Monday, January 20, 2014

திருநங்கை


ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய சுகன்யாவுக்கு ரொம்பவுமே ஆயாசமாக இருந்தது. இருக்காதா பின்னே? ஏழு மாசம் carrying ஆச்சே. அம்மா வீடும் சென்னை என்பதால் அடுத்த மாசம் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தாள்.

நல்ல நாளிலேயே தாம்பரத்தில் இருந்து தி நகர் பிரயாணம் ரொம்பவும் கஷ்டம். அதுவும் இந்த மாதிரி சமயத்தில் ரொம்பவே கஷ்டம். 5A பஸ் நேரடியாக தி நகர் போவது ஒன்று தான் சௌகர்யம். அவள் தினமுமே எட்டு மணி பஸ்ஸைத் தான் பிடிப்பாள். ஒன்று அது டயத்துக்கு ஆபீஸ் போக வசதியாக இருக்கும். இன்னொன்று அதில் வரும் பிரயாணிகள்.

ஆண்களும் பெண்களுமாக சுமார் பத்துபேர் இவளை மாதிரியே ரெகுலர். சிலர் பெயர் தெரியும். சிலர் ‘ஹாய் ஹலோ’ பரிச்சயம் மாத்திரமே. ஏனோ சுகன்யாவுக்கு தெரிந்த முகங்களுடன் பிரயாணம் செய்வது பிடித்திருந்தது.

அன்று எட்டு மணி பஸ் இல்லை. ஏனென்று யாரும் சரியாகச் சொல்லவில்லை. அடுத்த பஸ் 8.20க்கு. அதில் ரொம்பவுமே நெரிசல். இவளுக்கு உட்கார இடம் இல்லை. இவளுக்குப் பரிச்சயமானவர்கள் எவருக்குமே இடம் இல்லை. இவள் நிலைமையைப் பார்த்தும் லேடீஸ் சைடில் யாரும் இடம் தரவில்லை.

அப்போது தான் கவனித்தாள்  தன் அருகில் நின்றிருந்த பிரயாணியை. ஒரு திருநங்கை. சுகன்யா மனம் சட்டென்று வாடியது . ‘சே! இன்னைக்கு முழிச்ச மொகம் சரியில்லை!’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

விஷயம் வேறொன்றுமில்லை. சுகன்யாவின் அப்பா போலீசில் வேலையாயிருந்தார். தன் வேலை நிமித்தமாக தான் சந்தித்தக் குற்றவாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த குற்றங்களைப் பற்றியும் சில நேரங்களில் தன் வீட்டில் சொல்லுவார்.  அப்படி அவர் சொன்னதில் இருந்து இவள் சேகரித்த விஷயம் திருநங்கைகள் புரிந்த சிற்சில குற்றங்கள். அதிலிருந்தே அவர்கள் மீது அவளுக்கு ஒரு இனம் புரியாத பயம். வெறுப்பு.

முடிந்த வரை அவளிடமிருந்து ஒதுங்கி நிற்க முயன்றாள். ஆனால் பஸ்ஸின் நெரிசலில் இவள் எவ்வளவு நகர்ந்தாளோ அவளும் அவ்வளவு இவள் அருகிலேயே வந்தாள்.

பஸ் செம்பாக்கத்தை நெருங்கியபோது சுகன்யா தன் இடுப்பில் ஒரு ஸ்பரிசத்தை உணர்ந்தாள். ஒரு ஆண் கரம்! அதிர்ந்தாள். யாராயிருக்கும்?

திரும்பிப் பார்க்க வசதியில்லை. அக்கம் பக்கம் பார்த்தால் அவளுக்குப் பரிச்சயமான முகங்கள்! ஐயோ! இவர்களில் யாராவது இருக்குமா? சே, என்ன முட்டாள்தனம்? என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

ஒரு இரண்டு நிமிடத்தில் மீண்டும் ஸ்பரிசம்! இந்த முறை அழுத்தமாக, தைரியமாக. கோபத்துடன் திரும்ப யத்தனித்த சுகன்யாவின் பார்வையில் அவள் அக்கம் பக்கம் நின்றிருந்த பரிச்சய முகங்கள் பட்டன.  அவைகளில் என்ன நடக்கிறது என்று தெரிந்த ஒரு பாவம்! இவள் கண்ணைச் சந்தித்த மாத்திரத்தில் தாழ்ந்தன.

சுகன்யாவுக்கு அசூயை ஏற்பட்டது. என்ன உலகம்? என்ன மனிதர்கள்? இப்படி நடக்கிறது என்று தெரிந்தும், தன்னுடைய நிலைமையை உணர்ந்தும் எப்படி மெளனமாக இருக்க முடிகிறது? அக்கா தங்கைகளுடன் பிறக்க வில்லையா? மனைவி இல்லையா? மகள் இல்லையா? இப்படி எதுவுமே நடக்காதது போல எப்படி இருக்க முடிகிறது?

இவள் அப்படியும் இப்படியும் நெளியும் போது அந்தத் திருநங்கையைப் பார்த்தாள். ‘ஒரு வேளை அவளாக இருக்குமோ? சே, இருக்காது. யார் என்று தெரிந்து கொள்ள ஒரே வழி அடுத்த முறை தொடும் போது அந்தக் கையை பிடித்து விட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு காத்திருக்கலானாள்.

மேடவாக்கத்தை நெருங்கும் மீண்டும் ஸ்பரிசம். அந்தக் கையை பிடிக்க யத்தனிப்பதற்குள் “ டேய் பொறுக்கி! லேடீஸ் கிட்ட தப்பா நடந்துக்கிறியா? பேமானி! பொறம்போக்கு! அக்கா தங்கச்சியோட பொறக்கல? அதுவும் மாசமா இருக்கிற பொண்ணுகிட்டேயவா? பொறுக்கி ராஸ்கல்! “ என்று சப்தமாக இரைந்த ஒரு குரலைக் கேட்டாள். வியப்புடன் திரும்பிப் பார்த்தால் திருநங்கை!

அவள் ஒரு ஆளின் கையைப் பிடித்திருந்தாள். யாரென்று பார்த்த சுகன்யா அதிர்ந்தாள்! கண்ணன் சார்! ‘சே! ஒரு அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்தேனே! அவரா இப்படி?’ சுகன்யாவுக்கு கண்களில் நீர் முட்டியது.

‘உன்னிய எல்லாம் போலீசுல பிடிச்சுக் குடுத்து முட்டிக்கு முட்டி தட்டினாத் தான் சரியாவடா.  கண்டக்டர்! பள்ளிக்கரணை போலீஸ் டேசனாண்ட வண்டிய நிறுத்துப்பா!” என்று இரைந்தாள்.

சுகன்யா கண்ணீர் நிறைந்த கண்களுடன் கண்ணன் சாரைப் பார்த்தாள். எல்லாம் தெரிந்த பரிச்சயமான முகங்களைப் பார்த்தாள். பின்னர் அந்தத் திருநங்கையைப் பார்த்தாள். கண்ணீரினூடே அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள்.

“வேணாம்க்கா! விட்ருங்க! இனிமே அப்டி செய்ய மாட்டார்” என்று சொன்னாள்.



3 comments:

Sandyshank said...

A very good story indeed.

பித்தன் பேசுகிறேன் said...

Thank you pallavi for your kind words

Anonymous said...

Yes, I have heard a similar real life incident from a colleague though there was nothing physical happened.

Nice.

How does one subscribe to the blog? I cant see any buttons.

Even posting a comment is such a heavy process - these guys have not heard about UX it appears:-(