Monday, January 13, 2014

பாவ மன்னிப்பு


காலையிலிருந்து ட்ரை பண்ணியும் மொத்தம் நானூறு ரூவாதான் பாக்கெட் அடிக்க முடிஞ்சுது. என்ன வாழ்க்கைடா சாமி! அதுலேயும் ஒரு பஸ்ஸில டின் கட்டிருப்பாங்க. கீழ குதிச்சு ஓடினதால தப்பிச்சேன்.

வேளச்சேரி பக்கத்துல ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து  கொஞ்ச நேரம் சோம்பேறித்தனமா நின்னுகிட்டு இருந்தேன். மணி மதியம் ஒண்ணு. இன்னிக்கி சனிக்கிழமை. புத்தகக் கண்காட்சி பொங்கல் கண்காட்சின்னு சிட்டியில் ஓடிக்கிட்டிருந்தது. ரெண்டுல ஏதாவது ஒரு எடத்துல பணம் தேத்தணும்னு நெனைச்சேன். அப்ப தான் ஹை கோர்ட் போற பஸ் வந்தது. சரின்னு ஏறி டிக்கட் வாங்கினேன். பஸ்ஸில கூட்டம் இல்ல. காலியாயிருந்த ஒரு சீட்டுல ஒக்காந்து ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.

அடுத்த ஸ்டாப்புல பஸ்ஸு நின்னப்போ கொஞ்ச பேரு ஏறினாங்க. வெளில வேடிக்கப் பாத்துக்கிட்டு இருந்த எனக்கு, பக்கத்து சீட்டுல யாரோ ஒக்காந்த மாரி தோணிச்சு. திரும்பிப் பாத்தா ஒரு சர்ச்சு பாதர். என்னப் பாத்து பழைய பிரெண்டு மாரி சிரிச்சாரு. நானும் சிரிச்சு வச்சேன்.

“எங்க போறீங்க?’

“கண்காட்சிக்கி!” ன்னு சொன்னேன்.

“புத்தகக் கண்காட்சிக்கா?”

“அவ்ளோ படிப்பெல்லாம் எங்க படிச்சிருக்கேன்? பொருட் காட்ச்சிக்குத் தான் பாதர்” ன்னு சிரிச்சேன்.

“வெள்ளந்தியாப் பேசறீங்க. எனக்கு இப்படிப் பேசறவங்கள புடிக்கும். எதுவரைல படிச்சிருக்கீங்க? எங்க வேலை பாக்கறீங்க? சொல்லலாம்னா சொல்லுங்க.”

“நா வெறும் மெட்ரிக்தா பாதர். ஒரு கொரியர் கம்பெனில டெலிவரி பாயா வேல செய்யறேன்”

“குட், வெரி குட். உண்மையத் தயங்காம சொல்றீங்க. மேற்கொண்டு படிக்க முடியாததுக்கு குடும்ப சூழ்நில காரணமோ?”

“ஆமா பாதர். சின்ன வயசுல அப்பா செத்துட்டார். வேல செய்ய வேண்டிய கட்டாயம். அப்புறம் படிப்பு எங்க ஏறுறது? அதான் இப்டியே....” என்று இழுத்தேன்.

கொஞ்ச நேரம் ஒன்னியும் பேசாம இருந்தாரு. அப்புறம் அவரு கைல வச்சிருந்த ஒரு பையத் தொறந்து ஒரு சின்ன டப்பில வச்சிருந்த ஒரு கார்ட எடுத்த்தாரு. அப்பத்தா அந்த நூறு ரூவா கட்டப் பாத்தேன். ஆத்தீ! சிலுவச் சாமிக்கு நம்ம மேல எவ்ளோ கருண?

“இந்தாங்க இந்தக் கார்ட பிடியுங்க. எங்க சர்ச்சு வேளச்சேரில தான் இருக்கு. அட்ரஸ் இதுல இருக்கு. சாயந்திரம் ஸ்கூல் ஒண்ணு நடத்தறோம். உங்களுக்கு மேல படிக்க விருப்பம் இருந்தா வாங்க. எல்லாம் ப்ரீ தான். எல்லா ஹெல்பும் பண்றோம்” என்று சொல்லி அந்தக் கார்டக் கொடுத்தாரு.

“என்ன சாமி! மதம் மாத்தரீங்களா?” நான் அவரப் பாத்துச் சிரிச்சேன். என் பெல்ட்டுல சொருவி வச்சிருந்த துண்டு பிளேட எடுத்தேன்.

“இல்லவே இல்லை. உங்க நல்லதுக்குத் தான் சொன்னேன்.”

“சும்மா காலாய்ச்சேன் சாமி! நீங்க எங்க எறங்கப் போறீங்க?” பிளேட ரெண்டு வெரலுக்கு நடுவுல மறஞ்ஜாப்புல வெச்சேன்.

“நான் புத்தக் கண்காட்ச்சுக்கு போயிக்கிட்டுருக்கேன். நீங்களும் வரீங்களா” என்றார்.

“இல்ல சாமி! நீங்க போயிட்டு வாங்க. எனக்கு திடீர்னு ஒரு வேல நெனவுக்கு வந்திருச்சு. நான் அடுத்த ஸ்டாப்புல எறங்கி திரும்பவும் வேளச்சேரி போவணும். என்னவோ ஒங்களப் பாத்தா என் அப்பா நெனப்பு வருது. ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றேன். பிளேடும் வெரலும் ரெடியா இருந்துச்சி.

அவர் மொகத்துல ஒரு சிரிப்பு. (நான் மாட்டிக்கிட்டேன்னு நெனச்சாரோ என்னவோ). “நாம எல்லாருமே யேசுவோட கொழந்தைங்க. வாங்க அவர் பேரால ஆசீர்வாதம் பண்றேன்” ன்னு சொல்லி  திரும்பவும் பையத் தொறந்து (உண்மையிலேயே சாமி இருக்குய்யா. ப்ளேடுக்கு வேல இல்லாம பண்ணிட்டாரு )  ஒரு பாட்டில்ல வச்சிருந்த தண்ணியக் கையில எடுத்து என் தல மேல தெளிச்சாரு.

என் நெத்தில தன் வலது கை கட்ட விரல வச்சு, கண்ண மூடிக்கிட்டு என்னமோ முணுமுணுத்தாரு. அந்த கேப்புல நா அந்தக் கட்ட அடிச்சுட்டேன்.
சாமி கண்ணத் தொறந்து அந்த பாட்டில பையில வச்சு பைய மூடினாரு.

ஸ்டாப் வந்திருச்சி. “சரி சாமி கெளம்பறேன்”ன்னு எழுந்தேன். ரூவாக் கட்டு பத்திரமா பேன்ட் பாக்கெட்டுல.

“சரி செய்யுங்க” என்றார்.

பஸ் ஸ்டாப்புல நின்னுது. எறங்கப் போறச்சே “வேளச்சேரில தானே சொன்னீங்க சர்ச்சு இருக்குன்னு? ன்னு கேட்டேன்.

“ஆமா விஜயநகர் ஸ்டாண்டுக்குப் பின்னால் ரோடுல.”

“முடிஞ்சா நாளைக்கு வர்றேன்.” ன்னு சொல்லிட்டு கீழ குதிச்சு எறங்கினேன். சாமி சிரிச்சாரு. ஒரு வேள பாத்திருப்பாரோ? எப்டி இருந்தாலும் நாளைக்குப் போயி பாவ மன்னிப்பு கேட்டுர்ணம்.




No comments: