#சிறுகதை (நல்லா இல்லேனா வலிக்காம அடிங்க)
===================
நீதானா அந்தக் குயில்?
===================
டிங் என்று மெசஞ்ஜர் கூப்பிட்டது.
சட்டென்று கவனம் கலைந்து மொபைலில் படித்துக் கொண்டிருந்த ந்யூஸ் பேப்பர் பக்கத்திலிருந்து விடுபட்டு மெசஞ்ஜரைத் திறந்தேன். 'குட் மார்னிங்' என்றிருந்தது.
அவள்தான். வானதி. பெயரைப் போன்றே மென்மையாக எழுதுபவள்.
'குட் மார்னிங் வானதி'
'வீட்டுலேயா இல்லை ஆபீஸ் கிளம்பியாச்சா'
'வீட்டுலதான். இன்னைக்கு லீவு போட்டுட்டேன்.'
'ஏன்? உடம்பு சரியில்லையா ஜி?'
'இல்லை.. காஷுவல் லீவு வேஸ்ட் ஆகிடும்...அதான்'
'ஹா ஹா '
'எதுக்குச் சிரிப்பு?'
'எப்படியெல்லாம் ஸ்கூல் பையன் மாதிரி காரணம் சொல்லி லீவு போடறீங்கன்னு நெனச்சேன். சிரிப்பு வந்துடுச்சி.'
'சொல்லு சொல்லு.. நீ சொல்லாத யாரு சொல்லுவா?'
' ஏன் மேடம் இல்லையா?'
'அவ ஆபீஸ் போயாச்சே !'
'ஓஹோ! ஐயா தனிக்காட்டு ராஜாவா இப்ப'
'ஆமான்னு தான் வச்சுக்க... ராணி நீதான் ரெடிமேடா இருக்கியே '
'இந்த ஜொள்ளு எல்லாம் மேடம் கிட்ட வச்சுக்குங்க... இல்லாட்டி கூப்பிட்டு சொல்லிடுவேன்'
' நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன் வான்ஸ்? Also, மேடம் நம்பர் உன்கிட்ட இருக்கே.. எப்பாவேணா கூப்பிடு/'
' நான் கூப்பிட மாட்டேங்கற தைரியம்'
'ம்ம்ம்.. இதச் சொல்லவா இவ்வளவு நேரம் பேசற?'
'இல்ல இல்ல... வேற ஒரு விஷயம் '
'என்ன?'
' என் friend ரீனா ஒரு app டெவலப் செஞ்சிருக்கா.. வாய்ஸ் சேஞ்சர் app. அது பத்திச் சொல்லலாம்னு தான் மெசேஜ் செஞ்சேன்'
'அதுல என்ன புதுசா இருக்கு வான்ஸ்? அது ரொம்ப பழைய விஷயம் ஆச்சே? கம்ப்யூட்டர்லயே இருந்ததே! நாங்கள்லாம் அப்ப யாஹூ மெசஞ்ஜர்ல குரல் மாத்தி பேசிக் கலாட்டா செய்வோம். அதுல என்ன புதுசா இருக்கு?'
'இல்ல இதுல நிறைய ஃபில்டர்ஸ் இருக்காம். You Cam app மாதிரி. இதுவர வந்ததுலேயே பெஸ்டா இருக்கும்னு சொன்னா'
'ஓஹோ! ரொம்ப சந்தோஷம்'
'இரு இரு நான் அதை இன்ஸ்டால் செஞ்சிருக்கேன் என் மொபைல்ல. உங்களைக் கூப்பிடுகிறேன்.' என்று சொல்லி அமைதியானாள்.
ஒரு அரை நிமிடத்தில் மெசஞ்ஜர் ஆடியோ கால் சப்தம் கேட்டது. பார்த்தால் வானதி.
"ஹலோ'
"ஹலோ வெங்கட் நான் வானதி'
'பேரு பார்த்தேன். சொல்லு.'
'இப்ப அந்த app பின்னால வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. என் குரல்ல ஏதும் வித்தியாசம் தெரியுதா?'
நான் ஏற்கனவே வானதியுடன் பேசிய காரணத்தால் எனக்கு அவள் குரல் நல்ல பரிச்சயம்.
' இல்லையே வழக்கம் போலத்தான் இருக்கு'
"ஒண்ணும் இல்லையா? அவ நல்ல difference தெரியும்னு சொன்னாளே!'
"எனக்குத் தெரியலமா'
'சரி அப்ப நான் வைக்கட்டுமா?'
'வேணாம்! கொஞ்ச நேரம் பேசலாம்.. எனக்கும் போர் அடிக்குது'
'உங்க போருக்கு நான்தான் கேடச்செனா'
'ஆமா... அப்புறம் நேத்து 2.0 பார்த்தேன்.'
'தியேட்டரிலா'
'ஆமா! '
'படம் எப்படி?'
' பரவாயில்ல. நம் ரகுநாத் சத்யா விமர்சனம் எழுதியிருக்கார் படிச்சியா?'
' ஆமா படிச்சேன். மனுஷன் புட்டு புட்டு வச்சிருக்கார்'
'கிட்டத்தட்ட நான் நெனச்சததான் சொல்லியிருக்கார்... என்னோட reviewவும் அதான் '
"ஓஹோ........'
இப்படியே எத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு ஜெர்க் மாதிரி உணர்ந்தேன். பார்த்தால் மணி பனிரெண்டு! இரண்டு மணி நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
' வான்ஸ்! ரொம்ப நேரமா பேசறோம்! ஆனா எனக்கு என்ன பேசினோம்னு நெனவு இல்லை.'
'எனக்கும்தான்' என்றது மறுமுனையில் இருந்து ஒரு இனிய குரல்.
'வான்ஸ் யாரு பேசறது?'
'நான்தான் ..ஏன்?
'உன் குரல் மாறியிருக்கு... இன்னும் இனிமையா இன்னும் mesmerisingஆகா...'
'நெஜமா? இதுல ஏதோ கொஞ்சம் செட்டிங் மாத்தினேன்.. அதுனால இருக்கும்'
'வான்ஸ்! எனக்கும் அந்த app வேணும். லிங்க் அனுப்பறியா?'
'அனுப்பறேன்...வெங்கட்.... வெங்கட்... எனக்கு என்னமோ ஆகுது...தொண்டைய யாரோ புடிச்சி அழுத்தற மாதிரி.. வெங்கட்.. வெங்கட்'
"ஐயோ வான்ஸ்! என்ன ஆச்சு? நான் வரவா?'
'நீ எதுக்குடா வரணும் நாயே! அதுக்குத்தான் நாங்க இருக்கோமே' என்று வானதியின் மெசஞ்ஜரிலிருந்து தன் கரகர குரலில் சொன்னான் சுந்தரம்.
"டேய் சுந்தரம்! நீ எங்கடா அங்க போன? அவள என்னடா பண்ற?' என்று நான் கத்த ஆரம்பித்து அடங்கினேன்.
சுந்தரம் செத்து வருஷம் பதினஞ்சு ஆச்சு. சட்டென்று வியர்த்தேன்.
"டேய்! என் தங்கச்சியக் கெடுத்து அவள வடகோவை ஸ்டேஷன் பக்கத்துல வண்டி வரும்போது தள்ளி விட்டு கொலை செஞ்ச பாதகா! எப்படிறா உன்னால இந்தமாதிரி செஞ்சுட்டு வேற பொம்பளை கிட்ட வழிஞ்சுகிட்டு பேச முடியுது?'
'டேய் சுந்தர், நான் ஒண்ணும் ராஜிய கெடுக்கல. கொல்லவும் இல்ல. யாரோ தப்பாச் சொல்லியிருக்காங்க"
நான் சொன்னது எனக்கே அந்நியமாய் இருந்தது. அவன் சாகும் வரையில் என்னிடம் இப்படி எதுவும் சொன்னதில்லை. அவன் செத்த பிறகு யார் சொல்லியிருப்பார்கள்? நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே "நான்தான் சொன்னேன் வெங்கட்" என்றாள் ராஜி மெசஞ்ஜரிலிருந்து. என் உடல் தகிக்க ஆரம்பித்தது.
"ராஜி?????"
'ஆமாண்டா துரோகி! என்னைக் கொன்னதும் இல்லாம இவனையும் brainwash பண்ணி தற்கொலை செய்ய வச்சே துரோகி"
"இல்ல இல்ல.. நான் ஏன் அப்படிப் பண்ணப் போறேன்'
'அவனோட மொறைப் பொண்ண கொஞ்ச கொஞ்சமா friend பிடிச்சு அப்புறம் கல்யாணமும் செஞ்சுகிட்ட. அவளோட அப்பா சொத்துக்காக. தெரியாதா எனக்கு? சாவத் தயாரா இருடா '
"வெங்கட்.. எனக்கு சரியாயிடிச்சு... நீங்க வர வேணாம் " என்றாள் வானதி.
"வானதி! யாரு அந்த ரீனா? அவ ஃபோட்டோ இருக்கா? இருந்தா காட்டேன்"
என் குரலின் அவசரத்தைப் புரிந்து கொண்டவள் கிண்டல் செய்யாமல் சட்டென்று ஒரு அட்டாச்மெண்டாக அனுப்பினாள்.
திறந்து பார்த்தால் சந்தியா! சுந்தரம் ராஜியோட கடைசித் தங்கை.
வாசல் கதவு ஒரு க் றீச்சோடு திறந்த சப்தம் கேட்டது. நான் மயங்கினேன்.
வீயார்
No comments:
Post a Comment