Thursday, December 19, 2013

ராசுக்குட்டியின் வருத்தம்.


பாம்பாட்டி தன்னைக் கூடையில் இருந்து வெளியே எடுத்துப் போட்டபோது ராசுக்குட்டிக்கு வலித்தது. ‘சே, என்ன மனிதன் இவன்? எனக்கு வலிக்கிறது என்று ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்?’

ஆனால் ராசுக்குட்டியின் வலியை பொருட்படுத்தாத பாம்பாட்டி, மகுடி வாசிக்க ஆரம்பித்தான். ராசுக்குட்டிக்கு எரிச்சலாக வந்தது. ‘இது ஒரு தொல்லை! இவன் வாசித்தால் நான் ஏன் படம் எடுத்து ஆட வேண்டும்?’ என்று நினைத்தாலும் அப்புறம் அவனிடம் வாங்கப் போகும் அடிக்கு பயந்து ஆட ஆரம்பித்தான்.

கொஞ்ச நேரம் ஆடியபிறகு ராசுக்குட்டிக்கு களைப்பாக இருந்தது. சற்று நேரம் கூடையில் போல் சுருண்டு கொள்ள வேண்டும் போல இருந்தது. கூடை மேல்  அலாதிப் ப்ரியம். கூடையின் இருட்டு இதமாகவும், கதகதப்பு அம்மாவை நினைவுப் படுத்துவது போலவும் இருக்கும்.

அம்மா! அவளைப் பார்த்து எத்தனை காலமாச்சு? எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடமிருந்து இந்த பாம்பாட்டி தன்னைப் பிரித்துப் பிடித்துக் கொண்டது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.. அம்மா  பேச்சைக் கேட்காமல் வெளியே வந்து அலைந்தது தான் காரணம். கொஞ்ச நாள் வரைக்கும் ராசுக்குட்டிக்கு வருத்தமாக இருந்தது. அதற்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மனசு தேறியது.

இந்தப் பாம்பாட்டி கூடவே ஒருத்தி இருந்தாள். அவனுக்கு சாப்பாடு கொடுப்பாள். எப்பவாவது அவன் கழட்டிப்போடும் துணியை தண்ணீரில் நனைத்துப் போடுவாள். ராசுக்குட்டியிடம் ஆசையாக இருப்பாள். ஒரு நாள் அவளைத் தேடி இன்னொருத்தி வந்தாள். கொஞ்சம் சின்னப் பெண்ணாக இருந்தாள். இவர்களுடனேயே தங்கி விட்டாள். அவளும் ராசுக்குட்டியிடம் ஆசையாக இருந்தாள். ராசுக்குட்டிக்கு இரண்டாமவளை ரொம்பப் பிடித்தது.

ஒரு நாள் அந்தப் பெரியவள் வீட்டில் இல்லை. ராசுக்குட்டியும் கூடைக்குள் அரைத் தூக்கத்தில் இருந்தான். திடீரென்று ஒரு சத்தம். அந்தச் சின்னப் பெண்ணின் குரல். ரொம்ப பலமாகக் கேட்டது. ராசுக்குட்டி மெதுவாக கூடை மூடியைத் தலையால் தள்ளி வெளியே பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பாம்பாட்டி சின்னவளைக்  கட்டிப்  பிடித்து என்னவோ செய்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று கதவைத் திறந்து கொண்டு பெரியவள் வந்தாள். வந்தவள் அந்தக் காட்சியைப் பார்த்து சத்தம் போட்டாள். சின்னவளை அடித்தாள்.

அதைப் பார்த்த பாம்பாட்டி பெரியவளை அடித்தான். பெரியவள் அழுதாள். திரும்பவும் அடி தடி. கடைசியில் பாம்பாட்டி தான் புதுசாகப் பிடித்து வந்திருந்த ஒரு பாம்பை கூடையில் இருந்து எடுத்து அவள் மீது தூக்கிப் போட்டான். அது அவளைக் கொத்தியது. அலறியபடி பெரியவள் கீழே விழுந்தாள். விழுந்தவள் அப்புறம் எழுந்திருக்கவேயில்லை.

தன்னைப் போன்ற ஒரு பாம்பு என்ன செய்ய முடியும் என்பது ராசுக்குட்டிக்கு அன்று தான் தெரிந்தது.

அடுத்த நாள் பாம்பாட்டி சின்னவளையும் பாம்புகளையும் எடுத்துக்கொண்டு விடிவதற்கு முன்னரே அந்த இடத்தை விட்டு சென்றான். போகும் போது கீழே இன்னுமும் விழுந்து கிடந்த பெரியவளை ராசுக்குட்டி கூடையின் இடுக்கு வழியே பார்த்துக் கொண்டே சென்றான்.

அப்புறம் வேறே இடம். புது வீடு. மனிதர்கள் கூட வேறு மாதிரி இருந்தார்கள். ராசுக்குட்டியின் வாழ்க்கை முன்னைப் போலவே சென்றது. ஆனால்
இப்போதெல்லாம் பாம்பாட்டி ஒரு விதமான திரவத்தை குடிக்க ஆரம்பித்தான். அதிலிருந்து ஒரு வாடை வேறு வந்தது. ஒரு முறை அவன் இல்லாத் போது ராசுக்குட்டி அதை முகர்ந்து பார்த்தான். தலை சுற்றியது. இந்த திரவத்தைக் குடித்து விட்டு வீட்டில் பாம்பாட்டி சின்னவளுடன் தினமும் கட்டிப்பிடித்துச் சண்டை போட்டான். சின்னவளுக்கு அது பிடிக்காமல் தினமும் அழுதாள். பாம்பாட்டி போன பின் ராசுக்குட்டியைக் கட்டிபிடித்துக் கொண்டு அழுவாள்.

இப்படி இருக்கையில்  ஒரு நாள் பாம்பாட்டி மகுடி வாசித்துக் கொண்டிருந்தபோது ராசுகுட்டி தன் அம்மாவைப் பார்த்தான். அம்மாவும் அவனைப் பார்த்து விட்டாள்.

அம்மா அவனை வா என்று சைகை செய்தாள். ஆனால் பாம்பாட்டியைப் பற்றி ராசுகுட்டிக்குத் தானே தெரியும்! அவன் ரொம்ப மோசம். அவனையும் தப்பிக்க விட மாட்டான். மேலும் அம்மாவையும் பிடித்து வைத்துக் கொண்டுவிடுவான். ராசுகுட்டி தலையை அசைத்தான். அப்புறம் பாம்பாட்டி கிளம்பிய போது பின்னால் வரும்படி அம்மாவுக்கு சைகை செய்தான்.
சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். வீடு வந்ததும் பாம்பாட்டி அந்தத் திரவத்தை எடுத்துக் குடித்தான். அதைப்பார்த்ததும் சின்னவள் அழத் தொடங்கினாள். ராசுக்குட்டிக்கு ஒரு மாதிரி புரிந்தது.

தன் அம்மா எங்கே இருக்கிறாள் என்று பார்த்தான். அவன் அம்மா மெதுவாக வீட்டுக்குள் வந்திருந்தாள். அதற்குள் பாம்பாட்டி சின்னவளைக் கட்டிப் பிடித்துக் கீழே தள்ளினான். சின்னவள் பெரிதாக அழத் தொடங்கினாள். பாம்பாட்டி அவளை அடித்தான். அடிக்கும் போது அவன் கண்கள் கூடைக்கு வெளியே வந்திருந்த ராசுக்குட்டியைப் பார்த்து விட்டன. உடனே அவனைப் பார்த்து ஓடி வந்தான்.

ராசுக்குட்டி அந்த நிமிஷத்தை மறக்கவே மாட்டான். பாம்பாட்டி கிட்டே நெருங்கி இவன் கழுத்தைப் பிடிக்க வந்தபோது, பெரியவளை அந்தப் புதுப் பாம்பு கொத்தியது ராசுக்குட்டிக்கு நினைவு வந்தது.  ராசுக்குட்டியின் நாக்கு வெளியே வந்து நடனமாடியது. வாலால் தரையை உதைந்து சற்று எழும்பி பாம்பாட்டியின் கண்ணில் கொத்தினான். பாம்பாட்டி துடிதுடித்து கீழே விழுந்தான்.

ராசுக்குட்டி தன் அம்மாவைப் பார்த்தான். அவள் சின்னவள் விழுந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் வாசலருகில் இருந்தாள். வா என்றாள் கண்ணால். ராசுக்குட்டி அவளை நோக்கி நகர்ந்தான்.

கீழே விழுந்து கிடந்த சின்னவள் எழுந்து நின்றாள். பின்னர் தன் கைகளைக் கூப்பிக்கொண்டு எதையோ சப்தமாக சொல்லியபடி ராசுக்குட்டியிடம் வந்தாள். அவள் கண்களில் கண்ணீர். அவள் அவனை நெருங்கும் போதுதான் எதிர்பாராத விதமாக அது நடந்தது.

தன்னைத் தாண்டும் போது ராசுக்குட்டியின் அம்மா சின்னவள் காலில் ஒரே போடாகப் போட்டாள். அலறியபடி சின்னவள் கீழே விழுந்தாள்.

ராசுக்குட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. சின்னவளை ஏன் அம்மா கொத்தினாள்? அம்மாவைப் பார்த்தான். வா என்றாள் கண்ணால். ராசுக்குட்டி ஒன்றும் சொல்லாமல் அவள் பின்னே சென்றான்.


ஆனால் அவன் மனசு முழுக்க வருத்தம்.