Monday, October 26, 2020

உன்னை அறிந்தால்

  உன்னை அறிந்தால் 


ஸ்னேஹாவுக்கு எரிச்சல் மண்டியது.  அதற்குக் காரணம்  திலகவதி மொபைலில் தன் கணவனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தது.   


'அதென்ன ஆபீஸ்னு கூட பாக்காம இப்படி ஒரு வழிசல்?' என்று அவளுக்குள் ஒரு எண்ணம் ஓடியது.  அவர்கள் இருவரும் ஒரு தனியார்  விளம்பரக் கம்பெனியில் வேலை செய்பவர்கள். திலகா இவளை விட இரண்டு வயது மூத்தவள். அழகு என்று பார்க்கப்போனால் ஸ்னேஹாவுக்குப் பக்கத்தில் நிற்கக் கூட முடியாது.  ஸ்னேஹா பால்நிறம். முகம் நல்ல களை. கிட்டத்தட்ட சினிமா நடிகை போல. திலகா அப்படியே opposite.


ஆனால் இதெல்லாம் ஸ்னேஹாவின் எரிச்சலுக்குக் காரணம் இல்லை.  அதற்கு காரணம் திலகாவின் கணவன் அவளிடம் காட்டும் காதலும் அன்பும். அவளைப் பிரியவே முடியாதவன் போல அரைமணிக்கு ஒரு போன். அவன் அப்படி என்னதான் பேசுவானோ?  இவள் இங்கு நெளிவதும் வழிவதும் கொஞ்சுவதும்.. ஸ்னேஹாவுக்கு பெருங்குரலில் கத்தவேண்டும் போல இருக்கும்.   உடனேயே தன் கணவன் ராஜ் தன்னிடம் நடந்துகொள்ளும் விதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும். 


ராஜ் ஸ்னேஹாவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை. அழகு இளமை நல்ல உடற்கட்டு. தினம் ஜிம். ஆனால் சிறிது நாட்களாக அவனுக்கு ஏதோ ஒரு ஆர்வக் குறைவு குடும்ப வாழ்க்கையில்.  அதன் காரணம் ஸ்னேஹாவுக்கு பிடிபடவில்லை. 


நல்ல அழகி. மாடர்ன் உடைகள் அணிவாள். அவனுக்கு ஈடான socialite. இருந்தும் ஏன் இப்படி என்று புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கையில் அவள் விழியோரம் கண்ணீர் துளிர்த்தது. 


மொபைல் பேசிக்கொண்டிருந்த திலகா இதை கவனித்துவிட்டாள். 'அப்புறம் பேசறேங்க' என்று கணவனிடம் சொல்லிவிட்டு, போனை கீழே வைத்துவிட்டு இவளிடம் வந்தாள்.


"என்னடி ஆச்சு ஸ்னே? ஏன் திடீர்னு அழற? ஏதும் உடம்புக்கு முடியலையா?' என்று கேட்டாள்.


"ஒண்ணுமில்லடி திலகா" என்று சொன்னவளை வலுக்கட்டாயமாக கேண்டீன் அழைத்துச் சென்றாள். இரண்டு காப்பி வாங்கி வந்து டேபிளில் வைத்துவிட்டு "இப்ப சொல்ல்லுடி" என்றாள்.


ஸ்னேஹாவுக்கு எப்படி சொல்வதென்று புரியவில்லை. எப்படிச் சொன்னாலும் திலகாவை hurt செய்யாமல் அவள் மன உளைச்சலை சொல்ல முடியாது. 


"வேண்டாம்டி.. அப்புறம் நான் ஏதாவது சொல்ல நீ வருத்தப் படுவ"


"அட.. friendsக்கு நடுல என்ன வருத்தம்? எதுனாலும் சொல்லுடி. I promise I wont be hurt"


சிறிது நேரம் யோசித்தாள் ஸ்னேஹா. பின்னர் மூச்சை நன்றாக இழுத்துவிட்டாள். பின்னர் தன் மன பாரம் எல்லாம் கொட்டிவிட்டாள். கணவனின் பாராமுகம், ஆர்விமின்மை, சிறு சிறு சச்சரவுகள் என்று எல்லாமும் சொன்னாள். 


எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட திலகா " சரி இதுல நான் hurt ஆக என்ன இருக்கு" என்றாள்.


ஸ்னேஹா முகம் சங்கடத்தில்  கவிழ்ந்தது.  பின்னர் மெதுவாக சொன்னாள் "டி உனக்கே தெரியும் என்னோட குட் லுக்ஸ். ட்ரெஸ் சென்ஸ். ஆனாலும் ராஜ் இப்படி இருக்கான்.  ஆனா ஆனா..."


"என்னடி ஆனா ?"


" நீ என்னளவு இல்ல. இருந்தும் உன் husband உன்கிட்ட எவ்வளவு பாசமா ப்ரியமா காதலா இருக்கார்! எனக்கு அதான் புரியல..."


ஒரு கணம் சிலையானாள் திலகா. பின்னர் கலகலவென சிரித்தாள்.


"இதனா உன் பிரச்சனை? இங்க வா" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்தக் கேண்டீனின் ஒரு பக்கம் இருந்த ஆளுயர கண்ணாடி அருகில் கூட்டிச் சென்றாள். அந்த கண்ணாடி முன்னர் நின்று கொண்டு " கண்ணாடி பாருடி, என்ன தெரியுது?" என்று கேட்டாள்.


" நானும் நீயும் தெரியறோம். இதென்ன விளையாட்டு?"


" நானும் நீயும் இல்லடி ஸ்னே.  உன்னளவு அழகு கலர் இல்லாத ஆனால் மிகவும் ட்ரிம்மான நானும், அழகா கலரா ஆனா ரொம்ப வெயிட்டா இருக்கற நீயும் தெரியறோம்.  என் கணவர் மட்டுமில்ல உன் ராஜ் கூட அவங்களோட bodyய நல்ல மெயின்டைன் செய்யறாங்க.  என் கணவருக்கு ஈடா நானும் ஸ்லிம்மா இருக்கேன். ஆனா நீ?"


ஸ்னேஹா கண்ணாடியைப் பார்த்தாள். திலகா சொன்னது உண்மைதான். திலகா கொடி போல ஒல்லியாக இருந்தாள். அவளுக்குள் ஒரு பொறி தட்டியது.


"தேங்க்ஸ் டி" என்றாள்.


பிறகு இருவரும் தங்கள் வேலைகளுக்குத் திரும்பினார்கள். ஐந்து மணி ஆனதும் ஸ்னேஹாவை அழைத்துப் போக ராஜ் வந்தான். அவன் பின்னால் பைக்கில் ஏறியவள் " ராஜ் இன்னைக்கு என்ன வீட்ல ட்ராப் செய்ய வேண்டாம். உன்னோட நானும் ஜிம் வர்றேன். உன் ஜிம்ல லேடீஸ் செக்ஷனும் இருக்கு தானே? நானும் இன்னியிலிருந்து ஜாயின் பண்றேன்" என்றாள்.


ராஜ் முகம் மலர்ந்தது. சட்டென்று திரும்பி அவளை முத்தமிட்டான்.  


No comments: