Tuesday, February 18, 2014

மாய மான்

எத்தனை வருஷங்கள் ஓடிப்போயாச்சு? நினைக்கவே ரொம்ப பிரமிப்பா இருந்தது ராகவனுக்கு. இத்தனை வருஷமா அவன் கட்டிக்காத்து வந்த விரதம் உடைந்தது உள்ளூர ஒரு ரகசிய சந்தோஷத்தை கொடுத்தது.

அந்தக்காலத்து  திருவல்லிகேணிக்கு அவன் மனம் அவனைப் பின்னோக்கி இழுத்தது. திருவல்லிக்கேணி என்றவுடன் பார்த்தசாரதி கோவிலும், அதன் மாடத் தெருக்களும், தேரடித் தெருவும், ‘கங்கணா’ மண்டபமும் நினைவில் வந்து போயின. இவையெல்லாம் வந்து போன பிறகு இவன் மனசுக்குள் வந்தாள் சித்ரா.

அவள் நினைவு வந்ததும் உடம்பெல்லாம் குறுகுறுவென்று ஏதோ செய்தது. உடனே சிகரெட் பிடிக்க வேண்டும் போல நாக்கு கட்டளை இட்டது. சிகரட் பிடிக்கலாமா கூடாதா என்ற சந்தேகத்துடன் ஏஸீ கம்பார்ட்மென்ட் கதவை திறந்து கொண்டு வந்தவன் வாசல் கதவு அருகில் ஒரு போலீஸ்காரர் புகைத்து கொண்டிருப்பதை பார்த்து அவரிடமே தீப்பெட்டி கேட்டு தன் சிகரெட்டை பற்ற வைத்து கொண்டான். ஒரு இழுப்பு இழுத்ததும் மீண்டும் மனசுக்குள் சித்ரா வந்தாள்.

இவன் காலேஜ் படித்த  இறுதி  வருஷம் தான் இவன் அம்மா தவறினாள். பின்னர் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் இவனும் அப்பாவும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள். புது வீட்டுக்கு வந்தால் நேரும் அசௌகரியங்கள் எல்லாம் அவளைக் கண்ட மாத்திரத்தில் மறைந்தது. இப்படி ஒரு பால் நிறத்தில் ஒரு பெண்ணை ராகவன் அது வரையில் பார்த்து இல்லை. ஏதோ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி.

ராகவன் தான் வாழ்வில் எடுத்த முதல் சபதம் அவள் தன்னை காதலிக்குமாறு செய்ய வைப்பது தான். அவள் எழுந்திருக்கும் நேரம் முதல் இரவு அவள் தூங்கச் செல்வது வரை சித்ராவின் ஒவ்வொரு செயலும் அவன் மனதில் அட்டவணை ஆனது.

முதலில் இவனை  உதாசீனப்படுத்தியவள் ஒரு நல்ல நாள் காலையில் இவனைப் பார்த்து கவர்ச்சியாக ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்து இசைந்தாள். அந்த முதல் வெற்றியின் இனிப்பு இன்றும் அவன் மனதை இனிக்க செய்தது.

அதற்கப்புறம் கோவில் பீச் என்று யாருக்கும் தெரியாமல் சந்தித்துகொண்டார்கள். காதல் மிகவும் இறுகியது. ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை போல. இப்படி இருக்கின்றபோது தான் விதி அந்த நாளை இவர்கள் முன் வைத்தது.

ஒரு நாள் அதே தெருவில் இருந்த இன்னொரு குடும்பத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருவரின் குடும்பங்களும் சென்றன. இவர்கள் இருவருக்கும் அடுத்த நாள் ஒரு தேர்வு இருந்ததால் செல்லவில்லை.

இருவரின் குடும்பமும் சென்ற ஒரு அரை மணி நேரம் கழித்து இவன் அவள் வீட்டுக்கு சென்றான். முதல் முறையாக அவளை அவள் வீட்டிலேயே சந்தித்தான்.

ஏதேதோ பேசினார்கள். வாய் ஏதோ பேச கண் வேறெதுவோ பேசியது. அடுப்பில் வைத்த பால் போல இருவரின் உள்ளங்களும் மெதுவாக கொதிக்க தொடங்கின. அந்தக் கொதிப்பை தடுக்கத் தெரியாமல் விரும்பாமல் இருவரும் அதன் போக்கிலே விட்டார்கள்.

யாருமில்லாத வீட்டில் ஒரு இனிமையான கணத்தில் இருவரும் இணைந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் இதழ்களால் தின்று கொண்டார்கள். அவர்கள் காதல் காமத்தின் பிடியில் சிக்குண்டது. அவர்கள் தங்களையே இழந்தார்கள்.

உறவின் இன்பம் நேரத்தை மறக்கடித்தது.  காமம் தீர்ந்து ஆடைகள் அணிந்த பின்னரும், இதழோடு இதழ் சேர்ந்திருந்தார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் தங்களை மறந்து இருந்த அவர்களை சித்ராவின் அப்பா குரல் நிகழ்காலத்துக்கு மீட்டு வந்தது.

அதற்கு பிறகு நடந்தது பழைய பீம்சிங் படக் காட்சிகள் போல் இருந்தன. பல விதமான குழப்பம் கூச்சலுக்கு பின் இவன் அப்பா இவனை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ராகவன் இதோ இப்பொழுது தான் ஊருக்கு சென்று கொண்டு இருக்கிறான். சுமார் ஐந்து  வருஷங்களுக்கு பிறகு. சென்னையிலிருந்து மும்பை சென்ற அவன் எப்படியெல்லாமோ போராடி வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்து விட்டான். இவன் பாலிய நண்பன் கண்ணனை போன் வாரம் எதேச்சையாய் சந்தித்தப் போதுதான் அவன் அப்பா இப்போது அடையாரில் இருப்பதாக தெரிந்து கொண்டான். கண்ணன் அவன் அப்பாவின் அட்ரசும் தந்தான். இரண்டு  நாளாக அப்பாவைப் பார்க்க போக வேண்டும் போல இருந்தது. ஆனால் அவன் உள் மனதோ ‘ டேய் நீ உன் மாயமானைத் தேடி தானே போகிறாய்?’ என்று கிண்டலடித்தது.

ஆமாம் அதில் தவறு என்ன? நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். இனிமேல் நேராகப் போய் சித்ராவை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க என்று கேட்டுவிட வேண்டியதுதான், என்ற முடிவுக்கு வந்து இதோ இப்போதைய பயணம்.

ஊர் வந்து சேர்ந்தது. சென்ட்ரலில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து ‘ அடையாருக்கு  போப்பா ’ என்றான். சிறிது நேரத்தில் அந்த வீட்டிற்கும் வந்து சேர்ந்தான். ஆட்டோக் காரனுக்கு பணம் தந்து அனுப்பி விட்டு மாடியேறி தன் வீட்டு (அப்பா வீடு?) காலிங் பெல்லை அழுத்தினான்.
சில நொடிகளில் ‘ யாரு?’ என்று கேட்டபடியே வந்து கதவைத் திறந்தாள் சித்ரா.

முதலில் இவனைத் தாக்கியது அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி தான். (பாவி!). ‘ சித்தூ யாரு வந்திருக்காடி?’ என்று கேட்டபடியே ஒரு குழந்தையை தூக்கியபடி உள் ரூமிலிருந்து வெளியே வந்தது அவன் அப்பா!!!!

இத்தனை அதிர்ச்சிகளுக்கிடையில் ‘சித்ரா எப்போது சித்தூ ஆனாள் ?’ என்று அவன் மனம் நேரம் காலம் தெரியாமல் யோசித்தது.

‘டேய் ராகவா, அது வந்து.....’ என்று இழுத்த அப்பாவை ‘ நானே சொல்லிக்கறேன் நீங்க உள்ளே போங்கோ’ என்று அதட்டி விட்டு ஒரு கப் காப்பி எடுத்துக் கொண்டு வந்து இவனை வலுக்கட்டாயமாக உட்கார்த்தி அவள் சொன்னதன் gist  இதுதான்.

‘இவர்களோட ராவுகள்’ பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதன் பிறகு இவன் வீட்டை விட்டு சென்றும் விட்டான். நடந்த சம்பவம் சித்ராவின் பெற்றோரை மிகவும் பாதித்தது. ஏற்கனவே இருதய நோயாளிகளான அவள் பெற்றோர் அந்த அதிர்ச்சி தாளாமல் ஒரு வாரம் கழித்து போய்ச்சேர்ந்தார்கள்.

காரியங்கள் முடிந்த பின் நிர்கதியாய் நின்ற சித்ராவை தன் வீட்டில் வைத்து கொண்டார் இவன் அப்பா.  அப்படி இருக்கையில் திடீரென்று சித்ரா ஒரு நாள் வாந்தி எடுத்தாள்.
இந்த விஷயம் வெளியில் பரவி ஒரே ரசாபாசம். இது தன் மகனால் நடந்தது என்று அவன் அப்பா மன்றாடிப் பார்த்தாராம். ஆனால் அவரை நம்புவதற்குத் தான் யாருமில்லை. கடைசியில் சில பொதுநல விரும்பிகளின் யோசனைப்படி இவன் அப்பா சித்ரா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் அதே ஏரியாவில் இருக்க விரும்பாமல் அடையார் குடி பெயர்ந்தார்கள். இப்போது கையில் ஒரு சுமார் நாலு வயது குழந்தை!

சித்ரா சொன்ன விஷயங்களைக் கேட்டு ராகவன் சிலையானான். அவன் கனவுகள் சிதைந்தன. ‘ என்னை மன்னிச்சுடு ராக்ஸ்’ என்று சித்ரா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அப்போது தான் அந்த குழந்தை ‘ அம்மா’ என்றபடியே அந்த அறைக்குள் வந்து. அதைப் பார்த்ததும் அவளிடமிருந்து தன் கைகளை சட்டென்று ராகவன் விடுவித்துக் கொண்டான்.

வாயில் விரலைச் சூப்பிகொண்டே சித்ராவின் அருகில் சென்ற அந்த குழந்தை சூழ்நிலைப் புரியாமல் இவன் யார் என்பது போல் தன் அம்மாவைப் பார்த்தது. ‘ அப்...’ என்று ஆரம்பித்தவள் நாக்கைக் கடித்துக்கொண்டு ‘ அண்ணாடா’ என்றாள் இவன் கண்களைப் பார்த்தபடியே.

ராகவனுக்கு உலகம் இருண்டது.

No comments: