#சிறுகதை (?)
#எண்டே பேரு சுந்தரப் பணிக்கர்
"காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்"
"வேலணைய கத்திவாள் வெட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!"
- கோரக்கர்.
காலை மணி எட்டிருக்கும். காலிங் பெல் சத்தம், போய் திறந்து பார்த்தால் ஒரு யுவனும் யுவதியும் நின்றிருந்தார்கள். அந்த யுவன் கையில் ஒரு தோல் bag.
"என் பேரு சுந்தராணு. சுந்தர பணிக்கர். இது எண்ட பார்யா. " என்று பாதி மலையாளம் பாதி தமிழில் பேசிய அந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்தேன் . பார்த்தாலே கேரளம் என்று தெரியும் படியான தலைமுடி, நிறம். ஆனால் ஆள் ரொம்ப மாடர்னாக ஆடை அணிந்திருந்தான். அவனுடன் வந்திருந்த அவன் மனைவி அவனை விட மாடர்னாக உடை உடுத்தி இருந்தாள். தோள்பட்டைகளில் கிழிந்திருப்பது போன்ற ஒரு டாப்ஸ். மிகவும் இறுக்கமான கருப்பு நிற ஜீன்ஸ்.
"வாங்க உள்ளே வந்து உக்காருங்க" என்று உள்ளே அழைத்தேன்.
உள்ளே வந்த அவர்கள் சற்று தயக்கத்துடன் உட்கார்ந்தார்கள். "ஏதும் காப்பி டீ" என்று இழுத்த என்னைப்பார்த்து "ஏய்ய் அதொன்னும் வேண்டாம். " என்று சொன்னான் அந்த யுவன். அதன் பிறகான உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்ந்தாலும் இங்கு தமிழில் தருகிறேன்.
"நீங்கள் தானே வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்? கூளிமுட்டம் கிருஷ்ண சாஸ்த்ரிகளோட பேரன்?
என் வியப்புக்கு எல்லை இல்லாமல் போயிற்று. என்னை இந்தப் பெயரிட்டு அழைத்ததும் ஏதோ FB நட்பு என்று நினைத்தேன். ஆனால் என் தாத்தா பெயரைச் சொன்னது தான் எனக்கு வியப்பளித்தது. கிட்டத்தட்ட தர்பண நாட்கள் தவிர நானே மறந்திருந்த பெயர்.
கிருஷ்ண சாஸ்திரி என் தாத்தா. சொந்த கிராமம் பாலக்காடு அடுத்த ஒரு கிராமம். ஆனால் பல காலம் வாழ்ந்து மறைந்தது கோவை. அவர் ஒரு தேர்ந்த ஜோசியர் என்று என் பாட்டி சொல்லக் கேள்வி. மலையாளம் தவிர,ம் சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் தமிழ் என்று மூன்று மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். கோவையின் பிரபல பணக்காரர்களுக்கு அவர்தான் ஜோசியர் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள்.
நாங்கள் கோவை விட்டு சென்னை வந்தது, பிறகு தில்லி சென்றது, நான் அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பின்னர் நாங்கள் எல்லாரும் திரும்பவும் சென்னை வந்து தாம்பரம் அருகில் செட்டில் ஆனது என்று ஒரு பெரிய பயணத்தில் தாத்தா பற்றி மறந்தே போயிருந்தது.
" ஆமாம். ஆனா உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?"
"அது ஒரு பெரிய கதை. உங்கள் கூளிமுட்டம் கிராமம் போய் அங்கிருந்த உங்க குலதெய்வம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும் பெரியவரிடம் விசாரித்து உங்கள் அண்ணா மற்றும் உங்கள் அட்ரஸ் கேட்டு வந்திருக்கோம்"
"சொல்லுங்க என்ன விஷயம்? "
"ஒண்ணும் இல்லை. உங்களுக்குச் சேர்ந்த ஒன்றை உங்ககிட்ட ஒப்படைக்க வந்திருக்கோம். உங்கள் தாத்தாவும் என் தாத்தாவும் பால்ய சிநேகிதர்கள். உங்கள் தாத்தா என் தாத்தாவுக்கு அந்தக் காலத்தில் ஒரு பெரிய உதவி செய்தாராம். பணமாக. சுமார் இருவதினாயிரம் ரூபாய். அதையும் சில புத்தகங்களையும் பழைய போட்டக்களையும் என் தாத்தா உங்களிடம் கொடுக்கச் சொன்னார். உங்கள் அண்ணாவிடம் தான் முதலில் சென்றோம். அவருக்கு ஏனோ என் மீது நம்பிக்கை வரவில்லை. அதனால் தான் உங்களிடம் வந்தோம். அன்றைய இருவதினாயிரம் ரூபாய் இன்றைக்கு பல லட்சம் பெறும். அதனால் இதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இது உங்கள் சொத்து. தயவு செய்து வாங்கிக்கொள்ள வேண்டும். அப்புறம் நீங்கள் விரும்பினால் உங்கள் அண்ணாவோடு ஷேர் செய்து கொள்ளுங்கள். " என்று சொல்லி தன் கையில் வைத்திருந்த தோல் பையைக் கொடுத்தான்.
அதைத் திறந்து பார்த்தேன். உள்ளே இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள். உடன் சில புத்தகங்கள். சில போட்டோக்கள். அதில் என் தாத்தா! அவரோடு அவர் வயதொத்த ஒரு மனிதர்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா? ஆனால் ஒன்று மட்டும் சங்கேதமாகப் புரிந்தது. எனக்கு அன்றைய தேதியில் அதே தொகை தேவையாக இருந்தது. ஒரு மருத்துவச் செலவுக்காக. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இதோ கடவுள் அதைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
இருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை என்ன ஏது என்று கேட்காமல் வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை.
" என் தாத்தாவுக்கும் உங்கள் தாத்தாவுக்கும் எப்படிப் பழக்கம்? ஏதாவது தெரியுமா?" என்றேன்.
" உங்கள் தாத்தா பெரிய ஜோசியர். என் தாத்தாவுக்கு ஜோசியம் சொல்லித்தந்தாராம். பிறகு மும்பை பக்கம் சென்று பிழைத்துக்கொள் என்று அந்தப் பணத்தையும் தந்தாராம். அதைக் கொடுக்கத் தான் வந்தோம்."
நான் தயக்கத்தோடு அந்தப் பையைப் பார்த்தேன். " கூச்சப்படாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு சில புத்தகங்களும் இருக்கு. உடல் நலம் காப்பதற்காக. உங்களுக்கு உபயோகப்படும் " என்று புன்னகைத்தவன் "எங்களுக்கு நேரமாகிறது நாங்கள் வருகிறோம்" என்று எழுந்தான். அவன் மனைவியும் எழுந்தாள்.
அவன் என்னருகில் வந்து " என்னை நம்பி இதை வாங்கிக்கொண்டதற்கு நன்றி" என்று சொல்லி கை கொடுத்தான். நான் அவன் கையைக் குலுக்கிய போது தான் பார்த்தேன் அவனுக்கு வலது கையில் ஆறு விரல்கள். அதுவும் இரண்டு கட்டை விரல். நான் சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். அவன் இடது காதின் கீழ் ஒரு பெரிய சதுர வடிவ மச்சம்.
கை கொடுத்தவன் சட்டென்று கிளம்பிப் போனான். நான் பிரமைப் பிடித்தவன் போல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.
அப்புறம் அந்தப் பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தேன். சரியாக ஐந்து லட்சம்! ஆண்டவா!
அப்புறம் அந்தப் போட்டோக்களை பார்த்தேன். முதல் போட்டோவில் என் தாத்தாவும் அவர் நண்பரும். இரண்டாவது போட்டோவில் அவர் நண்பரும் அவர் மனைவி(யாகத் தான் இருக்கவேண்டும்).
அவர் கைகளை தன் கால் முட்டிகள் மீது வைத்து உட்கார்ந்திருக்க அவர் மனைவி நின்றிருந்தார். என் பார்வை தன்னிச்சையாக அவர் கைகளைப் பார்த்தது.
அவர் வலது கையில் ஆறு விரல். அதுவும் இரண்டு கட்டை விரல். உடனே அவர் முகத்தைப் பார்த்தேன். இடது காதின் கீழ் அந்த மச்சம் பாதி தெரிந்தது. குழம்பியபடியே அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன். சற்று நேரம் முன்னர் என் எதிரில் உட்கார்ந்திருந்த அதே பெண்ணின் முகம்.
போட்டோவின் கீழே இருந்த பெயர்களைப் பார்த்தேன். 1950ஆம் வருஷத்து தேதி போட்டிருந்தது. அருகில் சுந்தர ராம பணிக்கர் - லலிதை என்று பிரிண்ட் ஆகியிருந்தது.
எனக்கு வேர்க்க ஆரம்பித்தது. ஒன்றும் புரியாத ஒரு கயிற்றரவ நிலையில் அந்தப் பையில் இருந்த புத்தகத்தை எடுத்தேன்.
அதில் கோரக்கர் காயகற்பம் என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.
வீயார்
Never apologize for showing feeling. When you do so, you apologize for the truth.
Monday, November 19, 2018
Friday, November 16, 2018
கண்ணுக்குத் தெரியாதா...
#சிறுகதை
கண்ணுக்குத் தெரியாதா...
அறவுஞ் சிறிய உயிர்தொறும்தான்
பரமகாட்டை யணுவாச் சென்று
உறையும் சிறுமை அணிமாவாம்
--சித்தர் பாடல்
“நல்லா யோசிச்சிட்டியா?”
“நல்லா யோசிச்சிட்டேன் சாமி! முன்ன வச்ச கால பின்ன வக்கப் போறதில்ல”
“என்ன செய்யப் போற?”
“இப்ப சொல்லத் தெரியல... என்னவோ செய்வேன்... எப்படியோ செய்வேன்.. நீங்க மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்க “
சித்தர் பெருமான் காசியை வாத்சல்யத்துடன் பார்த்தார். பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும். உலக அனுபவம் பத்தாது. சட்டென்று கோவம் வருகிறது. அது தனக்கும் தீங்கு இழைக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறான்.
காசியின் அப்பா ராமலிங்கம் அவரது நெடுநாளைய பக்தர். முப்பது வருடங்களாக வந்துகொண்டு இருக்கிறார். சித்தர் பெருமானிடம் அளவிடமுடியாத பக்தி. அவர் எதிரே கைகட்டி வாய்மூடி நிற்பார். ஆரம்பத்தில் தனக்கென்று எதுவுமே கேட்டதில்லை. சொல்லப்போனால் இதுவரை தனக்கென்று ஒரு விஷயம் தவிர, அவர் எதுவுமே கேட்டதில்லை.
ஒரு நாள், சுமார் இருவது வருடம் முன்னர் இருக்கும், சித்தர் பெருமானுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு அங்கிருந்து சென்று விடும் ராமலிங்கம் அன்று நின்றுகொண்டே இருந்தார்.
‘என்ன?’ என்று கண்ணாலேயே சித்தர் கேட்டதும் பொலபொலவென்று அழத் தொடங்கிவிட்டார். சித்தர் அவரை ஆசுவாசப்படுத்தி பின்னர் விஷயம் கேட்டறிந்தார். ராமலிங்கத்துக்கு கலியாணம் ஆகி பத்து வருஷமாகியும் குழந்தைப் பேறு இல்லை.
சித்தர் பெருமான் கண்மூடி தியானத்தில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து கையைக் காற்றில் வீசி எங்கிருந்தோ ஒரு சிறிய மந்தாரை இலைப் பொட்டலத்தை வரவழைத்தார்.
“இந்தா இதுல லேகியம் இருக்கு. மூணு நாள் உன் மனைவிய சாப்பிடச் சொல்லு. ஒரு நாளைக்கு சஷ்டி கவசம் பத்து முறை சொல்லச் சொல்லு. நல்லது நடக்கும்” என்றார்.
அவர் சொல்லைச் சிரமேற் கொண்டு ராமலிங்கம் அப்படியே செய்தார். எண்ணி பத்து மாதத்தில் அவர் மனைவி காசியைப் பெற்றெடுத்தாள். அவனுக்குக் காசி என்ற பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது சித்தர் பெருமானின் பூர்வாசிரமப் பெயர்.
காசி சிறுவயதில் இருந்தே நல்ல அறிவாளி. நன்றாகப் படிப்பான். படிப்பை நிறுத்தி விவசாயம் செய்ய அவனை ராமலிங்கம் கட்டாயப்படுத்திய போதுதான் அவன் சித்தர் பெருமானிடம் ஓடி வந்தான்.
பின்னர் அவர் தலையிட்டு அவனைப் படிக்கவைக்கச் சொல்லி ராமலிங்கத்திடம் கூறினார். அவர் உதவியால் ஈர்க்கப்பட்ட காசி பின்னர் அவர் இருந்த இடத்துக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவருக்குப் பணிவிடை செய்வான். அவரிடம் பல சுலோகங்கள் கற்றறிந்தான். அப்படிப்பட்ட ஒரு நாளில் சாமி அவனுக்கு கருட வித்தை போதித்தார். ‘ என்னிக்காச்சும் ஒனக்கு உபயோகப்படும்’ என்றார். படிப்பிலும் சுட்டியாக இருந்தவன் பத்தாவதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பிளஸ் டூவில் எம்பிபிஎஸ் படிப்புக்கான க்ரூப் எடுத்தான். அந்தப் பொதுத்தேர்விலும் நல்ல பர்சென்டேஜ் எடுத்து அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். அங்குதான் அவன் விதி அவனுக்காக வந்தனாவின் உருவில் காத்திருந்தது. அந்தக் கல்லூரி இருபாலரும் படிக்கும் கல்லூரி.
வந்தனா! இருவது வயது இளமங்கை. மெல்லிய திரேகமும் வெண்மை நிறமும் திரண்ட அங்கங்களும் என்று பார்ப்பவரைப் பாவம் செய்யத் தூண்டும் அழகு. காசிக்கு ஓராண்டு சீனியர்.
காலேஜில் ரேகிங் என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் இலைமறைவு காய்மறைவாக கொஞ்சம் நடக்கத்தான் செய்தது. காசியும் மாட்டினான். என்னென்னவோ செய்யச் சொன்னார்கள். எல்லாமும் செய்தான். ஆனால் அவர்கள் இன்னமும் உற்சாகமானார்கள்.
காசி பார்ப்பதற்கு மிக மிக சுமார். கருப்பு. ஒல்லியான உடல்வாகு. கிராமப்புறத்தில் வசித்ததால் நேர்த்தியாக உடை அணியத் தெரியாது. ஆங்கிலம் நன்றாகப் புரிந்து கொள்வான் என்றாலும் பேசத் தயங்குவான். மேலும் உச்சரிப்பில் கிராம வாடை அடிக்கும்.
இப்படிப்பட்ட ஒருவன் சிக்கினால் விடுவார்களா? அவனைப் பிழிந்து எடுத்து விட்டார்கள். கடைசியாக ஒருவன் ஒன்று செய்யச் சொன்னான். கேட்டதும் காசி உடல் கூசியது. வெறும் உள்ளாடை அணிந்து (பனியனும் கூடாதாம்) கையில் ஒரு கம்புடன் அந்தக் கல்லூரி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வரவேண்டுமாம்.
காசி அழத்துவங்கினான். இங்குதான் விதி வந்தனா உருவத்தில் வந்தது. அந்தப் பக்கமாக வந்த சில பெண்களில் வந்தனாவும் இருந்தாள். நடப்பதை சட்டென்று யூகித்தவள் அந்தப் பையனுடன் சென்று ஏதோ இங்கிலிஷில் பேசினாள். காசிக்குப் பாதி புரிந்தது. பாவம் கிராமப் பையன் விட்டுவிடு என்று சொன்னாள்.
அந்தப் பையன் காதலுடன் வந்தனாவைப் பார்த்தான். பின்னர் காசியிடம் “இன்னிக்கு உனக்கு லக்கு! ஓடிப்போ! யாருகிட்டயாவது சொன்னியானா அப்புறம் இருக்கு ஒனக்கு” என்றான்.
அன்றிரவு காசிக்கு தூக்கம் வரவில்லை. ஒரு விதமான பயம் இருந்துகொண்டே இருந்தது. வந்தனா மட்டும் வந்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே கூசியது. அவள் தெய்வம் போல வந்து காப்பாற்றினாள். இப்படி அவன் நினைவு வந்தனா மீது குவியத்தொடங்கியது.
எவ்வளவு நல்லவள்! எவ்வளவு மனிதாபிமானம் உள்ளவள்! எவ்வளவு நன்றாக இங்கிலீஷ் பேசுகிராள்! எவ்வளவு அழகாக இருக்கிறாள்! ஸினிமா நடிகை சாயிஷா போலத் தோற்றம். ரோஸ் நிறம். மிரண்ட விழிகள்! இப்படிச் சென்ற தன் எண்ணங்களை நினைத்து அவனுக்கு வெட்கமானது.
அப்புறம் காலேஜ் சற்று நார்மலாகப் போனது. படிப்பு படிப்பு படிப்பு என்று ஏக பிஸி ஆகிவிட்டான் காசி. அவ்வப்போது வந்தனாவை வழியில் சந்திப்பான். சிநேகமாகச் சிரிப்பாள். அவனுக்குச் சிறு சிறு உதவிகள் செய்வாள். தன்னுடைய நோட்ஸ் கொடுத்து உதவினாள். இப்படி அவன் உள்ளத்தை அவள் ஆக்கிரமித்தாள்.
சிக்கலில்லாமல் சென்றுகொண்டிருந்த நாட்களில் தான் காசி அந்தத் தப்பை செய்தான். அது நல்ல வெயில் காலம். காசி அந்தக் காலேஜ் மைதானத்தில் நாலைந்து முறை சுற்றி ஓடி உடற்பயிற்சி செய்வான். அன்றும் அப்படிச் செய்துகொண்டு இருந்தபோதுதான் அவன் வந்தனாவைப் பார்த்தான். அந்த மைதானத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு அவள் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்துக் கையசைத்தாள். இவனும் புன்னகைத்தான். பின்னர் அவள் அருகில் வந்ததும் “ ஹலோங்க” என்று சொன்னவன் அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.
திடீரென்று முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட கண்விழித்தவன் தான் வந்தனாவின் மடியில் தலைவைத்துக் கிடப்பதை உணர்ந்தான். அவள் மெல்லிய தொடைகள் அவன் வீட்டில் இருந்த இலவம்பஞ்சு தலைகாணியை விட மெதுவாக இருந்தது. அவன் முகத்தருகில் அவள் இளமைகள்! அவன் தன்னை இழந்தான். செட்டென்று எக்கி அவள் கழுத்தைசுற்றி கை போட்டு அவளை இழுத்து அவள் உதட்டோடு உதடு பொருத்தினான்.
நிலைகுலைந்து போன வந்தனா அவனை ஓங்கி அறைந்து தன் மடியில் இருந்து தள்ளி விட்டாள். “யூ பாஸ்டர்ட்! கண்ட்ரி ப்ரூட்! இரு உன்ன என்ன பண்றேன்” என்று சொல்லி அங்கிருந்து ஓடினாள்.
அப்புறம் அவள் காதலன் (அதாங்க அந்த ரேகிங் பையன்) தன் பிரெண்ட்ஸ் உடன் வந்து இவனை நன்றாக அடித்ததும் அடித்து காலேஜ் பின்புறம் இருந்த காடு போன்ற இடத்தில் தூக்கிப் போட்டதும் ஒரு இரவு முழுக்க இவன் அங்கே வலியில் துடித்துக் கிடந்தது மறுநாள் ஆடு மேய்க்க வந்த சிறுவர்கள் பார்த்து இவனைக் காப்பாற்றியதும் சுருக்கமாக சொன்னால்தான் நல்லது.
விஷயம் காலேஜ் அதிகாரிகள் வரைச் சென்றது. ஆனாலும் இவன் நடந்த எதையும் சொல்லவில்லை. தான் அந்தக் காட்டுக்குச்சென்றதாகவும் அங்கிருந்த பாறை மீது ஏற முயன்றதாகவும் அதிலிருந்து வழுக்கி விழுந்ததாகவும் சொன்னான். இவன் சொன்னதை யாரும் நம்பவில்லை. இருந்தாலும் அந்த விஷயம் அத்தோடு விடப்பட்டது.
அதற்கு இரண்டு நாள் கழித்து தீபாவளி விடுமுறை ஆரம்பித்தது. காசி தன் ஊருக்குச் சென்றான். அவன் நிலையைப் பார்த்து வீட்டில் கேட்டதற்கும் அவன் அதே பதில்தான் சொன்னான். ஆனால் உள்ளுக்குள் எரிமலையாக கொந்தளித்துக் கொண்டிருந்தான்.
‘ராட்சசி! முத்தம் தானே குடுத்தேன்? அந்த அறையோடு விட்டிருக்கலாம். ஆள் வைத்து அடித்துவிட்டாள். அவளைச் சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்யவேண்டும்.”
இந்த எண்ணங்களோடுதான் அவன் சாமியிடம் சென்றான். எப்படி அடி பட்டது என்று சாமி கேட்டதுக்கும் இதே பதில்தான் சொன்னான். அதைக் கேட்டு சாமி சிரித்தது.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவன் திடீரென்று சாமியிடம் “எனக்கு ஏதாச்சும் மந்திரம் சொல்லுக் கொடுங்க சாமி “ என்றான். சாமி இன்னும் பெரிதாகச் சிரித்தார்.
“சிரிக்காதீங்க.. உங்களுக்குத்தான் அட்டமா சித்திங்க தெரியுமாமே! எங்க அப்பாரு சொல்லியிருக்காரு. எனக்கு அதுல ஒண்ணு சொல்லிக்கொடுங்க”
“அதெல்லாம் முடியாது “
‘ அப்ப நான் இங்கிருந்து கீழ குதிச்சுருவேன் சாமி” என்று சொன்னவன் சிறிதும் யோசிக்காமல் சுமார் ஐம்பது அடி உயரத்தில் இருந்து குதித்து விட்டான்.
சித்தர் பெருமான் பதறி விட்டார். கீழே ஓடிச்சென்று அவனைத் தூக்கிக்கொண்டு தன் இடத்துக்கு வந்தார். சில இலைகளை எடுத்து ஏதோ மந்திரம் சொல்லி கைகளில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அவன் உடலில் தேய்த்தார்.
அவன் உடல் காயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. “ நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தரேன். ஆனா அது ஒரு தடவ தான் உனக்கு உபயோகப் படும். நீ அத உபயோகப்படுத்தற விதத்தப் பொருத்து உனக்கும் நல்லது கேட்டது நேரும்” என்றார் சித்தர் பெருமான்.
“இதும் பேரு அணிமா. பெரிய உருவத்தச் சின்னதா ஆக்கலாம். இது உனக்கு எப்படி உபயோகப்படும்னு தெரியாது. ஆனா இதத்தான் உனக்குச் சொல்லித்தர உத்தரவு. ஆனா நல்லா புரிஞ்சுக்க. இது ஒனக்கும் பாதகமாத்தான் முடியும். அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் இது சுமார் மூணுமணி நேரம்தான் கட்டுக்குள் நிற்கும். அப்புறம் வேலை செய்யாது. இப்பவும் சொல்றேன். கோவத்த விட்ரு. அது ஒனக்கு நல்லது. எல்லாம் ஈசன் செயல்” என்று சொல்லி முடித்தவர் சட்டென்று காசியின் நெற்றியில் தன் வலது கட்டைவிரலை வைத்தார். காசியின் எல்லா உணர்வுகளும் ஒரு கேந்திரவயப்பட்டன. சித்தர் பெருமான் அவன் வலது காதில் ஒரு மந்திரத்தை மூன்று முறை சொன்னார். பின்னர் காசியின் நெற்றியில் மீண்டும் தன் விரல் வைத்து அவனை பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்.
மீண்டும் அவனை ஒரு முறை பார்த்து ‘ எல்லாம் ஈசன் செயல்’ என்றார். மந்திரோபதேசம் பெற்ற காசி சாமியை வணங்கிவிட்டு கீழே இறங்கிச் சென்றான். இறங்கிச் செல்லும் வழியில் ஒரு பாறை இடுக்கில் சரசரவென்று ஒரு அரவம். ஒல்லியாக நீளமாக நாகராஜன். படமெடுத்து நின்று அவனைப் பார்த்தது. காசி அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, மிக லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி அதை அந்தக்கல்லோடு அழுத்திப் பிடித்தான். நாகம் திமிர முயன்று தோற்றது. சட்டென்று அதன் கழுத்துப் புறத்தை கையில் பிடித்து மறுகையால் அதன் வால் பக்கமும் பிடித்து ஒரு கயிறு போல கோர்த்துப் பிடித்து அதை அந்தப் பாறையில் ஒரு விதமாக அடித்தான். நாகம் மயங்கியது. பின்னர் தான் கொண்டுவந்திருந்த ஜோல்னா பையில் அதை போட்டு ஒரு முடிச்சிட்டு அதை இறுக்கி மூடினான்.
பின்னர் தன் வீடு சென்றவனைப் பார்த்த ராமலிங்கம் அதிசயித்தார். “சாமி கிட்ட போயிருந்தயா கண்ணு?” என்று கேட்டார். “ஆமாம் அப்பா. சாமி என்னிய இன்னிக்கே கிளம்பிப் போயிரச் சொன்னாரு. அதனால நான் கெளம்பறேன்” என்று சொல்லி மடமடவென்று தன் பொருள்களை பேக் செய்தான். சூட்கேசில் துணிகளுக்கு இடையில் அந்த நாகத்தை வைத்தான்.
மூன்று மணி நேரப் பயணம். மதியம் மூன்று மணி சுமாருக்கு காலேஜ் சென்றடைந்தான். மறு நாள் கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் லீவு முடிஞ்சு திரும்பி விட்டார்கள். வந்தனாவும் வந்துவிட்டாள்
அந்தக் காலேஜின் ஜிம்முக்கு வந்தனா ரெகுலராக போவாள் என்பது காசி அறிந்து வைத்திருந்தான். அவள் மாலை வேளைகளில் செல்வாள். அன்றும் அதுபோலவே போனாள் அவள் சென்ற சிறிது நேரத்தில் காசி தன் சூட்கேஸ் திறந்து அந்த ஜோல்னா பையை எடுத்தான். உள்ளே அரவம் துள்ளித் திமிறிக்கொண்டு இருந்தது.
காசி சட்டென்று அந்தப் பையோடு நாகத்தைப் பிடித்தான். சித்தர் பெருமான் போதித்த அந்த மந்திரத்தை அவன் உச்சரிக்க ஆரம்பித்தான். சரியாக மூன்றாவது முறை சொல்லும் போது அந்த மாற்றத்தை உணர்ந்தான். அவன் கையில் இருந்த நாகம் நழுவி பைக்குள் விழுந்தது. மந்திரம் சொல்லி முடித்த காசி அந்தப் பையை திறந்தான்.
உள்ளே ஒரு இஞ்ச் அளவில் அந்த நாகம் படமெடுத்து நின்று கொண்டிருந்தது. காசி சிரித்தான். அந்த நாகத்தின் கண்களில் ஒரு வெறி. அதை ஒரு சிறிய துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு ஜிம்முக்குப் போனான். அங்கே வந்தனா ட்ரெட்மில் செய்துகொண்டிருந்தது கண்ணாடி வழியே தெரிந்தது. வெளியில் எல்லாரும் தங்கள் பைகளை வந்திருந்த shelf மீது அவன் கண்கள் படிந்து வந்தனாவின் handbagஐத் தேடியது.
அந்தச் சந்தன நிற handbag மூன்றாவது படியில் இருந்தது. தன் பாக்கெட்டில் இருந்து அந்தத் துணியை எடுத்தான். பிறகு வந்தனாவின் handbag இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
‘எல்லாம் ஈசன் செயல்’ என்று அவன் காதில் சாமியின் குரல் கேட்டது.
வீயார்
Subscribe to:
Comments (Atom)