நேரமாகிவிட்ட அவசரம். பஸ் வராத ஆத்திரம். உள்ளுக்குள் கோபம் கோபமாக பொங்கியது எனக்கு. ‘சே! என்ன வாழ்க்கைடா! எப்படியாவது ரெண்டு மாசத்துக்குள்ள கார் வாங்கிடணும். இந்த மாதிரி பஸ்ஸுக்கு வெய்ட் பண்ற நாய் பொழப்பு போகணும் சாமி!’ என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ராசுக்குட்டி ஆட்டோ என்னைத் தாண்டிப் போனது.
“குட்டி!” என்று குரல் கொடுத்தேன். சட்டென்று ப்ரேக் அடித்து நிறுத்தி தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த ராசுக்குட்டி நிறைய வியர்த்திருந்தான்.
“சிந்தாதிரிப்பேட்டை போகணும் வரியா”என்ற என்னிடம், “‘நானும் அங்க போலீஸ் ஸ்டேஷன் கிட்ட தான் போறேன் சார்! வா நீயும்” என்றான்.
அப்பாடா என்று ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். “என்ன குட்டி, வீட்டுல சௌக்கியமா?” என்று கேட்டேன். “ம்ம்ம்” என்று ஒரு முனகல் தான் வந்தது. ஆட்டோவை ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கினான்
நான் ஒரு வங்கி அதிகாரி. சிந்தாதிரிப்பேட்டை பக்கத்தில் தான் எங்கள் கிளை. லோன் பிரிவில் வேலை. ஒரு முறை ஆட்டோ லோன் மேளாவில் லோன் வாங்க வந்தபோது சந்தித்தவன் தான் இந்த ராசுக்குட்டி. குட்டி ரொம்ப நல்லவன். ஆட்டோ ட்ரைவர்களுக்கு உரிய எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அளவு நல்லவன். ஏதோ நான் என் பணத்தை எடுத்துக் குடுத்தது போல நன்றி சொல்லி சொல்லி மாய்ந்தான். பின்னர் அங்கும் இங்கும் தென்படும்போதெல்லாம் சிரித்து ச்நேகமானான்.
திடீரென்று ஒரு நாள் கல்யாணப் பத்திரிகையுடன் வந்தான். “சார் எனிக்கி கல்யாணம். கண்டிப்பா வந்துரு சார். பிரியாணி எல்லாம் உண்டு” என்று அழைத்தான். கல்யாணத்துக்குப் போன பிற்பாடு தான் தெரிந்தது அவன் எத்தனை லக்கி என்று.
சினிமா ஸ்டார் மாதிரி இருந்தால் அவன் மனைவி. சொந்த மாமா பெண்ணாம். சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று இந்த கல்யாணம். எல்லாரும் ராசுக்குட்டியின் அதிர்ஷ்டத்தை வியந்த போது என் மனம் மட்டும் அவன் மனைவியை நினைத்தது. குட்டி ஒன்று அவ்வளவு அழகானவன் இல்லை. சுமாருக்கும் கீழே.
எப்படியோ அவர்கள் வாழ்க்கையும் நகர்ந்தது. திடீரென்று ஒரு நாள் ஒரு செய்தி காதில் விழுந்தது. குட்டிக்கும் அவன் மனைவிக்கும் சண்டையாம். குட்டிக்கு அவன் மனைவி மேல் சந்தேகம். அவளுக்கும் தன் தம்பிக்கும் உறவு என்று ஒரு சந்தேகம். அதனால் வந்த சண்டை.
அப்புறம் எப்படியோ சமாதானமாகிப் போனார்கள். போன வாரத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தது. ரொம்ப சோகமாயிருந்தான். என்னவென்று கேட்டதற்கு அவன் மனைவி தன் அப்பா வீட்டுக்குப் போய் விட்டாளாம். மாமனிடம் பேசப் போவதாகச் சொன்னான். அதற்கு அப்புறம் இன்னைக்குத் தான் பார்க்கிறேன்.
இந்த எண்ணங்களில் ஆழ்ந்திருந்த என்னை குட்டியின் குரல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. “என்ன குட்டி எதுவும் சொன்னியா” என்று கேட்டேன். “உன்கிட்ட ஒன்னியும் சொல்லல சார்” என்றான். அப்பொழுது தான் கவனித்தேன். அவன் காதில் ஹெட் செட் மாட்டியிருந்தான். ஓஹோ, மொபைல் பேசுகிறான் போலும் என்று நினைத்தேன்.
திரும்பவும் கொஞ்ச நேரத்தில் ஏதோ பேசத் தொடங்கினான். முனகலாக வந்தது சத்தம். ‘ பாசம், துரோகம்’ என்று ஓரிரு வார்த்தைகள் காதில் விழுந்தன. ஏதோ அவனைக் கேக்க வாய் திறந்தபோது அவன் செல் போன் அடித்தது! அப்போது தான் பார்த்தேன் அந்த ஹெட் செட் மொபைலுடன் இணைக்கப் படவில்லை. சும்மா தொங்கிக் கொண்டிருந்தது. காதிலிருந்து அதை அகற்றிவிட்டு போனை எடுத்து பேசினான் குட்டி.
“சொல்லுங்க மாமா. அந்தச் சிறுக்கி ஆப்டாளா? என்ன? போட்டுத் தள்ளிட்டியா? மாமானா மாமா தான். நானும் என் தம்பி தூங்கிக்கிட்டு இருக்கையில அருவாவால தலைய சீவிட்டேன். அத்த எடுத்துக்கிட்டு சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான் போய்கினு இருக்கேன். நீயும் அங்கியே வந்திரு. ரெண்டு பெரும் சரண்டர் ஆய்டலாம்” என்றான்.
அவன் பேசியதைக் கேட்ட நான் உறைந்தேன். கடவுளே ஆட்டோவில் ஏறும் போது வந்த வாடை இதுதானா என்று நினைத்தவாறே தலையை சற்று திருப்பி பின்னால் பார்த்தேன். சீட்டுக்கு பின்புறம்
ஒரு (குட்டியின் தம்பி?) தலை என்னை பீதியுடன் பார்த்தது.
நான் மயங்கினேன்
No comments:
Post a Comment