Wednesday, December 18, 2013

555 - ட்ரிபிள் ஃபைவ்

  
“ உங்களுக்குக் கதை எழுத வருமா?”

இப்படி பார்கிறவர்கள் கிட்டே எல்லாம் என்னை புலம்ப வைத்து விட்டது எனக்கு ஏற்பட்ட writer’s block.

என் பெயர் ராஜசேகரன். உங்களுக்கு நிச்சயமாக என்னைத் தெரிந்திருக்கும். ‘ராஜ்’ என்ற பெயரில் கதைகள் எழுதி வருகிறேன். எல்லா வாராந்திரிகளிலும் மாதாந்திரிகளும் என் கதைகள், தொடர் கதைகள் வந்திருக்கின்றன. எந்தக் கதை எழுதினாலும் கதாநாயகி மட்டுமல்லாது, அதில் இடம்பெறும் இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்ட எந்த பெண் கதாபாத்திரமானாலும் என் வர்ணனைகளுக்குத் தப்ப மாட்டார்கள். விம்மித் தணியும் இளமைகளிலிருந்து
வழிந்து இறங்கும் இடுப்பு வரை ஒரு முறை நின்று நிதானித்துத் தான் கதை நகரும். (பீ அண்ட் சி செண்டர் டிமாண்ட்!)

சுமார் பதினைந்து நாவல்கள் எழுதியிருப்பேன் இது வரையில். எழுத்து சற்று சுலபமாக வந்தது போல தோன்றியதால் போய்க்கொண்டிருந்த ஆபீஸ் வேலையை விட்டு விட்டேன். மனைவிக்கு வருத்தம் தான் என்றாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இப்படி இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று writer’s block என்னைத் தாக்கியது. ஒரு நாள் காலை எழுந்தபோது, கனவிலே வந்து காலையில் காணாமல் போன காஜல் அகர்வாலைப் போல என் எழுத்துத் திறமை காணாமல் போயிற்று. இப்படி எல்லாம் நடக்குமா என்று சந்தேகிப்பவர்கள் கூகுளின் சகாயத்தை நாடவும்.

முன்பெல்லாம் எதைப் பார்த்தாலும் ஒரு கதைக்கான கரு தோன்றும். பைப்பைத் திறந்து விட்டால் கொட்டும் தண்ணிர் போல எண்ணங்கள் எழுத்து வடிவாகும். அந்த சுலபமும் சௌகரியமும் மறைந்தது. ஒரு பாரா எழுதணும் என்றால் கூட நிறைய யோசிக்க வைத்தது. அப்படியும் பலன் கிடைக்கவில்லை.

முதலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருந்த நான் நாட்கள் மாதங்கள் ஆனதும் பயந்தேன். கையிருப்பு கரைந்து கொண்டிருந்தது ஒரு பக்கம், வேறு வேலையும் இல்லையே!

கம்ப்யூடர் முன்னால் வெறித்துப் பார்த்து உட்காரும் என்னிடம் மனைவியின் கோபம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று என்பது அவள் எனக்குக் குடுத்த காப்பியின் தரத்தில் இருந்தே அறிந்து கொண்டேன்.

பணப்பிரச்சினையை விட எழுதவே வராதோ என்று பயந்தேன். அப்படி ஒரு நாள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து கொண்டிருந்த போது ஒரு விவகாரமான தளத்தில் நுழைந்தேன். தமிழில் வயது வந்தவர்களுக்கான ஒரு பத்திரகையின் விளம்பரம் பார்த்தேன். அதில் தந்திருந்த டெலிபோன் நம்பரைத் தொடர்பு கொண்டு கதை எழுதும் வாய்ப்பு பற்றி கேட்டேன்.

“ இப்பல்லாம் சர்குலேசன் ரொம்ப கம்மி சார். அல்லாரும் நெட்லேயே படிச்சிர்ரானுவ. கொண்டாங்க பாப்பம்” என்று ஒரு ஆள் கரகரப்பான குரலில் பேசினான்.

முன்னர் விளையாட்டாக எழுதய ‘சல்லாப ராத்திரிகள்’ என்று கதை(?)யை  எடுத்துக்கொண்டு போய் கொடுத்தேன். சூயிங்கம் மென்று கொண்டே படித்தவன், ‘ஏதோ இருக்கு’ என்று சொல்லி கையில் ஒரு ஐநூறு ரூபாய் தந்தான்.

என் நிலை எனக்கே கேவலமாக இருந்தது. அப்போது என் செல் போன் அடித்தது. பிரபல பத்திரிக்கை எடிட்டர்!

“ராஜ்! பொங்கலுக்கு ஒரு தொடர் போடறோம்! ரெண்டு அத்தியாயம் எழுதி எடுத்துக்கிட்டு வாங்க. ரேட்டெல்லாம் பேசிக்கலாம்” என்று காதில் தேன் வார்த்தார். இருந்தாலும் மனம் கலங்கியது. எங்கே போவேன் கதைக்கு? சிறுகதையே ததிங்கிணத்தோம் போடுது இதுல தொடர் வேணுமாம்!

தலை சுற்றியது. சரி ஒரு காப்பி குடிக்கலாம் (நல்ல காப்பி குடிச்சு நாளாச்சு சார்! என்று அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்றேன். காப்பி ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தபோது “ என்னய்யா ராசு! எப்புடி இருக்கற?” என்ற பரிச்சயமான குரல் கேட்டது.

பார்த்தால் நம்ம சாகர்! அதான் சார் நம்ம (ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் ஒரு கத இருக்கும்யா) சேகர். (இந்த மனுஷனால் தான் ராஜசேகரனான நான் ராஜ் ஆனது).

“அண்ணே! எப்புடி இருக்கீங்க? காப்பி சாப்புடறீங்களா?” என்று மரியாதைக்குக் கேட்டேன்.

“வேணாய்யா. இப்பம் தான் சாப்பிட்டேன். ஆமா என்ன டல்லா இருக்குற? ஏதும் ப்ராப்ளமா?”

‘உங்க கிட்ட சொல்றதுக்கு என்னண்ணே! கொஞ்ச நாளா கற்பனைக் கெணறு வத்திக் கெடக்கு. அதாண்ணே writer’s block. நம்ம ...... பத்திரிக்கையில போன் போட்டு தொடர் வேணும்னு கேக்கறாங்க. ஒண்ணும் புரியல அண்ணே” என்றேன்.

சிறிது நேரம் யோசித்த அவர், “நான் ஒண்ணு சொல்லுவேன், கேப்பியா?” என்றார்.

“சொல்லுங்கண்ணே”

“ஒரு அட்ரஸ் தாறன், போய் பாரு.” என்று சொல்லி தன்னிடமிருந்த ஒரு பையிலிருந்து ஒரு கார்டு எடுத்துக் கொடுத்தார். அப்பத் தான் கவனிச்சேன் மனுஷன் இடது கையில கட்டு. “என்னாச்சுண்ணே?”

“ஒரு ஆக்சிடெண்டுயா! இங்க போய் பாரு, சரியா?” என்று சொல்லி விட்டு “சரி, அப்பறமா பாக்கலாம்” என்று கிளம்பினார்.

அவர் சென்ற பின் அந்தக் கார்டைப் பார்த்தேன்

சிக்கனமான தகவல். 555 என்று எழுதி அதன் கீழ் கெல்லிஸ் பக்கத்தில் ஒரு அட்ரஸ் தந்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. டெலிபோன் நம்பர் கூட இல்லை.

சரி போய்த் தான்  பார்ப்போம் என்று ஹோட்டலிலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அந்த விலாசத்துக்குப் போய் சேர்ந்தேன். முதல் மாடியில் என்றார்கள். இருட்டான மாடி ஏறி 555 என்று போட்டிருந்த ஒரு கண்ணாடிக் கதவைத் திறந்து சென்ற எனக்கு அதிர்ச்சி. இரண்டே அறைகள் கொண்ட ஒரு ஆபீஸ் போன்ற இடம். முதலில் ரிசப்ஷனில் ஒரு பெண். கண்ணில் சிவப்பு விளக்குடன் ஏராளமான உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். “என்ன” என்று கண்களில் ஒரு அழைப்புடன் கேட்டாள். கார்டை மௌனமாகக் கொடுத்தேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே அந்த ஒன்னொரு அறையின் கதவைச் சுட்டிக்காட்டினாள்.

அந்தக் கதவைத் திறந்து கொண்டு நான் உள்ளே நுழைந்த கணம் என் வாழ்வை மாற்றியது.

ஒரு நாற்பது வயது ஆள் உட்கார்ந்திருந்தான். அவன் எதிரில் இருந்த மேஜையில் ஒரு செல் போன். சில பைல்கள். அவன் கையிலும் ஒரு பைல். அதைப் படித்துக் கொண்டிருப்பான் போல.

“யார் அனுப்பிச்சாங்க?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“சாகர்”

“அவனா? சரி சரி, உன் பேரு என்ன?”

“ராஜ்!”

“ ஒ! அந்தப் பௌர்ணமிப் பெண்கள் நீ எழுதியது தானா? செக்ஸு கொஞ்சம் ஜாஸ்தி! புஸ்தகத்த வீட்டுல சேக்க முடியாது” என்று சொல்லி தன் ஹாஸ்யத்துக்குத் தானே சிரித்தான்.

“சரி, சாகர் வேற எதுனாச்சும் சொன்னானா?” சாகரை இவன் ஒருமையில் பேசியது என்னமோ போல இருந்தது. “இல்லீங்க! வந்து பாக்கச் சொன்னாரு” என்றேன்.

அப்போது தான் நினைவு வந்தவன் போல் “உக்காரு” என்றான்

உட்காரப் போட்டிருந்த இரண்டு சேர்களில் ஒன்றில் உட்கார்ந்தேன்.

“ தபாரு! இந்த ஆபீஸ் பணம் பண்ண நடத்தறது இல்ல. ஓனருக்கு தமிழு மேல ஒரு இது. எப்பப் பாரு கத கவிதன்னு இருப்பார். அவரே கத எல்லாம் எழுதியிருக்காராம் சின்ன வயசுல. அதனால அவருக்கு எழுதறவங்க மேல உசுரு.”

நான் மெளனமாக தலையசைத்தேன். “இப்ப ஒனக்கு வந்திருக்கற மாரி அவருக்கும் ஒரு வாட்டி ப்ராப்ளம் வந்திச்சாம். அப்பத்தான் அவருக்கு தெரிஞ்சுதாம். இது எல்லா எழுதறவங்க லைப்லேயும் வருமாம். அத சரி பண்ணத் தான் சார் இந்த ஆபீஸ் ஆரம்பிச்சார்.

இது தற்காலிகம் தான். ஒரு ஆறு மாசம் வருசத்துக்குள சரி ஆயிடும். ஆனா மார்க்கட்டு ஒரே மாரி இருக்காது. நீ திரும்பவும் எழுத ஆரம்பிக்கறதுக்குள்ள பத்து பேரு வந்துடுவானுங்க”.

அவன் பேசிக்கொண்டே இருந்தான். “ சரி, நீங்க எனக்கு எந்த மாதிரி உதவி பண்ணுவீங்க?” என்று இடையில் கேட்டேன்.

“சொல்றேன். இப்ப உனக்கு அஞ்சு கதைங்க நாங்க தருவோம்.  அத ஒம்பேர்ல நீ பப்ளிஷ் பண்ணிக்கோ. பணம் சம்பாரிச்சுக்கோ. ஆறு மாசம் ஒரு வருசத்துக்குள்ள உன் ப்ராப்ளம் சரியான பிறகு, எங்களுக்கு அஞ்சு கதைங்க எழுதிக் கொடுத்திடு. அவ்ளோ தான் மேட்டர்!”

அந்த கார்டில் இருந்த 555 கொஞ்சம் புரிவது போல இருந்தது. என் கண்கள் அந்தக் கார்டை பார்ப்பதை அவன் பார்த்து விட்டான். மெலிதாக சிரித்தான். பான் மசாலா நாசம் செய்த பற்கள். “கரெக்டு” என்றான்.

“அப்போ அந்த மூணாவது அஞ்சு?” என்றேன் ஆர்வத்துடன்.

“ அதான் சொன்னேனே! எங்களுக்கு அஞ்சு கதைங்க எழுத்திக் கொடுக்கணும். அப்படித் தரலேனா அப்பறம் சொல்றேன் அந்த அஞ்சு என்னன்னு” என்றான்.

பிறகு நடந்தவை இது தான். அவன் தந்த ஐந்து கதைகளில் முதல் கதையை என் பாணியில் மாற்றி அந்தப் பத்திரிகைக்குத் தந்தேன். மிகப் பெரிய வெற்றி. அப்புறம் அந்த நாலு கதைகளையும் அதே மாதிரி மாற்றி பதிவித்தேன். பணம் புகழ் சேர்ந்தது. ஆறு மாதம் ஓடியது.

அப்போதான் அந்த அதிசயம் நடந்தது. திடீரென்று writer’s block விலகியது. மேஜிக் போல ஒரு தொடருக்கான ஐடியாவும் தோன்றியது. மட மட வென்று முதல் அத்தியாயம் எழுதி எடுத்துக்கொண்டு என் பேவரட் பத்திரிகை ஆபீசுக்கு சென்றேன்.

படித்துப் பார்த்த அவர் நன்றாக இருப்பதாகவும் இன்னும் எழுதிக் கொண்டுவருமாறும் சொன்னார். மகிழ்ச்சியோடு வெளியே வந்த என் செல் போன் மணி அடித்தது. எடுத்து ஹலோ சொன்னேன்.

மறுமுனையில் “ என்ன பாஸு! இப்டி பண்ணிட்டியே! ப்ராப்ளம் சரியான பிறகு எழுதற அஞ்சு கதைங்க எங்களுக்கில்ல சொந்தம்? மறந்திட்ட பாத்தியா? ஆனா நாங்க மறக்க மாட்டோம். ஒழுங்கு மரியாதையா அத முழுசா எழுதி எங்க கிட்ட கொண்டு வந்து குடுத்திரு.

அப்றம் அன்னிக்கி நீ கேட்டியே மூணாவது அஞ்சு என்னான்னு, அதச் சொல்றேன் கேளு. அஞ்சு கதைங்கள எழுதிக் கொடுக்கலேனா உன் எடது கைல இருக்கற அஞ்சு வெரலையும் வெட்டிருவோம். அஞ்சு கதைக்கு அஞ்சு கதை. இல்லேனா அஞ்சு வெரல். நாளைக்குப் பாக்கலாம்” என்று சொல்லி போனை கட் செய்தான்.

அப்பொழுதான் தான் சாகர் கையில் கட்டுப் போட்டிருந்தது திடீரென்று நினைவுக்கு வந்தது. உடல் வேர்வையில் நனைந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும்போல சிகரட் பிடிக்கவேண்டும் போல பலப்பல இச்சைகள் ஒன்றாக எழுந்தன.

வீட்டுக்குத் திரும்பி வந்தேன். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து அந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு எண்ணம். ஒரு கதை ரெடி. அடுத்த கதைக்கு நெருக்கடி தந்தா என்ன பண்ணுவது? கையைப் பார்த்துக் கொண்டேன்.

உங்களுக்கு கதை எழுத வருமா சார்? வந்தா ஒரு கதை எழுதித் தாங்களேன். ப்ளீஸ்.





2 comments:

Hemamalini said...

555 பிடிக்க விரல்கள் மிஞ்சுமா? ராஜ் என்பவனின் விரல்கள் படுவேகமாகத் தந்தி அடித்தன.... கம்ப்யூட்டர் கீ போர்டில்

கற்பனை குதிரைக்கும் ஓய்வும் தேவை என்பதை உணர்த்தும் வண்ணமாக இருந்தது.

பித்தன் பேசுகிறேன் said...

Thank you from heart for the comments. Your continued support and encouragement is of immense value to a budding writer like me.