Friday, September 18, 2015

ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்.

ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்.

ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம்.

அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை.

சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார்.  சாதாரண நாட்களில் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார். ஆனால் இன்று அவரது போலீஸ் உள்ளுணர்வு அதை நிறுத்தச் சொல்லியது.

வெளில எறங்கு

சார், லைசென்ஸ் இன்சூரன்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு சார். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருந்ததுனாலத் தான் சார் இந்தத் தப்பச் செஞ்சிட்டேன். ப்ளீஸ் மன்னிச்சுக்குங்க சார்

சந்திரன், மொதல்ல இந்த ஆள எறக்கி அப்படி ஓரமா ஒக்கார வையுங்க. அப்புறம் பேப்பர்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க என்று அவர் சொன்னதும், கான்ஸ்டபுள் சந்திரன் ஒரு இயக்கப்பட்ட எந்திரன் போல தயாரானார். சோமசேகர் அருகே போடப்பட்டிருந்த ஒரு கல்லின் மீது உட்கார்ந்தார்.

ஒரு இரண்டு நிமிடத்தில் சந்திரன் அவரிடம் வந்தார்.

சார் எல்லாம் சரியா இருக்கு... என்று இழுத்தார்.

என்னய்யா இருக்குன்னு இழுக்கற? என்ன விஷயம்?

சார் உள்ளார ஒரு சூட்கேஸ் வச்சிருக்கான். என்ன இருக்குன்னு கேட்டா மழுப்பறான். அதான்...

சே! என்று ஆயாசத்துடன் சோமசேகர் எழுந்தார். அங்கே பயத்துடனும் ஒருவித பதட்டத்துடனும் நின்றுகொண்டிருந்த அந்தக் கார் டிரைவரை நெருங்கி என்னையா இருக்கு சூட்கேசுல? சொல்லித் தொலைய வேண்டியதுதானே? இல்லாட்டி தெறந்து காமி

சார், அது வந்து.. வேணாம்  சார்... பெரிய அய்யாவுக்குத் தெரிஞ்சாக் கோவிப்பார்.

யாருய்யா அது? தெறந்து காமிக்கலேனா நான் கோவிப்பேன். சந்திரன், சாவிய வாங்கி தெறந்து பாருங்க. தர மறுத்தா, கேஸ் புக் பண்ணி, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க.

சார்! அதெல்லாம் வேணாம் சார் என்று அலறினான் ட்ரைவர். இந்தாங்க சாவி என்று சந்திரனிடம் கொடுத்துவிட்டு, சோமசேகரைப் பார்த்து நான் பெரிய அய்யாவுக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுங்களா? என்றான் கலவரத்துடன்.

அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்த சேகர், சரியென்று தலையாட்டினார்.

சூட்கேசைத் திறந்து மௌனமாகச் செக் செய்த சந்திரன், திடீரென்று சார் என்று குரல் கொடுத்தார். அந்தக் குரலைக் கேட்டு சேகர், ட்ரைவர் இரண்டு பேருமே திடுக்கிட்டார்கள். ட்ரைவர் போனை கையில் வைத்தபடி ஓடிவிடுபவன் போல நின்றான். கண்ணாலேயே அவனை எச்சரித்த சேகர் வண்டியை நெருங்கினார்.

என்னய்யா?

சார் இந்தச் சூட்கேசைப் பாருங்க என்று சந்திரன் அதை சேகர் பக்கம் திருப்பினார். சேகரின் கண்கள் விரிந்தன. கட்டு கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள். எப்படியும் ஒரு கோடி இருக்கும்.

டேய், இங்க வா! என்று டிரைவரைக் கூப்பிட்டார். அவன் போனில் யாருடனோ (பெரிய அய்யாவாக இருக்கும்) பேசிக்கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் கூப்பிட்டதும் பதட்டத்துடன் ஓடி வந்தான். என்னடா இது? என்று கேட்ட அவரிடம் பதில் சொல்லாமல் மொபைலை  நீட்டினான். சிறிது யோசித்த சேகர் அதை வாங்கி ஹலோ! என்றார்.

மறுமுனையில் ஒரு ஆளுமையான குரல் ஹல்லோ இன்ஸ்பெக்டர். நான் .... பேசறேன். கொஞ்சம் அவனப் போக விடுங்க. மேட்டர் அவசரம் என்றது.

சார், கார்ல.... என்று ஆரம்பித்தவரை கட் செய்து, ரெண்டு ஸீ இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க. வண்டி ரொம்ப நேரம் அங்க நிக்க வேணாம். எனக்கு ரிஸ்க். போக விடுங்க என்றார்.

சோமசேகருக்கு கோவம் உச்சந்தலையில் ஏறியது. என்ன பேசறீங்க சார்? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. சட்டப்படி என்ன செய்யணுமோ அது தான் செய்வேன்

சார், பணம் வேண்டாம்னா வேற ஏதாவது வேணும்னாலும்  செய்யறேன். ப்ளீஸ். என் நிலைமைக்கு நான் இப்படியெல்லாம் கெஞ்சுனதேயில்லை. அந்த நாயினால வந்த வினை

சேகர் பதில் சொல்ல எத்தனிக்கும் முன் அவர் மொபைல் சிணுங்கியது.
அவர் ஸ்டேஷனில் இருக்கும் இன்னொரு கான்ஸ்டபுள் கனகராஜ். சார், தாம்பரம் பிரிஜ்ஜுல ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். மெசேஜ் வந்திச்சி. ஸ்டேஷன்ல வேற யாருமே இல்ல. நான் அங்க போகறேன். உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமின்னுதான் போன் செஞ்சேன்.

வேணாம் கனகராஜ்! நான் இங்க கிட்டத்துல தான் இருக்கேன். நான் போறேன் என்று சொல்லி, சந்திரன், அந்தக் கார கொஞ்சம் ஓரமா பார்க் பண்ணுங்க. ஏய், ட்ரைவர் நீ சூட்கேசோட என் ஜீப்புல ஏறு என்று சொல்லிவிட்டு அவர் மொபைலில்நான் உங்க ஆள பெட்டியோட கூட்டிக்கிட்டு போறேன். ஒரு ஒன் அவர்ல உங்களுக்கு மெசேஜ் வரும். முடிஞ்சா அதுக்குள்ள லீகலா எதுனாச்சியும் safety செஞ்சுக்குங்க என்று சொல்லி பதிலை எதிர்பாராமல் கட் செய்தார்.

இரண்டு நிமிடங்களில் அவர் ஜீப், அந்த ட்ரைவர் சூட்கேஸ் சகிதம், தாம்பரம் ஓவர் ப்ரிஜ் நோக்கிப் பறந்தது. ஐந்து நிமிடங்களில் ஆக்ஸிடென்ட் ஸ்பாட்டை அடைந்து விட்டார்.

விபத்து அவர் எதிர்பார்த்ததை விட கோரம். இறந்தவரின் தலை கழுத்துவரை சிதைந்திருந்தது. உடலைச் சுற்றி ஒரே ரத்தக் களரி. இவரைப் பார்த்தவுடன் அங்கே நின்றிருந்த ஒரு ட்ராபிக் போலீஸ்காரர் ஓடி வந்தார். இவருக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு சார் ஒரு இருவது நிமிஷம் இருக்கும் விபத்து நடந்து. செத்தவர் பேரு சுப்ரமண்யம். சிட்டில கொஞ்சம் பேருள்ள வக்கீல். அவர் பாக்கெட்டுல இருந்த மொபைலப் பார்த்து சில நம்பர் நோட் செஞ்சு வச்சிருக்கேன். இன்பார்ம் பண்ணிடட்டுமா என்றார்.

ம்ம்ம் என்று முனகினார் சேகர். அநியாயமாக ஒரு உயிர் சேதப்பட்டு இருந்தது. இடிச்சவன் எங்க?

சார் இது ஹிட் அண்ட் ரன். அவன் தப்பிச்சுட்டான். லாரி. யாரோ ஒரு புண்ணியவான் நம்பர் நோட் பண்ணிட்டான். இதோ இருக்கு.

சரி, ஒரு பத்து நிமிஷம் இங்க இருங்க. நான் ஸ்டேஷன்லேர்ந்து ஆளக் கூப்பிடுறேன். மத்த வேலையெல்லாம் அவங்க பாத்துப்பாங்க

எஸ் சார்

அப்புறம் சார் கிட்ட கொஞ்சம் பேசணும்

இப்படி வாங்க என்று தன் ஜீப் அருகில் அழைத்துச் சென்றார்.

சொல்லுங்க

சார், இவர யாரு இடிச்சதுன்னு எனக்குத் தெரியும். இவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? போன மாசம் எக்மோர்ல நடந்த ஹிட் அண்ட் ரன் கேசுல செத்துப் போன பெண்ணோட குடும்பத்துக்கு ஆதரவா ஆஜராகி, இடிச்ச அந்தக் காலேஜ் பையனுக்குத் தண்டனை வாங்கித் தந்தாரே, அந்த வக்கீல் தான் இவர். அந்தப் பையனோட குடும்பத்தார் தான் ஏற்பாடு செஞ்சு இந்த ஆக்ஸிடென்ட் செஞ்சிருக்காங்க. இதச் செஞ்சது... என்று சற்றுத் தணிந்த குரலில் சேகரின் காதில் ஏதோ சொன்னான்.

உண்மைய சொல்றீங்களா இல்ல எதுவும் விளையாடறீங்களா?

உண்மை சார். நான் கண்ணால பார்த்தேன். அவன் தான் லாரி ஒட்டிவந்தான்.

சரி நீங்க போங்க

அந்த ட்ராபிக் போலீஸ் அரைமனதுடன் அங்கிருந்து அகன்றார். சோமசேகர் ஒரு ஸிகரெட் எடுத்துப் பற்ற வைத்தார். புகையை உள்ளே இழுத்து வெளியே விட்டார். இரண்டு மூன்று இழுப்பு வேக வேகமாக இழுத்து விட்டு அதைக் கீழே போட்டு ஷூ காலால் மிதித்து அணைத்தார். ஜீப்புக்குள் தலையை விட்டு அங்கே உட்கார்ந்திருந்த டிரைவரிடம் உங்க பெரிய அய்யாவுக்குப் போன் போடு என்றார்.

அவன் குழப்பத்துடன் நம்பர் போட்டு ஓரிரு வார்த்தைப் பேசிவிட்டு இவரிடம் போனைத் தந்தான்.

ஹல்லோ..

சொல்லுங்க இன்ஸ்பெக்டர்

என்ன  வேணும்னாலும் செய்யறேன்னு சொன்னீங்க...

ஆமாம் இப்பவும் சொல்றேன்

ஒரு ஆளு பேரு சொல்றேன். அவன... என்று போனில் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.






Tuesday, August 4, 2015

ஒன்றுக்குள் ஒன்று - Short Story

ஒன்றுக்குள் ஒன்று.

காரை ரிவர்ஸ் எடுக்கும் போதுதான் கண்ணாடியில் மனோகரைப் பார்த்தேன். முழுக்கை டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து, தலையில் ஒரு கேப், கண்ணாடி என்று கலக்கலாக இருந்தான். எவ்வளவு நாள் ஆச்சு! இல்லை வருடங்கள் ஆச்சு. காலேஜ் கடைசி நாளன்று பார்த்ததுதான். காரை நிறுத்தி, கதவைத் திறந்து இறங்கி மனோகர் என்று கூப்பிட்டேன்.  

தனது வண்டிக் கதவைத் திறக்க இருந்தவன் திரும்பினான். திரும்பியவன் கண்களில் ஒரு பளிச். 

டேய் ஆதி? யூ @#@#@ moron! எங்கடா இருந்த இவ்வளவு நாளா?

இது தான் எங்கள் நட்பு. ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டிக் கொள்ளும் காலேஜ் நட்பு. என்ன திட்டினாலும் கோபமே வராத இனிய நட்பு.

அப்புறம் அந்த மாலையில் இருவரும் எனது வழக்கமான க்ளப் சென்றோம். உள்ளே சென்று அமர்ந்தும் மனோ தன் கேப்பை அகற்றவில்லை. ஒரு வேளை முடி கொட்டியிருக்குமோ ? 

இருவரும் பியர் அருந்தினோம். ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைத்தோம். எங்கள் காலேஜ் டைம் பிகர்கள் இன்று எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று நோட்ஸ் எக்ஸ்சேஞ் செய்து கொண்டோம். டின்னர் சாப்பிட்டோம். பேசினோம் பேசினோம். மணி பத்தாயிற்று.

சரிடா மச்சா, ஒன் நம்பர் குடு. ஒரு மிஸ்ட் கால் தர்றேன். என் நம்பர சேவ் பண்ணிக்க. அப்புறம் பார்க்கலாம் என்றான் மனோ.

நான் வீடு திரும்புகையில் மணி பதினொன்று. திஷாரி (என் அழகிய இளம் பெங்காலி மனைவி) தூங்காமல் விழித்திருந்தாள்.

ஏன் இத்தனை லேட்? என்றாள் ஆங்கிலத்தில். நானும் அவளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவோம். சில நேரம் ஹிந்தியில். அவள் தமிழ் சற்று கொடுமையாக இருக்கும்.  ஆனால் அவள் மிகவும் செக்சியாக இருந்ததால் அவளை மன்னித்து விட்டிருந்தேன்.

என் நண்பனை இன்னைக்குத் தற்செயலாச் சந்தித்தேன். என் காலேஜ் மேட். ரொம்ப க்ளோஸ்.

அதுனால ரெண்டு பேரும் தண்ணியடிக்கப் போயிட்டீங்களா என்று திஷாரி செல்லமாகக் கோபித்தாள். ப்ளடி, ஒனக்காக நான் இன்னுமும் சாப்பிடாம காத்திட்டுருக்கேன்.

ஐ யாம் ஸோ ஸாரி, வா நான் ஒனக்கு ஊட்டிவிடறேன் என்று சொல்லி அவள் திமிறத் திமிற அவளைத் தூக்கிக் கொண்டு பெட் ரூம் நோக்கிச் சென்றேன்.

கிச்சன் இஸ் ஓவர் தேர் டார்லிங் என்றாள் திஷாரி.

ஹு செட் எனிதிங் அபௌட் ஈட்டிங் டின்னர் என்று நான் அவள் காதுகளில் கிசுகிசுத்தேன். திஷாரியின் கன்னம் அநியாயத்துக்குச் சிவந்தது.

மறுநாள் காலை வழக்கம் போல விடிந்தது. இல்லை ஓர் சிறிய மாற்றத்துடன். என் மொபைல் எடுத்துப் பார்த்தால் மனோவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது.

ஹாய் மச்சா! குட் மார்னிங் டா! இது தான் என் நம்பர். அப்புறம் இன்னைக்கு ஈவ்னிங் என்னோட ட்ரீட். வில் மீட் யூ அட் ... என்று ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் பெயர் கொடுத்திருந்தான்.

ஆபீஸ் போகும்போது மெதுவாக என்னவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.

மனோ வாண்ட்ஸ் டு கிவ் அ ட்ரீட் டுடே ஈவ்னிங். இஸ் இட் ஓகே இப் ஐ அட்டென்ட்?

என்னை ஒரு முறை தீர்கமாகப் பார்த்த திஷாரி இட்ஸ் ஓகே! பட் ஹேவ் அ செக் ஆன் யுவர் ட்ரிங்க்ஸ் என்றாள்.

ஷ்யூர் செல்லா

அன்று மாலை மனோவோடு கழிந்தது. குடும்ப விஷயங்களில் இருந்து அரசியல் வரை எல்லாமும் அலசப்பட்டது. நான் நிறைய அடல்ட் ஜோக்ஸ் சொன்னேன். மனோ மிகவும் ரசித்துச் சிரித்தான். ஒரு ஜோக்குக்கு அவனால் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குலுங்கிக் குலுங்கிக் சிரித்தான். அவன் தலையில் இருந்த கேப் கீழே விழுந்தது.

நொடியில் சுதாரித்து அவன் கேப்பை மீண்டும் அணிவதற்குள் நான் அவன் நெற்றிப் பொட்டின் சற்று மேலே இருந்த அந்த black spotஐ கவனித்து விட்டேன்.

"என்னடா மச்சா? என்னது இது" என்று கரிசனத்துடன் வினவினேன்.

சற்று நேரம் மௌனமாயிருந்த மனோ, பின் " மச்சா! போன வருஷம் என் அம்மா ஆக்சிடெண்ட்ல எறந்துட்டாங்கடா. அந்த அதிர்ச்சில கொஞ்ச நாள் நான் நிதானமில்லாம இருந்தேன்.  ஒரு பக்கம் அம்மா இல்லைங்கறது தெரிஞ்சும் ஒரு பக்கம் அவங்க இருக்கறது போலவே ஒரு பிரமை.

அது நாளடைவுல வளர்ந்து என்னோட டெய்லி வாழ்க்கையப் பாதிக்க ஆரம்பிச்சிடிச்சி. அப்பா தான் வற்புறுத்தி சைகியாட்ரிக் ட்ரீட்மென்ட் எடுக்க வச்சார். கொஞ்சம் கரண்ட் செலவாச்சு ஆசுபத்திரிக்கு என்னால. அதான் இந்த black spot" என்று சொல்லி சிரித்தான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனசுக்குள் ஒரு சோகம். பின்னர் டின்னர் சாப்பிட்டோம். அப்புறம் அன்று இரவும் வீடு திரும்பும்போது மணி பதினொன்று. அன்றிரவும் மனைவிக்கு பெட்ரூமில் நான் டின்னர் சர்வ் செய்தேன்.

இந்த மனோவப் பார்த்ததில் இருந்து ரொம்பவே ரொமாண்டிக் ஆயிட்ட! உண்மையச் சொல்லு. மனோ ஆம்பள தானே? இல்ல உன் கர்ல் பிரெண்டா? என்று அவள் கிண்டல் செய்தாள்.

இப்படியாக என் வாழ்க்கை ஆபீஸ், மனோ, திஷாரி என்று ஒரு வட்டத்துக்குள் ஓட ஆரம்பித்தது. நல்ல வேலை. நல்ல நண்பன். மிக மிக அழகான மனைவி! வேறு என்ன வேண்டும்? இப்படிப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் தான் திடீரென்று மனோவிடம் இருந்து ஒரு மெசேஜ்! அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஊருக்குப் போகிறானாம். வர ஒரு வாரமாகுமாம். சரி நேரத்துக்கு வீடு திரும்பி மனைவியாய் எங்காவது வெளியில் கூட்டிச் செல்லலாம் என்று அவளுக்குப் போன் செய்தேன்.

நல்ல வேளை. நானே கூப்பிடலாம்னு இருந்தேன். எனக்கு ஒரு நாலு நாளைக்கு தில்லி போக வேண்டிய வேலை. என் கலீக் அட்டென்ட் பண்ண வேண்டியது. பட் ஷி இஸ் நாட் இன் அ பொசிஷன் டு கோ! ஸோ, ஐயாம் கோயிங். ப்ளீஸ் டேக் கேர். நான் என் ட்ரெஸ் மதியமே வீட்டுக்குச் சென்று எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். இங்கிருந்தே டைரக்ட் ஏயர் போர்ட். பை டார்லிங். டேக் கேர் என்றாள் திஷாரி.

எனக்கு வெறுத்து விட்டது. சரியென்று வீடு போகும் வழியில் எனது ரெகுலர் வீடியோ லைப்ரரி சென்று புது ஆங்கிலப் படங்கள் எதெல்லாம் வந்திருந்ததோ எல்லாம் வாங்கிக் கொண்டேன்.

நானே டின்னர் சமைக்கப் பிடிக்காலம் பீட்ஸா ஆர்டர் செய்தேன். ஒரு படம் பார்த்துவிட்டுத் தூங்கிவிட்டேன்.
இப்படியே நாலு நாள் ஓடியது.

ஐந்தாம் நாள் காலை. திஷாரி இன்று வந்துவிடுவாள். ஆறு மணிக்கு மனோவிடம் இருந்து ஒரு மெசேஜ்.

மச்சா நான் உன்னப் பாக்கணும். அர்ஜன்ட். நான் சென்னைக்கு வந்துட்டேன். இன்னைக்கு மதியம் டைம் இருக்குமா?

மனோ கேட்டு இல்லையென்று சொல்ல முடியுமா? மேலும் மதியம் என்றால் ஓகே தான். மனைவி இதோ வந்துவிடுவாள். ஈவ்னிங் அவனைச் சந்திக்கச் சென்றால் அவள் வருந்தக்கூடும்.

ஏழு மணிக்கு திஷாரி வந்தாள். அவள் முகம் சற்று கலவரமாயிருந்தது. சரியாகப் பேசவில்லை. எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் கிளம்பிப் போய்விட்டாள். எனக்கு என்னமோ மாதிரியிருந்தது.

லஞ்ச் டைமில் மனோ கால் செய்தான். என் ஆபீஸ் வாசலில் இருப்பதாகச் சொன்னான். நான் என் மொபைல் எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன்.

மனோ இந்த நாலு நாளில் இளைத்திருந்தான். ஒரு வித சோகம் அவன் முகத்தைக் கவ்வியிருந்தது. ஒரு வேளை அவன் அப்பாவுக்கு எதுவும்.....

என்னடா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?

வாடா சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்றான். ஆனால் சாப்பாடு வந்ததும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். சரி அவனாகச் சொல்வான் என்று நானும் சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர்!

டேய்! என்ன மன்னிச்சுடுடா! இந்த விஷயம் கேட்டா நீ ரொம்பவுமே அதிர்ச்சி ஆகிடுவ. உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் பார்த்தேன். அப்புறம் என் மனசாட்சி என்ன ரொம்பவே கம்பெல் பண்ணதினால சொல்றேன்.

டேய் சொல்ல வந்த விஷயத்த சொல்லுடா. இந்தப் பீடிகை எல்லாம் வேண்டாம்.

திஷாரி.... என்று இழுத்தான்.

ஆமாம் திஷாரி என் மனைவி. அவளுக்கு என்ன?
அவ நாலு நாளா எங்க இருந்தா என்றான் திடுமென்று.

தில்லி போயிருந்தா. ஆபீஸ் வேலையா...

இல்லைடா ஆதி! ஷி இஸ் சீட்டிங் யூ. ஷி வாஸ் அட் பெங்களுர். ஐ ஸா ஹர். ஒரு ஹோட்டல்ல. நான் விசாரிச்சேன். ஷி வாஸ் வித் அ கை. யாரோ முரளி. ஹோட்டல் ரிஜிஸ்டர்ல ஹஸ்பண்ட் வொய்ப் என்று கொடுத்திருக்காங்க என்றான் கண்ணீருடன்.

என் உலகம் வேகமாக சுழன்றது. என் திஷாரியா? என் அழகான மனைவியா? கடவுளே என்ன சோதனை!

நான் இன்னொரு விஷயமும் கேள்விப் பட்டேன். அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு  மதியம் இந்த ஊர விட்டேப் போகப் போறாங்களாம். இதுக்கு மேலயும் உன்கிட்ட சொல்லலேனா அப்புறம் நான் என்ன பிரெண்ட்? ஒடனே போயி ஏதாவது செய்ய முடிஞ்சா செய் என்றான்

என் உடம்பின் எல்லா செல்களும் உயிர்த்தன. எனக்குள் ஒரு புயல் போன்ற உத்வேகம். திஷாரி! கடன்காரி! நாயே! துரோகி! இதோ வருகிறேன்.

இரண்டு சிக்னல் ஜம்ப் செய்து நான் இருவது நிமிடங்களில் வீடு போயி சேர்ந்தேன்.  நினைத்த மாதிரியே திஷாரி வீட்டில் இருந்தாள்.

தன் துணிகளை மற்ற பொருள்களை ஒரு பெரிய பேகில் அடைத்துக் கொண்டிருந்தாள். என்னை எதிர் பார்க்கவில்லை. அவள் முகம் திகிலானது.

நீங்க நீங்க ... எப்படி இப்ப... என்று வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.

துரோகி! மனோ எல்லாம் சொல்லிட்டான். முரளியும் நீயும் சேர்ந்து செஞ்ச துரோகம் எல்லாத்தையும் சொல்லிட்டான்.

ஐயோ

என்னப் பிடிக்கலேனா ஏண்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீயே கதின்னு தான் இருந்தேன். என்ன கொற எங்கிட்ட? பணமில்லையா அழகில்லையா? சொல்லுடி!

எல்லாம் இருக்குதான். ஆனால் எனக்கு முரளியப் பிடிச்சிடுச்சி. என்ன செய்யச் சொல்றீங்க என்றாள் ஆங்காரமாக. அந்த நிமிடத்தில் திஷாரியின் எல்லாம் அழகும் எங்கோ காணாமல் போயிற்று. முகம் விகாரமாகத் தெரிந்தது.

எனது திஷாரி செத்து விட்டாள். மிச்சம் இருப்பது அவளது சாயல். அது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதை அழிக்க வேண்டியது முக்கியம் என்று என்னுள்ளில் இருந்து சாத்தான் ஓதியது.

துரோகி! என்று கத்தியவாறே நான் அவளை நோக்கிப் பாய்ந்தேன். என்ன செய்வதென்று தெரியாத அந்தக் கணத்தில் என் அன்பு மனைவி தன் கைக்கருகில் இருந்த டேபிள் லாம்ப் எடுத்து என்னைத் தாக்கினாள். சரியாக என் தலையின் வலப்பக்கத்தில் பட்டது. வலி ஒரு மின்சார கயிறு போல உடலெல்லாம் பாய்ந்தது. திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. ஒரு ஸிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. இப்படி ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பல இச்சைகள் ஒன்று சேர்ந்து என்னை ஆக்ரமித்த அந்த நொடியில் எங்கள் பெட்ரூமுக்குள் மனோ நுழைந்தான்.

தலையில் அடிபட்டு ரத்தம் வழிய மயங்கிக் கொண்டிருந்த என்னை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான். ஒரு அந்நியனைப் பார்ப்பதைப் போன்ற வெற்றுப் பார்வை! புதிதாகப் பார்ப்பதைப் போல.

யாரோ மனோவாம். இவர் பிரெண்ட். நம்மளப் பத்திச் சொல்லிட்டானாம். என்னைத் தாக்க வந்தார். தற்காப்புக்காகத் தள்ளி விட்டேன். மனுஷன் செத்துட்டான் போல இருக்கு. டூ சம்திங் முரளி என்று அவனைப் பார்த்து இரைந்தாள்.

சரியென்று தலையாட்டிவிட்டு என்னருகே வந்து என்னை ஒரு முறை பார்த்தான். மீண்டும் அதே  அந்நியமான வெற்றுப் பார்வை.  கொஞ்சம் பரிதாபமும் விரோதமும் கூட தெரிந்தது. நான் மரணத்துக்குள் சென்று கொண்டிருந்தேன். தன் செல்லை எடுத்துப் போலீசுக்குப் போன் செய்தான்.


ஹல்லோ போலீஸ் கண்ட்ரோல்? என் பிரெண்ட் வீட்டிலேர்ந்து பேசுறேன். இங்க ஒரு ஆக்சிடண்ட். என் பிரெண்ட் ஹஸ்பண்ட் டேபிள் மொனையில அடிபட்டு மயக்கமாயிட்டாரு. செத்துட்டாரோன்னு ஒரு சந்தேகம். எஸ். என்னது? என் பேரா? என் பேரு முரளிமனோகர்

Saturday, April 18, 2015

சாகப் பிடிக்காதவர்கள் : சிறுகதை

சாகப் பிடிக்காதவர்கள் : சிறுகதை
என்ன இருந்தாலும் தாம்பரம்னா  தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம் முழுக்க மதுரை திருச்சின்னு ஆபீஸ் விஷயம் டூர்ல இருந்த எனக்கு இந்தக் குளிர் ரொம்பவுமே இதமா இருந்துது. நேத்து ராத்திரி தான் தாம்பரம் வந்தேன். ஒரு சின்ன வாக் போலாம்னு வெளியே வந்திருந்தேன். மனைவி நச்சரிப்புப் தாங்காம எடுத்த வந்த மப்ளர் கழுத்தைச் சுற்றி ஸ்டைலாகக் கிடந்தது.

அந்தக் குளிருக்கு ஒரு தம் போட்டா இன்னும் சுகம்னு தோண காமராஜபுரம் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இருந்த டீ கடைக்குப் போய் ஒரு ஸிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். அதை ஒரு இழுப்பு இழுத்து நுரையீரலில் புகையை நிரப்பி நாஸி வழியாக வெளியேற்றுகையில் தான் விக்டரைப் பார்த்தேன். அதிர்ந்தேன்.

என் கையில் இருந்த ஸிகரெட் கீழே விழுந்தது. என் திறந்த வாய் மூடவில்லை. உடம்புல மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு.

விக்டர்! என்னோட காலேஜ் மேட். ஏர் போர்ஸ் மேட். ரெண்டு பேரும் ஒரே வருஷத்துல தான் ஏர் போர்ஸ் ஜாயின் பண்ணினோம். ஒரே வருஷத்துல தான் காண்ட்ராக்ட் பீரியட் முடிஞ்சு வெளியவும் வந்தோம். நான் மார்கெட்டிங் லைன்ல போயிட்டேன். விக்டர் ஒரு மொபைல் கடை வைத்துவிட்டான். தாம்பரம் கேம்ப் ரோட் கிட்ட. நல்ல பெரிய கடை. நல்ல சேல்ஸ் கூட. இப்ப அத கொஞ்சம் விரிவு செஞ்சு கம்ப்யூடர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கூட வைத்து விட்டான்.

அதுக்காக நான் ஏன்  அதிர்ச்சி அடையணும்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது. இன்னிக்குக் காலைல வீட்ட விட்டு வாக்குக்கு வெளியே வந்த போது என் மனைவி மப்ளர் மட்டுமா தந்தாள்? என் காலேஜ் மேட் விக்டர் செத்துப் போன செய்தியையும் சேர்த்துத் தந்தாள். மேற்குத் தாம்பரத்துல ப்ரிஜ் மேல நடந்த ஒரு விபத்துல விக்டர் போயிட்டானாம். அதுனால வாக் போயிட்டு வந்த பிற்பாடு அவங்க வீட்டுக்கு நான் போயி துக்கம் விசாரிக்கணும்னும் சொல்லிட்டா.

அவ செத்துப் போனதா சொன்ன விக்டர் என் எதிர்ல! என் அதிர்ச்சிக்கு காரணம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். சரி, கதைகள்ல வர்ற மாதிரி, நண்பனைப் பார்க்க விக்டர் ஆவிதான் வந்திருக்கு போல என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போதே டே மச்சான்! எப்படா வந்த? என்று கேட்டவாறே அருகில் வந்த விக்டர் ஆவி .. சேச்சே.. விக்டர் கடைக்காரரிடம் ஒரு பில்டர் கொடுப்பா என்று கையை நீட்டினான்.

நெருப்பைக் காட்டினால் பேய்கள் ஓடி விடும் என்று படித்திருக்கிறேன். இங்க என்னடானா பேயே ஸிகரெட் பிடிக்கிறதே! கலிகாலம்! (ஆமாம் கிறித்துவர்களுக்குக் கலி காலம் உண்டா?)

மச்சான் எப்படா வந்த டூர்லேர்ந்து? எனக்குத் தெரியவே இல்லையே. சிஸ்டர் கூட சொல்லலையே!

இல்லை விக்டர்! நேத்து நைட்டு தான் வந்தேன். இன்னைக்கு உன் வீடு வரைல வரலாம்னு தான் இருந்தேன் என்று இழுத்தேன். உன் சாவுக்குத் துக்கம் விசாரிக்க வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல வந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ம்ம்ம்... எல்லாம் விதி! யாருக்குத் தெரியும் இப்படி ஆகும்னு?  திடீர்ன்னு குறுக்க வந்த வண்டி மேலதான் தப்பு. என்றான். நான் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டேன். தான் செத்ததுக்கு குறுக்க வந்த வண்டிதான் காரணம் என்று செத்தவனே சொல்கிறான். நானும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

அப்புறம் சிஸ்டர் எப்படி இருக்காங்க? கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. ஒரு பதினொரு மணிக்கு மேல. அப்புறம் என்கிட்டே சில்லறை இல்ல. இந்த சிகரெட்டுக்கு நீயே காசு கொடுத்திடு என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விடு விடு என்று நடந்து அந்த அதிகாலைப் பனிக்குள் மறைந்தான்.

நான் மந்திரிச்சு விட்ட கோழி கணக்கா ரெண்டு சிகரெட்டுக்குக் காசு கொடுத்தேன். கடைக்காரன் என்னைபார்த்து பாவம் ஸார் அவரு! என்ன வயசு ஆச்சுன்னு இப்ப டெத் வரணும்? இன்னும் வாழ்ந்திருக்கலாம் என்றான். என்னைக்குத் துணிவே துணை படத்தோட ஆரம்பக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆண்டவா! என்ன சோதனை! காமராஜபுரத்துல பேய்களா! அதுவும் சர்வ சாதரணமாக உலவுதா! எல்லாரும் அத சகஜமாக எடுத்துக்க வேற செய்யுறாங்களே! தெய்வமே!  என் உடம்புல திரும்பவும் அதே மின்சாரம்.

திடீரென்று கை சில்லிட்டது போலத் தோன்றவும் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டேன். கையில் மொபைல் நிரடியது. திடீரென்று ஒரு எண்ணம்! எடுத்து விக்டர் வீட்டு லேன்ட்லைன் நம்பரைப் போட்டேன். சில ரிங்குகளுக்குப் பின்னர் போன் எடுக்கப்பட்டது.

ஹல்லோ விக்டர் அப்பா!

அங்கிள்! நான் வெங்கட்! விக்டர் பிரெண்ட்

சொல்லு வெங்கட்! என்ன விஷயம்? ஏன் பதறினாபோலப் பேசற?

ஒண்ணுமில்லை அங்கிள். சும்மா வாக்கிங் வந்தேனா. ரொம்ப குளிர். அதுனால மூச்சு வாங்குது. சும்மாதான் போன் பண்ணினேன். விக்டர் இருக்கானா?

அங்கிள் சிரித்தார். எப்படித்தான் ஏர் போர்ஸ் காரங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்களோ தெரியல. அவனும் ஒன்னிய மாதிரிதான். வாக்கிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கான். அரை மணில வந்திருவான். வந்தாவுட்டு போன் பண்ணச் சொல்றேன்.

எனக்குப் பாவமாக இருந்தது. அங்கிளுக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். மகன் இறந்த செய்தியைத் தாங்க முடியல போல. இன்னும் உயிரோடவே இருக்கறா மாதிரி நெனச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கார். பாவம்

சரி அங்கிள் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். மேற்கொண்டு வாக்கிங் போகப் பிடிக்காமல் வீட்டுக்குத் திரும்பினேன்.

கிச்சனில் காப்பி மணம். நான் செலுத்தப்பட்டவன் மாதிரி கிச்சனை நோக்கிச் சென்றேன். மனைவி ரெடியாக வைத்திருந்த காப்பியை எடுத்துத் தந்தாள்.

அந்த குளிருக்கும், அதிர்ச்சிக்கும் காப்பி மருந்து போல இருந்தது. இரண்டு மடக்குக் குடித்துவிட்டு மனைவியைப் பார்த்து விக்டரை வழியில் பார்த்தேன். அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசினேன் என்று சொன்னேன்.

அவள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவாள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது. அவள் இந்த நேரத்துல அவங்க அப்பா விக்டர் சீனியர் இறந்து போனதுக்கு துக்கம் விசாரிச்சீங்களா? இப்படி எடக்கு மடக்க ஏதானும் ஏங்க பண்ணறீங்க? என்று அலுத்துக் கொண்டாள்.

என் கையில் இருந்த காப்பி டம்ளர் கீழே விழுந்தது.