Monday, March 10, 2014

பெண் மனம்


அனுமன்

தேடித் தேடி அலுத்து விட்டது அவனுக்கு.

அப்படி எங்கே தான் ஒளித்து வைத்திருப்பான்? கிஷ்கிந்தையை விட விசாலாமான நாடுதான். இல்லை எனவில்லை. இருந்தாலும் தனக்குப் ப்ரியமான ஒன்றை தன் பார்வையில் அல்லவா மனிதன் வைப்பான்? தனது எண்ண ஓட்டம் அனுமனுக்கேச் சிரிப்பைத் தந்தது. ராவணன் மனிதனாக இருந்தால் அல்லவா அப்படிச் செய்வான்? அவனோ அரக்கன்! அவன் சிந்தனை எவ்வாறு ஓடும் என்று வானரனான தனக்கு எவ்வாறு பிடிபடும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

ராமகாரியமாக புறப்பட்டதால் சரியான உணவு இல்லை உறக்கம் இல்லை. காரியம் கூடி வந்திருந்தால் இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரிந்திருக்காது. ஆனால் இதுவரையில் கை கூடவில்லை.

மனதில் ஒரு ஆயாசம். திரும்பிப் போகவும் முடியாது. அரச ஆணை நிறைவேற்றப்படவில்லை என்றால் தண்டனை. ஆனால் அதெற்கெல்லாம் அவன் கலங்கவில்லை. எப்படியும் கண்டுபிடித்து வருவார்கள் என்று ஒரு மெலிதான நம்பிக்கை ஒளியை கண்களில் வைத்துக் கொண்டிருந்த ராமன் முகம் அவனை கலங்கடித்தது. ஒரு மானுடனால் தான் இப்படிச் செலுத்தப்படுவோம் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. அவனது ஆளுமைக்குக் கீழ் தான் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.

அப்படி என்ன இருக்கிறது அவனிடம்? அரசு இழந்து கானகங்களில் அலைந்து கொண்டிருந்தவன் இன்று தன் அரசியையும் இழந்திருக்கிறான். 'பாவம்' என்று பரிதாபப் படவேண்டிய ஒருவனிடம் அடிமை கொள்ளும் அளவுக்கு எப்படி இந்த ஆளுமை வந்தது?

இலங்கையின் ஒரு இடம் கூட மீதமில்லை. இராவணனின் அந்தப்புரத்தைக் கூட பார்த்தாகி விட்டது. தோல்வியுடன் திரும்புவதைக் காட்டிலும் எங்காவது கண் காணாத இடத்துக்குச் சென்றுவிட்டால் என்ன என்று தோன்றியது. ஒன்று மனிதனாக இருக்க வேண்டும். இல்லை குரங்காக இருக்க வேண்டும். இப்படி வானரனாக இருப்பது கடினம் என்று நினைத்தான். பரிணாம வளர்ச்சியில் இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த நிலை ஒரு தண்டனை தான்.

ஹே ராமா! ஹே சீதா! என்று உரக்கத் குரலில் புலம்பினான்.

இப்படி பலவேறு சிந்தனைகளின் பிடியில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த அனுமனை  ஒரு உருவம் கவனித்துக் கொண்டிருந்தது பாவம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இராவணன் அந்தப்புரத்தை அவன் ஆராயச் சென்ற போதுதான் அந்த உருவம் அவனை முதலில் பார்த்தது. யாரிந்த வானரன் என்று ஆச்சர்யத்துடன் அவனைப் பின் தொடர்ந்தது. அவன் ஹே ராமா! ஹே சீதா! என்று சொன்னதும் தான் அதற்கு ஒருவாறு புரிந்தது.

மண்டோதரி

வானரன் வாயில் இருந்த வந்த சொற்கள் அவள்  காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

சீதையைத் தேடி ஒருத்தன் வந்திருக்கிறானா? அப்படியென்றால் தனக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று நினைத்தாள். அவள் அப்படி நினைத்ததிலும் தவறு ஒன்றுமில்லை.

சீதையைக் கடத்திக் கொண்டு வந்த நாளாக இராவணன் இவளிடம் பாராமுகமாகவே இருக்கிறான். எப்பொழுதும் வாயில் சீதை பெயர் தான்!

இவளுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்? மானுடப் பெண். ஒல்லியான திரேகம். சோகை வந்தாற்போல வெளுப்பு. வாராமல் விட்டதால் சிடுக்கு விழுந்த கேசம். என்ன, முகம் கொஞ்சம் லட்சணமாக இருக்கிறது. தான் மட்டும் அழகில்லையா என்ன? இராவணனின் தீராப்பசியைத் தீர்த்து வைக்கும் இளமை பொங்கி வழியும் உடல் வாகு. கிட்டத் தட்ட ஒரு அடிமை போல எந்நேரமும் அவன் கட்டளைக்குக் காத்திருக்கும் ஒரு மனோபாவம்.

அதனால் தானோ என்னமோ அவனுக்கு இவளிடம் லயிக்கவில்லை. விரல் சொடுக்கினால் வரும் ஒரு நாய் என்று நினைத்துவிட்டானோ என்னமோ? ஆனால் சீதா? அந்த அல்ப மனுஷி இவனுக்குப் பணியாததால் இவன் ஒரு அடிமை போல அங்கு போய் போய் நிற்கிறான். அதில் இராவணனுக்கு வருத்தமோ இல்லையோ தெரியாது இவளுக்கு நிறைய வருத்தம் உண்டு.

மாதம் ஒன்றாயிற்று. சீதையைத் தேடி எவரும் வரவுமில்லை. இராவணன் தன் முயற்ச்சியை விடவும் இல்லை. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பது போல் எங்கே  பட்டத்து ராணி பதவிக்கு ஆபத்து நேருமோ என்று பயந்தாள்.

இந்த நிலையில் தான் இன்று இந்த வானரன் சீதையைத் தேடி வந்திருக்கிறான்.  இவனுக்குச் சீதையிருக்குமிடம் தெரியப்படுத்தினால் இவன் சீதைக்கு சகாயம் செய்வான். ஒரு வேளை இங்கிருந்து கூட்டிக்கொண்டும் போகலாம். எது எப்படி இருந்தாலும் தனக்கு இறுதியில் நன்மை தான் பயக்கும் என்று எண்ணினாள்.

நேருக்கு நேர்

திடீரென்று நிழல் மறைவிலிருந்து வெளிப்பட்ட உருவத்தைக் கண்டு அனுமன் திகைத்தான். “அஞ்சாதே! நான் மண்டோதரி. இலங்கேஸ்வரனின் ராணி. உனக்கு உதவ வந்திருக்கிறேன்” என்றது அது.

“இராவணன் ராணியா? உதவியா? எனக்கா?”

“ சரி எனக்குத் தான் என்று வைத்துக்கொள்ளேன். உனக்கு வந்த காரியம் முடிய வேண்டுமா இல்லையா?”

“ஆமாம் ஆமாம்”

“எனில் என்னுடன் வா. நான் காட்டுகிறேன் சீதை இருக்குமிடம்”

அனுமனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. மெளனமாக மண்டோதரியைப் பின்தொடர்ந்தான்.



1 comment:

SSM said...
This comment has been removed by the author.