Saturday, February 27, 2016

மாலதி

என்னது, வேலைய ரிஸைன் செஞ்சுட்டியா? நம்பமுடியாத குரலில் வினவிய தன் கணவனை ஏறெடுத்துப் பார்த்தாள் மாலதி.

ஆமாம் என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.

யாரக் கேட்டு இந்த முடிவ எடுத்த? என்கிட்டே ஒரு வார்த்தையாவது சொன்னியா? நம்ம குடும்பம் இருக்கற நெலமைல ஒருத்தர் சம்பாத்தியம் எப்படி போறும்? இந்த மாதிரி முக்கியமா முடிவு எடுக்கும் போது என்னையும் கேக்கணும்ன்னு ஏண்டி தோணல ஒனக்கு?

ராம் ரொம்ப கோவத்தில் இருக்கும்போதுதான் ‘டி’ போட்டுப் பேசுவான்.

உங்ககிட்ட சொல்லாம செஞ்சது வேணா தப்பா இருக்கலாம்.  நம்ம குடும்பத்துக்காக எடுத்த முடிவு இது. அதான்  இப்பச் சொல்லிட்டேனே

காயப்பட்டக் கண்களும் ஊமைக் கோவமுமாக ராம் அங்கிருந்து நகர்ந்து விட்டான். மாலதிக்குத் தெரியும், இனி குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அவன் இயல்பாகப் பேச மாட்டான். சரியாகச் சாப்பிட மாட்டான். ஆனால் இப்போது என்ன காரணத்துக்காக வேலையை விட்டோம் என்று அவனிடம் சொன்னாலும் அவனுக்குப் புரியாது. சரி, நடந்தது நடந்து விட்டது. பொறுத்துப் போவோம் என்ற முடிவுடன் அவள் தன் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவள் மனமோ  ராமைப் பற்றியும் தன் திருமண  வாழ்க்கை பற்றியும் சிந்திக்கத் துவங்கியது.

அவர்கள் திருமணமாகி சுமார் எட்டு வருஷங்கள் முடியப் போகிறது. ஒரே குழந்தை. ஆகாஷ். இரண்டாவது படிக்கிறான். அவன் பிறந்த போதுகூட மாலதி வேலையை விடவில்லை. ஒரு மாதம் லீவு எடுத்தாள். அவ்வளவுதான். ராமின் அம்மாவும் அவள் அம்மாவும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டார்கள். அப்புறம் ஓரிரு ஆண்டுகளில் இருவரும் போயும் சேர்ந்தார்கள். பின்னர் ஆகாஷ் தானே ஸ்கூலில் இருந்து வருவது. பக்கத்து வீட்டில் இருந்து கொள்வது என்று நாட்கள் நகர்ந்தன.

ராம் ஓர் வங்கியில் கிளார்க்காக இருந்தான். ப்ரொமோஷன் எடுத்துக்கொண்டால் இடமாற்றம் செய்து விடுவார்கள் என்று அவன் கிளார்க்காகவே இருந்தான். இடமாற்றம் ஆகிவிட்டால் சென்னையை விட்டு போகவேண்டி வரும். அப்பொழுது மாலதி தன் வேலையை விடவேண்டி வரும். மாலதி ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலையாக இருந்தாள். ஓரளவு கணிசமான சம்பளம். அவள் சம்பளம் அளவுக்கு ப்ரொமோஷனில் சம்பள உயர்வு கிடைக்காது. அதனால் மனக்கணக்குப் போட்ட ராம் கிளார்க்காக இருப்பதே உசிதம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

இந்த நிலையில் தான் வேலையை ரிஸைன் செய்தது அவனுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தன் பக்க நியாயம் என்றாவது ஒரு நாள் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அவள் நினைத்த மாதிரியே ராம் அவளுடன் பேசுவதை தவிர்த்தான். முகத்தை ஒரு இறுக்கமான கல் மாதிரி வைத்துக் கொண்டு இருந்தான். இப்படியே இரண்டு மூன்று நாள் சென்றது.

ஆனால் ஆகாஷ் நிலைமையே வேறு. குழந்தை மிகவும் சந்தோஷப்பட்டான். தினமும் அம்மா ஸ்கூட்டியில் கொண்டு விடுவாள். சாயந்திரம் மீண்டும் ஸ்கூட்டி பயணம். வழியில் குட்டி சமோஸா இல்லை ஐஸ்க்ரீம். 

மாலதிக்கு முதலில் வீட்டில் பொழுது போகுமா என்றிருந்தது ஓரிரு நாளில் பொழுது போதாத நிலைக்கு வந்தது. அப்பா! ஒரு வீட்டில் எவ்வளவு வேலை! ஆகாஷை விட்டு வந்த பிற்பாடு, துவைத்தல், வீடு சுத்தம் செய்தல், சமையல் , பாத்திரம், அயர்னிங் என்று முதுகு ஒடிந்தது. ஆனாலும் அவள் சந்தோஷமாக இருந்தாள்.  ஆகாஷ் வந்தபின் அவனை சற்று விளையாட அனுப்புவாள். அவன் திரும்பி வந்தவுடன் அவனோடு அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பாள். விளையாடுவாள்.

இப்படியே ஒரு வாரம் போனது. அன்று சனிக்கிழமை. வங்கியில் இருந்து மாலை திரும்பி வந்த ராம் முகம் கொஞ்சம் அதிகமாகவே இறுகியிருந்தது. தன்னிடம் கொண்ட கோவத்தையும் தாண்டி ஏதோ நடந்திருக்கிறது என்று மாலதி யூகித்தாள். தன் பிடிவாதத்தையும் விட்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

என்னங்க என்ன ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? ஆபீஸ்ல ஏதும் ப்ராப்ளமா?

அவள் பேசுவாள் என்று எதிர்பார்க்காத ராம் ஒரு கணம் ஆச்சரியப்பட்டுப் போனான்.

ஒண்ணும் இல்ல... என்று மழுப்பினான். இப்போதைக்குக் கேட்டால் அவன் பதில் சொல்ல மாட்டான் என்று மாலதி அத்துடன் விட்டுவிட்டாள். ஆகாஷுடன் உட்கார்ந்து அவனைப் படிக்க வைத்தாள்.
அப்போது ராம் அங்கே தான் உட்கார்ந்திருந்தான்.  அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று மாலதி அவனைப் பார்க்க, தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

இரவு மணி ஒன்பது. ஆகாஷின் ஸ்லீபிங் டைம். அவன் தன் அறைக்குள் சென்றுவிட்டான். ராம் இன்னமும் ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். வெளியே வந்த மாலதி அவன் அருகே உட்கார்ந்தாள். அவன் தலைமுடியை ஆதுரத்துடன் கோதி, என்னடா... என்றாள். ராம் சட்டென்று உடைந்தான். மாலதி அமைதியாக இருந்தாள். அவனே சொல்லட்டும் என்று.

எங்க ஆபீஸ் ராகவ் தெரியுமில்லையா ஒனக்கு? அவன் ஒரு வாரமா ஆபீஸ் வரலை இன்னைக்குத் தான் வந்தான். தாடியும் மீசையுமா. என்னடா ஒடம்புக்கு எதுவும் ப்ராப்ளமான்னு கேட்டதுக்கு ‘ஓ’ன்னு அழுதுட்டான். கொஞ்ச கொஞ்சம் பேசி விஷயம் சேகரிச்சேன். நடந்தது இதுதான்.

ஒனக்குத்தான் தெரியுமே ராகவ் அவன் மிஸஸ் ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்க. அவன் பையன் ராஜேஷ் டென்த் படிக்கிறான். போன வாரத்துல அவன் ஸ்கூல் பேகில் இருந்து லஞ்ச் பாக்ஸ் எடுக்கப் போகும் போது ஒரு சிகரெட்டப் பார்த்திருக்காங்க. ஒரு விதமான வித்தியாசமான ஸ்மெல். அப்புறம் அவன மிரட்டி, அடிச்சுக் கேட்டபோது அது கஞ்சான்னு தெரிய வந்திருக்கு.  கூட சுத்தற சில பசங்களோட சேர்ந்து அந்த பழக்கம் வந்திருக்கு. கிட்டத்தட்ட ஆறுமாசம் இவங்களுக்குத் தெரியாம அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்திருக்கு.

ரெண்டு பேரும் ஒடஞ்சு போயிட்டாங்க. ஏதேதோ டாக்டர் கிட்ட காமிச்சு இருக்காங்க. டாக்டர் சொன்னாராம் ராஜேஷ் ரொம்ப அடிக்ட் ஆகல. கொஞ்சம் கவனமா இருந்தாலே சரியாகிடுவான்னு.

அப்புறம் இவங்க குடும்பத்தைப் பத்திக் கேட்டிருக்கார். ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்கன்னு தெரிஞ்சு ரொம்ப கண்டிச்சாராம். இது ரொம்ப impressionable வயசு. ஜாக்ருதையா இருக்க வேண்டாமான்னு கேட்டுருக்கார். அப்பத்தான் ராகவ் மனைவி சொல்லியிருக்கா வீட்டுல வச்ச பணம் அப்பப்பக் காணாம போயிருக்குன்னு.

டாக்டர் சொல்லிட்டாராம். ஒருத்தர் வேலைய விட்டு வீட்டுல இருந்து பாத்துக்கிட்டா பிள்ளை நல்லபடியா இருப்பான்னு. அதனால ராகவ் மனைவி வேலைய விட்டுட்டா.

ராம் சொல்லி முடித்துவிட்டு மாலதியை ஒரு குற்ற உணர்வுடன் பார்த்தான்.

எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுங்க. உங்க கலீக் ராகவ் சிஸ்டர் என் ஆபீஸ்லதான் வேலை செய்யுறா. இதக் கேட்டுட்டுத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அதோட வேற காரணம் ஒண்ணும் இருக்கு. அத நேரம் வரும் போது சொல்றேன். என்றபடியே அவன் தலையைக் கோதினாள். ராம் அவளை அணைத்தான்.

அப்புறம் ராம் சரியாகி விட்டான். இயல்பாகி விட்டான். ப்ரொமோஷன் எடுத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னான். அதற்கான புத்தகங்கள் வாங்கி வந்தான். மாலதிக்கும் மகிழ்ச்சி.

ஒரு ஞாயிறு அன்று மூன்று பேரும் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தார்கள். அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஓடிச்சென்ற ஆகாஷ் கதவைத் திறந்தான்.

அம்மா இருக்காங்களா குட்டி? என்று ஒரு பெண் குரல் கேட்டது.

வெளியே வந்து பார்த்த மாலதி முகம் மலர்ந்தாள். அங்கே அவளது ஆபீசில் வேலை செய்யும் ரமா தன் பெற்றோருடன் நின்றிருந்தாள்.

வா ரமா! வாங்க அங்கிள்! வாங்க ஆன்டி! என்று வரவேற்றாள்.

உள்ளே வந்தவர்களை ராமும் எழுந்து வரவேற்றான்.

உட்கார்ந்து பேசிகிட்டு இருங்க. நான் டீ எடுத்துட்டு வர்றேன் என்று எழுந்த மாலதியை ரமாவின் அப்பா தடுத்தார்.

உக்காருமா. நாங்க டீ சாப்பிட வரல. ஒனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்

ராம் முகத்தில் ஆச்சார்ய ரேகை! மாலதி அப்படி என்ன செய்துவிட்டாள் இவர்கள் நன்றி சொல்வதற்கு? அவன் முகத்தின் பாவத்தைப் பார்த்த ரமாவின் அப்பா அப்ப, ஒங்களுக்கு எதுவுமே தெரியாதா சார்? என்று கேட்டார்.

பின் அவரே தொடர்ந்தார். சார், மாலதி மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். என் மனைவிக்கு கிட்னி ப்ராப்ளம். நானோ ரிடயர்டு. பெருசா சேவிங்க்ஸ் ஒண்ணும் கிடையாது. இருந்ததும் இவ ட்ரீட்மெண்டுக்குச் செலவாயிடுத்து. பொண்ணுக்கு ஒண்ணும் சேர்த்து வைக்கல. இந்த நெலைல, என் மனைவியோட இன்னொரு கிட்னிலேயும் ப்ராப்ளம் ஆரம்பிச்சுடுத்து. மருந்து செலவு அதிகமாயிட்டே போகுது. அப்பத்தான் போன வாரத்துல ஒரு நாள் ரமா ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொன்னா. அவங்க ஆபீஸ்ல ஆள் கம்மி பன்னப் போறாங்களாம். இவள மோஸ்ட்லி வேலைய விட்டு எடுத்துருவாங்களாம். HRல கூப்பிட்டுச் சொன்னாங்களாம். எங்க மேல இடி விழுந்தாப்பல ஆயிடுத்து. என்று சற்று நிறுத்தினார்.

அடுத்தநாள் வேலைக்குப் போன பொண்ணு சாயந்திரம் வந்து சொன்ன செய்தி எங்க வயத்துல பால வார்த்தது. அவங்க MD கிட்ட உங்க மனைவி பேசினான்களாம். எங்க குடும்ப நிலைய எடுத்துச் சொல்லி, ஆள கம்மிதான் செய்யணும்னா ரமாவுக்கு பதிலா தன்ன எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க.  எம்டியும் சரின்னு சொல்லிட்டார். இப்ப என் பொண்ணுக்கு வேலையிருக்குன்னா அது உங்க மனைவி போட்ட பிச்சை.. கடைசி வார்த்தைகளைச் சொல்லும் போது அவர் நாக்கு தழுதழுத்து கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.

ராம் சிலையாகி அமர்ந்திருந்தான். அங்கிள், இதுக்கு போயி எதுக்கு நன்றி எல்லாம்? எதுக்கு அழறீங்க? நானும் ஒங்க பொண்ணு மாதிரிதானே என்று சொல்லியபடியே அவர் கண்ணீரைத் துடைத்து விட்டாள் மாலதி.

எங்கிருந்து தான் அப்படி ஒரு உத்வேகம் வந்ததோ தெரியவில்லை. சட்டென்று எழுந்த ராம் மாலதியை நெருங்கி அவளை இறுக அனைத்துக் கொண்டான். வேற்று மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மறந்து அவள் கன்னத்தில் தன் அன்பை முத்தமாகப் பதித்தான்.


மாலதி வெட்கத்தில் சிவந்தாள். இனிமேல் வாழ்க்கை நிம்மதியாகப் போகும் என்று அவள் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. 

6 comments:

SSM said...

Fantastic. You should spend more time writing such and more than the pedestrian posts in
FB. Few have such talent and you are indeed gifted. What more should I say. I am selfish and look forward to such and more.

பித்தன் பேசுகிறேன் said...

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஜி. முயற்சி செய்கிறேன். :)

Unknown said...

very nice story vri. All the best.

Unknown said...

Good moral story ...we expect stories like this...thank you vr

Unknown said...

Good moral story ...we expect stories like this...thank you vr

Unknown said...

Keep writing ssir. We are missing your good storied