Monday, March 31, 2014

எது துரோகம்?

அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார்  பிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது என்று பார்த்தவர் எல்லாம் பாராட்டிய எங்கள் நட்பு முறிவின் சில்வர் ஜூபிலியும் கூட.

முதலில் அவனைப் பார்த்ததும் என் கண்கள் விரிந்தன. ஒரு சின்ன ஸ்மைல் பண்ண நினைத்தேன். ஆனால் உடனேயே என்னை அடக்கிக் கொண்டேன்.

“ இனிமேல நீயும் நானும் பிரெண்ட்ஸ் இல்ல. எங்கயாவாது பார்த்தாக்கூட நானும் ஸ்மைல் பண்ண மாட்டேன் நீயும் பண்ண வேண்டாம்”

சட்டென்றுத் திரும்பி காஃபி சர்வ் செய்து கொண்டிருந்த கவுன்டர் அருகில் சென்றேன். மிகவும் வினயத்துடன் அந்தக் கவுன்டர் பர்சன் என்னை நோக்கி நகர்த்திய கோப்பையை எடுத்துக்கொண்டு அங்குப் போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்தேன். பதினைந்து நிமிட ப்ரேக். காஃபியை ஒரு சிப் உறிஞ்சினேன்.

“டேய்! இப்படி உறிஞ்சிக் குடிச்சா எங்க வீட்டுல செம்ம அடிவிழும்” என்று ராமன் சொல்லிச் சிரித்தான்.

“ம்ம்” என்று முனகி விட்டு அவன் வாட்டர் பாட்டிலைத் திருப்பி கொடுத்தேன்.

“ஹாய்! ஐயாம் ராமன்! வாட்ஸ் யோர் நேம்?” என்று ஸ்நேகமாக அவன் நீட்டிய கை வியர்வையால் ஈரமாக இருந்தது. எனக்கு ஈரக் கைகள் பிடிக்காது. இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் கொடுத்த நன்றிக்காக பட்டும் படாமலும் பற்றிக்கொண்டேன்.

“வெங்கட்!”

“குட் நேம். என் சொந்த ஊர் விளாங்குடி. நான் இங்க மதுரைல பாட்டி வீட்டுல இருந்து படிக்கறேன். அப்பாவுக்கு விவசாயம். வீட்டுல அப்பா அம்மா ஒரு அண்ணன் நான். அண்ணன் அப்பாவுக்கு ஹெல்பா இருக்கான். படிப்பு ஏறல. நான் நல்லா படிக்கறேன்னு அப்பா என்ன இங்க தங்க வச்சிருக்கார்” என்று நான் கேட்காமலேயே விவரங்கள் சொன்ன ராமனை எனக்குப் பிடித்துப் போயிற்று. சொல்லிவிட்டு கண்களாலேயே “நீ?” என்றான்.
“ ஐ டோல்ட் யூ மை நேம். என் அப்பா பாங்குல வேலை பண்றார். சீனியர் மானேஜர். அம்மாவும் அதே பாங்குல வேற பிராஞ்சுல வொர்க் பண்றா. நான் ஒரே பையன்”

“க்ளாட் டு மீட் யூ டா” என்றபடி ஸ்நேகமாக தோளில் கை (ஈரக்கை!) போட்டான்.

தோளில் கை விழுந்ததும் துணுக்கென்றது எனக்கு. காஃபி கொட்டியிருக்கும். நல்ல வேளை தப்பித்தது.

“என்னடா வெங்கட்! பாத்தும் பாக்காத மாதிரி வந்து உக்காந்துட்டே? நல்லா இருக்கியா? அப்பா அம்மா சௌக்கியமா? கல்யாணம் ஆகியிருக்கும் இல்ல? வொய்ப் என்ன பண்றா? எத்தனக் குழந்தைகள்?” ராமன் மாறவே இல்லை. இத்தனை வருஷங்களில் அவன் ஈரக்கையும் மாறவில்லை. ஒரே மூச்சில் பல கேள்விகள் கேட்கும் பழக்கமும் மாறவில்லை.

“ம்ம்ம்”

“என்னடா ம்ம்ம்? இன்னுமா இந்தப் பழக்கம் போகல? வெவரமாச் சொல்லுடா.” என்றவன் பார்வை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தது.

“ சரி, சரி! செமினார் ஆரம்பிச்சுடும். நான் இதே ஹோட்டல்ல செகண்ட் ப்ளோர்ல தங்கியிருக்கேன். ரூம் 215. நீ எங்க தங்கியிருக்க? “

“நான் 226.”

“வெரி குட். சாயந்திரம் செமினார் முடிஞ்சதும் பேசலாம்.”

“சரிடா! ஸ்கூல் பெல் அடிச்சுடும். ஈவ்னிங் பேசலாம்” என்றேன் நான். மாலையில் பள்ளி விட்டதும் வெளியே வந்த எனக்கு ராமன் மறந்து போயிருந்தான். ஏதோ நினைவில் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்த என்னை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

“வெங்கட்! பேசலாம்ன்னு சொன்னியே! இப்ப கெளம்பிட்ட?”

“சாரி ராம்! மறந்துட்டேன்”

“பரவாயில்ல. எங்க பாட்டி வீடு பக்கத்துல தான் இருக்கு. வரியா? டிபன் பண்ணி வச்சிருப்பாங்க. சாப்ட்டுட்டு போ.”

மத்தியானம் சந்தித்தவனிடம் அவன் காட்டிய கரிசனம் எனக்குப் பிடித்துப் போயிற்று. சரி என்று அவனுடன் சென்றேன். அவன் பாட்டியும் அவனைப் போலவே மிகவும் அன்புடன் என்னை உபசரித்தாள். டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பியவனிடம், வாடா உன் வீடு வரையில் நானும் வர்றேன். உன் வீட்டையும் பார்த்தா மாதிரி இருக்கும். லீவு நாள்ல நீ என் வீட்டுக்கோ நான் உன் வீட்டுக்கோ வர வசதியா இருக்கும்” என்றான்.

இப்படி ஆரம்பித்த எங்க நட்பு காதலை விட வேகமாகவும் நெருக்கமாகவும் வளர்ந்தது. ஒன்றாகப் பிறந்து ஒன்றாக வளர்ந்தவர்களைப் போன்ற நண்பர்கள் ஆனோம். ஒன்று நான் அவன் வீட்டில் இருப்பேன். அல்லது அவன் என் வீட்டில் இருப்பான். அவன் பாட்டிக்கு நானும் செல்லம் ஆனேன். என் பெற்றோருக்கும் இவனை ரொம்பவும் பிடித்துப் போயிற்று.

ஸ்கூலில் கூட எங்கள் ப்ரெண்ட்ஷிப் ரொம்ப பிரபலமானது. ஆசிரியர்கள் கூட வியந்தார்கள். இப்படி இருந்த எங்கள் நட்பில் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. ஒரு ஞாயிறு அன்று காலை ராமன் கதவைத் தட்டினான்.

“ என்னடா, வெயிட் பண்ணு என்று சொன்னேனே! சரி பரவாயில்லை. நீ ரூம் நம்பர் சொன்னதால வசதியாப் போச்சு” என்று சொல்லியபடியே உள்ளே வந்தவன் என் ரூமில் முன்னால இருந்த சோபாவில் தொப்பென்று உட்கார்ந்தான்.

“என்னடா இருக்கு சாப்பிட? ட்ரிங்க்ஸ் சாப்பிடுவ இல்ல? நான் ஏற்கனவே ரூம் சர்வீசுக்குச் சொல்லிட்டேன். வந்துட்டே இருப்பாங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும் “சர்! ரூம் சர்வீஸ்!” என்று கதவு மெதுவாகத் தட்டப்படவும் சரியாக இருந்தது.


வந்தவன் எல்லாவற்றையும் ஒரு வித மரியாதையுடன் டேபிளில் எடுத்து வைத்து விட்டு செல்லும் வரையில் மெளனமாக இருந்த ராமன், அவன் சென்றதும் “சொல்லுடா” என்று சுமார் முப்பது வரிகளுக்கு முன்னர் கேட்ட கேள்விகளை மீண்டும் கேட்டான். பதில் சொல்லாமல் அவன் விடப்போவதில்லை என்று எனக்குத் தெரிந்தது.

“அப்பா அம்மா சௌக்கியம் தான். கோவைல இருக்காங்க. எஸ் ஐயம் மாரீட். வனிதா. ஷி இஸ் எ ஹௌஸ் வைப். ஒரே பையன். சென்னை IITல  படிக்கிறான். நான் சென்னைல செட்டில்ட். உன்னப் பத்தி சொல்லு”

“அப்பா தவறிட்டார். அம்மா இஸ் இன் அவர் வில்லேஜ் ஒன்லி. எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்கு கல்யாணம் ஆயாச்சு. சின்னவ படிச்சிக்கிட்டு இருக்கா. மனைவி சுந்தரி.”

ராமன் எனக்கும் தனக்குமாக இரண்டு பெக் தயார் செய்தான். ஒன்றை என் கையில் தந்து தன் கோப்பையால் லேசாக இடித்து சியர்ஸ் சொன்னான். ஒரு சிப் அருந்திவிட்டு, கீழே வைத்தான். டேபிளில் இருந்த சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“அண்ணா எப்படி இருக்கார்?” என்றேன் நான் ஈனஸ்வரத்தில்.

“ ஏன் அண்ணி எப்படி இருக்காங்கன்னு கேக்க மாட்டீங்களோ?” என்று சொல்லி சிகரெட்டை ஆழமாக இழுத்து ஒரு புகை வளையத்தை என் முகத்தின் மீது விட்டான்.

“ டேய்!  இந்த மாதிரி என் மூஞ்சுல பொகைய விடாதடா. எனக்குப் பிடிக்காது” என்ற என்னிடம் “கோச்சுக்கதடா வெங்கட்! இந்த மாதிரி என்ஜாய் பண்ணத் தானே உன்ன என் கிராமத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன்? இங்க ஒருத்தரும் வர மாட்டாங்க. இந்தா நீயும் ஒண்ணு அடி என்று சொல்லி ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.

ஆமாம். நாங்கள் இருவரும் ராமனின் கிராமத்தில் தான் இருந்தோம். எங்க காலாண்டு பரீட்சை விடுமுறைக்கு என்னைத் தன் கிராமத்துக்குக் கூட்டி வந்திருக்கிறான். என் பெற்றோரிடம் மன்றாடி பர்மிஷன் வாங்கி. காலையில் தான் வந்தோம். டிபன் சாப்பிட்டுவிட்டு தோட்டத்துக்குப் போகிறேன் என்று சொல்லி என்னையும் அழைத்து வந்து இங்கே தம்மடிக்கிறான்.

எதற்கும் இருக்கட்டும் என்று அவன் தந்த சிகரெட்டை பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து விட்ட போது தான் அவளைப் பார்த்தேன். புகையினூடே ஒரு தேவதை போல் தெரிந்தாள். சுமார் 25 வயதிருக்கும். கிராமிய பாணியில் கட்டியிருந்த புடவை அவள் அழகை மறைக்க முடியாது திணறியது. 

“ஐயோ! அண்ணி! என்று அலறிப் புடைத்து சிகரெட்டை விட்டெறிந்து எழுந்து நின்ற ராமனைப் பார்த்து அவள் சிரித்தாள். எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியாமல் புகையும் சிகரெட்டைக் கையிலேயே வைத்திருந்தேன்.

“என்ன மைத்துனரே! எப்பப் பெரியவர் ஆனீங்க? சொல்லவே இல்லை!” சிரித்தபடியே சொன்னவள் என்னைப் பார்த்து” ஒண்ணு தம்மு அடிக்கணும்; இல்லேன்னா தூக்கிப் போட்டுறனும். இப்படிக் கைல வச்சிருந்தா வெரல் சுட்டுரும்” என்றாள்.

“ அண்ணி! மன்னிச்சுக்குங்க அண்ணி! தெரியாத்தனமாப் பண்ணிட்டோம். யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க” என்று ராமன் கெஞ்சினான். “நீயும் சாரி சொல்லுடா” என்றான்.

நானும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு “ அண்ணி நல்லா இருக்காங்களா?” என்றேன்.

“தே காட் டைவர்ஸ்ட்” என்றான் சிக்கனமாக.

“மை காட்! டைவர்ஸுக்கு என்ன காரணம்?” என்ற என்னிடம் “ Infidelity” என்றான் சுருக்கமாக.

“சாரிடா” என்றேன் சம்பந்தமே இல்லாமல்.

“சாரி எல்லாம் வேணாம்பா. ஒடம்புக்கு ஆகாதில்ல?” என்ற அண்ணி “என் பேரு ரேவதி. நான் ராமன் அண்ணி.” என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“அண்ணி, என் பேரு வெங்கட்” என்றேன்.

“தெரியும். வாங்க ரெண்டு பேரும் கை கால் கழுவிக்கிட்டு. அப்பாவும் அண்ணாவும் வயக்காட்டிலேர்ந்து வந்துட்டாங்க” என்று சொல்லிப் போனாள்.

சிறிது நேரத்தில் நாங்கள் வீட்டை அடைந்தோம். ராமன் என்னைத் தன் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.  அவன் அண்ணன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான். அப்போது தான் நான் கவனித்தேன் ரேவதி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை.  எனக்கு வியர்த்தது.

“ உனக்கேண்டா இப்படி வேர்க்குது? ஆச்சர்யமா இருக்கா?” என்றவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

ஏற இறங்கப் பார்த்த அண்ணன் கண்கள் என்னை அளவெடுத்தன. எனக்கு ஒரு மாதிரி கூசியது. அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

அப்புறம் மதியம் சாப்பாடு. பிறகு அவர்கள் இருவரும் வயல் காட்டுக்குச் சென்று விட்டார்கள். நானும் ராமனும் கிராமத்தைச் சுற்றி வந்தோம்.

இரவும என்னை வீட்டினுள் படுக்கச் சொன்னார்கள். ராமன் அப்பாவும் அம்மாவும் வீட்டுத் திண்ணையில் படுத்தார்கள். ரேவதி தன் அறையில். நானும் ராமனும் அவன் அறையில்.

இப்படியே இரண்டு நாள் ஓடியது. எனக்குக் கிராமம் ரேவதி இருந்ததால் போரடிக்காமல் இருந்தது. வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டு  வீட்டிலேயே அவளுடன் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் போலத் தோன்றியது.

ரேவதி படித்தவள். நன்றாக பாடவும் தெரியுமாம். மிக முக்கியமாக நன்றாக ரம்மி விளையாடினாள்.  நாங்கள் மூவரும் உட்கார்ந்து விளையாடும்போது எனக்குப் பொழுது போவதே தெரியாது. அதுவும் சில சமயம் அவள் விளையாட்டாக என்னைச் செல்ல அடி அடித்து கார்டைப் போடும் தருணங்களுக்காக ஏங்க ஆரம்பித்தேன். ஆனால் இது ராமனுக்குத் தெரியாமல். ஆனால் ரேவத்திக்குத் தெரிந்து விட்டது என்பது இரண்டு நாளிலேயே புரிந்து விட்டது.  ஒரு நாள் மதியம் சாப்பிட வந்த அண்ணனும் ரேவதியும் பின்கட்டில் புழக்கடையில் பேசிக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக அங்கே வந்த எனக்கு “ வேணாங்க. அதெல்லாம் தப்பு.” என்ற ரேவதியின் வித்தியாசமான குரல் கேட்டது.  “ எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்லித் தானே செய்யுற? “ என்றார் அண்ணா. எனக்கு ஒன்றும் புரியவில்லை.


இரவும் ஆயிற்று. ராமனும் அவன் அண்ணாவும் வயல் காவலுக்குச் சென்றார்கள். என்னையும் ராமன் கூப்பிட்டான். ரேவதி தான் மறுத்தாள். “அவனுக்கு அதெல்லாம் பழக்கமிருக்காது மைத்துனரே! நீங்க போய் வாங்க”
எல்லாருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு நான் தூங்க முயற்சி செய்தேன். தூக்கம் வரவில்லை. திடீரென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் ரேவதி. கையில் பால் டம்ப்ளருடன்.

“இதக் குடுச்சிட்டுப் படுங்க” என்றவள் குளித்திருந்தாள். வேறு புடவை அணிந்திருந்தாள். தலை வாரியிருந்தாள். பூச் சூடியிருந்தாள். மெலிதாக பெண் வாசம் அடித்தாள்.

குடித்து விட்டு டம்ப்ளரை அவள் கையில் கொடுத்தபோது தொட்டு வாங்கினாள். “தூங்கிடாதீங்க” என்று சொல்லிச் சென்றாள்.

எனக்கு வியர்த்தது. கடவுளே! தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் அறைக் கதவு லேசாகத் திறந்தது. பூ வாசம். ஒரு மெலிதான கை என் மீது விழுந்தது. பெண் வாசம். ரேவதி.

“அண்ணி இது தப்பு!”

“தெரியும். அண்ணாவுக்கும் தெரியும். அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்சிடெண்டு ஆச்சு. புள்ள பொறக்காது அவர் மூலமா. ஊர் பேச்சு தாங்கல. தற்கொல பண்ணிக்கப் போயிட்டார். நான் தான் காப்பாத்தினேன். வேற கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னார். முடியாதுன்னுட்டேன். அதான்... தப்புதான். ஆனா அவரு மானம் காப்பாத்த.... ஒரு சிகிச்சை மாதிரிதான்....”

அதற்கப்புறம் நடந்தவை கழிவிரக்கமா காமமா? எனக்குப் புரியவில்லை.

மறுநாள் காலையில் புழக்கடையில் யாரும் இல்லை என்று நினைத்து அவள் கையைப் பிடித்து “ரேவதி” என்று கொஞ்சியபோது ராமன் பார்த்து விட்டான். அப்புறம் தான் நான் மேலே சொன்ன பிரகாரம் எங்கள் நட்பு முறிந்தது.

பின்னர் படிப்பு நிமித்தம் நான் IIT சேர்ந்தது, வேலைக்குப் போனது. கல்யாணம் பண்ணிக் கொண்டது, குழந்தை பெற்றுக்கொண்டது, இதோ இந்த செமினாருக்கு வந்தது என்று 25 வருஷம் ஓடிபோயாச்சு.

“என்ன நிகழ்காலத்துக்கு வந்திட்டியா?” ராமன் சிரித்தான்.

“என் மேல ரொம்ப கோவமா இருந்தியே, எப்படி கோவம் போச்சு?”

“ஆமாண்டா ரொம்ப வருஷம் உன் மேல கோவமாத் தான் இருந்தேன், உண்மை தெரியாம. அப்புறம் ஒரு நாள் திடீர்னு அப்பா என்ன அவசரமா கூப்பிட்டு அனுப்பிச்சாரு. வீட்டுக்குப் போனா, ஒரே களேபரம். அண்ணனும் அண்ணியும் பிரியப் போறாங்கன்னு. அண்ணனைத் தனியாகக் கூப்பிட்டு விசாரித்தேன். அண்ணிக்கு வேற யாரோடயோ தொடர்பாம். அது அண்ணனுக்குத் தெரிஞ்சு விவாக ரத்து வரைல போயிடித்து.

எனக்கு ரொம்ப அதிர்ச்சி ஆயிடித்து. அண்ணனைப் பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருந்தது. சொல்ல வேண்டாம்னு நெனைச்சேன். அப்புறம் என்னால அடக்க முடியாம உன் விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டேன். இதுனால நம்ம ரெண்டு பேர் பிரெண்ட்ஷிப்பும் முறிஞ்சதையும் சொன்னேன்.

விஷயத்தைக் கேட்ட அண்ணன் ரொம்ப நேரம் அமைதியா இருந்தார். அப்புறம் என்ன நேரா பாக்கத் தைரியம் இல்லாதமாதிரி தலையக் குனிஞ்சுக்கிட்டு “ அது நான் சொல்லித் தான் நடந்துச்சுடா” என்றார்.

“சத்தியமாச் சொல்றேண்டா வெங்கட்! அந்த நிமிஷத்துல இருந்து உன்மேல இருந்த கோவம் போயிருச்சுடா. அன்னியிலிருந்து உன்னத் தேடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லியபடி எழுந்தான்.

மெலிதான போதையில் தள்ளாடியபடி என்னருகில் வந்தான். என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

என்னுடைய நினைப்பென்னவோ அந்தச் சமயத்தில் ரேவதியைப் பற்றித்தான் இருந்தது.






Thursday, March 27, 2014

கருப்பசாமியின் தீர்ப்பு.

ஆனானப்பட்ட முனிவர்களேத் தடுமாறியிருக்கும் போது மருளாடியின் யோக்யதை என்ன? முத்தாச்சியின் இளமை முத்துக்கருப்பனைப் பித்தாக்கி வைத்திருந்தது. தனக்கு வயது அறுபதை நெருங்குகிறது என்பதோ முத்தாச்சி வெறும் இருவது வயதுப் பெண் என்பதோ மறந்து போகும் அளவுக்குப் பித்து.

முத்தாச்சிக்கு இந்த விஷயம் தெரியும். அவளுக்கு ஆண்களை மிக நன்றாகவே தெரியும். ஊர்க்கோவிலுக்குப் பூக்கட்டிவிடப்பட்ட பொன்னம்மாளின் மகளாச்சே! இது கூட தெரியவில்லை என்றால் அப்புறம் என்ன?

தன் வீட்டு வாசலில் பார்த்த செருப்புகள் பகலில் ஊருக்குள்ளே பெரிய மனுஷர்கள் காலில் பார்த்திருக்கிறாள். முதலில் பெருமையாக நினைத்தவள் நாளடைவில் தான் உண்மை உணர்ந்தாள். தாங்கள் சேறு என்று. சேற்றை மிதித்தவர்கள் ஆற்றில் கால் சுத்தம் செய்து கொண்டார்கள். இரவில் அவர்கள் முகத்தை மறைத்த துண்டு, பகலில் அவர்கள் தோளில் கம்பீரமாக இருக்கும்.

எத்தனையோ இரவுகள் பொன்னம்மாவின் அறையிலிருந்து வரும் கிசுகிசுப்பான குரல்களாலும் களுக்கென்ற சிரிப்புகளாலும் முனகல்களாலும் அவள் தூக்கம் தொலைத்திருக்கிறாள். அவளுக்கு அந்த மாதிரி வாழ்க்கையின் மீது பிடிப்பு என்றெல்லாம் இல்லை. ஆனால் வேறு என்ன செய்து பிழைப்பது என்று தெரியாததால் இந்த வாழ்க்கையை ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பொருத்தவரை இந்த வாழ்க்கை ஒரு இக்கட்டு. அசௌகரியம். ஆண்களால் ஆளப்படும் உலகில் தன் போன்ற பெண்களின் நிலை என்ன என்பது அவளுக்குத் தெரியும்.  தீனருக்கு யாருண்டு? சாமி கூட வசதியானவங்க பக்கம் தான் இருந்தது.

இப்படி ஒரு கட்டாய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் தான் மருளாடியின் இன்னொரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது. முத்துக்கருப்பன் மற்றவர்களைப் போல அடிக்கடி வராவிட்டாலும் மாதம் ஒரு முறையாவது பொன்னம்மாளைத் தேடி வருவான். மற்றவர்கள் மாதிரி உடனே ரூமுக்குச் செல்ல மாட்டான். முத்தாச்சியுடன் விளையாடுவான். அவளுக்கு டவுன் பக்கம் போயிருந்தபோது வாங்கிய சின்னச்சின்ன பொம்மைகள் பரிசாகத் தருவான். கதைகள் சொல்லுவான். அவளைச் சிரிக்க வைப்பான். மொத்தத்தில் முத்தாச்சி பார்த்திராத ஒரு தகப்பனாகத் தான் இருந்தான்.

இதனால் பொன்னம்மாளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். எல்லாரையும் ‘ஏய்யா’ என்று கூப்பிடுபவள் அவனை மட்டும் ‘மாமா’ என்று தான் கூப்பிடுவாள். சோறு சமைத்துப் போடுவாள்.

இப்படிப்போய் கொண்டிருந்த ஒரு நாளில் முத்தாச்சி பூப்பெய்தினாள். பொன்னம்மாள் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு கலவரம். ஊர் மருத்துவச்சி மட்டும் தான் வந்தாள். வேறு யாரும் வரவில்லை.

அணிந்து கொண்ட ஆடை மாறியது முத்தாச்சிக்கு. ஊருக்குள் ஆண்கள் பார்க்கும் பார்வை மாறியது. ஊரின் ஒரே பள்ளிக்கூடத்தின் வாத்தியார் கூடத் தொட்டு தொட்டுப் பேசினார். இதைப் பொன்னாம்மாளிடம் சொன்னபோது அவள் வெறுமனே சிரித்தது இன்றளவும் இவள் சுமக்கும் ஒரு இரகசிய சோகம்.

அப்போது ஒரு நாள் மருளாடி வந்தான். கையில் ஒரு பெரிய பை கொண்டு வந்தான். பூ, பழங்கள், இனிப்புகள், வளையல், கிளிப் போன்ற சமாச்சாரங்கள் மற்றும் இரண்டு செட் பாவாடை தாவணி ரவிக்கைத் துணி.

‘மாமா கால்ல வுளுந்து வாங்கிக்க” என்ற தாயின் பேச்சைத் தட்டாமல் முத்தாச்சி மருளாடி காலில் விழுந்தாள். ‘இதெல்லாம் என்னத்துக்குத் தாயி” என்று சொல்லிக்கொண்டே அவளை தோள் பிடித்து எழுப்பிய முத்துகருப்பனின் தொடுதலில் ஒரு மாற்றம் உணர்ந்தாள். பள்ளிக்கூட வாத்தியார் நினைப்பு வந்தது. ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

மருளாடி அன்று சீக்கிரமே திரும்பி விட்டான். அதற்கப்புறம் அவன் அடிக்கடி வர ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் இவளுக்கு ஏதாவது வாங்கி வந்தான். தொட்டுத் தொட்டுப் பேசினான். முத்தாச்சி பொறுத்துப் போனாள். பயம் காரணம் அல்ல. பொன்னம்மாள் நம்ப மாட்டாள் என்பது தான் காரணம்.

ஒரு நாள் மருளாடி வந்தபோது பொன்னம்மாள் காய்ச்சலில் படுத்திருந்தாள்.” ரொம்ப ஆசையாக வந்தேன்” என்று பொருமிய அவனைப் பாத்து ‘ ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்குங்க மாமா” என்றாள் பொன்னம்மாள்.

கொஞ்ச நேரம் அவளுடன் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தான். முத்தாச்சி தன் ரூமில் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று பொன்னம்மாளின் குரல் ஓங்கி ஒலித்தது. “ போடா வெளில நாயே! பொறுக்கி பொறுக்கி! ஒன் மலந்துன்னுற புத்திய ஏங்கிட்ட காட்டுறியா? சங்கறுத்துபுடுவேன் படவா”

பயந்து போன முத்தாச்சி என்னவென்று பார்க்க வெளியே வந்தாள். மருளாடி பொன்னம்மாள் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் முகம் இறுகியிருந்தது. இவளைப் பார்த்தவன் “வச்சுகறேண்டி ஒங்கள” என்று கறுவியபடியே வெளியே சென்றான்.

அம்மா ரூமுக்குள் நுழைந்த முத்தாச்சி அதிர்ந்தாள். பொன்னம்மாள் கிட்டத் தட்ட ஒரு கோபம் கொப்பளிக்க நிற்கும் தேவதை போலிருந்தாள். “என்னம்மா ஆச்சு” என்றவளிடம் “ ஒனக்குப் பூக்கட்டிவிடச் சொல்லறாண்டி அந்த நாயி!” என்றாள்.

முத்தாச்சிக்கு தன் அம்மாவைத் திடீரென்று ரொம்ப பிடித்துப் போயிற்று. ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள்.

அப்படியே ஒரு பத்து நிமிஷம் மெய்மறந்து நின்றிருந்தார்கள். பிறகு பொன்னம்மாள் “நாம வேற ஊருக்குப் போயிடலாண்டாச் செல்லம்” என்றாள்.

முத்தாச்சிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் அது நீடிக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் என்ன என்னமோ நடந்து விட்டது. அப்போது தான் முத்தாச்சிக்குத் தெரிந்தது சாமி மட்டுமில்லை போலீசும் கூட வசதியானவங்க பக்கம்ன்னு.

ஊர்க்கோவில் நகைகள் திருடு போய்விட்டதாக மறுநாள் காலை செய்தி கிடைத்தப் போது எல்லாரையும் போல இவர்களும் அதிர்ந்தார்கள். யார் எடுத்திருப்பார்கள்? வெளியூர் திருடன் என்று சிலர் சொன்னார்கள். இல்லை உள்ளூர்தான் என்று சிலர் சொன்னார்கள். சரி அம்மனிடமே வாக்குக் கேட்கலாம் என்று ஒரு மனதாக முடிவாயிற்று.

வழக்கமான கோழி பலி, உடுக்கை, தப்பட்டை சத்தம் என்று நடந்த பூஜையில் எதிர்பார்த்தபடி முத்துக்கருப்பனுக்கு மருள் வந்தது.

ஊர் பிரமுகர், “ஆத்தா! இந்த அபவாதம் நடந்ததுக்கு மன்னிச்சுக்கடி. இதுக்கும் மேல நகை செஞ்சு போடறோம். ஆனா இத யாரு செஞ்சதுன்னு மட்டும் சொல்லிப்போடு ஆத்தா” என்று கை கூப்பி வேண்டினார்.

“என் கோவில சுத்தம் பண்ண வேண்டியவ என் நகைய சுத்தம் பண்ணிட்டா” என்றாள் முத்துக் கருப்பன் வாயில் வந்த ஆத்தா.

எல்லாரும் அதிர்ந்தார்கள். அப்பறம் போலீசுக்கு சொல்லி அனுப்பி அவர்களும் வந்து சேர்ந்தார்கள். பொன்னம்மாள் வீட்டைச் சோதனைப் போட்டபோது நகைகள் கிடைத்தன.

அந்த அதிர்ச்சியில் பொன்னம்மாள் மாரடைப்பில் இறந்து போனாள். மருத்துவச்சி உதவியுடன் முத்தாச்சி இறுதிச் சடங்குகள் செய்து முடித்தாள்.

பிறகு ஒரு நாள் ஊர்க் கூட்டம் கூடியது. செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக முத்தாச்சிக்கு பூக்கட்டிவிட முடிவாயிற்று.  மருத்துவச்சி கண்ணில் மட்டும் ஈரம். மற்ற ஊர்ப் பெரியவர்கள் கண்ணில் பிரகாசம்.

வரும் பௌர்ணமி அன்று நடக்கும் பூசையின் போது பூக்கட்டுச் சடங்கு நடத்த முடிவாயிற்று. அதற்கு முன்தினம் இரவு தனியாகச் சென்று கருப்பசாமிக்கு முத்தாச்சி கோழி பலி கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.

முத்தாச்சி மரத்துப் போயிருந்தாள். எதற்கும் தயாராக இருந்தாள். மறுநாள் பௌர்ணமி. இன்று இரவு தான் கருப்பசாமிக்கு பலி. “ கருப்பா! இல்லாத ஒனக்கு எதுக்குய்யா பலி” என்று முத்தாச்சி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

கதவு தட்டப்பட்டது. சரி முத்துக்கருப்பன் தான் வந்து விட்டான் என்று கதவைத் திறக்கப் போனாள்.

மறுநாள்.

காலையிலேயே ஊருக்குள் பரபரப்பு. கருப்பசாமி இருந்த மரத்துகிட்ட மருளாடி செத்துபோயிக் கிடந்தான். கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. கருப்பசாமி அருவால சரியாத் தொடைக்காமல் விட்டிருந்த ரத்தத் துளியை யாரும் கவனிக்கவில்லை.

முத்தாச்சி காணாமல் போயிருந்தாள். அவள் வீட்டு வாசலில் குதிரையின் காலடித் தடங்கள் கண்டதாக ஊருக்குள் பேசிகொண்டார்கள்.





Tuesday, March 18, 2014

விமலா - ஆனால் வயது அதிகம்.


திருவல்லிக்கேணியில் இருவது வருஷம் முன்னால் நான் காதலித்த   விமலாவைப்  புதுதில்லி விமான நிலையத்தில் அவள் புருஷனோடு சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.

நான் காதலித்த விமலா  என்று சொன்னதும் ஏதோ நாங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்து விடாதீர்கள். என்னது ஒருதலை ராகம்.

விமலா  நல்ல அழகி. நல்ல கலர். உயரம். பாவாடை தாவணியை செக்சியாகக் கட்டத் தெரிந்த ஒரே ஒருவள் அவள்தான். அவளிடம் பேசும் ஆண்கள் தலை குனிந்து பேசுவதற்கு அவள் லோ ஹிப் ஒரு முக்கிய காரணம்.

எனக்கு எதிர் வீடு தான். நல்ல பழக்கம். என்னை ‘கண்ணா’ என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவாள். என் பெயரை ரசித்து சுவைத்து அவள் சொல்வதைக் கேட்கும்போது உடம்பை என்னமோ பண்ணும்.

நாங்கள் இரண்டும் குடும்பங்களும் ஒன்றாக சினிமாவுக்கு போவோம் மாதம் ஒரு முறை. அந்த சமயங்களில் எனக்கு அவள் அருகில் உட்கார சான்ஸ் கிடைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு இருட்டான சான்ஸின் போது முதல் தடவை அவள் கைகளைத் தொட்டேன். முதலில் ஒன்றும் சொல்லாமல் இருந்தவள் பின்னர் ‘த்சூ’ என்று கையைத் தட்டி விட்டாள். அதற்கப்புறம் பார்த்த படங்களின்போது என்னருகில் உட்காருவதைத் தவிர்த்து விட்டாள்.

அப்புறமும் பல சமயங்களில் புதிராகவே இருந்தாள். அவளுக்கு என்னைப் பிடித்ததா இல்லையா என்றே புரியவில்லை. சரி என்ன ஆனாலும் அவளைக் கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றோம். நரசிம்மர் சன்னதியில் தரிசனம் பண்ணிக்கொண்டு அப்படியே வலப்பக்கம் வந்து பிராகாரத்தில் உட்கார்ந்தோம். எதிரே குழலூதும் கிருஷ்ணன் சிலை. நல்ல ரொமாண்டிக் சூழ்நிலை தான்.

எது எதையோ பேச ஆரம்பித்து கடைசியில் ஒரு மாதிரி அவளிடம் கேட்டே விட்டேன்.

ஒரு சிறிய அமைதி. எனக்கு பயமாகப் போயிற்று.

“விமலா ! எதுவா இருந்தாலும் சொல்லு. உன் பதில் என்னவா இருந்தாலும் நாம நண்பர்கள்தான்”

“கண்ணா! (எப்போதும் போல உடம்பை என்னமோ செய்தது!) நீ ஒரு முட்டாள். உன் வயசென்ன என் வயசென்ன? நான் உன்ன விட நாலு வயசு பெரியவ. இதெல்லாம் நடக்காத ஒண்ணு. போகாத ஊருக்கு வழி தேடாதே”

“வயசு ஒரு விஷயமா? நான் உன்ன விட ஹைட்டா இருக்கேன். வெயிட்டும் ஜாஸ்தி!”

“ஒளறாதே! சரி, வா வீட்டுக்குப் போகலாம், நேரமாச்சு” என்று எழுந்தவள் அதற்கப்புறம் என்னுடன் பேசுவதையே தவிர்த்தாள். நாளடைவில் நின்றே போச்சு.

அதற்கப்புறம் படிப்பு வேலை கல்யாணம் என்று பிரிந்தவர் இன்று தற்செயலாக தில்லி விமான நிலையத்தில்!

“ஹாய்!  நான் விமலா ! ஞாபகம் இருக்கா?”

“ம்ம்ம். எப்படி இருக்கே? நான் என் மனைவிய ரிசீவ் பண்ண வந்திருக்கேன். நாங்க தில்லில தான் இருக்கோம்.  ஜி கே II.”

“நாங்க குர்கான்வுல இருக்கோம். எங்க சன்ன ரிசீவ் பண்ண வந்திருக்கோம்” என்று சொல்லி “ஏங்க, இங்க வாங்களேன். மீட் மை சைல்ட்ஹுட்  ஃரெண்ட்  கண்ணன்” என்று தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஹாய்” என்று கை குடுத்தவனிடம் “இவனுக்கு மட்டும் ஒரு நாலு வயசு கூட இருந்திருந்தா இவனத் தான் கல்யாணம் செஞ்சிருப்பேன்” என்று சொல்லி விமலா  சிரித்தாள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என் முகம் போன போக்கைக் கவனித்த அவள் கணவன் “டேக் இட் ஈஸி பாஸ்!” என்றான். பின்னர் என் அருகில் வந்து “கொஞ்சம் பலமா முயற்சி பண்ணியிருந்தியானா சக்சஸ் ஆயிருக்கும்” என்றான்.

எனக்குப் புரியவில்லை.

அதற்குள் பிரயாணிகள் வெளியே வரத் துவங்கியிருந்தனர். என் மனைவியும் அவர்கள் மகனும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியே வந்தனர்.

அவர்கள் இது தான் எங்கள் மகன் என்று அந்த இளைஞனை அறிமுகம் செய்தார்கள்.

‘ஹாய் அங்கிள்! ஐ யாம் கண்ணன்” என்றான் அவன்.

எனக்குப் புரிந்தது.

"என்ன கண்ணா! உன் wife-a எங்களுக்கு introduce செஞ்சு வக்க மாட்டியா?" என்று விமலா கேட்டாள். நான் எந்த ஒரு பதிலும் சொல்லுவதற்கு முன்னரே என் மனைவி தானே அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

"Hi! Pleased to meet  you. I am Vimala".

Wednesday, March 12, 2014

சுமை


சாருலதாவுக்கு அப்பா அம்மா மேல ரொம்ப கோவம்.

அது என்ன எப்போ பார்த்தாலும் கல்யாணப் பேச்சு? அதுவும் வீட்டுக்கு யாரும் வந்துவிட்டால் அவங்களுக்குக் கொண்டாட்டம்தான். சப்போர்ட்டுக்கு ஆள் கிடைச்சுடுமே!

நகரின் பிரபல மருத்துவமனையில் ஒரு டாக்டர் அவள். எலும்பு முறிவு ஸ்பெஷலிஸ்ட். அந்த எண்ணம் துளி கூட இல்லாமல் தன் பெற்றோர் தன்னை இன்னும் சின்னக்குழந்தை போல நடத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

காலைல கூட இந்தப் பேச்சு. போன மாசம் நடந்த சொந்தக்காரர் கல்யாணத்தில் இவளைப் பார்த்த ஒரு பையனுக்கு இவளை ரொம்ப பிடித்துவிட்டதாம். கல்யாணம் பண்ணினால் இவளைத் தான் பண்ணுவேன் என்று பிடிவாதமாம். அவன் அப்பா அம்மா மூலம் செய்தி வந்தது,

நல்ல வசதியான குடும்பம். பையனும் பார்க்க நல்ல களை. கலர். இவள் பெற்றோருக்கு ரொம்பவே பிடித்திப் போயிற்று. ஒரு வாரமாகவே இவளை நச்சரித்து வருகின்றனர். இவளும் பிடி கொடுக்காமல் நழுவி வந்தாள்.
இன்று காலையில் மாட்டிக்கொண்டாள்.

கல்யாணப்பேச்சைக் கேட்டதும் சாரு கடுப்பானாள். அவள் முகம் போன விதம் கண்டு அவள் அம்மா ரொம்ப கோவமாக “ இப்ப என்னதான் சொல்ற நீ? கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா இல்லையா? இல்லை உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா? இருந்த சொல்லிரு. நல்லா இடமா இருந்தா அதையே முடிச்சிரலாம்” என்றாள்.

“ அப்படீல்லாம் ஒண்ணும் இல்லேமா! எனக்கு கல்யாணம் வேண்டாம். அவ்ளோதான்”

“அதுதான் ஏன்னு கேக்கறேன்?” என்ற அம்மாவிடம் சாரு பொரிந்து தள்ளி விட்டாள்.

“ என்ன எப்போப் பாரு கல்யாணம் கல்யாணம்? அதுனால என்ன யூஸ்? ஆணுக்குப் பொண்ண அடிமையாக்கறதத் தவிர அது என்ன சாதிக்கும்? போறாததுக்கு குழந்தை பெத்துக்கற அவஸ்தை வேற! இந்த கடவுள் கூட ஆம்பிளைங்க பக்கம். சுகமெல்லாம் அவங்களுக்கு. கஷ்டமெல்லாம் நமக்கு. ரொம்ப பார்ஷியல். இந்த சுமை சுமக்கற வேலையெல்லாம் எனக்கு செட் ஆகாது”

அவள் பெற்றோர் என்ன பதில் சொல்வதென்று தெரியாது திகைத்து நின்றனர்.

கோவத்தில் காலை டிபன் கூடச் சாப்பிடமால் ஹாச்பிடலுக்குத் கிளம்பிச் சென்றாள். போய்ச் சேர்ந்த உடனேயே ஒரு எமர்ஜென்சி கேஸ்.

கார் பார்க்கிங் பில்லர் விழுந்ததில் தோளில் பலமாக அடிபட்டுக் கொண்ட ஒரு இளைஞன், மற்றும் அதே விபத்தில் அடிபட்டுக்கொண்ட ஒரு வயதானவர்.

வயதானவருக்கு பெரிய அடியொன்றும் இல்லை. சின்ன காயம் தான். ஆனால் அந்த இளைஞனுக்கு நல்ல அடி. அந்தப் பில்லரின் முழு பாரமும் அவன் தோளில் விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் ஒரு இடத்தில் அதிக முறிவு. கட்டுப்போட்டாலும் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும் கூடி வருவதற்கு. அவனுக்கு எல்லா சிகிச்சையும் முடித்தாள்.

பின்னர் தன் வழக்கமான ரவுண்ட்சுக்கு போனாள். சுமார் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து அவனைப் பார்க்கப் போனாள். மயக்கமருந்திலிருந்து சற்று விடுபட்டிருந்தான். இவளைப் பார்த்ததும் சிநேகமாக சிரித்தான்.

“என்ன சார்! ஹீரோவாமே நீங்க? பெரியவர் சொன்னார். அவர் மேல விழ இருந்த பில்லர நீங்க தாங்கிக்கிட்டீங்களாமே! ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு” என்றாள்.

“ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை டாக்டர். அவர் வயசானவர். அந்த வெயிட் அவரால நிச்சயமா தாங்கியிருக்க முடியாது. என்னால முடியும். யாரால பாரம் தாங்க முடியுமோ, யாருக்கு அந்த உடல் அல்லது மன வலிமை இருக்குதோ, அவங்க பாரத்தத் தாங்கறது தானே முறை? அதுதானே இயற்கை நியதி?” என்றவனின் சொற்கள் அவளுக்கு எதையோ புரிய வைத்தது.

“எனக்கு கல்யாணத்துக்குச் சம்மதம்” என்று மகளிடமிருந்து போன் வந்ததிலிருந்து சாருவின் அப்பா அம்மாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.



Monday, March 10, 2014

பெண் மனம்


அனுமன்

தேடித் தேடி அலுத்து விட்டது அவனுக்கு.

அப்படி எங்கே தான் ஒளித்து வைத்திருப்பான்? கிஷ்கிந்தையை விட விசாலாமான நாடுதான். இல்லை எனவில்லை. இருந்தாலும் தனக்குப் ப்ரியமான ஒன்றை தன் பார்வையில் அல்லவா மனிதன் வைப்பான்? தனது எண்ண ஓட்டம் அனுமனுக்கேச் சிரிப்பைத் தந்தது. ராவணன் மனிதனாக இருந்தால் அல்லவா அப்படிச் செய்வான்? அவனோ அரக்கன்! அவன் சிந்தனை எவ்வாறு ஓடும் என்று வானரனான தனக்கு எவ்வாறு பிடிபடும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

ராமகாரியமாக புறப்பட்டதால் சரியான உணவு இல்லை உறக்கம் இல்லை. காரியம் கூடி வந்திருந்தால் இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரிந்திருக்காது. ஆனால் இதுவரையில் கை கூடவில்லை.

மனதில் ஒரு ஆயாசம். திரும்பிப் போகவும் முடியாது. அரச ஆணை நிறைவேற்றப்படவில்லை என்றால் தண்டனை. ஆனால் அதெற்கெல்லாம் அவன் கலங்கவில்லை. எப்படியும் கண்டுபிடித்து வருவார்கள் என்று ஒரு மெலிதான நம்பிக்கை ஒளியை கண்களில் வைத்துக் கொண்டிருந்த ராமன் முகம் அவனை கலங்கடித்தது. ஒரு மானுடனால் தான் இப்படிச் செலுத்தப்படுவோம் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. அவனது ஆளுமைக்குக் கீழ் தான் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.

அப்படி என்ன இருக்கிறது அவனிடம்? அரசு இழந்து கானகங்களில் அலைந்து கொண்டிருந்தவன் இன்று தன் அரசியையும் இழந்திருக்கிறான். 'பாவம்' என்று பரிதாபப் படவேண்டிய ஒருவனிடம் அடிமை கொள்ளும் அளவுக்கு எப்படி இந்த ஆளுமை வந்தது?

இலங்கையின் ஒரு இடம் கூட மீதமில்லை. இராவணனின் அந்தப்புரத்தைக் கூட பார்த்தாகி விட்டது. தோல்வியுடன் திரும்புவதைக் காட்டிலும் எங்காவது கண் காணாத இடத்துக்குச் சென்றுவிட்டால் என்ன என்று தோன்றியது. ஒன்று மனிதனாக இருக்க வேண்டும். இல்லை குரங்காக இருக்க வேண்டும். இப்படி வானரனாக இருப்பது கடினம் என்று நினைத்தான். பரிணாம வளர்ச்சியில் இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த நிலை ஒரு தண்டனை தான்.

ஹே ராமா! ஹே சீதா! என்று உரக்கத் குரலில் புலம்பினான்.

இப்படி பலவேறு சிந்தனைகளின் பிடியில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த அனுமனை  ஒரு உருவம் கவனித்துக் கொண்டிருந்தது பாவம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இராவணன் அந்தப்புரத்தை அவன் ஆராயச் சென்ற போதுதான் அந்த உருவம் அவனை முதலில் பார்த்தது. யாரிந்த வானரன் என்று ஆச்சர்யத்துடன் அவனைப் பின் தொடர்ந்தது. அவன் ஹே ராமா! ஹே சீதா! என்று சொன்னதும் தான் அதற்கு ஒருவாறு புரிந்தது.

மண்டோதரி

வானரன் வாயில் இருந்த வந்த சொற்கள் அவள்  காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

சீதையைத் தேடி ஒருத்தன் வந்திருக்கிறானா? அப்படியென்றால் தனக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று நினைத்தாள். அவள் அப்படி நினைத்ததிலும் தவறு ஒன்றுமில்லை.

சீதையைக் கடத்திக் கொண்டு வந்த நாளாக இராவணன் இவளிடம் பாராமுகமாகவே இருக்கிறான். எப்பொழுதும் வாயில் சீதை பெயர் தான்!

இவளுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்? மானுடப் பெண். ஒல்லியான திரேகம். சோகை வந்தாற்போல வெளுப்பு. வாராமல் விட்டதால் சிடுக்கு விழுந்த கேசம். என்ன, முகம் கொஞ்சம் லட்சணமாக இருக்கிறது. தான் மட்டும் அழகில்லையா என்ன? இராவணனின் தீராப்பசியைத் தீர்த்து வைக்கும் இளமை பொங்கி வழியும் உடல் வாகு. கிட்டத் தட்ட ஒரு அடிமை போல எந்நேரமும் அவன் கட்டளைக்குக் காத்திருக்கும் ஒரு மனோபாவம்.

அதனால் தானோ என்னமோ அவனுக்கு இவளிடம் லயிக்கவில்லை. விரல் சொடுக்கினால் வரும் ஒரு நாய் என்று நினைத்துவிட்டானோ என்னமோ? ஆனால் சீதா? அந்த அல்ப மனுஷி இவனுக்குப் பணியாததால் இவன் ஒரு அடிமை போல அங்கு போய் போய் நிற்கிறான். அதில் இராவணனுக்கு வருத்தமோ இல்லையோ தெரியாது இவளுக்கு நிறைய வருத்தம் உண்டு.

மாதம் ஒன்றாயிற்று. சீதையைத் தேடி எவரும் வரவுமில்லை. இராவணன் தன் முயற்ச்சியை விடவும் இல்லை. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பது போல் எங்கே  பட்டத்து ராணி பதவிக்கு ஆபத்து நேருமோ என்று பயந்தாள்.

இந்த நிலையில் தான் இன்று இந்த வானரன் சீதையைத் தேடி வந்திருக்கிறான்.  இவனுக்குச் சீதையிருக்குமிடம் தெரியப்படுத்தினால் இவன் சீதைக்கு சகாயம் செய்வான். ஒரு வேளை இங்கிருந்து கூட்டிக்கொண்டும் போகலாம். எது எப்படி இருந்தாலும் தனக்கு இறுதியில் நன்மை தான் பயக்கும் என்று எண்ணினாள்.

நேருக்கு நேர்

திடீரென்று நிழல் மறைவிலிருந்து வெளிப்பட்ட உருவத்தைக் கண்டு அனுமன் திகைத்தான். “அஞ்சாதே! நான் மண்டோதரி. இலங்கேஸ்வரனின் ராணி. உனக்கு உதவ வந்திருக்கிறேன்” என்றது அது.

“இராவணன் ராணியா? உதவியா? எனக்கா?”

“ சரி எனக்குத் தான் என்று வைத்துக்கொள்ளேன். உனக்கு வந்த காரியம் முடிய வேண்டுமா இல்லையா?”

“ஆமாம் ஆமாம்”

“எனில் என்னுடன் வா. நான் காட்டுகிறேன் சீதை இருக்குமிடம்”

அனுமனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. மெளனமாக மண்டோதரியைப் பின்தொடர்ந்தான்.