Sunday, January 5, 2014

லாஜோ


மீண்டும் ஒரு லக்னோ கதை. முகம் சுளிக்காதீர்கள். நான் என்ன செய்வது? என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்கள் அங்கேதான் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு மெகா சீரியல் எடுக்கும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. சரி சுற்றி வளைக்காமல் கதைக்கு வருகிறேன்.

எங்கள் வங்கியின் கஸ்டமர் ராம்லால் சௌத்ரியின் மனைவிதான் லாஜோ.

லாஜ்வந்தி என்னும் அழகான பெயரின் அழகான சுருக்கம் தான் லாஜோ. இருபதுகளின் மத்தியில் இருந்தாள். அதென்னமோ தெரியவில்லை, பெண்களின் அழகைச் சொல்வதென்றால் எனக்கு அலுப்பதே இல்லை.  அதுவும் லாஜோவின் அழகைச் சொன்னால் சொன்ன வாய் மணக்கும். ஆண்டவன் perfection வரும்வரை அழித்து அழித்து செய்திருப்பான் போல இருந்தாள். மூடிய ஆடைக்குள்ளிருந்து ‘பார்’ என்று அறைகூவல் விடுக்கும் இளமைத் திமிர். அதெப்படி, அளந்து வைத்த musical நோட்ஸ் மாதிரி நடக்க முடிகிறது அவளால்? அவள் நடக்கும்போது அவள் காலடியில் பல ஆண்களின் இதயங்கள் சிக்கி நொறுங்குவது வாடிக்கை. அவள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. அவள் அழகைச் சந்தோஷமாகப் பார்க்கும் எவரும் அவள் கணவருக்கு வயது ஐம்பது என்று அறிந்தால் மனம் நோவார்கள். எவரும் அவர் இடத்தில் இருக்கவே விரும்புவார்கள்.

அப்படிப்பட்ட லாஜோதான் என் விஷயத்தில் இளகினாள்.

முதலில் கட்டுக்கோப்பாகத்தான் இருந்தேன். அப்புறம் சிறிதுசிறிதாக என்னை இழந்தேன். வங்கி வேலை நிமித்தம் வரும் அவளைச் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தீண்ட ஆரம்பித்தேன். முதலில் மிகச்சாதாரணமாக கையைத் தொடுவதில் ஆரம்பித்தது. இரண்டு முறை தெரியாமல் நடந்தது என்று அவள் மன்னித்திருக்கலாம். ஆனால் அப்புறம் நடந்த தொடுகைகள் அவள் அனுமதியுடன்தான் என்பது என் விரல்களுக்கேத் தெரிந்தது.

ஒரு நாள் இரண்டு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய வந்தவளை உள்பக்கமாக வரச்சொன்னேன். (வங்கி பற்றி தெரிந்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும்). காஷ் கேபினைத் திறந்து உள்ள வரச்சொல்லி பணத்தை வாங்கி எண்ணினேன். காஷ் கேபின் சூப்பர்மேன் டிரஸ் மாற்றும் டெலிபோன் பூத் மாதிரி ரொம்பவும் நெருக்கடியாக இருக்கும். அந்த நெருக்கடியின் நெருக்கத்தில் உயரமான சேரில் உட்கார்ந்திருந்த என் கைகள் உயரத்துக்கு அவள் இடை !

ஒரு பெண்ணின் இடைக்கு இவ்வளவு மென்மையா? கடவுளே! அதுதான் ஆண்கள் பெட்டிப்பாம்பாக சுருண்டு விடுகிறார்கள்!  லாஜோவின் மூச்சு ரொம்பவும் சூடாக வெளிவந்தது. நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் தன் உடலை என் கைகளோடு உராய்ந்தாள். அந்த இரண்டு நிமிட சுவர்க்கம் என்னை மெய்மறக்கச் செய்தது.

அப்புறம் சுதாரித்துக் கொண்டு விட்டோம் இருவரும். பணத்தை எண்ணி வைத்துக்கொண்டு ரசீது கொடுத்து அனுப்பினேன். அதைக் கொடுக்கும் போது என் கைகள் அவள் கைகளை அழுத்திய அழுத்தத்தில் என் காதலைச் (?) சொன்னேன். ஒரு செக்ஸியான பார்வை பார்த்துவிட்டு சென்று விட்டாள் கிராதகி.

மாலையில் வங்கி மூடும் நேரம். ஒரு ஆள் வந்தான். ராம்லால் சௌத்ரியின் வேலையாள். அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் வீட்டுக்கு வரச்சொன்னதாகவும் செய்தி சொன்னான்.

எனக்கு மிகவும் பயமாகப் போய்விட்டது. சரி வருகிறேன் என்று சொல்லி அனுப்பினேன். ஒரு அரைமணி நேரம் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றேன். மிகவும் பெரிய பங்களா. எல்லா நவீன வசதிகளும் நிறைந்ததாகக் காணப்பட்டது.

சௌத்ரி வந்தார். ஆறடி உயரும் முறுக்கிய மீசையுமாக நான் செய்த காரியத்துக்கு உடனே என்னைக் கொன்றுவிடுபவர் போல பார்ப்பார் என்று நான் நினைத்தால் நடந்தது என்னமோ உல்டா!

மனிதர் சாந்தஸ்வரூபியாக என்னைப்பர்ர்த்து புன்னகைத்தார். டீ பிஸ்கட் வந்தது. நான் டீ அருந்தும்போது சௌத்ரி பேச ஆரம்பித்தார்.

“தம்பி, முதல்ல பயப்படறத நிறுத்துங்க. லாஜோ எல்லாம் சொன்னா. உங்களுக்கு ஒரு விசயம் சொல்லத்தான் கூட்டிவரச் சொன்னேன். லாஜோவுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம். உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இந்த வயசுல இவனுக்கு இது தேவையான்னு பலபேர் என்னக் கேட்டும் இருக்காங்க. அவங்களுக்கு  எல்லாம் சொல்லாத ஒரு விசயத்த உங்களுக்கு சொல்லப் போறேன்.

லாஜோ என் பால்ய சிநேகிதன் பொண்ணு. என் சிநேகிதன் ஒரு விபத்தில் இறந்த பிறகு இவளை என் வீட்டுல வச்சுக்கிட்டேன். அப்போது என் மனைவி இருந்தா. ஒரு நாள் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்திச்சி. என் மவன்  அவகிட்ட  தவறாக நடக்க முயற்ச்சி செஞ்சதா லாஜோ எங்ககிட்ட புகார் செஞ்சா. மகன அழச்சுக் கேட்டப்ப ரொம்ப அலட்சியமா பதில் சொன்னான்.

எனக்குக் கோவம் தலைமேல் போய்விட்டது. அவனை அடிச்சுட்டேன்.
அடுத்த நாள் அவன் வீட்டைவிட்டு போய்ட்டான். கொஞ்ச நாள்ல  என் பொஞ்சாதி அவன் பிரிவைத் தாங்க முடியாம படுத்த படுக்கை ஆனாள்.

ஒரு நாள் என்னையும் லாஜோவையும் கூப்பிட்டு “ இங்க பாருங்க, நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன். அதுக்கப்புறம் ஒரே வீட்டில் நீங்கள் ரெண்டு பேரும் இருந்தா ஊர் வாய் ஓயாது. அதுனால ஒரு சத்தியம் பண்ணிக் கொடுங்க. நான் செத்ததுக்கப்புறம் நீங்க இவளைக் கல்யாணம் செஞ்சுக்கணும்”  என்று சொன்ன என் மனைவின் வார்த்தைகள்ல நாங்க ரெண்டு பெரும் அதிர்ச்சி ஆயிட்டோம்.

சொன்ன மாதிரியே அவள் ரெண்டு மாசத்துல போய்ச்சேர்ந்தா. அப்புறம் ஒரு மாசத்துல நான் லாஜோவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நெருக்கமான நண்பர்கள் தவிர எல்லாரும் வாரித் தூற்றினாங்க. எங்கள் கல்யாணம்  நடந்து ஒரு வருசம் ஆகப் போவுது.” என்று சொல்லி நிறுத்தினார் சௌத்ரி.

அப்புறம் நிதானித்து “ நீங்க நம்புன நம்புங்க, இந்த ஒரு வருசத்துல அந்தப் புள்ள மேல என் விரல் கூடப்பட்டதில்ல. அவ வாழ்க்கை என்னால நாசமாயிட்டதுன்னு எனக்கு ஒரு ஆறாத வருத்தம்.  இப்படி இருக்கையில் தான் அவ உங்களைப் பத்தி சொன்னா. மொதல்ல எனக்கு ரொம்ப கோவம் வந்தது. உங்கள ஆள வெச்சு அடிக்கலாமின்னு கூட யோசிச்சேன். லாஜோ தடுத்துட்டா. அப்ப தான் புரிஞ்சுது அவளுக்கு உங்க மேல ஒரு ஈடுபாடு இருக்குன்னு.” என்று சொல்லி மீண்டும் நிறுத்தினார்.

நான் திகைத்துப் போயிருந்தேன்.

திடீரென்று மீண்டும் பேசினார். “ நீங்க லாஜோவக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா? ரொம்ப நல்ல பொண்ணு சார். என் மேல  நம்பிக்க இருந்தா பதில் சொல்லுங்க. நீங்க மாட்டேன்னு சொன்னாலும் எங்களுக்குப் பரவாயில்ல.” என்றார்.

எனக்கு ஒண்ணுமேப் பேசத்தோணல. இந்த மாதிரி சமயங்கள்ல ஒரு மனுஷன் என்ன பதில் சொல்ல முடியும்? நான் என்ன சொல்லியிருப்பேன்?


---------------------  

1 comment:

பாலா திரு said...

Fine twist. In a adirchy. Keep it up.