந்தன. எதை படிப்பது எதை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடினாள்.

மனிதர் இன்ன சப்ஜெக்ட் என்று இல்லாமல் எல்லாவற்றிலும் கை வைத்திருந்தார். காதல், காமம், ஞானம், இயற்கை என்று கவிதைகள் எழுதிக் குவித்திருந்தார். அதிலும் குறிப்பாக அன்றைய இளம் திரை நடிகை ஒருத்தியைப் பற்றி அவரது கவிதைகள் காமத்தில் முக்கி எடுக்கப்பட்டவை.

மற்றவர் எப்படியோ தெரியாது, சௌமியாவுக்கு அவர் கவிதைகளைப் படிக்கும் போது, அவர் சொற்களாலேயே இவளைச் சீண்டுவது போலிருக்கும்.

அவரின் கவிதைகளை நன்கு ஆராய்ந்து கமெண்டு போட்டாள். விமர்சனம் செய்தாள். விவாதம் செய்தாள். ஒரு நாள் அவர் அனுப்பிய பிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தது.

அதை மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர் வாத விவாதங்கள் விமர்சனங்கள் ப்ரைவேட் மெசேஜில் தொடர்ந்தன.

எப்போது, எப்படி என்று அறியாமலேயே அவர் மேல் காதலானாள்.

அப்புறம் ஒரு நாள் அவர்கள் குழுவில்  அவரது கவிதைத் தொடர் ஒன்று வந்தது. ‘சிவப்புப் பின்னணிக் கவிதைகள்’ என்ற தலைப்பிட்டு வறுமையாலும், வேறு பல காரணங்களாலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட அபலைகளின் கண்ணீர் கதைகளை கவிதை வடிவில் தந்திருந்தார்.

பலர் அதை எதிர்த்தாலும் சௌமியா அதனை மிகவும் பாராட்டினாள். அந்தப் பாராட்டு மெசேஜில் தன் செல்போன் நம்பரையும் தந்தாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியே அடுத்த நிமிடத்தில் கிருஷ்ணகாந்திடமிருந்து போன் வந்தது.

ஆனால் அவள்  எதிர்பார்க்காத ஆண்மையும் ஆளுமையும் அந்தக் குரலில் இருந்தது. சொற்களால் அவளைக் கட்டிப்போட்டார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

கவிதைகளுடன் காதலான தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை இவள் கேட்காமலேயே சொன்னார்.

அதற்கு பதிலாக சௌமியாவால் ‘ம்ம்ம்ம்’ என்று முனக மட்டுமே முடிந்தது. அன்று அந்த போன்கால் முடிந்தபோது சௌமியா கிட்டத் தட்ட உச்சத்தை அடைந்திருந்தாள்.

மறுநாளில் இருந்து அவர்கள் இருவரும் உரையாடுவது அன்றாட வழக்கமானது. ‘whatsapp’ இவர்களுக்கென்றே உருவானது போல ஆனது. முகநூலில் பதிவதற்கு முன் இவளுக்குத் தன் கவிதைகளைப் பகிர்ந்தார். இவள் சரி பார்த்த பின்னரே அவர் அவற்றைப் பதிந்தார்.

இப்படி இருக்கும் போது இத்தனைக்கும் காரணமான லலிதா மீண்டும் ஒரு பூகம்பத்தைக் கிளப்பினாள்.

“ டீ! அந்த ஆள் கிருஷ்ணகாந்த் சுத்த fraud. வேற ஒருத்தர் எழுதின கவிதைகளை தன்னோடதுன்னு போட்டுக்கிட்டு இருக்கார். நீயும் பைத்தியம் மாதிரி பாராட்டிக் கமெண்டு போடற. நான் ஒரு லிங்க் உன் மொபைல்ல அனுப்பிச்சி இருக்கேன். அதைப் பாரு. உண்மை தெரியும்” என்று சொன்னாள்.

பதட்டத்துடன் அந்த லிங்க் சென்று பார்த்த சௌம்யா உறைந்தாள்.

லலிதா சொன்னது அத்தனையும் உண்மை. மதிவாணன் என்ற ஒருவரின் blog அது. கிருஷ்ணகாந்த் தனது என்று போட்டிருந்த அத்தனைக் கவிதைகளும் அங்கு இருந்தன.

சௌமியாவுக்கு காலடியிலிருந்து தரை நழுவியது போலிருந்தது.

‘சே! எப்படி ஏமாற்றி விட்டான் பாவி!’ என்று கொதித்தாள். அந்த மதிவாணன் email அந்த blogல் குடுத்திருந்தது. உடனே அதைத் தொடர்பு கொண்டு நடந்து கொண்டிருக்கும் திருட்டைப் பற்றி அவருக்குத் தெரிவித்தாள். தன் முகநூல் குழு லிங்க் அனுப்பி வைத்தாள்.

அடுத்த நாள் அவளுக்கு மதிவாணனிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. மனிதர் மிகவும் கொதித்துப் போய் எழுதி இருந்தார். அந்த கிருஷ்ணகாந்தைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் மிகவும் மோசமான முறையில் தன்னைப் பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

‘உன்னால் முடிஞ்சதப் பாத்துக்கடா! ஆனா எதுனாச்சியும் செஞ்சி சௌமியாவுக்கும் எனக்கும் நடுவுல பிளவு ஏற்படுத்த முயற்சி செஞ்சின்னா நான் பொல்லாதவன் ஆகிடுவேன்’ என்று மிரட்டியதாவும் சொன்னார்.

கடைசியாக அவர் எழுதியிருந்த வார்த்தைகள் தான் முதலில் சொன்னது.
“என் படைப்புகளையாத் திருடிய அந்த நாய நான் கொல்லாமல் விடமாட்டேன் ‘.

சௌமியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் எண்ணமெல்லாம் கிருஷ்ணகாந்திடம் இருந்து எப்படி பிரிவது என்பது பற்றியே இருந்தது.

அன்று கிருஷ்ணகாந்த் பல முறை போன் செய்தார். ஆனால் இவள் எடுக்கவில்லை. அப்புறம் சலித்துப்போய் ப்ரைவேட் மெசேஜ் செய்தார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், கவிதைகளைத் திருடியது மதிவாணன் தான் என்றும், தன்னிடம் அதற்காக proof இருக்கிறது என்றும், மாலையில் அதை எடுத்துக் கொண்டு இவள் அலுவலகம் வருவதாகவும் எழுதி இருந்தார்.

சௌமியாவுக்கு நம்ப முடியவில்லை தான். ஆனால் காதல் கொஞ்சம் நம்பித் தான் பாரேன் என்றது. சரி என்று சொன்னாள்.

ஆனால் மாலையில் அவர் வரவில்லை. சௌமியா அவருக்குக் கால் செய்தாள். போன் சென்றதே ஒழிய அவர் எடுக்கவில்லை. அன்று இரவுக்குள் ஒரு பத்து முறை செய்திருப்பாள். ஆனால் அவர் எடுக்கவில்லை.

களைத்து குழம்பித் தூங்கிப் போனாள். காலை சரியாக ஆறு மணிக்கு கிருஷ்ணகாந்திடம் இருந்து கால்.

ஒரு கலந்த உணர்வுடன் எடுத்துப் பேசினாள். எதிர்முனையில் “ யாரு? சௌமியா மேடமா?” என்றது ஒரு விறைப்பான குரல்.

“ஆமாம்”

“ நான் மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் தனபால் பேசுறேன் மா. நீங்க எங்க இருக்கீங்க? கிருஷ்ணகாந்துக்கு என்ன வேணும்? உங்க நம்பரில் இருந்து நிறைய மிஸ்டு கால் வந்திருக்கவே கூப்பிட்டேன்”

“ சார், அவருக்கு என்ன ஆச்சு? அங்க போலீஸ் எதுக்கு வந்திருக்கு? நான் சௌமியா. சென்னையில் இருந்து பேசறேன். அவரோட முகநூல் பிரெண்ட்”

“ஒ! அப்படியா? I am sorry to inform you Mr. Krishnakanth is no more. ஆனால் சில விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். தயவு செய்து இங்கு வர முடியுமா? மதுராந்தகம் வந்து போலீஸ் ஸ்டேஷன் வந்துடுங்க. அங்கிருந்து ஒரு ஆள் உங்கள இங்க கூட்டி வருவார்”

“சரி சார்” என்று சொன்னதன் விளைவுதான் இந்தப் பயணம்.

எண்ணங்களில் இருந்து அவள் விடுபடவும் மதுராந்தகம் வரவும் சரியாக இருந்தது. போலீஸ் ஸ்டேஷனை விசாரித்துப் போய் சேர்ந்தாள். அங்கே இருந்த ஒருவரிடம் விசாரித்த போது அவர் இவள் காரிலேயே ஏறிக் கொண்டு கிருஷ்ணகாந்த் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.


தனபால் அவளுக்காகக் காத்திருந்தார். உள்ளே சென்று உடலைக் காட்டினார்.
கிருஷ்ணகாந்த் இறந்தும் கூட ஒரு ஆளுமையுடன் இருந்தார்.

மேலும் அங்கு நிற்க முடியாமல் சௌமியா வெளியே வந்தாள். தொடர்ந்து வந்த தனபால் “இப்ப சொல்லுங்க” என்றார்.

தன்னைச் சுதாரித்துக் கொண்ட சௌமியா , அவருடன் எல்லாவற்றையும் சொன்னாள். மதிவாணன் பற்றியும் சொன்னாள். அவர் அனுப்பிய மெயிலையும் காட்டினாள்.

கேட்டுக் கொண்டிருந்த தனபால் நெற்றி சுருங்கியது. ஒரு வித கலவரத்துடன் அவளை தன் ஜீப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு முன்சீட்டில் ஒரு லேப்டாப்.

“இது கிருஷ்ணகாந்த் லேப்டாப். ஆனா நீங்க சொல்ற email இதிலிருந்து தான் போயிருக்கு. பாருங்க, ஒரு email, ரெண்டு browserல ஒரு blogம் ஒரு facebook பேஜும் திறந்திருக்கு. Facebook பேஜ் கிருஷ்ணகாந்துடையது. Blog மதிவாணனுடையது. ஒண்ணும் புரியலையே” என்றார்.

திடீரென்று சௌமியாவுக்கு எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. அப்போது பிரேத பரிசோதனை செய்ய உடலை எடுக்க வந்திருந்த மெடிக்கல் எக்ஸாமினர் தனபாலை நெருங்கினார்.

“தனபால், கொஞ்சம் சிக்கலான கேசு மாதிரி தெரியுது. இனிஷியல் எக்ஸாமிநேஷன்ல இது self strangulation மாதிரி தோணுது. முழு விவரம் பரிசோதனை முடிஞ்சப்பறம் சொல்றேன்” என்று சொன்னார்.

தனபாலுக்கும் புரிந்து விட்டது.