Tuesday, January 21, 2014

நலம். கொலை புரிய ஆவல்

  
நான் ரிசப்ஷனிஸ்ட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தன் நகங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்படி இப்படி என்று இருந்த நாலு பேஷண்டுகளும் சென்று விட்டார்கள். எனக்கு முன்னிருந்த பேஷண்ட் சென்று அரைமணி நேரம் ஆயிற்று. நான் தான் கடைசி. டாக்டருக்கு டயம் இருந்தால் தான் என்னைப் பார்ப்பார் என்று முதலிலேயே சொல்லிவிட்டாள்.

ஒரு மணி நேரம் சென்றபின் சுமார் எட்டரை மணிக்கு மனநல மருத்துவர் மதன்ராஜ் கதவைத் திறந்து பேஷண்ட்டை வெளியனுப்ப வந்தார். வந்தவர் கண்கள் என்னையொரு முறை பார்த்து பின்னர் ரிசப்ஷனிஸ்ட்டைப் பார்த்தன.

“சார்! அவங்கள ஒண்ணும் சொல்லாதீங்க. நான் தான் உங்களுக்கு டயம் இருந்திச்சின்னா பார்த்துட்டுப் போறேன்னு உக்காந்திருக்கேன். உங்களுக்கு முடியலேனா பின்ன ஒரு நாள் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிக்கிட்டு வரேன்” என்று முந்திக் கொண்டேன்.

சிறிது யோசித்த மதன்ராஜ் மிகவும் இளைஞனாக இருந்தான். மும்பை சினிமாவில் சான்ஸ் கிடைக்காமல் மருத்துவத்துக்கு வந்தவன் போல் தோற்றம். கட்டுக்கோப்பான உடல். ரண்பீர் கபபூருக்கு இன்னும் ஒரு ஐந்து வயது கூடினால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான். ரிசப்ஷனிஸ்ட் அவனைப் பார்த்த காதல் பார்வையை விட அவன் அழகுக்கு வேறு பிரமாணம் தேவையில்லை.

“சரி வாங்க! ஒரு மணி நேரம் இருக்கு. மாலதி நீ வீட்டுக்குப் போகலாம். நான் க்ளோஸ் பண்ணிக்கறேன்”

உள்ளே நுழைந்த நான் பிரமித்தேன். மெல்லிய நீல வர்ண சுவர்களும், அதே வண்ண கர்டன்களும் மனதுக்கு ரொம்பவுமே ரம்மியமாக இருந்தன. மிகவும் சிக்கனமாக ஒரே ஒரு படம் – இயற்கைக் காட்சி – பேஷண்ட் கவுச்சுக்கு நேர் எதிரில். டாக்டர் மேஜையில் பொருட்கள் uncluttered ஆக இருந்தன. ஒரு மனோதத்துவ புத்தகம் பாதி படித்தது போல புக் மார்க் சொருகப்பட்டு மூடியிருந்தது.

“ரொம்ப நல்லா இருக்கு உங்க கிளினிக். வீடு எங்க”

“இதுக்குப் பின்னாலேயே தான் வீடு. அதுனால தான் நானே க்ளோஸ் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன். சரி, இந்த சேர்ல வசதியா சாஞ்சாப் போல உக்காந்துக்கலாம். Just be comfortable.”

“சரி டாக்டர்!”

“என்னை மதன் அல்லது ராஜ் என்றே கூப்பிடலாம். Let’s be on first name basis. What’s your name?”

“என் பெயர் ராம்”

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் ராம்”

“நான் ஒரு பெரிய ஆர்கிடக்ட் கம்பனியில் பணிபுரியும் ஏராளமான ஆர்கிடெக்டுகளில் ஒருவன். ஒரு கூட்டத்தில் ரொம்ப சுலபமாகத் தொலைந்துப் போகக் கூடிய சாதாரணன். கொஞ்சம் அதிர்ஷ்டம் கம்மி. சிக்னலில் கூட எனக்கு முன்னால் இருக்கும் கார் வரையில் தான் கிரீன் சிக்னல் இருக்கும். நான் நெருங்கும்போது ரெட்!

முதல் இடம் எப்படி இருக்கும் என்றே அறியாதவன். ஸ்கூலில் முகேஷ் (முதல் ரேங்க் வாங்கும் பையன்) என்னைப் பார்க்கும் பார்வையில் எனக்கு ஆன்சர் மறந்துடும். இப்படி ஸ்கூல், காலேஜ் என்று எல்லா இடத்திலேயும் இரண்டாம் மூன்றாம் இடம் தான்.

வீட்ல கூட பாருங்க! என் அண்ணன் என்ன விட நல்ல அழகா, உயரமா, கலரா இருப்பான். எங்க அப்பா மாதிரி. அவன் அப்படி இருக்கறதுல அவருக்குப் பெருமைங்கறத விட நான் அப்படி இல்லைங்கறதுல அவருக்கு ரொம்பவுமே வருத்தம்.

அந்த வருத்தம் பல சமயம் என்கிட்டே கோவமா வெளிப்படும். எப்பவும் திட்டு. வசவு கேட்டே வளந்தவன் நான்.

இதனை negativitiesக்கு நடுவுல எனக்கிருந்த ஒரே சப்போர்ட் பலம் என் அம்மா.
அவள் மட்டும் இல்லேனா நான் எப்பவோ செத்திருப்பேன்.”

நான் அமைதியானதைப் பார்த்து மதன் இலேசாகப் புன்னகைத்தான். வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஒரு இரண்டு நிமிடம் அமைதியாகச் சென்றது.

திரும்பவும் பேச ஆரம்பித்தேன்.

“திடீர்னு அம்மா ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து காலமாயிட்டாங்க. வீட்டுல ஒரு பொண்ணு இல்லையேன்னு அப்பா அவசர அவசரமா அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாரு. பெரிய வசதியான எடம்தான். நெறைய பணத்தால செஞ்சாங்க. ஆனா வந்த அண்ணி சுமார்தான். அதுவும் அண்ணன் கூட நிக்கும்போது ரொம்பவுமே சுமார்.

ஆனா ரொம்ப நல்லவங்க. கிட்டத்தட்ட என் அம்மா மாதிரி. எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்களுக்கும்தான். நாங்க ரொம்ப நல்லா பழகினோம்.

அவங்களுக்கும் என்ன மாதிரியே புக்ஸ் படிக்கற பழக்கம். படிச்ச புக்கப் பத்தி நெறைய விவாதிப்போம். அவள் கவிதைகள் எழுதுவாள். அண்ணனுக்கு அதெலாம் பிடிக்காது. பிடிக்காதென்ன புரியாது. என்கிட்ட காட்டுவாள். ரொம்பவும் திறமைசாலி. கிடைச்சா அவங்கள மாதிரி ஒரு மனைவி கிடைக்கணும்னு தினமும் வேண்டிப்பேன்.

ஆனா விதியப் பாருங்க! எனக்கு வந்த மனைவி அப்படியே அண்ணிக்கு ஆப்போசிட். சினிமா ஸ்டார் மாதிரி அழகு. ஆனா குணம்? சொல்லாம இருக்கறது பெட்டர். கொஞ்ச நாளிலேயே அவளுக்கு என்ன வெறுத்துப் போச்சு. அது கூட பரவாயில்ல. என் அண்ணன் மேல ஒரு ஈர்ப்பு வந்துருச்சு.”

நான் மதனைப் பார்த்தேன். அவன் மனதில் உள்ளதை அவன் முகம் வெளிக்காட்டவில்லை.

“Shall we take some rest?”

“Absolutely not! எனக்கு இப்பவே ரொம்ப பெட்டரா feel ஆறது. மறக்கறதுக்குள்ள பேசிடறேன்”

“By all means. Please carry on”

“இது விஷயம் கூட எனக்கு அண்ணி சொல்லித் தான் தெரியும். அவ்வளவு ஜடமாக இருந்தேன். மொதல்ல என்னால நம்ப முடியல. அப்பறம் கவனமாப் பார்த்ததுல உண்மைன்னு தெரிஞ்சுது. கண்டிச்சேன். ஆனா அவ என்னப் பாத்து  ரொம்ப ஏளனமாச் சிரிச்சா. ‘உன் அப்பா கிட்ட சொல்லுவேன்’ என்றதற்கு ‘தாராளமா சொல்லிக்கோ. உன்கிட்ட டைவர்ஸ் கெடச்சா ரொம்ப நல்லது. நான் என் காதலன கல்யாணம் பண்ணிப்பேன்’ என்றாள்.

‘என் அண்ணனனையா?’ன்னு கேட்டேன். ஏதோ பெரிய ஹாஸ்யம் கேட்டது போல சிரிச்சா. ‘அவன் டைம் பாஸ்’ ன்னு சொன்னா.

மதன், நான் அன்னைக்கு அழுதது போல என்னைக்குமே அழுததில்ல.

இந்த விஷயம் எல்லாம் அண்ணிகிட்ட சொன்னேன். அவங்களும் அழுதாங்க. ‘ராம், இத இப்படியே சும்மா விடக்கூடாது. கண்டிச்சுக் கேக்கலேனா தண்டிக்கணும்’ன்னு சொன்னாங்க.

அப்பறம் அவங்க யோசனைப்படி என் மனைவியின் காதலனைக் கண்டுபிடித்தேன். மேல மேல அதிர்ச்சி! அவன் ஏற்கனவே கல்யாணமானவன்! இவள் இப்படித் தரம் தாழ்ந்து போவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணிகிட்ட சொன்னேன்.

ரொம்ப யோசிச்சு. ‘ அவனோட மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா’ன்னு கேட்டாங்க. ‘தெரியாதுன்னு தான் நெனைக்கறேன் அண்ணி’ன்னு சொன்னேன். ‘சரி அவங்க அட்ரஸ் குடு. நான் அவங்களச் சந்திச்சு என்ன ஏதுன்னு விசாரிக்கறேன்’னு சொன்னாங்க.

ஒரு வாரம் கழிச்சு என்னக் கூப்பிட்டு ‘ராம்! உன் மனைவி ரொம்ப பெரிய ஆளு! அவ தன் காதலனோட சேர்ந்து அவன் மனைவியக் கொலை பண்ணத் திட்டம் போட்டிருக்காங்க. ஆனா அந்த விஷயம் அவன் மனைவிக்குத் தெரிஞ்சு போயிடுத்து. அவளுக்குத் தெரியுங்கறது இவங்களுக்குத் தெரியாது. அதனால நான் சொல்றத கவனாமக் கேட்டுக்கோ’ன்னு சொல்லி ஒரு ப்ளான் சொன்னாங்க.

அதன் படி, நானும் என் மனைவியின் லவர் பெண்டாட்டியும் சேர்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிடுவது.

“ராம், இது எல்லாம் தப்பு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? மனைவி நடத்தைக் கெட்டவள் என்றால் டைவர்ஸ் வாங்கிக்கலாமே? எதுக்கு இந்த எக்ஸ்ட்ரீம் ஸ்டெப்ஸ்?”

“இதத் தான் மதன் நான் உங்ககிட்ட கேக்க வந்தேன். உங்களுக்கு மனைவியப் பிடிக்கலேனா பேசி டைவர்ஸ் வாங்கிகிட்டு இருக்கலாம் இல்லையா? எதுக்கு கொலை கிலைன்னு திட்டம் போடறீங்க?”

மதன் முகம் மாறியது. “ஏய்! என்ன சொல்ற நீ? யார் நீ?” என்று பேச ஆரம்பித்தவன் கண்கள் எனக்கு பின்னால் இருந்த கதவில் நிலைகுத்தின.

நான் திரும்பிப் பார்த்தேன். வசந்தி (அதாங்க மதன் ராஜ் மனைவி) கையில் ஒரு நைலான் கயிற்றுடன் புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------