Tuesday, August 20, 2019

சரச கல்யாணி

திருவல்லிக்கேணி தேவதைகள்
சரச கல்யாணி
ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் போய் தேவராஜ சுவாமி கோவில் மேற்கு கோபுரம் வழியில் அத்தி வரதரை சேவிக்க நின்ற கூட்டத்தோடு கலந்து நின்றேன். ஏதோ ஞாபகமா ஷர்ட் பாக்கெட்டைப் பார்த்தா தெரிந்தது ஸ்பெஷல் தரிசன டிக்கட் கொண்டுவரவில்லை என்று. பெருமாளே!
குழம்பித் தவித்த என் தோள் மீது ஒரு கைவிழுந்தது. " சார்! உங்கள மேடம் கூப்பிடறாங்க". திரும்பினால் கோவில் சேர்ந்த ஒரு சிப்பந்தி.
செலுத்தப்பட்டவன் போல அவனுடன் நடந்தேன். கொஞ்ச தூரத்தில் ஒரு இன்னோவா. நாங்கள் நெருங்க அதன் பின் கதவு திறந்து சரச கல்யாணி இறங்கினாள்.
அழகாக வயதாகியிருந்தாள். அவள் அழகை வர்ணிக்க பின் நவீன உவமைகள் தேவைப்படும். நம்ம கவிஞர் தேஜஸ்வியத்தான் கேட்கணும்.
"டேய், வெங்கட்! தரிசனம் ஆயிடுத்தா?"
"இல்ல... ஆன்லைன் புக் செஞ்ச டிக்கட்ட எடுத்துட்டு வர மறந்துட்டேன்"
"சரி பரவாயில்ல.. என்னோட வா. VVIP தரிசன டிக்கட் இருக்கு. "
"ரொம்ப தேங்க்ஸ்" என்று அவளோடு சென்றேன். கூட வந்த சிப்பந்தி அங்கிருந்த காவல் துறையிடம் இவள் வைத்திருந்த டிக்கட் மற்றுமொரு லெட்டர் காட்ட, அவர் உடனே வேறு வழியாக எங்களை அனுமதித்தார். கிடுகிடுவென்று ramp ஏறி ஐந்தே நிமிடத்தில் அத்திவரதர் முன் நின்றோம். சிப்பந்தி மீண்டும் ஏதோ சொல்ல எங்களை கயிற்றை விலக்கி உள்ள விட்டார்கள். ஆபரண ஆபூஷணங்கள் ஜ்வலிக்க வரதர் சிரித்தார்.
சரச கல்யாணி சட்டென்று என் பக்கம் திரும்பி "நாம்ப மொதல்ல பாத்ததும் வரதர் சந்நிதிதான்" என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததையே சொன்னாள்.
வரதர் முன்னிலையில் பழைய நினைவுகளில் மூழ்க நேரமில்லாததால் வெளியே வந்தோம்.
"சென்னைதானே?" என்றாள்.
"தாம்பரம்"
"சரி என்னோடவே வா! வழில சாட்டுட்டு உன்ன தாம்பரம் டிராப் செஞ்சுட்டு ஏர்போர்ட் பக்கத்துல உள்ள என் ஹோட்டலுக்குப் போறேன். நாள காலம்பற தில்லிக்கு flight."
கார் புறப்பட்டதும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
நான் ப்ளஸ் டூ படித்த காலம். சரஸா (நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) பத்தாவது. டிபி கோவில் லேன் டிபி கோவில் தெருவில் போய் முட்டும் இடத்தில் அவள் வீடு. அவள் அண்ணன் முரளி என் கிளாஸ்மேட்.
சரஸாவை ஒரு முறை பார்த்தவர்களுக்குத் தெரியும் அவள் மேல் காதல் கொள்ளாமல் இருப்பது முடியாது என்று. அதனால் நான் அவள் மேல் காதல் கொண்டேன் என்று உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
ஆனால் எனக்கும் ஒரு வில்லன். அவன் பெயரும் வெங்கட். நான் ஸீ வெங்கட். அவன் ஆர் வெங்கட். அவனும் சரஸா மேல் காதல் கொண்டான். ஆனால் விதி வேறு விதமாக யோசித்து வைத்திருந்தது. சரஸாவுக்கு என் மேல் காதல் வரச் செய்தது. அதற்கு நான் அந்தக் காலத்தில் ஒரு விதமான cuteஆக இருந்ததும் ஒரு காரணம்.
ஐஸ் ஹவுஸ் பீச்சும், பார்த்தசாரதி கோவிலும் (அங்குள்ள வரதர் சந்நிதியில் வைத்துத்தான் முரளியோடு அவளைச் முதலில் சந்தித்தேன்), கஸ்தூரி லைப்ரரியும் எங்கள் காதலுக்கு உரம் சேர்த்த இடங்கள்.
நான் என் காதலை அவளிடம் சொல்ல பலமுறை முயன்று தோற்றேன். அதற்கு என் பயந்த சுபாவம் ஒரு காரணம். ஆனால் சரஸா அதைப் புரிந்து வைத்திருந்தாள் என்பது ஒரு நாள் கஸ்தூரி லைப்ரரியில் எனக்குப் புரிந்தது. சுஜாதா நாவல்கள் வைத்திருந்த ஷெல்ப் அருகில் ஒரு சுபயோக சுப மாலையில் எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.
அந்த பத்து செகன்ட் முத்தம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. இரவு பகல் அவள் நினைவாகவே இருந்தேன். ஒரு நாள் ஆர் வெங்கட் என்னிடம் கேட்டே விட்டான். நான் நடந்தது எல்லாம் சொன்னேன். அவன் முகம் வாடிவிட்டது.
"அவகிட்ட ஐ லவ் யூ சொன்னியா?"
" இல்லடா.. ஒரு லெட்டர் எழுதித் தரலாம்ன்னு.. நீ எழுதித் தரயாடா? உனக்குத் தான் நல்ல கவிதை மாதிரி எழுத வருமே?'
ஆர் வெங்கட் என்னை ஒரு கொலைப் பார்வை பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் ஸ்கூலில் வைத்து ஒரு கவர் தந்தான். "இந்தா நீ கேட்ட லெட்டர். படிச்சுப் பாரு பிடிச்சா கொடு"
ஆனால் நான் படிக்கவில்லை. படிக்காமலேயே அன்று மாலை அழகியசிங்கர் சந்நிதி பின்புறம் சுற்றி வரும்போது சரஸாவிடம் தந்துவிட்டேன்.
அதற்க்கப்புறம் நடந்தது வெகு விசித்திரம். சரஸா மறுநாளில் இருந்து என்னைத் தவிர்த்தாள். அப்புறம் சில காலம் கழித்து அவள் ஆர் வெங்கட்டை கல்யாணம் செய்துகொண்டு தில்லி பக்கம் போய் விட்டாள் என்று ஒரு சேதி. காலம் எங்களைப் பிரித்து இன்று காஞ்சியில் சேர்த்து வைத்த் விளையாட்டுப் பார்க்கிறது.
சட்டென்று கார் நிற்க நான் நினைவுகளிலிருந்து விடுபட்டேன். ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் நின்றிருதது. இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம். மெனு பார்த்து ஆர்டர் செய்துவிட்டு சரஸா "ஏண்டா அப்படி செஞ்ச?" என்றாள்.
"நீ ஏன் அப்படி செஞ்ச சரஸா? "
" டேய், உன் லவ்வ என்கிட்டே சொல்லுவன்னு எவ்ளோ நாள் வெயிட் செஞ்சேன்? நீ என்னடான்னா பொசுக்குன்னு ஆர் வெங்கட் எழுதின காதல் கடுதாசிய என்னண்ட கொண்டு தந்த.. நா வேற என்ன செய்யறதாம்?
"என்ன ஆர் வெங்கட் லவ் லெட்டரா? அது எனக்காக அவன் எழுத்திதந்த லெட்டர்!"
" அப்ப நீதாண்டா சைன் பண்ணியிருக்கணும்? ஆனா அதுல ஆர் வெங்கட்ன்னு சைன் பண்ணியிருந்தது"
இரண்டு பேருக்கும் சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது.
ரொம்ப நேர கனமான மௌனத்துக்குப் பின் "அப்போ நீ தந்த முத்தம்?" என்றேன் அபத்தமாக.
வெகு நேரம் என் கண்களையேப் பார்த்த சரஸா " பிடிக்கலேனா திருப்பித் தந்துடு" என்றாள் குறும்பாக.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (சிறுகதை)
ஊமை எழுத்தே உடலாச்சு மற்றும்
ஓமென்ற எழுத்தே உயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி
கொங்கணச் சித்தர்
விபூதி வாசம் நாஸியைத் துளைக்க, யுகேந்திரன் சட்டென்று கண்ணைத் திறந்தார். அவர் அருகில் இருந்த ஸீட்டில் காவியுடை அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
கோவையில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ் புறப்படத் தயாராக இருந்தது. கடைசி நேரப் பயணிகள் அவசர அவசரமாக ஏறிக் கொண்டிருந்தார்கள். பெரிய லக்கேஜுகளை பஸ்ஸின் அடியில் உள்ள ஸ்டோரேஜில் வைப்பதும் உள்ளே ஏறுவதும் என்று ஒரே பரபரப்பு. இந்த அமளியில் தான் எப்படி கண் அசந்தோம் என்று யுகேந்திரனுக்கு வியப்பு. எப்படியோ அந்தச் செல்லத் தூக்கமும் கலைந்தது.
தன் அருகில் அமர்ந்திருந்தவரை பார்த்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க உருவம். காவி குர்தா காவி வேட்டி. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. கழுத்தில் பல சைஸ்களில் ருத்திராக்ஷ மாலைகள். மடியில் ஒரு ஜோல்னா பை.
யுகேந்திரன் தன்னைப் பார்ப்பதை பார்த்து அவர் ஒரு புன்னகை பூத்தார். “என் பெயர் சித்ரகுப்தன்” என்றார்.
யுகேந்திரன் ஒரு நொடி விக்கித்துப் போனார். என்ன பெயர் இது? இதுவரை கேள்விப் பட்டதேயில்லையே! மேல் உலகத்தில் இருப்பதாகச் சொல்லப் படும் சித்ரகுப்தனைத் தவிர வேறு எங்கும் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதில்லை. :நான் யுகேந்திரன்” என்றார்.
“மிகவும் வித்தியாசமான பெயர்” என்றார் காவி மனிதர்.
“இதை நான்தான் சொல்லவேண்டும்” என்று யுகேந்திரன் புன்னகைத்தார்.
“என்ன செய்கிறீர்கள் யுகேந்திரன்? தொழிலா இல்லை வேலையா?”
“நான் பிசினெஸ் தான் செய்கிறேன் ஜி! கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ். ஒரு பார்ட்னருடன் சேர்ந்து. அவனை பார்ட்னர் என்று சொல்லுவதை விட எனது பால்ய சிநேகிதன் என்று சொல்லலாம்.”
“ரொம்ப நல்லது. திருமணமாகி விட்டதா? குழந்தைகள் இருக்கிறதா?”
“திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை” என்றார் யுகேந்திரன் சுருக்கமாய்.
“உங்களுக்கு உங்கள் மனைவி மீது மட்டில்லாத அன்பு. அப்படித்தானே?”
“ ஆமாம் சாமி. (அட, சித்ரகுப்தன் எப்ப சாமி ஆனார்?). அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’”
“குழந்தைகள் இல்லை என்று சொன்னபோது உங்கள் முகத்தில் வந்த பாவத்தை வைத்துத் தான் உணர்ந்தேன்”
அப்போது கண்டக்டர் வந்து டிக்கட் கேட்க இருவரும் மௌனமானார்கள். சிறிது நேரத்தில் பேருந்தும் கிளம்பியது. இரவும் மணி பதினொன்றாயிற்று. யுகேந்திரனுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. பக்கத்தில் இருந்த சித்ரகுப்தனைப் பார்த்து “ சாமி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கப் போறேன். குட் நைட்” என்றார்.
“நல்லிரவு” என்று சொல்லிச் சிரித்தது சாமி.
திடீரென்று பஸ் போட்ட ப்ரேக்கில் யுகேந்திரனுக்கு விழிப்பு வந்தது. மணி ஐந்தரை ஆகியிருந்தது. கிட்டத்தட்ட சென்னையை நெருக்கி விட்டது. சிறிது நிதானித்தப் பிறகு பக்கத்துச் சீட்டைப் பார்த்தார். சாமி இல்லை. இறங்கியிருப்பார் போல. அப்போதுதான் அவர் கண்கள் காலி சீட்டின் கைவைக்கும் இடத்தில் செருகியிருந்த ஒரு சிறிய புத்தகத்தின் மீது விழுந்தது.
“யார் புத்தகம்? ஒரு வேளை சாமி விட்டிட்டுப் போயிருப்பாரோ?”
‘சரி எடுத்துப் பார்ப்போம் என்று இடுக்கில் இருந்த அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்தார். சுமார் இருவது பக்கங்கள் கொண்ட புத்தகம் போல இருந்தது. வெள்ளைக் காகிதத்தில் எழுதி பசையிட்டு ஒட்டப்பட்டிருந்தது. அட்டையும் ஒரு வெள்ளைப் பேப்பர் தான். அட்டையின் நட்டநடுவில் அந்தப் புத்தகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் யுகேந்திரனுக்கு அந்த அதிகாலைக் குளிரிலும் வியர்த்தது.
அதில் ‘ யுகேத்திரனாகிய நான்” என்று எழுதப்பட்டிருந்தது.
என் பெயரில் ஒரு புத்தகமா? அதுவும் அந்தச் சாமிதான் விட்டுட்டு போயிருக்கணும். அவர்கிட்ட என் பேர் போட்ட புத்தகம் எப்படி? யார் அவர்?
இப்படி அவர் எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. சரி எதற்கும் இருக்கட்டும் என்று அந்தப் புத்தகத்தை எடுத்துத் தனது பெட்டியில் வைத்துக் கொண்டார். பிறகு படிக்கலாம் என்று.
சரியாக ஆறு மணிக்குப் பெருங்களத்தூர் வந்துசேர்ந்தது பஸ். அவர் அங்கேயே இறங்கிக் கொண்டார். தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தான் வீடு. ஒரு கால் டாக்ஸி பிடித்தார்.
சரியாக அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார். வீடு பூட்டியிருந்தது. ஸ்னேஹா எங்கே போயிருப்பாள்? அதுவும் இவ்வளவு அதிகாலையில்? அலுத்துக்கொண்டே தன் பையில் இருந்த சாவியைத் தேடியெடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.
வீடு புழங்கி ஒரு வாரம் ஆனது போலத் தோன்றியது. சட்டென்று ஒரு கோவம் தொற்றிக்கொண்டது. எங்க போனா?
மொபைல் எடுத்து ஸ்னேஹா நம்பர் அழைத்தார். ஒரு ஐந்து ரிங் சென்றதும் ஸ்னேஹா எடுத்தாள் .
" டியர்! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?"
"நீ எங்க இருக்க? வீட்டப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"
"இல்லைங்க. எங்க ராமாயி பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் ஊருக்கு வந்திருக்கேன். சீக்கிரம் கிளம்பி வந்துடறேன். இன்னிக்கு மார்னிங் ப்ரேக்பாஸ்ட் மதியம் லஞ்ச் மட்டும் வெளில பாத்துக்கிடுங்க"
வெறுப்புடன் கால் கட் செய்து போனை சென்டர் டேபிள் மேல் வைத்தார். பிறகு ஏதோ தோன்றியவராக போனை எடுத்து ஸ்விக்கி மூலம் அருகில் இருந்த ஹோட்டலிலிருந்து டிபன் ஆர்டர் செய்தார்.
அவர் குளித்துவிட்டு வருவதற்கும் டிபன் டெலிவரி ஆவதற்கும் சரியாக இருந்தது. பசி வேகம் தாளாது உடனடியாக தின்று முடித்தார்.
கை கழுவி சேரில் உட்காரப் போகும்போதுதான் அந்தப் புத்தகத்தின் நினைவு வந்தது.
தன் பெட்டியிலிருந்து அதை எடுத்தார். மீண்டும் ஒரு முறை அதன் தலைப்பு அவரைக் குழப்பத்துக்கும் வியப்புக்கும் உள்ளாக்கியது. என் பெயர் எப்படி என்று யோசித்தவாறே முதல் பக்கத்தைப் புரட்டினார்.
முதல் இரண்டு வரிகள் படிக்க ஆரம்பித்ததுமே அவர் கண்கள் மேலும் வியப்பில் விரிந்தன.
ஆமாம் அது அவரது கதைதான். அவரது வாழ்க்கைக் கதைதான். யுகேந்திரனுக்கு வியர்த்தது. எழுந்து fan வேகத்தை அதிகப்படுத்திவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார்.
அவர் பிறந்ததில் இருந்து, அவர் படிப்பு, அவர் குடும்பம் என்று அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தது. ச்நேஹாவுடன் திருமணம், நண்பனுடன் பிசினஸ் வரை வந்த கதை சட்டென்று நின்றது. கீழே இரண்டு லைன் விட்டு " இதுவரை எழுதியது உனக்குத் தெரிந்தது. இனிமேல் வருவது உனக்குத் தெரியாதது. விருப்பமிருந்தால் படிக்கவும்" என்று எழுதியிருந்தது.
யுகேந்திரனுக்கு கொஞ்சம் போல இடது மார்பு வலிப்பது போலிருந்தது. பரபரப்புடன் அடுத்தப் பக்கத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தார். படிக்க படிக்க அவர் முகம் சிவந்தது. கண்கள் விரிந்தன. நெற்றியோரம் வியர்வை வெள்ளம். உங்களை மேலும் தவிக்க விடாமல் அதில் எழுதியிருந்ததின் சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன்.
அதில் எழுதியிருந்ததாவது : ச்நேஹாவுக்கும் அவர் நண்பனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அது இப்போது முற்றி ஒருவர் மற்றவரைப் பிரித்திருக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் அதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்குத் தடையாக யுகேந்திரன் இருக்கும் பட்சத்தில் அவரைக் கொன்றுவிடப் போவதாகவும் இப்போதும் கூட பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று பொய் சொல்லி இருவரும் அவர் நண்பன் வீட்டில் ஆனந்தமாக இருப்பதாகவும் எழுதியிருந்தது.
அதற்கு பிறகு பக்கங்கள் காலியாக இருந்தன. யுகேந்திரனுக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது. திடீரென்று காதோரம் " இதுக்கு மேல என்னன்னு எனக்குத் தெரியல. நீ தான் சொல்லணும்" என்று சித்ரகுப்தனின் குரல் கேட்டது.
யுகேந்திரன் ஒரு தீர்மானத்தோடு அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். காரை ஸ்டார்ட் செய்து அவர் நண்பன் மற்றும் பிசினஸ் பார்ட்னர் வெங்கட் குடியிருந்த அடையார் பக்கம் செலுத்தினார். அரை மணியில் சென்றடைந்தார்.
மிகவும் கோபமாக வேகமாக நடந்து அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். வெளியே விடப்பட்டிருந்த ச்நேஹாவின் செருப்பு அவர் கண்ணில் பட்டது. அவர் கோபம் இன்னும் அதிகமானது.
இரண்டாம் முறை பெல்லை அழுத்த எத்தனிக்கும் போது கதவு திறந்தது. திறந்த கதவுக்குப் பின்னால் அவர் பார்ட்னர் வெங்கட். அவனுக்கும் பின்னால் அவர் மனைவி ஸ்னேஹா. அப்போதுதான் முத்தமிட்டு பிரிந்திருப்பார்கள் போல இருந்தது. இவரைக் கண்ட அந்த இருவரின் கண்களிலும் பயம் குழப்பம் கலந்த ஒரு expression
அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் யுகேந்திரன் கண்கள் வெங்கட் கையில் இருந்த ஒரு புத்தகமும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வரும் பார்க்கத்தவறவில்லை
வெங்கட் கையில் இருந்த புத்தகத்தில் "வெங்கடேசனாகிய நான்" என்று எழுதியிருந்ததும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வர் அவரை நோக்கி உயர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

துணை

இந்திய மணி ஏழுக்கெல்லாம் அப்பாவிடமிருந்து போன்.

ஆயாசத்துடன் மொபைலை எடுத்து "சொல்லுப்பா" என்றாள் லாவண்யா.

"எப்படிடா இருக்க? குளிர் ஆரம்பிச்சுடுத்தா?"

" ம்ம்ம். ஆரம்பிச்சாச்சு. நல்லாயிருக்கேன். நீங்கள்லாம் எப்படி இருக்கீங்க? என்ன இவ்ளோ காலைல போன்?"

" சும்மாதான்" என்று சொன்ன அப்பா ஊர்கதையெல்லாம் பேசிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து விஷயத்துக்கு வந்தார்.

"குட்டிமா... அந்த நரேந்தர் வரன் வந்தது இல்லையா.. அதுபத்தி பேசத்தான் போன் பண்ணேன். "

லாவண்யா முகத்தில் சிறு புன்னகை. அவள் கண்முன் நரேனின் அழகான முகம் வந்து போனது. ஸ்கைப்பில் பேசும்போது தான் கவனித்தாள் அவன் எவ்வளவு handsome என்று. கிட்டத்தட்ட ஹிந்தி சினிமா ஹீரோக்கள் மாதிரி. அவள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

"சொல்லுப்பா"

"அது வந்து குட்டிமா.. நானும் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம். திருவல்லிக்கேணில ஒரு flat. பேயாழ்வார் சந்தோ என்னமோ. ஹால்னு பேரே தவிர கால வக்க எடமில்ல. "

"அதுனால என்னப்பா? நான் என்ன அங்கேயா வாழப்போறேன்? நாங்க இருக்கப்போறது என்னமோ அமெரிக்கால."

"நானும் அப்படியேதான் நெனச்சேன் குட்டிமா. ஆனா உக்காந்து பேசிப் பார்த்தபோத்தான் தெரிஞ்சுது பையனுக்கு ஒரு அக்கா இருக்காளாம். ஏதேதோ காரணம் சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகல. வயசு முப்பது ஆகப்போறது.  பாங்க்ல பெரிய வேலை. ஆனா என்ன பிரயோஜனம்? எனக்கென்னவோ அந்த ஆளு மூஞ்சியே பிடிக்கல. பொண்ணு சம்பாத்யத்துல உக்காந்து சாப்பிடாரான்னு ஒரு சந்தேகம். மேலும், நாங்கள்லாம் பாதி கிணறு தாண்டியாச்சு. எங்க காலத்துக்கு அப்புறம், அந்த பொண்ணு உங்க responsibility ஆயிடுத்துன்னா? முடியுமா யோசிச்சுப் பாரு. அதுனால உன் சார்பா நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி முடித்தார்.

லாவண்யாவுக்கு ஆயாசம அதிகமானது. "சரிப்பா" என்று சொல்லி போனை வைத்தாள். பிறகு போனை மீண்டும் எடுத்து gallery யில் சேமித்து வைத்திருந்த நரேனின் போட்டோவை delete செய்தாள்.

எழுந்து ஃப்ரிட்ஜ் திறந்து மீதம் வைத்திருந்த பீசாவை எடுத்து சூடு பண்ண ஆரம்பித்தாள். சூடானதும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன் முதன் முதலாக அவளுக்கு வரம் பார்க்கலாமா என்று அப்பா கேட்டபோது என்ன அவசரம் என்றுதான் அவளும் கேட்டாள். அம்மாதான் "சும்மாயிரு. உனக்கு ஒண்ணும் தெரியாது" என்று வாயை அடைத்துவிட்டாள்.

வந்த வரனும் அமெரிக்காவில் இவள் இருந்த இடம் அருகேதான். பையன் நேராகவே வந்து சந்தித்தான். நன்றாக பேசினான். மரியாதையாக இருந்தான்.  கிட்டத்தட்ட ஒத்துப் போகும் என்று நினைத்தபோதுதான் இவள் அப்பா " பையன் டாக்டர்.. அதெல்லாம் ஒத்துவராது. இப்படித்தான் நம்ம சொந்ததுத்துல..." என்று ஏதோதோ கதை சொல்லி தவிர்த்து விட்டார். அதற்கப்புறம் பல வரன்கள். சில பையன் வீட்டில் வேண்டாம் என்றார்கள். சில இவள் வீட்டில்.

நாளடைவில் லாவண்யாவுக்கு இந்த விஷயம் அலுக்க ஆரம்பித்தது. கடைசியாக இந்த நரேன். ரொம்ப நாள் கழித்து அவள் மனதில் வசந்தம்.  நரேனுக்கும் இவளைப் பிடித்துப்போனது. ஆனால் கடைசியில் இப்படி முடிந்து விட்டது.

திடீரென்று மீண்டும் போன். அம்மா!

"என்னம்மா?" என்றாள் அலுப்பாக.

"லாவ்ஸ்! எனக்கு கொஞ்ச நாள் உன்னோட வந்து இருக்கணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ டிக்கட் அரேஞ் பண்ணு. ரிட்டர்ன் நான் அங்க வந்து சொல்றேன்"

"என்னம்மா திடீர்னு? சரி ரெண்டு நாள்ல அரேஞ் பண்ணறேன். வா வா ரொம்ப சந்தோஷம்"

அடுத்த வாரத்தின் ஞாயிறு அன்று அம்மா வந்து சேர்ந்தாள். காரணம் தெரியாமல் லாவண்யா அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்

அப்புறம் அம்மாவுக்காக லீவு எடுத்து பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். ஆபீஸ் விட்டு வந்தால் சூடான காப்பி அம்மா கை சாப்பாடு என்று இரண்டு மாதம் பறந்தே போனது.

ஒரு நாள் ஆபீசில் அப்பாவிடமிருந்து போன். "குட்டிமா.. உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் என் போனை அட்டென்ட் செய்ய மாட்டேங்கிறா? அங்கேயே செட்டில் ஆயிட்டாளா? சென்னை வர எண்ணமில்லையா?" என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

"சரி நான் அம்மாகிட்டே சொல்றேன்பா" என்று சொல்லி சமாளித்துவிட்டாள். மாலை வீடு வந்ததும் அம்மாவிடம் சொன்னாள்.

"நான் பேசிக்கறேன் அப்பாகிட்ட. நீ வந்து காப்பி குடி" என்று அம்மா பேச்சை மாற்றிவிட்டாள்.

இரவு டின்னருக்குப் பிறகு அம்மாவும் மகளும் வெகு நேரம் ரம்மி விளையாடினார்கள். சுமார் பதினொரு மணிக்கு லாவண்யா "அம்மா, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் தூங்கப் போறேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து தன் மொபைலை தேடி ஹாலுக்கு வந்தவள் காதில் அம்மாவில் குரல் விழுந்தது. அப்பாவிடம் பேசுகிறாள் போல. டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று திரும்ப எத்தனித்தவள் காதில் அவள் பெயர் விழுந்தது. என்னவென்று நின்று கேட்டாள்/

"ஒரு ரெண்டு மாசம் நான் இல்லாம இருக்க முடியல உங்களுக்கு. இத்தனைக்கும் வயசு அம்பத்தாறு ஆறது. சமைச்சுப் போட சமையல்காரி, வீட்டு வேலைக்கு வேலைக்காரி, வெளில போக வர ஊபர் ஓலா. போதாததுக்கு நம்ம வீடு பக்கத்திலேயே உங்க அண்ணா, தங்கை வீடுகள். அப்படியிருந்தும் உங்களுக்கு நான் தேவைப்படறது.

பாவம் நம்ம பொண்ணு. வயசு இருவத்தாறுதான் ஆறது. அவளுக்குன்னு ஒரு துணை வேண்டாமா? அவ கஷ்டத்தைப் புரிஞ்சுக்க வேணாமா? நரேன் அப்பா அவர் பொண்ணு சம்பளத்துல கண்ணா இருக்கார்ன்னு சொன்னீங்க. அதுபோல உங்கள ஒருத்தர் சொல்ல எவ்ளோ நேரமாகும்?"

லாவண்யா ஸ்தம்பித்து நின்றாள். தன் மனவோட்டங்கள் அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது?

மறுமுனையில் அப்பா என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. "நரேன் அப்பா  நம்பர் என்கிட்டே இருக்கு. சரின்னு கூப்பிட்டு நானே சொல்லிடறேன்" என்றாள் அம்மா புன்னகையோடு. அப்போதுதான் லாவண்யா அங்கே நின்றிருப்பதை கவனித்தாள்.

"அம்மா" என்றவாறே லாவண்யா ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

"நரேன் போட்டோ இருக்கா இல்லை டிலீட் செஞ்சுட்டியா? இல்லேனா நான் மெயில்ல அனுப்பட்டுமா?" என்றாள் குறும்பாக.