Thursday, May 14, 2026

வேற்று மண்

 வேற்று மண்


ரோஜாவின் பதியம் எடுத்து 

வேறொரு மண்ணில் வைத்தேன்..

தண்ணீர் தான் விட்டாயோ 

பூத்துத்தான் குலுங்குதடி..

வெந்நீர் தான் விட்டாயோ 

வாடித்தான் போனதடி..



ஆகாஷும் அஞ்சனாவும் காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆகாஷ் ஒரு software engineer . அஞ்சனா ஒரு ப்ரைவேட் பாங்கில் சீனியர் மேனேஜர். அஞ்சனாவுக்குப் புகுந்த வீடு என்பது ஒரு புதிய நாடு போலிருந்தது. மாமனார் ராமநாதன் ரிடையர்டு டீச்சர். அமைதியான கடல் போன்றவர். ஆனால் மாமியார் ராஜேஸ்வரி? அவள்  ஒரு சுனாமி இல்லை என்றாலும் கரையை அரிக்கும் மெதுவான அலை.


ராஜேஸ்வரிக்கு அஞ்சனாவைப் பிடிக்காததற்குக் காரணம் அவள் எடுத்த லவ் ரூட் தான். தன் மகனைத் தன்னிடம் கேட்காமல் அஞ்சனா அபேஸ் செய்துவிட்டதாக ஒரு தீராத கோபம் அவருக்குள் கனன்றுகொண்டிருந்தது.



இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அஞ்சனா ஆசையாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். "அத்தை ஆகாஷுக்குப் பிடிக்குமேன்னு வெஜ் பிரியாணி பண்ணியிருக்கேன் டேஸ்ட் பாருங்களேன்" என்றாள் .


ராஜேஸ்வரி ஒரு கரண்டி எடுத்து வாயில் வைத்தாள். முகம் சுளித்தது. "என்னவோ போம்மா எங்க காலத்துல எல்லாம் வெஜ் பிரியாணி செஞ்சா வீடே மணக்கும் . இது என்னவோ ஹோட்டல் வாசனை வருது. என் பையன் பாவம் வெளியிலயும் இதையேதான் திங்கிறான் வீட்டுக்கு வந்தும் அவனுக்கு இதானா விதி? அதுவும் இந்த லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்களுக்குச் சாப்பாட்டுல அக்கறை இருக்காது அலங்காரத்துலதான் இருக்கும் போல!"


அஞ்சனாவின் முகம் சட்டென்று வாடியது. அவள் சேர்த்த மசாலாப் பொருட்களை விட அத்தையின் வார்த்தைகள் காரமாகத் தைத்தன.


இன்னொரு நாள்  அஞ்சனா பேங்கில் ஆடிட் முடிந்து வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது. உடல் களைப்பில் கண்கள் சொருகின. உள்ளே நுழைந்தவளிடம் ஒரு வாய்  தண்ணீரைக் கொடுப்பதற்குப் பதில் ராஜேஸ்வரி தன் கணவரிடம் உரக்கச் சொன்னார்:


"பாருங்க பொம்பளப் புள்ளைங்க வேலைக்குப் போறது தப்புன்னு சொல்லல. ஆனா வீட்டுக்கு வந்தா ஒரு விளக்கு ஏத்த வேண்டாமா? மகாராணி  வர்றதுக்கும் மங்களம் பாடுறதுக்கும் சரியா இருக்கு. நான் இந்த வயசுலயும் மாடா உழைச்சு காபி போட்டு வைக்கணும். அவங்க படிச்ச படிப்புக்கு இதெல்லாம் கௌரவக் குறைச்சல் போல!"


அஞ்சனா மௌனமாகத் தன் அறைக்குள் சென்று அழுதாள். அவளது களைப்பை விட அத்தையின் ஏளனப் பேச்சு அவளை அதிகம் நோகடித்தது.


அப்புறம் கிளைமாக்ஸ் போல அந்த தீபாவளி சமயம். அஞ்சனா  ராஜேஸ்வரிக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்தாள். அதைப் பிரித்துப் பார்த்த ராஜேஸ்வரி "என்ன கலர் இது  ஒரு மாதிரியா பழைய துணி மாதிரி இருக்கு. உன் சாய்ஸ் எப்பவும் இப்படித்தான் இருக்குமா? இல்ல என்னைப் பார்த்தா இந்த மாதிரி கட்டிக்கிற ஆள் மாதிரியா தெரியறது? உனக்குப் பிடிச்சதை விட, எனக்குப் பிடிச்சதை தான் வாங்கணும் " என்று அந்த புடவையை வீசி எறிந்தாள். 


ஆகாஷ் இதைப் பார்த்துவிட்டுப் பேச முற்பட்டபோது அஞ்சனாதான் அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.


மறுநாள் காலை. அஞ்சனா அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தாள். ஆகாஷும் ஜிம்முக்குச் சென்றிருந்தான். வீட்டில் ராமநாதனும் ராஜேஸ்வரியும் மட்டும் இருந்தனர்.


ராஜேஸ்வரி ஏதோ புலம்பிக் கொண்டே இருக்க, ராமநாதன் அமைதியாக வந்து அவர் எதிரே அமர்ந்தார். 


"ராஜி! ஒரு விஷயம் கேக்கணும். நம்ம வீட்ல இருக்கிற அந்த ரோஜாச் செடியைப் பார்த்தியா? நேத்து நீ அதுக்குச் சரியாத் தண்ணி ஊத்தல போ வாடிப் போயிருக்கு."


"ஐயோ! இதோ இப்பவே தண்ணி விடறேன்" என்றாள் ராஜேஸ்வரி.


"அதே போலத்தான் ராஜி,  அஞ்சனாவும். அவ ஒரு ரோஜாச் செடி. வேற ஒரு தோட்டத்துல வளர்ந்தவளை ஆகாஷ் ஆசைப்பட்டான்னு நம்ம தோட்டத்துக்குப் பதியமா எடுத்துட்டு வந்திருக்கோம். அவளுக்கு நீ அன்பைத் தண்ணியா ஊத்தணும். ஆனா நீ ஊத்துறது எல்லாமே வெந்நீர். வார்த்தைங்கிற வெந்நீரை ஊத்தி அந்தப் பொண்ணை ஏன் வாடிபோக வைக்கிற?"


ராஜேஸ்வரி ஏதோ சொல்ல வர ராமநாதன் கையை உயர்த்தினார். 


"இங்க பாரு அஞ்சனா நிறைய பொண்ணுங்கள போல இல்ல. இன்னைக்கு இருக்குற காலத்துல லவ் மேறேஜே   பண்ணிக்கிட்ட நிறைய பெண்கள்  மாமனார் மாமியார் கூட இருக்க விரும்புறது இல்ல. ஆகாஷ் கை நிறையச் சம்பாதிக்கிறான். அஞ்சனா ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஆகாஷ் அவளைத் தனிக் குடித்தனம் கூட்டிட்டுப் போயிருப்பான். உன் மகனை உன்கிட்டயே வச்சிருக்கிறது அஞ்சனா உனக்கு பண்ணியிருக்கற பெரிய உபகாரம் . அவ படிச்ச படிப்புக்கும் அவ பார்க்கிற வேலைக்கும் அவளுக்குத் தனி வீடு போறது ஒரு நிமிஷ வேலை. ஆனா குடும்பம்னா ஒண்ணா இருக்கணும்னு அவ நிக்கிறாளே அது அவளோட வளர்ப்பு."


ராஜேஸ்வரி மௌனமானாள் .


"அவ உன்கிட்ட எதிர்பார்க்கிறது ஒரு அம்மாவோட அரவணைப்பை. நீ அவளை மருமகளா பார்க்காம, உன் மகள் மாதிரி இல்லேனா  உன் மகனோட சந்தோஷமாப் பாரு. அவ பூத்து குலுங்குனா இந்த வீடே மணக்கும். அவ வாடிப் போனா உன் மகனோட வாழ்க்கையும் வாடிப்போகும். யோசிச்சுப் பார்."


ராமநாதன் எழுந்து உள்ளே சென்றார். ராஜேஸ்வரியின் காதுகளில் அந்த வார்த்தைகள் ரீங்காரமிட்டன. அஞ்சனா செய்த சின்னச் சின்ன உதவிகள் அவமானப்படுத்திய போதும் அவள் காட்டிய புன்னகை எல்லாம் அவள்  கண்முன்னே வந்து போயின.


அன்று மாலை  அஞ்சனா பேங்கிலிருந்து  களைப்பாகத் திரும்பி வந்தாள். வழக்கம்போல அத்தையின் ஏச்சுக்குத் தயாராகத் தலையைக் குனிந்தபடி உள்ளே நுழைந்தாள். ராஜேஸ்வரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அஞ்சனா பயந்துபோய் "என்ன அத்தை! ஏதாவது விசேஷமா?" என்றாள்.


ராஜேஸ்வரி பதில் சொல்லவில்லை. மெல்ல நடந்து வந்து அஞ்சனாவைக் கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பில் ஒரு தாயின் அன்பும்  ஒரு தோழியின் நெருக்கமும் இருந்தது.


"ரொம்ப டயர்டா இருக்காடா கண்ணா ? போய் face wash பண்ணிட்டு  வா, உனக்குப் பிடிச்ச மாதிரி இஞ்சி டீ போட்டு வச்சிருக்கேன். அப்புறம் அந்தப் புடவை எனக்கே இப்போ பிடிச்சிருக்கு. நாளைக்குக் கோவில் விசேஷத்துக்கு அதத்தான் கட்டிக்கப் போறேன் " என்றள்  தழுதழுத்த குரலில்.


அஞ்சனாவின் கண்களில் நீர் முட்டியது. இத்தனை நாள் வாடியிருந்த அந்த ரோஜா அந்த ஒரு துளி அன்பில் சட்டென்று பூத்துக் குலுங்கியது. 


வீட்டின் ஜன்னல் வழியே வீசிய தென்றலில் உண்மையில் ஒரு ரோஜாவின் மணம் நிறைந்திருந்தது.



வீயார் 

No comments: