Wednesday, February 4, 2026

உன் கையின் ரேகையாய்

 உன் கையின் ரேகையாய்....


இரவு ஒன்றரை மணி. 


கௌதமின் அறைக்குள் நிலவிய நிசப்தத்தை லேப்டாப் திரையின் மெல்லிய ரீங்காரம் மட்டுமே கலைத்துக் கொண்டிருந்தது. 21 வயதில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைப்பதென்பது வரம் தான், ஆனால் அந்த நள்ளிரவுப் பணி அவனது உறக்கத்தையும், ஒரு விதத்தில் அவனது நிதானத்தையும் திருடிவிட்டிருந்தது. 


சலிப்புடன் முகநூல் பக்கங்களை உருட்டிக் கொண்டிருந்த கௌதமின் கண்கள், ‘கவிதைச் சோலை’ எனும் குழுவில் நிலைகுத்தி நின்றன. ‘ஆதிரா’ என்ற பெயரில் இருந்து ஒரு பதிவு. அது ஒரு பெண்ணின் உள்ளங்கை. புகைப்படம் மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த ரேகைகளின் ஆழம் அவனை என்னமோ செய்தது. புகைப்படத்தின் கீழே ஒரே ஒரு வரி:


“உன் கையின் ரேகையாய் என்னை நீ மாற்றிக்கொள்...


அந்த வரியைப் பார்த்ததும் கௌதமிற்குள் ஒரு  மின்சாரம் பாய்ந்தது. அவன் கவிஞன் அல்ல; ஒரு கவிதை புத்தகத்தைக் கூட முழுமையாகப் படித்ததில்லை. ஆனால், அந்த வரியின் முடிவை யாரோ அவனது காதுக்குள் ரகசியமாகச் சொன்னது போல இருந்தது. அவனது விரல்கள் விசைப்பலகையில் தாளமிட்டன:


“நான் உன்னவன்... உன்னவன்... உன்னவன்... என்னை நீ ஏற்றுக்கொள்!”


அவன் பதிவிட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம், மெசஞ்சரில் ஒரு பச்சை நிறப் புள்ளி மின்னியது. ஆதிராவிடமிருந்து மெசேஜ். 


“யார் நீ? உனக்கு எப்படித் தெரியும்? இந்த வரியை நான் எங்கும் பதிவிட்டதில்லை. என் டைரியின் கடைசிப் பக்கத்தில், என்னால் எழுதப்பட்ட வரி இது. உனக்கு எப்படித் தெரியும்?”


கௌதமிற்கு பதில் தெரியவில்லை. அவனது இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்த நள்ளிரவு, அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆதிராவிற்கு 50 வயது என்பது தெரிய வந்தபோது கௌதமிற்கு அது ஒரு தடையாகத் தெரியவில்லை. மாறாக, அவளது குரலில் இருந்த அந்த முதிர்ச்சியும், அதிலிருந்த சோகமும் அவனை ஈர்த்தன.


அடுத்த பத்து நாட்கள் ஒரு கனவைப் போலக் கடந்தன. கௌதமிற்கு வேலையில் கவனம் செல்லவில்லை. ஆதிராவுடன் பேசுவதே அவனது முழு நேர வேலையாக மாறியது. பழகிய இரண்டு நாட்களில் அவளைப் பெயர் சொல்லி ஒருமையில் பேசும் அளவுக்கு நெருக்கம் வந்து விட்டது. ஒரு நாள்  ஆதிரா அவனை தன் வீட்டுக்கு அழைத்தாள் .


“ஆதிரா, அந்தத் தெருவில் நுழையும்போது ஒரு பழைய வேப்பமரம் இருக்குமே, அதன் அடியில் ஒரு உடைந்த சிமெண்ட் பெஞ்ச்... இப்போதும் இருக்கிறதா?” என்று கௌதம் போனில் கேட்டான்.


போனின் மறுமுனையில் ஆதிராவின் மூச்சுக்காற்று கனத்தது. “கௌதம்... அந்தப் பெஞ்ச் இருபது வருஷத்துக்கு முன்னாடியே உடைஞ்சு போச்சு. இப்போ அங்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வந்துடுச்சு. நீ... நீ அந்தத் தெருவுக்கு வந்ததே இல்லைன்னு சொன்னியே?”


கௌதம் கண்கள் மூடிச் சொன்னான், “எனக்குத் தெரியல ஆதிரா. ஆனா, அந்தத் தெருவின் ஒவ்வொரு வாசனைக்கும் என் மூளைக்குள்ள ஒரு அர்த்தம் இருக்கு. ஏதோ ஒரு சக்தி  என்னை அங்கே இழுக்குது.”


கௌதமின் நண்பன் கார்த்திக் அவனை எச்சரிக்கத் தவறவில்லை. “டேய் கௌதம், இது நார்மலாவே இல்லைடா. அந்தப் பொம்பளைக்கு உன் அம்மா வயசு இருக்கும். அவங்க ஏதோ பழைய நினைவுகள்ல இருக்காங்க. நீ எதுக்கு அதுல போய் சிக்கிக்கிற?”


“இது வயசு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லடா  கார்த்திக். நான் அவங்க கூட இருக்கும்போது மட்டும்தான் ‘முழுமையா’ இருக்கிற மாதிரி உணர்றேன். மத்த நேரம் எல்லாம் நான் ஒரு ஜடம் போல இருக்கேண்டா ,” என்றான் கௌதம் ஒரு விதமான பித்துப்பிடித்த நிலையில்.



இறுதியாக அடையாறில்  ஒரு அமைதியான சந்தில் இருந்த ஆதிராவின் வீட்டிற்கு கௌதம் சென்றான். அந்தத் தெருவிற்குள் நுழைந்தபோதே கௌதமிற்கு உடல் சிலிர்த்தது. அவனது பாதங்கள் அந்தச் சாலையின் கரடுமுரடான தன்மையை ஏற்கனவே அறிந்திருந்தது போலச் செயல்பட்டன.


ஆதிராவின் வீட்டு வாசலில் நின்றபோது, அவனுக்கு மூச்சு வாங்கியது. அவன் கதவைத் தட்டவில்லை. வாசலில் இருந்த ஒரு பழைய, களிமண் செடித்தொட்டியின் அடியில் கை நுழைத்தான். அங்கே ஒரு துருப்பிடித்த சாவி இருந்தது. 


கதவைத் திறந்து கௌதம் உள்ளே நுழைந்தபோது, ஹாலில் கையில் ஒரு புத்தகத்துடன்  நின்றிருந்த ஆதிரா ஒரு கணம் அலறியே விட்டாள். “கௌதம்! அந்தச் சாவி அங்கே இருப்பது... இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த என் கணவருக்குத் தவிர வேற யாருக்கும் தெரியாது. நீ... நீ எப்படி?”


கௌதம் பதில் சொல்லாமல் அந்த வீட்டைச் சுற்றி வந்தான். “ஆதிரா, அந்த இடது பக்கம் இருந்த அந்தப் பெரிய தேக்கு மர அலமாரி எங்கே? அதில் ஒரு சிறிய ரகசிய அறை இருக்குமே?” 


ஆதிராவின் கையில் இருந்த புத்தகம்  கீழே விழுந்தது. அவளது குரல் நடுங்கியது. “கௌதம்... அந்த அலமாரி கரையானால் அரித்துப்போய் நான் அதை அப்புறப்படுத்தி பல  வருஷம் ஆச்சு. நீ 21 வயசு பையன்...உனக்கு இதை பத்தி  எப்படித் தெரியும்?”


அவர்கள் சோபாவில் அமர்ந்தார்கள். ஜன்னல் வழியாக வந்த மாலை நேர வெளிச்சம் ஆதிராவின் நரைத்த கூந்தலில் பட்டுத் தெரித்தது. கௌதம் மெல்ல அவளது கையைப் பற்றினான். அப்போதுதான் ஆதிரா அந்த ரகசியத்தைச் சொன்னாள்.


“கௌதம், நான் அந்தப் போட்டோவைப் போட்டதுக்குக் காரணம், அந்த வரியை முடிப்பவன் என் பழைய கௌதமாக இருப்பான் என்றுதான். சரியாக 22 வருடங்களுக்கு முன்னால், இதே பிப்ரவரி 4-ஆம் தேதி, ஒரு விபத்தில் என் கணவர் கௌதம் என் மடியிலேயே உயிரை விட்டார். அவர் சாகும் போது என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு பாதியாக விட்டுச் சென்ற வரிதான் நீ முடித்த அந்த வரி.”


ஆதிராவின் கண்கள் கலங்கின. “அந்த விபத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, அந்த ரத்தம் என் கைகளில் படிந்து என் ரேகைகளோடு கலந்தது. ‘உன் கையின் ரேகையாய் என்னை மாற்றிக்கொள்’ என்று அவர் சொன்னது சும்மா கவிதை இல்லை... அது ஒரு ஒப்பந்தம் . அன்று முதல் நான் அந்த வரியைச் சொல்லும் ஒரு உயிருக்காகக் காத்திருக்கிறேன்.”


கௌதமிற்கு இப்போது எல்லாம் புரிந்தது. அவனது 21 வயது உடலுக்குள் ஒரு 22 வருட பழைய ஆன்மா விழித்துக் கொண்டது போல அவன் உணர்ந்தான்.


இன்று, பிப்ரவரி 4, 2026.


கௌதமின் பிறந்தநாள். ஆதிரா மிகவும் பதற்றமாக இருந்தாள். “கௌதம், இன்னைக்கு வெளியே போக வேண்டாம். அதே நாள், அதே தேதி... எனக்கு ஏனோ பயமா இருக்கு.”


கௌதம் அவளது கைகளைத் தடவினான். “ஆதிரா, அன்னைக்கு நான் உன்னை  விட்டுட்டுப் போயிட்டேன். ஆனா இன்னைக்கு நாம ஒண்ணா இருப்போம். இந்த விதியை நாம உடைப்போம்,” என்று பிடிவாதமாக அவளைத் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டான்.


ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் பைக் ஏறியபோது, கௌதமிற்கு ஒரு விசித்திரமான ‘டிஜா வூ’ ஏற்பட்டது. காதுகளில் பழைய விபத்தின் சத்தம் கேட்கத் தொடங்கியது. அவன் வேகத்தைக் குறைக்க முயன்றான், ஆனால் பைக் அவனது கட்டுப்பாட்டை இழந்தது. எதிரே ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைக் கண்டும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.


எல்லாம் ஒரு நொடியில் நடந்தது. பைக் மோதியது. கௌதம் தூக்கி வீசப்பட்டான். அவன் தட்டுத்தடுமாறி எழுந்தபோது, அவனுக்குச் சின்ன காயங்கள் தான். ஆனால் ஆதிரா...? அவள் சில அடி தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். கௌதம் அலறிக்கொண்டு ஓடினான். அவளைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். 


இப்போது பாத்திரங்கள் மாறின. 22 வருடங்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண் இதே இடத்தில் ஒரு இளைஞனை மடியில் வைத்திருந்தாள். இன்று ஒரு இளைஞன், 50 வயதுப் பெண்ணைத் தன் மடியில் வைத்திருக்கிறான்.


ஆதிராவின் மூச்சு பலவீனமாகியது. அவளது வலது கை கௌதமின் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டது. அவளது நகங்கள் கௌதமின் சதையில் அழுத்தமாகப் பதிந்தன. ரத்தமும் கண்ணீரும் கலந்த குரலில் அவள் சொன்னாள்:


“உன் கையின் ரேகையாய்... என்னை நீ மாற்றிக்கொள்...”


அவளது கண்கள் நிலை குத்தின. ஆதிராவின் உயிர் பிரிந்தது.


ஆதிரா இறந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. கௌதம் இப்போது அந்தப் பழைய வீட்டிலேயே வசிக்கிறான். ஒரு நாள் வீட்டின் பரணில் இருந்த ஒரு பழைய பெட்டியைத் தற்செயலாகத் திறந்தான். 


அதில் 1982 மற்றும் 2004 ஆண்டுகளின் புகைப்படங்கள் இருந்தன. சரியாக 22 வருடங்களுக்கு ஒருமுறை அந்தச் சாலை ஒரு பலியைக் கேட்கிறது. ஒருமுறை அவன் இறக்கிறான், அவள் வாழ்கிறாள். மறுமுறை அவள் இறக்கிறாள், அவன் பிறக்கிறான். இது ஒரு முடிவில்லாத ஓட்டம். 


கௌதம் தன் வலது உள்ளங்கையைப் பார்த்தான். ஆதிரா சாகும்போது அழுத்திப் பிடித்த அந்த இடத்தில், இப்போது ஒரு புதிய ரேகை முளைத்திருந்தது. அது அவளது கையெழுத்தைப் போலவே வளைந்து நெளிந்து இருந்தது.


அவன் மெல்லச் சிரித்தான். ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தச் சாலையைப் பார்த்தான். அவனுக்குத் தெரியும், எங்கோ ஒரு மூலையில் ஆதிரா இப்போது ஒரு குழந்தையாகப் பிறந்திருப்பாள். இன்னும் 22 வருடங்கள் கழித்து, அவள் வளர்ந்து ஒரு யுவதியாக இந்த வீட்டின் கதவைத் தட்டுவாள். 


அவன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கினான். 


“வா ஆதிரா... உனக்காக நான் காத்திருப்பேன்.” என்று முணுமுணுத்தான். அவனது உள்ளங்கையில் அந்தப் புதிய ரேகை லேசாகத் துடிப்பது போல அவனுக்குத் தோன்றியது.


வீயார் 


பி.கு.: 


இந்த வரிகள் உண்மையில் நான் ghazal ஸ்டைலில் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் தான். அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு. 


உன் கையின் ரேகையாய் என்னை நீ மாற்றிக் கொள் 

நான் உன்னவன் உன்னவன் என்னை நீ ஏற்றுக் கொள் 


நான் ஒரு முள் எனில் உன்னுடை காத்துக் கொள் 

நான் ஒரு மலர் எனில் உன் குழல் சேர்த்துக் கொள் 


கனவிலும் நினைவிலும் உன் பெயர் பேசினேன் 

இன்னொரு வானத்தில் நீ ஒளி வீசினாய் 


உன் மனம் ஆழ்கடல் அதில் என்னை நான் தேடினேன் 

என்னை நீ அறியவே தினம் தினம் பாடினேன் 

நான் உன்னவன் உன்னவன் என்னை நீ ஏற்றுக் கொள் 


வீயார்