Thursday, January 8, 2026

மறைந்த இடைவெளிகள்

 மறைந்த இடைவெளிகள் 


பெங்களூருவின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பதினோராவது மாடியில், காலை நேரத்து பில்டர் காபி வாசனை கமகமத்தது. மீனாட்சி பித்தளை டபரா செட்டில் காபியை ஆற்றி, பூஜை அறையிலிருந்து வந்த சிவகுமாரிடம் நீட்டினாள்.


"இந்தாங்கோ... காபி. என்ன இன்னிக்கு காலம்பரமே பலத்த யோஜனை?"


சிவகுமார் காபியை உறிஞ்சிக்கொண்டே ஜன்னல் வழியாகத் தெரிந்த சிமெண்ட் கட்டிடங்களைப் பார்த்தார். 


"என்னமோ மீனாட்சி... மனசு ஒரு இடத்துல தங்க மாட்டேங்குறது. இந்த பெங்களூரு வந்தாச்சு, பையன் கூட இருக்கோம்ங்கிற திருப்தி இருக்கு. ஆனா, இந்த வீடு என்னமோ ஒரு ஜெயில் மாதிரி தோணறது. நமக்கோ வயசாயிடுத்து, கை கால் நடுக்கம் வந்துடுத்து. ஆத்துல ஒரு பிடிமானம் இல்லாத மாதிரி ஒரு பயம்."


அந்த நேரம் ரமேஷ் தன் லேப்டாப்போடு ஹாலுக்கு வந்தான். முகம் முழுக்க டென்ஷன். "அம்மா! அந்த முக்கியமான பைல்ஸ் இருந்த பென்டிரைவ் எங்க வெச்சேன்னு தெரியலை. சீக்கிரம் தேடுங்க, பத்து நிமிஷத்துல மீட்டிங் ஆரம்பிச்சிரும்!"


சிவகுமார் மெதுவாக எழுந்தார். "இருடா... நான் நேத்து அந்தப் பக்கம் பார்த்தேன். தேடித் தர்றேன்."


"அப்பா! நீங்க சும்மா இருங்கோ... நீங்க கை வெச்சா அது இன்னும் எங்கியாவது போயிரும். வித்யா! வித்யா... அந்தப் பென்டிரைவ் எங்கே?" என்று கத்தினான் ரமேஷ்.


சமையலறையிலிருந்து வந்த ரமேஷின் மனைவி வித்யா, அமைதியாகப் பென்டிரைவை எடுத்துக் கொடுத்தாள். ரமேஷின் கோபத்தைக் கண்டு அவள் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் மாமனாரின் வாடிய முகத்தைப் பார்த்தாள்.


அன்று மாலை ஒரு விபரீதம் நடந்தது. ரமேஷ் தன் ஆபீஸ் வேலையாக ஒரு புதிய 'டிஜிட்டல் டேப்லெட்' வாங்கியிருந்தான். அதன் ஸ்க்ரீன் மிக மெல்லியது. சிவகுமார் அதைத் துடைப்பதாக நினைத்து, அழுத்தமாகத் துணியை வைத்துத் தேய்க்க, 'சடக்' என்ற சத்தத்துடன் ஸ்க்ரீன் விரிசல் விட்டது.


மீனாட்சி பதறிப்போனாள். "ஐயோ... இதென்ன காரியம் பண்ணிட்டேள்? ரமேஷ் பார்த்தா கோவப்படுவானே !"


சிவகுமார் திகைத்து நின்றார். ரமேஷ் உள்ளே வந்தான். உடைந்த டேப்லெட்டைப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன. வித்யா ரமேஷின் கையை மெதுவாகப் பிடித்தாள். அவள் ரமேஷின் கண்களைப் பார்த்துத் தலையசைத்தாள். ரமேஷ் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.


"பரவாயில்லைப்பா... ஸ்க்ரீன் தானே மாத்திண்டா போச்சு ? Also ,இதோ பாருங்கோ, இன்னொரு டேப்லெட் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன். நாளைக்கே வந்துரும். நீங்க காபி சாப்பிட்டேளா? வித்யா, அப்பாவிற்கு ஒரு காபி எடுத்துண்டு வா," என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.


சிவகுமார் அப்படியே உறைந்து நின்றார். அந்த அறை முழுக்க ஒரு பயங்கரமான மௌனம் நிலவியது. அவர் எதிர்பார்த்த சண்டை வரவில்லை. 


அன்று இரவு சிவகுமார் தூக்கமில்லாமல் தவித்தார். விடியற்காலை வேளையில் மீனாட்சி அவர் அருகில் வந்து அமர்ந்து மெதுவாகப் பேசினாள்.


"என்னன்னா ... தூக்கம் வல்லையா? ஒங்க மனசுல என்ன ஓடிண்டு இருக்குன்னு நேக்கு தெரியாதா? ரமேஷ் நீங்க செஞ்ச காரியத்துக்கு ஒங்கள நாலு வார்த்தை கத்தணும்னு நீங்க காத்துண்டு இருந்தேள். அவன் கத்தினாக்க ' உனக்கு நான் பாரமா இருக்கேன், நாளைக்கே நான் பாலக்காட்டுக்கே கெளம்பறேன், அந்தப் பழைய வீட்ல ஒரு ஓரமா கிடப்பேன்'னு பழைய பல்லவியப் பாடி அவனைக் guilt feeling ல தள்ளணும்னு நீங்க மனக்கோட்டை கட்டி வெச்சிருந்தேள். இல்லையா?


உங்களுக்கு நிஜமாவே பாலக்காடு போகணும்னு ஆசை இல்லை. ஆனா அவன் உங்களைத் திட்டும் போதுதான் இவன் என் மேல அதிகாரமும் கோபமும் காட்டுறான், நான் இவனுக்கு அந்நியமாகல'ன்னு நீங்க ஒரு திருப்தி பட்டுக்கறேள். நேத்து அவன் திட்டாமப் போன உடனே, ஒங்களால அந்த டயலாக் சொல்ல முடியல . அதான் உங்களுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா இருக்கு. அவன் உங்களை மதிக்கிறான்னா , அதான் திட்டல."


சிவகுமார் மெதுவாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அப்போது ரமேஷ் அங்கே வந்தான். "என்னப்பா... என்ன பேச்சு காலம்பரமே?"


சிவகுமார் எழுந்து ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டார். "டேய்! சாரிடா ரமேஷ்... நான் வேணும்னே பண்ணல, ஆனா நீ திட்டலங்கிறப்போ நேக்கு ஒரு மாதிரி ஆயிடுத்துடா . இனிமே நான் பாலக்காடு போற பழைய பேச்சை எடுக்க மாட்டேன்."


ரமேஷ் சிரித்தான். "அப்பா... நீங்க எப்பவும் எங்களோட இங்கத்தான் இருப்பேள். இந்த weekend நாம எல்லாரும் பாலக்காடு போறோம்... ஆனா அங்க தங்குறதுக்கு இல்ல, நம்ம குலதெய்வம் கோவிலுக்கு ! என்ன சொல்றேள்?"


மீனாட்சி, அதைக் கேட்டுக்கொண்டே, உள்ளே இருந்து சூடாக காப்பி எடுத்துக்கொண்டு வந்தாள். "ஆஹா! குலதெய்வம் கோவில் போனதுக்கு அப்புறம் அப்படியே என்னோட பொறந்த ஊர் கல்பாத்திக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்துறலாம். என்னன்னா போயிட்டு வரலாமா ?"


சிவகுமார் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பில் பழைய வீட்டின்ஏக்கம் இல்லை மாறாக புதிய வீட்டின் உரிமை இருந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இப்பத்தான் நிஜமான சந்தோஷம் குடிவந்தது.


வீயார்

Sunday, January 4, 2026

உன்னை அறிந்தால்

 உன்னை அறிந்தால்


சமையலறையில் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரின் சத்தம், அந்த ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதின் அமைதியை ஒரு சீரான தாளத்துடன் கிழித்துக் கொண்டிருந்தது.


பிரியா தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள். நாற்பத்திரண்டு வயதான அவளுக்கு, தன்  வாழ்க்கையும் அந்த கிரைண்டரை போலவே தோன்றியது. ஒரே வட்டத்தில் சுழலும் வாழ்க்கை. அதன் ‘சுவிட்ச்’ அவள் கையில் இல்லை.


ஹாலில் ரவி ஹிந்து பேப்பரை விரித்து வைத்துக் கொண்டிருந்தான். அவன் அருகே காபி இருந்தது. சரியாக அறுபத்தி ஐந்து டிகிரி சூடு. அதிகம் சுடவும் கூடாது, ஆறிப்போகவும் கூடாது. இது அவனது சாம்ராஜ்யம். அவன் நினைத்தால்தான் அந்தப் பக்கம் திரும்ப முடியும்.


"ரவி..." கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹால் வாசலுக்கு வந்தாள் பிரியா. 


"சுமதி போன் பண்ணினாள். அடையார் சிக்னல் கிட்ட ஒரு இடம் காலியா இருக்காம். நாம் பேசிக்கொண்டிருந்தோமே அந்த புட்டிக் (Boutique) ஆரம்பிக்க... ஓனர் அட்வான்ஸ் தொகையை குறைச்சிருக்காராம்."


ரவி பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தை படித்து முடித்துவிட்டு, ஒரு மிடறு காபியை குடித்தான். அந்த மௌனம் பிரியாவுக்குப் பழகிப்போன ஒன்று.


"பிரியா," அவனது குரலில் ஒரு நிதானம் இருந்தது. எல்லாம் தெரிந்த ஒரு பெரியவர், விவரம் அறியாத குழந்தைக்குச் சொல்லும் தொனி அது. "நாம இதை ஏற்கனவே பேசிட்டோம். அடையார் ரொம்ப தூரம். டிராபிக் பத்தி உனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அடுத்த மாசம் அம்மாவுக்கு 

மூட்டு ஆபரேஷன் இருக்கு. வீட்ட யாரு கவனிச்சுப்பா? பிசினஸ்ங்கிறது பொழுதுபோக்கு இல்ல. அதுக்கு இருபத்தி நாலு மணிநேர உழைப்பு தேவை. உன்னால முடியாது."


பிரியாவின் நெஞ்சில் அந்தப் பழைய பாரம் ஏறியது. அது கோபம் மட்டும் அல்ல; விசித்திரமான ஒரு ஆறுதலும் கலந்த உணர்வு.


"என்னால சமாளிக்க முடியும் ரவி. சுமதி ஈவினிங் ஷிப்ட் பார்த்துப்பா. நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு சும்மா இருக்கேன். எனக்கு மூச்சுத் திணறற மாதிரி இருக்கு ரவி," அவள் குரல் தழுதழுத்தது.


ரவி பெருமூச்சு விட்டான். பேப்பரை மடித்து டீப்பாய் மீது வைத்தான். "மூச்சுத் திணறுதா? டிரைவர், வேலைக்காரி, மயிலாப்பூர்ல சொந்த வீடு... உனக்கு டிராபிக்ல கஷ்டப்பட வேண்டாம், வாடகைக்கு அலைய வேண்டாம்னுதான் நான் பனிரெண்டு மணிநேரம் உழைக்கிறேன். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் பிரியா. ஏன் உனக்கு இது புரியல?"


பிரியா சமையலறைக்குத் திரும்பினாள். அவள் கண்கள் லங்கியிருந்தன. ஆனால் மனதின் ஒரு ஓரத்தில், ஒரு விசித்திரமான திருப்தி இருந்தது. "நான் முயற்சி செய்தேன், ஆனால் அவர் தடுத்துவிட்டார்" என்கிற ஒரு கவசத்தை அவள் மாட்டிக்கொண்டாள்.


கிரைண்டரின் சத்தத்தோடு போட்டியிடும் வகையில் தனக்குள் முணுமுணுத்தாள். "இவர் மட்டும் இல்லையென்றால்... இவருடைய இந்த பிடிவாதம் மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் ஒரு பெரிய ஃபேஷன் டிசைனராக ஆகியிருப்பேன். என் சிறகுகளை இவர்தான் வெட்டுகிறார்."


கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை இது. இதில் ரவி வில்லன், அவள் தியாகி. அந்த வேடம் அவளுக்குப் பிடித்திருந்தது.



மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு செவ்வாய்க்கிழமை அந்த மாற்றம் நிகழ்ந்தது.


வழக்கத்திற்கு மாறாக ரவி மதியமே வீடு திரும்பினான். காபி கேட்கவில்லை. சோபாவில் அமர்ந்து டையை தளர்த்திக்கொண்டான். அவன் முகத்தில் இதுவரை பிரியா பார்த்திராத ஒரு சோர்வு இருந்தது. அதிகாரத்தின் சோர்வு அல்ல, இருப்பின் சோர்வு.


"நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்," என்றான் ரவி, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.


கரண்டி பிரியாவின் கையிலிருந்து நழுவியது. "என்னது? திடீரென்று?"


"ஆபீஸில் லேசான நெஞ்சுவலி வந்தது. ஸ்ட்ரெஸ் தான் காரணம்னு டாக்டர் சொல்லிட்டார். இப்படியே போனா இன்னும் அஞ்சு வருஷத்துல நான் காலி. நமக்குத் தேவையான சேவிங்ஸ் இருக்கு. அது போதும்." அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இருந்த அந்த அதிகாரம் மறைந்து, ஒரு நிம்மதி குடிகொண்டிருந்தது.


"இப்போ என்ன செய்யப் போறீங்க?" பிரியா திகைப்புடன் கேட்டாள்.


ரவி புன்னகைத்தான். "நான் ஓய்வெடுக்கப் போகிறேன். இத்தனை வருஷம் ஓடினது போதும். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் போகிறேன். அப்புறம் நீ..." அவன் டைனிங் டேபிளில் தூசி படிந்திருந்த அவளது ஸ்கெட்ச் நோட்டுகளைக் காட்டினான். "நீ அந்த புட்டிக்கை ஆரம்பி. 

நாளைக்கே அடையார் போ. அட்வான்ஸ் கொடுத்துடு."


அந்த அறையின் காற்று மாறியது. இத்தனை வருடங்களாகத் தன்னை அழுத்தி வைத்திருந்ததாக பிரியா நினைத்த அந்தப் பாரம், திடீரென மறைந்துவிட்டது.


"உண்மையாவா?"


"உண்மையாகத்தான். இத்தனை நாள் என் பயத்தினால் உன்னைத் தடுத்துட்டேன். இனி எனக்கு அந்த அதிகாரம் வேண்டாம். நீ சுதந்திரப் பறவை. போ... ஜெயித்து வா."


கூண்டுத் திறக்கப்பட்டது. காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியும் விலகிவிட்டான்.


மறுநாள் காலை.


பிரியா பட்டுப்புடவை கட்டிக்கொண்டு காரில் ஏறினாள். அடையார் சிக்னல் நெருங்க நெருங்க அவளுக்குள் உதறல் எடுத்தது. வெளியே வெயில் கொளுத்தியது. இரைச்சலான சாலைகள். இதுவரை இந்த உலகத்தை காரின் கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்த்துப் பழகியவள் அவள்.


திடீரென்று ஒரு  எண்ணம் அவளைத் தாக்கியது.


*யாராவது என் டிசைன்களை வாங்குவார்களா? சுமதி என்னை ஏமாற்றிவிட்டால்? எனக்குக் கணக்கு வழக்கோ, வரியை பற்றியோ எதுவுமே தெரியாதே! இவ்வளவு நாள் ரவிதான் எல்லாவற்றையும் 

பார்த்துக்கொண்டார். ஒருவேளை நான் பணத்தை இழந்தால்? என் தோல்வியைக் கண்டு உலகம் சிரிக்காதா? ரவி என்ன நினைப்பார்?*


அவள் நெஞ்சு படபடத்தது. ரவியிடம் சண்டை போடும்போது கூட இப்படித் துடித்ததில்லை. அந்தச் சண்டைகளில் ஒரு பாதுகாப்பு இருந்தது. "அவர் தடுக்கிறார், அதனால் நான் செய்யவில்லை" என்று சொல்வது எவ்வளவு வசதியாக இருந்தது! இத்தனை காலமும் தன் திறமையை ஒரு கற்பனை வானத்தில் பறக்கவிட்டிருந்தாள். அங்கே அவள் ஒரு வெற்றியாளர்—

ஏனென்றால் அந்தத் திறமை ஒருபோதும் பரீட்சிக்கப்படவில்லை.


*ஆனால் இப்போது? தடுப்பதற்கு யாரும் இல்லையே! அந்தப் பெரிய பூட்டு இப்போது திறந்திருக்கிறது. ஒருவேளை நான் வெளியே போய் சிறகுகளை விரிக்கும்போது, என்னால் பறக்க முடியாமல் 

போனால்? விழுந்து அடிபட்டால், பழிபோட ரவி இல்லையே! என் தோல்விக்கு நானே பொறுப்பாகி விடுவேனே! அந்தப் பாரத்தை விட, இந்தச் சிறையே மேல் என்று தோன்றுகிறதே...*


"மேடம், அடையார் வந்தாச்சு," டிரைவர் சொன்னார்.பிரியா வெளியே பார்த்தாள். அந்தக் கடைத் தெரியத் தொடங்கியது.


"வண்டியைத் திருப்புங்க," பிரியா உரத்தக் குரலில் சொன்னாள்.


"மேடம்?"


"வண்டியைத் திருப்புங்கன்னு சொன்னேன்! முக்கியமான டாகுமெண்ட்ஸை மறந்துட்டேன். அதுவுமில்லாம தலை வலிக்குது. வீட்டுக்குப் போங்க."



வீட்டிற்குள் நுழைந்தபோது, ரவி பால்கனியில் துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.


"அட, இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? கையெழுத்து போட்டாச்சா?"


பிரியா சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள். அவளுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அவசரமாக ஒரு காரணத்தைத் தேடினாள்.


"அந்த இடம் போயிடுச்சாம் ரவி," அவள் பொய் சொன்னாள். குரலில் நடுக்கம் இருந்தது. "அதுவுமில்லாம... எனக்கு யோசனையா இருக்கு. உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்போ நான் பாட்டுக்கு பிசினஸ்னு வெளிய சுத்த முடியுமா? உங்களை யார் பார்த்துப்பா? அது சுயநலம்."


ரவி அவளை உற்றுப் பார்த்தான். கையில் இருந்த பூவாளியைக் கீழே வைத்தான். ஹாலுக்கு வந்து அவளுக்கு எதிரே அமர்ந்தான்.


அவன் முகத்தில் கோபமில்லை. ஆனால், ஒரு மெல்லிய சோகம் இருந்தது.


"பிரியா," அவன் மெதுவாகச் சொன்னான். "நான் நல்லா இருக்கேன். எனக்காக நீ வீட்ல இருக்க வேண்டாம்."


"இல்ல ரவி, அந்த டிராபிக்... என்னால தனியா..."


"நிறுத்து," ரவி இடைமறித்தான். அவன் குரல் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருந்தது. 


"நீ டிராஃபிக்கை பார்த்து பயப்படல பிரியா. நீ தோற்றுப் போவேன்னு பயப்படுற."


அங்கு நிலவிய அமைதி, கிரைண்டர் சத்தத்தை விடப் பயங்கரமாக இருந்தது.


"இருபது வருஷமா, உன் கனவு நிறைவேறாததுக்கு என்னைக் காரணம் காட்டிட்டு இருந்த. நானும் 'நான் தான் இந்த வீட்டின் தலைவன்'ங்கிற மிதப்புல உன்னைத் தடுத்துக்கிட்டே இருந்தேன். அது எனக்கும் வசதியா இருந்தது, உனக்கும் வசதியா இருந்தது. நீ செய்யாத காரியங்களுக்கு என்னைக் காரணம் காட்டினாய். நான், என் அதிகாரத்தைக் காட்ட 

உன்னைப் பயன்படுத்தினேன்."


பிரியா தலை குனிந்தாள். கண்கள் கலங்கின. தான் கட்டி வைத்திருந்த பிம்பம் உடைவதை அவளால் தாங்க முடியவில்லை.


"ஆனா இனிமே அந்த விளையாட்டு வேண்டாம்," ரவி தொடர்ந்தான். "நீ அந்த பிசினஸை ஆரம்பிக்கலன்னா, அதுக்குக் காரணம் உன் பயம் தானே தவிர, என் கண்டிப்பு கிடையாது. உன் தோல்விக்கோ வெற்றிக்கோ இனி நீதான் பொறுப்பு. அந்தச் சுமையை இனிமேல் நான் சுமக்க விரும்பல."


பிரியா நடுங்கும் குரலில் கேட்டாள். "எனக்குத் தெரியல ரவி... என்னால முடியுமான்னு தெரியல. நான் இதுவரைக்கும் தனியா எதையும் செஞ்சதில்ல."


"எனக்குப் புரியுது," ரவி அவள் கையைப் பற்றினான். "இது பயமாத்தான் இருக்கும். சில சமயம் தோல்வியும் வரலாம். நஷ்டம் வரலாம். ஆனா பரவாயில்லை. நிழல்லயே சண்டை போட்டு ஜெயிக்கிறத விட, வெயில்ல நின்னு தோற்றுப் போறது எவ்வளவோ மேல்."


அவன் கையை அழுத்தியது ஒரு கணவன் என்பதாக அல்ல, ஒரு தோழனாக.


"நாளைக்கு வேற கடை பார்க்கலாம். சின்னதா ஆரம்பி. ஆனா, எனக்காகன்னு சொல்லி வீட்ல உக்காராதே."


பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ரவியின் கண்களில் இப்போது அதிகாரம் இல்லை. ஒரு தோழனின் நம்பிக்கை இருந்தது. இத்தனை வருடம் தான் ஒளிந்து கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பான குகை, உண்மையில் ஒரு சிறைச்சாலை என்பதை உணர்ந்தாள். ஆனால் சாவியை ரவி அவளிடமே கொடுத்துவிட்டான்.


"நாளைக்கு... மயிலாப்பூரிலேயே ஒரு இடம் பார்க்கலாம்," என்றாள் பிரியா மெல்லிய குரலில்.


ரவி புன்னகைத்துக்கொண்டே எழுந்து சமையலறைக்குச் சென்றான். "சரி, இன்னைக்கு காபி நான் போடறேன். எத்தனை டிகிரி சூடு வேணும்?"


சமையலறையிலிருந்து சிரிப்பொலி மெலிதாகக் கேட்டது. கிரைண்டர் ஓடவில்லை. ஆனால் வாழ்க்கை, இப்போதுதான் நகரத் தொடங்கியிருந்தது.


வீயார் 

Friday, January 2, 2026

இடம் பொருள் ஏவல்

 இடம் பொருள் ஏவல்


பொருள் :


சென்னை, அடையார்.


நவீன கட்டிடக்கலையின் உச்சமாக விளங்கிய அந்த 'ஆர்க்கிடெக்ட்ஸ் ஸ்டுடியோ'வின் மூன்றாவது மாடி. நேரம் நள்ளிரவு 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வெளியே அடைமழை, ஜன்னல் கண்ணாடிகளைப் பிய்த்துத் தின்பது போல ஆக்ரோஷமாகப் பெய்து கொண்டிருந்தது.


அலுவலகத்தில் இருந்த அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்க, மூலையில் இருந்த சித்தார்த்தின் கேபினில் மட்டும் நீல நிற ஒளி கசிந்து கொண்டிருந்தது. இரண்டு பிரம்மாண்டமான 'வளைந்த மானிட்டர்களுக்கு' (Curved Monitors) நடுவே, சித்தார்த் மாய்ந்து போயிருந்தான். திரையில் ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்தின் '3D மாடல்' மெல்லச் சுழன்று கொண்டிருந்தது. கையில் இருந்த ஸ்டைலஸ் (Stylus) பேனாவால் டிஜிட்டல் பேடில் எதையோ திருத்திக் கொண்டிருந்தான்.


முப்பத்திரண்டு வயது. இந்தியாவின் தலைசிறந்த ஆர்க்கிடெக்ட். ஆனால், அவனது கண்கள் சோர்வில் சிவந்திருந்தன. வெற்றிடம். ஒரு தீராத வெற்றிடம் அவன் கண்களில் தெரிந்தது. அனாதை இல்லத்தில் வளர்ந்தவன் என்பதால், இந்த வெற்றிகளைக் கொண்டாடவோ, தோல்விகளைப் பகிரவோ அவனுக்கு ஒரு ஜீவன் கூட இல்லை. அந்தத் தனிமைதான் அவனது பலம், அதுவே அவனது சாபம்.


"மே ஐ கம் இன், மிஸ்டர் சித்தார்த்?"


திடுக்கிட்டுத் திரும்பினான் சித்தார்த். அந்த நள்ளிரவு நேரத்தில், பூட்டிய அலுவலகத்திற்குள் ஒரு பெண் குரல்.


வாசலில் ஒரு உருவம். சந்தன நிறம். மழையில் லேசாக நனைந்த கருமேகக் கூந்தல். அவள் அணிந்திருந்த அடர் நீல நிறப் புடவை, அந்த அரை இருட்டில் அவளை ஒரு தேவதை போலவும், அதே சமயம் ஒரு மர்ம உருவம் போலவும் காட்டியது.


"நீங்க...? செக்யூரிட்டி சிஸ்டம் லாக் ஆகியிருக்குமே... எப்படி உள்ள வந்தீங்க?" சித்தார்த் நாற்காலியை விட்டு எழுந்தான்.


"பூட்டின கதவுகள் என்னைத் தடுக்காது சித்தார்த்..." அவள் குரலில் இருந்த அந்த விசித்திரமான ஈர்ப்பு, சித்தார்த்தின் கேள்வியை பாதியிலேயே விழுங்கியது. அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள்.


அவள் நகர நகர, அந்த அறைக்குள் ஒரு விசித்திரமான நறுமணம் பரவியது. அது ஜவ்வாது அல்லது மல்லிகை வாசனை அல்ல. பல வருடங்களாகத் திறக்கப்படாத ஒரு பழைய மரப்பெட்டியைத் திறந்தால் வரும், பழமையின் நெடி கலந்த வாசனை.


"நான் மதுமிதா. தஞ்சாவூர்ல இருந்து வர்றேன்."


"மேடம், இது ஆபீஸ் ஹவர்ஸ் இல்ல. ப்ளீஸ் லீவ்," சித்தார்த் கறாராகச் சொல்லிவிட்டு, கணினியைத் திருப்ப முயன்றான்.


மதுமிதா அவன் மேஜையை நெருங்கினாள். திரையில் சுழன்று கொண்டிருந்த கட்டிடத்தைப் பார்த்தாள்.


"இந்தக் கட்டிடத்துல இருக்கற நேர்த்தி, உங்க வாழ்க்கையில இல்ல சித்தார்த். உங்க வலது தோள்பட்டையில ஒரு மச்சம் இருக்குமே... கவனிச்சிருக்கீங்களா?"


சித்தார்த் சிலையாகிப் போனான். சட்டைக்குள் மறைந்திருக்கும் அந்த மச்சம் பற்றி இவளுக்கு எப்படித் தெரியும்? அவனது தனிப்பட்ட மருத்துவரைத் தவிர யாருக்கும் தெரியாத ரகசியம் அது.


"எ... எப்படி?"


"புகழைக் கொடுக்கும் ராஜ மச்சம் அது. ஆனா, ராத்திரி நேரத்துல தீராத தனிமையைத்தான் அது உங்களுக்குத் தருது. சரியா?"


பேசிக் கொண்டே அவள் தனது வலது கையை நீட்டினாள். அவள் விரல்கள் பனிக்கட்டியை விடக் குளிர்ந்து இருந்தன. அந்த விரல்கள், மவுஸ் பிடித்திருந்த சித்தார்த்தின் கையைத் தொட்டன.


*ஷாக்!*


சித்தார்த்தின் உடலில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. அடுத்த நொடியே, அவனது மூளையின் நரம்புகள் செயல் இழந்தன. அவனது தர்க்க அறிவு (Logic) அணைக்கப்பட்டு, ஒரு விதமான போதை தலைக்கு ஏறியது. கணினித் திரை மறைந்து, அவளது கண்கள் இரண்டு பெரிய சுழல்களாக மாறி அவனை உள்ளிழுப்பது போலிருந்தது.


"எங்க அப்பா 'சுந்தரமூர்த்தி' ஒரு பெரிய மாந்த்ரீகர். அவர் உபாசனை செய்யும் 'கர்ண பிசாசினி' தான் உங்க தனிமையைப் பத்திச் சொன்னுச்சு. எனக்கு ஒரு பழைய பங்களாவை புதுப்பிக்கணும். அதுக்கு நீங்க வரணும்..." அவள் ஒரு எஜமானியைப் போல ஆணையிட்டாள்.


சித்தார்த்தின் கண்கள் சொருகின. அவன் வாய், "வர்றேன்..." என்று தன்னிச்சையாக முணுமுணுத்தது.


"லேப்டாப்பை எடுங்க. இப்போவே கிளம்பலாம்."


சித்தார்த் ஒரு இயந்திரம் போலத் திரும்பினான். கணினியை அணைக்க வேண்டும் என்றோ, ஆபிஸை பூட்ட வேண்டும் என்றோ அவனுக்குத் தோன்றவில்லை. அவன் ஆன்மா இப்போது அவளிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது.



இடம் :


கார் சென்னையைத் தாண்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. மதுமிதா டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தாள். பின் இருக்கையில் சித்தார்த், உயிரற்ற பொம்மை போலச் சரிந்து கிடந்தான். அவனது மயக்கம் சாதாரணமானது அல்ல; அது ஒரு 'மாந்த்ரீகக் கட்டு'.


விடியற்காலை 5 மணி. கார் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையைத் தொட்டது.


நடுக்காவேரி கிராமம். ஊருக்கு வெகு தொலைவில், காவிரி ஆற்றங்கரையை ஒட்டிய ஒரு அடர்ந்த சவுக்குத் தோப்பு. அதன் நடுவே நின்றது அந்தப் பங்களா.


நூறு வருடப் பழமையான கட்டிடம். காரை, பெயர்ந்து செங்கற்கள் வெளியே தெரிந்தன. வாசலில் நின்றிருந்த பிரம்மாண்ட வேப்பமரம், ஏதோ ஒரு ராட்சதக் கிழவி தலைவிரித்து ஆடுவது போலக் கிளைகளை ஆட்டிக் கொண்டிருந்தது.


வீட்டின் திண்ணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். முறுக்கு மீசை, சிவந்த கண்கள், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. கழுத்தில் ருத்திராட்ச மாலைகள். அவர்தான் சுந்தரமூர்த்தி.


காரிலிருந்து மதுமிதா இறங்கினாள். அவளைத் தொடர்ந்து, சித்தார்த்தும் தள்ளாடியபடியே இறங்கினான்.


சுந்தரமூர்த்தி சித்தார்த்தை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு ஆட்டை வெட்டப் போகும் கசாப்புக்காரன், அதன் கழுத்தின் தரத்தைச் சோதிப்பது போன்ற பார்வை அது.


"பொருள் வந்தாச்சு... ஆனா மயக்கம் தெளியறதுக்குள்ள காரியத்தை முடிச்சிரணும்," சுந்தரமூர்த்தி கரகரத்த குரலில் சொன்னார்.


"இவனை மாடி அறைக்குக் கூட்டிட்டு போங்க அப்பா. பகல் முழுக்கத் தூங்கட்டும். அமாவாசை பூஜை நள்ளிரவுல தான்," என்று சொல்லிவிட்டு மதுமிதா உள்ளே சென்றாள்.


சித்தார்த் மாடி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அந்த அறையில் 1920-ல் வரையப்பட்ட ஒரு ஓவியம் இருந்தது. அதில் இருந்த பெண் அச்சு அசல் மதுமிதாவைப் போலவே இருந்தாள். சித்தார்த்தின் மழுங்கிய மூளைக்கு அது விசித்திரமாகத் தோன்றினாலும், பயணக் களைப்பும், வசிய மருந்தின் வீரியமும் அவனை உடனடியாக ஆழ்ந்த உறக்கத்திற்குக் கொண்டு சென்றன.


சூரியன் உதித்து, மறைந்தது. அந்தப் பங்களாவில் பகல் பொழுதே ஒரு விதமான மங்கலான இருளோடுதான் கழிந்தது.


நள்ளிரவு.

சித்தார்த் திடுக்கிட்டு விழித்தான். அறை முழுக்க கும்மிருட்டு. ஜன்னல் வழியே நிலா வெளிச்சம் மட்டும் விழுந்து கொண்டிருந்தது. அவனது தலை பாரமாக இருந்தது. 'நான் எங்கே இருக்கிறேன்?' என்ற குழப்பம் வருவதற்கு முன்...


*ஜல்... ஜல்... ஜல்...*


கூர்மையான சலங்கை சத்தம். அது வெறும் சத்தம் அல்ல; காற்றில் மிதந்து வரும் ஒரு அழைப்பு.


அறைக்கதவு தானாகத் திறந்தது. வெளியே தாழ்வாரத்தில், ஒரு பெண் உருவம் நடந்து செல்வது தெரிந்தது. அது மதுமிதா. ஆனால், நேற்று பார்த்த நவீன உடை இல்லை. பட்டுப்புடவை, தலை நிறைய பூ, கையில் விளக்கு.


சித்தார்த் ஒரு இரும்புத் துண்டு போலவும், அந்த உருவம் ஒரு காந்தம் போலவும் உணர்ந்தான். படுக்கையை விட்டு எழுந்தான். கால்கள் தன்னிச்சையாக அவளைப் பின்தொடர்ந்தன.


ஏவல்:


வீட்டின் மையப் பகுதியில் இருந்த அந்தப் பெரிய முற்றத்தில் (Courtyard), வானம் திறந்திருந்தது. நடுவே ஒரு பெரிய யாக குண்டம் தீயினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மண்டை ஓடுகளும், எலுமிச்சம்பழங்களும் சிதறிக் கிடந்தன.


சுந்தரமூர்த்தி ஒரு நீண்ட கத்தியைத் தீயில் காட்டிக் கொண்டிருந்தார். அவர் வாய் ஏதோ விசித்திரமான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.


"ஓம்... க்ரீம்... ஹ்ரீம்... யக்ஷிணி ஆகர்ஷய... ஆகர்ஷய..."


மதுமிதா அந்த யாக குண்டத்தின் மறுப்பக்கம் போய் நின்றாள். தீயின் செந்நிற ஒளியில், அவள் கண்கள் இப்போது ரத்தச் சிவப்பாகத் தெரிந்தன.


"மதுமிதா... என்ன நடக்குது இங்க?" சித்தார்த் கத்தினான். பகல் முழுவதும் தூங்கியதில், அவனது சுயநினைவு லேசாகத் திரும்பியிருந்தது.


திடீரென காற்று வேகமாக வீசியது. விளக்குகள் அணைந்து எரிந்தன.


மதுமிதாவின் குரல் மாறியது. அது மென்மையான இசைக்குரல் அல்ல; கிணற்றுக்குள் இருந்து வரும் ஒரு அசுரக் குரல்.


"நான் மதுமிதா இல்லடா... யக்ஷிணி! மதுமிதாங்கறது நான் போட்டுக்கிட்ட வேஷம்."


சித்தார்த் பயத்தில் உறைந்து, பின்னால் நகர முயன்றான். ஆனால் கால்கள் தரையோடு ஒட்ட வைக்கப்பட்டிருந்தது போல இருந்தன.


சுந்தரமூர்த்தி சிரித்துக் கொண்டே நெருங்கினார். "சித்தார்த்... இந்த வீட்டுக்குத் தேவை ஆர்க்கிடெக்ட் இல்ல. ஒரு 'பலி'. **இடம்** - இந்த யக்ஷிணியின் மாளிகை. **பொருள்** - நீ. **ஏவல்** - இவளுக்கு இளமை கொடுப்பது."


"எ... என்னை ஏன்? என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?" சித்தார்த் தழுதழுத்தான்.


சுந்தரமூர்த்தி விளக்கினார், "நீ எங்களைத் தேடி வரல சித்தார்த். நாங்க தான் உன்னைத் தூண்டில் போட்டு இழுத்தோம். இந்த உலகத்துல எங்கெல்லாம் ஒரு திறமைசாலி தனிமையில ஏங்கறானோ, அவங்க உடம்புல இருந்து ஒரு விதமான 'ஏக்க நெடி' (Scent of Loneliness) வரும். நான் ஏவி விட்ட **'கர்ண பிசாசினி'** அந்த வாசனையை நுகர்ந்து உன்னைக் காட்டிக் கொடுத்துச்சு. நான் உன் ஜாதகத்தையும், மச்ச சாஸ்திரத்தையும் வச்சு நீதான் சரியான ஆளுன்னு உறுதி பண்ணேன். அப்புறம் என்ன... எஜமானி மதுமிதா உருவத்துல நேர்ல வந்தாங்க... நீ சிக்கிட்ட!"


சித்தார்த் அதிர்ந்து போனான். அவனது வெற்றியும், தனிமையும் அவனுக்கு எமனாக மாறியதை உணர்ந்தான்.


"இன்னும் ஆறு வருஷத்துக்கு என் இளமையைத் தக்க வைக்க, ஒரு கலைஞனோட ரசனை மிக்க ரத்தம் வேணும்!" யக்ஷிணி கையை நீட்டினாள். அவளது விரல் நகங்கள் கூர்மையாக நீண்டு வளர்ந்தன.


சுந்தரமூர்த்தியின் கையில் இருந்த கத்தி, சித்தார்த்தின் நெஞ்சை நோக்கி இறங்கியது.


"அம்மா...!" என்ற சித்தார்த்தின் அலறல், இடியின் சத்தத்தோடு கரைந்து போனது. ரத்தம் யாக குண்டத்தில் சிந்தியதும், யக்ஷிணியின் முகத்தில் இருந்த சுருக்கங்கள் மறைந்து, மீண்டும் 25 வயதுப் பெண்ணாகப் பொலிவு பெற்றது.


அந்தப் பழைய பங்களா மீண்டும் அமைதியானது.



சுழற்சி (6 ஆண்டுகளுக்குப் பிறகு)


சுந்தரமூர்த்தி கையில் இருந்த பழைய ஓலைச்சுவடியைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவரது தலைமுடி நரைத்திருந்தது.


"தாயே... ஆறு வருஷம் முடியப் போகுது. சித்தார்த்தின் ரத்தம் தந்த சக்தி குறைய ஆரம்பிச்சிருச்சு. அடுத்த பொருள்...?"


யக்ஷிணி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். லேசான சோர்வு தெரிந்தது.


"சுந்தரமூர்த்தி... சித்தார்த்தோட ரத்தம் எனக்கு 'அழகை' (Beauty) மட்டும்தான் கொடுத்துச்சு. ஆனா இந்த நவீன உலகம் ரொம்ப மாறிடுச்சு. இங்க தாக்குப்பிடிக்க அழகு மட்டும் பத்தாது... 'அறிவு' (Intellect) வேணும். தந்திரம் வேணும்."


"அப்போ...?"


"அடுத்த பலி ஒரு கலைஞனா இருக்கக் கூடாது. ஒரு மகா புத்திசாலியா, அறிவுஜீவியா இருக்கணும். அவனோட மூளை பலி கொடுக்கப்படும் போது, அவனோட மொத்த அறிவும் எனக்குக் கிடைக்கும். அப்போதான் நான் இன்னும் வலிமையாவேன்."


சுந்தரமூர்த்தி வக்ரமாகச் சிரித்தார். "கர்ண பிசாசினி ஏற்கெனவே ஒருத்தனைக் கண்டுபிடிச்சுருக்கு தாயே. பெங்களூர்ல... ஒரு பெரிய மூளைக்காரன். ஆனா சுத்தமான அனாதை."



பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி.


பிரபலமான ஒரு காபி ஷாப்பின் மூலையில் அமர்ந்திருந்தான் விவேக். அவன் ஒரு 'கிரிப்டோகிராஃபி' (Cryptography) எக்ஸ்பெர்ட். முப்பது வயது. விவாகரத்து ஆகித் தனியாக வாழ்பவன். லேப்டாப்பில் ஏதோ சிக்கலான குறியீடுகளை உடைக்க முயன்று கொண்டிருந்தான்.


"எக்ஸ்கியூஸ் மீ... விவேக்?"


விவேக் நிமிர்ந்து பார்த்தான். எதிரே சந்தன நிறத்தில், கருமேகக் கூந்தலுடன் ஒரு பேரழகி. கழுத்தில் ஒரு விசித்திரமான பதக்கம் மின்னியது.


"நான் மதுமிதா. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துல இருந்து வர்றேன்."


"சொல்லுங்க..." விவேக் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.


"உங்க உள்ளங்கையில இருக்கற அந்த மச்சம்... அது மகா அறிவுக்கு அடையாளம். ஆனா அது உங்களுக்கு தனிமையைத்தான் பரிசா கொடுத்திருக்கு. சரியா?"


விவேக் அதிர்ந்தான். "உங்களுக்கு எப்படி...?"


"எங்க அப்பா ஒரு கர்ண பிசாசினி உபாசகர்..." என்று சிரித்தவள், தன் பையில் இருந்து பழுப்பு நிறத்தில் இருந்த ஒரு பழைய ஓலைச்சுவடியை எடுத்தாள். அதில் விசித்திரமான எண்கள் மற்றும் எழுத்துக்கள் இருந்தன.


"சித்தர்கள் எழுதின ரகசியக் குறிப்பு இது. இதை 'டீகோட்' (Decode) பண்ண உங்களை மாதிரி ஒரு ஜீனியஸ் வேணும். பெரிய சன்மானம் உண்டு. வர்றீங்களா?"


அந்த ஓலைச்சுவடியின் மர்மமும், அவளது வசீகரப் பார்வையும் விவேக்கின் அறிவுக் கண்ணை மறைத்தன. சித்தார்த்தைப் போலவே, அவனும் அந்த வலையில் விழுந்தான்.


"கண்டிப்பா வர்றேன் மதுமிதா..."


வெளியே இடி இடித்தது. யக்ஷிணிக்குத் தேவையான 'அறிவுப் பசி'க்கான உணவு சிக்கிவிட்டது.


இடம் - அதே நடுக்காவேரி பங்களா.

பொருள்- விவேக்கின் அறிவு.

ஏவல் - இம்முறை அறிவிற்காக ரத்தம் சிந்தப்படப் போகிறது.