Thursday, March 2, 2017

எழுதாத காதல் கடிதம்.


அன்புள்ள சாரு,

நான் இதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை. ஒரே ஒரு கடிதம் தவிர. எழுதத்தெரியாது என்பதல்ல. ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது எழுதிவிட்டால்? அந்த பயம்தான். அதனால் தான் இப்பக்கூட நான் காகிதத்தில் எழுதாமல் மனதுக்குள்ளே எழுதிக்கொள்கிறேன்.

வடகோவையில் நாங்கள் குடியிருந்த திருவேங்கடம் தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிர்புறம் இருந்த ஸ்டோர்ஸ் குடியிருப்பில் உங்கள் குடும்பம் குடிவந்தபோது உனக்கு சுமார் பதினைந்து  வயதிருக்குமா? மெலிதான உடல்வாகுடன் நல்ல கலராக இருந்த உன்னைப் பார்த்ததும் எனது பதினேழு வயது மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

அப்புறம் மெதுமெதுவாக உன்னுடன் பழக ஆரம்பித்தது, ஒவ்வொருநாளும் உன்னைப் பார்ப்பதற்காக தவமிருந்தது, உன்னைக் கண்டால் சந்தோஷித்துப் பொங்கியது என்று அல்மோஸ்ட் இந்தக் கடிதத்தைப் படிப்பவர்களில் பலரும் தத்தம் காதலில் செய்திருப்பார்கள். ஆனால் அந்த சீனுவை ஸ்கூலை விட்டு வெளியேற நான் செய்த சதி போல சிலரே செய்திருப்பார்கள்.

சீனுவை நினைவு இருக்கிறதா சாரு? நல்ல சிவப்பா களையா சின்ன வயசு கமல் மாதிரி இருப்பானே அவன்தான்.  அவனுக்கு உன்மேல் காதல் எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். ( ஒரு தடவை அவன்கிட்டவே கேட்டிருக்கேன்). ஆனால் நீ அவனை பார்த்தாலே சிரித்துத் சிரித்துப் பேசியது என்னைப் பாடாய் படுத்தியது. அது என்ன, சிவப்பா இருந்தா அழகா? நான் கொஞ்சம் கருப்புத்தான். ஆனா நானும் களையாத்தானே இருக்கேன்? எங்களை எல்லாம் பார்த்தால் காதல் வராதா?

உன்னுடைய இந்த பிஹேவியர் என்னோட படிப்ப பாதிச்சுது. போர்ட் எக்ஸாம் உன்னாலயோ சீனுவாலேயோ பாழாறத நான் விரும்பல. ரொம்பவே யோசிச்சேன். அப்பத்தான் அந்த ஐடியா வந்தது. சீனுவோட கையெழுத்து ரொம்ப சுலபமா காப்பியடிக்கக் கூடியதா இருந்தது கொஞ்சம் உதவியா இருந்தது. சீனு எழுதற மாதிரியே ஒரு லெட்டர். அது லெட்டர் கூட இல்லை.ஒரு வசன கவிதை. உன்னைப் பத்தி. உன் இளமை அழகைப் பத்தி எழுதி அவன் உனக்குக் கொடுத்த ஒரு நோட்ஸ் புத்தகத்துல ஒளிச்சு வெச்சுட்டேன்.

அப்புறம் நீ அழுதுகிட்டே அத உங்க அப்பாகிட்ட காமிச்சதும் அத அவர் விவஸ்தையே இல்லாம நம்ம ஸ்கூல் பிரின்ஸிகிட்ட காமிச்சதும், அவர் சீனுவோட அம்மா அப்பாவைக் கூப்பிட்டு நடந்ததெல்லாம் சொல்லி அவனுக்கு டிசி கொடுத்து அனுப்பிச்சதும்தான் அந்தத் தெருவுக்கேத் தெரியுமே!

அன்னிக்கு சீனுவோட அப்பா அவன பெல்டால விளாசினப்ப எனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஒரு எதிரி ஒழிஞ்சான்னு. நான் பைத்தியம்னு நீ நினைக்காதே சாரு. காதல்ல எல்லாமே நியாயம்தான்.

அந்த நியாயம்தான் உன்னோட அத்தை பையன் சேகரோட காலை உடைக்கிறதுக்கு எனக்கு தெம்பும் அமைதியும் தந்தது.

ஆனா ஒண்ணு அவன் கால ஒடச்சப்போ எனக்கு ரொம்பவுமே பாவமாத்தான் இருந்துது. சீனு கேஸ் மாதிரி இல்ல. அப்ப நீ காலேஜ் ஜாயின் பண்ணியிருந்த. உங்க அப்பாவுக்கு திடீர்னு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக். நான் கூட லீவு போட்டுட்டு ஹாஸ்பிடல் வந்திருந்தேனே! ஆனா அது உங்க அப்பாவுக்காக இல்ல. உன்கூட, உன் பக்கத்துல இருக்கலாமேன்னு தான்.

ஆனா அந்த ஆசையிலேயும் மண் விழுந்தது. உங்க சொந்த ஊரிலேர்ந்து சேகரும் அவன் அம்மாவும் உன் அப்பாவப் பார்க்க வந்திருந்தாங்க. உங்க அத்தைக்கு உங்க அப்பா மேல ரொம்பத்தான் பாசம். அதுனால அவரப் பாத்துக்க சேகர உங்க வீட்டிலேயே விட்டுட்டுப் போறேன்னு சொன்னாங்க.

அத்தோட விட்டாங்களா? அது சேகரோட கடமையா. நாளைக்கு சாருவக் கட்டிக்கப் போறவன் அப்படி இப்படின்னு உன் அப்பா மனசக் கலச்சாங்க. ஏற்கனவே படுத்தப் படுக்கையா இருந்த உங்க அப்பா ‘சேகர் என் பொண்ணக் கட்டிப்பானாடி?” என்று உணர்ச்சிவசப்பட்டு கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு நாள் குறிக்கிற லெவலுக்கு போனார்.

எனக்குப் பயமா போயிடிச்சு. ரொம்பவே யோசிச்சுப் பாத்தப்ப சேகர ‘கவனிக்கறதத்’ தவிர வேற வழியில்லைன்னு தோணிச்சு.

உனக்குத்தான் தெரியுமே, நம்ம திருவேங்கடம் ரோடு எண்டுல இருந்த ரயில் பாதையோரமா எப்பவும் இருட்டா இருக்கும். சேகர எப்படியோ கன்வின்ஸ் செஞ்சு அங்க கூட்டிக்கிட்டு போனேன். ‘பயமாயிருக்கு வெங்கட்’ என்றான் இருட்டைப் பார்த்து.

‘சேகர்! எனக்கு உன்கிட்ட பர்சனல் விரோதம் எதுவும் இல்லை. ஆனா சாரு என்னவள். உன்கிட்ட man-to-man பேசினாலும் நீ கேக்க மாட்ட. ஏன்னா சாருவோட இளமையும் அழகும் அப்படி. மேலும், எல்லார் முன்னாடியும் ரசாபாசமாகிடும். அதனால எனக்கு வேற வழி தெரியல்ல. மன்னிச்சுக்கோ’ என்று சொல்லி அவன் எதிர்பார்க்கும் முன்னமே அவனக் கீழே தள்ளினேன். அவன் நெஞ்சுல கால அழுத்தி வச்சு, மத்தியான்னமே அங்க ஒளிச்சு வச்சிருந்த இரும்புக் கழிய எடுத்து ஒரு விதமான குறியோட அவன் முட்டில அடிச்சேன். அவன் முட்டி ஒடஞ்ச சத்தம் இன்னும் என் காதுல இருக்கு.

சேகர் ஜன்ம ஜன்மாந்திர பயத்த அந்த ஒரு சில நிமிஷங்கள்ல பட்டான். அவன் வாயத் தொறந்து ஏதோ சொல்ல நெனச்சான். வெறும் காத்து சத்தம் தான் வந்துது. நான் நெஞ்சுல வச்ச கால எடுத்து அவன் முகத்துல குத்துமதிப்பா அவன் வாய ஒரு உதைவிட்டேன். மினிமம் ரெண்டு பல்லு ஒடஞ்சுது.  “இப்பவே ஊரப் பாக்க ஓடிடு. நாளைக்கு இங்க இருந்தீன்னா உனக்குப் பாடைதான். இந்தக் ஊரு போக பணம்’ என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அங்கிருந்து போயிட்டேன்.

மறுநாள் சேகர் இல்லை. ஒரு விதமான அலாதி நிம்மதியோட உன்னோட பழக ஆரம்பிச்சேன். என்னோட தியாகங்கள் புரியாம நீ பட்டும் படாமதான் பழகினாய்.  அப்புறம் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து நான் அங்கிருந்து வந்திட்டேன்.  எனக்கு உள்ளூர பயம்தான். எங்க நம்மள விட்டு விலகிடுவாளோன்னு. சரி எப்படியும் கெஞ்சியாவது கோவை மாற்றல் வாங்கிட வேணுமின்னு துடிச்சேன்.  அதுவும் வந்துது. ஒரு பத்து நாளுக்குள்ள ஜாயின் பண்ணனும்

அப்பத்தான் ஒரு இடி விழுந்துது. நான் ஒருத்தன் உனக்காகக் காத்திருக்கும் போது வேற இடத்துல உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறதுல உங்க அப்பனுக்கு என்னடி அவ்ளோ கொலவெறி? அதுலேயும் “வெங்கட், சாருவுக்குப் பாத்திருக்கிற மாப்பிள்ளை சென்னைல தான் வேலையாயிருக்கான். கொஞ்சம் முடிஞ்சா அவனப் பத்தி விசாரியேன்’ என்று ஒரு கடிதம் வேறு எழுதினான் உங்கப்பன். எனக்கு அன்னிக்கு வந்த கோவம் சொல்லி முடியாது.

கோவம் வந்தா ஐடியாவும் வரும்தானே? வந்துது. கல்யாண ஜாதகம் கருமாதி ஜாதகமானது. அவன் ரூமிலேயே வச்சு அவன் கதைய முடிச்சப்பத்தான் தோணிச்சு, கொலை பண்றதுலேயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது.

இப்பக்கூடப் பாரு. ஜாயின் பண்ண நாள் நெருங்குதுன்னு கோயம்புத்தூர் கிளம்பிட்டேன். வேலைல ஜாயின் செஞ்சதுக்கு அப்புறம் முதல் வேலை உங்கப்பனப் பாத்து உன்னப் பொண்ணு கேக்கறது. சரின்னுதான் சொல்லுவான். சொல்ல வப்பேன். எனக்கு உங்கப்பனப் பத்தியோ அம்மாவப் பத்தியோ கவல கிடையாது. உன்னப் பத்தித்தான் கவல. எங்கே நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு.

எதுக்கும் இருக்கட்டும்னு நான் கஷ்டப்பட்டு இருட்டுச் சந்துல எல்லாம் அலஞ்சு திரிஞ்சு வாங்கி வச்ச சயனைடுக் குடுவை பத்திரமா இருக்கான்னு சூட்கேசுள்ள கைவிட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.


அது பத்திரமாத் தான் இருந்துது. ஆனா உங்க வீட்டுல யார் உயிரு பத்திரமா இருக்கும்ன்னுதான் தெரில.
  









No comments: