Sunday, December 15, 2013

அனிதா - By Venkatesh Radhakrishnan Iyer







டாக்டர் தன் ரூமில் ஏதோ ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
சர், உள்ளே வரலாமா?” என்று அனிதா தயங்கியபடியே கேட்டாள். “அடேடே, வாம்மா வா. வந்து இப்படி உட்காருஎன்று டாக்டர் சம்பந்தம் தன் எதிரில் உள்ள நாற்காலியைக் காட்டினார்.
 
நாற்காலியில் உட்கார்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே சம்பந்தத்தை பார்த்தாள். அவளைப் பார்த்து ஒரு ஸ்நேக புன்னகையோடு டாக்டர் இப்போ சந்தோஷம் தானே? ஆத்துக்காரர் டேஞ்சர் ஜோனில் இருந்து வெளியே வந்தாச்சு. இன்னும் என்ன சிரிக்கறதுல கஞ்சத்தனம்? நன்னாத்தான் சிறியேன்என்று சொன்னார். அவருடைய இந்த வேடிக்கைப் பேச்சைக் கேட்டதும் அவளையுமறியாமல் அனிதாவின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
 
குட், இப்பத்தான் நன்னா இருக்கு. இந்த இதுல எல்லா ரிப்போர்டும் இருக்கு. இன்னைக்கு சாயந்திரம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். வாரத்துக்கு ஒரு தடவயா நாலு வாரம் செக்அப்புக்கு வரணம். சரியாஅப்பறம் பணத்தைக் கட்டறதுக்கு அரேஞ்ச்மென்ட் பண்ணு.” என்று சரமாரியாக பேசிக்கொண்டே போன சம்பந்தம், ஒரு prescription-ஐ கொடுத்து இதில் எல்லா மருந்தும் எழுதியிருக்கேன். எப்ப குடுக்கணம், எத்தன குடுக்கணம், எல்லா டீடெயில்சும் இருக்கு. இந்தா வாகிக்கோஎன்று இவள் கையில் கொடுத்தார்.
 
சரி டாக்டர், நான் bankகிற்கு போய் பணம் எடுத்துக்கிட்டு வரேன்என்று சொல்லியபடியே எழுந்தாள். பின் கணவன் இருக்கும் ரூமின் திசையில் நடக்கத் துவங்கினாள்.
 
ரூம் கதவை மெதுவாக திறந்தவள் அதிர்ந்தாள். மகேஷின் பெட் மீது அந்த இளம் நர்ஸ் உட்கார்ந்து இருக்க, அவன் கைகள் அவள் இடையை தழுவியிருந்தன. அப்போது தான் முத்தம் கொடுத்துப் பிரிந்திருப்பார்கள் போன்ற ஒரு முகபாவமும் நெருக்கமும் அவர்களிடத்தில் இருந்தது.
 
திடீரென்று உள்ளே நுழைந்த அனிதாவின் வரவால் அதிர்ச்சியடைந்த நர்ஸ் பெட்டிலிருந்து கீழே இறங்கி வேகமாக ரூமை விட்டு வெளியே போனாள்மகேஷ் எதுவுமே நடக்காதது போல சாவகாசமாக உட்கார்ந்திருந்தான். ஒரு புழுவைப் போல அவனைப் பார்த்த அனிதா “bankகிற்கு போய் பணம் எடுக்கப் போறேன். சாயந்திரம் டிஸ்சார்ஜ். போயிட்டு ஒருமணி நேரத்தில வரேன்என்று சொல்லி விட்டு வெளியே போனாள்.
 
ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்து பஸ் ஸ்டாண்டில் நின்றாள். அவள் மனம் கொதிப்படைந்திருந்தது. “ சே! மனுஷனா மிருகமா? அப்படி என்ன காமத்துக்கு அடிமையா இருக்கறது? செய்யறதையும் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி எப்படி உட்கார முடியுது? அந்தச் சிறுக்கியும் தான் ஆகட்டுமே, அது என்ன அரை மணி நேரத்துல கவுந்துடுவாளா? என்ன ஜன்மம்!” என்று தன் கணவனையும் அந்த நர்சையும் மனதுக்குள்ளே திட்டிக் கொண்டிருந்தாள்.
 
சிறிது நேரத்தில் பஸ் வந்தது. ஒரே கூட்டம். உட்கார இடம் கிடைக்கவில்லை. டிக்கட் வாங்கிக் கொண்டு பெண்கள் பகுதி பக்கமாக நின்று கொண்டாள். மனதில் ஏதேதோ போராட்டம். உடம்பும் கொதித்தது. அதனால் அந்த வாலிபன் அவளுக்கு மிகவும் அருகில் நின்று கொண்டிருந்தது அவளுக்கு உறைக்கவில்லை. ஒரு இரண்டு நிமிடம் கழித்துத் தான் அவள் அவனைப் பார்த்தாள்.
 
25 வயது இருக்கும். தோளில் ஸ்கூல் பேக் மாதிரி ஒன்று மாட்டியிருந்தான். இல்லை லேப்டாப் bag-நல்ல உயரம். மாநிறம். ஜீன்ஸ் ட் ஷர்ட் அணிந்திருந்தான். சரி ஏதோ தெரியாமல் கூட்டத்தில் பின்னால் நிற்கிறான் என்று அவள் சற்று தள்ளி நின்றாள். உடனே சொல்லி வைத்தாற்போல் அவனும் முன் போலவே அவள் அருகில் வந்து நின்று கொண்டான்.
 
அனிதாவின் மனதுக்குள் எரிமலை வெடித்தது. மகேஷ், நர்ஸ் என்று எல்லாரும் அவள் மனத்திரையில் வேகமாக வந்து போனார்கள்.
 
என்ன ஆண்வர்கம்? வெட்கம் கெட்டது. இவனை விட எத்தனை வயது பெரியவள் நான்? அந்த வயசுக்காவது மரியாதை வேண்டாமா? அப்படி என்ன நேரம், காலம், இடம் பார்க்காத காமம்? இவனுங்கள எல்லாம் இப்படியே விட்டா நாளைக்கு மகேஷ் மாதிரி தான் ஆவான். தட்டிக் கேட்கலைனா திருந்தமாட்டான் என்று மனதுக்குள் கறுவியபடியே டேய்! என்னடா பண்ணற? அக்கா தங்கச்சியோட பொறக்கலியாடா நீயெல்லாம்? அப்பப் பிடிச்சி நானும் பாக்கறேன், என் பின்னாடியே ஒட்டிகிட்டு ஓரசிக்கிட்டு நிக்கறியே நாயேஎன்று உரத்தக் குரலில் கத்தியவாறே அவன் ஷர்ட் காலரை பிடித்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள்.
 
அவ்வளவுதான். “நிறுத்துப்பா வண்டிய என்று யாரோ ஒருத்தன் குரல் கொடுக்க, பஸ் நின்றது. அதற்குள் விஷயம் தெரிந்து நாலைந்து பயணிகள் அந்த வாலிபனை பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். “ஐயோ, என்ன விட்ருங்க, நான் எதுவும் தப்பு செய்யலஎன்று அவன் கதறினான்.
 
அதற்குள் அங்கே வந்த கண்டக்டர் யோவ், விடுய்யா அவர, என்ன செஞ்சாருனு அடிக்கறீங்க? எனக்கு அவர நல்லா தெரியும், அவர் அப்படிப்பட்டவர் இல்லஎன்று சொல்லி ஒரு வழியாக அந்த வாலிபனை அடியிலிருந்து விடுவித்தார்.
 
சார், என்ன சார் நடந்தது? சொல்லுங்க சார்என்று கேட்ட கண்டக்டரிடம் தன் உதட்டில் இருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே அந்த வாலிபன் சொன்னான்.
 
சார், இந்த அக்காவோட பொடவ முழங்கால்கிட்ட பின்பக்கம் ஏதோ ஆணியிலே மாட்டி கிழிஞ்சிருக்கு. அது இந்த அக்காவுக்கு தெரியல. நான் பஸ் ஸ்டாண்டிலேயே பார்த்துட்டேன். அங்க இருந்த ரெண்டு பொறுக்கி பசங்க அதப் பாத்துட்டு இவங்க இந்த பஸ்ல ஏறினதும் அவங்களும் ஏறிட்டாங்க. அவங்க கிட்ட இருந்து இவங்கள காப்பாத்தத்தான் நான் இவங்க பின்னாடியே நின்னேன். அத இவங்க தப்பா புரிஞ்சிகிட்டு என்ன அடிச்சிட்டாங்க. பரவால்ல சார் போகட்டும் பெருசு பண்ணாதீங்க. என் அக்கா அடிச்சா நான் வாங்கிக்க மாட்டேனா? இவங்களும் அக்கா மாதிரிதான்
 
அவன் சொன்னதைக் கேட்டு ஒரு அமைதி நிலவியது. நிலைமையின் விபரீதம் புரிந்து அந்த இரண்டு பொறுக்கிப்பசங்களும் வண்டியிலிருந்து நழுவினர்.
 
பாத்தியாமா, விஷயம் என்னனு தெரியாம இப்படி முட்டாள்தனமா நடந்துக்கிட்டியே! இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். தன் புருஷன் மட்டும் தான் நல்லவன். மத்தவன் எல்லாம் பொம்பளைப் பொறுக்கினு அவளுங்களுக்கு நினைப்புஎன்று கண்டக்டர் சொன்னார்.
 
அதைக்கேட்ட அனிதா பெரிதாக சிரிக்கத் தொடங்கினாள்.
 
சுற்றியிருந்தவர்கள் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
 

No comments: