Monday, April 13, 2026

உத்தரா (க்கள்)

 உத்தரா (க்கள்)


திருவல்லிக்கேணியின்  சந்துகளில் இப்போதும் என் இளமையின் நினைவுகள் கவிதை பாடிக்கொண்டிருக்கலாம். பார்த்தசாரதி கோவில் மணியோசை  மாட வீதிகளில் கோலங்கள், குளத்தைச் சுற்றி காய்கறி கடைகள், என் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த உத்தரா என்று என் நினைவை விட்டு அகற்ற முடியாத பல சித்திரங்கள்.


உத்தரா. என் மனதை, இளமையை, நினைவுகளை, கனவுகளை ஆக்ரமித்தவள். என் மனதில் ஆழமாக காதலிக்கத் தெரிந்த எனக்கு, லேசாகக் கூட அவளிடம் சொல்லத் தெரியவில்லை. கடைசியில்  ஒரு சுபயோக சுப தினத்தில் அவளிடம் சொல்லியதும்  எவ்வித ஆரவாரமும் இன்றி அவள் என் காதலை ரிஜெக்ட் செய்ததும் என் இதயம் சுக்குநூறாக உடைந்ததும். இன்று நினைத்தாலும் வலிக்கும். 


But I don't love you da என்ற அந்த ஒற்றை வரி என் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் யாரோ சூறையாடிய உணர்வைத் தந்தது. அவளைத் தினசரி சந்திப்பதே ஒரு நரக வேதனையாக மாறிவிட்டது. அந்தச் சமயத்தில் தான் ஒரு வரப்பிரசாதமாக லக்னோவில் எனக்கு வங்கி உத்தியோகம் கிடைத்தது.


காயப்பட்ட இதயம் இளைப்பாற ஒரு புது இடம் தேடி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பிய ரயிலில் நான் ஏறியபோது, என் டைரிக்குள் ஒரு காய்ந்த மல்லிகைப் பூவைப் போல அவள் நினைவையும் அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் நான் வரைந்த அவளது drawing இரண்டை மட்டும் ஒளித்து வைத்திருந்தேன்.



1990-களின் லக்னோ. நவாபிய  கலாச்சாரம் இன்னும் வீதிகளில் மிச்சமிருந்த காலம். அந்த நகருக்கே உரிய ஒரு கம்பீரம், ஒரு நிதானம் என்னை மெல்ல வசீகரிக்கத் தொடங்கியது. நான் தங்கியிருந்தது மகாநகர் ஏரியா. அங்கே ஒரு சிறிய குளிர்பானக் கடை இருந்தது. அது ஒரு வீட்டின் முன்புறம் இருந்தது. அதன் உரிமையாளர் வீடும் அங்கேயே கடைக்குப் பின்னர் இருந்தது. பெரிய வீடு. அங்கு மில்க் ஷேக்குகளைக் காட்டிலும், ‘சாஸ்’ என்று அழைக்கப்படும் மசாலா மோர் மிகவும் பிரசித்தம். சீரகமும், புதினாவும் மணக்க, அந்த மோர் தொண்டையை நனைக்கும்போது, லக்னோவின் கொதிக்கும் வெயில் கூட ஒரு சுகமான அனுபவமாகத் தெரியும்.


அங்குதான் அவளைச் சந்தித்தேன். விதி எவ்வளவு வலிமையானது என்பதை அந்தப் பெண் தன் பெயரைச் சொன்னபோதுதான் உணர்ந்தேன். "உத்தரா சர்மா."


முதல்முறை அவளைப் பார்த்தபோது யாரோ வெள்ளைப் பனியைத் திரட்டி ஒரு சிலையாகச் செதுக்கி வைத்தது போல இருந்தாள். அந்த நளினம், அந்தப் பார்வை,  இதுவரை நான் எழுதிய அத்தனை கவிதைகளையும் அவளது காலடியில் வைத்துவிட்டு எழுதிய பேனாவை உடைத்து எறிந்துவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு ஒரு பேரழகு. ஆனால் திருவல்லிக்கேணி காயப்படுத்திய வடு இன்னும் ஆறாததால் மிகவும் ஜாக்கிரதையாகவே அவளிடம் நெருங்கினேன்.


என் மாநிறமும், கூர்மையான முகமும் அவளைக் கவர்ந்ததா அல்லது நான் சரளமாகப் பேசத் தொடங்கியிருந்த ஹிந்தி அவளுக்குப் பிடித்திருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் உத்தரா சர்மா எனக்கு மிக நெருக்கமான friend ஆனாள் .


லக்னோவின் சரித்திரப் புகழ்பெற்ற லால் பாக் கைசர் பாக் மற்றும் ஹஜ்ரத் கஞ் வீதிகளில் நாங்கள் சுற்றித் திரிந்தோம். நவாப்களின் கோட்டைகளும், பழங்காலக் கட்டிடங்களும் எங்களுக்கு மௌன சாட்சிகளாய் அமைந்தன. 1990-களின் அந்த அந்திப் பொழுதுகள் இன்றும் என் நெஞ்சுக்குள் வர்ணங்களை அள்ளித் தெளிக்கின்றன. பழைய உத்தராவின் காயத்தை இந்தப் புது உத்தரா மெல்ல ஆற்றி வந்தாள். அவளுடன் பழகிய  ஒவ்வொரு நொடியும் கடவுள் எனக்குத் தந்த ஒரு பரிசு போலத் தெரிந்தது.


அப்படியான ஒரு மாலைப் பொழுது. நானும் அவளும் Bara Imambara வில். அவளுக்காக நான் ஹிந்தியில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். என் மனதின் ஆழத்தைப் புரிய வைக்க என் டைரியை அவளிடம் காட்ட விரும்பி எடுத்தேன். இந்த டைரியின் ஒவ்வொரு பக்கமும் கவிதைகளாலும் கோட்டோவியங்களாலும் நிறைந்திருக்கும்.


கவிதை இருக்கும் பக்கத்தைத் தேடி நான் வேகவேகமாகப் புரட்டியபோது தான் விதி சிரித்தது. ஒரு  காகிதம் நழுவி அவள் மடியில் விழுந்தது.  அது நான்  திருவல்லிக்கேணியில்  உத்தரவைப் பார்த்து ரசித்து அவளுக்கே தெரியாமல் வரைந்து வைத்த கோட்டோவியம்.



அவள் அதைக் கையில் எடுத்தாள். அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் படத்துக்கு கீழே இருந்த பெயரைப் பார்த்தாள் . அவளது பெயரான உத்தரா என்று  இருப்பதைப் பார்த்துத் திகைத்தாள்.


"யார் இது?" (ஹிந்தியில் தான்)


நான் உண்மையை மறைக்காமல் அது என் பழைய காதலின் நினைவு  என்பதையும் தற்செயலாக அவளது பெயரும் உத்தரா என்பதையும்  சொல்லிவிட்டேன்.


அவ்வளவுதான். அந்த விநாடி உத்தரா சர்மாவின் கண்களில் ஒரு சொட்டு நீர் திரண்டு அந்தக் காகிதத்தில் விழுந்தது. ஓவியத்தில் இருந்த உத்தராவின் கண் அருகே அந்தக் கண்ணீர்த்துளி விழுந்து அந்த முகத்தையே லேசாகச் சிதைத்தது.


"ஓ... அப்படியானால் என் பெயருக்காகத் தான் என்னிடம் பழகினாயா?" என்று அவள் வாய் திறந்து கேட்கவில்லை, ஆனால் அவள் கண்கள் (ஹிந்தியில் தான் ) அதையே பல  முறை கேட்டன.


அதன் பிறகு அவள் என்னைப் பார்க்க வரவே இல்லை. பல நாட்கள் தவித்துப் போன நான் ஒருநாள் அவளது கடைக்கே தேடிச் சென்றேன். அங்கே மௌனமாக நின்றிருந்த அவளிடம்"ஏன் என்னைச் தவிர்க்கிறாய்? நான் உன்னை உண்மையில் நேசிக்கிறேன்" என்று சொன்னேன்.


அவள் என்னைப் பார்த்த பார்வை இன்றும் என் தூக்கத்தைக் கலைக்கிறது.


"நீ என்னிடம் பழகியது உன்னுடைய அந்த உத்தராவின் நிழலைத் தேடித் தானே? உனக்கு என் மேல் ப்ரத்யேக  காதல் இல்லை. உன் காயத்திற்கு ஒரு மருந்தாகத்தான் என்னை நீ பயன்படுத்திக் கொண்டாய். உன் டைரியில் இருக்கும் அந்த ஓவியம் சொல்லாத கதையை உன் மௌனம் சொல்கிறது" என்றாள்.


நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். 


"இல்லைமா அவள் என் கடந்த காலம். நீ தான் என் நிகழ்காலமும் எதிர்காலமும். உன்னை நான் உனக்காகத் தான்  காதலித்தேன்" என்று சொன்னேன் . ஆனால், அவளது மனதில் விழுந்த சந்தேகம் போகவில்லை. 


நான் அவளைக் காதலிக்கவில்லை என் பழைய காதலின் பிம்பத்தைத் தான் அவளிடம் தேடுகிறேன் என்று அவள் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டாள்.


சில உணர்வுகளை நிரூபிக்க மொழியறிவு மட்டும் போதாது; காலமும் ஒத்துழைக்க வேண்டும். அங்கே அந்த இரண்டுமே எனக்கு  எதிராகச் சதி செய்தன .


மகாநகர் சாலைகளில் இப்போதும் மசாலா மோரின் வாசத்தைப் போல  எனக்கும் உத்தரா சர்மாவுக்குமான அந்த அழகிய பந்தமும் ஒரு மெலிதான சோகத்துடன் அங்கேயே உறைந்து போனது. இரண்டு உத்தராக்கள் என் வாழ்வில் வந்தார்கள். ஒருத்தி என் காதலைப் புரியாமல் போனாள், இன்னொருத்தி என் காதலைச் சந்தேகப்பட்டுப் போனாள்.


அந்த ஓவியம் இன்றும் என்னிடம் இருக்கிறது. முகத்தில் ஒரு கண்ணீர்த் துளியின் தழும்போடு.


வீயார் 

No comments: