Never apologize for showing feeling. When you do so, you apologize for the truth.
Wednesday, April 23, 2014
மன்னிக்க வேண்டுகிறேன்’
சுஜாதாவுக்கு ஒரே வெறுப்பாய் இருந்தது. இவ்வளவு அழகான பெயருள்ள தனக்கு ‘வெங்கடேசன்’ என்ற பெயரில் கணவனா? காதலுக்குத் தான் கண்ணில்லை என்பார்கள் கடவுளுக்குக் கூடவா கண்ணில்லை?
பெயரையாவது மன்னிக்கலாம். ஆனால் அன்பு என்கிற பெயரில் அவன் நடவடிக்கைகள் அவளை மூச்சுத் திணற வைத்தன. எப்பொழுதும் அவள் பின்னாலேயே குழைந்து கொண்டு வருவது... ப்ப்ப்பா என்று திரைப்படத்தில் சொல்வது போல் கத்திச் சொல்லவேண்டும் போலிருக்கும்.
மேலும் அவன் புரோகிதத் தொழில் செய்பவனாதளால் அவன் குடுமி வைத்திருப்பான். பஞ்சகச்சம் வேஷ்டி தான் கட்டுவான். அதுவும் அவளுக்குப் பிடிக்காது. எப்போதும் ஹோமப் புகையுடன் காலம் கழிப்பவனாதலால் அவன் உடலில் இருந்து ஒரு பெர்மனென்ட் ஹோம வாசனை (?) அடித்துக் கொண்டிருக்கும். அதுவும் பிடிக்காது.
ஆனால் இன்று அவள் சந்தோஷமாக இருக்கிறாள். ஒரு பதினைந்து நாள் தன் அம்மா வீட்டுக்குப் போகிறாள். அவள் தங்கைக்குக் கல்யாணம். ஆனால் தங்கைக்கு வரப்போகிற கணவன். வெங்கடேசன் போல் புரோகிதனல்ல, ஒரு கம்பனியில் வேலை செய்கிறான். தங்கை தானே பார்த்துக் கொண்ட வரன்.
கொஞ்ச நாள் தன் கவலை மறந்து இருக்கலாம் என்று நினைத்தாள். அவளை ஊருக்குக் கொண்டு விட வெங்கடேசனும் வருகிறான். வந்து உடனே திரும்பி விடுவான். பின் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வருவான்.
இரண்டு வாரம் ஜாலியாக இருக்கலாம். பிடிச்ச சீரியல் பார்க்கலாம். சிநேகிதிகளுடன் சினிமா போகலாம்.
இப்படி யோசித்துக்கொண்டிருந்த சுஜாவின் என்ன ஓட்டத்தை வெங்கடேசன் கலைத்தான். ‘சுஜா, குடிக்க பவண்டோ வாங்கிண்டு வந்திருக்கேன். இந்தா’ என்றான். சுஜாவுக்குள் ஒரு எரிமலை வெடித்தது. வாங்கினது தான் வாங்கினான், ஒரு பெப்சி வாங்கியிருக்கலாமே! பவண்டோவாம்!
‘வேண்டாம்’ என்று வெடுக்கென்று சொல்லி ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள். அவள் கோவத்தின் காரணம் அறியாத வெங்கடேசன் அவளையே பரிதாபமாக பார்த்தான்.
ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டிருந்த சுஜாவின் கவனத்தை அந்த ஸ்டாண்டில் சற்று தள்ளி நின்று நின்று கொண்டிருத்த ஒரு கணவன் மனைவி கவர்ந்தார்கள்.
அந்தப் பெண் ரொம்ப சாதரணமாக இருந்தாள். அவள் கணவன்! ஆஹா, உயரமாக, மாநிறத்தில் கவர்ச்சியாக இருந்தான். அவன் உடையிலும் முகத்தில் ஒரு ஆளுமை தெரிந்தது. எதையும் சாதித்துக் கொள்பவன் போலத் தெரிந்தான்.
அவன் மனைவி அவனுக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்துத் தந்து கொண்டிருந்தாள். அதை அவன் மென்று அதன் கொட்டையை அலட்சியமாகத் துப்பிக்கொண்டிருந்தான். கடைசியாக ஒரு சுளை அவன் கையில் அந்தப் பெண் கொடுத்தாள். அதைக் கையில் சற்று அழுத்தமாக அவன் பிடித்து வாங்கியதால் அந்தச் சுளை பிரிந்து அவன் கையெங்கும் அதன் ரசம் வழிந்தது. நிதானமாக அதையும் சாப்பிட்டான்.
அவன் கையில் வழிந்த ரசத்தைக் அலம்ப, அந்தப் பெண் ஒரு பாட்டில் தண்ணீர் கையில் தயாராக வைத்திருந்தாள். (ஆளுமை!) அதைச் சற்றும் மதிக்காமல் அவன் தன் ஈரமான கையை தன் மனைவியின் தோள்பட்டைப் பக்கம் ரவிக்கையில் வைத்து அழுந்தித் துடைத்தான். ஒரு கணம் ஏதோ சொல்ல வாயெடுத்த அந்தப் பெண் மவுனமானாள். அந்தத் தூரத்திலிருந்தும் அவள் கண்கள் பனித்தது சுஜாவுக்குத் தெரிந்தது.
அந்தக் காட்சியின் தீவிரம் தாக்க, ஜன்னல் பக்கமிருந்து இந்தப் பக்கம் தன் முகத்தைத் திருப்பியவள் அதிர்ந்தாள். வெங்கடேசன் பவண்டோ பாட்டிலை கையில் ஏந்தியபடி இன்னமும் அவளைப் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு கணம் யோசித்த அவள், அந்த பாட்டிலை வாங்கி தன் பக்கம் வைத்தாள். பின்னர் அவன் கைகளுக்குள் தன் கையை நுழைத்துக் கோர்த்து அப்படியே அவன் தோள் மீது தலை சாய்த்துக் கொண்டு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலிருந்து ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சுசீலாவும் சவுந்திரராஜனும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
Saturday, April 12, 2014
புருஷோத்தமன்
புருஷோத்தமன் எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். சுமார் 25
வயசு இருக்கும். ஆள் பாக்க நல்லா
இருப்பான். ரொம்பவே ஸ்டைலா டிரெஸ் போட்டுக்கிட்டு , உயர்ரக சிகரெடின்னு ஒரு
மார்க்கமாகத்தான் இருப்பான். வேலையிலும் கெட்டி. ஆபரேட்டரா இருந்தாலும் ப்ரோக்ராமிங்,
ஹார்ட்வேர் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தான். ஆபிசில் நெறைய பேருக்கு கம்ப்யூட்டர்
அசெம்பிள் செஞ்சு குடுத்திருக்கான்.
ஆனா அவனுக்கு புருஷோத்தமன்னு பேரு வச்ச அவன் அப்பா அம்மாவ கோவில் கட்டித்தான்
கும்பிடணும். பேருக்கு ஜஸ்ட் ஆப்போசிட் லேடீஸ் விஷயத்தில் ‘வீக்’. கண்ணுக்கு
லட்சணமா இருக்கறதுனால எங்க ஆபிசுல இருக்கற கல்யாணம் ஆன ஆகாத லேடீசுல பலபேர்கிட்ட
அவன் வழியாத நாள் இல்லைன்னு சொல்லலாம். அவளுகளும் புத்திகெட்டு அவனுக்கு இடம்
குடுப்பாங்க. பாக்க ரொம்ப கண்றாவியா இருக்கும். (பொறாமைனு கூட வச்சிக்கலாம்).
இந்த லட்சணத்துல போன வருஷம் அவன் கல்யாணமும்
செஞ்சிகிட்டான். ஆனா ஆபிசுல ஒருத்தரையும் கூப்பிடல. சொந்த ஊருக்கு போய் கல்யாணம்
பண்ணிக்கிட்டு வந்தான். இங்க வந்ததுக்கு அப்புறமும் யாரையும் வீட்டுக்கு கூப்பிடல.
எங்க நாங்க வந்தா அவன் சாயம் வெளுத்துடுமோனு பயம் போல.
அப்பத்தான் போன வாரத்துல அந்த விஷயம் நடந்தது. மதியம்
சுமார் இரண்டு மணி வாக்கில ஒரு பொண்ணு எங்க ஆபிசுக்கு வந்தா. புருஷோத்தமன பார்க்க
வேண்டி. அவன் அந்த சமயத்துல சாப்பிட வெளில போயிருந்தான் அதனால அவள அவன்
சீட்டுகிட்ட இருந்த கெஸ்ட் நாற்காலில உட்காரவெச்சேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு
அவன் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தான்.
அவளப் பார்த்ததும் பேயறஞ்ச மாதிரி போச்சு அவன் முகம். “
ஏய், உன்ன ஆபிசுக்கு யாரு வரச் சொன்னது? எதுவா இருந்தாலும் வீட்டுல சொல்ல
வேண்டியது தானே? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல?” அப்பிடீனு
சத்தம் போட்டான். எங்களுக்கு எல்லாம் ‘சே’ன்னு ஆயிடுத்து. ‘பொண்டாட்டி கிட்ட
இப்படியா கோவபடறது? அதுவும் ஒரு பொது இடத்தில? கூறுகெட்ட மனுஷன்’ன்னு
மனசுக்குள்ளேயே திட்டினேன்.
அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷத்துல அவன் பொண்டாட்டி போயிட்டா.
இவன் எதும் நடக்காதது போல நார்மலா இருந்தான்.
மறுநாள் அவன் பொண்டாட்டி காலைல பதினொரு மணிக்கெல்லாம் வந்தா. அவன் ஏதோ திட்ட
அவள் அழ திரும்பவும் ஒரு டிராமா. அப்பறம் அவளை வெளியே கொண்டு விடப் போனான்.
அவன் போனதும் ப்யூன் ராமசாமி ஓடி வந்தான். “சார், மேட்டரு
தெரியுமா? நாம் புருஷ் சார் பொஞ்சாதிய விட்டுபுட்டு எவளோ ஒருத்தியோட சுத்தறாராம்.
அது தெரிஞ்சு தான் பாவம் அந்த புள்ள ரெண்டு நாளா அலையோ அலைன்னு அலையுது. ஊரு எப்டி
கெட்டுப் போச்சு பாத்தியா சார்?” என்றான். எனக்கு என்ன சொல்றதுனே தெரில.
நான் ராமசாமிகிட்டே ஏதோ கேட்க வாயெடுத்தபோது புருஷோத்தமன்
திரும்பி வந்தான். வந்தவன் தான் சிஸ்டத்தில் உட்கார்ந்து அவசரமா ஏதோ டைப்
செஞ்சான். செஞ்சு ஒரு பிரிண்ட் எடுத்து சைன் பண்ணி என்கிட்டே கொண்டு வந்து
கொடுத்தான். பார்த்தால் எங்க கோயமுத்தூர் ப்ராஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் வேண்டி
விண்ணப்பம்!
உள்ள கோவம் பொங்கினாலும், ஆபீஸ் விஷயங்கறதுனால என்னால
ஒண்ணும் சொல்ல முடியல. வாய மூடிகிட்டு கையெழுத்து போட்டு டெஸ்பாச்சுல கொடுத்தேன்.
அப்பறம் வேலை மும்முரத்துல லஞ்ச் டைம் ஆனதே தெரில. பசி வயித்த
கிள்ள லஞ்ச் சாப்பிட வெளியே போனேன். பக்கத்துல இருந்த ஹோட்டலுக்கு போற வழில நம்ம
புருஷோத்தமனும் அவன் பொண்டாட்டியும் நின்னு பேசிகிட்டு இருந்தத பார்த்தேன். என்னப்
பார்த்ததும் சட்டுன்னு பேச்சை முடிச்சிகிட்டு அவன் திரும்பிப் போய்ட்டான்.
அவள் என்னப் பார்த்தாள். நான் திடீர்னு ஒரு முடிவோட அவள
கிட்ட வரச்சொன்னேன். ஆச்சரியமா பாத்துகிட்டே அவ வந்தா.
“ இங்க பாரும்மா, எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். நீ
ஒண்ணும் கவலப் படாத. நாங்க இருக்கோம். அப்படி உன்ன அம்போன்னு அவன் விட்டுட்டு போக
விட மாட்டோம். நீ எதுக்கும் நாளைக்கு ஆபீசுக்கு வந்து என்னப் பாரு. நான் என் பிரெண்ட் வக்கீல்
ஒருத்தன் இருக்கான். அவன்கிட்ட கேட்டு என்ன எப்படி செய்யனுமின்னு கேட்டுச்
சொல்றேன். சரியா? நீ பயப்படாம வீட்டுக்கு போ. அப்படியே நாளைக்கு வர்ற போது உன்
அப்பா நம்பரையும் கொண்டு வா. அவர்கிட்ட நானே பேசறேன். சரியா?” ன்னு கேட்டேன்.
நான் சொன்னதக் கேட்டு ஒரு பதிலும் சொல்லாம என்ன ஒரு
மாதிரியா பார்த்துட்டு அவ போயிட்டா. எனக்கு ஒண்ணும் புரியல. என்ன உலகம்டா இது? உதவி
செய்யுறேன்னு சொன்னா கூட வேண்டான்னு சொல்றாங்க!”ன்னு யோசிச்சிகிட்டு இருக்கும்
போது ஹோட்டல் பக்கத்தில் இருந்த சிகரெட் கடைக்காரன் “ சார்! இங்க வாங்க”னு
கூப்பிட்டான்.
சரி என்ன விஷயம்னு கேட்க போனேன். “ சார்! என்னா சார், நீங்க
அந்த பொம்பளகிட்ட போயி பப்ளிக்ல பேசிகிட்டு இருக்கீங்க? அதும் கேரக்டர் சரி இல்லை
சார். நாம் புருஷ் சாரோட ‘கீப்பு’ சார் அது. அதக் களட்டி விட ரொம்ப பாடுபட்டு
இப்பதான் ஒரு வழியா செட்டில்மென்ட் பண்ணிருக்கார். நான் தான் சொன்னேன் ஊரவிட்டுப்
போன்னு. சரின்னு இன்னிக்கு ட்ரான்ஸ்பர் கேட்டுருக்கறதா சொன்னார்.
நீ வேற, இதும கிட்டேல்லாம் பேசாதே சார். அது வேற பிட்டிங்
கெடக்கிமான்னு அலையுது. நீ பாவம், எங்கனா அதும் வலைல வுளுந்துட போற! உஷாரா இரு
சார்” னு சொல்லி சிரிச்சான்.
ஆனா எனக்கு சிரிப்பு வரல. தலதான் சுத்த ஆரம்பிச்சுது. ஒரு
வேள பசியா இருக்குமோ?
Monday, April 7, 2014
சொல்லாமல் விட்ட காதல்.
அவள் பெயர் கார்குழலி. இருந்தாலும் நான் அவளை முதன்முதலில் பார்த்தது பஸ்ஸில்தான்.
திருவல்லிகேணியிலிருந்து துரைப்பாக்கம் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த
காலக்கட்டம். சைதை பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்துச் செல்வேன்.
ஒரு நாள் திருவல்லிகேணியில் பஸ்ஸில் ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த என்னை ‘ இங்கே
உட்காரலாமா?’ என்று ஒலித்த ஒரு சங்கீதம் எழுப்பியது. பார்த்தால் ஒரு 22 வயது
மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். நான் அமர்ந்திருந்தது ஜெனரல்
சீட்டில். அவள் கேட்டதால் ஒரு மரியாதைக்கு நான் எழுந்திருக்க முயன்றபோது ‘ நோ நோ
இட்ஸ் ஓகே! நீங்க உட்காருங்க. நானும் உட்காரலாமா என்றுதான் கேட்டேன்’ என்று
மீண்டும் பாடினாள்.
‘உட்காருங்கக்கா’ என்று நான் யோசிக்காமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து
விட்டன. புருவத்தை உயர்த்தி ‘அக்காவா?’ என்று கண்ணாலேயே கேட்டாள். இனிமேல் இவளை
எந்தக் காலத்திலும் அக்கா என்று கூப்பிடக்கூடாது என்று எனக்குள் சத்தியம் செய்து
கொண்டேன்.
என் அருகில் உட்கார்ந்த அவள் பேசினாள் பேசினாள் இடைவிடாது பேசினாள். அவள்
ஹால்டா அருகில் ஒரு கம்பெனியில் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலையில் இருந்தாள்.
அப்பா அம்மாவுக்கு ஒரே பெண். கமலஹாசன் படம் பார்த்தால் ஒரு வாரத்துக்கு இவள்
கனவுகளைக் குத்தகை எடுத்துக் கொள்வாராம். சுஜாதா கதைகள் பிடிக்குமாம் ( யாருக்குத்
தான் பிடிக்காது?). ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவாளாம்.
ஊர் சுற்ற பிடிக்குமாம். மழையில் ஐஸ் க்ரீம் சாப்பிடப் பிடிக்குமாம்.
பாடல்களில் SPB இடையில் கிளுகிளுப்பாகச் சிரிக்கும் போது இவளும் வெட்கப்பட்டுச்
சிரிப்பாளாம். (உங்களில் யாருக்காவது அந்த வியாதி இருந்ததா?)
ஒரு இருவது நிமிடப்பயணத்தில் தன்னைப்பற்றிய ஒரு கதைச்சுருக்கத்தைக் கொடுத்து விட்டாள்.
கடைசியில் போனால் போகிறதென்று என் பெயரைக் கேட்டாள். நான் வெங்கடேஷ் என்றும் நான்
துரைப்பாக்கம் கல்லூரியில் படிப்பதையும் சொன்னேன். அவள் முகத்தில் எந்தவித
ரியாக்ஷனையும் படிக்க முடியவில்லை.
அன்று இரவு, வழக்கமாக வந்துகொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு பதிலாக,
கார்குழலி என் கனவில் வந்தாள்.
அவள் இளமையையும் அழகையும் நான் ரசித்தேன் (கனவில் தான்!). திடீரென்று ‘அக்கா’
என்று பின்னணியில் ஒரு குரல் கேட்டதும் கனவு கலைந்தது. வியர்த்து எழுந்தேன். தூக்கம் கெட்டது. மனசுக்குள் ஒரு பட்டிமன்றம்
நடந்தது. என்னை விட குறைந்தது நாலு வயது பெரியவளைப் பற்றி இப்படி இனிமேல்
நினைக்கக்கூடாது என்று ஒரு முடிவு எடுத்தேன்.
ஆனால் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் அவளைப் பார்த்ததும் அது முறிந்து போகும்
என்று நினைக்கவில்லை.
என்னைப்பார்த்து மலர்ந்த அவள் முகம் என்னை என்னென்னோவோ செய்தது. நேர்த்தியாகப்
புடவை அணிந்திருந்தாள். உனக்கு மட்டும் உனக்கு மட்டும் என்பது போல கொஞ்சமாக
இடுப்பு காட்டினாள். எனக்கு ஜுரமடித்தது.
பஸ் வந்ததும் நான் ஏறி ஜெனரல் சீட்டில் அமர்ந்தேன். வண்டி ஏறக்குறைய காலி
தான். பெண்கள் சீட்டுகள் நிறைய காலியாக இருந்தும் அவள் என்னருகில் அமர்ந்தாள்.
பிறகும் என்ன தோன்றியதோ தெரியவில்லை என்னை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு ஜன்னலோரம்
அவள் அமர்ந்தாள்.
மீண்டும் பேச்சு. அவள் முந்தைய நாள் படித்த சுஜாதா நாவல் பற்றி. மிகவும்
ரசித்து விமர்சித்தாள். ஒரு குழந்தை புதிதாக உலகத்தைப் பார்ப்பதைப்போல் மிகவும்
ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன். நான் ஏற்கனவே படித்ததுதான் என்று சொல்ல
வந்தவன், சொல்லாமல் விட்டுவிட்டேன்.
பேச்சுச் சுவாரஸ்யத்தில் கையை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்தவளின் உடல் என்
கையில் பட்டது. எங்கள் வீட்டுக்கு
ரிப்பேர் பார்க்க வந்த எலெக்ட்ரீஷியன் ஷாக் அடித்தபோது ஏன் அலறினான் என்று எனக்கு
அன்று புரிந்தது.
‘சாரி’ என்று சொன்னேன். அதைக் சட்டை செய்யாமல் மேலே பேசிக்கொண்டே போனாள். அந்த
சுஜாதா நாவல் விமர்சனம் முடியும் முன்னே எனக்கு ஒரு ஐந்து முறை ஷாக் அடித்தது.
ஆனால் நான் சாரி சொல்லவில்லை.
எனக்கு அவள் மீது காதல் தான் என்று எனக்கே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆனால்
அவள் மனதில் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. எதையாவது சொல்லப் போய்,
‘உன்னத் தம்பி மாரி நினைச்சேன்’ என்று சொன்னால் என்ன ஆகும்? அந்த பயம் தான். அந்த
பயத்திலும் மனதிலிருந்த ரகசிய காதலிலும் பல நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் அவள் முகம் சோர்ந்திருந்தது. என்னவென்று கேட்டேன். ஒன்றும் இல்லை
என்று சொல்லிவிட்டாள். ஜன்னல் பக்கம் அமர்ந்தவள் வெளியே வேடிக்கைப்
பார்த்துக்கொண்டே ஹால்டா வரை வந்தாள். போய் வருகிறேன் என்று சொல்லிக்கொள்ளாமல்
இறங்கிப் போய் விட்டாள்.
அப்புறம் ஒரு வாரம் வரவில்லை. ரொம்பவும் தவித்துப் போய் விட்டேன். ஒரு வாரம்
கழித்து வந்தாள். தன்னைத் தேற்றிக்கொண்டவள் போலத் தெரிந்தாள். என்னைப்பார்த்து
புன்னகைத்தாள். வழக்கம் போல ஜன்னல் அருகில் உட்காராமல் இடது பக்கம் உட்கார்ந்தாள்.
அதிகம் பேசவில்லை. அவள் ஸ்டாப் வருவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னால் தன்
handbagலிருந்து ஒரு கவர் எடுத்தாள்.
கல்யாணப் பத்திரிகை! என் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.
‘வர்ற மாசம் பத்தாம் தேதி கல்யாணம். அவசியம் வரணும்’ என்று என் கையில்
திணித்தாள். நான் எதுவும் பேசவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஓரிரு
நிமிடம் கழித்து ‘ கல்யாணத்துக்கப்புறம் என்ன மறந்துடுவீங்க இல்ல?’ என்று
சம்பந்தமில்லாமல் கேட்டேன்.
அவள் ஸ்டாப் வந்தது. எழுந்து நின்றவள் ‘ நீ என்ன மறந்துடுவடா, என்னால
மறக்கமுடியாது’ என்று சொல்லிவிட்டு இறங்கி சென்று விட்டாள்.
கொஞ்ச நேரம் சிலையாயிருந்தேன். சைதை வந்து இறங்குவதற்கு முன் பத்திரிகை கவர்
மேல் அச்சடித்து இருந்த மணமக்கள் பெயர் மீது கண்கள் சென்றன.
மணமகன் பெயர் – வெங்கடேஷ்!
இன்றும் ஹால்டா பக்கம் போகும் போது கார்குழலி நினைவுக்கு வருகிறாள்.
Wednesday, April 2, 2014
அம்மா நீ ஏன் அழகாயில்லை?
“சுனோ ஜி, அவளக்
கொஞ்சம் எழுப்பறேளா? எத்தன நாழி இன்னும் தூங்கணமாம் அவளுக்கு? பதினஞ்சு வயசாறது.
இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம இருந்தா எப்படியாம்? போர்ட் எக்ஸாம் வருஷம்.
ரிவிஷன் நடக்கறது. ஒடம்புல ஒரு பயம் ஒரு உணர்த்தி இருக்காப் பாருங்கோ! ஏய்! சுமி,
எழுந்திருடி. இல்லேனா மூஞ்சில தண்ணியக் கொட்டுவேன்”
பொரிந்து தள்ளிய
மனைவியைப் பார்த்தான் காசி என்கிற காசிராமன்.
காசி எதற்கும்
அலட்டிக் கொள்ள மாட்டான். நடப்பது நடக்கும் என்ற எண்ணம் கொண்டவன். அசமஞ்சம்’ என்று
அவனைக் கேலி செய்பவர்களும் உண்டு. இது அவன் காதிலும் விழுந்திருக்கிறது. ஆனால்
அவன் அதற்கும் அசைய மாட்டான். அவன் பிறவி குணம்.
அவன் மனைவி உமா
அவனுக்கு நேர் எதிரானவள். எப்பொழுதும் படபடப்பாகவே இருப்பாள். எதிலும் ஒரு அவசரம்.
அந்த அவசரத்துக்கு மற்றவர்கள் ஒத்து வராதபோது அவளுக்கு மூக்கின் மேல் கோவம் வரும்.
ஆனால் காசிக்கு அவள் மேல் கோவம் இல்லை. பாவம் அவள். வீட்டு வேலையும் செய்து கொண்டு,
வேலைக்கும் போய்வந்து கொண்டு என்று அவள் சுமக்கும் பாரம் அதிகம். போதாததற்கு சுமி
இந்த வருஷம் பத்தாவது வந்ததில் இருந்து அவளுக்கு ஒரு கடமை அதிகமாகிப் போனது.
காலையில் அவளை கோச்சிங் கிளாஸ் கொண்டு விட்டுக் கூட்டி வருவது. ஒரு நாள் கூட அந்த
கோச்சிங் கிளாசில் லீவு விடவில்லை. இதோ இந்த ரிவிஷன் ஆரம்பித்த பிறகு தான் கிளாஸ்
நின்றது.
காசிக்கு ஷிப்ட்
ட்யூட்டி.. ‘உங்க சோம்பேறித்தனத்துக்கு ஏத்த வேலை’ என்று உமா கிண்டலடித்தாலும்
அதன் சோர்வு காசிக்குத் தான் தெரியும். காலையில் கண் விழிப்பது மிகவும் கடினமாக
இருந்தாலும், தான் இல்லாவிட்டால் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் வரும்
என்று தன் அவதியைப் பொருட்படுத்தாது எழுந்து விடுவான்.
இன்றும்
அப்படித்தான் எழுந்தான். சுமியை எழுப்பிவிடத் தான் நினைத்தான். ஆனால் இன்று
சம்ஸ்க்ருதம் பேப்பர். சுமி எப்பொழுதும் தொண்ணூறுக்கு மேல் தான் வாங்குவாள்.
மேலும் நேற்று இரவு ரொம்ப நேரம் வரை படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளை எழுப்ப
அவனுக்கு மனது வரவில்லை. சரி கொஞ்ச நேரம் கூடத் தூங்கட்டும் என்று நினைத்தான்.
அதற்குள் உமா கத்த ஆரம்பித்து விட்டாள்.
“கொஞ்சம்
பொறுமையா இரு உமா. நான் எழுப்பறேன்”.
“எல்லாம் நீங்க
குடுக்கறச் செல்லம்தான். கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்கேள். பொண்
கொழந்தை. நாளைக்கு போற எடத்துல “என்ன வளத்துருக்கா அம்மாக்காரி’ன்னு என்னத் தானே சொல்லிக்காட்டப் போறா”
“இன்னும்
பத்தாவதே முடிக்கல. அதுக்குள்ள புக்காத்தப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டயா” என்று காசி
கிண்டலடிக்க நினைத்தான். ஆனால் அடக்கிக் கொண்டு விட்டான். உமா காளியாகி விடுவாள்.
அதனால் மெளனமாக
சுமியின் ரூம் நோக்கிச் சென்றான்.
கதவைத்
தட்டினான். கதவு சாத்தப்படவில்லை. திறந்து கொண்டது.
“குட் மார்னிங்
பா” என்றாள் சுமி பெட்டில் உட்கார்ந்தபடி. காசி சிரித்துக் கொண்டான்.
“குட் மார்னிங்
டா செல்லம். எழுந்தாச்சுன்னா வெளில வர வேண்டியது தானே. ஏன் அம்மாவ டென்ஷன் பண்ற?”
ஒன்றும்
சொல்லாமல் சிரித்தபடி வெளியே சென்றாள் சுமி. சென்றவள் நேராக சமையல் ரூம் சென்று
அங்கு வேலையாயிருந்த உமாவைக் கட்டிக் கொண்டாள். முதலில் திகைத்து, பிறகு
சந்தோஷித்த உமா, “ கழுத கழுத. குளிக்காம கொள்ளாம விழுப்போட என்னடி மேல வந்து
விழலாட்டம்? போய் நாழி முன்னால குளிச்சிட்டு, சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு புக்க
எடுத்து படி. போடி” என்று அவளைத் தள்ளினாள்.
சுமி முகம்
சுருங்கியது.
“ஒன்னப் போயி
கட்டிக்க வந்தேன் பாத்தியா.. என்னச் சொல்லணும்” என்றபடி குளியல் அறை நோக்கிச்
சென்றாள்.
மணி எட்டானது.
சுமி ஸ்கூலுக்கு ரெடியாகி விட்டாள். டிபன் சாப்பிட்டாகி விட்டது. உமாதான் அவளை
ஸ்கூலில் தினமும் டிராப் செய்வாள். அவளை டிராப் செய்துவிட்டு ஸ்டேஷன் சென்று
வண்டியை விட்டுவிட்டு ட்ரெயினில் ஆபீஸ் போவாள்.
“அம்மா
ரெடியாம்மா? நேரமாறது” என்றாள் சுமி.
“இன்னும் எட்டே
ஆகல. ஊருக்கு முன்னால போயி ஸ்கூல பெருக்கவாப் போற? அதுக்குள்ள படிச்சுட்டயா? அஞ்சு நிமிஷம் கூட
தரிச்சு ஒக்காரல போல இருக்கே. இப்படிப் படிச்சா எப்படி மார்க் வாங்கறது? மார்க்
வரச்சே கண்ணுல ஜலம் விட்டு ஆகாத்தியம் பண்றது. ஒரு தடவையாவது முதல் ரேங் வாங்கிருக்கியா?
அந்த அனிதாவப் பாரு. எப்பவும் பர்ஸ்ட் ரேங். அவ அப்பாம்மா கொடுத்து வச்சவா.
எங்களுக்கு எங்க அந்தப் பொசிப்பு இருக்கு? என்று பொரிந்து தள்ள ஆரம்பித்து
விட்டாள்.
சுமி முகம்
மீண்டும் சுருங்கியதைக் கண்ட காசி வாயைத் திறந்தான்.
“உமா, எந்த
நேரத்துல எதப் பேசறதுன்னு இல்லையா? கொழந்தை ஸ்கூல் கெளம்பற நேரத்துல இது என்ன
பேச்சு? பர்ஸ்ட் ரேங் வாங்கலேனா என்ன? செகண்ட் தர்ட் ரேங் வாங்கறா இல்லையா? அது
போறாதா? எல்லாருமே பர்ஸ்ட் ரேங் வாங்க முடியுமா? கொஞ்சம் நிதானிச்சுப் பேசு உமா”
என்றான்.
உமா அடங்கிப்
போனாள். “எப்பவும் என்னத் தான் அடக்கத் தெரியும். பொண்ண ஒரு வார்த்த சொல்ல மாட்டார்.
எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லியபடி ஆபீஸ் கிளம்ப ரெடியானாள்.
ஒரு பத்து
நிமிடத்தில் இருவரும் கிளம்பிப் போனார்கள். காசி விட்டத் தூக்கத்தைத் தூங்கப்
போனான்.
மாலையில்
ஸ்கூலில் இருந்து வந்த சுமி, எப்பொழுதும் போல் டிவி பார்க்க உட்காராமல் டிபன்
சாப்பிட்டுவிட்டு புத்தகப் பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
அம்மா
சொன்னதற்க்கான கோவம் போல இருக்கு என்று காசி நினைத்துக் கொண்டான். சரி எது
எப்படியோ வீட்டில் சண்டை இல்லை என்றால் எல்லாம் சரிதான் என்று நினைத்துக்
கொண்டான்.
இரவு வீடு
திரும்பிய உமாவுக்கும் சுமியின் செயல் ஆச்சரியமாகத் தான் இருந்தது. சந்தோஷமும்
கூட. ஒன்றும் சொல்லவில்லை.
இரவு ஒரு முறை
பாத்ரூம் போக எழுந்து வந்தபோது சுமி ரூமி விளக்கெரிந்து கொண்டிருந்தது. மணி ஒன்று.
சிரித்துக் கொண்டான்.
முதல் நாளின்
ஆச்சரியங்கள் மறு நாள் காலையிலும் தொடர்ந்தன. காலை ஆறுமணிக்கு எழுந்த உமா ஆச்சரியத்தின்
எல்லைக்கேச் சென்றாள். அதற்குள் எழுந்து விட்டிருந்த சுமி தன் அறையில் படித்துக்
கொண்டிருந்தாள்.
இப்படியே சில
நாட்கள் ஆச்ச்சர்யகரமாகக் கடந்தன. அப்புறம் சுமியின் ரிவிஷனும் முடிந்து நார்மல்
ஸ்கூலும் ஆரம்பித்தது. அன்று ரிவிஷன் பேப்பர்ஸ் திருத்தி கொடுப்பார்கள்.
காசிக்குச் சற்று
பயமாகத்தான் இருந்தது. அந்த அனிதா மிகவும் நன்றாகப் படிப்பவள். தன் பெண்ணால்
அவளைத் தாண்ட முடியுமா என்று சந்தேகம் தான். அவனுக்கு அது பற்றி கவலை இல்லை. ஆனால்
உமாவை நினைத்தால் சற்று கவலையாக இருந்தது. அதுவும் பாவம் சுமி இந்த ரிவிஷனுக்கு
மிகவும் உழைத்திருக்கிறாள். பலன் கிடைக்க வேண்டுமே குழந்தைக்கு என்று வேண்டிக்
கொண்டான்.
சாயந்திரம் வந்த
சுமியின் முகம் மிகவும் வாடியிருந்தது. டிபன் கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச்
சென்று தூங்கிப் போனாள். எழுப்ப மனமில்லாமல் காசி விட்டுவிட்டான். ஏழுமணிக்கு உமா
வந்தாள்.
வந்தவளிடம் காசி
மெதுவாக நடந்ததைச் சொன்னான். எங்கே அவள் கோவப் படுவாளோ என்று நினைத்தவனுக்கு
ஆச்சரியம். “ பர்ஸ்ட் ரேங் முக்கியமில்லைங்க. பொறுப்பு வரணும்னு தான் சொன்னேன்.
நானே போய் எழுப்பறேன்” என்றபடி சுமி ரூமுக்குச் சென்றாள். காசியும் பின்னே
சென்றான்.
“சுமி, சுமி,
எழுந்திரும்மா. வெளக்கு வச்ச நேரம் இப்படிப் படுப்பாளா? எழுந்து ஏதாவது சாப்பிடு”
என்று அன்போடு எழுப்பினாள்.
தூக்கம் கலைந்து
எழுந்த சுமி, உமாவைப் பார்த்தாள். திடீரென்று அவள் கண்களில் கண்ணீர் வழிய
ஆரம்பித்தது. அதைப் பார்த்த உமா “ அம்மா அன்னிக்கு சொன்னத மனசுல வச்சுக்காதடா
கண்ணா. பர்ஸ்ட் ரேங் வரலைனா பரவாயில்ல” என்றாள்.
அழுத கண்களுடன் “
இல்லைம்மா நான் தான் இந்தத் தடவ பர்ஸ்ட் ரேங்!” என்றாள் சுமி.
காசிக்கும்
உமாவுக்கும் இன்ப அதிர்ச்சி. “அப்புறம் எதுக்குடா அழற?”
“அந்த அனிதா இல்ல
அனிதா, அவ இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டப்பறம் என்கிட்டே ஒண்ணு சொன்னாம்மா”
“என்ன சொன்னா?
கங்க்ராட்ஸ் சொன்னாளா இல்லைக் கோபப்பட்டாளா?”
“கோபம் தான்
பட்டாம்மா. ‘இந்த வாட்டி பர்ஸ்ட் ரேங் வாங்கிட்டதால பெரிய இவன்னு நெனைக்கதேடி. நான்
தான் என்னைக்கும் பர்ஸ்ட். இந்த எக்சாம்ல
வேணும்னா நீ என்னத் தாண்டியிருக்கலாம். ஆனால் லைப்ங்கற எக்சாம்ல நான் தான்
என்னைக்கும் பர்ஸ்ட். உங்கப்பா என்ன வேலைடி பண்றார்? என்ன சம்பளம்? ஒரு
நாப்பதாயிரம் இருக்குமா? எங்கப்பா பிசினஸ். மாசம் கொறஞ்சது மூணு லட்சம்
சம்பாதிப்பார். எங்க வீட்டுல ரெண்டு கார். உங்க வீட்டுல இருக்கா? அத விடு. எங்க
அம்மாவப் பாத்திருக்கியா? எவ்வளோ அழகு? இப்படி கேட்டாம்மா. அப்பா நீங்க ஏன்பா
பிசினஸ் பண்ணல? நாம ஏன்பா பணக்காரங்களா இல்ல? அம்மா நீ ஏன்மா அவங்கம்மா மாதிரி
அழகாயில்ல?.” மேலே பேசமுடியாமல் சுமி தேம்ப ஆரம்பித்தாள்.
உமா
உறைந்திருந்தாள். காசியும் தான்.
Subscribe to:
Comments (Atom)