Monday, February 2, 2015

ஸ்ரீதேவி


நான் கேந்த்ர ஸர்காரில் உத்தியோகமாக இருந்த எண்பதுகளின் ஆரம்பம். எனக்கு அப்போது வயது 21 தான் இருக்கும். ஸ்கேல் டி ஸ்டெனோவாக உத்யோகம்.

நான் அப்போதெல்லாம் பார்க்க அழகாக இருப்பேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  இளமை குடிகொண்ட திரேகம். நறுக்கி விடப்பட்ட மெல்லிய மீசை. என்ன, பார்த்த மாத்திரத்தில் மதராஸி என்று தெரிந்துவிடும். வாயைத் திறந்து ஹிந்தி பேச ஆரம்பித்தால் ஊர்ஜிதமாகிவிடும்.

புதிதாக உத்தியோகம். கையில் காசு புரண்டது. தனியாக வேறே குடியிருந்தேன். கரோல்பாகில் ஒரு வீட்டு பர்ஸாத்தியில் ஜாகை. இந்தச் சூழ்நிலையில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொற்றிகொண்டது. புதிதாக கற்றுக்கொண்ட பாஷையை அடிக்கடி பேசுவதுபோல, புதிதாகக் கற்றுக் கொண்ட பழக்கதோஷத்தில் ஒரு நாளைக்கு ஐந்து சிகரெட்டுகள் புகைப்பேன்.
அதில் ஒன்று ஆபீஸ் லஞ்ச் நேரத்தில். அந்த சிகரெட்டால் தான் ஸ்ரீதேவி எனக்கு அறிமுகமானாள்.

ஸ்ரீதேவி என்றவுடன் சினிமா நடிகை என்று நினைத்துவிடாதீர்கள். அவளை விட அழகானவள். இவளைப் பார்த்திருந்தால் விக்ரம் அன்றைக்கே ‘அய்யங்கார் வீட்டு அழகே’ என்று பாடியிருப்பார்.

நல்ல உயரம். கண்களை அரையும் ரோஸ் கலந்த வெளிர் நிறம். அழகான கண்கள். வர்ணனை இத்தோடு போதும். காரணம் கதை மேலே படிக்கப் படிக்க உங்களுக்கேப் புரியும்.

ஒரு நாள் லஞ்ச் நேரம். சிகரெட் புகைக்க எங்கள் தளத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த பால்கனிக்குச் சென்றேன். பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து உதடுகளில் பொருத்தி, பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்துப் புகையை வளையமாக வானில் செலுத்தினேன். அந்த வளையம் அழகாக மிதந்து சென்றது.

படபடவென யாரோ கை தட்டிய மாதிரி இருக்க, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பால்கனியிலிருந்து கீழே பார்த்தேன். கீழே இருந்த வாகன ஸ்டாண்ட் அருகில் ஒரு மர நிழலில் அஞ்சனாவும் இன்னொரு பெண்ணும் நின்றிருந்ததைக் கண்டேன். அஞ்சனா என் செக்ஷனில் பணிபுரியும் டைப்பிஸ்ட். அவளோடு நின்றிருந்தது ஸ்ரீதேவி என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

எனக்கு வெக்கம், பெருமை, அவமானம் என்று எல்லாம் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு பெண், அதுவும் அழகானவள், அவள் எதிரில் இப்படிப் புகைத்து அவமானப்பட்டுவிட்டேனே என்று குறுகுறுத்தது.  சட்டென்று சிகரெட்டை கிழே போட்டு காலால் அணைத்துவிட்டு விடுவிடுவென்று என்று செக்ஷனுகுச் சென்று விட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து அஞ்சனா வந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. ‘’ச்சாகயே ஜி துசி” என்று பஞ்சாபியில் காதருகில் சொல்லிச் சென்றாள். எனக்கு ஜிவ்வென்று ஆனது. அஞ்சனாவிடம் பாராட்டா! வாவ்! என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அஞ்சனா ஒரு பஞ்சாபி சிலை என்று சொன்னாலே போதுமானது. உடைகளில் ப்ரத்யேக கவனம் செலுத்துவாள். மிக இறுக்கமான ஆடைகள் அணிவாள். பார்ப்பவருக்கு மூச்சு முட்டும். எனக்கும் முட்டும். தினமும். பல தடவை. அவள் சொல்கிறாள்  ‘’ச்சாகயே ஜி துசி” !

அதற்கப்புறம் வந்த நாட்கள் என் வாழ்வின் மிக முக்கியமான நாட்கள். ஏனோ தானோ என்று உடை அணிந்து வந்த நான், நல்ல கடையாகச் சென்று பொருத்தமான பான்ட் ஷர்ட் வாங்கினேன். நல்ல ஷூ வாங்கினேன். சலூனுக்குச் சென்று ‘அமிதாப்’ கட்டிங் செய்து கொண்டேன். இப்படி ஒவ்வொன்றாக மாற்றங்கள் நிகழ நிகழ அஞ்சனாவின் பாராட்டுதல்களும் கிடைத்தன. சில சமயம் சொற்களால். சில சமயம் பார்வையால்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில், திடீரென்று அஞ்சனா என் சீட் அருகில் வந்தாள். ‘ ஆர் யூ ப்ரீ டுடே வெங்கட்? வீ கான் கோ பார் என் ஐஸ் க்ரீம் அட் நிருலாஸ்!” என்றாள்.

எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. அஞ்சனா என்னை வெளியே கூப்பிடுகிறாள். அதுவும் ஐஸ் க்ரீம் சாப்பிட! அதுவும் கனாட் பிளேசில்! சாயந்தரத்துக்குள் நான் அவளுடன் கற்பனையில் குடும்பமே நடத்தி விட்டேன்.

சாயந்திரம் மணி ஐந்து அடித்ததும் “சலேன்?” என்றாள். இருவரும் புறப்பட்டோம். எங்கள் பில்டிங் வாசல் வரை வந்ததும் தான் கவனித்தேன் அந்தப் பெண் ஸ்ரீதேவி அங்கே நின்றிருந்ததை.  “ ஹாய் ஸ்ரீ! ஜாய்ன் அஸ் பார் அன் ஐஸ்க்ரீம்” என்று என்னைக் கேட்காமலே என் மனைவி அஞ்சனா ( கற்பனை தான் ஸார்!) அவளைக் கூப்பிட்டாள்.

அவள் வரக்கூடாதே என்று நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஆனால் அன்றைக்கென்று பார்த்து எல்லா தெய்வங்களும் எனக்கு எதிராக செயல்பட்டன. “வொய் நாட்?” என்று எங்களுடன் சேர்ந்து கொண்டாள் ஸ்ரீ என்கிற ஸ்ரீதேவி.

எனக்கு திடீரென்று எல்லாமே சுவையிழந்து போனது. இருந்தாலும் அஞ்சனாவின் அருகாமை கிடைக்குமே என்ற எண்ணத்தில் என்னைத் தேற்றிக்கொண்டேன். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. நான்கு பேர் அமரக்கூடிய டேபிளில் அஞ்சனா ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு அருகில் இருந்த சேரில் தன் கைப்பையை வைத்தாள். நான் எதிர்புறம் இருந்த சேரில் உட்கார்ந்தேன். என் அருகில் ஸ்ரீதேவி. எனக்குச் சப்பென்று ஆனது. மந்திரித்து விட்ட கோழி போல அமர்ந்திருந்தேன்.  மெனு கார்ட் பார்த்து அவர்களே  ஆர்டர் செய்தார்கள். ஐஸ் க்ரீமும் வந்தது. நான் வேண்டா வெறுப்பாக சாப்பிட ஆரம்பித்தேன். அஞ்சனா தொடர்ந்து ஸ்ரீயிடம் ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள். நான் அவர்கள் சம்பாஷணையில் கலந்து கொள்ளவில்லை. அப்பொழுது தான் அது நடந்தது.

என் காலில் திடீரென்று ஒரு கால் பட்டது. பெண் கால்! வாரே வா அஞ்சனா! இதற்குத்தான் எதிர் சீட்டில் உட்கார்ந்தாய என்று மனம் கொந்தளித்தது.  மீண்டும் அந்தக் கால் என் காலை குசலம் விசாரித்தது. என் கால்களும் பதில் சொல்லின. இந்த வார்த்தையில்லாத சம்பாஷணையின் ஊடே நான் ஒரு முறை அஞ்சனாவைப் பார்த்துச் சிரித்தேன். அவள் சிரிப்பதற்குப் பதிலாக “எக்ஸ்க்யூஸ் மீ” என்றபடி எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள்.

நான் மனதுக்குள் பொருமியமடி ஐஸ் க்ரீம் மீது கவனம் செலுத்தினேன். இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு இருப்பேன். அப்போது திடீரென்று மீண்டும் ஒரு பெண் கால் அதே கால் என் கால்கள் மீது பட்டது. நான் உறைந்தேன்.

அட ராமா! இவ்வளவு நேரம் உறவாடிய கால்கள் ஸ்ரீதேவியின் கால்களா? நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் புன்சிரித்தாள். அவளது அபரிமிதமான அழகு என்னை ஒன்றும் செய்யவில்லை.

அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்தில் அஞ்சனா திரும்பி வந்தாள். நான் பில் செலுத்திவிட்டு வெளியே வந்து அவர்களுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு பஸ் பிடித்து கரோல் பாக் வந்தேன்.

ரூமுக்குத் திரும்பியபோது ஒரு லெட்டர். வீட்டிலிருந்து. அடுத்த வாரம் அண்ணனுக்குப் பெண் பார்க்க போகிறார்களாம். கோயமுத்தூர் பெண். நானும் வந்தால் பெண்ணையும் பார்த்துவிட்டு எங்கள் குல தெய்வம் கோவிலுக்கும் சென்று வரலாம் என்று அம்மா எழுதியிருந்தாள்.

மறுநாளே சென்று டிக்கட் வாங்கினேன். அதற்கும் மறுநாள் ஊருக்குக் கிளம்பி விட்டேன். ஊர் போய் சேர்ந்த அன்றே கோவை கிளம்பினோம். மறு நாள் பெண் பார்க்கும் படலம். பிறகு குலதெய்வ தரிசனம். பாலக்காடு கோவிலுக்குப் போகும் போது அம்மா அண்ணனிடம் “என்னடா ராம்! பிடிச்சிருக்கா?”

ராம் பளிச்சென்று “இல்லைமா” என்று சொல்லிவிட்டான். காரணம் பெண் சற்று மாநிறமாம். அவனுக்கு நல்ல கலராக பெண் வேண்டுமாம். அவன் கலருக்குத் தகுந்தாற்போல. என் மனதில் ஒரு மின்னல். ரோஸ்மில்க் ஸ்ரீதேவி! அண்ணன் அவளைப் பார்த்தால் உடனே எஸ் சொல்லிவிடுவான். நானும் தப்பிப்பேன்.என் முகம் போன போக்கைக் கவனித்த அம்மா என்னவென்று கேட்க நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவள் முகத்திலும் மலர்ச்சி. அண்ணன் முகத்திலும் தான். “அவளும் சென்னை தான்மா. நாம நாளைக்குச் சென்னை போனதும் நான் ஆபீசுக்குப் போன் போட்டு பேசி அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கிடறேன். அப்புறம் நேர்ல போயி பார்த்து பேசிடலாம். போட்டோ பார்த்து பிடிச்சிருந்தா அவளை உடனே கிளம்பி வரச்சொல்லலாம்” என்று சொன்னேன்.

சொன்னபடியே எல்லா வேலையும் மறுநாள் செய்தேன். ஆனால் நான் போன் போட்டுப் பேசியது அஞ்சனாவிடம். ஒரு சான்ஸ் என்றால் ஒரு சான்ஸ். அதை மிஸ் பண்ணுவேனா?

ஸ்ரீதேவியிடம் அவள் வீட்டு அட்ரஸ் வாங்கித் தருமாறு சொன்னேன். வேறு விஷயம் எதுவும் சொல்லவில்லை. சஸ்பென்சாக இருக்கட்டுமே!  அவளும் அதுபோலவே ஒரு பதினைந்து நிமிடத்தில் வாங்கி எனக்குப் போன் செய்து சொன்னாள்.

அன்றைக்கே மாலையே ஸ்ரீதேவி வீட்டாரிடம் அம்மா பேசினாள். மறுநாள் காலை அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். அவள் பெற்றோருக்கு ராமைப் பிடித்து விட்டது. ராமுக்கும் ஸ்ரீதேவி போட்டோ பார்த்து அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவள் பெற்றோர் அவளைக் கிளம்பி வரச் சொல்லி தகவல் அனுப்பினார்கள்.

அம்மா என்னை லீவ் நீட்டிக்கச் சொன்னாள். ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் மறுநாள் ஸ்ரீதேவி வீட்டில் இருந்து ஒரு போன். அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லையாம். என்ன காரணம் என்று சொல்லவில்லை. ஆனால் எனக்குத் தான் தெரியுமே! ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை.

நான் தில்லி திரும்பினேன். அன்றைய தினம் லஞ்ச் நேரத்தில் வழக்கம் போல புகைக்க பால்கனி சென்றேன். இரண்டு இழுப்பு இழுத்திருப்பேன்.

“ஒரு பொண்ணு மனசப் புரிஞ்சுக்கத் தெரியாதா நீயெல்லாம் ஒரு மனுஷனா? நான் ஒனக்கு மன்னியா?” என்று கோவமாக ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஸ்ரீ!

அப்புறம் அவள் என்னுடன் பேசவேயில்லை. நானும் அதுபற்றி கவலைப்படவில்லை. ஆனால் எனக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று ஒரு நாள் அஞ்சனா என்னிடம் தனது கல்யாணப் பத்தரிகையை கொடுத்தாள். மாப்பிள்ளை ஒரு பஞ்சாபி. எனக்கு எல்லாமே வெறுத்துப் போனது. 

மனதின் ஒரு ஓரத்தில் ஸ்ரீதேவியை ஏமாற்றியதற்கான poetic justice போல என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

அதற்கப்புறம் கென்ற ஸர்கார் வேலையை விட்டுவிட்டு வங்கியில் சேர்ந்தேன். வருடங்கள் கடந்தன. எனக்கும் கல்யாணம் ஆனது. ஒரு குழந்தை.

சுமார் பத்து வருடங்களுக்குப் பின் ஒரு நாள் என் தூரத்துச் சொந்தத்தில் இருந்து ஒரு கல்யாண பத்திரகை வந்தது. என் பெரியப்பா முறை. அவரே போன் செய்தும் அழைத்தார். அவர் பெரிய பிள்ளை கல்யாணம் நடந்தபோது என்னால் போக முடியவில்லை. அதனால் இரண்டாவது பிள்ளை கல்யாணத்துக்கு அவசியம் வர வேண்டும் என்று சொன்னார். கல்யாணம் சென்னையில் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்பேன் என்றும் சொன்னார்.

நான் குடும்ப சஹிதம் கல்யாணத்துக்குச் சென்றேன். என் பெரியப்பா மகன் ( எனக்கு அண்ணன் முறை) ஸ்ரீதர் என்னை வரவேற்றான். “வாடா பெரிய மனுஷா! இப்பத்தான் வழி தெரிஞ்சுதாக்கும்? வா உனக்கு மன்னிய introduce செய்யறேன்” என்று என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

அங்கே உள்ளே நாலைந்து பெண்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி “ ஜானு, இவன்தான் உன் மச்சினன் வெங்கட். டேய் இவ தாண்டா உன் மன்னி” என்றான்.


அந்தப் பெண்மணி திரும்பி “ஹல்லோ வெங்கட், ஐ யாம் ஸ்ரீதேவி,  யூ கான் கால் மீ ஸ்ரீ” என்றாள். நான் பதில் எதுவும் சொல்ல முடியாமல் என் தில்லி தோழி ஸ்ரீதேவி முகத்தைப் பார்த்தபடி நின்றேன். 

No comments: