வெங்கடராமன் தம்பதியினர் சீட்டுக்குப் பின்னாலிருந்த சீட்டில் மோகன் ராதா! சுமார் இருபத்தைந்து வயது இருக்கும். அவர்கள் இருவரின் சீண்டல்களும் சிரிப்புகளும் சிலருக்குச் சந்தோஷத்தையும்
சிலருக்கு எரிச்சலையும் தந்து கொண்டிருந்தன. குறிப்பாக வெங்கட்ராமன் தம்பதியினர்
முகம் சுளித்தவாறே இருந்தனர்.
வீட்டில் காட்டிக்கொள்ள
வேண்டிய காதலை வீதியில் காட்டுவார்களா?
மோகன் தற்போதைய நடிகர் ஒருவர்
சாயலில் இருந்தான். நல்ல நிறம். நல்ல உயரம். அழகான முகம். அளவான மீசை. கட்டுமஸ்தான
உடல். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு ஆணழகன். ராதாவும் ஆசைப்பட்டாள். என்ன
ஒரே ஒரு சங்கடம் – மோகன் அவளது மைத்துனன்.
அதிர்ச்சியில் முகம் சுளிப்பவர்கள்
அடுத்த அத்தியாயத்துக்குச் செல்லலாம். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு
இருக்கும் அவனிடம் வீட்டிலேயே இருக்கும்
அவள் மயங்கியது தவறாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.
அவளும் ஒன்றும் அழகில்
குறைந்தவள் இல்லை. உயரத்திலும் நிறத்திலும் முக லாவண்யத்திலும் அவனுக்கு எந்த
விதத்திலும் குறைந்தவள் இல்லை. கூடவே மதர்த்த இளமை.
இவ்வளவும் தனது சொத்து என்று
அவள் கணவன் சங்கரன் நினைத்திருந்தான். ராதாவை நம்பினான். ஆனால் நடந்தது விபரீதம்.
இத்தனைக்கும் அவர்கள்
இருவரும் வேண்டும் என்று எதுவும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அண்ணன் ரூமில் இருந்த
தன் மொபைல் சார்ஜரை எடுக்க வந்த மோகன், திடீரென்று அங்கிருந்த இணைக்கப்பட்ட
குளியறையில் இருந்து ஒரு டர்க்கி டவல் மாத்திரம் சுற்றிக் கொண்டு வெளியே வந்த
ராதாவைப் பார்த்துவிட்டான்.
அதற்கப்புறம் நடந்தவற்றை
எழுதினால் இன்று இணையத்தில் இருக்கும் அந்த மாதிரி தளங்களில் வரும் கதைகள் போன்று
இருக்கும். வேண்டாம்.
இந்தத் தொடர்பை யாருக்கும்
தெரியாமல் அவர்கள் சில காலம் தொடர்ந்தார்கள். இருந்தாலும் காதலும் காமமும் மறைக்க
மறைக்க மலரும் என்னும் கூற்றுப்படி சங்கரனுக்கு மெதுவாகப் புரிந்தது.
பொறுமையாய் காத்திருந்து
கவனிக்கத் தொடங்கினான்.
ஒரு விஷயம் தெரியுமா? ரொம்ப
அற்புதமான விஷயம். நாம் எல்லாரும் பெரும்பாலும் நம் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின்
பேரில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கையில் ஆரம்பித்து பலவற்றைச் சரியாக
கவனிப்பது இல்லை. கவனித்தோமானால் ஒன்று
புரிய வரும். நம்மைச் சுற்றி பல ஆச்சர்யங்கள் தினசரி நடந்து கொண்டுதான்
இருக்கின்றன. அதிலே இந்த முறை தவறிய காதல்களும் ஒன்று.
அந்தக் கோடி வீட்டில்
வேலைக்காரி, வீட்டம்மா ஆபீஸ் சென்ற பிறகே வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்
கழித்துதான் திரும்பச் செல்வதை சாதாரணம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள்
திரும்பச் செல்லும்போது அவள் முகத்தைக் கவனித்தீர்களானால் அதிலே ஓடும் சுகிர்த
பாவத்தையும் கவனிப்பீர்கள்.
தவறுகள் நடப்பதற்கு இன்ன இடங்கள்
என்று நாம் வகுத்து வைத்திருப்பதாக நினைக்கிறோம். தவறுகள் எங்கும் நடக்கின்றன.
சாத்திய கதவுகளுக்குப் பின்னால் மிகச் சில சமயம் மாத்திரமே பிரார்த்தனைகள்
நடக்கின்றன.
எனிவே, நம்ம கதைக்கு வருவோம்.
பொறுமையாய் கவனிக்கத் தொடங்கிய சங்கரனுக்கு, அடுத்த நாளில் இருந்தே சாட்சிகள்
கிடைக்க ஆரம்பித்தன. ராதாவின் அர்த்தமுள்ள புன்னகைகளும், தம்பியின் அசட்டு
நடவடிக்கைகளும் அவன் கோவத்தை மெல்ல மெல்ல நெய்யூற்றி வளர்த்தன.
வேண்டுமென்றே காரம்போர்ட்
விளையாடக் கூப்பிடுவான். மேசைக்கடியில் அவர்கள் கால்கள் உரசுகின்றனவா என்று
பார்ப்பான். காமத்தால் கண் மறைக்கப்பட்ட அவர்கள் இருவரின் கால்களும் உரசித் தான்
கொள்ளும்.
சங்கரனுக்கு என்ன செய்வதென்று
தெரியாத கோவம். யாரிடம் சொல்வான்?
அவனது குழப்பங்களுக்கு ஒரு
விடை கிடைத்தது. சுந்தரேசன் வடிவில். மூன்று மாதங்களுக்கு முன்னாள் அவன்
கோடைக்கானல் சென்றிருந்தபோது.
முதலில் சந்தேகப்பட்டான்.
பின்னர் தயங்கினான். அப்புறம் பயந்தான். இறுதியில் துணிந்தான்.
இந்த ட்ரிப் கூட அவன்
திட்டமிட்டுப் போட்டதுதான். உண்மையில் சுந்தரேசன் போட்ட ட்ரிப் இது.
தான் வருவதாகச் சொல்லி
இறுதியில் கான்சல் செய்து, இரண்டு நாள் முன்னதாக மும்பை சென்று விட்டான்.
தம்பியிடம் ‘அண்ணியைக் கூட்டிகிட்டு கோடை வந்திரு. நான் மும்பையிலிருந்து வந்து
ஜாயின் பண்ணிக்கறேன்’ என்று சொல்லி விட்டான்.
திடீரென்று கிடைத்த பரிசு
மாதிரி அவர்கள் இருவரும் சந்தோஷித்தார்கள்.
பாவம் விட்டுவிடுவோம். கொஞ்ச
நேர சந்தோஷம் தானே?
அடுத்த இரண்டு சீட்டுகளில்
இருந்த நால்வரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
சந்தானம், கோபால், ராஜன்,
டேவிட்.
நண்பர்கள். பார்ட்னர்கள்.
பார்ட்னர் என்றவுடன் ஏதோ பெரிய பிசினஸ் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பார்ட்னர்ஸ்
இன் க்ரைம்.
கடத்தல் அவர்களது தொழில்.
சுலபமாக பணம் கிடைக்கிறது இல்லையா? பணத்தாசை
பிடித்த அவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இதைவிட என்ன வேண்டும்?
போலீசிடம் சிக்காமல்
இதுவரையில் பிசினஸ் செய்து விட்டார்கள். பிசினஸ் பிசினஸ் என்று சொல்லிக்கொண்டு
இருக்கிறேனே, என்ன பிசினஸ் என்றும் சொல்லி விடுகிறேன்.
அழகிய இளம் பெண்களைக்
கடத்தும் பிசினஸ் தான். ...... தொடரும்
No comments:
Post a Comment