Sunday, January 18, 2015

ஒரு ரூபாய் – சிறுகதை


 “வாய்யா அருணாசலம்! எப்டி இருக்க? வீட்டுல சம்சாரம், பிள்ளைங்க நல்லா இருக்காங்களா? ம்ம்ம். பெரிய மனுஷன் ஆயிட்டே! இந்தப் பக்கம் தலயக்கூடக் காட்ட மாட்டேங்கற” என்று சப்தமாக பேசிக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார் பிரபல கிரிமினல் வக்கீல் ஆதிமூலம்.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஆதிமூலத்துக்கு பியர் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் வயிறு தெரிவித்தது. கிட்டத்தட்ட ஆறு அடி. மாநிறம். சற்றே பருமனான சரீரம். தேவையற்ற இடங்களில் கூட இரைந்து பேசும் சுபாவம். தான் மிகவும் successful என்பதை நன்கு உணர்ந்த மனிதனின் திமிர் அவரிடமிருந்து ஒரு ஒளிவட்டம் போல் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு hi profile கேஸும் அவரைத் தேடி வரும். பல கோடிகளை அவருக்குச் சம்பாதித்துத் தரும்.

கீழே ஹாலில் உட்கார்ந்திருந்த அருணாசலமும் குறைந்தவர் அல்ல. நகரின் பிரபல ஆடிட்டர். தொழிலுக்குத் தேவையான பட்டங்கள் தவிர, கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, வரி ஏய்ப்பு முதலிய துறைகளிலும் முதுநிலை பட்டம் வாங்கியவர். அவரும் ஆதிமூலமும் வெகு நாளைய தொழில் ரீதி நண்பர்கள். அவர்களது நட்பை friendship of convenience என்று கூடச் சொல்லலாம்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆதி. உன் சம்சாரம் பிள்ளைங்க சௌக்கியமா? எங்கே யாரையும் காணும்?” என்று பதிலுக்கு விசாரித்தார்.

“மவன் பெங்களூருல ஐ டி கம்பனில வேலையா இருக்கான். பொண்ணு இங்க தான் காலேஜ் படிக்குது. காலேஜ் டூருன்னு  ஒரு வாரம் வெளியூர் போயிருக்குது. சம்சாரம் கோவிலுக்கு போயிருக்கா. நான் பண்ற பாவத்த எல்லாம் அவதானே கோவிலுக்குப் போய் கொறைக்கனும்?” என்று ஏதோ ஹாஸ்யம் சொன்ன மாதிரி பெரிதாக சிரித்தார்.

“சரி, என்ன சாப்பிடறே சொல்லு? காப்பியா டீயா? என்ன விஷயம்? இவ்ளோ காலைல வந்துருக்க? மொகம் வேற வாடியிருக்குது... நல்ல தைரியசாலி மனுஷன் ஆச்சேய்யா நீ? சொல்லு என்ன ஆச்சு “ என்று கேட்டார்.

மெலிதான குரலில் அருணாசலம் அவருக்குச் சொன்ன விஷயம் இதுதான்.

காலேஜில் படிக்கும் அவர் மகன் ஒரு பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்து அவளுடன் நயவஞ்சகமாகப் பழகி அவளை அனுபவித்து விட்டான். இளமைத் தவறில் வயிற்றில் குழந்தை தங்கி விட்டது. கல்யாணப் பேச்சை எடுத்துக்கொண்டு அந்தப்பெண் அவர் மகனை நச்சரிக்கிறாள். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட ஆதிமூலம் உதவுவாரா என்று கேட்கத்தான் இப்போது வந்திருக்கிறார்.

விஷயத்தை கேட்ட ஆதிமூலம் சிரித்தார். “ என்னய்யா இது ஒரு மேட்டர்னு என்கிட்டே வந்துருக்க? நீயே முடிச்சிருக்க வேண்டியதுதானே? உனக்குத் தெரியாததா?” என்றார்.

“இல்ல, பொண்ணு கொஞ்சம் பெரிய இடம். அதான்...” என்று இழுத்த அருணாச்சலத்திடம் “ என்ன பொல்லாத பெரிய இடம்? உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? இப்படித்தா போன மாசம் என் மவன் என்கிட்ட வந்தான். ‘அப்பா, ஒரு பொண்ணோட கசமுசா ஆயிரிச்சு. அவ pregnant ஆயிட்டா. கல்யாணம் கில்யாணம்னு பேசறா. என்ன செய்யலாம்?’ னு கேட்டான். பணத்தைக்கொடுத்து முடிசிர்ரான்னு சொல்லி கையில ஒரு அஞ்சு C கொடுத்தேன். மேட்டர் பினிஷ். நீயும் அதே மாரி பண்ணிடு. உனக்குக் கஷ்டமா இருந்தா நானே பேசி கொடுக்க ஏற்பாடு பண்ணிடறேன். சரியா? நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணாதே!” என்றார்.

“சரி, நானும் இது மாதிரி யோசிச்சுத் தான் பணம் கொண்டு வந்திருக்கேன். இரு, போய் கார்லேர்ந்து எடுத்துட்டு வர்றேன்” என்று கிளம்பியவரை, “ நீ இரு, நம்ம டிரைவர எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்று தடுத்தார் ஆதிமூலம்.

பின்னர் தன் டிரைவரை அழைத்து அருணாச்சலத்தின் கார் சாவியை வாங்கிக் கொடுத்து முன் சீட்டில் இருக்கும் ஒரு பிரீப் கேஸை எடுத்து வரச் சொன்னார்.

பின்னர் இருவரும் காப்பி குடித்தார்கள். அதற்குள் அவர் டிரைவர் பிரீப் கேஸை எடுத்துக்கொண்டு வந்தான் அருணாச்சலத்திடம் தந்தான். அதைத் தன் எதிரில் இருந்த டேபிள் மேல் வைத்தார் அவர். அந்த பிரீப் கேஸை பார்த்த ஆதிமூலத்துக்கு திடீரென்று நெஞ்சு வலிப்பது போல இருந்தது. அது போன மாசம் அவர் தன் மகனிடம் மேட்டர் செட்டில்மெண்டுக்கு அஞ்சு கோடி கொடுத்தனுப்பிய அதே பிரீப் கேஸ்! அப்படியென்றால்.....

“ நீ எனக்காக போய் கஷ்டப்பட வேண்டாம் ஆதி. கொடுக்க வேண்டியவங்க கிட்ட நானே கொடுத்துர்றேன். இந்தா...” என்று அருணாசலம் அவர் பக்கம் அந்த பிரீப் கேஸை நகர்த்தினார்.

“அப்புறம் நீ கொடுத்த அதே அமௌன்ட்ட நானும் தந்தா மரியாதையா இருக்காது. அதனால நீ தந்ததுக்கு மேல ஏதாவது நான் தரணும் இல்லையா?” என்று இறுகிய குரலில் சொல்லியவாறே தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அந்த பிரீப் கேஸ் மீது வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வாசல் நோக்கி நடந்தார் அருணாசலம்.


பிரீப் கேஸ் வைத்த அந்த ‘அஞ்சு’ கோடியை விட கனமான ஒரு ரூபாய் ஆதிமூலத்தைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.

No comments: