திரேதா யுகம்:
வைகறை. இதோ இதோ என்று சூரியன் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு
பெயர் தெரியாத பறவையின் குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள் ரேணுகா. இருள்
கண்களுக்கு பழகியதில் அருகே ஆர்யபுருஷர் படுத்திருப்பது தெரிந்தது. பாவம், இரவு வெகுநேரம் கண்விழித்திருந்தார். ஏனென்று கேட்ட ரேணுகாவை "நீ
படுத்துறங்கு" என்று அடக்கி விட்டார். ஆர்யபுருஷரை எதிர்த்து பேசியறியாத அவள்
உறங்கி இதோ இப்போதுதான் கண் விழிக்கிறாள். ஆர்யபுருஷர் நித்திரை கலையுமுன் ஆற்றங்கரை
சென்று நீராடி, வழக்கம் போல் நித்ய ஆராதனைக்கான நீர் எடுத்துவர
புறப்பட்டாள்.
கலியுகம்:
விடிகாலை. "காப்பி சாயா " என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு கண்
விழித்தாள் ரேணுகா. இருள் கண்களுக்கு பழகியதில் எதிர் சீட் காலியாக இருப்பது
தெரிந்தது. அங்கே படுத்துறங்கிய பயணி இறங்கிவிட்டிருப்பார் போல. சரி எழுந்ததுதான்
எழுந்தோம், காலைக்கடன்களை முடித்து விடுவோம் என்று தன்
சீட்டை விட்டு எழுந்தாள்.
திரேதா யுகம்:
மலப்ரபா நதி. வைகறையில் மேலும் அழகாக தெரிந்தது. அதில் நீராடுவது ஒரு தனி சுகம். அதுவும் ரேணுகா வரும்
வேளையில் மனித நடமாட்டம் அதிகம் இருக்காததால் மனம்குளிர நீராடி மகிழ்வாள். அவள்
நாளின் மிக முக்கியமான தருணங்கள் அவை. இன்றும் அதே எதிர்பார்ப்புடன் வந்த அவளுக்கு
ஏமாற்றம். நதியிலே நாலைந்து உருவங்கள் தெரிந்தன. அருகே சென்று பார்க்கத் தயங்கிய
அவள் கரையோரம் இருந்த ஒரு மரத்தின் பின் நின்று கூர்ந்து பார்த்தாள். நதியிலே சில
கந்தர்வர்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். என்ன ஒரு அழகு! என்ன ஒரு தேஜஸ்! என்ன
ஒரு கம்பீரம்! அவர்களின் அழகும் ஆடை அணிகலன்களும் செல்வச்செழிப்பும் அவளை கொஞ்ச
நேரத்துக்கு பிரமிக்க வைத்தன. பெண் தானே? தானும் ஆர்யபுருஷரும்
கூட அப்படி இன்பம் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தனை அவளுள்
ஓடியது. அந்த இன்பம் அவளை அழுத்தியதில் காலம் கடந்து சென்றதை அவள் உணரவில்லை.
சுள்ளென்று சூரியன் ரேகைகள் அவள் மேல் பட்டு சுட்டபோது தான் சுயநினைவுக்கு
வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தால் கந்தர்வர்கள் இல்லை. அய்யகோ நேரம் கடந்து
விட்டதே ஆர்யபுருஷர் பூஜை ஆராதானைகள் தடங்குமே, அவர் கோபத்திற்கு
ஆளாக வேண்டி வருமே என்று பயந்த அவள், விருட்டென்று
நதியில் சென்று நீராடத் தொடங்கினாள். நீராடி முடித்த பின் ஆற்று மணலெடுத்து
வழக்கம் போல் குடம் பிடிக்க எத்தனித்தாள்.
(அவள் கற்பின் மகிமையால் ஆற்றுமணலில் குடம் பிடிபடுவது மட்டுமல்லாமல், அருகே புற்றில் குடியிருந்த நாகத்தை கயிறாக வளைத்து குடம் விழாமல் தினமும் நதி
நீர் எடுத்து செல்வாள்.)
"என்ன அதிசயம்! அய்யகோ இன்று இந்த மணலுக்கு என்ன வந்தது? ஏன் குடமாக பிடிபட மாட்டேன் என்கிறது? என்ன செய்வேன்!" என்று பயந்தபடியே
குடிலுக்கு திரும்பி வந்தாள் ரேணுகா.
நேரமாகி விட்டபடியால் அவளுக்காக வெளியிலேயே காத்திருந்த ஜமதக்னி, வெறும் கையுடன் வந்த அவளைக் கண்டு கோபமுற்றார்.
ஏன் இவ்வளவு கால தாமதம் என்று கேட்டது தான் தாமதம், ரேணுகா
கரையுடைந்த நதியானாள். நடந்ததை சாங்கோபாங்கமாக சொன்னாள். " மனதால்
கற்பிழந்தாயடி" என்று கர்ஜித்த ஆர்யபுருஷர் தன் கடைசி மகன் பரசுராமனை அழைத்து
அவள் தலையை வெட்டி எறிய சொன்னார்.
கலியுகம்:
முகத்தை வாஷ் செய்து கொண்டு தன் இடத்திற்கு வந்த அவள் தன் எதி சீட்டில்
ஒரு இளம் ஜோடி உட்கார்ந்திருந்ததை கண்டாள். என்ன ஒரு அழகு? என்ன ஒரு இளமை? இப்பொழுதான்
திருமணமாகி இருக்கும் போல. ஒரு கணம் கூட ஒருத்தரை ஒருத்தர் பிரிய முடியாதவர்கள்
போல இருந்தார்கள். இவளைப் பார்த்ததும் "மேடம் சென்னை வரைதான்.உங்களுக்கு
ஒன்றும் ப்ராப்ளம் இல்லையே?" என்றான் அந்த
இளைஞன். "நோ நோ எனக்கு என்ன ப்ராப்ளம்? ஒரு அரை மணி
நேரம் தானே? மேலும் பொழுதும் விடிந்து
விட்டதே!" என்றாள் ரேணுகா.
அதன் பின்னர் அந்த ஜோடி அவளிடம்
பேசவில்லை. அவளிடம் பேச எங்கே நேரம்? அப்பப்பா இளமை
இத்தனை சுகமானதா? என்று வியந்தாள் ரேணுகா.
அவன் சீண்டுவதும் அவள் சிணுங்குவதும் ஏதோ ஒரு இனிய நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு
ஏற்பட்டது அவளுக்கு. அவளையும் அறியாமல் அவள் மனம் அவள் திருமண வாழ்வை அசை போட்டது.
அவளும் அவள் கணவனும் இவ்வாறு இன்பமாய் இருந்த காலங்கள் ,அப்புறம் போன வருஷம் அவர்கள் கொடைக்கானலில்
இருந்து திரும்பி வரும்போது நடந்த விபத்து. அதில் அவனுக்கு ஏற்பட்ட அவர்கள் இல்வாழ்க்கையை
பாதித்த ஊனம், அதன் பிறகு வாழும் யந்திரத்தனமான வாழ்வு என்று
அவள் மனதில் திரைப்படம் போல் ஓடியது.
"என்னம்மா! இறங்குங்க வண்டி ஷெட்டுக்குப் போவப் போவுது" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு
விழித்து பார்த்தால் சென்னை சென்ட்ரல். பரபரவென்று வண்டியை விட்டு கீழே இறங்கி
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள். கார் பார்க்கிங்கில் யாருடனோ செல் போனில்
பேசிக்கொண்டிருந்த அவள் கணவன் இவளைக் கண்டதும் போனை அணைத்து விட்டு இவளை நோக்கி
வந்தான். அவளைப் பார்த்து ஒரு சிநேகமான புன்னைகையோடு " ஏன் இத்தனை லேட்?"
என்றான். அதைக் கேட்ட
மாத்திரத்தில் ரேணுகா கரையுடைந்த நதியானாள். அவன் மார்பில் சாய்ந்து, நடந்தது எல்லாம் அவனிடம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அதெல்லாம் சொல்லலாமா
கூடாதா என்றெல்லாம் கூட யோசிக்கவில்லை.
ரேணுகா சொன்னதை எல்லாம் பொறுமையுடன் கேட்ட அவள் கணவன், "இதுக்கா இத்தனை
அழுகை? இத்தனை ஆர்ப்பாட்டம்?
நான் ஜமதக்னி முனிவரா
என்ன?" என்றான். தன்
காதுகளை நம்ப முடியாத ரேணுகா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்தது
குறும்பா இல்லை கோபம் கலந்த இயலாமையா?
2 comments:
Unarvukal ennagalai mari, manam uruvakrirathu,
Urnarvual unmai, bady condicouness,
ennam unmai, mind condicouness,
manam, seiyalama, vendama enbathu intect consicousness
all above are false when pure consicouness awake,
in the we form cettain rulesand regulation to live in society,
problem now for indivifual and society
Pl see these facts,
636849udalum unarvum tamarai ilai taneer pola,and so at present no one in the society was virgin
Post a Comment