Saturday, March 8, 2014

சுஷ்மிதா

சுஷ்மிதா ! பெயரை நாக்கில் புரட்டிப் போட்டு உச்சரித்தால் ஒரு காஜு கத்லி சாப்பிட்ட சுவை வரும்,

எந்தப்பெண்ணை பார்த்தாலும் அழகி என்று சொல்லும் எனக்கே அவள் பேரழகியாய் தெரிந்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அவளைப் பார்த்த மாத்திரத்தில் கவிதை எழுதத்தோன்றும். ஆனால் என்னால் கவிதை எழுத முடியவில்லை. ஏனென்றால் எனக்கு அவ்வளவாக ஹிந்தி வராது.

ஆமாம். சுஷ்மிதாவும் நானும் இருந்தது லக்னோவில். நான் வங்கிப்பணியில் வேலை மாற்றம் ஆகி லக்னோவில் இருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது.

நான் ராஜுவுடன் ஒரு அறையில் தங்கியிருந்தேன். எங்கள் பக்கத்துத் தெருவில் தான் சுஷ் குடியிருந்தாள். சரியாக காலை ஏழு மணிக்கெல்லாம் நாங்கள் இருந்த தெரு வழியாக நடந்து, நிஷாத்கன்ஞ் நாற்சந்திக்குப் போவாள். அங்கிருந்து ஒரு டெம்போ (நம்மூர் ஷேர் ஆட்டோ!) பிடித்து அவள் கல்லூரிக்குச் செல்வாள்.

இந்த விவரமெல்லாம் எதுக்கு? சுஷ் எப்படி இருப்பாள் என்று அறிய ஆவல் கொள்ளும் இளநெஞ்சங்களுக்காக – பின்னர் இருவது வருடம் கழித்துப் பிறக்கப்போகும் ஸ்ருதி ஹாஸனின் அழகுக்கு முன்னோடியாக ஒரு trailer மாதிரி இருந்தாள் சுஷ்.

தொட்டால் ஒட்டிக்கொள்ளும் வெள்ளை. தொடச்சொல்லித் தூண்டும் கன்னங்கள். வெட்டும் பார்வை. நடனம் போன்ற நடை. அவள் நடனமாடும்போது (அதாங்க நடக்கும் போது) குலுங்குவது எங்கள் நெஞ்சங்கள் மட்டுமல்ல. அவள் போனபின் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து வந்தால்கூட அவள் சென்ற தடத்தின் வாசனையைக் கொண்டு அவளைக் கண்டு பிடித்துவிட முடியும்.

சரி, இவளைக் காதலித்து விட வேண்டும் என்று ஒரு நாள் முடிவு செய்து, டீக்கடையில் வைத்து ராஜுவுக்குச் சொன்னேன். இதெல்லாம் வேண்டாம் என்று சொல்வான் என்று பார்த்தால், பார்டி முகத்தில் ஈயாடவில்லை. விசாரித்ததில் சுஷ்ஷை என் அண்ணியாக்கும் முடிவில் இருந்தானாம்!

சரி, நமக்குள் என்ன, அவளை நீயே காதலி என்றான். இல்லை இல்லை உன் மனதில் தான் முதலில் குடியேறினாள், அதனால் காதலில் உனக்குத் தான் முன்னுரிமை என்றேன். சந்தோஷத்தில் ராஜூ, டீக்கும் தம்முக்கும் தானே பணம் கொடுத்தான்.

மறு நாளில் இருந்து அண்ணியை சைட் அடிப்பது தப்பு என்பதால் நான் வெளியே வருவதைத் தவிர்த்தேன். ராஜு ஒரு தவம் போல அவளுக்காக காத்திருந்து அவளுடன் நிஷாத்கன்ஞ் வரை ஒரு பாடிகார்ட் போல போய் வந்துகொண்டிருந்தான்.

இப்படி சுமூகமாக காதல் நாடகம் நடந்து கொண்டிருந்த ஒரு நாளின் காலையில் எங்கள் அறைக்கதவு படபடவென்றுத் தட்டப்பட்டது. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து போய் திறந்தால், ஹவுஸ் ஓனரின் மனைவி!

“Bhaiya, அனர்த்தம் ஆகிவிட்டது. ஸ்ரீவாஸ்தவ்ஜியை போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. கொஞ்சம் என்னுடன் வாருங்கள்” என்றாள். என்னமோ ஏதோ என்று அவருடன் சென்றேன்.

போலீஸ் ஸ்டேஷனில் ஸ்ரீவாஸ்தவ்ஜியும் ஒரு நாலைந்து பேரும் இருந்தார்கள் (போலீஸ் தவிர). ஒரு மனிதர் சகட்டு மேனிக்கு ஸ்ரீவாஸ்தவ்ஜியைத் திட்டிக்கொண்டிருந்தார். கவனித்ததில் அவர் பெண்ணுக்கும் ஸ்ரீவாஸ்தவ்ஜிக்கும் தொடர்பாம்! இது விஷயம் அவருக்குத் தெரிந்து பெண்ணைக் கண்டித்தாராம். அவர் பெண்ணோ  கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவரைத் தான் பண்ணிக்கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றாளாம். அவருடன் வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்றும் மிரட்டினாளாம். இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அவள் அப்பா போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். இந்த வயதில் இவருக்கு இதெல்லாம் தேவையா என்று எண்ணிய என் கண்களில் இன்ஸ்பெக்டர் எதிரில் இருந்த சேரில் அமர்ந்திருந்த பெண் விழுந்தாள். சுஷ்மிதா (இனிமேல் என்ன சுஷ்மிதா வேண்டியிருக்கு?)

ஸ்ரீவாஸ்தவ்ஜியின் மனைவியின் ஓலத்தைத் தாண்டி “ இவ என் அண்ணியாடா ராஜு?” என்று என் மனம் கொக்கரித்தது.

நானும் மனுஷன் தானே?



  

No comments: