Sunday, November 10, 2019

பர்ஸனல் ஸ்பேஸ்

பர்ஸனல் ஸ்பேஸ்

"காலைல எழுந்த உடனே facebook ஆ? நல்லா வெளங்கிடும் குடும்பம்" காப்பியை எடுத்துக்கொண்டு வந்த வனஜா எரிந்து விழுந்தாள். " எழுந்தோமா எதாச்சும் வீட்டு வேலை செஞ்சோமா, பொண்டாட்டிக்கு ஒத்தாசையா இருந்தோமான்னு இல்லாத எப்பப்பாரு இதக் கட்டிக்கிட்டு அழவேண்டியது.

இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்களும் இந்த குடும்பத்துக்குத் தலைவர் தானே? வீட்டுல என்ன நடக்குதுன்னு வெவரம் தெரியுமா? பிள்ளைங்க என்ன மார்க் வாங்கறாங்கன்னு தெரியுமா? இல்ல, அவங்க எந்த கிளாஸ் படிக்கறாங்கன்னாவது தெரியுமா? எப்பப்பாரு இதுவேவா? ஒரு முடிவே இல்லையா?" பேசி முடிக்கும்போது வனஜாவின் முகம் சிவந்திருந்தது. கண்களில் நீர் கோர்த்து விட்டது.

" இப்ப என்ன நடந்திச்சுன்னு இப்படி கோபப் படற? நான் என்ன செய்யல நம்ம குடும்பத்துக்கு? ஒவ்வொருத்தருக்கும் பார்த்துபார்த்து செய்யலியா? கேட்டதெல்லாம் வாங்கித்தரலியா? வருஷா வருஷம் லீவுக்கு வெளில கூட்டிக்கிட்டு போகலியா? லாஸ்ட் ரெண்டு வருஷமா வெளிநாடு வேற போனோம். என்ன பன்னால நான்? எனக்குன்னு கொஞ்சம் பர்ஸனல் ஸ்பேஸ் எடுத்துக்கிட்டா தப்பா?" என்று பதிலுக்கு இரைந்தான் சிவராமன்.

வனஜா அழத்துவங்கினாள். அவள் அழுவதைப் பார்த்து சிவராமன் கோபம் தணிந்தான். "வனி! செல்லம்! சாரிடா! அழாதே! சரி நான் facebook பாக்கல. என்ன ஹெல்ப் செய்யணும் சொல்லு. காய் நறுக்கித்தரவா? வெளில போய் ஏதும் வாங்கி வரணுமா? என்ன வேணும் சொல்லு."

" ஒண்ணும் வேணாம் போங்க" என்று ஊடினாள் வனஜா.

ஒரு பத்து நிமிடம் பிடித்தது சிவராமனுக்கு அவளை சமாதானம் செய்ய. நார்மலான வனஜா சொன்னதைக் கேட்டு சிவராமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

" என் கோயம்புத்தூர் சித்தப்பா இருக்காரில்ல.. அவர் பொண்ணுக்கு அதான் என் கடைசி தங்கச்சிக்கு வர்ற பதினஞ்சு கல்யாணம். பத்திரிகை வந்திருக்கு. போன்லேயும் பேசறேன்னு சொல்லியிருக்கார். நாம அவசியம் போகணும். இன்னிக்கே டிக்கட் புக் செஞ்சுடறீங்களா?"

"என்னது பதினஞ்சாம் தேதியா?" சிவராமன் நெற்றி சுருங்கியது.

" ஏன் அன்னிக்கு வேற என்ன விசேஷம்? எதாச்சும் ஆபீஸ் மீட்டிங் இருக்கா?"

" இல்லை அன்னிக்கு என்னோட ****** க்ரூப் மீட்டிங் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. சென்னைலதான். அதுக்குக் கண்டிப்பாப் போகணும்னு..."

வனஜா முகம் மீண்டும் சிவந்தது. கோவத்தில். " என் தங்கச்சிக் கல்யாணத்தை விட உங்க facebook க்ரூப் மீட்டிங் பெரிசா போச்சா? நான் பிள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு தனியா போய்க்கறேன்" என்று விருட்டென்று அங்கிருந்து போனாள் .

அடுத்த ஒரு மணி நேரம் அங்கே ஒரு அமைதி நிலவியது. எதுவும் பேசாமல் சிவராமன் வங்கிக்குக் கிளம்பினான். வழக்கமாக லஞ்ச் கையில் கொண்டுவந்து தரும் வனஜா, அன்றைக்கு டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு சென்றுவிட்டாள்

சிவராமனும் எதுவும் பேசாமல் கிளம்பிப்போனான்.

அன்றைக்கு வங்கிக்கு ரிட்டயர்டு ஏஜிஎம் வந்திருந்தார். டெபிட் கார்டு மாற்றிக்கொள்ள. சிவராமன் அவரை வரவேற்று அவர் வேலையை செய்து கொடுத்தான். பிறகு காப்பி வந்தது. குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். "ரிட்டயர்டு வாழ்க்கை ஜாலிய போகுதா ஜி?" என்றான் சிவராமன்.

ஏஜிஎம் முகம் சட்டென்று வாடியது. " அத ஏன் கேக்கற சிவா..ஆபீஸ், ப்ரமோஷன்னு ஓடியோடி வேலை செஞ்சேன். குடும்பத்தை கவனிக்கல. வேண்டியது எல்லாம் செஞ்சிருக்கேன்னு என்ன நானே சமாதானம் செஞ்சுக்குவேன். ஆனா அவங்களுக்கு வேண்டியது நான் என்னுடைய டைம்னு புரிஞ்சுக்கல. ரெண்டு பையன்களும் யுஎஸ் செட்டில்டு. வாவான்னு அம்மாவைக் கூப்பிட்டு வச்சுக்கறாங்க. என்னையும் கூப்பிட்டாங்க. எனக்கு அங்க குளிர் ஒத்துக்கல. ஆனா என் மனைவி கொறஞ்சது ஆறு மாசம் யுஎஸ்-லதான் இருக்கா.நான் இங்க தனியா. இப்பத்தான் குடும்பத்தோட அருமை புரியுது" என்று முடித்தார். சொல்லி முடிக்கையில் அவன் கண்கள் கலங்கி விட்டது. சிவராமன் கண்களும்தான்.

அன்று மாலை வீடு திரும்பிய சிவராமன் வனஜாவின் வாடிய முகத்தைப் பார்த்தான். அவன் கேட்காமலேயே காப்பி எடுத்து வந்தாள். காப்பியை வாங்கிக்கொண்டவன் அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.

கண்களில் கேள்விக்குறியோடு அதை வாங்கி உள்ளே இருந்த பேப்பரை எடுத்தப் பிரித்துப் படித்த வனஜாவின் முகம் மலர்ந்தது.

அவர்கள் நால்வரும் கோவை போவதற்கான டிக்கட்.

"கோவம் போச்சா வனி?"

"ம்ம்ம்ம்" என்றாள் வனஜா. சிவா அவளை இறுக்கி அணைத்தான்.

கண்டிஷன் (சிறுகதை)

கண்டிஷன் (சிறுகதை)
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
- நாயகன்
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணாமா? ஒருத்தரப் பாராட்டறதா நெனச்சுக்கிட்டு மத்தவங்கள அவமானப் படுத்தலாமா? அது அவமானம்னு உங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவன் முகம் போற போக்கப் பாத்தாவது புரிய வேணாமா? அப்புறம் என்ன அப்பா அம்மா?
கணேஷின் மனம் கனத்தது. கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது. துடைத்துக்கொள்ளக் கூட தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
சின்ன வயசில் இருந்தே அப்படித்தான். எப்பவும் எல்லாருக்கும் சுரேஷ் தான் ஒசத்தி. அவன் சிவப்பா களையா இருக்கானாம். கணேஷ் அப்படி இல்லையாம். அதற்கு இவன் என்ன செய்யமுடியும் என்று யாரும் யோசித்தது இல்லை. யாரும் என்ன யாரும்,
பெத்த அப்பா அம்மாவே யோசிச்சது இல்லை.
கணேஷுக்கு கோவம் கோவமா வரும். பேர்ல கூட வஞ்சகம். அவனுக்கு அழகா மாடர்னா சுரேஷ். தனக்கு கர்நாடகமா கணேஷ். படிப்பில் என்னவோ இருவரும் சுட்டிதான். இருந்தாலும் பெற்றவர்களுக்கு சுரேஷின் achievements தான் எப்பவும் பெரிசு.
அவனப் பாரு படிப்புல மட்டுமில்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்பீச்ன்னு வெளுத்துக்கட்டறான். நீ படிச்சா மட்டும் போறுமா? வேற ஏதாவது ஸ்கில் வேண்டாமா? என்று கேட்காத நாளில்லை.
இவன் என்ன செய்வான்? இவனுக்கு ஏனோ ஸ்போர்ட்ஸில் ஆர்வம் வரவே இல்லை. ஆனால் படிப்பில் ஒருபோதும் சோடை போகவில்லை.
இந்தப் பிரச்சனை அதோடு முடியவில்லை. சுரேஷ் பிளஸ் டூ முடித்தவுடன் அவன் மார்க்குக்கு நல்ல காலேஜில் பொறியியல் சீட் கிடைத்தது. கையில் இருந்த பணமெல்லாம் போட்டு அவனை படிக்கவைத்தார் அப்பா. பாங்கில் லோன் வாங்கலாம் என்றால் அவரது ப்ரைவேட் கம்பெனியில் மத்யதரமான உத்தியோகம்.
கணேஷுக்கு அப்பொழுதே கேட்கவேண்டும் போலத் தோன்றியது. எல்லா பணத்தையும் இவனுக்கே செலவழித்துவிட்டால் தன் படிப்புக்கு என்ன செய்வார்கள் என்று. ஆனால் கேட்கவில்லை. தெரியும் முன்னுக்குப் பின் முரணாக பதில் வருமென்று.
ஆனால் அவன் நினைத்தபடியே ஆனது. சுரேஷ் இன்ஜினியரிங் முடித்து மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல ஆசைப்பட்டான். அப்பா கையில் பணமில்லாததால் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி அவனை யுஎஸ் அனுப்பினார்கள்.
இவனும் பிளஸ் டூ முடித்தான். இவனும் first க்ரூப் தான். ஆனால் அப்பா சொல்லிவிட்டார். இனிமேல் என்னால் முடியாது. நீ ஏதாவது நார்மல் டிகிரி படித்துக்கொள் என்று. இவன் வாய் பேசாமல் ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து கொண்டான். அங்குதான் ஆர்த்தியை சந்தித்தான்.
ஆர்த்தி அவன் காலேஜுக்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் காலேஜில் படித்தாள். பஸ் ஸ்டாப் பழக்கம். நாளடைவில் நட்பில் முதிர்ந்தது. ஆர்த்திதான் அவனுக்குள் ஸீ ஏ படிக்கும் ஆர்வத்தையும் எண்ணத்தையும் விதைத்தாள் .
ஆனால் அதற்கான கோச்சிங் சேரக்கூட பணம் இவனிடம் இல்லை. ஆர்த்தி ஒரு கோச்சிங் சென்டரில் படித்தாள். தன்னுடைய நோட்ஸ் புக்ஸ் எல்லாம் இவனுக்குக் கொடுத்து உதவினாள். அந்த சென்டர் தந்த வீடியோ கிளாஸ் CDகளையும் பகிர்ந்து கொண்டாள்.
இருவரும் ஒரே அட்டெம்ப்டில் இன்டர் முடித்தார்கள். பிறகு ஒரு CAவிடம் ஆர்டிகல்ஷிப் சேர்ந்தார்கள். அப்போதுதான் சுரேஷுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. அங்கு இங்கு தேடி ஒரு நல்ல வரன் அமைந்தது. நல்ல குடும்பம். சற்று வசதியானவர்களும் கூட.
இரண்டு பெண்கள். இருவரும் அழகு.
பெண் பார்க்க சென்ற இன்றைக்குத் தான் அந்த அவமானம் நேர்ந்தது. பெண்ணின் தாத்தா பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன் தன் மகன் காதில் ஏதோ சொன்னார். அவர் முகம் மலர்ந்தது.
அவர் கனேஷின் அப்பாவை அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார். அப்பா முகத்தில் வியப்பு. அம்மாவை அழைத்து அவள் காதிலும் ஏதோ சொன்னார். அவள் முகத்திலும் வியப்பு. ஆனால் அவன் அப்பா திடீரென்று உரத்தக் குரலில் " இதோ பாருங்க சம்பந்தி! நீங்க கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா இது நடக்காது. ஏன்னா உங்க ரெண்டாவது பொண்ணுக்கு என் ரெண்டாவது மகன் ஈடே இல்லை. அவ எத்தன அழகு! அவளுக்கு வேற இடம் பார்த்துக்குங்க" என்றார்.
கணேஷுக்கு காலடியில் இருந்து தரை நழுவியது போலிருந்தது.
இப்படியுமா பெற்றோர்கள்? அட, வேண்டாம் சாமி, சொல்றத கொஞ்சம் அமைதியா சொல்லியிருக்கலாமே! இப்படி சபையில் வைத்து அவமானப் படுத்தலாமா?
அந்த இடத்தில் இருந்து விருட்டென்று வெளியேறினான். ஆர்த்தியை மொபைலில் கூப்பிட்டான். " கொஞ்சம் அந்த food court க்கு வரியா?" என்று கேட்கும்போதே அழுதுவிட்டான். "இதோ வர்றேன்" என்று பதறிய ஆர்த்தி சொன்னபடியே பத்து நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் கணேஷுக்கு துக்கம் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழத் துவங்கினான். அவன் அழுது ஓயட்டும் என்று ஆர்த்தி நினைத்தாள்.
அழுகையினூடே கணேஷ் நடந்தவற்றை சொன்னான். ஆர்த்தி திகைத்தாள். பிறகு அவன் கண்களை பார்த்து" என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா கணேஷ்?" என்றாள்.
கணேஷ் தன் பங்குக்குத் திகைத்தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவன் ஆர்த்தி பற்றி அப்படி இதுநாள் வரை நினைத்ததில்லை. இரண்டாவது சுரேஷின் மச்சினியை விடவும் ஆர்த்தி பலமடங்கு அழகானவள்.
வெகுநேரம் கணேஷ் அவளையே பார்த்தபடி இருந்தான். பிறகு மெதுவான குரலில் சொன்னான் " எனக்கு இதவிட சந்தோஷம் என்ன இருக்க முடியும் ஆர்த்தி? ஆனா ஒரு கண்டிஷன்... இல்ல இல்ல ரிக்வெஸ்ட்." என்றான்.
என்ன என்பது போல ஆர்த்தி அவனைப் பார்த்தாள்.
"நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு குழந்தைதான் பெத்துக்கணும்"
ஆர்த்தி சிரித்தபடி அவனை அணைந்தாள் .
வீயார்

Friday, October 25, 2019

நானே வருவேன்

நானே வருவேன் (சிறு கதை )
வாங்க ரொம்ப நாள் ஆச்சு, உங்கள லக்னோ கூட்டிக்கிட்டு போறேன். அட, இன்னொரு காதல் கதைன்னு நீங்க புன்சிரிக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன் இதுல காதல் இல்லை.
இதுல சுஷ்மிதா லாஜோ ஸ்நேஹலதாக்கள் வரமாட்டாங்க. ஒன்லி யுவர்ஸ் ட்ரூலி அண்ட் மை தோஸ்த் சிவா.
இந்த சிவா இருக்கானே அவன ஜஸ்ட் நண்பன்னு சொல்லறத விட என்னோட ஆல்டர் ஈகோன்னு சொல்லலாம். அத்தனை நெருக்கம். ஒரே பொண்ண சைட் அடிக்கறது, ஒரே தம்ம ரெண்டு பேரும் புகைக்கறதுன்னு அவ்ளோ நெருக்கம். ரெண்டும் பேரும் மகாநகர்தான். ஆனா அவன் வேற இடத்துல குடியிருந்தான் நான் வேற இடத்துல.
வாரத்துல ரெண்டு நாள் அவன் என் ரூம்ல கிராஷ் செய்யறதும் ரெண்டு நாள் நான் அவன் ரூம்ல டேரா போடறதும் சாதாரணம். அவனுக்கு மெடிக்கல் ரெப் வேலை. லக்னோவுக்கு வெளில இருக்கற இடங்களுக்கு போவான். அப்படிப் போனா லக்னோ திரும்பி வர்ற நாள் என் ரூம்ல தான் இருப்பான். புதன் கிழமையானா தன் ரூம்ல விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வான். கொஞ்சம் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க வருவார்கள். எனக்கு அதில் எல்லாம் அதிக ஈடுபாடு இல்லைன்னாலும் பூஜைக்கு அப்புறம் அவன் வீட்டுல டின்னர் ஏற்பாடு செய்வான்னு நான் போவேன். ( அங்க சில தமிழழகிகள் வருவாங்க என்பது உபரி செய்தி)
அப்படியாப்பட ஒரு புதன் கிழமை பூஜை முடிஞ்சதும் கிட்டத்தட்ட எல்லாரும் போய்ட்டாங்க. நான் சிவா மற்றும் ராகவன். ராகவன் எங்கள விட மூத்தவர். ஆனால் பேச்சிலர். "டேய் சிவா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். படே பாய் (bade bhai) (என்னை எல்லாரும் அங்கு அப்படித்தான் கூப்பிடுவார்கள்) இங்க இருக்கறது நல்லதாப் போச்சு. ஒரு friend சென்னைல இருந்து வந்திருக்கான். சோமு. ரெண்டு நாள் ஆச்சு. வேலை தேடி வந்திருக்கான். என்கூடத்தான் இருக்கான். ஆனா நாளன்னிக்கு என் அப்பா அம்மா வர்றாங்க. அதுனால கொஞ்ச நாள் நீ அவன உன் ரூம்ல வச்சுக்கோ" என்றார்.
சிவா என்னைப் பார்த்தான். " நீங்க கொஞ்சம் சொல்லுங்க bade bhai " என்றார் ராகவன். நான் தலையசைத்தேன். சிவாவும் சரியென்றான்.
" இதோ இன்னும் அரை மணில அவனக் கூட்டிட்டு வர்றேன்" என்று சென்ற ராகவன் பதினைந்து நிமிடங்களிலேயே கூட்டி வந்தார்.
அந்தக் காலத்தில் 7அப் விளம்பரத்தில் fido dido என்று ஒரு கார்டூன் வரும் தெரியுமா? சோமுவைப் பார்த்தவர்கள் அதைப் பார்க்க வேண்டாம். ஒரு லைவ் அண்ட் கிக்கிங் fido dido அவன்.
விட்டால் போதும் என்று ராகவன் கிளம்பி விட்டார். அன்றிரவு அவனுக்கும் சேர்த்து நாங்கள் டின்னர் ரெடி செய்தோம். ஒரு கர்டஸிக்குக் கூட ஹெல்ப் செய்யவா என்று சோமு கேட்கவில்லை.
சமைத்தபின் நன்றாக ரசித்து ருசித்து நிறைய சாப்பிட்டான். பின்னர் உடை மாற்றிக்கொண்டு வெளியே செல்ல தயாரானான். "பாஸ்! ஒரு தம் போட்டுட்டு வர்றேன். கதவ சாத்திடாதீங்க" என்றான்.
"எல்லாம் இங்கேயே தம் போடலாம்" என்றான் சிவா.
மறுநாள் காலையில் எனக்கு பேங்க் போகவேண்டும். சிவாவுக்கு கான்பூர். சோமு எங்கும் வேலை தேடப் போவான் என்று நினைத்தால் அவன் படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையாக சென்றுவிட்டோம். மாலை நான் என் ரூமுக்குப் போய்விட்டேன். இரவு சுமார் ஒன்பது மணிக்கு சிவா வந்தான்.
"என்னடா உன் ரூமுக்குப் போகலியா?"
"போனேன் bade bhai. அந்த சோமு படுத்த படுக்கைக் கூட எடுத்து வைக்காம குளிக்காம கொள்ளாம உக்காந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கான். எனக்கு செம்ம வெறுப்பாயிடுத்து. அதான் இங்க வந்தேன்"
அன்றிரவு சிவா என் ரூமிலேயே தங்கிவிட்டான். "சோமுவுக்கு சாப்பாடு?" என்று கேட்டேன். "பட்டினி கிடக்கட்டும் நாய்" என்றான் கோபமாக.
மறுநாள் காலை தன் ரூமுக்குச் சென்ற சிவா நான் ஆபீஸ் கிளம்பும் முன்னர் பதறி அடித்துக்கொண்டு வந்தான்.
"bade bhai ! அந்த ராஸ்கல் நேத்து டின்னர் இல்லேன்னதும் என் அலமாரிலேர்ந்து பணம் எடுத்துக்கிட்டு போய் ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திருக்கான்" என்றான். நானும் அதிர்ந்தேன். ராகவன் எங்களை யாரிடம் மாட்டி விட்டுவிட்டார்?
இப்படியாக நாளொரு புகாருடன் ஒரு வாரம் கழிந்தது. அடுத்த புதன் பூஜைக்கு ராகவன் வரவில்லை. பூஜை முடிந்த பிறகு சிவாவின் வீட்டு ஓனர் எங்கள் இருவரையும் கூப்பிட்டார். ' யார ரூம் மேட்டா வச்சு இருக்கீங்க? பொறுக்கிப் பயல் என் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க ட்ரை செஞ்சிருக்கான். உங்களுக்காக அவன மன்னிச்சேன். அவன மொதல்ல இங்கிருந்து pack பண்ற வழியப்பாருங்க" என்றார் ஹிந்தியில்.
நாங்கள் இருவரும் ரூமுக்குப் போய் சோமுவை தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்தோம். "போய் தொலைடா" என்று கோரசாகச் சொன்னோம். சோமு முகம் கறுத்துவிட்டது.
மறுநாள் காலை எங்கோ சென்ற சோமு அன்றிரவு மிகவும் நேரம் கழித்து வந்தான். வந்தவன் ஒன்றும் பேசாமல் படுத்துவிட்டான். நாங்களும் ஒன்றும் கேட்கவில்லை.
இப்படியாக நாலு நாள் கழிந்தது. சோமு காலி செய்வதாகத் தெரியவில்லை. "bade bhai, ஓரு ஐடியா" என்றான் சிவா. " இன்னிக்கு ராத்திரி, அவன் நல்லா தூங்கின பிறகு அவன திடீர்னு எழுப்பி பயமுறுத்துவோம். அப்படிச் செஞ்சா அவனே நாளைக்கி சொல்லாம கொள்ளாம போயிடுவான். நீங்க அவன் போர்வையைப் பிடிச்சு இழுங்க. அவன் தூக்கம் கலஞ்சு கண்ணு திறக்கற வரைக்கும் விட்டு விட்டு போர்வைய இழுங்க. அவன் எழுந்ததும் நான் அவன் மூஞ்சி கிட்ட இந்தக் கத்தியைக் காட்டி ஓன்னு சிரிக்கறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும்" என்றான்.
அங்கே தான் எங்கள் விதி சிரித்தது. அந்த ஸ்டுபிட் ஐடியா அன்னைக்கு என்று பார்த்து எனக்கு செம ஐடியாவா தோன்றியது. சரியென்று தலையாட்டிவிட்டேன்.
அன்றிரவு. சுமார் பனிரெண்டு மணிக்கு. சிவா என்னை மெதுவாக எழுப்பினான். சட்டென்று புரிந்து கொண்ட நான் ப்ளான்படி சோமு போர்த்திக் கொண்டிருந்த போர்வையைச் சுண்டி இழுத்தேன்.
இரண்டாவது இழுப்பிலேயே சோமு விழித்துக் கொண்டான். அதற்காகவே காத்திருந்த சிவா தன் கையில் பிடித்திருந்த கத்தியை சோமுவின் முகத்தின் அருகில் கொண்டு சென்று "ஹோ"வென சிரித்தான்.
அப்போதுதான் அது நடந்தது. சோமுவின் கண்கள் எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தன. படபடவென அடித்துக்கொண்டிருந்த அவன் ஹார்ட் சட்டென்று அமைதியானது. கண்கள் நிலைகுத்தி நின்றன.
சோமு செத்துப்போய் விட்டான்!
நிலைமையின் தீவிரம் புரிந்து நாங்கள் இருவரும் உறைந்தோம். கல்யாணம் கூட ஆகாமலேயே ஜெயிலுக்குப் போய்விடுவேன் என்று எனக்கு அந்த நேரத்தில் அபத்தமாகத் தோன்றியது.
சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த சிவா திடீரென்று " ராகவன்!" என்றான்.
"என்னடா உளர்ற?"
"இல்ல bade bhai, நாம இப்பவே ராகவனைப் பார்க்கப் போகலாம். அவர் ஏதாவது ஹெல்ப் பண்ணுவார்" என்றான். (ராகவன் பின் தெருவில் தான் குடியிருந்தார்)
சரியென்று கதவைப் பூட்டிவிட்டு இருவரும் சிவாவின் ஸ்கூட்டரில் விரைந்தோம். ஐந்தாவது நிமிடம் ராகவன் வீடு. அவரது தனி வீடு. போய் காலிங் பெல்லை அழுத்தினேன்.
சிறிது நேரத்தில் கண்களைக் கசக்கியபடியே ராகவன் வந்து கதவைத் திறந்தார். எங்களைப் பார்த்து வியந்தார். "என்னடா ஆச்சு?"
நாங்கள் நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். ராகவன் முகம் வெளிறியது.
"டேய், என்னடா சொல்றீங்க? சோமு செத்துட்டானா? டேய் டேய் அவன் செத்துப்போய் ஒரு வாரம் ஆகுதேடா.. போன வாரத்துல ஒரு நாள் அமீனாபாத் பக்கத்துல ஒரு ஆக்சிடெண்ட்ல அவன் போயிட்டானே! நீங்க ரெண்டு பெரும் அன்னிக்கி எங்கியோ போயிட்டீங்க. நான் அவங்க வீட்டுல சொல்லி அவங்க flightல வந்து சோமுவுக்கு இந்திரா நகர்லே எல்லா காரியமும் செஞ்சுட்டு போயிட்டாங்களே! அதுக்கு அப்புறம் உங்களைப் பார்க்க முடியாததால சொல்லல" என்று சொல்லி முடித்தார் ராகவன்.
சாகும் நேசாகும் நேரத்தில் சோமுவின் கண்கள் மிரண்டு நிலை குத்தினாலும், அவன் உதட்டோரத்தில் ஒரு சிரிப்பு வந்து மறைந்தது எனக்குத் திடீரென நினைவு வ

Tuesday, August 20, 2019

சரச கல்யாணி

திருவல்லிக்கேணி தேவதைகள்
சரச கல்யாணி
ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் போய் தேவராஜ சுவாமி கோவில் மேற்கு கோபுரம் வழியில் அத்தி வரதரை சேவிக்க நின்ற கூட்டத்தோடு கலந்து நின்றேன். ஏதோ ஞாபகமா ஷர்ட் பாக்கெட்டைப் பார்த்தா தெரிந்தது ஸ்பெஷல் தரிசன டிக்கட் கொண்டுவரவில்லை என்று. பெருமாளே!
குழம்பித் தவித்த என் தோள் மீது ஒரு கைவிழுந்தது. " சார்! உங்கள மேடம் கூப்பிடறாங்க". திரும்பினால் கோவில் சேர்ந்த ஒரு சிப்பந்தி.
செலுத்தப்பட்டவன் போல அவனுடன் நடந்தேன். கொஞ்ச தூரத்தில் ஒரு இன்னோவா. நாங்கள் நெருங்க அதன் பின் கதவு திறந்து சரச கல்யாணி இறங்கினாள்.
அழகாக வயதாகியிருந்தாள். அவள் அழகை வர்ணிக்க பின் நவீன உவமைகள் தேவைப்படும். நம்ம கவிஞர் தேஜஸ்வியத்தான் கேட்கணும்.
"டேய், வெங்கட்! தரிசனம் ஆயிடுத்தா?"
"இல்ல... ஆன்லைன் புக் செஞ்ச டிக்கட்ட எடுத்துட்டு வர மறந்துட்டேன்"
"சரி பரவாயில்ல.. என்னோட வா. VVIP தரிசன டிக்கட் இருக்கு. "
"ரொம்ப தேங்க்ஸ்" என்று அவளோடு சென்றேன். கூட வந்த சிப்பந்தி அங்கிருந்த காவல் துறையிடம் இவள் வைத்திருந்த டிக்கட் மற்றுமொரு லெட்டர் காட்ட, அவர் உடனே வேறு வழியாக எங்களை அனுமதித்தார். கிடுகிடுவென்று ramp ஏறி ஐந்தே நிமிடத்தில் அத்திவரதர் முன் நின்றோம். சிப்பந்தி மீண்டும் ஏதோ சொல்ல எங்களை கயிற்றை விலக்கி உள்ள விட்டார்கள். ஆபரண ஆபூஷணங்கள் ஜ்வலிக்க வரதர் சிரித்தார்.
சரச கல்யாணி சட்டென்று என் பக்கம் திரும்பி "நாம்ப மொதல்ல பாத்ததும் வரதர் சந்நிதிதான்" என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததையே சொன்னாள்.
வரதர் முன்னிலையில் பழைய நினைவுகளில் மூழ்க நேரமில்லாததால் வெளியே வந்தோம்.
"சென்னைதானே?" என்றாள்.
"தாம்பரம்"
"சரி என்னோடவே வா! வழில சாட்டுட்டு உன்ன தாம்பரம் டிராப் செஞ்சுட்டு ஏர்போர்ட் பக்கத்துல உள்ள என் ஹோட்டலுக்குப் போறேன். நாள காலம்பற தில்லிக்கு flight."
கார் புறப்பட்டதும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
நான் ப்ளஸ் டூ படித்த காலம். சரஸா (நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) பத்தாவது. டிபி கோவில் லேன் டிபி கோவில் தெருவில் போய் முட்டும் இடத்தில் அவள் வீடு. அவள் அண்ணன் முரளி என் கிளாஸ்மேட்.
சரஸாவை ஒரு முறை பார்த்தவர்களுக்குத் தெரியும் அவள் மேல் காதல் கொள்ளாமல் இருப்பது முடியாது என்று. அதனால் நான் அவள் மேல் காதல் கொண்டேன் என்று உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
ஆனால் எனக்கும் ஒரு வில்லன். அவன் பெயரும் வெங்கட். நான் ஸீ வெங்கட். அவன் ஆர் வெங்கட். அவனும் சரஸா மேல் காதல் கொண்டான். ஆனால் விதி வேறு விதமாக யோசித்து வைத்திருந்தது. சரஸாவுக்கு என் மேல் காதல் வரச் செய்தது. அதற்கு நான் அந்தக் காலத்தில் ஒரு விதமான cuteஆக இருந்ததும் ஒரு காரணம்.
ஐஸ் ஹவுஸ் பீச்சும், பார்த்தசாரதி கோவிலும் (அங்குள்ள வரதர் சந்நிதியில் வைத்துத்தான் முரளியோடு அவளைச் முதலில் சந்தித்தேன்), கஸ்தூரி லைப்ரரியும் எங்கள் காதலுக்கு உரம் சேர்த்த இடங்கள்.
நான் என் காதலை அவளிடம் சொல்ல பலமுறை முயன்று தோற்றேன். அதற்கு என் பயந்த சுபாவம் ஒரு காரணம். ஆனால் சரஸா அதைப் புரிந்து வைத்திருந்தாள் என்பது ஒரு நாள் கஸ்தூரி லைப்ரரியில் எனக்குப் புரிந்தது. சுஜாதா நாவல்கள் வைத்திருந்த ஷெல்ப் அருகில் ஒரு சுபயோக சுப மாலையில் எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.
அந்த பத்து செகன்ட் முத்தம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. இரவு பகல் அவள் நினைவாகவே இருந்தேன். ஒரு நாள் ஆர் வெங்கட் என்னிடம் கேட்டே விட்டான். நான் நடந்தது எல்லாம் சொன்னேன். அவன் முகம் வாடிவிட்டது.
"அவகிட்ட ஐ லவ் யூ சொன்னியா?"
" இல்லடா.. ஒரு லெட்டர் எழுதித் தரலாம்ன்னு.. நீ எழுதித் தரயாடா? உனக்குத் தான் நல்ல கவிதை மாதிரி எழுத வருமே?'
ஆர் வெங்கட் என்னை ஒரு கொலைப் பார்வை பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் ஸ்கூலில் வைத்து ஒரு கவர் தந்தான். "இந்தா நீ கேட்ட லெட்டர். படிச்சுப் பாரு பிடிச்சா கொடு"
ஆனால் நான் படிக்கவில்லை. படிக்காமலேயே அன்று மாலை அழகியசிங்கர் சந்நிதி பின்புறம் சுற்றி வரும்போது சரஸாவிடம் தந்துவிட்டேன்.
அதற்க்கப்புறம் நடந்தது வெகு விசித்திரம். சரஸா மறுநாளில் இருந்து என்னைத் தவிர்த்தாள். அப்புறம் சில காலம் கழித்து அவள் ஆர் வெங்கட்டை கல்யாணம் செய்துகொண்டு தில்லி பக்கம் போய் விட்டாள் என்று ஒரு சேதி. காலம் எங்களைப் பிரித்து இன்று காஞ்சியில் சேர்த்து வைத்த் விளையாட்டுப் பார்க்கிறது.
சட்டென்று கார் நிற்க நான் நினைவுகளிலிருந்து விடுபட்டேன். ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் நின்றிருதது. இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம். மெனு பார்த்து ஆர்டர் செய்துவிட்டு சரஸா "ஏண்டா அப்படி செஞ்ச?" என்றாள்.
"நீ ஏன் அப்படி செஞ்ச சரஸா? "
" டேய், உன் லவ்வ என்கிட்டே சொல்லுவன்னு எவ்ளோ நாள் வெயிட் செஞ்சேன்? நீ என்னடான்னா பொசுக்குன்னு ஆர் வெங்கட் எழுதின காதல் கடுதாசிய என்னண்ட கொண்டு தந்த.. நா வேற என்ன செய்யறதாம்?
"என்ன ஆர் வெங்கட் லவ் லெட்டரா? அது எனக்காக அவன் எழுத்திதந்த லெட்டர்!"
" அப்ப நீதாண்டா சைன் பண்ணியிருக்கணும்? ஆனா அதுல ஆர் வெங்கட்ன்னு சைன் பண்ணியிருந்தது"
இரண்டு பேருக்கும் சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது.
ரொம்ப நேர கனமான மௌனத்துக்குப் பின் "அப்போ நீ தந்த முத்தம்?" என்றேன் அபத்தமாக.
வெகு நேரம் என் கண்களையேப் பார்த்த சரஸா " பிடிக்கலேனா திருப்பித் தந்துடு" என்றாள் குறும்பாக.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (சிறுகதை)
ஊமை எழுத்தே உடலாச்சு மற்றும்
ஓமென்ற எழுத்தே உயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி
கொங்கணச் சித்தர்
விபூதி வாசம் நாஸியைத் துளைக்க, யுகேந்திரன் சட்டென்று கண்ணைத் திறந்தார். அவர் அருகில் இருந்த ஸீட்டில் காவியுடை அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
கோவையில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ் புறப்படத் தயாராக இருந்தது. கடைசி நேரப் பயணிகள் அவசர அவசரமாக ஏறிக் கொண்டிருந்தார்கள். பெரிய லக்கேஜுகளை பஸ்ஸின் அடியில் உள்ள ஸ்டோரேஜில் வைப்பதும் உள்ளே ஏறுவதும் என்று ஒரே பரபரப்பு. இந்த அமளியில் தான் எப்படி கண் அசந்தோம் என்று யுகேந்திரனுக்கு வியப்பு. எப்படியோ அந்தச் செல்லத் தூக்கமும் கலைந்தது.
தன் அருகில் அமர்ந்திருந்தவரை பார்த்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க உருவம். காவி குர்தா காவி வேட்டி. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. கழுத்தில் பல சைஸ்களில் ருத்திராக்ஷ மாலைகள். மடியில் ஒரு ஜோல்னா பை.
யுகேந்திரன் தன்னைப் பார்ப்பதை பார்த்து அவர் ஒரு புன்னகை பூத்தார். “என் பெயர் சித்ரகுப்தன்” என்றார்.
யுகேந்திரன் ஒரு நொடி விக்கித்துப் போனார். என்ன பெயர் இது? இதுவரை கேள்விப் பட்டதேயில்லையே! மேல் உலகத்தில் இருப்பதாகச் சொல்லப் படும் சித்ரகுப்தனைத் தவிர வேறு எங்கும் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதில்லை. :நான் யுகேந்திரன்” என்றார்.
“மிகவும் வித்தியாசமான பெயர்” என்றார் காவி மனிதர்.
“இதை நான்தான் சொல்லவேண்டும்” என்று யுகேந்திரன் புன்னகைத்தார்.
“என்ன செய்கிறீர்கள் யுகேந்திரன்? தொழிலா இல்லை வேலையா?”
“நான் பிசினெஸ் தான் செய்கிறேன் ஜி! கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ். ஒரு பார்ட்னருடன் சேர்ந்து. அவனை பார்ட்னர் என்று சொல்லுவதை விட எனது பால்ய சிநேகிதன் என்று சொல்லலாம்.”
“ரொம்ப நல்லது. திருமணமாகி விட்டதா? குழந்தைகள் இருக்கிறதா?”
“திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை” என்றார் யுகேந்திரன் சுருக்கமாய்.
“உங்களுக்கு உங்கள் மனைவி மீது மட்டில்லாத அன்பு. அப்படித்தானே?”
“ ஆமாம் சாமி. (அட, சித்ரகுப்தன் எப்ப சாமி ஆனார்?). அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’”
“குழந்தைகள் இல்லை என்று சொன்னபோது உங்கள் முகத்தில் வந்த பாவத்தை வைத்துத் தான் உணர்ந்தேன்”
அப்போது கண்டக்டர் வந்து டிக்கட் கேட்க இருவரும் மௌனமானார்கள். சிறிது நேரத்தில் பேருந்தும் கிளம்பியது. இரவும் மணி பதினொன்றாயிற்று. யுகேந்திரனுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. பக்கத்தில் இருந்த சித்ரகுப்தனைப் பார்த்து “ சாமி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கப் போறேன். குட் நைட்” என்றார்.
“நல்லிரவு” என்று சொல்லிச் சிரித்தது சாமி.
திடீரென்று பஸ் போட்ட ப்ரேக்கில் யுகேந்திரனுக்கு விழிப்பு வந்தது. மணி ஐந்தரை ஆகியிருந்தது. கிட்டத்தட்ட சென்னையை நெருக்கி விட்டது. சிறிது நிதானித்தப் பிறகு பக்கத்துச் சீட்டைப் பார்த்தார். சாமி இல்லை. இறங்கியிருப்பார் போல. அப்போதுதான் அவர் கண்கள் காலி சீட்டின் கைவைக்கும் இடத்தில் செருகியிருந்த ஒரு சிறிய புத்தகத்தின் மீது விழுந்தது.
“யார் புத்தகம்? ஒரு வேளை சாமி விட்டிட்டுப் போயிருப்பாரோ?”
‘சரி எடுத்துப் பார்ப்போம் என்று இடுக்கில் இருந்த அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்தார். சுமார் இருவது பக்கங்கள் கொண்ட புத்தகம் போல இருந்தது. வெள்ளைக் காகிதத்தில் எழுதி பசையிட்டு ஒட்டப்பட்டிருந்தது. அட்டையும் ஒரு வெள்ளைப் பேப்பர் தான். அட்டையின் நட்டநடுவில் அந்தப் புத்தகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் யுகேந்திரனுக்கு அந்த அதிகாலைக் குளிரிலும் வியர்த்தது.
அதில் ‘ யுகேத்திரனாகிய நான்” என்று எழுதப்பட்டிருந்தது.
என் பெயரில் ஒரு புத்தகமா? அதுவும் அந்தச் சாமிதான் விட்டுட்டு போயிருக்கணும். அவர்கிட்ட என் பேர் போட்ட புத்தகம் எப்படி? யார் அவர்?
இப்படி அவர் எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. சரி எதற்கும் இருக்கட்டும் என்று அந்தப் புத்தகத்தை எடுத்துத் தனது பெட்டியில் வைத்துக் கொண்டார். பிறகு படிக்கலாம் என்று.
சரியாக ஆறு மணிக்குப் பெருங்களத்தூர் வந்துசேர்ந்தது பஸ். அவர் அங்கேயே இறங்கிக் கொண்டார். தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தான் வீடு. ஒரு கால் டாக்ஸி பிடித்தார்.
சரியாக அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார். வீடு பூட்டியிருந்தது. ஸ்னேஹா எங்கே போயிருப்பாள்? அதுவும் இவ்வளவு அதிகாலையில்? அலுத்துக்கொண்டே தன் பையில் இருந்த சாவியைத் தேடியெடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.
வீடு புழங்கி ஒரு வாரம் ஆனது போலத் தோன்றியது. சட்டென்று ஒரு கோவம் தொற்றிக்கொண்டது. எங்க போனா?
மொபைல் எடுத்து ஸ்னேஹா நம்பர் அழைத்தார். ஒரு ஐந்து ரிங் சென்றதும் ஸ்னேஹா எடுத்தாள் .
" டியர்! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?"
"நீ எங்க இருக்க? வீட்டப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"
"இல்லைங்க. எங்க ராமாயி பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் ஊருக்கு வந்திருக்கேன். சீக்கிரம் கிளம்பி வந்துடறேன். இன்னிக்கு மார்னிங் ப்ரேக்பாஸ்ட் மதியம் லஞ்ச் மட்டும் வெளில பாத்துக்கிடுங்க"
வெறுப்புடன் கால் கட் செய்து போனை சென்டர் டேபிள் மேல் வைத்தார். பிறகு ஏதோ தோன்றியவராக போனை எடுத்து ஸ்விக்கி மூலம் அருகில் இருந்த ஹோட்டலிலிருந்து டிபன் ஆர்டர் செய்தார்.
அவர் குளித்துவிட்டு வருவதற்கும் டிபன் டெலிவரி ஆவதற்கும் சரியாக இருந்தது. பசி வேகம் தாளாது உடனடியாக தின்று முடித்தார்.
கை கழுவி சேரில் உட்காரப் போகும்போதுதான் அந்தப் புத்தகத்தின் நினைவு வந்தது.
தன் பெட்டியிலிருந்து அதை எடுத்தார். மீண்டும் ஒரு முறை அதன் தலைப்பு அவரைக் குழப்பத்துக்கும் வியப்புக்கும் உள்ளாக்கியது. என் பெயர் எப்படி என்று யோசித்தவாறே முதல் பக்கத்தைப் புரட்டினார்.
முதல் இரண்டு வரிகள் படிக்க ஆரம்பித்ததுமே அவர் கண்கள் மேலும் வியப்பில் விரிந்தன.
ஆமாம் அது அவரது கதைதான். அவரது வாழ்க்கைக் கதைதான். யுகேந்திரனுக்கு வியர்த்தது. எழுந்து fan வேகத்தை அதிகப்படுத்திவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார்.
அவர் பிறந்ததில் இருந்து, அவர் படிப்பு, அவர் குடும்பம் என்று அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தது. ச்நேஹாவுடன் திருமணம், நண்பனுடன் பிசினஸ் வரை வந்த கதை சட்டென்று நின்றது. கீழே இரண்டு லைன் விட்டு " இதுவரை எழுதியது உனக்குத் தெரிந்தது. இனிமேல் வருவது உனக்குத் தெரியாதது. விருப்பமிருந்தால் படிக்கவும்" என்று எழுதியிருந்தது.
யுகேந்திரனுக்கு கொஞ்சம் போல இடது மார்பு வலிப்பது போலிருந்தது. பரபரப்புடன் அடுத்தப் பக்கத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தார். படிக்க படிக்க அவர் முகம் சிவந்தது. கண்கள் விரிந்தன. நெற்றியோரம் வியர்வை வெள்ளம். உங்களை மேலும் தவிக்க விடாமல் அதில் எழுதியிருந்ததின் சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன்.
அதில் எழுதியிருந்ததாவது : ச்நேஹாவுக்கும் அவர் நண்பனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அது இப்போது முற்றி ஒருவர் மற்றவரைப் பிரித்திருக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் அதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்குத் தடையாக யுகேந்திரன் இருக்கும் பட்சத்தில் அவரைக் கொன்றுவிடப் போவதாகவும் இப்போதும் கூட பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று பொய் சொல்லி இருவரும் அவர் நண்பன் வீட்டில் ஆனந்தமாக இருப்பதாகவும் எழுதியிருந்தது.
அதற்கு பிறகு பக்கங்கள் காலியாக இருந்தன. யுகேந்திரனுக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது. திடீரென்று காதோரம் " இதுக்கு மேல என்னன்னு எனக்குத் தெரியல. நீ தான் சொல்லணும்" என்று சித்ரகுப்தனின் குரல் கேட்டது.
யுகேந்திரன் ஒரு தீர்மானத்தோடு அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். காரை ஸ்டார்ட் செய்து அவர் நண்பன் மற்றும் பிசினஸ் பார்ட்னர் வெங்கட் குடியிருந்த அடையார் பக்கம் செலுத்தினார். அரை மணியில் சென்றடைந்தார்.
மிகவும் கோபமாக வேகமாக நடந்து அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். வெளியே விடப்பட்டிருந்த ச்நேஹாவின் செருப்பு அவர் கண்ணில் பட்டது. அவர் கோபம் இன்னும் அதிகமானது.
இரண்டாம் முறை பெல்லை அழுத்த எத்தனிக்கும் போது கதவு திறந்தது. திறந்த கதவுக்குப் பின்னால் அவர் பார்ட்னர் வெங்கட். அவனுக்கும் பின்னால் அவர் மனைவி ஸ்னேஹா. அப்போதுதான் முத்தமிட்டு பிரிந்திருப்பார்கள் போல இருந்தது. இவரைக் கண்ட அந்த இருவரின் கண்களிலும் பயம் குழப்பம் கலந்த ஒரு expression
அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் யுகேந்திரன் கண்கள் வெங்கட் கையில் இருந்த ஒரு புத்தகமும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வரும் பார்க்கத்தவறவில்லை
வெங்கட் கையில் இருந்த புத்தகத்தில் "வெங்கடேசனாகிய நான்" என்று எழுதியிருந்ததும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வர் அவரை நோக்கி உயர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

துணை

இந்திய மணி ஏழுக்கெல்லாம் அப்பாவிடமிருந்து போன்.

ஆயாசத்துடன் மொபைலை எடுத்து "சொல்லுப்பா" என்றாள் லாவண்யா.

"எப்படிடா இருக்க? குளிர் ஆரம்பிச்சுடுத்தா?"

" ம்ம்ம். ஆரம்பிச்சாச்சு. நல்லாயிருக்கேன். நீங்கள்லாம் எப்படி இருக்கீங்க? என்ன இவ்ளோ காலைல போன்?"

" சும்மாதான்" என்று சொன்ன அப்பா ஊர்கதையெல்லாம் பேசிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து விஷயத்துக்கு வந்தார்.

"குட்டிமா... அந்த நரேந்தர் வரன் வந்தது இல்லையா.. அதுபத்தி பேசத்தான் போன் பண்ணேன். "

லாவண்யா முகத்தில் சிறு புன்னகை. அவள் கண்முன் நரேனின் அழகான முகம் வந்து போனது. ஸ்கைப்பில் பேசும்போது தான் கவனித்தாள் அவன் எவ்வளவு handsome என்று. கிட்டத்தட்ட ஹிந்தி சினிமா ஹீரோக்கள் மாதிரி. அவள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

"சொல்லுப்பா"

"அது வந்து குட்டிமா.. நானும் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம். திருவல்லிக்கேணில ஒரு flat. பேயாழ்வார் சந்தோ என்னமோ. ஹால்னு பேரே தவிர கால வக்க எடமில்ல. "

"அதுனால என்னப்பா? நான் என்ன அங்கேயா வாழப்போறேன்? நாங்க இருக்கப்போறது என்னமோ அமெரிக்கால."

"நானும் அப்படியேதான் நெனச்சேன் குட்டிமா. ஆனா உக்காந்து பேசிப் பார்த்தபோத்தான் தெரிஞ்சுது பையனுக்கு ஒரு அக்கா இருக்காளாம். ஏதேதோ காரணம் சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகல. வயசு முப்பது ஆகப்போறது.  பாங்க்ல பெரிய வேலை. ஆனா என்ன பிரயோஜனம்? எனக்கென்னவோ அந்த ஆளு மூஞ்சியே பிடிக்கல. பொண்ணு சம்பாத்யத்துல உக்காந்து சாப்பிடாரான்னு ஒரு சந்தேகம். மேலும், நாங்கள்லாம் பாதி கிணறு தாண்டியாச்சு. எங்க காலத்துக்கு அப்புறம், அந்த பொண்ணு உங்க responsibility ஆயிடுத்துன்னா? முடியுமா யோசிச்சுப் பாரு. அதுனால உன் சார்பா நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி முடித்தார்.

லாவண்யாவுக்கு ஆயாசம அதிகமானது. "சரிப்பா" என்று சொல்லி போனை வைத்தாள். பிறகு போனை மீண்டும் எடுத்து gallery யில் சேமித்து வைத்திருந்த நரேனின் போட்டோவை delete செய்தாள்.

எழுந்து ஃப்ரிட்ஜ் திறந்து மீதம் வைத்திருந்த பீசாவை எடுத்து சூடு பண்ண ஆரம்பித்தாள். சூடானதும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன் முதன் முதலாக அவளுக்கு வரம் பார்க்கலாமா என்று அப்பா கேட்டபோது என்ன அவசரம் என்றுதான் அவளும் கேட்டாள். அம்மாதான் "சும்மாயிரு. உனக்கு ஒண்ணும் தெரியாது" என்று வாயை அடைத்துவிட்டாள்.

வந்த வரனும் அமெரிக்காவில் இவள் இருந்த இடம் அருகேதான். பையன் நேராகவே வந்து சந்தித்தான். நன்றாக பேசினான். மரியாதையாக இருந்தான்.  கிட்டத்தட்ட ஒத்துப் போகும் என்று நினைத்தபோதுதான் இவள் அப்பா " பையன் டாக்டர்.. அதெல்லாம் ஒத்துவராது. இப்படித்தான் நம்ம சொந்ததுத்துல..." என்று ஏதோதோ கதை சொல்லி தவிர்த்து விட்டார். அதற்கப்புறம் பல வரன்கள். சில பையன் வீட்டில் வேண்டாம் என்றார்கள். சில இவள் வீட்டில்.

நாளடைவில் லாவண்யாவுக்கு இந்த விஷயம் அலுக்க ஆரம்பித்தது. கடைசியாக இந்த நரேன். ரொம்ப நாள் கழித்து அவள் மனதில் வசந்தம்.  நரேனுக்கும் இவளைப் பிடித்துப்போனது. ஆனால் கடைசியில் இப்படி முடிந்து விட்டது.

திடீரென்று மீண்டும் போன். அம்மா!

"என்னம்மா?" என்றாள் அலுப்பாக.

"லாவ்ஸ்! எனக்கு கொஞ்ச நாள் உன்னோட வந்து இருக்கணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ டிக்கட் அரேஞ் பண்ணு. ரிட்டர்ன் நான் அங்க வந்து சொல்றேன்"

"என்னம்மா திடீர்னு? சரி ரெண்டு நாள்ல அரேஞ் பண்ணறேன். வா வா ரொம்ப சந்தோஷம்"

அடுத்த வாரத்தின் ஞாயிறு அன்று அம்மா வந்து சேர்ந்தாள். காரணம் தெரியாமல் லாவண்யா அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்

அப்புறம் அம்மாவுக்காக லீவு எடுத்து பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். ஆபீஸ் விட்டு வந்தால் சூடான காப்பி அம்மா கை சாப்பாடு என்று இரண்டு மாதம் பறந்தே போனது.

ஒரு நாள் ஆபீசில் அப்பாவிடமிருந்து போன். "குட்டிமா.. உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் என் போனை அட்டென்ட் செய்ய மாட்டேங்கிறா? அங்கேயே செட்டில் ஆயிட்டாளா? சென்னை வர எண்ணமில்லையா?" என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

"சரி நான் அம்மாகிட்டே சொல்றேன்பா" என்று சொல்லி சமாளித்துவிட்டாள். மாலை வீடு வந்ததும் அம்மாவிடம் சொன்னாள்.

"நான் பேசிக்கறேன் அப்பாகிட்ட. நீ வந்து காப்பி குடி" என்று அம்மா பேச்சை மாற்றிவிட்டாள்.

இரவு டின்னருக்குப் பிறகு அம்மாவும் மகளும் வெகு நேரம் ரம்மி விளையாடினார்கள். சுமார் பதினொரு மணிக்கு லாவண்யா "அம்மா, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் தூங்கப் போறேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து தன் மொபைலை தேடி ஹாலுக்கு வந்தவள் காதில் அம்மாவில் குரல் விழுந்தது. அப்பாவிடம் பேசுகிறாள் போல. டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று திரும்ப எத்தனித்தவள் காதில் அவள் பெயர் விழுந்தது. என்னவென்று நின்று கேட்டாள்/

"ஒரு ரெண்டு மாசம் நான் இல்லாம இருக்க முடியல உங்களுக்கு. இத்தனைக்கும் வயசு அம்பத்தாறு ஆறது. சமைச்சுப் போட சமையல்காரி, வீட்டு வேலைக்கு வேலைக்காரி, வெளில போக வர ஊபர் ஓலா. போதாததுக்கு நம்ம வீடு பக்கத்திலேயே உங்க அண்ணா, தங்கை வீடுகள். அப்படியிருந்தும் உங்களுக்கு நான் தேவைப்படறது.

பாவம் நம்ம பொண்ணு. வயசு இருவத்தாறுதான் ஆறது. அவளுக்குன்னு ஒரு துணை வேண்டாமா? அவ கஷ்டத்தைப் புரிஞ்சுக்க வேணாமா? நரேன் அப்பா அவர் பொண்ணு சம்பளத்துல கண்ணா இருக்கார்ன்னு சொன்னீங்க. அதுபோல உங்கள ஒருத்தர் சொல்ல எவ்ளோ நேரமாகும்?"

லாவண்யா ஸ்தம்பித்து நின்றாள். தன் மனவோட்டங்கள் அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது?

மறுமுனையில் அப்பா என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. "நரேன் அப்பா  நம்பர் என்கிட்டே இருக்கு. சரின்னு கூப்பிட்டு நானே சொல்லிடறேன்" என்றாள் அம்மா புன்னகையோடு. அப்போதுதான் லாவண்யா அங்கே நின்றிருப்பதை கவனித்தாள்.

"அம்மா" என்றவாறே லாவண்யா ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

"நரேன் போட்டோ இருக்கா இல்லை டிலீட் செஞ்சுட்டியா? இல்லேனா நான் மெயில்ல அனுப்பட்டுமா?" என்றாள் குறும்பாக.


Monday, July 29, 2019

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

#சிறுகதை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

அந்தக் கல்யாணத்தில் ஜோதியை சந்திப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஜோதியை கல்யாண வீட்டாருக்கு  எப்படித் தெரியும் என்பதை விட அவள் எப்போது அமெரிக்காவில் இருந்து வந்தாள் என்னும் கேள்வி என் முன்னர் நின்றது.

ஜோதி எங்கள் எதிர் வீட்டுப் பெண். அவள் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் போது நாங்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்தோம். அப்போதில் இருந்து நல்ல பழக்கம். என் மகளுடன் விளையாட வருவாள். என் வீட்டிலேயே டிபன் காபி சாப்பிடுவாள். என் மகளுக்கு நல்ல தோழியாகவும் எங்களுக்கு மகள் போலவும் இருந்தாள். எங்களோடு ஷாப்பிங் வருவது சினிமா பார்க்க வருவது என்று எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிப் போனாள்.

பள்ளிப் படிப்பு முடித்து காலேஜ் சென்ற பிறகும் அவள் மாறவில்லை. அதே அன்னியோனியத்துடன் பழகினாள். அவள் குடும்பத்தாரும் நாங்களும் மாதம் ஒரு முறை ஹோட்டல் போவது என்று நெருங்கினோம்.

ஜோதி ரொம்ப பேச்சாளி.  எந்த விஷயமானாலும் பேசிக்கொண்டே இருப்பாள். காலேஜ் வாழ்க்கை, அவள் நண்பர்கள் ஸினிமா என்று எந்த சப்ஜெக்ட் ஆனாலும் ஆள் கெட்டி.
"பார்த்துடி ஜோதி! நாளைக்குக் கல்யாணம் ஆனா உன் புகுந்த வீட்டில் இப்படி எல்லாம் அரட்டை அடிக்க முடியாமல் போகலாம்." என்று நாங்கள் கேலி செய்வோம். " எது எப்படியானாலும் உங்களோடு எல்லாம் பேசாமல் இருப்பேனா?" என்று எதிர்க் கேள்வி போட்டு எங்களை அடக்குவாள்

பிறகு காலேஜ் முடிந்து வேலைக்கும் போனாள். அவர்கள் வீட்டில் அவளுக்குத் திருமணத்துக்குப் பார்த்தார்கள்.  அமெரிக்க மாப்பிள்ளை. திருமணமும் முடிந்து அவள் யுஎஸ் சென்று விட்டாள்.

அங்கு சென்ற பிறகும் எங்களோடு இணையம் மூலம் பேசுவது என்று நட்பு தொடர்ந்து.  பிறகுதான் நாளடைவில் அந்த வித்தியாசம் தெரியத் தொடங்கியது. ஜோதி எங்களோடு பேசுவது மெது மெதுவாகக் குறைந்தது.  பின்னர் நின்றே போனது.  நான் மனைவியிடம் சொல்வேன் " பார்த்தியா! வெளிநாட்டு வாசம் ஆளை மாற்றிவிட்டது" என்று. அவள் என்னை அடக்குவாள். ஏதாவது காரணம் இருக்கும், வேலைப் பளு என்றெல்லாம் சொல்வாள்.

அப்படி இருக்கையில்தான் ஒருமுறை ஜோதி சென்னை வந்தாள். அவள் வந்தது எங்களுக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவள் எங்கள் வீட்டுக்கு வரவில்லை. " குழந்தை வந்திருக்காள் போய் பார்க்கலாம் வாங்க" என்று மனைவி அழைத்தாள். எனக்குக் கோவமான கோவம். கத்தித் தீர்த்து விட்டேன்.

"என்னடி, அமெரிக்கான்னா கொம்பா?  வந்து ஒரு வாரம் ஆச்சு. ஒரு தடவ கூட வந்து எட்டிப் பார்க்கல. நாம போயி பார்க்கனுமா? நான் வரமுடியாது போ"

சுஜாவும் போகவில்லை. பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் நாங்கள் ஆபீஸ் கிளம்ப வெளிய வந்தபோது ஜோதி வெளிய வந்தாள். அவர்கள் வீட்டு வாசலில் வாடகைக் கார் ஒன்று நின்றிருந்தது. அவள் கையில் பெட்டி. எங்களைப் பார்த்துவிட்டாள். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன். சுஜாதான் அவளிடம் ஹலோ சொன்னாள். " நான் இன்னிக்கு யு.எஸ் கிளம்பறேன் ஆன்டி, பை அங்கிள்" என்றாள். நான் பேசவே இல்லை.

அன்று இரவு சுஜா என்னைத் திட்டித் தீர்த்தாள். ' அவ சின்னவ. உங்க புத்தி எங்க போச்சு? இப்படிப் பேசாம இருந்தா அவ அப்பா அம்மா என்ன நினைப்பா?"

நான் ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் நாட்கள் உருண்டோடின. இந்த விஷயம் நாங்கள் மறந்தே விட்டோம்.  அப்போது ஒரு நாள் என் ஆபீஸ் கொலீகின் மகள் திருமண ரிசப்ஷனுக்கு நானும் சுஜாவும் சென்றோம். அங்கே தான் ஜோதியைப் பார்த்தோம். ஜோதியுடன் அவள் கணவனும் இருந்தான். அவன் அந்த கல்யாணப் பெண்ணின் friend என்பது பிற்பாடு தெரிந்தது. ஜோதி அங்கேயும் எங்களுடன் பேசவில்லை. ஜஸ்ட் ஒரு தலையசைப்பு. அவ்வளவுதான்.  தணிந்திருந்த என் கோவம் மீண்டும் அதிகமானது.

சுஜா என் கோவம் அறிந்து எதுவும் என்னிடம் பேசவில்லை. அப்புறம் இரண்டு நாள் கழித்து ஒரு நாள் இரவு சுமார் எட்டு மணிக்கு காலிங் பெல் அடித்தது. போய் திறந்தால் ஜோதி!

நான் ஒன்றும் சொல்லாமல் உள்ளே திரும்பி "சுஜா" என்று குரல் தந்துவிட்டேன் என் அறைக்குள் சென்று விட்டேன்.

ஒரு இரண்டு நிமிடத்தில் என் அறைக்குள் சுஜா வந்தாள். அவள் கூட ஜோதி.

" என்ன அங்கிள் கோவமா?"

"எதுக்குக் கோவம்?" என்று கேட்டேன்.

"நான் உங்களோட எல்லாம் முன்னைப்போல பேசறதில்லை பழகறதில்லைன்னு?"

"காலத்தோட நாமளும் மாறணும். Why would I care?" என்றேன் காட்டமாக.

அவ்வளவுதான். ஜோதி கண்களில் பொலபொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தது. சுஜா "என்னடி ஜோதி?" என்று பரபரத்தாள்.

ஐந்து நிமிடம் போல ஜோதி எதுவும் பேசாமல் அழுதாள். பிறகு சமாதானமாகிப் பேசினாள். " என் நிலைமை நான் யாரிடமும் சொல்லல அங்கிள். என் புகுந்த வீட்டுல ஒரு விதமான கட்டுப்பாடு. மிலிட்டரி ரூல்னு கூடச் சொல்லலாம். யாரிடமும் அதிகம் பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் என்ன பேசினேன் ஏது பேசினேன் என்று கேள்வி கேட்டே  தொளச்சு எடுத்துருவாங்க.  என் வீட்டுக்காரரும் அதே குணம் தான். சொன்னா வெக்கக் கேடு. என் அப்பா அம்மா க்ளோஸ் friends கூட மனசு விட்டு பேசியே ரொம்ப நாளாச்சு. போன தடவ வந்தபோது உங்களைப் பார்க்க மனசு பரபரத்தது. ஆனா என் வீட்டுக்காரர் நாசூக்கா நான் வர்றத தடுத்துட்டார். எனக்கு ச்சேன்னு ஆகிடுத்து. அதான் அதுக்கு அப்புறம் வரவே இல்லை. அன்னைக்குக் கல்யாணத்துல கூட அவர் இருந்ததால உங்க கிட்ட பேசல. இப்ப நான் தனியா வந்திருக்கேன்.  என் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட நிறைய பேசணும்னே வந்திருக்கேன்.  எங்கிட்ட கோவமில்லாம பேசுவீங்களா அங்கிள்?" என்றாள்

என் மனம் கனத்தது. அப்புறம் நாங்கள் மூவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சுமார் ஒன்பது மணிக்கு ஜோதி கிளம்பி அவள் வீட்டுக்குச் சென்றாள்.

கதவைச் சாத்திவிட்டு வந்த சுஜா " இப்ப தெரிஞ்சுதா உண்மை என்னன்னு?" என்றாள்.

"என்ன இருந்தாலும் என்னால இத ஏத்துக்க முடியல சுஜா.  இந்தக் காலத்துல இப்படி மனுஷங்களா? நம்பவே முடியல"

" எல்லா காலத்திலேயும் இப்படி இருந்திருக்காங்க" என்றாள்  சுஜா.

"ஏன், நீயும்தான் கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்தே. உனக்கு இந்தமாதிரியான அனுபவமா ஏற்பட்டுது"  என்றேன்.

சுஜா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள். நான் அவள் கண்களை ஏறிட்டுப் பார்த்தேன்.  அவள் கண்கள் சிரிக்கவில்லை. 

வீயார்



















Saturday, March 9, 2019

ஃபைட்டர் (Fighter)

#சிறுகதை

ஃபைட்டர் (Fighter)

இரண்டு வாரம் லீவு முடிந்து ஆபீஸ் வந்தவுடன் என்னை வரவேற்ற செய்தி உத்தரா விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டு விட்டாள் என்பதுதான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உத்தராவா? அவள் ஃபைட்டர் ஆச்சே!

உத்தரா எங்கள் வங்கியில் பணிபுரியும் அதிகாரி. வயது சுமார் 28 இருக்கும். கணவன் ஒரு மென்பொறியாளன். இரண்டு வயது மகள். இங்கு உத்தரா பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவள் மிகுந்த தைரியசாலி மட்டுமல்லாது சற்று வாயாடியும் கூட.  நன்றாக சிரித்துப் பேசிப்பழகும் அவள் தவறு என்று தெரிந்தால் யாரையும் விட்டுவைக்க மாட்டாள். அது மேனேஜராக இருந்தாலும் சரி வாடிக்கையாளராக இருந்தாலும் சரி.  சரி தவறு என்பதை ஒரு கோடு கிழித்து பிரித்து வைத்திருப்பாள்.

என் மீது மிகுந்த மரியாதை உண்டு. இருந்தும் ஒரு முறை ஒரு கஸ்டமர் அட்ரஸ் சான்று கொண்டுவர மறந்து விட்டேன். கொஞ்சம் அவசரம். எனக்குப் பாஸ்புக்கில் புது அட்ரஸ் மாற்றித்தர இயலுமா என்று கேட்டார். அவர் முகம் பார்த்து நான் மாற்றியும் தந்தேன். அது அடுத்தகட்ட authorisationக்காக உத்தராவிடம் சென்றது. தகுந்த சான்று இல்லை என்று பார்த்த அவள் authorise செய்ய மறுத்துவிட்டாள்.

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.  அவள் தன் ஸ்டாண்டை மாற்றிக்கொள்ளவே இல்லை.  கடைசியில் கஸ்டமருக்கு வீடு சென்று சான்று எடுத்து வர வேண்டியதாச்சு.

இப்படிப்பட்ட உத்தராவா விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டு விட்டாள் ?

அவளுக்குச் சுமார் நாலு வருஷம் முன்னால் கல்யாணம் ஆனது. காதல் கல்யாணம். நல்ல ஆசையான கணவன். சந்தோஷமான குடும்பம். ஒரு மகளும் பிறந்தாள். நல்ல சூட்டிகையான குழந்தை. சில சமயம் அம்மாவுடன் ஆபீஸ் வரும். அப்போதெல்லாம் அங்கிள் அங்கிள் என்று என்னுடன் ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப்பட்ட உத்தராவுக்கு ஒரு சோதனை வந்தது.  அவள் கணவனின் வேலை போனது. மென்பொறியாளன் என்றாலும் வயது கூடியதால் வேறு வேலை கிடைக்க நாளானது. அப்புறம் அங்கே இங்கே சொல்லி ஒரு வேலை அமைந்தது. பெங்களூரில்.

உத்தராவுக்கு transfer கிடைக்காததால் அவன் மட்டும் பெங்களூர் சென்றான். அவன் வாழ்க்கையிலும் ஸினிமாட்டிக்காக ஒரு ஸீன் வந்தது. அவன் கூட வேலை பார்த்த ஒரு கன்னடப் பெண் அவன் மீது காதல் கொண்டாள்.

இந்த விஷயம் கூட அவனே சொல்லித்தான் உத்தராவுக்குத் தெரியும். 'நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம், அதனால் டைவர்ஸ் அப்ளை செய்யப்போகிறேன் ' என்று ஒருநாள் ஹோட்டல் போகப்போகிறோம் என்பதுபோல சாதாரணமாகச் சொன்னான்  ஃபோனில்.

உத்தரா நிலைகுலைந்து போய்விட்டாள். ஒரு நாள் இந்த விஷயம் எங்களுக்கும் தெரியவந்தது.

நான் கூப்பிட்டுப் பேசினேன். அழுதாள். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். நான் ஏதாவது உதவலாமா என்றும் கேட்டேன். அழுகையைத் துடைத்துக்கொண்டு திடமான குரலில் சொன்னாள் "வேண்டாம் சார், நான் அவனுக்கு டைவர்ஸ் தரப்போவதில்லை. கடைசிவரையில் ஒரு கை பார்க்கப்போகிறேன்"

"அவன் செஞ்சது தப்பு. தப்பு செஞ்சுட்டு தண்டனை இல்லேனா எப்படி? கண்டிப்பா அந்தப் பெண்ணோட வாழவிடமாட்டேன்."

நான் திகைத்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அப்புறம் ஒரு சொந்த வேலையாக நான் இரண்டு வாரம் லீவில் சென்றுவிட்டு இதோ இன்று திரும்பினால் இந்தச் செய்தி!

எப்படி நடந்தது?

சற்றுநேரத்தில் உத்தரா வந்தாள்.  முகம் நார்மலாக இருந்தது. என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தாள். நலம் விசாரித்தாள். அப்புறம் வேலையில் பிசி ஆகிவிட்டாள் .

லஞ்ச் டைமில் வைத்து அவளிடம் கேட்டு விடுவது என்று முடிவுசெய்தேன்.  அதற்கு அவசியமே இல்லாதபடி அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

"சார், நான் டைவர்ஸ் தர்றதா முடிவு செஞ்சு அவனுக்கும் சொல்லிட்டேன்."

நான்  சற்றுநேரம் அவளையேப் பார்த்தேன். பின்னர்  "எப்படி ஒத்துக்கிட்டாய்? நீ ஃபைட்டர் ஆச்சே" என்றேன்.

"ஃபைட்டர் தான் நான் இப்பவும். அவனுக்கு டைவர்ஸ் தராமல் என்னால் இழுத்தடிக்க முடியும். அந்தப் பெண்ணோட வாழ விடாமல் செய்யவும் முடியும். ஆனா அந்தப் போராட்டத்துல காயப்படப் போறது நான் மட்டுமில்ல. என் மகளும்தான். அவ தப்பே இல்லாமல் அவள் பல கஷ்டங்கள சந்திக்கணும்.

அதும் இல்லாம ஒரு பெண்ணை வளர்க்கறது கூட ஒரு போராட்டம் தான்.  அந்தப் போர்ல ஜெயிக்க நான் இந்தப் போர்ல தோற்க வேண்டி வந்தாலும் வரலாம்.  எப்ப அவன் டைவர்ஸ் வரை போயிட்டானோ அப்பவே நான் காதலிச்சவன் செத்துட்டான் என் வரைல. அவனுக்காக என் மகள் வாழ்க்கைய நான் ஏன் போர்க்களம் ஆக்கணும்? Sometimes you have to lose a battel to win the war. இல்லையா சார்? என்றாள்.

"உத்தரா நீ இப்பவும் ஒரு ஃபைட்டர்தான்" என்றது என் மனம்.

வீயார்

Thursday, February 14, 2019

நினைவே நம் வாழ்க்கையின் திசை மாற்றினால்...

நினைவே நம் வாழ்க்கையின் திசை மாற்றினால்...

சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
-----  கவிஞர் கண்ணதாசன்.

மெசஞ்சரில் வந்த நோட்டிபிகேஷன் சத்தம் கவனத்தை ஈர்க்க நரேன்  (நாராயணன் என்ற பெயரை நரேன் என்று நண்பர்கள் அழைப்பார்கள். நாமும் நரேன் என்றே அழைப்போம்) தனது மொபைலை எடுத்துப் பார்த்தான்.

அவன் நினைத்தது சரிதான். சௌமியிடம் இருந்துதான் வந்திருந்தது. அவனை அறியாமல் அவன் மனம் துள்ளியது. 

' ஹாய் நரேன்! ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!"

' உனக்கும் சௌமி' என்று நரேனின் விரல்கள் ஆனந்தத்தில் டைப் அடித்தன.

' எனக்கு பழைய நினைவுகள் வந்திடுத்து டா... '

' ம்ம்ம்...'

' அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?'

' ஒண்ணுமில்லை சௌமி. ஆபீஸ் போகணும்' என்று டைப் அடித்து send பண்ணியதும் தன் தவறை உணர்ந்தான் நரேன்.

'நீ இன்னும் மாறலடா ' என்ற சௌமியின் மெசேஜ் அவனை கடந்த கால நினைவுகளுக்குள் இட்டுச் சென்றது. நாமும் உடன் செல்வோம்.

மாம்பலத்தில் கிரி தெருவில் எதிரெதிர் வீடு நரேனுக்கும் சௌமிக்கும். இரண்டு குடும்பத்தாரும் நன்கு நெருங்கிப் பழகினார்கள். நரேன் அப்பா சௌமி அப்பா இரண்டு பேரும் பேங்க் மேனேஜர். அதனாலும் அவர்கள் நட்பு இறுகியது. பண்டிகைகள் வீட்டு விசேஷங்கள் எல்லாம் இன்னும் வலு சேர்த்தன அவர்கள் நட்புக்கு,

இப்படி குடும்ப நட்பாக இருந்தது இவர்கள் இருவர் இடையில் காதலாக மலர்ந்தது ஒரு முறை இரண்டு குடும்பமும் குலு மனாலி சென்றபோதுதான்.
நண்பர்களாக சென்றவர்கள் காதலர்களாக திரும்பினர். பிறகு ஒரு வருடம் போல அவர்கள் காதல் வேர்விட்டுத் துளிர்த்தது.

மறைத்தும் மறையாத காதல் அல்லவா? இருவர் வீட்டுக்கும் தெரிந்த போது இவர்கள் பயந்தார்கள். ஆனால் ஒரு feel good திரைப்படம் போல இருவர் வீட்டிலும் சம்மதம்!

அப்போது தான் நரேனுக்கு ஒரு ஐடி கம்பெனியிலும் சௌமிக்கு ஒரு வங்கியிலும் பணியானது.  அந்த வருஷத்தையோ அந்த வருஷத்தில் வந்த காதலர் தினத்தையோ இவனால் மறக்கவே முடியாமல் போனது.

சௌமி ஒரு வாரம் முன்னதாகவே சொல்லிவிட்டாள். V day அன்று லீவு போட்டுவிட்டு ஊர் சுற்ற வேண்டும், சினிமா பார்க்க வேண்டும் ஹோட்டல் போக வேண்டும் என்று. இவனும் சரி என்று சொல்லி விட்டான். சௌமி அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டாள். சரியாக பதிமூன்றாம் தேதி, நரேன் கம்பெனியில் ஒரு ப்ராஜக்டை தந்து அதை war footingல் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். காதல் தினத்துக்கு லீவு என்று கேட்க கூசினான் நரேன். போதாததுக்கு பதிமூன்று இரவும் அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

மொத்தமாக வேலை முடிந்து கிளம்ப அவனுக்கு மறுநாள் மாலை ஏழு மணிபோல ஆனது. இடையே பல கால்கள். சௌமியிடமிருந்து. இவன் மெசேஜ் மூலம் பதில் தந்தான். எப்படியாவது வா என்றாள் சௌமி. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த நரேன் தன் மொபைலை அணைத்துவிட்டான்.

அதன் பின் மறுநாள் அவன் சௌமியை சந்திக்க அவள் வீடு சென்றதும் அங்கு நடந்ததும் வரலாறு!

காதலிக்கும் போதே என் விருப்பத்தை மதிக்காத உன்னை நானெப்படி கல்யாணம் செய்து கொள்வது? விலகிவிடலாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாள் சௌமி.  இரு வீட்டார் சொல்லியும், நரேன் கெஞ்சியும் ஒன்றும் பலனில்லை.

ஒரு வருஷத்துக்குள் இருவருக்கும் திருமணம் ஆனது. சௌமி வடநாடு சென்று விட்டாள். நரேன் மனைவி சென்னைதான். நரேன் தன் மனைவிக்கு தனது முன்னாள் காதல் பற்றி எல்லாம் சொல்லிவிட்டான்.  இன்று அவர்கள் சோழங்கநல்லூரில்  அவன் ஆபீஸ் அருகில் ஒரு பெரிய வீட்டில் குடியிருக்கிறார்கள்.

ஒரு ஆறு மாசம் முன்னால் ஒரு facebook க்ரூப்பில் மெம்பரான நரேனுக்காக அவன் விதி காத்திருந்தது. சௌமியின் வடிவில். அவளும் அங்கு மெம்பர்.

இவன் பதிவுகளைப் பார்த்து இவனுக்கு friend request அனுப்பினாள். இவனும் யோசிக்காமல் ஏற்றுக்கொண்டான். இதைத் தன் மனைவியிடமும் சொல்லிவிட்டான்.

முதலில் சாதாரண ஹாய் ஹலோக்கள். Harmless குட் மார்னிங்குகள் என்று இருந்தது. திடீரென்று ஒரு நாள் யு டர்ன் எடுத்தது. சௌமி கொஞ்சம் கொஞ்சமாக தன் பர்சனல் விஷயங்களை இவனுடன் பகிர்ந்தாள் .

தன் கணவனைப் பற்றி, அவன் குடிப்பழக்கத்தைப் பற்றி என்று ஆரம்பித்து வாழ்க்கையில் எதுவும் சுகமில்லை என்பது வரை பகிர்ந்துகொண்டாள். இதெல்லாமும் நரேன் தன் மனைவியடம் மறைக்கவில்லை.

ஆரம்பத்தில் guiltyயாக உணர்ந்த நரேன் நாளடைவில் அவளுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு சென்றுவிட்டான். 

இதோ இன்று இன்னொரு மெசேஜ்! ' நான் சென்னை வந்திருக்கிறேன். முடிஞ்சா சந்திக்கலாமா?'

பின்னால் நிழலாட அவன் திடுக்கிட்டுத் திரும்பினால் அவன் மனைவி!

' யாருகிட்ட சாட்டிங்? சௌமியா?'

'ஆமாம்! சென்னை வந்திருக்கா... '

'வாவ்! ஆத்துக்குக் கூப்பிடுங்கோ'

' இல்லை அவள் என்னைத் தனியாக சந்திக்கணும்ன்னு சொல்றா.. ஏதோ முக்கியமா பேசணுமாம்.'

அவன் மனைவி மௌனமானாள். சில நிமிடங்கள் கழித்து 'நரேன்' என்று அழைத்துப் பேசினாள்.

'நரேன் எனக்கு உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.  உங்க நல்ல மனசும் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க எதையும் யோசிக்காம முடிவு எடுக்கறீங்கன்னு தோணறது. காதல் அதிலும் முதல் காதல் யாராலும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் எப்பவும் சுகம் தருபவை. சர்க்கரை எப்ப சாப்பிட்டால்ம் இனிப்பது போல.

காதல் கல்யாணத்தில் முடிஞ்சா அது பெரிய வரம். அப்படி இல்லாதபோது நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அந்த நினைவுகள் நம் நிகழ்கால வாழ்க்கையோட கலக்காம பார்த்துக்கணும்.

இப்ப உங்களையே எடுத்துக்குங்க. You have not concealed anything from me. ஆனா சௌமியும் உங்கள மாதிரின்னு assurance கொடுக்க முடியுமா? அப்படி முடியலேனா இப்படித் தனியா சந்திக்கறது தவறு இல்லையா? அத நீங்க எடுத்துச் சொல்லணும்.

நரேன், நினைவுகள் இலகுவா இருந்தா சுகம். சிக்கல் விழுந்தா சுமை.  அதுனால பார்த்து நடந்துக்குங்க. நான் உங்க மனைவி என்பதோட உங்க வெல் விஷரும் கூட' என்று பேசி முடித்தாள்.

நரேன் ஒரு அர்ஜுன மயக்கித்தில் இருந்தான். அந்த மயக்கத்தை கலைக்கும் படியாய் ஒரு FB நோட்டிபிக்கேஷன்! ஆனால் இந்த முறை அவன் மனைவி மொபைலில் இருந்து. அதைப் பார்த்த அவன் மனைவி மெலிதாக புன்னகைத்தாள்.

'இங்க பாருங்க நரேன்! நான் என்ன சொன்னேன்? இதோ இந்த போஸ்ட் பாருங்க. இது திருவல்லிக்கேணில என் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த வெங்கட்டின் போஸ்ட். எனக்கும் அவனுக்கு எங்க ஏரியா லைப்ரரி மூலம் பழக்கம். அவனும் சுஜாதா கதைகளோட பரம ரசிகன். அவன் கதை கவிதைன்னு facebookல நிறைய எழுதறான். அவனோட திருவல்லிக்கேணி தேவதைகள்ங்கற அவன் இளமை நினைவுகள் ரொம்ப பிரசித்தம். அவன் சந்திச்ச பொண்ணுகள் பத்தில்லாம் எழுதுவான். ஆனா பாருங்க, இன்னைக்கு தன் கவர் பிக்சர்ல தன் மனைவியோட ஒரு போட்டோ போட்டுருக்கான். திருவல்லிக்கேணி நினைவுகள். அவன் வாழ்க்கை நிதர்சனம். இத தான் நான் உங்ககிட்ட சொன்னேன்' என்று சொல்லி உள்ளே சென்ற வேதா என்னும் வேதவல்லி என்னும் திருவல்லிக்கேணி தேவதை.

வீயார்.