ஒரு வேலையாக கிண்டி வரை வந்த நான் ஈவ்னிங்
மனைவியுடன் பாஸ்ட் ட்ரெயினில் செல்வதாக
ப்ளான். டிக்கட் வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். செல் போன்
அடித்தது. “பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் தானே வாங்கியிருக்கீங்க? அதும் பக்கத்துல
இருக்கற லேடீஸ் கம்பார்ட்மென்ட்லதான் நான் பிரெண்ட்சோட இருக்கேன். தாம்பரத்துல
இறங்கி ஒண்ணா போயிக்கலாம்” என்று போனை எடுத்ததும் மனைவி லதாவின் குரல் கேட்டது.
“ஆமாம்” என்று நான் சொல்லி முடிக்கவும் அந்த
fast ட்ரெயின் கிண்டி ஸ்டேஷனுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. வண்டி நின்றதும்
பர்ஸ்ட் கிளாஸுக்குள் ஏறிய நான் பக்கத்தில் இருந்த லேடீஸ் பக்கம் பார்த்தேன்.
ஸ்நேகிதிகளுடன் உட்கார்ந்திருந்த லதா கையை ஆட்டினாள். நானும் பதிலுக்கு கையை ஆட்டிவிட்டு
காலியிடம் தேடினேன். வண்டியே காலி. இரண்டாவது வரிசையில் ஒரு முதியவர் ஜன்னலோரம்
உட்கார்ந்திருந்தார். சரியென்று அவருக்கு
எதிரில் போய் உட்கார்ந்தேன். ஒரு சௌகர்யம் அங்கிருந்து லதா தெரிந்தாள்.
மீண்டும் ஒரு முறை அவளுக்குக் கை ஆட்டிவிட்டு, எதிரிலிருந்த
முதியவரைப் பார்வையிட்டேன். அவருக்கு அறுபது வயதிருக்கும். தலை முடி வெளேர் என்று
நரைத்திருந்தது. ஒல்லியான தேகம். பளிச்சென்ற வேஷ்டியும் வெளிர்நீலச் சட்டையும்
அணிந்திருந்தார். அருகில் ஒரு பேக். கையில் ஒரு புத்தகம். ‘ஆவிகள் உலகம் –
ஆவிகளுடன் ஒரு உரையாடல்!”
எனக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொள்ள
முயல்வதை அவர் கவனித்து விட்டார்.
“ உங்களுக்கு இதுங்க மேலெல்லாம் நம்பிக்கை
இல்லையோ?” என்று எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் கேட்டார்.
ஒரு கணம் யோசித்த நான் “இல்லை சார். எனக்குக்
கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது. இதெல்லாம் சுத்த ஹம்பக். கற்பனை” என்றேன். கூடவே “புத்தகத்தைப்
படிப்பதைப் பார்த்தால் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு போல தெரிகிறது.” என்றும்
சொன்னேன்.
“ஆமாம் தம்பி எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு.
ஆவிகள் நிஜம் தான். மனிதர் இறந்த பிறகு அவரவர் பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடி
சொர்கமோ நரகமோ போவார்கள். அது நிர்ணயம் ஆற வரைக்கும் பூமில தான் இருப்பாங்க.
பொதுவா அவங்க இறந்த இடத்திலோ இல்லை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க இருக்கற
இடத்திலோ சுத்தி சுத்தி வருவாங்க. உண்மைதான்” என்று குரலில் ஒரு கன்விக்ஷன்
தொனிக்கச் சொன்னார்.
சரி, தாம்பரம் வரும் வரையில் நல்ல பொழுதுபோக்கு
என்று நினைத்தேன்.
“ஆனா, இந்தப் பொஸ்தகத்துல சிலதெல்லாம் சரியாப்
போடல. உதாரணத்துக்குப் பேய்ங்க எப்பவும் வெள்ளை வெள்ளை தான் போடும்னு
போட்டிருக்காங்க. எல்லாம் சினிமாக்காரங்க வேலை!” என்றவரைப் பார்த்து நான்
உண்மையிலேயே வியந்தேன். மனிதர் நிஜமாகவே பேய் இருப்பதை நம்புகிறார் போலும். இவரைச்
சற்று கலாய்க்க முடிவு செய்தேன்.
“அது எப்படிச் சொல்றீங்க? நீங்க பேயப்
பாத்திருக்கீங்களா?”
அவர் சொன்ன பதில் என்னைச் சிரிக்க வைத்தது.
“நானே ஒரு பேய் தான் தம்பி.”
“நீங்க பேயா?”
“ஆமாம். என் பேரு சுந்தரேசன். நான் எறந்து
ரெண்டு மாசமாவுது. என் மனைவி சின்னம்மா. அவளும் எறந்துட்டா. அவ போயி வருஷமாவுது.
அவ எக்மோர்ல ஒரு கவர்மெண்டு ஸ்கூல்ல
டீச்சரா இருந்தா. இந்த வண்டில தான் சாயந்திரம் தாம்பரம் வருவா. எனக்கு அவ நெனைப்பா
இருக்கறதுனால தெனம் இந்த வண்டில வந்து போவேன். நான் சாகறதுக்குள்ளாவே அவளுக்கு சொர்கத்துல இருந்து அழப்பு வந்திருச்சு
போலிருக்கு. இல்லேனா அவ இந்த வண்டில வருவா. எனக்கு எப்ப அழைப்பு வருமோ?
பொதுவா யாருகிட்டயும் பேச மாட்டேன். இன்னிக்கு
என்னமோ உங்ககிட்ட பேசணும் போல தோணிச்சு. அதான்.”
எனக்குத் தலையை சுற்றியது. அப்போது தான்
பார்த்தேன் அவர் கால்களை. அவை தரையில் பாவி இருந்தன. ‘ இவர நான் கலாய்க்கலாம்னு
பார்த்தா இவர் என்னக் கலாய்க்கறாரா?’
என்று மனதுக்குள் சிரித்தேன்.
“இன்னும் என்னென்ன விஷயம் போட்டிருக்கு
பொஸ்தகத்துல?”
“பேய்ங்க தூங்காது. அழைப்பு வர்ற வரை
அலஞ்சுக்கிட்டுத் தான் இருக்கும். ஆவிங்க மறஞ்சு நின்னு தாக்கும் அப்டீங்கறது
எப்பவும் உண்மை இல்ல. பொதுவா அதுங்க தன்ன
வெளிக்காட்டிக்கவே விரும்பும். மேலும் எல்லா ஆவிகளாலும் ஆபத்து இல்ல.”
என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தார்.
அவருக்கு ஒரு வேளை மூளை சரியில்லையோ? எனக்குள்
லேசாக பயம் எட்டிப் பார்த்தது.
“என்னப் பயித்தியம்னு நெனைக்கறீங்க இல்லையா”
என்றார். தொடர்ந்து “ராத்ரீல நெழலப் பாத்தாக் கூட பேயின்னு பயப்படறீங்க.
வெளிச்சத்துல நான் பேயின்னு சொன்னா சிரிக்கறீங்க. ம்ம்ம்” என்றார்.
அதற்குள் தாம்பரம் வந்து விட்டது. அப்பாடா
தப்பித்தோம் என்று எண்ணி எழுந்து நின்றேன்.
“ஓகே சுந்தரேசன் சார்! பிறகு சான்ஸ் இருந்தா
எப்பவாவது பாக்கலாம்”
“எப்பவாவது என்ன? எனக்கு அழைப்பு வர்ற வரை
தெனமும் இந்த வண்டில பாக்கலாம். கொஞ்சம் என்னையும் நம்புங்க ” என்று மெலிதாகச் சிரித்தார்.
வண்டி நின்றது. நான் வேகமாக இறங்கி சற்று தூரம்
சென்று நின்றேன். என் மனைவி தன் கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கினாள். தன்
நண்பிகளுக்கு டாடா சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தாள். அதற்குள் வண்டி
புறப்பட்டது.
“ஏங்க! நானும் கிண்டிலேர்ந்து பாக்கறேன். ஆருகிட்ட
பேசிக்கிட்டு வந்தீங்க? போன்லயா?” என்று கேட்டாள்.
நான் கலவரத்துடன் வண்டியைப் பார்த்தேன்.
ஜன்னலோர ஸீட்டிலிருந்து சுந்தரேசன் கை அசைத்தார்.
No comments:
Post a Comment