Saturday, August 9, 2014

நீ எங்கே உன் நினைவுகள் இங்கே -1


கோடைக்கானலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்த டூரிஸ்ட் பஸ்ஸில் மொத்தம் இருவது பேர் இருந்தனர்.

நாலு நாள் ட்ரிப்பில் செல்லும் அவர்கள் அனைவரின் சாவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே கோடைக்கானலில் முடிவு செய்யப்பட்டுவிட்டது
என்னும் செய்தியை அவர்கள் அறிந்திருந்தால் யாருமே பயணப்பட்டு இருக்கமாட்டார்கள்.

விதி. வெல்ல முடியாதது.

முதல் இரண்டு சீட்டில் அமர்ந்திருந்த வெங்கட்ராமன்- சுபலட்சுமி தம்பதியினருக்கு இது தான் முதல் ஹனிமூன் என்று கூட சொல்லலாம். இருவரும் அறுபதுகளின் முடிவில் இருந்தனர். குடும்பம் குழந்தைகள் என்றே தங்கள் வாழ்க்கையைக் கழித்துவிட்ட ஏராளமான இந்தியர்களில் இவர்களும் ஒரு சிறு பாகம்.

மூன்று குழந்தைகள். மூன்று ஆண்பிள்ளைகள். மூன்றும் ஆணாகப் பிறந்து விடவே இவர்களுக்குள் ஒரு மென்மையான இறுமாப்பு இருந்தது என்னமோ உண்மை. இன்னும் அது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வார்கள். பாவம். விதியின் வசப்பட்டவர்கள்.

முதல் பிள்ளை மனைவி பிள்ளைகளோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டான். கை நிறைய சம்பளம், வீடு வாசல் என்று அங்கு வசதியோடு இருக்கும் அவனுக்கு, சென்னையில் இவர்கள் வீட்டின் இன்றைய விலையான இரண்டு கோடி பெரிசாகத் தெரியவில்லை. எப்படியும் மூன்றில் ஒரு பாகம் தான் வரும். அதுவும் தன் கையெழுத்து இல்லாமல் மற்ற இருவருக்கும் போய்ச்சேர முடியாது என்பதால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தான். அவன் மனைவி வெளிநாடு தரும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.

நல்ல மேற்கத்திய உடைகள், எங்கு போவதானாலும் கார், க்ளப் பார் லேடீஸ் மீட் என்று தன்னை முழுமையாக westerniseபடுத்திக் கொண்டவள். அவளால் இந்திய முறைப்படி இனிமேல் வாழ முடியாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளை விட அவள் கணவனுக்கு நன்றாகத் தெரியும்.

இதைத் தன் பெற்றோர்ல்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். வீணில் இந்தியா வருவதோ, இல்லை அவர்களை அங்கே அழைத்துக் கொள்வதோ பிரச்சனைகளை அதிகம் தான் படுத்தும் என்பது நன்கு அறிந்தவன்.

அதனால் இந்தியா பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. இதில் வெங்கடராமன் தம்பதியினருக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் பிள்ளை முகத்தைப் பார்ப்பார்கள். பேரன்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் முழிப்பார்கள். அவர்கள் நாட்டுப்பெண் இந்த ஸ்கைப் மீட்டிங்குக்குக் கூட வர மாட்டாள். ஒரு முறை வந்தபோது அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டின் முன்கழுத்துப் பக்கம் கொஞ்சம் இறங்கையிருந்ததைப் பார்த்த சுபலட்சுமி ஏதோ சொல்லி விட்டாள். அதிலிருந்து அவள் இதற்குக்கூட வருவதில்லை.

அவர்கள் இராண்டாவது மகன் மும்பையில் செட்டில்டு.  அவன் மனைவி ஒரு குஜராத்தி. பெரிய நகைக்கடை முதலாளியின் மகள். ஏகப்பட்ட சொத்து. பல கோடிகள் பெரும். இவன் ஆபீஸ் போய் வரவே டிரைவருடன் ஒரு கார் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதனால் அவனும் சென்னை பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.

ஆனால் அவன் மனைவில் முதல் மருமகள் போல மோசம் இல்லை. அவளுக்குச் சென்னை வர வேண்டும் இவர்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் மிகவும் ஆசை. ஆனால் அவன் கணவன் சம்மதிக்க மாட்டான். அவனுக்கும் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண்கள்.

மூன்றாமவன் சந்திரன் மீனா ஜோடிதான் இந்தக் கதைக்குத் தொடர்பு கொண்டவர்கள்.

சந்திரன் ஒரு டாக்டர். சிட்டியில் ஒரு ப்ரைவேட் ஆசுபத்திரியில் வேலை செய்கிறான். அவனுக்குக் கல்யாணத்துக்குக் பெண் பார்த்தபோது அவன் பெற்றோர்கள் ரொம்பவே திண்டாடிப் போய் விட்டார்கள்.

எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு மனசுக்கு மேவவில்லை. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றும் அவனால்  தன் பெற்றோர்களிடம் சொல்ல முடியவில்லை. அந்த நிலையில் தான் ஒரு நாள் ப்ரோக்கர் மீனாவின் போட்டோவை எடுத்து வந்தார்.
அதைப்பார்த்த மாத்திரத்திலேயே சந்திரன் காதல் வயப்பட்டான்.

மீனா பேரழகி. பார்த்த மாத்திரத்திலேயே எந்த ஆணும் அவள் மீது காமுறுவான்.

செதுக்கி வைத்த சிலை போல இருப்பாள். அழகான முகமும், அளவான கழுத்தும் நல்ல நிறமும், மதர்த்த இளமைகளும், வளைந்த இடையும் என்று இருந்த அவளைப் பார்த்து சந்திரன் உடனே ஓகே சொல்லி விட்டான்.

மீனா வீட்டுக்காரர்கள் சற்று அவகாசம் கேட்டார்கள். பணம் புரட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெங்கடராமன் தான் அதெல்லாம் ஒன்றும் பெரிதாகத் தேவையில்லை. என்ன முடியுமோ அதை செய்தால் போதும் என்று கூறி கல்யாணச் செலவிலும் பாதி தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்.

அப்புறம் என்ன திருமணம் விரைவில் நடந்தேறியது.

ஆனால் வீட்டின் கடைசி மருமகளாக வந்த மீனாவுக்குத் தான் நன்றி என்பது சிறிதளவும் இருக்கவில்லை. தன்னை மருமகளாக ஏற்றுக்கொண்டவர்கள் மீது அவளுக்கு ஒரு காரணம் தெரியாத காழ்ப்பு உணர்ச்சி.. எப்படியாவது அவர்களை இந்த வீட்டை விட்டுத் துரத்தி அடிக்க வேண்டும். இந்த வீட்டை தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு பேராசை தீக்கனலாக அவள் நெஞ்சில் உடலில் ஏறிந்து கொண்டிருந்தது. அதை எப்படிச் செயல் படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது மூன்று மாதம் முன்னால் அவளும் சந்திரனும் சென்ற கோடைக்கானல் பயணமும் அங்கு அவர்கள் சந்தித்த சுந்தரேசனும் தான்.

முதலில் பயந்த சந்திரன், பிறகு தங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று அறிந்தபின்னால் தலையை ஆட்டி விட்டான்.

யார் அந்த சுந்தரேசன்? அப்படி என்னதான் நடந்தது அந்தப் பயணத்தில்?


தொடரும்.

No comments: