Saturday, March 28, 2026

பழகிய நிழல்

 பழகிய நிழல்


அடையாறில் அந்த ஸ்கை லைன் அப்பார்ட்மெண்ட்ஸில் 14வது மாடியில் அந்த காலை எப்பொழுதும் போல தான் விடிந்தது. அந்த மிகப்பெரிய படுக்கை அறையில் ஏசியின் சப்தத்தை தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.


ராகவன் மெதுவாக கண்ணை திறந்தான். அவன் புரண்டு  படுக்கும் முன்னரே விண்டோ கர்ட்டன்ஸ் மென்மையாக விலகி இருந்தன. அடுத்து அவன் பாத்ரூமுக்குள் நுழையும் பொழுது அவனுக்காக விளாவி வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் அவன் விரும்பும் சுடு பதத்தில் இருந்தது.


அவன் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை. அவனது டர்க்கி டவல், துவைத்து மடித்து வைக்கப்பட்ட அண்டர் கார்மெண்ட்ஸ் ஆபீசுக்கு அணிய  பொருத்தமான கருநீலச் சட்டை என்று எல்லாமே மாயாபஜார் படக் காட்சி போல மாயமாக அங்கே அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தன. 


ஜனனி கிச்சனில் இருந்தாள். ஆனால் கிச்சனில் அவள் வேளை செய்து கொண்டிருப்பது போல எந்த சத்தமும் கேட்கவில்லை. கடுகு கூட அவளுக்கு பயந்து சத்தமில்லாமல் தான் வெடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டான். 


ஆபீஸ் போக ரெடியான ராகவன் டைனிங் டேபிளுக்கு வந்தான். அவனது தட்டில் மூன்று இட்லி ஒரு சிறிய கிண்ணத்தில்  இரண்டு கரண்டி சாம்பார் பக்கத்தில் இஞ்சி மணக்கும் சட்னி. அவன் அமர்ந்த நொடியில் காபி டபரா அவன் முன்னே வைக்கப்பட்டது.


"ஜனனி..." என்றான் ராகவன்.


அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.  "சொல்லுங்க..?"


"இன்னைக்கு evening  ஒரு presentation  இருக்கு. வர லேட்டாகும்."


"சரிங்க. லஞ்ச் பாக்ஸ்ல லெமன் ரைஸ் வச்சிருக்கேன். கூடவே கொஞ்சம் நட்ஸ் இருக்கு. மறக்காம சாப்பிடுங்க."



அவள் சொல்லிவிட்டு உள்ளே போனாள். ராகவனுக்குத் தொண்டையில் இட்லி சிக்கியது போலிருந்தது. சரிங்க, சாப்பிடுங்க, மறக்காதீங்க - இந்த மூன்று ஆண்டு மேரீட் லைப்ல இவகிட்ட வேற வார்த்தைகளே இல்லையா? அவன் ஒரு குழந்தையைப் போல கவனிக்கப் படுகிறான் . ஆனால்  ஒரு ஆணாக எங்கே இருக்கிறான்? 


ராகவன் வளர்ந்த வீடும் இப்படித்தான். அவன் அம்மா அவனது ஷூஸ்  துடைத்து வைப்பதிலிருந்துஅவன் கேட்காமலேயே தட்டில் நெய் ஊற்றுவது வரை எல்லாம் தானாக நடக்கும். இந்த தானாக நடக்கும் விஷயங்கள் ராகவனுக்குப் பழகிப் போய்விட்டது. ஒரு கட்டத்தில், இந்த  கவனிப்பு அவனுக்கு ஒரு பாரமான மௌனமாகத் தோன்றியது. இந்தப் Familiarity அவனுக்கு Neglect போல உருமாறியது. 


அன்றைக்கு அந்த மீட்டிங் போது தான் ரிஸ்க் டிபார்ட்மென்ட் சேர்ந்த நிஷாவைப் பார்த்தான். 


அன்று மாலை மீட்டிங் முடிந்து எல்லாரும்  கிளம்பிய போது, நிஷா அவன் அறைக்குள் வந்தாள். அவளுக்கு ராகவனைப் பற்றி எதுவும் தெரியாது. அவள் கையில் இரண்டு காபி கப்கள் இருந்தன. 


ஜி  உங்களுக்கு காபில சுகர் எவ்வளவு போடணும்னு தெரியல. அதான் தனியா சாஷே கொண்டு வந்திருக்கேன். நீங்களே போட்டுப்பீங்களா?


ராகவன் ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போனான். பத்து வருடத்தில் ஜனனி ஒருநாள் கூட அவனிடம் சர்க்கரை அளவு கேட்டதில்லை. அவளுக்குத் தெரியும் என்பதால் அவள் போடுவாள். ஆனால் நிஷா கேட்கிறாள். அந்த கேள்வி ராகவனுக்கு ஒரு பெரிய கௌரவத்தைத் கொடுத்தது . அவன் likes and dislikes அங்கே மதிக்கப்படுவதாக உணர்ந்தான்.


"நிஷா... எனக்கு சர்க்கரை கம்மியாத்தான் பிடிக்கும். தேங்க்ஸ்," என்றான் 


நிஷா சிரித்தாள். "உங்க presentation சூப்பர் சார். ஆனா நடுவுல  நீங்க கொஞ்சம் டயர்டா தெரிஞ்சீங்க. ஏதாச்சும்  டென்ஷனா?"


ராகவன் பேச்சை நிறுத்தினான். அவனுக்கு நிஷா கேட்டது புதுசா இருந்தது. ஜனனி அவன் சோர்வைப் பார்த்தால்  ஒரு கிளாஸ் ஜூஸ்  தருவாள். ஆனால் நிஷா என்ன ஆச்சு என்று  கேட்கிறாள். அந்த கேள்வி  ராகவனுக்குப் புதிதாக இருந்தது. யாரோ ஒருவர் தன்னை உற்று நோக்குகிறார்கள் தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்  என்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியைத் தந்தது. 


நிச்சயமாக ராகவன் ஜனனியை வெறுக்கவில்லை . அவனுக்குத் தேவைப்பட்டது கவனிப்பு . ஆனால், அது பழகிப்போன கவனிப்பு அல்ல. அதுவும்  ஒரு அந்நியப் பெண்ணிடமிருந்து வந்த இந்த  புதுமையான தாகத்தைத் தூண்டுகிற கவனிப்பு அவனை புரட்டிப் போட்டுவிட்டது. மேலும் விவரிக்கத் தேவை இல்லாத படிக்கு அவனுக்கு நிஷா மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது மிக வேகமாக வளர்ந்து நெருக்கமாகவும் காதலாகவும் பரிணமித்தது. 


மூன்று மாதங்கள் கழித்து ஒரு மழை பெய்த இரவு. ஜனனி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் ராகவனின் மொபைல் இருந்தது. அதில் நிஷாவின் குறுஞ்செய்திகள் கொட்டிக் கிடந்தன. 


"ராகவன், இது என்ன?" ஜனனியின் குரலில் நடுக்கமில்லை, ஆனால் ஒரு ஆழம்  இருந்தது.


ராகவன் தற்காப்புக்காகத் தன் கோபத்தை ஆயுதமாக எடுத்தான். "ஆமாம் ஜனனி. நான் நிஷாவை விரும்புறேன். அவளோடு இருக்கும்போதுதான் நான் நானா இருக்கேன். ஏன்னா, அவளுக்கு நான் யாருன்னு தெரியுது.என்னைப் பத்தி ஒவ்வொண்ணா ஒவ்வொரு நாளும் புதுசா தெரிஞ்சுக்கறா. எனக்கு அது பிடிச்சிருக்கு "


ஜனனி ஏளனமாக ஒரு புன்னகை பூத்தாள். "உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் feelings இல்லையா ராகவன்? இந்த வீட்டுல இருக்கற  ஒவ்வொரு அணுவிலும் உங்கள் விருப்பங்கள்  தானே படிந்திருக்கிறது?"


"அதுதான் தப்பு ஜனனி!" என்று கத்தினான் ராகவன். "இந்த வீடு, இந்தச் சாப்பாடு... இது எதுவுமே எனக்காக இல்லை. இது உன் கடமைக்காக. நீ ஒரு மெஷின் மாதிரி இயங்குற. இதுல அன்பு எங்க இருக்கு? எனக்கு எப்போதாவது ஒரு முக்கியத்துவம்  கொடுத்திருக்கிறாயா? நீ எனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால்தான் நான் இப்படி ஆனேன்."


ஜனனி மெதுவாக அவன் அருகில் வந்தாள். "முக்கியத்துவம்னா என்ன ராகவன்? ஒரு புதுப் பொண்ணு உங்களைப் பார்த்து உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்கிற அந்தச் சிலிர்ப்பு மட்டும்தான் கவனமா? மூணு வருஷமா நீங்க கேட்காமலேயே உங்களுக்குப் பிடிச்சதை நான் செஞ்சேனேஅது கவனிப்பு இல்லையா?"


"இல்லை!" ராகவன் ஆவேசமானான். "அது ஒரு பழக்கம்  பழகிப்போன எதிலுமே சுவாரஸ்யம் இருக்காது ஜனனி. எனக்கு வேண்டியது ஒரு தேடல். நிஷா என்கிட்ட கேட்கிறா. ஏன் டல்லா இருக்கீங்கன்னு. நீ கேட்கமாட்டே. நான் கேக்காமயே  ஒரு மாத்திரையைக் கொண்டு வந்து தருவ . எனக்குத் தேவை மாத்திரை இல்லை ஜனனி, என் வலியை நீ உணரணும்கிற அந்த ஒரு நிமிஷப் பேச்சு."


ஜனனியின் கண்கள் லேசாக பனித்தன. 


"உணர்ந்ததால்தானே மாத்திரை கொண்டு வந்து தர்றேன் ? நீங்களா தலை வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் காத்திருக்கிறதா அன்பு? அந்த வலி உங்க முகத்துல தெரியுறதுக்கு முன்னாடியே என் மனசுக்குத் தெரிஞ்சுடுதே.. அதுதான் உண்மையான அன்பு "


"ஜனனி stop your sermons "


"நான் நிறுத்தமாட்டேன். நீங்க கேட்டுதான் ஆகணும்" என்ற  ஜனனி தொடர்ந்தாள். 


"நிஷா உங்களுக்குத் தர்றது ஒரு guest attention. நான் உங்களுக்குத் தந்தது உயிரின் கவனிப்பு. நீங்க நிஷாகிட்ட ஏன் போறீங்க தெரியுமா? அங்கேதான் நீங்க ஒரு ஹீரோவா தெரியுறீங்க. அங்கே உங்க ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ரியாக்ஷன் கிடைக்குது. இங்கே நான் உங்களை என் உடம்பின் ஒரு பகுதியா பார்த்தேன்ராகவன் . நம்ம கைகளுக்கு நம்ம மூளை  கட்டளை போடுறது இல்லை ராகவன் அது தானா இயங்கும். அதே மாதிரிதான் உங்களுக்கான என் அன்பும். ஆனா, உங்களுக்கு அந்தத் தடையற்ற அன்பு போர் அடிச்சுடுச்சு ."


ராகவன் மௌனமானான். 


ஜனனி தொடர்ந்தாள். "புதுசா கிடைக்கிற கவனம் போதை மாதிரி. கொஞ்ச நாள்ல நிஷாவும் உங்க தேவைகளைப் புரிஞ்சுக்க ஆரம்பிப்பா. அப்போ அவளும் நான் செய்யற மாதிரிதான் செய்வா. அன்னைக்கு அவளையும் விட்டுட்டு இன்னொருத்திய  தேடிப் போவீங்களா? ஏன்னா உங்களுக்கு அன்பு முக்கியமில்லை.உங்களை ஹீரோவா நினைக்கற ஒரு புது ரசிகை தான் வேணும்"


ஜனனி அந்த மொபைலை  மேஜையில் வைத்தாள். "அன்புங்கிறது தேடிக்கிட்டே இருக்கிறது இல்லை ராகவன். ஒரு இடத்துல தங்கிப் போறது.  உங்களுக்கு அது தெரியல."


ஜனனி அந்த இடத்தை விட்டு எழுந்து தன் பெட்ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். தன் மனதையும் கூட.


ராகவன் இப்போது ஒரு ஆதரவற்ற அநாதையைப் போல நடு ஹாலில் நின்றிருந்தான். அவனுக்குப் பிடித்த காபி வாசனை சமையலறையில் இருந்து வந்தது. ஆனால் அதைக் குடிக்க இப்போது அவனுக்கு ஆசையில்லை. பழகிப்போன அந்த அன்பின் உன்னதம் புரியாமல் புதுமையைத் தேடிப் போன அவனது அறியாமை அவனைச் சுட்டது.


அவனுக்கு இப்போது வேண்டிய கவனம் கொடுக்க அங்கே யாரும் இல்லை. நிஷாவுக்கு அங்கே இடமில்லை. ஜனனிக்கு இனி மனமில்லை.


மறுநாள் காலை பெட்ரூம் கதவைத் திறந்துகொண்டு வரப்போகும் ஜனனி நேராக இயந்திரம் போல கிச்சனுக்குப் போவாளா இல்லை தன் துணிமணிகளோடு வீட்டை விட்டுப் போவாளா என்னும் கேள்வி அவன் மனதை துளைக்க ஆரம்பித்தது. 


வீயார்