Saturday, April 18, 2015

சாகப் பிடிக்காதவர்கள் : சிறுகதை

சாகப் பிடிக்காதவர்கள் : சிறுகதை
என்ன இருந்தாலும் தாம்பரம்னா  தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம் முழுக்க மதுரை திருச்சின்னு ஆபீஸ் விஷயம் டூர்ல இருந்த எனக்கு இந்தக் குளிர் ரொம்பவுமே இதமா இருந்துது. நேத்து ராத்திரி தான் தாம்பரம் வந்தேன். ஒரு சின்ன வாக் போலாம்னு வெளியே வந்திருந்தேன். மனைவி நச்சரிப்புப் தாங்காம எடுத்த வந்த மப்ளர் கழுத்தைச் சுற்றி ஸ்டைலாகக் கிடந்தது.

அந்தக் குளிருக்கு ஒரு தம் போட்டா இன்னும் சுகம்னு தோண காமராஜபுரம் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இருந்த டீ கடைக்குப் போய் ஒரு ஸிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். அதை ஒரு இழுப்பு இழுத்து நுரையீரலில் புகையை நிரப்பி நாஸி வழியாக வெளியேற்றுகையில் தான் விக்டரைப் பார்த்தேன். அதிர்ந்தேன்.

என் கையில் இருந்த ஸிகரெட் கீழே விழுந்தது. என் திறந்த வாய் மூடவில்லை. உடம்புல மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு.

விக்டர்! என்னோட காலேஜ் மேட். ஏர் போர்ஸ் மேட். ரெண்டு பேரும் ஒரே வருஷத்துல தான் ஏர் போர்ஸ் ஜாயின் பண்ணினோம். ஒரே வருஷத்துல தான் காண்ட்ராக்ட் பீரியட் முடிஞ்சு வெளியவும் வந்தோம். நான் மார்கெட்டிங் லைன்ல போயிட்டேன். விக்டர் ஒரு மொபைல் கடை வைத்துவிட்டான். தாம்பரம் கேம்ப் ரோட் கிட்ட. நல்ல பெரிய கடை. நல்ல சேல்ஸ் கூட. இப்ப அத கொஞ்சம் விரிவு செஞ்சு கம்ப்யூடர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கூட வைத்து விட்டான்.

அதுக்காக நான் ஏன்  அதிர்ச்சி அடையணும்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது. இன்னிக்குக் காலைல வீட்ட விட்டு வாக்குக்கு வெளியே வந்த போது என் மனைவி மப்ளர் மட்டுமா தந்தாள்? என் காலேஜ் மேட் விக்டர் செத்துப் போன செய்தியையும் சேர்த்துத் தந்தாள். மேற்குத் தாம்பரத்துல ப்ரிஜ் மேல நடந்த ஒரு விபத்துல விக்டர் போயிட்டானாம். அதுனால வாக் போயிட்டு வந்த பிற்பாடு அவங்க வீட்டுக்கு நான் போயி துக்கம் விசாரிக்கணும்னும் சொல்லிட்டா.

அவ செத்துப் போனதா சொன்ன விக்டர் என் எதிர்ல! என் அதிர்ச்சிக்கு காரணம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். சரி, கதைகள்ல வர்ற மாதிரி, நண்பனைப் பார்க்க விக்டர் ஆவிதான் வந்திருக்கு போல என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போதே டே மச்சான்! எப்படா வந்த? என்று கேட்டவாறே அருகில் வந்த விக்டர் ஆவி .. சேச்சே.. விக்டர் கடைக்காரரிடம் ஒரு பில்டர் கொடுப்பா என்று கையை நீட்டினான்.

நெருப்பைக் காட்டினால் பேய்கள் ஓடி விடும் என்று படித்திருக்கிறேன். இங்க என்னடானா பேயே ஸிகரெட் பிடிக்கிறதே! கலிகாலம்! (ஆமாம் கிறித்துவர்களுக்குக் கலி காலம் உண்டா?)

மச்சான் எப்படா வந்த டூர்லேர்ந்து? எனக்குத் தெரியவே இல்லையே. சிஸ்டர் கூட சொல்லலையே!

இல்லை விக்டர்! நேத்து நைட்டு தான் வந்தேன். இன்னைக்கு உன் வீடு வரைல வரலாம்னு தான் இருந்தேன் என்று இழுத்தேன். உன் சாவுக்குத் துக்கம் விசாரிக்க வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல வந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ம்ம்ம்... எல்லாம் விதி! யாருக்குத் தெரியும் இப்படி ஆகும்னு?  திடீர்ன்னு குறுக்க வந்த வண்டி மேலதான் தப்பு. என்றான். நான் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டேன். தான் செத்ததுக்கு குறுக்க வந்த வண்டிதான் காரணம் என்று செத்தவனே சொல்கிறான். நானும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

அப்புறம் சிஸ்டர் எப்படி இருக்காங்க? கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. ஒரு பதினொரு மணிக்கு மேல. அப்புறம் என்கிட்டே சில்லறை இல்ல. இந்த சிகரெட்டுக்கு நீயே காசு கொடுத்திடு என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விடு விடு என்று நடந்து அந்த அதிகாலைப் பனிக்குள் மறைந்தான்.

நான் மந்திரிச்சு விட்ட கோழி கணக்கா ரெண்டு சிகரெட்டுக்குக் காசு கொடுத்தேன். கடைக்காரன் என்னைபார்த்து பாவம் ஸார் அவரு! என்ன வயசு ஆச்சுன்னு இப்ப டெத் வரணும்? இன்னும் வாழ்ந்திருக்கலாம் என்றான். என்னைக்குத் துணிவே துணை படத்தோட ஆரம்பக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆண்டவா! என்ன சோதனை! காமராஜபுரத்துல பேய்களா! அதுவும் சர்வ சாதரணமாக உலவுதா! எல்லாரும் அத சகஜமாக எடுத்துக்க வேற செய்யுறாங்களே! தெய்வமே!  என் உடம்புல திரும்பவும் அதே மின்சாரம்.

திடீரென்று கை சில்லிட்டது போலத் தோன்றவும் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டேன். கையில் மொபைல் நிரடியது. திடீரென்று ஒரு எண்ணம்! எடுத்து விக்டர் வீட்டு லேன்ட்லைன் நம்பரைப் போட்டேன். சில ரிங்குகளுக்குப் பின்னர் போன் எடுக்கப்பட்டது.

ஹல்லோ விக்டர் அப்பா!

அங்கிள்! நான் வெங்கட்! விக்டர் பிரெண்ட்

சொல்லு வெங்கட்! என்ன விஷயம்? ஏன் பதறினாபோலப் பேசற?

ஒண்ணுமில்லை அங்கிள். சும்மா வாக்கிங் வந்தேனா. ரொம்ப குளிர். அதுனால மூச்சு வாங்குது. சும்மாதான் போன் பண்ணினேன். விக்டர் இருக்கானா?

அங்கிள் சிரித்தார். எப்படித்தான் ஏர் போர்ஸ் காரங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்களோ தெரியல. அவனும் ஒன்னிய மாதிரிதான். வாக்கிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கான். அரை மணில வந்திருவான். வந்தாவுட்டு போன் பண்ணச் சொல்றேன்.

எனக்குப் பாவமாக இருந்தது. அங்கிளுக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். மகன் இறந்த செய்தியைத் தாங்க முடியல போல. இன்னும் உயிரோடவே இருக்கறா மாதிரி நெனச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கார். பாவம்

சரி அங்கிள் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். மேற்கொண்டு வாக்கிங் போகப் பிடிக்காமல் வீட்டுக்குத் திரும்பினேன்.

கிச்சனில் காப்பி மணம். நான் செலுத்தப்பட்டவன் மாதிரி கிச்சனை நோக்கிச் சென்றேன். மனைவி ரெடியாக வைத்திருந்த காப்பியை எடுத்துத் தந்தாள்.

அந்த குளிருக்கும், அதிர்ச்சிக்கும் காப்பி மருந்து போல இருந்தது. இரண்டு மடக்குக் குடித்துவிட்டு மனைவியைப் பார்த்து விக்டரை வழியில் பார்த்தேன். அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசினேன் என்று சொன்னேன்.

அவள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவாள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது. அவள் இந்த நேரத்துல அவங்க அப்பா விக்டர் சீனியர் இறந்து போனதுக்கு துக்கம் விசாரிச்சீங்களா? இப்படி எடக்கு மடக்க ஏதானும் ஏங்க பண்ணறீங்க? என்று அலுத்துக் கொண்டாள்.

என் கையில் இருந்த காப்பி டம்ளர் கீழே விழுந்தது.



Sunday, April 12, 2015

கயிற்றரவம்.



இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது .... ‘எனக்குத் தெரியாது!’

நான் கல்யாணராமன். கல்யாண் என்று அதைச் சற்றுச் சுருக்கி ஸ்டைலாக வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் ஃபேஸ்புக் மோகம். கல்யாண் என்று அந்தப் பெயரைக் கேட்டாலே என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் பலரும் புருவம் உயர்த்தி “அவனா?”’ என்று ஒரு விதமான விஷமச் சிரிப்புச் சிரிப்பார்கள். உடனே நான் மோசம் என்றோ இல்லை டீசன்ட் ட்ரஸ் செஞ்ச காமாந்தகன் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

உண்மையில் நான் நல்லவன். என்ன கொஞ்சம் ஜொள்ளு பார்டி. டீசன்டா இங்கிலீஷ்ல சொல்லணும்னா flirt. ஆனா நான் ஆளப் பார்த்து தீர யோசனை செஞ்சு தான் flirt பண்ணுவேன். இதுல எவ்வளவோ எக்ஸ்பர்ட்னா என்னோட சக்ஸஸ் ரேட் அல்மோஸ்ட் தொண்ணூறு சதவிகிதம்.

அது இல்லாம, கவிதை கதைகள் எழுதுவது, வில்லங்கமான போஸ்டுகள் போடுவது, இடக்கு மடக்கானா கமெண்ட்கள் போடுவது என் பாணி. கதைகள்ல காம நெடி கொஞ்சம் தூக்கலா இருக்கும். இதனால் என் மேல் பலருக்கு வெறுப்பு உண்டு அதுவும் எனக்குத் தெரியும். ஆனா அதையும் மீறி எனக்கு பல நல்ல ஆண் பெண் நட்புகள் உண்டு,

ஆரம்பத்துல எனக்கு ஃபேஸ்புக்ல ஜாஸ்தி பிரெண்ட்ஸ் கிடையாது. நான் உண்டு என் டைம்லைன் உண்டுன்னு தான் இருந்தேன். அப்புறம் ஒரு நாள் என் ஸ்கூல் பிரெண்ட் ஒருத்தன யதேச்சையாச் சந்திச்சப்போ எங்க க்ளாஸ் பிரெண்ட்ஸ் ஒரு ஃபேஸ்புக்  க்ரூப் ஆரம்பிச்சு இருக்கறதாகவும் என்ன அதுல சேர்ந்துக்கவும் சொன்னான். சொன்னபடியே சேர்த்தும் விட்டான். அங்க கொஞ்ச நாள் என் பொழுது ஓடியது. அப்பத்தான் என் பிரெண்ட்ஸ்ல ஒருத்தன், எங்க கம்யூனிட்டியச் சேர்ந்தவன் எனக்கு ஒரு க்ரூப்ப அறிமுகம் செஞ்சான்.

அந்த க்ரூப்புல ஆயிரக் கணக்குல மெம்பர்கள். ஆனா அந்த க்ரூப்போட அட்மின் எங்கே என்று யாருக்கும் தெரியாது. அதனால் அங்கே மெம்பர்கள் அனைவரும் அட்மின்கள் தாம்! தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்னு சொல்ற மாதிரி.

நான் அந்தக் குழுவுல தான் அதிகம் நேரம் செலவு பண்ண ஆரம்பிச்சேன். நெறைய நண்பர்கள் கெடைச்சாங்க. பகைவர்களும் தான். என்னோட கதை கவிதை எல்லாம் அந்தக் குழுவுலதான் மொதல்ல அரங்கேறும். அந்தக் கதைகளுக்கு நான் எதிர் பார்த்தாப் போலவே நிறைய ரசிகர்கள்! இப்படிப் போயிட்டிருந்த என் ஃபேஸ்புக் வாழ்க்கையில திடீர்னு ஒரு திருப்பம்/

ஒரு சண்டே நான் லேட்டாத் தூங்கி எழுந்தேன். எழுந்ததுமே  ஒரு ஷார்ட் ஸ்டோரிக்கு நாட் ஒண்ணு மனசுல வந்துது. ஒரு சூப்பர் கதையா வரும்னு  தோன்றியது. மளமளன்னு மார்னிங் ட்யூட்டீஸ் எல்லாம் முடிச்சு கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து அதை எழுதினேன். ஒரு எட்டு பக்கத்துக்கு வர்ட் டாக்குமெண்ட்ல வந்துது. எழுதி முடிச்சு அதைப் படிச்சும்  பார்த்தேன். ரொம்ப திருப்தியாக இருந்தது.  சரி அதை என்னோட பேவரிட் க்ரூப்பில் போஸ்ட் பண்ணலாம்னு என்று ஃபேஸ்புக்கத் திறந்து என் க்ரூப்புல லாக் இன் செஞ்சேன்.  செஞ்ச உடனேயே பார்த்தால் நிறைய notifications. சுமார் ஐம்பது இருக்கும். பொறுமையாக ஒவ்வொண்ணையும் படிச்சேன். கடசில  ஒரு போஸ்டுக்குப் பலபேர் கமென்ட் போட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் என் பெயரை வேற tag செஞ்சிருந்தார்!

அப்படி அந்த போஸ்ட்டுல என்னதான் இருக்கு, போய் பார்க்கலாம்னு போனா எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ராம்னு பேருல ஒரு மெம்பெர் பதிந்திருந்த ஷார்ட் ஸ்டோரிக்கு வந்திருந்த  கமெண்ட்டுகள் தான் அதெல்லாம். ஆஹா ஓஹோ என்று நிறைய பேர் பாராட்டி இருந்தாங்க. என்னை அங்க tag செஞ்சிருன்தவர் “கல்யாண் ! இதைப் படியும் அய்யா! உமக்கு ரொம்ப பிடிக்கும். உம்மைப் போலவே எழுதியிருக்கார்” என்று சொல்லியிருந்தார்.

எனக்குள் ஒரு ஆர்வம். நானே கொஞ்சம் சுஜாதா சாயல்ல எழுதறத சில பேர் சொல்லுவாங்க. இவர் என்ன மாதிரி எழுதறாரா? சரிதான் சுஜாதாவோட பல நூறு பக்தர்கள்ல இவரும் ஒருவர் போல இருக்கு. படிச்சுதான் பார்பமேன்னு படிக்க ஆரம்பிச்சதும் திகைத்தேன்! நான் கொஞ்ச நேரம் முன்னால எழுதின அதே கதை!

அதே கதை மாத்திரம் இல்லாமல் அதே கதாபாத்திரங்கள் அதே பெயர்கள் அதே சம்பவங்கள்! உண்மைல நான் எழுதின கதையோட ஜெராக்ஸ் காபி! ஆனால்  அத போஸ்ட் செஞ்சிருந்தது ராம்ன்னு ஒருத்தர்! எப்படி? சரி அவர் யாருன்னு தெரிஞ்சுக்க உடனே அவர் profileக்கு போனேன். புது மெம்பெர் போல இருந்தது. ஃபேஸ்புக்ல ஐந்து மணி நேரம் முன்னர் தான் இணைந்திருந்தார். மத்தபடி அவர் profileல வேற உபயோகமான தகவல்கள் இல்லை. ஆனா ஒரு மொபைல் நம்பர் தந்திருந்தது. சரி அதில் காண்டாக்ட் செஞ்சு யாரு என்னன்னு விசாரிக்கலாம்னு அதை என் மொபைலில் லோட் செஞ்சுகிட்டேன். லோட் செஞ்ச பிறகு அவரைக் கூப்பிடலாம்னு நெனச்சபோது அங்கே வந்த என் மனைவி “ என்னங்க இது?  காலைலேயே கம்ப்யூட்டரா? இப்படி இருந்தா வீட்டு வேலைய யாரு பாக்கறது? கொஞ்சம் போய் இந்த லிஸ்ட்ல உள்ள ஐட்டம் வாங்கிகிட்டு வாங்க” என்று கையில் ஒரு லிஸ்டைக் கொடுத்தாள். சரியென்று வெளியே கிளம்பினேன். மறக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டேன்.

கடையில் சாமான் வாங்கிகொண்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது தான் அந்த ஐடியா வந்தது. அந்த நம்பருக்கு போன் செஞ்சேன். கொஞ்ச நேரம் வரைக்கும் ரிங் போனது. அப்புறம் மறுமுனையில் “யாரு?” ன்னு எனக்கு ரொம்ப பரிச்சயமான குரல் ஒண்ணு கேட்டுது . “நான் தான் கல்யாண்!. இன்னைக்கு நீங்க ஃபேஸ்புக்ல போஸ்ட் செஞ்சிருந்த கதையப் பத்திக் கேக்கத் தான் போன் செஞ்சேன். அந்தக் கதை நான் எழுதினது. அது உங்களுக்கு எப்படிக் கெடச்சது? நீங்க யாரு? இன்னைக்குத் தானே நானே யோசிச்சேன்?” என்று கேள்விகளாகக் கேட்டேன்.

“கல்யாண்! வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்” என்று மறுமுனை சொன்னது. “சரி அட்ரஸ் கொடுங்க.” ன்னு கேட்டேன். மீண்டும் ஒரு அதிர்ச்சி! அந்தத் தடியன் கொடுத்த அட்ரஸ் என்னோட அட்ரஸ்! ‘”ஸாயிராம்! என்ன சோதனை!” என்று ஓட்டமும் நடையுமாக  நான் என் வீட்டை நோக்கிச் சென்றேன்.

போற வழியில என்னோட பிரெண்ட் லிஸ்ட்ல இருக்கற இன்னொரு ஃபேஸ்புக்  நண்பரப் பார்த்தேன். “ஹல்லோ” ன்னு சொல்லி கையாட்டினேன். மனுஷனுக்கு என்ன பிரச்சனையோ, என் ஹலோவைக் கண்டும் காணாதது போல சென்று விட்டார். சரி அவரை அப்புறம் கவனிப்போம்னு வீட்ட்டுக்குப் போயி காலிங் பெல்ல அழுத்தினேன்.

கதவு திறந்ததும் இன்னொரு அதிர்ச்சி! திறந்த கதவுக்குப் பின்னால் என்னைப் போலவே தோற்றமளித்த இன்னொரு மனிதன்! என் தொண்டை வற்றி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கிட்டது. என் உடல் சில்லிட்டது. சாரப் பாம்பு போல சத்தமா மூச்சு வந்தது.

“ஏய்! யார் நீ?” நான் கத்தினேன்.

“கத்தாதீங்க கல்யாண்! எதுக்குக் கத்தறீங்க? நான் தான் ராம். என்கிட்டே தான் கொஞ்ச நேரம் முன்னால மொபைல்ல பேசினீங்க. வாங்க. உள்ள வாங்க, உட்கார்ந்து பேசலாம்.” என்று அவன் வீடு போல சொன்னான்! பாவி! என்ன தைரியம்!

அவன் சட்டைக் காலரைப் பிடிச்சு உலுக்கனும் போல ஒரு கோவம் வந்தது. அத அடக்கிக்கிட்டு , என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்ன்னு உள்ளே போனேன். போயி ஹாலில் இருந்த என் பேவரிட் நாற்காலியில் உட்காரப் போனபோது “அது என்னோட பேவரிட் சேர்” என்று தடுத்தான்.

எனக்கு திடீரென்று சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே கதை நினைவுக்கு வந்தது.
“டேய்! யார் நீ? சொல்லு!” என்று அதட்டினேன்.

“ இப்ப எதுக்குக் கத்தறீங்க? சொல்றேன்” என்று அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அமெரிக்காவின் பிரதான உளவுத் துரையின் தலைமை அலுவலகத்தில் தான் என்னுடைய இன்றைய குழப்பங்களுக்கு வித்திடப் பட்டதாம்.

ஃபேஸ்புக் மாதிரியான ஸோஷியல் மீடியாவில் கிடைக்கும் மெம்பர்களின் சொந்த தகவல்கள் ஏராளம். அவர்களுடைய  மிகவும் பர்சனல் விஷயத்தில் இருந்து அலுவலக விஷயம் வரை தகவல்களின் கஜானாவாக இந்தத் தளங்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்களை வைத்து எதுவும் உபயோகமாக செய்ய முடியுமா என்று ஒரு எண்ணம் அங்கே பணிபுரியும் விஞ்ஞானிகளுக்குத் தோன்றியதாம்.  அந்த எண்ணத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கும் முயற்சியாக ஒரு ஆராய்ச்சி உலகம் முழுவதும் பல நாடுகளில் பல இடங்களில் தொடங்கப்பட்டதாம். அந்த வகையில் இந்தியாவில் அந்த ஆராய்ச்சியைச் சென்னையின் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் சில மாணவர்கள் செய்து வருகிறார்களாம்.

அங்கே செய்யப்படும் பலவித ஆராய்ச்சிகளில் ஒன்று தான் அடிடிவ் மேனுஃபாக்ச்சரிங் (  Additive manufacturing) அல்லது நமக்குப் புரியும் பாஷையில்  3D பிரிண்டிங் .  அதாவது முப்பரிமாண அச்சிடல். 1980 களிலேயே இத்துறையில் ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டதாம். ஒருவித ரெசின் திரவத்தில் லேசர் ஒளிக் கற்றைகளை வெவ்வேறு அடர்த்தியில் பாய்ச்சும்போது லேசர் ஒளி பட்ட இடம் மட்டும் திடப்பொருளாக மாற்றம் அடையும் என்றும் அதனைக் கொண்டு எந்த முப்பரிமாண வடிவத்தையும் உருவாக்கிவிடலாமாம்.

இன்று இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் எங்கேயோ போய்விட்டனவாம் . பலவகை பிளாஸ்டிக், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு மிக நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருள்களை அடுக்கு அடுக்காக அச்சிட்டு உருவாக்கலாமாம் வேறு எந்த முறையிலும் உருவாக்க முடியாத பொருள்களைக்கூட இந்த முறையில் உருவாக்க இயலுமாம்.

இந்த அடிடிவ் மேனுஃபாக்ச்சரிங் முறையில் பல சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த போதுதான் , அவர்கள் ஒரு எதிர்பாராத அதிசயத்தை எதிர்கொண்டார்களாம்.

அது தான் Alternate ID Manufacturing (AIDM) அல்லது க்ளோனிங். ஒரு மெம்பெரின் இவ்வாறும் கிடைக்கப்பெறும் தகவல்களை ,அவர் போட்டோம் அவரது ஆடியோ ரிக்கார்டிங் உட்பட, கம்ப்யூட்டரில் பதிந்து 3d பிரிண்டிங் முறையை கையாண்டால் அவரைப் போலவே இன்னொரு மனிதரை உருவாக்க முடிந்ததாம். அச்சு அசல் அந்த ஒரிஜினல் ஐடி மனிதரைப் போலவே.

இப்படி உருவாக்கப்பட்ட க்ளோனிங் மனிதன், தனது ஒரிஜினலைப் போலவே உருவத்தில் இருப்பதோடு அல்லாமல், அவனைப் போலவே பேசுவது, நடப்பது, உடுத்துவது என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் இல்லாமல் செய்வானாம். இவ்வளவு ஏன், ஒரிஜினல் மனிதன் போலவே சிந்திக்கக் கூடச் செய்தானாம்.

இந்த AIDM தொழில் நுட்பத்தை உலக அரசுகள் வரை முறைப்படுத்தி மக்கள் நலனுக்காகப் பயன் படுத்த முடியுமாம். உதாரணத்துக்கு புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த தொழில் நுட்பம் மூலம் தங்களது க்ளோனை உருவாக்கி அதற்கு அந்த நோயை ட்ரான்ஸ்ஃபர் கூட செய்துவிட முடியுமாம். அப்புறம் அந்தக் க்ளோனை அழித்து விடலாமாம். அதற்கு உண்மையில் உயிர் இல்லாததால் அது கொலையும் ஆகாது.

இந்த ஆராய்ச்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அவர்களுக்கு டெஸ்ட் மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கு அவர்கள் ஃபேஸ்புக்கை உபயோகப் படுத்த முடிவு செய்தார்களாம். ஃபேஸ்புக்கிலிருந்து random basisல் செலக்ஷன் நடத்தினார்களாம். அந்த செலக்ஷனில் தான் என் ஐடியும் வந்ததாம்.

என் ஃபேஸ்புக் பக்கத்திலும், நான் மெம்பரை இருந்த குழுவில் எனது பதிவுகள், கமெண்ட்டுகள் முதலியவற்றையும், மேலும் நான் அப்லோட் செய்திருந்த புகைப்படங்கள், சவுண்ட் க்லௌடில் இருந்த நான் பாடிய என் பாடல்கள், என்னுடைய மற்ற தகவல்கள், என் நண்பர்கள், உறவினர்கள், நான் படித்தப் பள்ளி, கல்லூரி போன்ற விவரங்கள், என் மொபைல் நம்பர், அதன் மூலம் என் வாட்ஸ் அப், நண்பர்கள், என் வங்கி விவரம், என் இமெயில் என்று சகல விதமான தகவலையும் சேகரித்தார்களாம்.

அப்படிச் சேகரித்தத் தகவல்களைக் கொண்டு, AIDM மூலம் உருவாக்கப்பட்ட க்ளோன் மனிதன் தான் அந்த ராம்!”

ராம் இதெல்லாம் சொல்லிமுடித்து என்னைப் பார்த்தான். நான் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரிப்பது போல இருந்தேன். அவன் சொல்வதை எல்லாம் நம்புவதா வேண்டாமா என்ற கயிற்றரவு நிலை.

“சரி! நீ சொல்றதெல்லாம் உண்மைனே இருக்கட்டும். இங்க எதுக்கு வந்த? நீ இருக்க வேண்டிய இடம் அந்த ஆராய்ச்சிக்கூடம் அல்லவா?” என்று சம்பந்தமில்லாமல் நான் உளறினேன்.

அதற்கு ராம் சொன்ன பதில் என்னை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்க்யது. அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நேற்று ஒரு தீ விபத்து நிகழ்ந்ததாம். அந்த விபத்தில் ஆராய்ச்சிக் கூடத்தின் எல்லாப் பொருள்களும் எரிந்து விட்டதாம். இந்த க்ளோனிங் டாட்டா சேகரிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டிருந்த சர்வர் வரை ஒன்றுமே மிஞ்சவில்லையாம். எல்லாமே போன பிற்பாடு உருவாக்கப் பட்ட க்ளோனிங் மனிதர்களை என்ன செய்வது என்று அறியாமல் அந்த மாணவர்கள் வெளியே விட்டு விட்டார்களாம்.

அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு, நான் கனவு காண்கிறேனா என்று ஒரு சந்தேகம் வந்தது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இல்லை நிஜம் தான்.

“உன்ன எப்படி நம்பறது?”

“இப்ப வர்ற வழில நீ ஒரு ஃபேஸ்புக் பிரெண்ட பாத்தே இல்ல? அவர் உன்னப் பாத்து சிரிச்சாரா? சிரிச்சிருக்க மாட்டார். ஏன்னா அவர் உன் உண்மையான நண்பரோட க்ளோன். தன்னோட ஒரிஜினலத் தேடி அலஞ்சிக்கிட்டிருந்தார். சித்த நேரம் முன்னால இங்க வந்தார். நான் தான் அவருக்கு guide பண்ணி பெங்களூரு போகச் சொன்னேன். இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள அவர் உன் நண்பர replace செஞ்சிடுவார்.” சூரியன் மேற்கே மறையும் என்பது போல ராம் காஷுவலாச் சொன்னான்.

எனக்கு ரத்தம் உறைந்தது. தொண்டைக்குள் ஒரு பயப் பந்து உருவானது. அப்போது உள்ளேயிருந்து என் மனைவி வந்தாள். அவள் கையில் ஒரு காப்பி டம்ளர். “இந்தாங்க காப்பி” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் திகைத்தாள். “என்னங்க யாரு இது ஒங்கள மாதிரியே?” என்று கேட்டபடியே ராமின் பின்னால் போய் நின்று கொண்டாள்.

“அடியே முட்டாள்! நான்தாண்டி உன் புருஷன்” என்று கத்தினேன் அவள் மேலும் பயத்துடன் ராமின் முதுகோடு ஒன்றினாள்.

“டேய் நாயே! நடந்தது போகட்டும். இப்ப நீ இங்கேயிருந்து போய்டு” என்று நான் அவனைப் பார்த்துச் சொன்னதும் அவன் ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தான்.
“ போகனுமா? நானா? நீ தான் போகணும். ஐயாம் கல்யாண். ஷி இஸ் மை வைஃப். வீ லிவ் ஹியர். யூ ஹாவ் டு லீவ். அதர்வைஸ் வீ ஆர் காலிங் போலீஸ்” என்று சொல்லிக்கொண்டே என்னை அடிப்பது போல நெருங்கி வந்தான். நான் ஒரு இருட்டு சூழ மயங்கினேன்.

“என்னங்க! என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்சம் வெயில்ல போயிட்டு வந்தாக் கூட உடம்புக்கு ஆகலேனா எப்படி?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு கண் விழித்தேன். நான் என் வீட்டில் தான் இருந்தேன். என் அருகே என் மனைவி!
உடனே சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாம் பழைய படியே இருந்தது. குறிப்பாக ராம் அங்கே இல்லை.

அப்பாடி எல்லாம் ஒரு கனவு போல இருக்கு என்று நிம்மதியுடன் எழுந்து உட்கார்ந்தேன். “கொஞ்சம் காப்பி கொடேன்!” என்று மனைவியிடம் கேட்டு விட்டு என் ரூமுக்குச் சென்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன்.

ஃபேஸ்புக்கில் என் க்ரூப் பக்கம்தான் திறந்திருந்தது. ‘ராம் எழுதியதாக நான் கனவில் கண்ட அந்தக் கதையைத் தேடித் பார்த்தேன். கிடைக்கவில்லை. கனவுதான்  என்று ஊர்ஜிதமானது.

என்ன மடத்தனம் என்று என்னையே திட்டிக் கொண்டேன். அந்த சமயத்தில் மனைவி காப்பியை எடுத்து வந்து அருகில் வைத்தாள். சரி நான் எழுதிய கதையை போஸ்ட் என்று எண்ணி வேலையில் இறங்கினேன். கதையை போஸ்ட் செய்து விட்டு மனைவி தந்த காப்பியைக் குடித்தேன்.

அதற்குள் ஒரு ப்ரைவேட் மெசேஜ் வந்து விட்டது. என் அருமை நண்பர் (அந்த பெங்களூரு மனிதர் தான்!) ஒருவரிடமிருந்து.

“என்ன சார்! காலைல தான் இந்தக் கதையப் போட்டீங்க! திரும்பவும் போட்டுருக்கீங்களே! எனிவேஸ், சூப்பர் கதை! கீப் இட் அப்” என்றிருந்தது அந்த மெசேஜில்.

நான் திரும்பவும் மயங்கினேன்.