555 ஏஜென்சியிடம் மாட்டிக்கொண்டு ஒரு விரலை இழந்தபின் பல மாதங்கள் இலக்கியத் தொண்டு செய்யாமலிருந்தவருக்கு இன்று தான் ஒரு பப்ளிஷிங் ஹவுசிலிருந்து அழைப்பு வந்தது. சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டார். ஆனால் இந்தப் பாழாய்ப்போன பஸ் கிளம்பும் வழியாகத் தெரியவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய பழைய பொழுது போக்கை நாடினார். பஸ்ஸில் இருந்தவர்களை அவர் கண்கள் மேயத் தொடங்கின.
புதிதாக வந்தவர்களுக்கு அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நல்ல வசதி இருந்தும் பஸ்ஸில் போய் வரும் காரணம் கேட்டால், “ ஒவ்வொரு மனுசனும் ஒரு கத பொஸ்தகம்யா ” என்பார். ஒரு மணி நேரம் பயணம் செய்தால் குறைந்தது ஒரு சிறு கதையாவது தேற்றி விடுவார். அவர் திறமை அப்படி.
அந்த பஸ் நிறைந்திருந்தது. ஒரு ரவுண்டு சுற்றி வந்த அவர் கண்கள் அந்த ஐயர் மாமியிடம் வந்து நின்றது.
சுமார் நாற்பது வயதிருக்கும். நல்ல நிறம். மடிசார் அணிந்து இருந்தாள். கையில் ஒரு மஞ்சள் பை. அவள் அருகில் ஒரு சிறுமி. சுமார் பத்து வயதிருக்கும். ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தது. இருவருக்கும் இருந்த முகஜாடை வேறுபாட்டால் இவர்கள் இடையே உறவு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு சாகர் வந்தார்.
அவள் கொஞ்சம் பதட்டமாய் இருந்ததை சாகர் கவனித்து விட்டார்.
‘ஏன் பதட்டமாய் இருக்கிறாள்? ஏதும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ? அதற்குப் போய் கொண்டிருக்கிறாளோ? இல்லை உடல் நிலை சரியில்லையோ? என்னவாயிருக்கும்?’ என்று பலவாறு ஓடிய சிந்தனையில் திடீரென்று ஒரு கேள்வி! இவள் கணவன் எங்கே? ஒரு வேலை அவருக்குத் தான் ஏதும் ஆகிவிட்டதா?
இப்படிக் கற்பனைக் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்த அவர் கண்கள் அப்பொழுது தான் தனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்தவர்களைக் கவனித்தன.
‘சே! எப்படி இவர்களைப் பார்க்காமல் போனேன்?’
முன் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு பேரில் ஒருவர் சிறிய வயதினர். மற்றவர் சற்று வயதான குடுமி வைத்திருந்த ஐயர். நிச்சயம் அவளது கணவராகத் தான் இருக்க வேண்டும். முகத்தில் ஒரு இறுக்கம். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். விருப்பத்துடன் பார்த்தது மாதிரி தெரியவில்லை. கோவமாக இருக்கும். மனைவி மேல் தான் கோவமாக இருக்கும். என்ன சொன்னாளோ?
தன் பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம் பிடித்தாளோ என்னமோ? ஆனால் இவர்கள் வயதைப் பார்த்தால் கல்யாணம் ஆகி குறைந்தது பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும் போலத் தெரிந்தது.
இத்தனைக் காலத்துக்கப்புறம் பிறந்த வீட்டுக்குப் போவது பற்றியெல்லாம் சண்டையிட்டுக் கொள்வார்களா? சந்தேகம் தான். வேறு ஏதாவது விஷயமாக இருக்கும். என்னவாக இருக்கும்?
சட்டென்று ஒரு மின்னல். இவர்கள் குழந்தை அல்லது குழந்தைகள்? இருவர் மட்டும் போவதைப் பார்த்தால் தங்கள் குழந்தையைப் பார்க்க போகிறவர்கள் மாதிரி தான் தெரிந்தார்கள். எதுவும் ஹாஸ்டலில் விட்டு வைத்திருக்கிறார்களோ? இல்லை சொந்தக்காரர் வீட்டில் விட்டு வைத்து இருக்கிறார்களோ? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆகி விட்டதா?
சாகர் மனம் குழம்பியது. துடித்தது. ஒரு அருமையான கதையின் கரு தன் முன்னால் அமர்ந்திருப்பது போலத் தோன்றியது அவருக்கு.
அப்பொழுதுதான் அவர் கவனித்தார். மாமி தன் கணவனையேப் பார்த்துகொண்டிருந்தாள். அவர் கவனத்தை ஈர்க்க விரும்புபவள் போல. ‘ஏன்னா’ என்று கூப்பிட வேண்டியதுதானே என்று சாகர் நினைத்தார். அந்த சமயத்தில் அவள் கணவன் அருகில் அமர்ந்து இருந்தவன் அவளை கவனித்தான்.
அவன் முகத்தில் புன்சிரிப்பு. கண்ணாலேயே நலம் விசாரித்தான். சாகர் மனதுக்குள்ளேயே தன் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டார். நிச்சயம் தான் நினைத்தது போலத் தான்.
அப்பொழுது பஸ் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிறுத்தத்தில் நின்று புறப்பட்டது. ஒரு இரண்டு நிமிடத்தில் சின்ன மலை நிறுத்தத்தை நெருங்குகையில் மாமியின் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியின் கையில் இருந்த மொபைல் ஒலித்தது. எடுத்துப் பேசியவள் அதை மாமியிடம் கொடுத்தாள்.
“அம்மா! அப்பாரு போன்ல. ஒங்க கிட்ட தான் பேசணுமாம்.”
போனை கட் செய்துவிட்டு, பஸ்ஸில் முன்னால் கதவு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியிடம், “ சொல்லுங்கோன்னா” என்றாள்.
“ஒண்ணுமில்ல புள்ள, சின்ன மலை ஸ்டாப்புல எறங்கினா அயனாவரம் பஸ் சொலபமா கெடைக்குமாம். நாம அங்கியே எறங்கிடலாம் வா” என்றான்.
“சரின்னா” என்று சொல்லியபடியே தன் அருகில் இருந்த சிறுமியிடம் “வாடி கோந்தே!” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து முன்னே சென்றாள்.
சின்ன மலை ஸ்டாப்பில் மூவரும் இறங்கிவிட்டார்கள். சாகர் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு தப்புக் கணக்கு!
பஸ் கிளம்பியது. முன் சீட்டில் இருந்த வயது குறைந்த நபர் பெரியவரிடம் “அண்ணா! மன்னி எறங்கி போயிட்டா” என்றார்.
சட்டென்று திரும்பிய பெரியவர் “ ஓடிப் போனவளுக்கு என்னடா மன்னி ஸ்தானம்?” என்றார் ஒரு உறுமலுடன்.
கணக்கு தப்புதானா?
No comments:
Post a Comment