மறைந்த இடைவெளிகள்
பெங்களூருவின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பதினோராவது மாடியில், காலை நேரத்து பில்டர் காபி வாசனை கமகமத்தது. மீனாட்சி பித்தளை டபரா செட்டில் காபியை ஆற்றி, பூஜை அறையிலிருந்து வந்த சிவகுமாரிடம் நீட்டினாள்.
"இந்தாங்கோ... காபி. என்ன இன்னிக்கு காலம்பரமே பலத்த யோஜனை?"
சிவகுமார் காபியை உறிஞ்சிக்கொண்டே ஜன்னல் வழியாகத் தெரிந்த சிமெண்ட் கட்டிடங்களைப் பார்த்தார்.
"என்னமோ மீனாட்சி... மனசு ஒரு இடத்துல தங்க மாட்டேங்குறது. இந்த பெங்களூரு வந்தாச்சு, பையன் கூட இருக்கோம்ங்கிற திருப்தி இருக்கு. ஆனா, இந்த வீடு என்னமோ ஒரு ஜெயில் மாதிரி தோணறது. நமக்கோ வயசாயிடுத்து, கை கால் நடுக்கம் வந்துடுத்து. ஆத்துல ஒரு பிடிமானம் இல்லாத மாதிரி ஒரு பயம்."
அந்த நேரம் ரமேஷ் தன் லேப்டாப்போடு ஹாலுக்கு வந்தான். முகம் முழுக்க டென்ஷன். "அம்மா! அந்த முக்கியமான பைல்ஸ் இருந்த பென்டிரைவ் எங்க வெச்சேன்னு தெரியலை. சீக்கிரம் தேடுங்க, பத்து நிமிஷத்துல மீட்டிங் ஆரம்பிச்சிரும்!"
சிவகுமார் மெதுவாக எழுந்தார். "இருடா... நான் நேத்து அந்தப் பக்கம் பார்த்தேன். தேடித் தர்றேன்."
"அப்பா! நீங்க சும்மா இருங்கோ... நீங்க கை வெச்சா அது இன்னும் எங்கியாவது போயிரும். வித்யா! வித்யா... அந்தப் பென்டிரைவ் எங்கே?" என்று கத்தினான் ரமேஷ்.
சமையலறையிலிருந்து வந்த ரமேஷின் மனைவி வித்யா, அமைதியாகப் பென்டிரைவை எடுத்துக் கொடுத்தாள். ரமேஷின் கோபத்தைக் கண்டு அவள் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் மாமனாரின் வாடிய முகத்தைப் பார்த்தாள்.
அன்று மாலை ஒரு விபரீதம் நடந்தது. ரமேஷ் தன் ஆபீஸ் வேலையாக ஒரு புதிய 'டிஜிட்டல் டேப்லெட்' வாங்கியிருந்தான். அதன் ஸ்க்ரீன் மிக மெல்லியது. சிவகுமார் அதைத் துடைப்பதாக நினைத்து, அழுத்தமாகத் துணியை வைத்துத் தேய்க்க, 'சடக்' என்ற சத்தத்துடன் ஸ்க்ரீன் விரிசல் விட்டது.
மீனாட்சி பதறிப்போனாள். "ஐயோ... இதென்ன காரியம் பண்ணிட்டேள்? ரமேஷ் பார்த்தா கோவப்படுவானே !"
சிவகுமார் திகைத்து நின்றார். ரமேஷ் உள்ளே வந்தான். உடைந்த டேப்லெட்டைப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன. வித்யா ரமேஷின் கையை மெதுவாகப் பிடித்தாள். அவள் ரமேஷின் கண்களைப் பார்த்துத் தலையசைத்தாள். ரமேஷ் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
"பரவாயில்லைப்பா... ஸ்க்ரீன் தானே மாத்திண்டா போச்சு ? Also ,இதோ பாருங்கோ, இன்னொரு டேப்லெட் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன். நாளைக்கே வந்துரும். நீங்க காபி சாப்பிட்டேளா? வித்யா, அப்பாவிற்கு ஒரு காபி எடுத்துண்டு வா," என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
சிவகுமார் அப்படியே உறைந்து நின்றார். அந்த அறை முழுக்க ஒரு பயங்கரமான மௌனம் நிலவியது. அவர் எதிர்பார்த்த சண்டை வரவில்லை.
அன்று இரவு சிவகுமார் தூக்கமில்லாமல் தவித்தார். விடியற்காலை வேளையில் மீனாட்சி அவர் அருகில் வந்து அமர்ந்து மெதுவாகப் பேசினாள்.
"என்னன்னா ... தூக்கம் வல்லையா? ஒங்க மனசுல என்ன ஓடிண்டு இருக்குன்னு நேக்கு தெரியாதா? ரமேஷ் நீங்க செஞ்ச காரியத்துக்கு ஒங்கள நாலு வார்த்தை கத்தணும்னு நீங்க காத்துண்டு இருந்தேள். அவன் கத்தினாக்க ' உனக்கு நான் பாரமா இருக்கேன், நாளைக்கே நான் பாலக்காட்டுக்கே கெளம்பறேன், அந்தப் பழைய வீட்ல ஒரு ஓரமா கிடப்பேன்'னு பழைய பல்லவியப் பாடி அவனைக் guilt feeling ல தள்ளணும்னு நீங்க மனக்கோட்டை கட்டி வெச்சிருந்தேள். இல்லையா?
உங்களுக்கு நிஜமாவே பாலக்காடு போகணும்னு ஆசை இல்லை. ஆனா அவன் உங்களைத் திட்டும் போதுதான் இவன் என் மேல அதிகாரமும் கோபமும் காட்டுறான், நான் இவனுக்கு அந்நியமாகல'ன்னு நீங்க ஒரு திருப்தி பட்டுக்கறேள். நேத்து அவன் திட்டாமப் போன உடனே, ஒங்களால அந்த டயலாக் சொல்ல முடியல . அதான் உங்களுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா இருக்கு. அவன் உங்களை மதிக்கிறான்னா , அதான் திட்டல."
சிவகுமார் மெதுவாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அப்போது ரமேஷ் அங்கே வந்தான். "என்னப்பா... என்ன பேச்சு காலம்பரமே?"
சிவகுமார் எழுந்து ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டார். "டேய்! சாரிடா ரமேஷ்... நான் வேணும்னே பண்ணல, ஆனா நீ திட்டலங்கிறப்போ நேக்கு ஒரு மாதிரி ஆயிடுத்துடா . இனிமே நான் பாலக்காடு போற பழைய பேச்சை எடுக்க மாட்டேன்."
ரமேஷ் சிரித்தான். "அப்பா... நீங்க எப்பவும் எங்களோட இங்கத்தான் இருப்பேள். இந்த weekend நாம எல்லாரும் பாலக்காடு போறோம்... ஆனா அங்க தங்குறதுக்கு இல்ல, நம்ம குலதெய்வம் கோவிலுக்கு ! என்ன சொல்றேள்?"
மீனாட்சி, அதைக் கேட்டுக்கொண்டே, உள்ளே இருந்து சூடாக காப்பி எடுத்துக்கொண்டு வந்தாள். "ஆஹா! குலதெய்வம் கோவில் போனதுக்கு அப்புறம் அப்படியே என்னோட பொறந்த ஊர் கல்பாத்திக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்துறலாம். என்னன்னா போயிட்டு வரலாமா ?"
சிவகுமார் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பில் பழைய வீட்டின்ஏக்கம் இல்லை மாறாக புதிய வீட்டின் உரிமை இருந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இப்பத்தான் நிஜமான சந்தோஷம் குடிவந்தது.
வீயார்
No comments:
Post a Comment